Advertisement

அத்தியாயம் – 13

பிரேம் சென்ற பின்பு நாட்கள் ரொம்ப மெதுவாக செல்வதாகவும்… இயற்கையழகுடன் காணப்பட்ட அந்த இடம் சலிப்பைத் தருவதாகவும் தோன்றியது. ‘ஏன் இப்படி..? அவனிருக்கும்போது நாட்கள் சுவாரஸ்யமாக சென்றதால் இப்படித் தோன்றுகிறது…’ என்று அவளே சமாதானமும் கூறிக் கொண்டாள்.

ஏற்கனவே நன்றாகப் பழகிக் கொண்டிருந்த யமுனாவுக்கும் கீதாவுக்குமான இடைவெளி மிகக் குறைந்து அவர்களுக்குள் ஒரு நல்ல பிணைப்பு உண்டானது.

இதை விரும்பாமலே அந்த வீட்டில் சுற்றித் திரிந்த ஒரே ஜீவன் விஜயா. இன்னமும் கீதாவை இங்கு விட்டு வைத்திருப்பது நல்லதல்ல என்றெண்ணி… அவளை வீட்டை விட்டு அனுப்பிவிட வேண்டும் என்றும் அதற்கு என்ன செய்யலாம் என்றும் யோசிக்கத் தொடங்கினாள்.

அத்தையும் மாமாவும் எக்காரணம் கொண்டும் இவளை அனுப்பமாட்டார்கள். பிரேம் அத்தான் வந்ததும் அவனை வைத்துத்தான் ஏதாவது சொல்லி இவளை வெளியே அனுப்ப முடியும் என்று அவனது வரவுக்காக காத்திருந்தாள்.

கீதாவும் அவனது வரவை ஆவலுடனே எதிர்பார்த்துக் காத்திருந்தாள். சிரித்த முகத்துடன் வரவேற்றவளை அவன் கண்டுகொள்ளவே இல்லை. தாய் தந்தையரிடமும் முன்போல கலகலப்பாகப் பேசவில்லை.

‘என்னவாயிற்று இவனுக்கு?’

‘அவனது கோபம் இன்னும் அதிகமாகிவிட்டதா… என்ன? ஆனாலும் அவன் செய்தவற்றுக்கெல்லாம் கோபப்பட வேண்டியவள் நானல்லவா?’

ஆம்… இப்போது எதனால் என்று தெரியவில்லை என்றாலும்¸ தனக்கு அவனை பிடிக்கும் என்பதை ஒத்துக் கொள்ள தயாராகவே இருந்தாள் கீதா. ஆனால் அவன்தான் முகத்தைப் பார்த்து பேசவே மாட்டேங்கிறானே! “ம்கூம்..!” என்று பெருமூச்சுவிட்டாள்.

அன்று விஜயா அவளை அழைத்து “எனக்கு ஒரு சின்ன ஹெல்ப் பண்றியா?” என்று கேட்டாள்.

‘இவதான் நம்மக்கிட்ட அதிகமாக பேசக்கூட மாட்டாளே… இன்னைக்கு என்ன அதிசயமாக உதவியெல்லாம் கேட்கிறாள்…’ என்று யோசித்தவாறே “என்ன ஹெல்ப் வேணும்?” என்று கேட்டாள்.

“அத்தானோட ரூம்ல ‘சிவகாமியின் சபதம்’ புக் இருக்கும்¸ அதை எடுத்துட்டு வரணும்… அவ்ளோதான்” என்றாள்.

விஜயாவின் மனதிற்குள் பெரிய திட்டமே இருந்தது. அத்தான் வெளியே சென்றிருக்கும் சமயத்தில் இவளை அத்தானின் அறைக்குள் போகச் செய்து… கதவை தாழிட்டுவிட வேண்டும். அறைக்குத் திரும்புபவன் உள்ளே இவளைப் பார்த்துவிட்டுத் திட்ட ஆரம்பிப்பான்… அந்த நேரத்தில் அவளும் சேர்ந்து கீதாவுக்கு திருட்டுப் பட்டம் கட்டி வீட்டை விட்டு வெளியேற்றிவிடலாம் என்பதே அவளது திட்டம்.

ஆனால்… தன் கவனக்குறைவால் தன் திட்டம் பலிக்கப் போவதில்லை என்பதை உணராமல் திட்டத்தை செயல்படுத்தலானாள் அவள்.

ஆனாலும் அதை செயல்படுத்த தேவையான ஆள் அதற்கு ஒத்துழைக்காமல் “நான் அங்கெல்லாம் போகமாட்டேன்” என்றாள்.

“ஏன்? அத்தான் ஏதாவது சொல்லிடுவார்னு பயப்படுறியா..?” என்று கேட்டாள்.

கீதா பதில்கூறாமல் அமைதியாகப் பார்க்கவும் “அத்தான் மாமாவோட தோப்புக்கு போயிருக்காங்க. நானே போய் எடுத்திருப்பேன்… ஆனால்¸ என் காலை சுவரில் இடித்துக் கொண்டதில் ஏற்பட்ட வலி மாடியேற விடாது… இப்பவும்கூட வலிக்குது…” என்று சோபாவில் அமர்ந்து கொண்டவள்,

“அதனாலதான் உன்கிட்ட கேட்டேன். நீ உடனே போனால்… அலமாரியிலிருக்கும் புத்தகத்தை எடுத்துக் கொண்டு அத்தான் வருவதற்குள் திரும்பிவிடலாம்” என்றாள்.

அப்போதும் போகத் தயங்கியவளிடம் “இந்த சின்ன உதவி கூட செய்ய முடியாதா கீதா?” என்று கேட்டாள் தோழியிடம் பேசுவதுபோல.

மனதிற்குள் விஜயாவைத் திட்டியவள் ‘ஆனாலும் இன்னைக்கு ஏன் ரொம்ப நல்லவள் போல பேசுகிறாள்?’ என்றெண்ணியபடி மாடியேறி பிரேமின் அறைக்குள் சென்றாள்.

கீதா அறைக்குள் நுழைந்ததும் இவள் யமுனாவைப் பார்த்தாள்… அவர் தோட்டக்காரனுடன் புதிதாக வாங்கிய செடியை நடுவது பற்றி பேசிக் கொண்டிருந்தார்.

அவசர அவசரமாகப் படியேறினாள். யாராவது பார்க்கிறார்களா… என்று கவனித்தவாறே பிரேமின் அறையை அடைந்தவள் கதவை வெளிப்புறமாக தாழிட்டாள்.

புத்தகம் எடுக்கச் சென்ற கீதா… ஒவ்வொரு புத்தகமாக எடுத்துப் பார்த்தாள். நிறைய ஆங்கில நாவல்களும்¸ தமிழ் சரித்திர நாவல்களும்¸ ராமாயணம்¸ மகாபாரதம் போன்ற புராணக் கதைகளும் இருந்தன.

‘பரவாயில்லையே… பிரேம் நிறைய புத்தகம் படிக்கிறான்…’

‘சிவகாமியின் சபதம்’ புத்தகத்தை எடுத்துக் கொண்டவள் சென்று கதவைத் திறந்தாள்.

‘நான் வரும்போது கதவை லாக் பண்ணலையே…’ என்றெண்ணியவாறே இழுத்துப் பார்த்தாள்¸ அது திறக்கவில்லை.

சிலமுறை முயன்றவள் “வெளியே யாராவது இருக்கீங்களா?” என்று கதவைத் தட்டி அழைத்துப் பார்த்தாள். அப்போது அறைக்குள்ளேயே வேறு ஏதோ சத்தம் கேட்டது.

திரும்பிப் பார்த்தாள்… ‘பிரேம்’ தான்.

தலையிலிருந்து நீர் சொட்டச் சொட்ட நின்றவனை நிமிர்ந்து பார்த்தாள். இடுப்பில் ஒரு டவலை மட்டுமே சுற்றியிருந்தவன்¸ குளியலறைக் கதவை சாத்திவிட்டு அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான். அவனை அப்படிப் பார்க்க கூச்சமாகத் தோன்ற முகம் சிவக்கத் திரும்பினாள்.

அவன் குளியலறைக் கதவை திறந்து வந்த சத்தத்தைத் தான் அவள் கேட்டிருக்கிறாள். இவன் வெளியே சென்றதாக அல்லவா விஜயா கூறினாள்…

இப்போது வெளியே போக வேண்டுமே… கதவைத் படபடவென்று தட்டினாள்.

ஷவரில் குளித்துக் கொண்டிருந்தவன் அறையில் ஏதோ சத்தம் கேட்கிறதே என்று பாதி குளியலில் டவலைச் சுற்றிக் கொண்டு வெளியேறியிருந்தான். அவனைப் பார்த்ததும் முகம் சிவக்கத் திரும்பியவளைப் பார்த்து முறுவலித்தவாறே அவளிடம் வந்து¸“நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்கே?” என்று கேட்டான் கடுமையான குரலில்.

இதுவரை அவளிடம் பேசாமலிருந்திருந்தாலும் கூட இங்கு வந்த பிறகு அவன் அவளிடம் கடுமை காட்டியதில்லை… இதுவே முதல்முறை என்றதும் பயந்து விழித்தவள் மறுபடியும் கதவைத் தட்டி “அத்தை…!” என்று மெதுவாக அழைத்தாள்.

“நான் உன்கிட்ட தான் கேட்டேன்… என்னோட ரூம்ல உனக்கு என்ன வேலை?”

அவள் புத்தகத்தைக் காட்டவும் புரிந்து கொண்டவன் “நகரு..!” என்று அவளை விலக சொல்லிவிட்டு கதவைத் தட்டிப் பார்த்தான்.

அவன் சொன்னதும் ஒதுங்கி நின்று… கதவைத் திறக்க அவன் முயல்வதை பார்த்துக் கொண்டிருந்தவள் அப்போதுதான் அவனை நன்றாக கவனித்தாள். தலையை துவட்டாமல் வந்திருந்ததால் தலையிலிருந்து நீர் வடிந்து கொண்டிருந்தது. இப்படியே இருந்தால் ஜலதோஷம் பிடிக்குமே..

அவள் தன்னையே நோக்கிக் கொண்டிருப்பதை கவனித்தவன் “என்ன அப்படி பார்க்கிறே?” என்று கேட்டான்.

“ஒன்னுமில்லை…”

“சரி¸ நீ வரும்போது கதவைத் திறந்து போட்டியா… இல்லை சாத்திட்டு வந்தியா?”

சற்று சிந்தித்தவள் “திறந்து வைச்சிட்டு தான் வந்தேன்” என்றாள்.

“வெளிப்பக்கமாக தான் லாக்காயிருக்கு.. நான் வெளியே போயிருப்பேன்னு நினைச்சி யாராவது லாக் பண்ணியிருப்பாங்க. இப்போ யாரையாவது கூப்பிட்டு தான் கதவைத் திறக்க முடியும்…” என்றான் அவன்.

“நான் இவ்வளவு நேரமும் அதுக்குதான் முயற்சி பண்ணிட்டிருந்தேன்…”

“அம்மா அறிவுஜீவி… நீ இங்கிருந்து கூப்பிட்டால் யாருக்கும் கேட்காது…” என்றவன் ஈரத்தலையை கைகளால் கோதிவிட்டான்.

அவன் இன்னமும் ஈரத்துடனே நிற்பதைக் கண்டு தலையைத் துவட்டுமாறு கூறினாள்.

இடுப்பிலிருந்த துண்டில் கைவைத்து “இதை வைத்துத்தான் தலையை துவட்டுவேன்… உனக்கு பிரச்சனையில்லன்னா சொல்லு… செய்றேன்” என்றான்.

அவன் சொல்வதன் பொருளை சரியாக உணராதவள் “ஏன் அதுக்கென்ன? செய்யுங்களேன்…” என்று சொல்லிவிட்டாள்.

அவள் சொன்னதும் அவன் டவலை கழட்டப் போக… அப்போதுதான் அதன் அர்த்தம் புரிந்து “இல்ல… வேண்டாம்… வேண்டாம்… நீங்க அப்புறமாவே பண்ணிக்கோங்க…” என்றவள் திரும்பி நின்று கொண்டாள்.

“ம்கூம்… நான் இப்பவே தலையை துவட்டுவேன்.. அதுவும் உன் முன்னாடி தான் செய்வேன்…” என்றவன் அவளுக்கு முன்புறமாக வந்து நிற்கவும்… கீதா கைகளால் முகத்தை மூடிக் கொண்டாள்.

அவளைப் பார்த்து சிரித்தவன் “உனக்கு இங்க இருந்து வெளியே போகணுமா? வேண்டாமா?” என்று கேட்டான்.

“போகணும்…” என்றாள் கைகளை விலக்காமலே.

“இப்படி கண்ணை மூடிட்டா எப்படி போவியாம்? முதல்ல கையை எடு” என்றான்.

“நீங்க துண்டை இடுப்புல கட்டுங்க…”

“எங்கே..? உன்னோட இடுப்பிலா..?”

“உங்களோட இடுப்புல கட்டச் சொன்னேன்”

“இது என்னோட ரூம்மா.. நான் எப்படி வேணும்னாலும் இருப்பேன்… நீ முகத்திலிருந்து கையை எடு…”

கையை விலக்காமல் “அத்தை..! அத்தை..!” என்று அவள் கத்தத் தொடங்கவும்¸ அவளை நெருங்கி கைகளை முகத்திலிருந்து விலக்கினான். அப்போதும் கண்களை இறுக்கமாக மூடிக் கொள்ளவும் கோபமுற்றவன் “கீதா… கண்ணைத் திறந்து என்னைப் பாரு…” என்றான் அழுத்தமான குரலில்.

அவனது குரலின் அழுத்தம் ஒருவித பயத்தைத் தர கண்களைத் திறந்து பார்த்தாள்.

ஷார்ட்ஸ் அணிந்திருந்தான் அவன்… விழியுயர்த்தி அவன் முகத்தைப் பார்க்க சீறினான்.

“என்னை என்ன அவ்வளவு கேவலமானவன்னா நினைச்சே? ஒரு பொண்ணு முன்னாடி ட்ரெஸ் போடாமல் நிற்பதற்கு நான் என்ன சைக்கோவா…? இல்லை பொம்பளை பொறுக்கின்னு நினைச்சியா..?” என்று கண்டபடி கேட்டுக் கொண்டிருந்தவனை சமாதானப்படுத்த முடியாமல் “சாரி பிரேம்… சாரி…” என்று பலமுறை சாரி சொன்னாள்.

“என்ன சாரி..?” என்றவன் இன்னமும் கோபம் அடங்காமலே பேசினான்.

“இப்போ நீ என்னோட ரூம்லதான் இருக்கே..¸ தெரியுமா? உன்னை ஏதாவது செய்ய நினைத்திருந்தால் குளியலறையிலிருந்து வந்தவுடனேயே உன்மேல் பாய்ந்திருப்பேன்… நீ கத்தியிருந்தாலும் கூட யாருக்கும் கேட்காது. அந்த மாதிரியான அமைப்பு கொண்ட வீடிது… ஏதோ விளையாட்டா பேசினா.. உடனே அதை சீரியஸாக எடுத்துக் கொள்வது மட்டுமல்லாமல்…¸ சொல்வதைக் கேட்பதும் கிடையாது” என்று கோபத்துடனே தன் செல்போனை எடுத்து வீட்டு எண்ணுக்கு போன் செய்தான்.

எடுத்து பேசியது விஜயாதான்.

அவன் சொன்ன விஷயத்தைக் கேட்டவளுக்கு மயக்கம் வராத குறைதான். பிரேமும் அறையிலா இருந்தான்…!! கீதா அறைக்குள் சென்று அரைமணி நேரத்திற்கும் மேலாக இருக்குமே… அவசரமாக ஓடிச் சென்று கதவைத் திறந்துவிட்டாள்.

Advertisement