Advertisement

அத்தியாயம் – 3

கீதாவை விட எட்டு வயது பெரியவன் கண்ணன். அவள் பிறந்த மறுவருடமே குடித்துவிட்டு வண்டியோட்டியதில் அரசு பஸ் மோதி இறந்துவிட்டார் அவர்களது தந்தை பெருமாள்.

குடித்துவிட்டு வண்டி ஓட்டியதால் நிகர்ந்த விபத்து என்பதால் நஷ்டஈடு வழங்க அரசு மறுத்துவிட்டது. அவர் குடித்திருந்தாலும்கூட அரசு பேருந்தின் ஓட்டுநரும் குடிபோதையில் வண்டியை ஓட்டி சாலையோரம் நின்றவரை இடித்ததாக பேருந்திலிருந்த பயணிகளும் கூறவே¸ கேஸ் வேறுமாதிரியாக நடந்து நஷ்டஈடாக ஐந்து லட்சம் பணம் இவர்களுக்கு கொடுக்கப்பட்டு¸ அந்த டிரைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

சிறுவயதிலிருந்தே பீடி சுற்றத் தெரிந்தவர் தாமரை. திருமணத்திற்கு பின் அந்த தொழிலைக் கைவிட்டிருந்தவர்¸ கணவனின் இழப்புக்குப் பிறகு அதே தொழிலை கையிலெடுத்தார். நஷ்டஈடாகக் கிடைத்த பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தவர்¸ கணவனுக்கு கிடைத்த பி.எப். பணத்தையும் அவ்வாறே செய்தார். பீடி சுற்றும் தொழில் செய்பவர்களின் குழந்தைகளுக்கு கிடைக்கும் உதவித்தொகையும் கிடைத்ததால் குழந்தைகளை நன்றாக படிக்க வைத்தார்.

கண்ணனும் நன்றாகப் படிக்கக் கூடியவன்… ப்ளஸ் டூவில் நல்ல மார்க் வரவே இன்ஜினியரிங் படிக்க வைத்தார். படித்து முடிக்கும்போதே நல்ல சம்பளத்துடன் வேலையும் கிடைத்துவிட… தாயாரை வேலை செய்ய வேண்டாம் என்றான். பல வருடங்களாக உழைத்துப் பழகியவருக்கு சும்மா இருப்பது முடியாதென்பதால்  முன்புபோல் இல்லாமல் குறைவாகச் செய்வதாகக் கேட்க¸ அவனும்  தாயாருக்காக ஒத்துக் கொண்டான்.

எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த கீதா ஒருநாள் தன் தோழிகளை வீட்டிற்கு அழைத்து வந்திருந்தாள். அவர்களுடன் சேர்ந்து அவர் செய்து வைத்திருந்த பீடியை வாயில் வைத்து புகைப்பது போல் பாவனை செய்தவளை துவைத்து எடுத்துவிட்டார். அதன்பின் அந்தத் தொழிலை அடியோடு விட்டுவிட்டவர்¸ அவளது தோழிகளையும் வீட்டிற்கு அழைத்துவர அனுமதிப்பதில்லை. அது மட்டுமில்லாமல் சில நாட்கள் அவளோடு பேசவுமில்லை.

தாயார் பேசாமலிருப்பதைத் தாங்க முடியாதவள் “இனிமேல் இந்த மாதிரி செய்ய மாட்டேன்மா… ப்ரண்ட்ஸ் பெட் கட்டினாங்கம்மா¸ அதனாலதான் இப்படி செய்தேன். இனிமேல் இப்படி பண்ண மாட்டேன்ம்மா… ப்ளீஸ் என்னை மன்னித்து என்கூட பேசுங்கம்மா…” என்று அழுதவளை “பெட் கட்டினாங்களா? அந்த பொண்ணுங்க உன்னைத் தவறான வழியில் போகச் சொல்லி பெட் கட்டினா அந்த மாதிரி செய்வியா?” என்று பெட் கட்டியதற்கும் சேர்த்து அடித்தார். அன்றிரவே அவள் வயதிற்கு வந்துவிட தன் கோபத்தையெல்லாம் விட்டுவிட்டு அவளை நன்றாகக் கவனித்துக் கொண்டார்.

கண்ணனும் அவளுக்கு வேண்டியதையெல்லாம் அவள் கேட்காமலே செய்யும் அண்ணனாக தான் இருந்தான். ஆனால்¸ அவள் ப்ளஸ் டூவில் பெயிலானதும் எல்லாமே மாறிவிட்டது. அவள் என்ன செய்தாலும் அவனுக்கு தவறாகப்பட்டது.

‘இருந்தாலும் தன் தங்கை இப்படி பொய் சொல்வாளா? என்று யோசிக்க வேண்டாமா?’ என்றெண்ணி அழுதவாறே தூங்கிவிட்டாள் கீதா.

மறுநாள் எப்போதும் எழுவதைவிட முன்னதாகவே எழுந்து வாசல் தெளித்து கோலமிட்டு அம்மாவிற்கு உதவியாக எல்லா வேலைகளும் செய்தாள்.

வெளியே வாக்கிங் போய் வந்த கண்ணனுக்கு ஆச்சர்யம்.

‘அட! நம்ம வீட்ல யாருடா கோலம் போட்டது?’ என்றெண்ணியவன் சென்று தாயாரிடம் விசாரித்தான். அவர் ‘கீதா’ எனவும் அவளது அறையை தேடிச் சென்றான். அறை உட்புறமாக தாழிடப்ட்டிருந்தது.

மறுபடியும் தாயாரிடம் வந்து “கதவு லாக் பண்ணிருக்காம்மா¸ மறுபடியும் தூங்கப் போய்ட்டாளா?” என்று கேட்டவன்¸ அவரது பதிலுக்காக காத்திருக்காமல்… தான் தயாராகச் சென்றுவிட்டான்.

குளித்து முடித்து வந்தவன் சாப்பிட்டு முடித்த பின்னரும் அவள் வெளியே வரவில்லை என்றதும் “நான் இன்னைக்கு கொஞ்சம் சந்தோஷப்பட்டேன்மா… நம்ம வீட்லயும் கோலம் போட்டிருக்கே… இந்த தடிமாடு புத்தியோட நடக்குதேன்னு நினைச்சேன். ஆனால் இது திருந்தவே திருந்தாது…. நான் ரெடி ஆகிட்டு வந்து அவளை எழுப்புறேன்” என்று தன்னறைக்குச் சென்றான்.

அவன் சென்ற மறுநிமிடமே கீதா வந்தாள். தன் சென்டருக்குப் போகத் தயாராகி வந்தவள் சாப்பிட அமர்ந்தாள்.

“என்னம்மா கிளம்பியாச்சா?” என்று கேட்ட தாயாரிடமும் “ஆமாம்” என்றதோடு முடித்துக் கொண்டாள். சாப்பிட்டு முடித்ததும் தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள்.

ஆபீஸ் செல்லத் தயாராகி வந்த கண்ணன் தங்கையின் அறைக்குச் சென்றான். அப்போதும் அறைக் கதவு மூடியே இருக்க தாயாரிடம் சென்றான். அவர் “நீ டிரெஸ் மாற்ற போனதுமே அவள் கிளம்பிப் போய்ட்டாப்பா” என்றார்.

“அப்படியா!” என்றவன் அலுவலகத்திற்குப் புறப்பட்டான்.

டூடோரியல் சென்டரில் பிரேம் அவளை வறுத்தெடுத்தான்.

கேள்வி கேட்கும்போது சரியாக பதில் சொல்பவள்¸ போர்டில் எழுத சொல்லும்போது கரெக்டா எழுதுபவள்¸ தேர்வு வைத்தால் மட்டும் எதையும் சரியாக எழுதுவதில்லை என்று அவன் அவளை கண்டபடி திட்டிவிட்டான்.

“நீ எல்லாம் எதுக்கு இங்கே வர்றே? வீட்டில இருக்க வேண்டியதுதானே! உன்னைவிட சின்ன பசங்களை சைட் அடிக்க வர்றியா? பாஸ் பண்ணனும்னு கொஞ்சம்கூட அக்கறையில்லை… இங்கே இருக்கிற எல்லாருமே உன்னைவிட சின்னவங்கதான்… மூன்று பாடத்திற்கு மேல பெயிலானவங்ககூட இந்த ஒன்னுல தான் இன்னும் பாஸ் ஆகலை… அதையும் இந்தமுறை கண்டிப்பாக பண்ணிடுவாங்க. ஆனால் நீ சும்மா மேக்கப் பண்ணிட்டு அங்கேயிருந்து இங்கே வந்து என் உயிரை ஏன் வாங்குறே?” என்று ரொம்பவே திட்டிவிட்டான்.

இதோடு அவளை இரண்டாவது முறையாக அவமானப்படுத்துகிறான். அதுவும் சின்ன பையன்களை சைட் அடிக்க வருவதாகக் கூறி ‘ச்சே…’ என்ன மாதிரியான வார்த்தைகள். அவன் அப்படி சொன்னதிலிருந்து மற்ற மாணவர்களை பார்க்கவும் கூசியது. அவர்கள் அனைவரும் அவளை பரிதாபமாகப் பார்த்தனர்.

ஏனெனில் அவள்தான் எல்லாருக்கும் ஆங்கிலத்தில் இலக்கணப் பிழையின்றி எழுதவும்¸ சரளமாகப் பேசுவதற்கும் சொல்லிக் கொடுப்பாள். அதனால் அவர்களுக்குமே இவள் எப்படி தோல்வியடைகிறாள் என்ற குழப்பம் இருக்கத்தான் செய்தது.

அவனது திட்டுதலைக் கேட்டு தலைகுனிந்து நின்றவளை உட்கார சொன்னான். அவள் அமர்ந்த உடனே ஏதோ நினைத்தவனாக “ஏய்… நெட்டைக் கொக்கு!” என்றழைத்தான். ‘யாரை இப்படிக் கூப்பிடுறான்?’ என்று நிமிர்ந்து பார்த்தால் அவளைத்தான் அழைத்துக் கொண்டிருந்தான்.

“என்ன?” என்று எழுந்தவளிடம் “இனிமேல் நீ பிராண்ட் ரோலதான் உட்காரணும்” என்றான்.

“சரி” என்று முன் வரிசையில் போய் அமர்ந்தாள். ஆனால் அங்கு அவளால் சரியாக உட்கார முடியவில்லை. உயரமாகவே இருந்தாலும் எப்போதுமே கடைசி வரிசையில் அமர்ந்து பழகியிருந்ததால்¸ முதுகை வளைக்காமல் அமர்ந்துதான் அவளுக்குப் பழக்கம். இப்போதும் அவள் அப்படியே அமர¸ மற்றவர்களால் போர்டை சரியாகப் பார்க்க முடியாமல் போகவே “அக்கா மறைக்குது…” என்று அடிக்கடி சொல்லலாயினர்.

அவள் சற்று குனிந்து அமர்ந்தாலும் “என்ன தூக்கமா?” என்று கேட்டான் அந்த ‘பனைமரம்’ பிரேம்.

சில நாட்களுக்குப் பிறகு அன்று அவள் வீடு திரும்பும்போது வழிமறித்தான் ஜெபின். இடைமறித்தவன் அவள் எதுவும் சொல்லிவிடும் முன்பு “கீதா நான் உன்னை காதலிக்கிறேன்… நீ இல்லைன்னா எனக்கு வாழ்க்கையே இல்லை…” என்று ஏதேதோ பேசினான்.

“இங்கே பாரு தேவையில்லாமல் என்கிட்ட இப்படியெல்லாம் பேசினால் நல்லா இருக்காது… ஆமா… சொல்லிட்டேன்” என்றவள்¸ அவனது நண்பனிடம் திரும்பி “உன் பிரண்டுக்கு நல்லா எடுத்துச் சொல்லி… ஒழுங்காக படிக்கிற வேலையை பார்க்கச் சொல்லு…” என்று சொல்லிச் சென்றாள். அவள் போவதையே தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தன ஒரு ஜோடிக் கண்கள்.

‘ச்சே… அங்கே அந்த பனைமரம் வார்த்தையால் கொல்றான்… ரோட்ல இந்த லூசு ஏதோ பினாத்திட்டு திரியறான்… வீட்டுக்குப் போனா அந்த கண்ணனும் என்னை வருத்தப்பட வைக்கிறான்… இந்த அண்ணன் ஏன்தான் இப்படி மாறினானோ?’ என்ற வருத்தத்துடனே சென்று உடைமாற்றினாள்.

அன்று அவளுக்குப் பிடித்த உணவை தயாரித்திருந்தார் தாமரை. ஆனாலும் முன்பு எப்போதையும் போல விளையாட்டாகப் பேசாமல் அமைதியாகவே சாப்பிட்டுவிட்டு தன்னறைக்குச் சென்றாள்.

மாலை கண்ணன் வீடு திரும்பியபோது அமைதியாக இருந்தது. தாயார் கண்மூடி சோபாவில் சாய்ந்திருந்தார்… டி.வி. ஓடவில்லை…

சாதாரணமாக அவன் வீட்டுகேட்டை நெருங்கும்போதே பாட்டுச் சத்தம் காதைத் துளைக்கும். ஆனால் இப்போது… சரியாகச் சொல்வதானால் ஒரு வாரமாக இப்படித்தான்… அமைதியாக இருக்கிறது. மாலையில் அவன் வருவதற்கு முன்பாகத் தன் அறைக்குள் நுழைபவள் இரவு சாப்பிடத்தான் வருவாள். அப்போதும்…. உண்டு முடித்ததும் அறைக்குள் புகுந்துவிடுவாள்¸ அன்றும் அதுவே நடந்தது.

ஏனோ அவள் தனியாக ஒதுங்குவதுபோல் தோன்ற “ஏம்மா இவ இப்படி நடந்துக்குறா?” என்றான் அன்னையிடம்.

“எப்படிப்பா?” என்று கேட்டார் தாயார்.

“முன்னெல்லாம் சதா எதாவது சொல்லி என்கிட்ட சண்டைக்கு வருவாள்… முட்டைக் கண்ணு கண்ணன்னு சொல்லுவா… இல்லைன்னா சாப்பாட்டுக்கு சண்டை போடுவாள்… இல்லைன்னா உங்ககிட்ட ஆஹா… ஓஹோன்னு ஏதாவது புகழ்ந்து பேசுவா… ஆனால் கொஞ்சநாளா… ரொம்ப அமைதியா…. நம்மளை விட்டு தள்ளிப் போற மாதிரி இருக்கு..” என்றான்.

“நீயும் கவனிச்சியா கண்ணா… நான்கூட நீ இதை கண்டுக்காம இருக்கியோன்னு நினைத்தேன். என்கிட்டயும் எதையும் சொல்ல மாட்டேங்கிறா.. முன்னால எல்லாம் வீட்டுக்கு வந்ததும் சென்டரில் அப்படி நடந்தது… இப்படி நடந்ததுன்னு எதாவது சொல்லிக்கிட்டே இருப்பாள். இப்போதெல்லாம் எதுவும் சொல்றது கிடையாது…. ஏன் கண்ணா¸ ஒருவேளை… அன்றைக்கு ஒருபையன் ஏதோ கலாட்டா பண்ணினதா உன்கிட்ட சொன்னாளே… அது நிஜமா இருக்குமோ…? அதை நினைத்து தான் கீதாக்குட்டி இப்படி இருக்கிறாளோ?” என்று கண் கலங்கினார் தாயார்.

“அம்மா அழாதீங்க…. நான் நாளைக்கு பார்க்கிறேன். நீங்க போங்க¸ போய் படுங்க” என்று அனுப்பிவிட்டு தானும் சென்று படுத்தான்.

Advertisement