Advertisement

அத்தியாயம் – 5

அடுத்த நாள் வகுப்பிற்குச் சென்ற பிரேம் கீதா வந்திருக்கவில்லை என்றதும்¸ அவளுக்கு அருகிலிருக்கும் உஷாவிடம் கேட்டான்.

அவள் “சார் அந்தக்கா நேற்று சொன்னதுபோல் இனிமேல் இங்க வரவே மாட்டாங்களாம்” என்றாள்.

“ஓ…!” என்றவன் ‘அவளிடம் ரொம்பவே கடுமையாக பேசிவிட்டேன் போல…’ தனக்குள்ளே பேசிக் கொண்டான். எப்போதும் சிரித்த முகமாகவே இருப்பவள் தன்னைக் கண்டதும் மாறிவிடுவாளே… அதற்குக் காரணம் தன்னுடைய அளவு மீறிய பேச்சுதான் என்பது புரியவும் என்னவென்று அறியாத ஒரு பதட்டம் மனதில் குடியேறியது. அவளைப் பார்க்க வேண்டும்…. மன்னிப்பு கேட்க வேண்டும்…. என்று நினைத்து அவளது வீட்டு முகவரியை அலுவலகத்தில் கேட்டுப் பெற்றுக் கொண்டு அவளது இல்லத்திற்க்கு சென்றான்.

நண்பகல் நேரம் அழைப்பு மணி ஒலிக்க¸ சென்று கதவைத் திறந்த கீதா திகைத்துவிட்டாள்.

அழைப்பு மணி சத்தத்தைக் கேட்டிருந்த தாமரையும் “யாரும்மா வந்தது?” என்று வந்தார்.

“அதும்மா… எங்க டூடோரியல் சென்டர்ல கிளாஸ் எடுக்கிறவர்…” என்று தாயாரிடம் சொன்னவள் “வாங்க சார்…” என்று அவனை உள்ளே அழைத்துச் சென்றாள்.

அவளைப் பின்தொடர்ந்து உள்ளே சென்றவனின் பார்வை அவளைத்தான் அளவெடுத்துக் கொண்டிருந்தது. அப்போதுதான் குளித்திருப்பாள் போல பாவாடை தாவணியிலிருந்தவளின் முதுகுப் பகுதியில் ஈரம் கசிந்திருந்தது. முடியை துண்டால் சுற்றி கொண்டையிட்டிருந்தாள். மஞ்சள் தேய்த்து குளித்த முகம் பளபளத்தது. நெற்றியும் சிறு திருநீற்றுக் கீற்றுடன் பார்க்க நிறைவாக இருந்தது. ‘சுடிதாரைவிட தாவணியில் இன்னும் அழகாக இருக்கிறாள்…’ பெருமூச்சுவிட்டான் பிரேம்.

“வாங்க தம்பி…” என்ற தாயாரை அவனுக்கு அறிமுகப்படுத்தியதும் “வணக்கம்!” சொன்னவன் அப்படியே பார்த்துக் கொண்டிருக்க “என்ன சார் அப்படியே நிற்கிறீங்க? உட்காருங்க…” என்று சோபாவைக் காட்டினாள்.

அவன் அமர்ந்ததும் “நீ பேசிட்டு இரு¸ நான் போய் குடிக்க ஏதாவது கொண்டு வர்றேன்” என்று உள்ளே சென்றார் தாமரை.

அவர் உள்ளே சென்றதும் “என்ன விஷயமா வந்தீங்க?” என்று சற்று கறாராகவே கேட்டாள்.

“சாரி கீதா…” என்றான் அவன்.

“எதுக்கு சாரி?”

“நான் உன்கிட்ட கண்டபடி பேசிட்டேன்… அதான் சாரி கேட்டுட்டு¸ மறுபடியும் உன்னை சென்டருக்கு கூட்டிட்டு போகலாம்னு வந்தேன்” என்று தான் வந்ததன் காரணத்தை அப்படியே கூறினான்.

“இல்லை சார்… நான் மறுபடியும் அங்கே வருவதாக இல்லை…”

“என்ன கீதா இப்படிப் பேசுற? நேற்று நீ சொல்லும் போதுகூட இவ்வளவு கோவமா இருக்கேன்னு நினைக்கலை… ஆனால் இன்றைக்கு நீ கிளாசுக்கு வரலைன்னதும் மனசுக்கு கஷ்டமாக இருந்தது.. அதனால்தான் வந்தேன்” என்றான்.

“ஓஹோ…! மனசு வலித்ததா..? மனசுன்னு ஒன்று உங்களுக்கு இருக்குதா என்ன?” என்று நக்கலாகக் கேட்டவள் “நான் இனிமேல் அங்கே வரமாட்டேன்… சோ..¸ நீங்க போகலாம்” என்றாள்.

“அப்போ… என்னை மன்னிக்கமாட்டியா?”

“மன்னிப்பா? எதுக்கு மன்னிக்கணும்?”

“நான் உன்கிட்ட அப்படிப் பேசினதால தானே அங்கே வரமாட்டேங்கிற…? அதை மன்னித்து மறந்துவிடேன்…” என்றான் சாதாரணமாகவே.

“என்ன? நீங்க பேசினதை நினைச்சிட்டு இருக்கிறதால நான் வரமாட்டேங்கிறேனா?”

“பின்னே இல்லையா?”

“நிச்சயமாக அப்படி இல்லை. முதல்ல உங்களை ஒரு ஆளா நான் நினைச்சா தானே… நீங்கள் பேசினதை நினைச்சி கஷ்டப்பட. நான்தான் அப்படி நினைக்கவே இல்லையே!” என்றவள்¸ பேச்சை முடிக்காமல் “ரோட்ல போறவங்க வர்றவங்க சொல்றதையெல்லாம் நினைச்சிட்டு இருந்தா வாழவே முடியாதே..!” என்றால் குத்தலாக.

அவ்வளவு நேரமும் எப்படியாவது அவளை மீண்டும் படிக்க அழைத்துச் சென்றுவிட வேண்டும் என்று சிறு பெண்ணிடம் பேசுவதைப் போலவே பேசிக் கொண்டிருந்தவன்¸ அவளது குத்தல் பேச்சைக் கேட்டுக் கோபமுற்று “நான் உனக்கு ரோட்ல போறவனா?” என்று கேட்டான்.

அடுத்து அவள் பதில் கூறும் முன்பாக மோர் எடுத்துக் கொண்டு தாமரை வந்துவிட அவர்களது பேச்சு நின்றது.

புன்னகையுடன் வாங்கிப் பருகியவன் “வெயிலுக்கு இதமாக இருக்கு..” என்று பாராட்டிவிட்டு¸ நன்றி கூறி எழுந்தான்.

“என்ன தம்பி.. உடனே கிளம்பிட்டீங்க?”

“ஆமாம்மா… நான் வந்த வேலை முடிந்துவிட்டது” என்று புறப்பட்டான்.

“போம்மா… போய் உன் சாரை வழியனுப்பிட்டு வா…” என்று தாயார் கூற கீதாவும் அவனுடன் சென்றாள்.

வெளியே வந்தவளிடம் தன்னுள் மிச்சமிருந்த கோபத்தைக் காட்டி “எப்படி உன்னால் என்னை ரோட்டில் போகிற ஒருவனாக நினைக்க முடிந்தது?” என்று கேட்டான்.

“ஏன்? உங்களை வேறு எப்படி நினைப்பது?” என்று கேட்டவள்¸ அவன் பேசும் முன்பாகத் தானே பதிலையும் கூறினாள். “நேற்றோடு ஆசிரியர்¸ மாணவி உறவு விட்டுப் போயாச்சு. அப்போ நீங்க யாரோ தானே…!” என்று.

“என்ன? கொஞ்ச முன்னால ரோட்ல போறவன்… இப்போ யாரோவா…? என்றவன் “நான் உனக்கு வெறும் டீச்சர் மட்டும்தானா? வேற எதுவும் இல்லையா?” என்றான் குரலில் ஏக்கத்தோடு.

குரல் வித்தியாசத்தை உணர்ந்து நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள்¸ குழப்பத்துடனே ‘ஆமாம்’ என்று தலையசைக்கவே பைக்கை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டான்.

‘இவன் ஏன் இப்படி பேசிட்டுப் போறான்?’ என்றெண்ணியவாறே உள்ளே சென்றவளிடம் “ரொம்ப நல்ல பையன்… உனக்குப் பொருத்தமாக இருப்பான். இந்த பையனையே உனக்கு பார்க்கச் சொல்லுவோமா?” என்று கேட்டார் தாயார்.

‘ச்சீ.. இவன் எனக்கு மாப்பிள்ளையா? என்னை எப்படியெல்லாம் திட்டினான்? சின்ன பசங்களை சைட் அடிப்பதாகச் சொல்லி…. எத்தனை நாள் எல்லோர் முன்னாடியும் என்னை அவமானப்படுத்தியிருப்பான்? அவனைப் போய் நான் மணப்பதா… ம்கூம்.. நடக்காத காரியம்…’ வலுவாகத் தலையசைத்தாள் வேண்டாம் என்று.

“சரி போகட்டும் விடு.. உனக்கு பரிட்சை எப்போ?” என்றவரிடம் “இன்னும் மூணு வாரத்துல…” என்று சொல்லிவிட்டுத் தன்னறைக்கு சென்றாள்.

கீதா தான் சொன்னதுபோல அந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்று கல்லூரி செல்ல ஆரம்பித்தாள். தமிழ் இலக்கியம் தேர்ந்தெடுத்திருந்தாள்.

கல்லூரி முதல் ஆண்டு முடியும் தருவாயில் ஒருநாள்… மாலையில் வீடு திரும்பியவளை பரபரப்புடன் எதிர்கொண்டார் தாமரை.

“என்னம்மா… என்னாச்சு? ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்குறீங்க?” என்றவளிடம் “போய் குளிச்சிட்டு எதாவது ஒரு பட்டுப்புடவை கட்டிக்கோ… அப்புறம் பிரிட்ஜில் மல்லிகை இருக்கு எடுத்து தலையில் வைச்சிட்டு ரெடியா இரு…”

“இப்போது எதுக்கும்மா?” என்றவளிடம்

“உன்னை பொண்ணு பார்க்க பையன் வீட்டிலிருந்து வரப்போவதா கண்ணன் போன் பண்ணினான்” என்றவர் கேசரி செய்வதில் முனைந்தார்.

“ஏம்மா இப்பவே வரச் சொன்னீங்க? நான் காலேஜ் முடிக்க வேண்டாமா?” என்று கேட்டாள் ஆதங்கத்துடன்.

“மாப்பிள்ளைக்கு உன்னை ஏற்கனவே பார்த்து பிடித்துப் போய்விட்டதாம். இன்றைக்கு சும்மா… சம்பிரதாயத்திற்காகத் தான் பார்க்க வர்றாங்க. அப்படியே மாப்பிள்ளைப் பையன் அவர் அத்தையோடு வந்து கல்யாணத்தை பேசி முடிவு பண்ணிட்டு போவாங்க.. கல்யாணத்தை உன் படிப்பு முடிந்த பிறகு வைச்சிக்கலாம்ன்னு மாப்பிள்ளையே சொல்லிவிட்டாராம்… எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குடா” என்று மகிழ்ச்சியோடு கூறினார்.

“அம்மா எனக்கு அந்த மாப்பிள்ளைப் பையனைப் பிடிக்க வேண்டாமா?”

“உனக்கும் கண்டிப்பா அவரைப் பிடிக்கும். போம்மா… போய் கிளம்பு…” என்று அனுப்பினார்.

Advertisement