Advertisement

அத்தியாயம் – 8

விஷயம் கேள்விப்பட்ட கண்ணன் போலீஸ் ஜெபினை அழைத்துச் சென்ற பின்னரே அங்கு வந்து சேர்ந்தான். அவளை வீட்டிற்கு அழைத்துச் சென்றவன்¸ வீட்டை அடைந்ததும் திட்ட ஆரம்பித்தான்.

“கல்யாணமும் பண்ணிக்க மாட்டா… ஒழுங்காக வீட்லயும் இருக்கமாட்டா.. எப்பவும் இவள் பின்னாடி ஒருத்தர் பாதுகாப்புக்காக சுத்தணும் போல” என்றான் தாயாரிடம்.

“என்ன கீதா?” என்றார் தாயாரும் தாங்கலுடன்.

“அந்த பொறுக்கி பண்ணினதுக்கு நான் என்ன செய்வேன்மா?”

“ஆமாப்பா. அவள் சொல்றதும் சரிதானே..! அவள் என்ன செய்வாள்” என்றார் மகனிடம்.

“ம்… கல்யாணம் பண்ண சொல்லுங்க. அதுக்கு அப்புறம் இந்த மாதிரி தலைவலியெல்லாம் நமக்கு வருமா? எல்லாம் அவளோட புருஷன் பாத்துக்குவான்” என்றான்.

“என்ன நீ எப்பவும் என்னை இந்த வீட்டிலிருந்து விரட்டுறதுலையே குறியா இருக்கே?” என்று குறுக்கிட்டு பேசினாள்.

“ஆ..¸ ஊன்னா இப்படி சொல்லிடு. உன்னை விரட்டுறாங்கன்னு…”

“ஆமாம்… நீங்க எல்லாரும் மேரேஜ்ங்கிற பேருல என்னை இந்த வீட்டை விட்டு விரட்டத்தான் நினைக்கிறீங்க” என்றாள் கோபத்துடனே.

“அப்படியே வைச்சிக்கோயேன். வீட்டில பெரியவங்க சொல்றதை கேட்கமாட்டே. பெரிய இவளாட்டம் பேச வந்துட்டா” என்றவன் “இதோ பார் கீதா¸ கடைசியாக ஒன்று சொல்றேன்… கல்யாணம் செஞ்சிக்குறதுக்கு ஒத்துக்குறதா இருந்தால் மட்டும் இங்கே இரு. இல்லைன்னா…” என்று சொல்லத் தயங்கியவன் மனதைக் கல்லாக்கிக் கொண்டு “எக்கேடோ கெட்டுப் போ” என்று சொல்லிவிட்டு அறைக்குள் சென்றுவிட்டான்.

‘எக்கேடோ கெட்டுப் போ…’

‘இந்த அண்ணனால் எப்படி இப்படி சொல்ல முடிந்தது?’ தாயாரைப் பார்த்தாள். அவர் சேலை முந்தானையால் வாயை மூடி இருமிக் கொண்டிருந்தார்.

ஆஸ்துமா… அதிக வருடங்கள் பீடி சுற்றியதால் அந்தத் தூளின் வாடையை அதைப் புகைப்பவர்களை விட அதிகமாக முகர்ந்து¸ அதனால் ஏற்படுட்ட விளைவு. அதைச் சுற்றும் தொழிலை செய்பவர்களுக்கும் புற்றுநோய்¸ ஆஸ்துமா போன்ற நோய்கள் ஏற்படுகிறது. என்னதான் இருந்தாலும் அநேகர் அதை விடுவதில்லை. அப்படியே விட்டாலும்தான் அம்மாவைப் போல பிற்காலத்தில் நோய் ஏற்படும் அபாயம் உள்ளதே.

தாயாரின் முதுகை நீவிவிட கையை நீட்டினாள். நீண்டு வந்த கையைத் தட்டிவிட்டவர் “என்னை என் மகன் பார்த்துக்குவான். நீ உன் வேலையை மட்டும் பாரு” என்று அவரும் உள்ளே சென்றுவிட்டார்.

‘என் மகன்’

‘அப்படின்னா நான் உங்க மகள் இல்லையா? நான் அவ்வளவு வேண்டாதவள் ஆகிப்போனேனா?’ என்றெண்ணியவாறே தன்னறைக்குள் சென்று கட்டிலில் அமர்ந்தாள்.

அமர்ந்தவளின் கண்களில் நீர் வடிய ஆரம்பித்தது. ‘எல்லாம் அந்த பிரேம் சொன்னது போலதான் இருக்கு. அவளால் வேறு யாரையும் மணந்து கொள்ள முடியவில்லை… அவனையும் காணவில்லை… அவனை…’ என்னென்னவோ எண்ணியவாறே தூங்கிப் போனாள்.

மறுநாள் காலையிலேயே ஒரு தனியார் வேலை வாய்ப்பு அலுவலகம் சென்றாள்.

‘எங்காவது வெளியே வேலைக்கு ஏற்பாடு செய்து தர முடியுமா?’ என்று கேட்டவளிடம்¸ அவளது படிப்பு பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தவர் ‘கிராமத்திலிருக்கும் ஒரு வயதான தம்பதியையும் மூன்று வயதுக் குழந்தையையும் வீட்டோடு இருந்து பார்த்துக் கொள்ள சம்மதமா?’ என்று கேட்டார்.

“எவ்வளவு நாட்கள் அங்கு வேலை இருக்கும்?” என்று கேட்டாள்.

“அந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்குறான். அவனுக்கு திருமணம் முடியும்வரை உனக்கு அங்கே வேலை உண்டு. அதற்கு குறைந்தது இரண்டு வருடங்களேனும் ஆகலாம் என்கிறான் அந்தப் பையன்” என்றவர் சற்று நிறுத்திவிட்டு

“அதனால் வேலையில் சேரும்போதே இடையில் விட்டு வர முடியாதபடி ஒப்பந்தப் பத்திரத்தில் கையொப்பமிட்டுத் தர வேண்டும் என்கிறான். பாதியில் சென்றுவிட்டால் வேறு ஆள் கிடைப்பது கடினம் என்பதால் இந்த முன்னேற்பாடாம்” என்றார்.

“ரொம்ப நல்ல ஏற்பாடு சார்” என்றவளிடம் “சரிம்மா¸ நீங்க வீட்ல பேசிட்டு உங்க முடிவை சீக்கிரமா சொல்லுங்க” என்றார்.

“இல்லை சார். அதெல்லாம் தேவையில்லை¸ எனக்கு சம்மதம்” என்று உடனே தன் சம்மதத்தைத் தெரிவித்துவிட்டு “சம்பளம் எவ்வளவு? என்றைக்குக் கிளம்ப வேண்டும்?” என்று கேட்டாள்.

“நீங்க நாளைக்கே போனாலும் அவங்களுக்கு சந்தோஷம்தான். ஏன்னா¸ அந்தப் பையன் வெளியே வேலை பார்ப்பதால் மாதம் ஒருமுறை தான் வருவானாம்” என்று அந்த குடும்பத்தைப் பற்றி பேசலானார். இதைக் கேட்டதும் கீதா சற்று நிம்மதியடைந்தாள்.

அங்கு எந்த பிரச்சினையும் வந்துவிடக் கூடாதே என்ற கவலை அவளுக்கு.

“ஓ.கே. சார் அப்போ நான் நாளைக்கே கிளம்புறேன். நீங்கள் அவங்களுக்கு தகவல் கொடுத்துடுங்க” என்று சொல்லிவிட்டு வீடு திரும்பினாள்.

ஒரு கடிதம் எழுதி தன் அறைக் கட்டில் மேல் வைத்துவிட்டு தேவையான உடைகளை எடுத்துக் கொண்டு இரவே வீட்டை விட்டு வெளியேறினாள்.

செங்கல்பட்டு அருகே உள்ள கிராமம் அது.

பஸ்ஸை விட்டு இறங்கி “நாஞ்சில்நாதன் சார் வீட்டுக்கு எப்படிப் போக வேண்டும்?” என்று அருகிலிருந்த பலசரக்குக் கடையில் விபரம் கேட்கும்போதே ஒரு மாருதி கார் அவளருகில் வந்து நின்றது.

காரை விட்டிறங்கி வந்த டிரைவர் அவளிடம்¸ தான் அவள் வேலைக்காக வந்திருக்கும் இடத்தின் டிரைவர் என்பதைக் கூறி அவளைத் தன்னுடன் வருமாறு அழைத்துச் சென்றார். ஏற்கனவே தெரிவித்திருந்ததால் இந்த ஏற்பாடாக இருக்கும் என்று எண்ணி காரில் ஏறினாள்.

போகும் வழியெல்லாம் தென்னந்தோப்புகள் தென்பட்டன. இடையிடையே வயல்வெளிகளும்¸ வாழை¸ கிழங்கு போன்றவையும் பயிரிடப்பட்டிருந்தன. இயற்கை அழகை ரசித்தவாறே வந்தவள் இடத்தை வந்தடையாதது கண்டு “இன்னும் எவ்வளவு தூரம் போகணும்?” என்று கேட்டாள்.

“கொஞ்ச தூரம்தான்மா… இருபது நிமிடத்தில் போயிடலாம்” என்றார் டிரைவர்.

‘என்ன? இன்னும் இருபது நிமிஷமா?’ என்று நினைத்தவள் “ரொம்ப சின்ன கிராமமா?” என்று கேட்டாள் வசதிகள் குறைவாக இருக்குமோ என்ற எண்ணத்தோடு.

“இல்லைம்மா… ஊருக்குள் நிறைய வீடுங்க¸ பெரிய அம்மன் கோவில்¸ தேவையான அளவு கடைங்க¸ பள்ளிக்கூடம்னு எல்லாமே இருக்கு. ஆனாலும் ஒரு குறை என்னன்னா, பள்ளிக்கூடத்தில் பத்தாவது வரைக்கும் தான் இருக்கு. மேலே படிக்க செங்கல்பட்டிற்குத்தான் போக வேண்டும்” என்றார்.

“ஓ…! ஆனால்¸ தினமும் இங்கிருந்து அவ்வளவு தூரம் எப்படிப் போவாங்க? நாம் வருவதற்கே ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக ஆகியிருக்கு. இன்னும் இருபது நிமிடம் என்றால் மொத்தம் இரண்டு மணி நேரம். ஒவ்வொரு நாளும் இரண்டு மணி நேரம் பயணம் செய்து ஸ்கூல் போக வேண்டும் என்றால், பாவம் இவர்கள் எவ்வளவு சிரமப்படுவார்கள்?” என்று அவர்களுக்காக அனுதாபப்பட்டாள்.

“ஆமாம்மா… நீங்க சொல்றது சரிதான். அதனால் சிலர் ஹாஸ்டலில் தங்கியும்¸ மீதமுள்ளவர்கள் ஆட்டோ அல்லது வேனில் சென்று வருவார்கள். வண்டிக்கு மொத்தமாக சேர்த்து மாத வாடகை வாங்கிடுவாங்க” என்றார்.

“அப்படியானால் சரி… இருந்தாலும் இங்கிருக்கும் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக மாற்றக்கோரி பள்ளி கல்வித்துறைக்கு ஊரார் சார்பிலும் பள்ளி சார்பிலுமாக மனு அளிக்க வேண்டியதுதானே?” என்று கேட்டாள்.

“அதை எப்பவோ செய்து அதற்கான முயற்சிகளை எடுத்துட்டுத்தான் இருக்குறாங்க. எப்போதான் விடிவு காலம் வருமோ… தெரியலை” என்றார் அவர்.

அவள் ‘யார் செய்துட்டு இருக்காங்க?’ என்று கேட்கும் முன்னர் “நாம ஊருக்குள் வந்துட்டோம் அம்மா” என்றார்.

“என் பேரு கீதா¸ என்னை அப்படியே கூப்பிடுங்க” என்றாள்.

“ஆகட்டும்மா. நம்ம ஐயா வீடு கடைசியாக இருக்கும்” என்று சொன்னவர் ஒரு பெரிய வீட்டின் முன் காரை நிறுத்தி¸ அவளது பெட்டியை எடுத்து வெளியே வைத்தார்.

கிராமத்திற்கே உரிய பெருமையோடும் நிமிர்வோடும் நின்றது அந்த வீடு.

தானும் காரை விட்டிறங்கியவள் வீட்டைப் பார்த்தாள். பழங்கால அமைப்பு கொண்ட ஓடுகள் வேயப்பட்ட மாடி வீடு. நிறைய கான்கிரீட் வீடுகளைப் பார்த்துப் பழகியவளுக்கு இது புதுமையாகவும் அழகாகவும் தெரிந்தது.

சுற்றிலும் பார்வையை ஓடவிட்டாள். சுற்றுச்சுவர் பெரியதாக கட்டப்பட்டிருந்தது. முன்புற கேட்டின் ஓரமாக ஒரு மகிழ மரமும்¸ நடுவில் பெரிய மாமரம் ஒன்றும் பரந்து விரிந்து நின்றது. மற்றபடி நிறைய அலங்காரச் செடிகள் காணப்பட்டன.

நடைபாதையில் அதிகமாக பயன்படுத்தப்படும் பேவர் பிளாக்குள் பயன்படுத்தப்பட்டிருந்தது. மொத்தத்தில் அவளுக்கு இந்த ஊரையும் முக்கியமாக இந்த வீட்டையும் மிகவும் பிடித்துவிட்டது.

வீட்டின் அழகை ரசித்துக் கொண்டிருந்தவளை உள்ளே அழைத்துச் சென்றவர் “மல்லி!” என்று யாரையோ அழைத்தார்.

வந்த இளவயதுப் பெண்ணை “இவள் பேரு மல்லிகா¸ நாங்க மல்லின்னு கூப்பிடுவோம். வீட்டு வேலை செய்றவம்மா” என்று இவளுக்கு அறிமுகம் செய்துவிட்டு¸ அந்தப் பெண்ணிடம் “இவங்கதான் புதுசா வேலைக்கு வந்திருக்குறவங்க. பெயர் கீதா… இவங்களை அம்மாவிடம் அழைத்துப் போ” என்று சொன்னார்.

பெட்டியை எடுத்துக் கொண்டு அவள் போகும்போது “கீதாம்மா உங்களுக்கு எதாவது வாங்க வேண்டும் என்றால் என்கிட்ட சொல்லுங்க. நான் வாங்கி வந்துவிடுவேன்” என்று சொன்ன டிரைவரிடம் நன்றி தெரிவித்துவிட்டு மல்லியைத் தொடர்ந்து வீட்டினுள் சென்றாள்.

Advertisement