Advertisement

அத்தியாயம் – 14

விஜயா கதவைத் திறந்தபோது கீதா மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்க¸ “உன் மன்னிப்பை நீயே வெச்சிக்கோ… முதல்ல என் ரூமைவிட்டு வெளியேப் போ…” என்று அவளிடம் எரிந்து விழுந்து கொண்டிருந்தான் பிரேம்.

“ப்ளீஸ்…” என்று அவள் கெஞ்ச “நான் உன்னை வெளியே போகச் சொன்னேன்” என்றான் கறாராக.

அவனது கோபம்  அளித்த வருத்தத்துடனே அவள் சென்றுவிட்டாள்…

அவள் சென்றதும் “என்ன அத்தான்…? என்னாச்சு..?” என்று உள்ளே வந்தாள் விஜயா.

தன் கோபத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தவனைப் பார்த்ததும் அவளுக்கு மகிழ்ச்சி ஊறியது. அவள் மீதான அவனது கோபத்தை அதிகரிக்கும் நோக்கத்தோடு “அத்தான்… இந்த கீதா கொஞ்சம்கூட சரியில்லை…” என்றாள்.

‘இவள் என்ன சொல்றா?’ என்பது போல அவன் பார்க்க “ஆமா.. அத்தான். அவள் துணியை அங்கே இங்கே இழுத்துவிட்டுக் கொண்டு ஆம்பிளைங்களைப் பார்த்து ஒரு மாதிரியா சிரிப்பா…” என்று மேலும் சொன்னவள்¸ அவனது பார்வை ஒரு மாதிரியாக மாறியதன் காரணத்தை தவறாக ஊகித்துக் கொண்டு தொடர்ந்தாள்.

“உங்ககிட்டேயும் அந்த மாதிரி ஏதாவது போஸ் கொடுத்து நின்றாளா..? அவளுக்கு உங்களைப் பற்றி சரியாகத் தெரியாமல் வந்துவிட்டாள்¸ பாவம்… நீங்கதான் அவளுக்கு சரியான மண்டகப்படி கொடுத்துட்டீங்களே..! சீக்கிரமே பெட்டியை தூக்கிட்டு கிளம்பிடுவா” என்று கூறி சிரித்தாள்.

அவளை வெறுப்புடன் பார்த்தவாறே “நீ சொல்றது எல்லாம் உண்மையா?” என்று கேட்டான் அவன்.

அவள் “ஆமாம் அத்தான்…” என்றதும் பளாரென ஓங்கி அறைந்தான்.

“இனி ஒரு வார்த்தை அவளைப் பற்றி தப்பா பேசினே… மூஞ்சி முகரையெல்லாம் இடம் மாறிடும்… ஜாக்கிரதை…!” என்று வார்த்தைகளை உமிழ்ந்தவன் “இனிமேல் நீ இங்கே இருந்தால் சரிப்பட்டு வராது… சீக்கிரமே கிளம்பி உன் வீட்டுக்குப் போயிடு. மறுபடியும் திரும்பி வராதே…” என்று அவளை வெளியே விரட்டி கதவை சாத்தினான்.

‘அவள் அந்த வேலைக்காரிக்காக என்னை அடிப்பது என்றால்… அத்தானுக்கு அவள்மேல் பிரியம் இருக்கிறது என்றுதானே அர்த்தம். என்னை கல்யாணம் பண்ணிக் கொள்வார் என்று எண்ணியிருந்த அத்தான்… வீட்டிற்கே வராதே என்றுவிட்டார். இதெல்லாவற்றுக்கும் காரணமான அவளை சும்மாவிடுவதா…?’

அன்றே கிளம்பி தன் வீடு சென்றவள் தந்தையிடம் நடந்தவற்றைக் கூறினாள். அவர் பொறுத்திருக்குமாறு கூற¸ சரியான சந்தர்ப்பம் அமைவதற்காகவாவது அதைச் செய்தாக வேண்டுமென்று காத்திருந்தாள்.

விடுமுறைக்கு வந்திருந்த பிரேம் மீண்டும் திரும்பிச் சென்றுவிட்டான். இவர்கள் இருவருக்கும் ஒருவர்மேல் மற்றவருக்குப் பிரியம்தான் என்பதை அறிந்த பெரியவர்கள் அவர்களுக்குள் நடக்கும் பனிப்போரைக் கண்டும் காணாததுபோல் இருக்கத் தொடங்கினர்.

இந்த முறை ஏன் அவன் கோபமாகவும் பாராமுகமாகவுமே நடந்து கொண்டான் என்ற சிந்தனையிலே கீதாவிற்கு நாட்கள் சென்றது.

ஒருநாள் யமுனாவுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது ‘பரத்’ பற்றிய பேச்சு வந்தது.

அதுவரை கேட்கத் தயங்கி இருந்தவள் “அவனோட அப்பா¸ அம்மா எங்கே அத்தை?” என்று கேட்டுவிட்டு “நான் இப்படிக் கேட்டது தப்புன்னா மன்னிச்சிடுங்க…” என்று மன்னிப்பையும் வேண்டினாள்.

“உனக்கு தெரிவதில் எந்த தப்பும் இல்லைம்மா… அதோடு அது ஒன்றும் மறைக்க நினைத்த ரகசியமும் இல்லை” என்று சொல்லத் தொடங்கினார்.

“எங்களோட மகள் பிருந்தா… பிரேமின் தங்கைக்கு திருமணம் முடிந்த பத்தாம் மாதமே பரத் பிறந்துட்டான். சில மாதங்களிலே இவனோட அப்பா ஒரு விபத்தில் இறந்துட்டார். இவன் கைப்பிள்ளை… பிருந்தாவுக்கும் சிறு வயதுதானே… அதனால் வேறு கல்யாணம் செய்து வைத்தோம். முதலில் வேண்டாம் என்று மறுத்தவளை பிரேம்தான் பேசிப் பேசியே சம்மதிக்க வைத்தான். மாப்பிள்ளையும் இந்த மாதிரி விதவை¸ டிவோஸி¸ மாற்றுத் திறனாளி… இப்படி யாருக்காவது வாழ்க்கை கொடுக்க வேண்டும் என்று கொள்கை வைத்திருந்தாராம்….”

“நன்றாக விசாரித்ததில் பாஸ்கர்… பிருந்தாவின் கணவரின் அம்மா ஒரு மாற்றுத் திறனாளியாம்… அவரது அப்பா பணத்திற்காக அவங்களை மணந்து கொண்டாராம். பணமும் சொத்தும் தன் கைக்கு வந்ததும் வயிற்றுப் பிள்ளையோடு இருந்த மனைவியை வெளியே அனுப்பிவிட்டாராம். அதைக் கேட்டு வளர்ந்தவருக்கு… இப்படி பாதிக்கப்பட்ட பெண்ணைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்கிறது. வெளிநாட்டில் நல்ல வேலையில் இருப்பதால் திருமணம் முடிந்த கையோடு பிருந்தாவையும் அழைத்துச் சென்றுவிட்டார்” என்றவர் பரத்தைப் பற்றி பேசும் முன்பாக¸

“அப்போ… பரத்?” என்று பதறினாள் அவள். இந்த இளந்தளிரை தாய் தந்தையின் பாசம் கிடைக்காமல் வளர்க்கப் போகிறார்களோ என்ற எண்ணம் அவளுக்கு.

சிரித்தவர் “பரத்தையும் அழைத்துப் போவதாகத்தான் மாப்பிள்ளை சொன்னார்… பிரேம்தான் ‘எப்படியும் ஆரம்பத்தில் பாஸ்கரோடு பழகுவது பிருந்தாவிற்கு கஷ்டமாக இருக்கும். இவனும் கூடவே இருந்தால் பழைய வாழ்வே நினைவிற்கு வந்து… புது வாழ்வையும் பாதிக்கும். இவரோடு இயல்பாகக் கூட பேசிப் பழகமாட்டாள்’ என்று சொல்லித் தடுத்துவிட்டான். அப்புறம் பிரேமும் வேலைக்குப் போனபிறகு நானும் இவரும் தனியாகத் தானே இருக்க வேண்டும். இவன் எங்களுடன் இருப்பது எங்களுக்கு எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது… தெரியுமா…” என்று தன் நிறைவைக் கூறினார்.

‘பிரேம் எதையும் நன்றாக சிந்தித்துத்தான் செய்வான் போல…’ என்று பாராட்டுதலாக எண்ணிக் கொண்டவள் “ஆனால் அத்தை… அவனுக்கு அம்மா¸ அப்பா ஞாபகம் வரும்போது என்ன செய்வீங்க?” என்று சிறுவனுக்காகப் பேசினாள்.

“என்ன கீதாம்மா படிச்சப் பொண்ணா இருந்துட்டு நீயே இப்படிக் கேட்குறே..?” என்றவுடன் ‘அப்படி என்ன நான் தப்பாக் கேட்டுட்டேன்…’ என்று நினைத்து கீதா திருதிருவென்று முழித்துக் கொண்டிருக்க¸ அவளது மூக்கை பிடித்து செல்லமாக ஆட்டியபடி யமுனா பேசினார்.

“வயசான பாட்டிங்கக்கூட இப்போ வீடியோ கால் பேசிட்டு சுத்துறாங்க… அந்த அளவுக்கு டெக்னாலெஜி வளர்ந்து இருக்கே…” என்று சொல்லிக் கொண்டிருந்தவர்¸ எதிரிலிருந்தவள் வலக்கையால் அவளது நெற்றியில் ஒருமுறை அடிக்கவும் “அதை மறந்துட்ட இல்ல…?” என்றார்.

அவரது கேள்விக்கு ‘ஆம்’ எனும் விதமாக மேலுங்கீழுமாக தலையசைத்தாள் கீதா. அவளது தலையில் மிருதுவாக தடவியவர் தொடர்ந்து “பாஸ்கர்¸ பிருந்தாவின் போட்டோவை காண்பித்தும்¸ அப்பப்போ வீடியோ கால் மூலமும் பேசுவாங்க… சின்னப் பையன்தானே இதுலயே சமாதானமாகிடுவான்” என்றார்.

“வளர்ந்த பிறகு கேட்டால்…?” என்றால் அவள்.

“அதுக்குள்ள அவங்க வந்து இவனை அழைச்சிட்டுப் போய்டுவாங்க…”

“எப்படி அத்தை?”

“கொஞ்ச நாளைக்கு அப்புறம் வந்து கூட்டிட்டுப் போங்கன்னு சொன்ன பிறகுதான் பாஸ்கர் இவனை விட்டுச் செல்லவே சம்மதித்தார்… பிரேமிற்கு கல்யாணமாகும் வரைக்கும்தான் எங்களுக்கு தனிமையாகத் தோன்றும். மருமகள் வந்துவிட்டால் அப்படி இராதல்லவா…?” என்றவர் “அதோடு… பிருந்தா இப்போது ஐந்து மாதம் கர்ப்பமாக இருக்கிறாள்” என்று மகள் மீண்டும் தாயாகவிருப்பதைக் கூறினார்.

“ஆனால்… பாஸ்கர் எப்படி பீல் பண்ணுவாரோ…?” என்றாள் இவள்.

“மருமகன் ரொம்ப நல்லவரும்மா… பரத்தை தன் சொந்த மகனாதான் நினைக்கிறார்… போன் பண்ணும் போதெல்லாம் மகனை நல்லா பாத்துக்கோங்கன்னும்¸ அவன் அம்மாவை அதிகமாக தேடுறான்னா உடனே வந்து கூட்டிட்டுப் போறேன்னும் சொல்லுவார். மகன்மேல அவ்வளவு பாசம் வச்சிருக்கார்…” என்று கூறி பாஸ்கர் சிறுவனை விலக்கி வைக்கவில்லை என்பதை விளக்கினார்.

“அப்புறம் ஏன் அன்னைக்கு… நான் வந்த முதல்நாள்… என்னிடம் நீ அம்மாவா? ஆன்ட்டியா? என்று கேட்டான்”

“அவனுக்கு அது ஒரு விளையாட்டு. வீட்டிற்கு வரும் பெண்களிடமெல்லாம் இப்படிக் கேட்டு மானத்தை வாங்குறான்” என்று பேரனை செல்லமாகத் திட்டினார்.

அதன் பின்னரும் பல விஷயங்களைப் பேசிவிட்டு தூங்கச் செல்லும் நேரத்தில் “நாளைக்கு டவுணுக்குப் போயிட்டு வரலாமா?” என்று கேட்டார் யமுனா.

“என்ன அத்தை திடீரென்று…¸ எதாவது வாங்கணுமா?”

“ஆமாம்மா… பிரேம் திருமணத்திற்கு சம்மதிச்சிட்டான். நேற்றைக்கு போன்ல பேசினப்போதான் சொன்னான்… சீக்கிரமே பொண்ணு வீட்டுக்குப் போகணும். அதற்குத்தான் புடவை எடுக்க வேண்டும்…” என்று சொல்லி அவளது மனதில் சூறாவளியை ஏற்படுத்தினார்.

அவர் அறைக்கு செல்லும் வரை கடினப்பட்டு முகம் மாறாமல் காத்தவளால் அதன் பின்னர் முடியவில்லை. தன்னறைக்கு ஓடிச் சென்று அழுதுத் தீர்த்தாள்.

‘ஆனால் நான் ஏன் இப்படி அழ வேண்டும்? அவன் மணக்கக் கேட்டபோது வேண்டாம் என்று மறுத்தவள் நான்தான்… இப்போதும் நான் அவனை மணக்க ஒத்துக் கொள்ளவில்லை. அவன் வெறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போகிறான் என்றதும் ஏன் இப்படி அழுகிறேன்…?’ என்று அழுகையினூடே சிந்தித்தவளுக்கு குழப்பம்தான் மிஞ்சியது.

மறுநாள் யமுனா¸ பரத்¸ கீதா… மூவரும் காரில் டவுணுக்குச் சென்றனர்.

மாம்பழ நிறத்தில் தங்கநிற இழையோடிய பட்டுப் புடவையை கீதாவின் மேல் வைத்துப் பார்த்து “இது என் மருமகளுக்கு பொருத்தமாக இருக்கும்” என்று சொல்லி அதையே தேர்ந்தெடுத்தார். அரக்கு நிறத்தில் நிறைய ஜரிகை வேலைப்பாடுகளுடன் கூடிய புடவையை கீதாவிற்கு எடுத்தார். அவருக்கு தேர்ந்தெடுத்த பின்னர்… வீட்டில் வேலை பார்க்கும் மல்லிக்கு கீதாவையே தேர்ந்தெடுக்க சொன்னார்.

புடவை எடுத்து முடித்த பின்னர்… ஜவுளிக் கடையை விட்டு வெளியேறி காரில் ஏறப் போனபோது எதிர்ப்புறமாக இருந்த கடைகளில் ஒன்றிலிருந்து வெளிப்பட்ட ஒருவன்… கீதாவைப் பார்த்ததும் தன் செல்போனை எடுத்துப் பேசலானான்.

தன்னை ஒருவன் கவனிப்பதை அறியாதபோதும்… எப்போதும் போல் சாதாரணதாக இருக்க முடியாமல் ஒருவித இறுக்கத்துடனே காணப்பட்டாள் அவள்.

‘நான் ஏன் இப்படி இருக்கிறேன்? எதனால் அவன் வேறொரு பெண்ணை மணப்பதை என்னால் தாங்க இயலவில்லை¸ எனக்குள்ளும் காதல் வந்திருக்குமா…? நானும் திருமணம் செய்து கொள்ளத் தயாராக இருக்கிறேனா?’

இப்படி சிந்தனையிலும் குழப்பத்திலுமாக நாட்களை ஓட்டியவளை… இரண்டு நாட்கள் கழித்து போனில் அழைத்த விஜயா¸ தென்னந்தோப்பிற்கு வருமாறு கூறினாள்.

யமுனாவிடம் சொல்லி அனுமதியும் வாங்கிச்சென்றாள்.

தோப்பில் அவளைப் பார்த்ததும் “எதுக்காக கூப்டீங்க விஜயா? எதுவாக இருந்தாலும் சீக்கிரம் சொல்லுங்கள்… நான் போக வேண்டும்” என்றாள்.

“கொஞ்சம் பொறு கீதா… உன்னைப் பார்க்க வேண்டுமென்று தோன்றியதே என்று கூப்பிட்டால் இப்படி பறக்கிறியே…! உனக்கு நீச்சல் தெரியுமா…?” என்று கேட்டவாறே சுற்றிலும் பார்த்தாள்.

ஆள் நடமாட்டமே இல்லை என்றதும் “வாயேன் கீதா.. அந்த கிணற்றடியில் உட்கார்ந்து பேசலாம்” என்று அழைத்துச் சென்றாள். சீக்கிரம் கேட்டுவிட்டு சென்றுவிடும் எண்ணத்தில் அவளுடன் சென்றவள்¸ மீண்டும் விஷயத்தை கூறச் சொன்னாள்.

“பொறு கீதா… நான் நீச்சல் தெரியுமான்னு கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லலையே..?” என்றாள்.

“இல்லை… எனக்குத் தெரியாது. எங்க ஊர்ல இந்த மாதிரி ஆறு¸ குளம் எதுவும் இல்லையா…? அதனால் நீச்சல் பழகவில்லை” என்று சொன்னதும் விஜயா பலமாக சிரிக்க ஆரம்பித்தாள்.

“ஏன் இப்படி சிரிக்கிறீங்க..?”

“உன்னை நினைத்துப் பார்த்தேன்… சிரிப்பு வந்துவிட்டது…”

“என்னைப் பார்த்து சிரிக்கிறீங்களா..? ஏன்..?”

“ஆமா… இவ்வளவு பெரிய ஆளாக வளர்ந்திருக்கே… ஆனால்¸ நீச்சல் தெரியவில்லை. எங்க ஊரில் நண்டு சிண்டு எல்லாம் நன்றாக நீச்சலடிக்கும்…” என்றவாறே குனிந்து கிணற்றைப் பார்த்தவள் “இந்த கிணறு எவ்வளவு ஆழம் தெரியுமா..?” என்று கேட்டாள்.

இவளும் சற்று எட்டிப் பார்க்க “நூறு அடி..!” என்றாள் அவள்.

‘அவ்வளவு ஆழமா..?’ அதைக் கேட்டதுமே சற்று பீதியானவளாக “நான் வீட்டுக்குப் போறேன்…” என்றாள்.

“சரி.. சரி… போகலாம்” என்றவள் எதையோ தேடுவது போல குனிந்து… மற்றவளின் காலை வாரிவிட முயன்ற சமயம் எதிரேயிருந்த தென்னை மரத்தின் பின்னாலிருந்து ஒருவன் வெளிப்பட்டான்.

மனதில் அவனை திட்டிக் கொண்டே நிமிர்ந்தவள்… கீதாவை வீட்டிற்கு அனுப்பிவிட்டுத் தானும் வீட்டை அடைந்தாள்.

ஆனால்… தென்னந்தோப்பில் பார்த்தவன் மறுநாள் வீட்டிற்க்கே வந்துவிட¸ விஜயாவிற்கு பயம் உண்டாகிவிட்டது.

Advertisement