Advertisement

அத்தியாயம் – 6

தன்னறைக்குச் சென்று தயாராகிக் கொண்டிருந்தவளுக்கு கீழே கண்ணன் “வாங்க…!” என்று யாரையோ..¸ யாரையோ என்ன மாப்பிள்ளை வீட்டாரை வரவேற்கும் குரல் கேட்டது.

கூடவே தாமரையின் குரலும் “வாங்க தம்பி…! வாங்கம்மா.. வந்து உட்காருங்க..!” என்று கேட்டது.

மாப்பிள்ளையின் பார்வை ஆவலாக உட்புறம் செல்ல¸ உடனிருந்த அத்தையம்மாள் அவனை கேலி செய்தார்.

“போங்கம்மா… போய் கீதாவை கூட்டிட்டு வாங்க…” என்று தாயாரை அனுப்பிய கண்ணன்¸ அவர்களிடம் பேச ஆரம்பித்தான்.

“அப்பா¸ அம்மா ஏன் வரலை?” என்றவனுக்கு

“அப்பாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை… டாக்டர் ரொம்ப அலையக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க. அப்பா இல்லாமல் அம்மா வெளியில் போவதில்லை என்பதால் அவங்களும் வரலை.. அத்தோடு நான் ஏற்கனவே வாட்ஸ்அப்ல பொண்ணோட போட்டைவை அனுப்பிவிட்டதால் அவர்களுக்கு சம்மதம்னு சொல்லி… எங்க ரெண்டுபேரையும் நேர்லபோய்ப் பார்த்து பேசிட்டு வர சொன்னாங்க”  பதில் கூறினான் மாப்பிள்ளை.

“அதோ கீதா வந்தாச்சு!” என்ற கண்ணன் தங்கையின் அருகில் வந்து “கீதா… மாப்பிள்ளையைப் பாரும்மா..” என்றான்.

அண்ணன் சொன்னதும் குனிந்திருந்த தலையை நிமிர்த்தி எதிரே அமர்ந்திருந்தவனைப் பார்த்தவள் பிரமித்துவிட்டாள்… ஏனெனில்¸ எதிரே புன்னகையுடன் அவளைப் பார்த்து கண் சிமிட்டிக் கொண்டிருந்தவன் அந்த ‘பனைமரம்’ பிரேம்.

இமைக்காமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளிடம் தன் புருவத்தை உயர்த்தி ‘எப்படி?’ எனக் கேட்க வெட்கத்தில் முகம் சிவந்தவள்¸ திரும்பிச் சென்று தன் அறைக்குள் புகுந்துகொண்டாள்.

அவளது முகச்சிவப்பை ரசித்தவன்¸ தலைமுடியை பின்னுக்கு கோரியவாறு அத்தையிடம் மேற்கொண்டு பேசுமாறு கூறினான்.

“ஒரு நிமிஷம் பிரேம்!” என்ற கண்ணன் “கீதாவுக்கும் உங்களை பிடிச்சிருக்கான்னு ஒரு வார்த்தை கேட்டபிறகு… கல்யாணத்தை பேசி முடிவு பண்ணிக்கலாம்” என்று கூறிவிட்டு தங்கையைப் பார்க்கச் சென்றான்.

மனம் முழுவதும் குழப்பத்துடன் அமர்ந்திருந்தாள் அவள். இவன்.., இந்த பிரேம் இப்படி அவளைப் பெண் கேட்டு வருவான் என்று அவள் நினைக்கவில்லையே! ‘இதனால்தான் அன்னைக்கு நான் உனக்கு டீச்சர் மட்டும்தானா? வேறு ஒன்றும் இல்லையா? என்று கேட்டிருக்கிறான்.

அப்படியென்றால்… இந்த எண்ணம் முன்பே அவனுக்கு இருந்திருக்க வேண்டும். இப்படிப்பட்ட எண்ணம் கொண்டவன் ஏன் என்னை அந்த மாதிரியெல்லாம் தவறாகப் பேச வேண்டும்? இப்போது ஏன் பெண் கேட்டு வரவேண்டும்?’ என்று ஒவ்வொரு கேள்வியாக அவள் தனக்குள்ளே கேட்டுக் கொண்டிருந்தபோது வந்த கண்ணன் “பிரேமை உனக்கு பிடிச்சிருக்காடா?” என்று கேட்க¸ தன் சிந்தனையிலிருந்தவள் எதையுமே யோசிக்காமல் சட்டென்று “பிடிக்கலை” என்று சொல்லிவிட்டாள்.

“பிடிக்கலையா…? ஏன்மா? கீதா… நல்ல பையன்¸ அழகா இருக்கான்¸ நிறைய படிச்சிருக்கிறான்¸ நல்ல வேலை¸ எல்லாத்துக்கும் மேல ரொம்ப நல்ல குடும்பம்… கொஞ்சம் யோசித்து சொல்லும்மா…” என்று பிரேமின் தகுதிகளைக் கூறி யோசிக்கச் சொன்னான் தமையன்.

“இல்லைண்ணா… இதுல யோசிக்க ஒன்றுமில்லை… எனக்கு இந்தாளைப் பிடிக்கலை.. அவ்வளவுதான்” என்று முடித்துவிட்டு தன் நகைகளைக் கழற்ற ஆரம்பித்தாள்.

ஹாலுக்கு சென்ற கண்ணன் “சாரி பிரேம்…” என்றான்.

“என்னாச்சு?”

“கீதாவுக்கு…” என்றவன் தயங்கித் தயங்கி “சொல்ல ரொம்ப கஷ்டமா இருக்கு…” என்றான்.

“பரவாயில்லை… சொல்லுங்க…” என்றான் பிரேம்.

“வந்து… அவளுக்கு உங்களைப் பிடிக்கவில்லையாம்…! நீங்க வேறு பெண்ணைப் பாருங்க…” என்றான் தங்கைக்கு நல்ல வரன் அமையாமல் போகிறதே என்ற வருத்தத்துடன்.

“என்ன பிடிக்கலையா..!!” என்று அதிர்ச்சியில் எழுந்துவிட்டவன்¸ மற்றவர்கள் முன் தன் நிலையை மறைக்க முடியாதவனாக “நான்… அவகிட்ட கொஞ்சம் தனியாகப் பேசணும். பேசலாமா?” என்று கேட்டான்.

“பேசுங்க…” என்று அவளது அறையை சுட்டிக் காட்டியவன்¸ அவன் நடக்க ஆரம்பித்ததும் “ஆனால்… கட்டாயப்படுத்தாதீங்க” என்று மெதுவாகக் கேட்டுக் கொண்டான்.

தலையாட்டியவாறு நடையைத் தொடர்ந்தான் பிரேம்.

அறைக் கதவைத் தட்டியவனுக்கு “அண்ணா ப்ளீஸ்.. இதைப் பற்றி பேசவேண்டாமே..!” என்ற அவளது கெஞ்சல் குரல் கேட்டது.

கதவைத் திறந்து உள்ளே சென்றவன்¸ உட்புறமாகத் தாழிட்டான்.

அண்ணன்தான் கதவைத் தட்டுகிறான் என்றே எண்ணியிருந்தவள்¸ பிரேமை அங்கு எதிர்பார்க்கவில்லை.

வந்தவன் கதவைத் தாழிடுவதைக் கண்டதும் “கதவை எதுக்காக லாக் பண்றீங்க?” என்று அவனிடம் கேட்டவாறே சென்று தாழ்ப்பாளில் கையை வைக்க… அந்தக் கையைப் பிடித்திழுத்து அவளைத் தன்புறம் திருப்பினான் பிரேம்.

“கையை விடுங்க..!” என்று விடுவித்துக் கொள்ள முயன்றவளிடம்¸

“என்னைப் பிடிக்கலைன்னு சொன்னியாமே?” என்றான்.

“ஆமாம் அதுக்கென்ன இப்போ?” என்று அலட்சியமாகக் கூறியவள் தொடர்ந்து “முதல்ல கையை விடுங்க” என்றாள்.

“என்னை ஏன் பிடிக்கலைன்னு ஒரு காரணம் சொல்லு கையை விடுறேன்” என்றவனிடம்¸

“ஒருத்தரைப் பிடிப்பதற்கு ஆயிரம் காரணம் சொல்லலாம்… பிடிக்கவில்லை என்பதற்கு காரணம் எதுவும் சொல்ல வேண்டிய அவசியமில்லை” என்று துடுக்காகவே கூறியவள் “என் கையை விடுங்க… வலிக்குது..” என்றாள்.

“உனக்கு உன் கைவலி பெரிசாத் தெரியுது. ஆனால்¸ எனக்கு மனசு முழுக்க வலிக்குது… நீ பிடிக்கலைன்னு சொன்ன ஒரே வார்த்தையில். எனக்கு என்ன காரணம்னு தெரிந்தாக வேண்டும் கீதா” என்றான் பிடிவாதமாக.

அவளும் அதே பிடிவாதக் குரலில் “எனக்கு உங்களை கல்யாணம் பண்ண விருப்பமில்லை… அவ்வளவுதான்” என்றாள்.

“ஆனால் எனக்கு விருப்பமிருக்கே!” என்றான் அவன்.

“அதுக்கு நான் எதுவும் செய்ய முடியாதே” என்றவளிடம்¸

“ஏன் முடியாது? நீ சம்மதம்னு ஒரு வார்த்தை சொன்னால் போதுமே…” என்றான் இறங்கிவிட்ட குரலில் வருத்தத்துடன்.

அவனது வருத்தக் குரலைக் கேட்டு இளகப் பார்த்த மனதை கடினமாக்கிக் கொண்டு “உங்களுக்கு சொன்னா புரியாதா பிரேம்? எனக்கு இந்த மாதிரி டீச்சர் ஸ்டூடன்ட்டை கல்யாணம் பண்றது பிடிக்காது. அதுவும் எனக்கு கிளாஸ் எடுத்த ஒருத்தரையே மேரேஜ் பண்றது எனக்கு சுத்தமா பிடிக்காத விஷயம்” என்றாள்.

“சரியா ஒரு காரணம் சொல்லத் தெரியலை. அதற்கு என்னவோ டீச்சர் – ஸ்டூடன்ட்னு கதை சொல்ற” என்றான் அவன்.

“நீங்க சொன்னா புரிஞ்சுக்க மாட்டீங்களே! சரி அதையெல்லாம் விடுங்க… எனக்கு ‘உங்களை’ பிடிக்கலை போதுமா?” என்றால் குரலில் அழுத்தம் காட்டி.

“என்னைப் பிடிக்கலைன்னா வேற யாரைப் பிடிச்சிருக்கு? யாரை மேரேஜ் பண்ணப் போற? அந்த ஜெபினையா..?” என்றான் கோபத்துடன்.

ஜெபினுடன் பேசியதையும் இவன் தவறாகத்தானே நினைத்தான் என்று எண்ணியவள் “நான் வேற யாரை வேணும்னாலும் மேரேஜ் பண்ணுவேன். ஆனால்¸ உங்களை பண்ண மாட்டேன் போதுமா? கிளம்புங்க…” என்று வாசலைக் காட்டினாள்.

“ஏய் என்னையா போக சொல்ற?” என்று சீறினான் அவன்.

“ஏன் இவ்வளவு நேரமும் நான் மரியாதையா சொன்னது உங்க மண்டையில ஏறவே இல்லையா?” என்றாள் நக்கலாக.

“ஆமாம்¸ நீதான் அதிபுத்திசாலியாச்சே என் மண்டையில உறைக்கிற மாதிரி சொல்லிட்ட…” என்றவன் “ஆனால் நீ வேற யாரை மேரேஜ் பண்றன்னு நானும் பார்க்கிறேன்” என்று பல்லைக் கடித்தான்.

“பாருங்களேன்… முதல் பத்திரிக்கை உங்களுக்கே அனுப்புறேன். வந்து பாருங்க” என்றாள் நக்கல் குரலில்.

“பத்திரிக்கைதானே..! அனுப்புவே… அனுப்புவே…” என்றவன் சட்டென அவளை இழுத்தணைத்து அவளது உதட்டில் தன் முத்தத்தைப் பதித்து விடுவித்தான்.

விழி விரிய அவனையே பார்த்து நின்றவளிடம் “வேற யாரையும் மேரேஜ் பண்ண முடிவெடுப்பதற்கு முன்பும்¸ எனக்கு பத்திரிக்கை அனுப்புவதற்கு முன்பும் இதை சற்று நினைத்துப் பார். உன்னால எப்படி வேறொருவனை மணக்க முடியும் என்பது அப்போ புரியும்” என்று சொல்லி அவளது கன்னத்தைத் தட்டியவாறு புன்னகையுடன் வெளியேறினான்.

முதல் தீண்டல்… அதுவும் அத்துமீறி நடந்தது. உதட்டை தொட்டுப் பார்த்தாள்… உடல் நடுங்க ஆரம்பித்தது. கட்டிலில் விழுந்து அழ ஆரம்பித்தாள்.. முன்பு வார்த்தையால் கொன்றான் என்றால் இப்போது செய்கையால் வதைக்கிறான். ஏன் இப்படி? என்று ஒவ்வொன்றையும் நினைத்து வருந்தினாள்.

Advertisement