Advertisement

அத்தியாயம் – 7

நாட்கள் விரைந்து சென்றது. கீதா கல்லூரிப் படிப்பை முடித்து¸ ஒரு வருட ஹவுஸ் கீப்பிங்கும் முடித்துவிட்டாள்.

அன்றைய சம்பவத்திற்குப் பிறகு அவள் பிரேமை பார்க்கவில்லை. ஆனால்¸ வேறு யாரையும் திருமணம் செய்யவும் நினைக்கவில்லை. இது அவனது முத்தத்தால் வந்த முடிவு அல்ல.

அதற்கு முன்னரே… அவளது தாயாரைப் பார்த்தோ அல்லது டி.வி.¸ பத்திரிக்கையில் வரும் உண்மை சம்பவங்களைப் பார்த்தோ, படித்தோ, அவளுக்கு திருமண வாழ்க்கை என்றாலே கசப்பாகத் தோன்றியது.

காரணம்… திருமணத்திற்குப் பின் சில ஆண்கள் மனைவியை மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் கஷ்டப்படுத்துகிறார்கள் என்றால், சில பெண்கள் கணவனைத் தாயாரிடமிருந்தும் மற்ற உறவுகளிடமிருந்தும் ஏதோ ஒரு வகையில் பிரித்துவிடுகின்றனர்.

இதையெல்லாம் கேட்டு ,பார்த்து, படித்து, ஒருவனுக்கு மனைவியாகக் கஷ்டப்படுவதையும் மருமகளாக இருந்து கணவன் வீட்டினரைத் துன்புறுத்துவதையும் அவள் விரும்பவில்லை.

ஆனால் வீட்டில் தாமரை திருமணம் செய்யச் சொல்லி அவளை வற்புறுத்த ஆரம்பித்துவிட்டார்.

“கீதாம்மா… உன் கல்யாணத்துக்கு பிறகுதான் கண்ணனுக்கு பண்ணனும். அவனுக்கு வயசு கூடிடே போகுது. நீ சரின்னு சொன்னால் உன்னையே சுற்றி வர்றானே… அந்தப் பையன் ஜெபின்… அவன் வீட்டிலிருந்து கேட்டுக்கிட்டே இருக்குறாங்க. அவர்களுக்கு ஓ.கே. சொல்லிடலாமா?” என்று கேட்டார்.

ஜெபின் என்ற பெயரைக் கேட்டாலே அவளுக்கு எரிச்சலாக வந்தது.
“அம்மா அண்ணனுக்கு முதல்ல மேரேஜ் பண்ணுவோம், எனக்கு அப்புறமாகப் பார்க்கலாம்” என்றாள் அவள்.

“அதுக்கு உன் அண்ணன் சம்மதிக்கமாட்டானே” என்றார் தாயார்.

“அண்ணனை சம்மதிக்க வைப்பது என் பொறுப்பு” என்று தமையனிடம் சென்றாள்.

தாயார் பேசப் போவதைப் பற்றி அறிந்திருந்தவன்¸ தங்கையைக் கண்டதும் “என்ன கீத்தும்மா நாள் குறித்துவிடலாமா?” என்று கேட்டான்.

“ம்… குறிக்கலாமே..! ஆனால்¸ எனக்கில்லை… உனக்கு” என்றாள்.

“எனக்கா? என்ன கீதா… நீ வீட்டிலிருக்கும் போது நான் என்னைப் பற்றி யோசிப்பேனா?” என்றான் அன்புடன்.

“ஏன் அண்ணா நான் வீட்டிலிருப்பது உனக்கு அவ்வளவு கஷ்டமாகவா இருக்கு?”

“இல்லைடா, அப்படி இல்லை”

“நீ அப்படி நினைச்சிதான் சொல்ற அண்ணா. உனக்கு நான், உன் ஒய்ப்கூட சண்டை போடுவேனோனு பயம். அதனால்தான் முதலில் எனக்கு மேரேஜ் பண்ணி அனுப்புவதில் மும்முரமா இருக்குற” என்றாள் கோபமாக.

கோபத்தில் சிவந்திருந்த அவளது மூக்கைப் பிடித்து ஆட்டியவாறு “ஏய் வாலு..! நீ முன்னாடி என்கிட்ட என்ன சொன்ன? காலேஜ் முடித்ததும் மேரேஜ் பண்ண சம்மதம் என்றாய். அதுக்கு மேலும் ஒரு வருஷம் ஆகிவிட்டது. இப்போது என்னவென்றால் இப்படி சொல்ற..?” என்றான் விளையாட்டாகவே.

“அண்ணா, எனக்கு உன் கல்யாணத்தை நான் நம் வீட்டுப் பெண்ணாகவே இருந்து பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. உனக்கு அப்புறம் நான் பண்ணிகிறேனே, ப்ளீஸ் அண்ணா… சரின்னு சொல்லு…” என்று கொஞ்சுதலாகக் கேட்டாள்.

அண்ணன் பதில் கூறும் முன்பே “நாங்க உனக்கு பொண்ணு பார்க்கட்டுமா?” என்று கேட்டாள்.

“சரி” என்றவன் “ஆனால் நீ எதுக்காகவும் உன் அண்ணியிடம் சண்டை போடக்கூடாது” என்றான்.

“சரிண்ணா…” என்றவள் “நான் உன் மனைவியை அண்ணி என்று அழைக்கமாட்டேன்பா” என்றாள்.

“வேறு எப்படி அழைப்பாயாம்?” என்று கேட்டான்.

“மதனி என்று கூப்பிடுவேன்”

“மதனியா?”

“ஆமாம், அண்ணி என்றால் நெருக்கம் இராதாம். மதனி என்பது சற்று வித்தியாசமாக இருக்கிறதில்லையா..?” என்றவள்

“சரிண்ணா. பெண் எப்படி இருக்க வேண்டும்?” என்று கேட்டாள்.

“உனக்கும் அம்மாவுக்கும் பிடித்த மாதிரி பாருங்க. அது போதும் எனக்கு ” என்றான்.

அம்மாவிடம் அன்றே சொல்லி பெண் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

கண்ணன் நல்ல வேலையில் இருந்ததால் உடனே வரன் அமைந்து திருமணமும் நல்லபடியாக நடந்தது.

சித்ராவை கீதாவுக்கு மிகவும் பிடித்துவிட்டது. தாமரையும் வீட்டிற்கு வருபவர்களிடமெல்லாம் மருமகளைப் பற்றி பெருமையாகப் பேசினார்.

தம்பதியினர் அடிக்கடி வெளியே சென்று வந்தனர். அந்த நேரங்களில் ‘எப்படி இருந்தது மதனி?’ என்று சித்ராவிடம் கேட்டால்¸ பதில் பேசாமலே தங்கள் அறைக்குள் சென்றுவிடுவாள்.

கண்ணனும் மகிழ்ச்சியை இவளிடம் பகிர்ந்து கொள்வது கிடையாது. மாமியாரிடம் நன்றாகவே நடந்து கொள்ளும் சித்ரா¸ கீதா எந்த வேலையை செய்தாலும் தடுத்துவிடுவாள்.

‘நான் செய்றேன் மதனி..’ என்றாலும் ‘என் வீட்டு வேலைகளை எனக்கு பார்த்துக்கத் தெரியும்’ என்று முறித்துப் பேசிவிடுவாள். இவள்தான் ஒதுங்கிப் போக வேண்டியதாயிற்று.

சாப்பிடும் போதும் அவளுக்குக் கேட்கும்படி ‘தண்டச்சோறு’ என்று முணுமுணுத்தவாறே பரிமாற கீதா சட்டென்று எழுந்து சென்றுவிட்டாள்.

எழுந்து சென்றவளைக் கண்டதும் “என் வீட்டில் இருந்தால் நான் சொல்றபடி கேட்டுத்தான் ஆகனும் என்று உங்க மகளிடம் சொல்லுங்க அத்தை” என்றாள் அவளுக்கும் கேட்கும்படி சத்தமாக.

“சித்ரா ஏன்மா இப்படிப் பேசுற? அவளுக்கு உன்னை எவ்வளவு பிடிக்கும் தெரியுமா? நீ என்னவோ அவளை விரோதி மாதிரி பார்க்கிற” என்று தாமரை சொல்லிவிட்டார்.

அவர் சொன்னதைக் கேட்டு கோபமோ வருத்தமோ கொள்ளாமல் “அத்தை உங்க மகள் கல்யாணம் செய்து புருஷன்¸ குழந்தை என்று வாழ வேண்டுமென்ற ஆசை உங்களுக்கு இருக்கிறதா?” என்று கேட்டாள்.

“இருக்கும்மா. நெஞ்சு நிறைய ஆசையிருக்கு” என்றார்.

“அப்படின்னா… நான் அவகிட்ட பேசுறதை நீங்க கண்டுக்காதீங்க” என்று உள்வேலையை கவனிக்கச் சென்றாள்.

மாலையில் வீடு வந்திருந்த கண்ணனும் சேர்ந்து கீதாவிடம் திருமணத்தைப் பற்றி கேட்க “ஏன் அண்ணா எப்பவும் இதைப் பற்றியே பேசுறீங்க?” என்று கேட்டாள்.

“பெண்ணாகப் பிறந்தால் எப்போதும் தாய் வீட்டில் இருக்க முடியாது. திருமணம் முடிந்து வேறொரு வீட்டுக்கு போகத்தான் வேண்டும்” என்றான்.

அவள் அமைதியாகவே இருக்கவும் “உன்னை கல்யாணம்தான் செய்யச் சொல்றோம். புதைகுழியில் விழ சொல்லலை” என்றான்.

“உன் மனைவியைப் பொருத்தவரை நான் தண்டச்சோறு. இந்த தண்டச்சோற்றுக்கு நகை¸ சீர் என்று எவ்வளவு செலவாகும். அதை ஏன் நீங்கள் செய்ய வேண்டும்?” என்றவள் வெளியே கிளம்பினாள்.

“எங்கே போற?” என்றவனிடம் “தண்டச்சோற்றுக்கும் பசிக்கும் இல்லையா…? அதான், வெளியில் போய் சாப்பிடப் போறேன்” என்று போய்விட்டாள்.

தங்கை வெளியே சென்றதும் மனைவியிடம் சென்றவன் “அவள் மனசு ரொம்பவே காயப்பட்டிருக்குதுன்னு நினைக்கிறேன்” என்றான்.

“அப்படி இருந்தால்தான் அவள் உங்களை¸ அத்தையை விட்டு வேறு ஒரு வாழ்க்கைக்குத் தயாராவாள்” என்று கணவனை சமாதானம் செய்தாள்.

“ம்கூம்…” என்ற பெருமூச்சோடு படுத்துவிட்டான்.

கடைக்குச் சென்றிருந்தவளிடம் வந்து நின்றான் ஜெபின்.

‘இவனுக்கு இது ஒரு வேலை, எப்போ பார்த்தாலும் பின்னாடியே வந்துடுவான். எப்படிதான் வெளியே வர்றேன்னு கண்டுபிடிக்கிறானோ?’

வீட்டிற்குப் போகப் போனவளை வழிமறித்து நின்றவனிடம் “உனக்கு எத்தனை தடவைதான் சொல்றது? ஏன் இப்படி என் பின்னாடி வந்து என் மானத்தை வாங்குறே? போ…” என்று அவனை போகச் சொன்னாள்.

“எனக்கு இன்றைக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகனும்” என்று விலகாமலே நின்றான் அவன்.

“என்ன முடிவு தெரியணும்?”

“நானும் நாலு வருஷமா உன் பின்னால சுத்துறேன். என் காதலையும் சொல்லிட்டேன். ஆனால்¸ நீ என்னவோ பெரிய ரம்பை மாதிரி பந்தா காட்டுறே” என்றான்.

“நானா உன்னை என் பின்னாடி சுத்த சொன்னேன்? நீ லூசு மாதிரி அலைஞ்சிக்கிட்டு ஏன்டா என்கிட்ட பிரச்சினை பண்றே?” என்று அவனை சுற்றிக் கொண்டு செல்ல முயன்றவளின் துப்பட்டாவைப் பிடித்து இழுத்தான்.

துப்பட்டாவை அவன் கையிலிருந்து விடுவித்துக் கொண்டவள்¸ ஓங்கி ஒரு அறை அறைந்தாள்.

அந்த ஒரு அறையில் சற்று நிலைதடுமாறியவன் சுதாரித்து¸ அதனால் ஏற்பட்ட கோபத்தை காட்டும் வழியறியாமல் “ஏய்..! என்னையா அடிச்சே? உன்னை…” என்று அவளை அணைக்க முயன்றான். சுற்றியிருந்தோர் அவனைத் தடுத்து அடித்துவிட்டு¸ போலீசை வரவழைத்து அவளிடம் தப்பாக நடக்க முயன்றதாகக் கூறி அவனை அவர்களிடம் ஒப்படைத்தனர்.

போலீசாருடன் சென்றவனின் கண்களில் வெறி இருந்தது. அவனது பார்வை ‘என்னையா போலீஸ்ல மாட்டிவிடுற¸ உன்னை என்ன செய்றேன் பார்’ என்றது.

Advertisement