Advertisement

அத்தியாயம் – 4

அடுத்த நாளும் கீதா கண்ணனைப் பார்க்காமலே சென்றுவிட்டாள்.

அவள் அப்படிப் போனதும் அலுவலகம் போவதற்காக வந்தவனிடம் “அவள் ரொம்பவே கோவமா இருக்கிறான்னு நினைக்கிறேன்” என்றார்.

“எல்லாம் போகப் போக சரியாயிடும்மா..” என்று கூறிச் சென்றான்.

அன்றைய வகுப்பு நடந்து கொண்டிருக்கும்போது கீதா திடீரென்று எழுந்து “சார்…” என்று அழைத்தாள்.

“என்ன?” என்றவனிடம் “நான் பின்னாடி போய் இருக்கிறேன் சார்” என்றாள்.

“ஏன் இங்கே இருப்பதற்கென்ன?” என்று கேட்டான் அவன்.

“குனிஞ்சே உட்கார்ந்திருப்பது முதுகு வலிக்குது சார்” என்றாள்.

“அப்படின்னா… கொஞ்சம் குறைவா வளர்ந்திருக்கனும்…” என்று அவன் சொல்லவும் அவள் சிரித்துவிட்டாள்.

“எதுக்கு இப்போ சிரிப்பு?”

“யாரும் வளர்றது அவங்களோட கையில இல்லையே சார்… அதை நினைத்தேனா சிரிப்பு வந்துட்டு” என்றவள் அவன் போகக்கூடாது என்று சொல்லச் சொல்ல பின்னாடி சென்றமர்ந்தாள்.

“ஏய்… நான் சொல்லிட்டே இருக்கேன்… நீ கேட்காமல் பின்னாடி போய்ட்டிருக்க…? எதுக்கு அங்கே போய் தூங்கி விழுறதுக்கா…? அப்படித்தான்னா நான் ஏற்கனவே சொல்லிட்டேன் ‘இங்க வராதே வீட்லையே இருந்துக்கோ… இல்லைன்னா கல்யாணம் பண்ணிட்டுப் போ’ன்னு” என்றான்.

“சார் நானும் முன்னாடியே உங்ககிட்ட சொல்லிட்டேன். என்னோட சொந்த விஷயம் பத்தி பேசுறதுக்காக நீங்க இங்க வரலைன்னு…” என்றாள் அவள் பதிலுக்கு துடுக்காக.

“ஆமாம்மா… நான் என்னோட வேலையைத்தான் பார்க்கிறேன். நீங்கதான் படிக்க வர்றேன்னு சொல்லிட்டு ரோட்ல கண்ட கண்ட பசங்களோட பேசிட்டு அலையறீங்க… இப்படி நின்னு பேசுறதை பார்க்குறவங்க என்ன நினைப்பாங்க? உன்னை உன் வீட்டில் ரொம்பவே நல்லா வளர்த்திருப்பதாகத்தானே…? நீதான் நான் சொல்றதைக் கேட்கிறதாவே இல்லையே¸ எங்கே வேணுனாலும் உட்கார்ந்துக்கோ… எனக்கென்ன வந்தது?” என்று குத்தலாகவே பேசி முடித்தான்.

‘அந்த ஜெபின் பேசுனதை பார்த்திருப்பானோ?’ இவனும் அதை தப்பாகத்தான் நினைக்கிறான் என்றபோது மனம் வலித்தது.

“நான் இப்போ என்னதான் செய்யணும் சார்?” என்று கேட்டாள்.

“நான் சொல்றதைக் கேட்கிறதா இருந்தா மட்டும் கிளாஸ்ல இருக்கலாம்… இல்லைன்னா வெளியே போ” என்றான்.

“ரொம்ப நன்றி சார்.. வெளியே போக சொன்னதுக்கு. ஆனால்.. நான் இன்றைக்கு மட்டுன்னு போகலை… மறுபடியும் இந்த கிளாஸ்க்கு வரவேமாட்டேன். நீங்க இருக்கிற இந்த இடத்தை… ஏன் உங்களையே மறுபடியும் பார்க்க நான் விரும்பலை” என்று அவள் வகுப்பிற்கே வரமாட்டேனென்று சொல்லவும் “நீ எக்ஸாம் எழுத வேண்டாமா?” என்று கேட்டான் அவன்.

“கண்டிப்பா எழுதுவேன் சார்… எழுதுறது மட்டும் இல்லை உங்களோட கிளாஸ்ல இல்லைன்னாலும்… என்னால பாஸ் பண்ண முடியும்” என்று அவனிடம் சவால் விடுவதுபோல் பேசியவள்¸ மற்றவர்களுக்கெல்லாம் பை சொல்லிவிட்டு வகுப்பை விட்டு வெளியேறினாள்.

ஆபீஸ் ரூமுக்கு சென்று தகவல் தெரிவித்தவள்¸ ஹால் டிக்கெட்டை மட்டும் வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறு கூறிச் சென்றாள்.

இன்றும் வீடு திரும்பும் வழியில் ஜெபின் அவளை வழிமறிக்கவே ஓங்கி ஒரு அறை விட்டாள். அடித்துவிட்டு “லூசாடா நீ…? நான் எத்தனை தடைவை சொல்லிட்டேன்… இந்த மாதிரி என் பின்னால சுத்துற வேலையை விட்டுட்டு படிக்கிற வேலையைப் பாருன்னு… சொன்னா புரியாத முட்டாளா நீ? இன்னொரு தடவை இப்படி வழிமறிச்சா போலீஸ்ல மாட்டிவிட்ருவேன்… ஜாக்கிரதை…” என்று மிரட்டிவிட்டுச் சென்றாள்.

சென்றவளையே முறைத்துக் கொண்டு நின்றான் அவன்.

மதியம் விடுப்பு எடுத்துக் கொண்டு வந்த கண்ணன் நடந்ததைப் பார்க்க¸ அவனுக்கு மனம் சுட்டது.

‘அன்னைக்கு தங்கச்சி பொய் சொன்னதா நினைச்சேனே! ஆனால்¸ வண்டிலன்னா சீக்கிரமா வீட்டுக்கு வரலாம்… சைக்கிளை மாதிரி ஈஸியா வழிமறிக்க முடியாதுன்னுதான் டூவீலர் கேட்டுருக்கா. அதைக்கூட புரிஞ்சிக்காம நான் என்ன நினைச்சிட்டேன்?’ என்று தன்னுடைய செயலுக்காக வருந்தினான்.

தங்கை பத்திரமாக வீடுபோய் சேர்கிறாளா என்று கவனித்தவன்¸ வீட்டிற்குப் போகாமலே எங்கோ சென்றான். மீண்டும் அவன் வந்தபோது நண்பன் உதவியுடன் ஒரு ‘ஹோண்டா’ ஸ்கூட்டியும் வீட்டிற்கு வந்தது.

“கீதா…! கீதா…!” என்றழைத்தவாறே வந்தவன்¸ தாயாரைக் கண்டதும் “அம்மா… கீத்துக்குட்டி எங்கே?” என்று கேட்டான்.

“அவளோட ரூம்ல இருக்குறா…” என்றவர் மகனது முகத்தைக் கண்டு “என்னப்பா ரொம்ப சந்தோஷமா இருக்கே?” என்று கேட்டார்.

“ஆமாம்மா… மறுபடியும் கீதா என்னை அண்ணான்னு கூப்பிட்டு பேசப்போறாளே…” என்றான் சிறுபிள்ளையின் குதூகலத்துடன்.

தங்கையின் அறையை நெருங்கியவன் “கீதா….” என்று அழைத்து கதவைத் தட்டினான். உள்ளிருந்து “என்ன?” என்ற குரல் மட்டும் கேட்டது.

“கீதாம்மா… வந்து கதவைத் திறயேன்..!” என்றார் தாமரை.

கதவைத் திறக்காமலே “என்னம்மா… என்னை இங்கேயும் இருக்க விடமாட்டீங்களா?” என்றாள் கோபமாக.

“கீத்தும்மா… வாயேன்… வந்து கதவைத் திறம்மா…” என்று அண்ணனது குரல் கேட்டது. வெகுநாட்களுக்குப் பிறகு வரும் செல்லமான அழைப்பு எனவும் சட்டென்று கதவைத் திறந்தாள்.

கதவைத் திறந்து நின்றவளின் அழுது சிவந்திருந்த முகத்தைக் கண்டதும் “என்னடாம்மா? ஏன் அழுதே…? இந்த அண்ணனை மன்னிச்சிடும்மா…” என்று மன்னிப்பு வேண்டினான் தமையன்.

“அண்ணா…!” என்று அவள் ஓடிச் சென்று அவனை கட்டிக் கொண்டாள்.

அவளது முதுகை வருடியவாறே “அழுதது போதும் கீதா… பாரு… எப்பவும் மாம்பழம் போல இருக்கக்கூடிய அழகான கன்னம் இன்னைக்கு பலூன் மாதிரி  வீங்கி இருக்கு..” என்று கேலி பேசவும் சிரித்துவிட்டாள்.

அதன் பின்னர் அவளை அழவிடாது “வா…” என்று அழைத்துச் சென்றான்.

“எங்கே?” என்றவளிடம் “சும்மா… அப்படியே வெளியே போயிட்டு வரலாம்” என்று அழைத்துச் சென்று ஸ்கூட்டியைக் காட்டினான்.

“அண்ணா இது…?”

“உனக்குத்தான்… பிடிச்சிருக்கா? கலர் எப்படியிருக்கு?” என்று கேட்டு தங்கையின் பதிலை கேட்பதற்கு முன் “நாளையிலிருந்து நீ இதுலையே சென்டருக்குப் போகலாம்” என்றான்.

“ஆனால்… காலேஜ் போகும் போதுதான் வாங்கித் தருவேன்னு சொன்னியே?” என்று கேட்டாள் அவள்.

“அந்த எண்ணத்தை மாத்திக்கிட்டேன்… இப்போ இதை வச்சிக்கோ.. காலேஜ் போகும்போது வேற மாத்திக்கலாம்” என்றான் அந்த அண்ணன்.

“இல்லைண்ணா… நான் காலேஜ் போகும்போதே இதை எடுத்துக்குறேன்… அது வரைக்கும் வேண்டாம்” என்றான்.

“ஏம்மா…? அண்ணன் மேல கோவம் இன்னும் போகலையா?” என்று கேட்டான் வருத்தமாக.

“ஐயோ.. அண்ணா..! அப்படியில்லை. நான் மறுபடியும் அந்த சென்டருக்குப் போவதா இல்லை” என்றாள்.

“ஏன்டா…? என்னாச்சு?”

“போகப் பிடிக்கலை…”

“அப்படின்னா பரிட்சை எப்படி எழுதுவ?”

“அதுக்கெல்லாம் ஏற்பாடு பண்ணிட்டேன்…”

“அப்போ…. இந்த வருஷம் கண்டிப்பா பாஸ்தானா?”

“கண்டிப்பாக…”

“அப்புறம் காலேஜ்?”

“ம்… அதுவும் போகணும்¸ அம்மாவோட ஆசை அதுதானே… நானும் ஒரு டிகிரி முடிக்கணும்னு. அதனால அதையும் கண்டிப்பா செய்வேன்” என்றாள் உறுதியாக.

“அப்புறம்… கல்யாணம்?” என்றான் அவன். அண்ணன் கல்யாணம் என்றதும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ‘நீ கல்யாணம் செய்துட்டு போயிருக்க வேண்டியதுதானே! இங்கே வந்து என் உயிரை ஏன் எடுக்குற?’ என்ற பனைமரத்தின் நினைவு வந்தது.

“ம்… அதுவும் செய்யலாமே…” என்றாள்.

“அப்போ.. மாப்பிள்ளை பார்க்கட்டுமா?” என்று கேட்டான் உடனே.

அதுவரை அண்ணன் தங்கையின் பேச்சை ஒரு கவனிப்பாளராக மட்டுமேயிருந்து கேட்டுக் கொண்டிருந்த தாமரை “கண்ணா படிப்பு முடிஞ்ச பிறகு மாப்பிள்ளை பார்க்கலாமே” என்றார்.

“அம்மா…. உடனே கல்யாணம் பண்ணி அனுப்பப் போறதில்லைம்மா, இப்பவே பார்க்க ஆரம்பிச்சாதானே அவளுக்கு ஏற்ற பையனா பார்க்க முடியும்” என்று சொல்லவும் தாயாரும் அதை ஏற்றுக்கொண்டார்.

Advertisement