Advertisement

அத்தியாயம் – 15

நேற்று தோப்பில் வைத்து பார்த்தவனை இன்று தன்வீட்டில் கண்டதும்¸ ‘கீதாவை கிணற்றில் தள்ளிவிட முயன்றதை வேறு பார்த்துவிட்டான்… அதை வைத்து மிரட்டுவானோ… பணம் கேட்பானோ…’ என்று பயந்து வந்தவனிடம் என்ன கேட்கவென்று புரியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் விஜயா.

வேலைக்காரர்கள் சென்றபின்னர் முகத்திலிருக்கும் பயத்தை மறைக்கத் தெரியாமல் அப்படியே அமர்ந்து கொண்டிருந்தவளிடம் “பயப்படாதீங்க சிஸ்டர்… நான் உங்களை மாட்டிவிடவோ.. மிரட்டி பணம் வாங்கவோ வரலை” என்றான்.

சற்றே நிம்மதியுற்றவள் “பின்னே எதுக்காக வந்துருக்கே?” என்று நிமிர்வுடனே கேட்டாள்.

“நீங்க கொல்ல நினைத்த கீதாவிற்கும் எனக்கும் ஒரு கணக்கு பாக்கியிருக்கு” என்றான் அவன்.

“என்ன கணக்கு?” என்றவளிடம் “மொதல்ல நீங்க எதுக்காக அவளைக் கொல்ல டிரை பண்ணிங்கன்னு சொல்லுங்க” என்றான்.

பிரேமை அவள் மணக்க ஆசைப்பட்டது பற்றியும் கீதா வந்தபின் நிகழ்ந்ததையும் கூற “ஓ…! அவளுக்கு இவ்வளவு கிராக்கியா..?” என்றான் அவன்.

“அது சரி… நீ எதற்காக இப்போ இங்கே வந்திருக்கிறாய்?”

“எல்லாம் பழைய வழக்கம்தான்… ‘எதிரிக்கு எதிரி நண்பன்’ கேள்விப்பட்டதில்லையா..?”

“அது எனக்கு நல்லாவேத் தெரியும். ஆனால்¸ நீ இன்னும் விஷயத்தை சொல்லவில்லை” என்றாள் அவள்.

“என் பேரு ஜெபின்…” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவன்¸ தான் அவளைக் காதலித்ததையும் கடைசியாக அவள் போலீசில் மாட்டிவிட்டதையும் கூறினான்.

“எல்லாம் சரிதான்.. ஆனால் இதுல நான் உனக்கு என்ன செய்ய முடியும்?” என்றவள் தொடர்ந்து “அவள் இங்கிருப்பது உனக்கு எப்படித் தெரியும்…” என்றாள்.

டவுணிற்குச் சென்றவர்களைப் பார்த்துவிட்டு தன் நண்பன் பழனி தகவல் தெரிவித்ததைப் பற்றி கூறியவன்… அவளால் தனக்கு என்ன உதவி செய்ய முடியும் என்பதையும் விளக்கமாகக் கூறினான்.

“கீதாவின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவல் அவளுக்குக் கிடைப்பது போல் ஏற்பாடு செய்ய வேண்டும்.. நாளைக்கு பிரேம் வீட்டிற்கு செல்லும் செய்தித்தாளின் இடையில் துண்டுப் பிரசுரம் ஒன்று வைக்க வேண்டும்… அதை ரெடி பண்ண வேண்டியது உன் வேலை… பேப்பர் போடுபவனுக்கு பணம் கொடுத்து அதை உள்ளே வைத்து போடச் செய்வது என் பொறுப்பு…” என்றான்.

“அந்த துண்டு பிரசுரத்தில் என்ன செய்தி இருக்க வேண்டும்?”

“ ‘நம் தாயார் தாமரை உடல்நிலை சரியில்லாமல் உன்னைக் காண்பதற்காக உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அன்புத் தங்கையே கீதா… எங்கிருந்தாலும் வீட்டுக்கு விரைந்து வாம்மா… இப்படிக்கு அன்பு அண்ணன் கண்ணன்’ என்று இருக்க வேண்டும்”

“பிளான்படி எல்லாம் நடக்குமா…? ஒருவேளை அவள் போகாவிட்டால்…?” என்றாள் சந்தேகமாக.

“அந்த செய்தியை மட்டும் கீதா படிச்சிட்டான்னா… அவளோட அம்மாவைப் பார்க்க கட்டாயம் போவாள். அதன்பிறகு அவளை என்ன செய்ய வேண்டும் என்பதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றவன் “நீ அந்த நோட்டீஸை மட்டும் மறக்காமல் பிழையில்லாமல் ஏற்பாடு செய்துவிடு” என்று நினைவு படுத்திவிட்டு மாலையில் வருவதாகக் கூறிச் சென்றான்.

கீதாவிடம் “பிரேம் நாளைக்கு பொண்ணு வீட்டுக்காரங்களை நம்மவீட்டுக்கு அழைச்சிட்டு வர்றானாம்.. கொஞ்ச முன்னாலதான் போன் செய்திருந்தான்” என்று சொல்லிக் கொண்டிருந்தார் யமுனா.

ஏற்கனவே குழம்பிக் கொண்டிருந்தவள்… இதைக் கேட்டதும் உடைந்துவிட்டாள். ‘அப்படியானால் நான் அவனை உண்மையாவே காதலிக்கிறேனா?’ என்ற கேள்வி அவளுள் தானாக எழுந்தது.

‘இப்போ என்ன செய்வது? என்னால் என்ன செய்ய முடியும்?’ என்ற கேள்விகளிலே நாள் கடந்தது.

காலையில் எப்போதும் போல குளித்து முடித்து பரத்துடன் தானும் சாப்பிட்டு முடித்தவள்¸ பேப்பரை எடுத்துக் கொண்டு அமர்ந்தாள். எப்போதுமே பின்பக்கத்திலிருந்து பேப்பர் படிக்கும் வழக்கமுடையவள்¸ அன்றும் கடைசிப் பக்கத்தை படித்துவிட்டு பேப்பரை விரித்தபோது அதிலிருந்து ஒரு துண்டுப் பேப்பர் கீழே விழுந்தது.

அதை எடுத்து அதிலிருந்ததைப் படித்தவள் திகைத்தாள்.

அந்த பேப்பரால் முகத்தை மூடி அழுது கொண்டிருந்தவளின் குரல் கேட்டு “என்ன கீதா?” என்று கேட்ட யமுனாவிடம் அந்த பேப்பரை நீட்டினாள்.

அதைப் படித்தவருக்கு குழப்பமாக இருந்தது. அவளிடம் எதையும் சொல்ல இயலாமல் “உன் அம்மாவுக்கு ஒன்னும் ஆகாதும்மா… தைரியமா இரு…” என்று அவளை அமைதிப்படுத்த முயன்றார்.

“இல்லை அத்தை… நான் வீட்டிலிருந்து வரும்போதே அம்மாவுக்கு ஆஸ்துமா இருந்தது. அவங்கமேல இருந்த கோபத்தில் சொல்லாமல் வந்துட்டேன். அதனால்தான் இப்படி…” என்று கேளாமலே விபரம் கூறியவள் “அத்தை… நான் ஊருக்குப் போய் அம்மாவை பார்த்துவிட்டு வந்திடுறேன்… ப்ளீஸ் அத்தை..” என்று அவள் கெஞ்சுவதைக் காண முடியாமல் அவர் தவித்தார்.

இருந்தாலும் அவளைத் தாமதப்படுத்தும் நோக்கத்தோடு “மாமா வந்துரட்டும் கீதாம்மா.. மாமாவும் உனக்குத் துணையாக வருவாரல்லவா..?” என்று சரியான காரணத்தைக் கூறினார்.

“இல்லை அத்தை… மாமாவுக்கு எதுக்கு அலைச்சல். பஸ் ஸ்டாப்ல விட்டால் போதும்… நானே போய்க் கொள்வேன். ப்ளீஸ் அத்தை…” என்றாள் மீண்டும்.

அவள் கேட்பதாக இல்லை என்றதும் மகனுக்கு தெரிவித்துக் கொள்ளலாம் என்றெண்ணியவர் சரியென்று டிரைவரை அழைத்து¸ அவளுடன் நின்று அவளை பஸ் ஏற்றிவிட்டபின் வருமாறு கூறினார். கீதாவிடம் பாசமாகவே பழகும் டிரைவர் அவளது அம்மாவுக்காக தானும் கடவுளை வேண்டிக் கொண்டு அவளை அழைத்துச் சென்றார்.

அவர்கள் புறப்பட்டதும் மகனுக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார்.

அவன் “நான் பஸ் ஸ்டான்ட் பக்கத்துல வந்துட்டேன்ம்மா. கீதா வந்ததும் அவளையும் சேர்த்து அழைச்சிட்டு வரேன்” என்று போனை வைத்தான்.

“யாரு பிரேம்?” என்று கேட்டான் அருகிலிருந்த கண்ணன்.

பிரேம் விஷயத்தைக் கூறவும் “இந்த மாதிரி நோட்டீஸை யார் கொடுத்திருப்பாங்க?” என்று கேட்டான்.

“தெரியவில்லையே…!” என்றவன் “எப்படியும் இந்த பக்கமாகத்தானே வருவாங்க… பார்த்துக் கொள்ளலாம்” என்று அவனிடம் சொல்லிவிட்டு காரை வேகமாக ஓட்டினான்.

கீதா பஸ் நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டாள்.

பஸ் எப்போது வருமென்று கேட்கச் சென்ற டிரைவர் திரும்பியபோதும் அவளது கண்களில் நீர் வழிந்து கொண்டே இருந்தது. “இன்னும் பத்து நிமிஷத்துல பஸ் வந்துரும்மா…” என்றவர் “அழாதேம்மா.. அம்மாவுக்கு ஒன்னுமாகாது” என்று அவளைத் தேற்றினார்.

அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவர்களருகில் வந்த மாருதி வேனில் வந்த இருவர் அவளை வண்டியில் இழுத்து போட்டுக் கொண்டு சென்றனர்.

பட்டபகலில் ஆள்நடமாட்டமான இடத்தில் நடந்திருந்தாலும் யாருமே இதை கவனிக்கவில்லை. கடத்தல்காரர்களும் வந்த வேகத்தில் அவளது வாயைப் பொத்தி உடனே தூக்கிச் சென்றுவிட்டதால் இந்த சம்பவம் யாருடைய கவனத்தையும் ஈர்க்கவில்லை. ஏதோ ஒரு வாகனம் கடந்து சென்றதை மட்டுமே கண்டனர்.

தன்னால் இயன்ற அளவு தூரம் அந்த வாகனத்தின் பின்னால் ஓடிய டிரைவர்¸ அதற்கு மேல் இயலாமல்… இனி என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்து கொண்டு நின்ற சமயம்…. அவரருகில் ஒரு கார் வந்து நின்றது.

அதிலிருந்து வெளிப்பட்ட பிரேம் “என்ன செல்வம்… இங்கே தனியா நின்னுட்டு இருக்கீங்க? கீதா எங்கே?” என்று கேட்டான்.

அவனைக் கண்டதும் கீதாவைக் கண்டுபிடித்துவிடலாம் என்ற பலமான நம்பிக்கையுடன் “தம்பி யாரோ ரெண்டு பேர் கீதாம்மாவை கடத்திட்டுப் போயிட்டாங்க…” என்றார்.

“என்ன..!! கடத்திட்டாங்களா..?” என்று அதிர்ந்தான் பிரேம்.

அதைக் கேட்டு அதிர்ந்த தாமரை “என்னப்பா? என் மகளுக்கு என்னாச்சு?” என்று கேட்க¸ அதிர்ந்த கண்ணன் தானும் காரிலிருந்து இறங்கி நின்றான்.

“செல்வம் வண்டி எந்த பக்கம் போனது? நம்பர் நோட் பண்ணுனீங்களா? எத்தனை பேர் இருந்தாங்க?” என்று கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டான் பிரேம்.

எதிர்புறமாகச் சென்றதாகக் கூறியவர்¸ நம்பரை கவனிக்கவில்லை என்றார்.

“மொத்தம் எத்தனை பேர்?” என்று கேட்டான் மீண்டும்.

“டிரைவரை சேர்த்து ரெண்டு பேர்தான் தம்பி” என்று அவர் சொன்னதும் காரைப் பற்றிய சில அடையாளங்களை கேட்டறிந்து கொண்டு காருக்குள் இருந்த தாமரையிடம் திரும்பினான்.

“அத்தை நீங்களும் சித்ராவும் டிரைவரோட வீட்டுக்கு போய்டுங்க. நானும் கண்ணனும் சென்று அவளைத் தேடியழைச்சிட்டு வர்றோம்” என்று தாங்கள் வந்த காரிலே இருவரும் கிளம்பினர்.

டிரைவர் சொன்ன பாதையிலே வெகுதூரம் சென்றும் அவர்களால் அவளைக் காணமுடியவில்லை…  அவர் சொன்ன அடையாளத்துடன் கூடிய வாகனத்தையும் காணவில்லை என்றதும் சில கிளை ரோடுகளில் முயன்றனர்.

அப்போதும் முடியாமல் போகவே “இனி போலீசில் சொல்ல வேண்டும்” என்று பிரேம் சொல்லிக் கொண்டிருந்த போது வீட்டிலிருந்து அழைப்பு வந்தது.

போனை காதிற்கு கொடுத்து “என்னம்மா..?” என்று கேட்டதும் “பிரேம்… வந்து… கீதாவை எங்கே கொண்டு போனாங்கன்னு விஜயாவுக்குத் தெரியுமாம்” என்றார் தாயார்.

தாயார் ‘அவளுக்குத் தெரியும்’ என்று கூறாமல் ‘தெரியுமாம்’ என்றதும் “உங்களுக்கு சொன்னது யாரும்மா?” என்று கேட்டான்.

“மல்லியோட மாமா பையன் விஜயா வீட்லதானே வேலை பார்க்கிறான். அவன்தான் நேற்று புதுசா வந்த ஒருத்தனும் விஜயாவும் கீதாவைப் பற்றி ரொம்ப நேரமாக பேசிக் கொண்டிருந்ததாக சொன்னான்… நீ சீக்கிரமாக அங்கே போய்ப் பாரேன்” என்று படபடத்தார் யமுனா.

போனை துண்டித்தவன் காரை விஜயா வீட்டிற்கு செலுத்தினான்.

அவனைக் கண்டதும் “வாங்க அத்தான்…” என்று ஓடிவந்தாள் அவள்.

“கீதா எங்கே?”

“என்ன அத்தான்? கீதா எங்கேன்னு இங்கேவந்து கேட்கறீங்க? அவள் உங்கள் வீட்டில்தானே இருப்பா…” என்றாள் எதையும் அறியாதமாதிரி

“அங்கே இல்லை… அதனாலதான் உன்கிட்ட கேட்கறேன்” என்றான் திருத்தமாக.

“அங்கே இல்லையென்றால் எனக்கெப்படி அத்தான் தெரியும்?” என்றாள் அப்பாவியாக.

“உனக்குத் தெரியாது..?”

“ம்… தெரியாது அத்தான்…” என்றாள் ரொம்ப கூலாக.

“திரும்பத் திரும்ப தெரியாதுன்னு பொய் சொல்லாதே… எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு உன் கழுத்தை நெறிச்சிடுவேன்” என்று அவன் சீறிய போது… “என்னப்பா பிரேம்…? ஏன் அவகிட்ட சண்டை போட்டுட்டு இருக்கே?” என்று கேட்டுக் கொண்டே வந்தார் சதாசிவம்.

கண்களில் ரத்தச் சிவப்புடன் திரும்பியவன் “அங்கிள்… நேற்று யாரோ ஒருத்தன் இங்கு வந்தானாமே… அவனுடன் இவளும் சேர்ந்து கீதாவை கடத்தியிருக்கிறாங்க. அவள் எங்கேன்னு கேட்டுச் சொல்லுங்க… இல்லையென்றால் இவளை நான்…” என்று சொல்லாமலே விட்டான்.

“எனக்கு நீயும் தங்கை மாதிரிதான் விஜயா… தயவுசெய்து கீதாவை எங்கே வச்சிருக்கீங்கன்னு சொல்லும்மா…” என்று அமைதியாகவே கேட்டான் கண்ணன்.

“அவன் யாரென்று சொல்லு விஜயா..” என்றார் சதாசிவம்.

பதிலேதும் பேசாமலே அவள் நிற்க “ஏய்…! நீ இப்படி பதில் சொல்லாமலே நின்னேன்னு வை… நான் போலீஸை வரவைக்க வேண்டியிருக்கும்” என்றதும் சற்று பயந்தவள்¸ “அது… அவன் பேரு ஜெபின்… அவனுக்கும் கீதா ஊர்தான்” என்றாள்.

“இப்போ அவன் கீதாவை எங்கே கூட்டிட்டுப் போனான்னு சொல்லு…” என்று வெடித்தவனது முகத்தைக் கண்டு அஞ்சியவள்¸ “எங்க தோப்பு வீட்டுக்…” என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் பிரேம் வெளியேறிவிட்டான்.

தானும் ஓடிச் சென்ற  கண்ணன் “பிரேம்… ஜெபின் ஏற்கனவே பலமுறை அவளை கல்யாணம் பண்ணித்தரச் சொல்லி தொந்தரவு செய்தான். இவள் மறுத்துவிட்டாள்… ஒருநாள் வழிமறித்து கலாட்டா செய்தவனை போலீஸ் பிடிச்சிட்டுப் போனாங்க. கேஸ் ரொம்ப பெரிதாக போடவில்லை… ஆனாலும் வெளியில் வந்ததிலிருந்து அடிக்கடி வீட்டுக்கு வந்து கீதா எங்கேன்னு கேட்டான். நாங்க தெரியாதுன்னு சொன்னதை அவன் நம்பலை… அதனால் பார்க்கும் போதெல்லாம் அவளை நான் சும்மா விடமாட்டேன்னு சொல்லிட்டுப் போவான்” என்று அவனைப் பற்றிய விபரங்களைக் கூறினான்.

அவன் சொன்னவற்றையெல்லாம் கேட்டவன் “கண்ணன் நீங்க பக்கத்திலிருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் கம்பிளைன்ட் கொடுத்துட்டு… போலீசோடு விஜயாவையும் அந்த இடத்திற்கு கூட்டிட்டு வாங்க…” என்று சொல்லிவிட்டுக் காரில் ஏறினான்.

அவன் புறப்படும் முன்னர் “சாரி அத்தான்… நீங்க என்னை கல்யாணம் பண்ணமாட்டேன்னு சொன்ன கோவத்துல இப்படி பண்ணிட்டேன். ஆனால்.. அவன் கீதாவை…” என்று அவள் இழுத்ததைப் புரிந்து கொண்டு “அவள் எப்படி இருந்தாலும்… ‘எனக்கு அவள்தான்’” என்று சொல்லிவிட்டுக் காரை வேகமாக செலுத்தினான்.

Advertisement