Advertisement

அத்தியாயம் – 12

இந்த நேரத்தில் அவன் அறைக்குச் செல்வதற்கும் தயக்கமாக இருந்தது. எப்படியோ… போனால் அவனது கைக்காயம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம் என்ற எண்ணம் தோன்ற மெதுவாகச் சென்று அவன் அறைக் கதவைத் தட்டினாள்.

மெதுவாகவேயானாலும் பல முறை தட்டியும் பதில் வராது போகவே… கதவைத் தள்ளினாள்… அது உடனே திறந்து கொண்டது. மென்னடையுடன் உள்ளே சென்று அவனைப் பார்த்தாள்.

கட்டிலில் படுத்திருந்தவன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். காயம் ஏற்பட்ட இடத்தில் பெரிய கட்டு போடப்பட்டிருந்தது. அந்தக் கையை ஒரு தலையணை மேல் வைத்திருந்தான். மற்றொரு கை வயிற்றின் மேலிருக்க… கால்களைத் தளர்வாக நீட்டி படுத்திருந்தான். நெற்றியில் சுழிப்பு காணப்பட்டது.

‘வலியுடனே தூங்கியிருப்பான் போல…’ நெற்றியை நீவி விட கையைக் கொண்டு போனவள்¸ “பிரேம்..!” என்று மெதுவாக அழைத்தாள். அவன் விழிக்கவில்லை… ‘நன்றாகத் தூங்கிட்டானோ..?’ மறுபடியும் “பிரேம்..!” என்று அவனைத் தொட்டு எழுப்பியவளின் கவனம் முழுவதும் கட்டு போடப்பட்டிருந்த கை மீதே இருந்தது.

‘எவ்வளவு ரத்தம் கொட்டியது… அப்படியானால் வலியும் அதிகமாகத்தான் இருக்கும்’ அவனது வலியைத் தானே உணர்ந்தவளாக… அவனது வலியைப் போக்கிவிடும் நோக்கத்துடன்… மருந்து கொடுத்தால் வலி குறைந்து தூக்கம் வருமே என்றெண்ணி அவனை மீண்டும் எழுப்புவதற்காக அவன் முகம் பார்த்தவள் திகைத்தாள்.

ஏனெனில் அவளையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் பிரேம். அவனது முகம் நோக்கி அவள் திரும்பியதும்¸ “கீதா…!” என்று தாபத்துடன் அழைத்து அவளது கையைப் பிடித்து இழுத்தான். அவன் இழுத்த வேகத்தில் நிலை தடுமாறியவள் அவன் மேலேயே விழ… தன் நோக்கம் சரியாக நிறைவேறிய மகிழ்ச்சியுடன் அவளைச் சுற்றி தன் கரங்களைப் படரவிட்டவன் அவள் கன்னத்தில் தன் இதழ்களைப் பதித்தான்.

“பிரேம்… என்ன பண்றீங்க..? என்னை விடுங்க..” என்று திமிறிக் கொண்டு விடுபட்டு எழுந்து நின்றவள் பெரிய பெரிய மூச்சுகளை எடுத்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு அவனை முறைத்துப் பார்த்தாள்.

“எ… என்னைப் பற்றி… என்ன நினைச்சிட்டிருக்கீங்க உங்க மனசுல…? உங்களுக்கு மாத்திரை கொடுக்க வேண்டுமென்று அத்தை சொன்னாங்களேன்னு எடுத்துட்டு வந்தால்… இப்படித்தான் நடந்துக்குவீங்களா..?” என்று கண்களில் வழிந்த நீரை புறங்கையால் துடைத்தவாறே கேட்டாள்.

அவள் திமிறிக் கொண்டு எழுந்ததிலே சற்று ஆச்சரியமடைந்திருந்தவன்¸ அவள் பேச ஆரம்பிக்கவும் தான் இது கனவல்ல என்பதை உணர்ந்து கொண்டான். இப்போது அவள் அழ வேறு ஆரம்பித்துவிட தான் வேண்டுமென்று செய்யவில்லை என்பதை உணர்த்திவிட அவன் மன்னிப்பை வேண்டினான்.

“சாரி… கீதா… வெரி வெரி சாரி… நான் ஏதோ கனவுல நடக்கிறதா நினைச்சி… இப்படி பண்ணிட்டேன்… சாரிமா… அழாதே ப்ளீஸ்..!” என்றான்.

அவன் சொல்வதை காதில் ஏற்காமல் அவள் பேசினாள்.

“ச்சே… நான் உங்கள் அறைக்குள் வந்திருக்கவே கூடாது. உங்களைப் பற்றி நான்றாகத் தெரிந்திருந்தும் வந்தது என்னோட முட்டாள்தனம். கையில் அடிபட்டிருக்குதேன்னு.. மாத்திரை கொடுக்க வந்ததற்கு எனக்கு இந்த அசிங்கம் தேவைதான்” என்று படபடவென்று பொரிந்தவள்¸ தன் கையிலிருந்த மாத்திரைகளை அருகிலிருந்த டேபிள் மேல் வைத்துவிட்டு “இதோ மாத்திரை… நீங்கள் சாப்பிட்டாலும் சரி.. சாப்பிடாவிட்டாலும் சரி” என்று அறையை விட்டு வெளியேறினாள்.

திடீரென விழிப்பு வந்து எழுந்த விஜயா ‘இந்த நேரத்தில் ஏன் விழித்தேன்?’ என்று எரிச்சலுற்றவள் தண்ணீருக்காக எழுந்து அருகிலிருந்த பாட்டிலை எடுத்துக் குடித்துவிட்டு வந்து கட்டிலில் அமர்ந்தாள். உடனே தூக்கம் வராது போக ‘எல்லாரும் தூங்கிட்டாங்களா?’ என்று பார்க்கலாம் என்று வெளியே சென்றாள்… அப்போதுதான் கீதா மாடிப்படிகளில் விரைவாக இறங்கிக் கொண்டிருந்தாள்.

‘இவளுக்கு மேலே என்ன வேலை?’

அவளைப் பார்த்து கேட்டுவிடும் நோக்கத்தோடு அவளறைக்குச் சென்றாள். அவளைப் பார்த்ததுமே… அவளது முகம் அழுதழுது சிவந்திருப்பது இவளுக்குப் புரிந்தது. ‘இவள் எதற்காக இப்படி அழுதிருப்பாள்? மாடியிலிருந்து வந்தாள் என்றால்… இவள் அத்தான் அறைக்குத் தான் சென்றிருக்க வேண்டும்’ என்ற எண்ணத்தோடு பேசத் தொடங்கினாள்.

“நீ மேலே அத்தான் ரூமிற்குப் போனியா?”

ஆமோதிப்பதாகத் தலையசைத்தாள் அவள்.

“அங்க எதுக்கு போனே..?”

‘கடவுளே…! அங்கப் போனால் அவன் அப்படி செய்கிறான் என்றால், இவள் ஏன் இங்கே வந்து என்னை அமைதியாக இருக்க விடமாட்டேங்கிறா…’ என்று விஜயாவின் செயலில் எரிச்சலுற்றவள் “அவருக்கு மாத்திரை கொடுப்பதற்கு…”  வேண்டா வெறுப்பாகவே பதிலளித்தாள்.

“சரி.. எதற்கு அழுதாய்?”

அழவில்லை என்று இவளிடம் மறைக்க முடியாது என்பதால் “அவரோட அறைக்கு யாரும் அனுமதி இல்லாமல் இப்படிப் போனால் பிடிக்காதுன்னு சொல்லித் திட்டினார்… அதனால்தான் கண்ணீர் வந்துவிட்டது…” என்று பொய் சொல்லி சமாளித்தாள்.

“பரவாயில்லை இந்த அத்தானுக்காவது உன்னை மாதிரி ஆட்களை எங்கே வைக்கணும்னு தெரிஞ்சிருக்கு…” என்று மெச்சுவது போல் கூறியவள் அறையை விட்டு வெளியேறினாள்.

‘இவள் சொல்வது போல் பிரேம் இல்லையென்றாலும்… அவன் ஏன் அப்படி செய்தான்?’ அழுகையும் அவனது எண்ணங்களுமாக பொழுதைக் கழித்தவள் தூங்குவதற்கும் நேரமாகிவிட்டது.

என்றும் அதிகாலையிலேயே எழுந்துவிடும் கீதாவை ஒன்பது மணிக்கு மேலாகியும் காணவில்லை என்றதும் அவளது அறைக்குச் சென்றார் யமுனா.

அறையில் அவள் படுத்திருந்த கட்டிலுக்கு அருகில் நின்று அவளை உலுக்கிக் கொண்டிருந்தான் பரத்.

“என்னடா குட்டி.. காலையிலேயே உன் ஆன்ட்டிகிட்ட வந்தாச்சா?” என்று பேரனிடம் விசாரித்தவாறே தானும் தூங்கிக் கொண்டிருந்தவளின் அருகில் சென்றார்.

“பாட்டி பாரு… ஆன்ட்டி எந்திரிக்க மாட்டேங்கிறா…” என்றான் சிறுவன்.

கீதா இப்படித் தூங்கும் ரகமில்லையே.. என்று தானும் கவலையுற்றவர்¸ உடம்புக்கு முடியவில்லையோ என்று எண்ணி அவளது மேனியில் கை வைத்தவர்… உடனே விலக்கியும் விட்டார். ‘உடல் நெருப்பு போல கொதிக்கிறதே…!’ என்று நினைத்தவர்

அவசரமாகச் சென்று கணவரிடம் சொல்ல… அவரும் சென்று அவளைப் பார்த்துவிட்டு டாக்டரை வரவழைக்க போன் செய்து கொண்டிருந்தபோது பிரேம் கீழே வந்தான்.

தகப்பனார் பேசுவதை கேட்டுக் கொண்டே இருந்தவன்¸ அவர் பேசி முடித்ததும் “எனக்குத்தான் நேற்றைக்கு ஹாஸ்பிட்டல் போயிட்டு வந்தோமே… டாக்டர் கூட நாளைக்கு தான் வரச் சொன்னார்… நீங்க ஏன்ப்பா இன்னைக்கே போன் பண்ணீங்க?” என்று கேட்டான்.

“போடா… உனக்காக யார் டாக்டரை கூப்பிட்டாங்க…” என்று சலித்துக் கொண்டிருந்தவரிடம் “வேற யாருக்கு?” என்று கேட்டான்.

“கீதாவுக்கு காய்ச்சல்… உடம்பு அனலா கொதிக்குது. முகமெல்லாம் சிவந்து ஏதேதோ உளற வேறு செய்கிறாள்..” என்று மகனிடம் அங்கலாய்த்த தாயார் கீதாவிடம் சென்று அமர்ந்தார்.

அவனும் அவளது அறைக்குள் சென்றான்.

அவனது தாயாரும் சிறுவன் பரத்தும் ஒரு பக்கமாக அமர்ந்திருக்க.. கட்டிலில் உடலை ஒடுக்கி ஒருக்களித்துப் படுத்திருந்தாள் அவள். காய்ச்சலால் உதடுகள் நடுங்கிக் கொண்டிருப்பதைக் கண்டவனுக்கு கஷ்டமாக இருந்தது.

வெளியே சென்று தன்னுடைய அலைபேசியிலிருந்து டாக்டரை அழைத்தான். அவர் வந்து கொண்டிருப்பதாகக் கூறவே மீண்டும் அறைக்குச் சென்று அவளைப் பார்த்தான்.

தாயார் ஈரத்துணியால் அவளது நெற்றியில் பற்று போட்டுக் கொண்டிருந்தார். பரத் அவளது கையைப் பிடித்து தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தான்… அவர்களைப் பார்த்த பிரேமிற்கு தன்னால் அவளுக்காக ஒன்றும் செய்ய முடியவில்லையே…! என்றிருந்தது.

சிறிதுநேரத்தில் மருத்துவரை அழைத்துக் கொண்டு உள்ளே வந்தார் நாதன்.

பரிசோதித்துவிட்டு “நூத்திமூணு டிகிரி இருக்கு… ஆனால் சாதாரண வைரஸ் பீவர்தான். எதையும் பார்த்து பயந்துட்டாங்களோ என்னமோ… காய்ச்சல் குறைய ஒரு இன்ஜெக்ஷன் போட்டுவிடுறேன்… நாளைக்கு மறுபடியும் சூடு ஏறியிருந்தால் ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டு வாங்க… டெஸ்ட் பண்ணி பாத்துடுவோம்” என்றவர் ஊசி போட்டுவிட்டு சில மாத்திரைகளைக் கொடுத்து நேரந்தவறாமல் கொடுக்குமாறு கூறிச் சென்றார்.

யமுனா அவளைப் பெற்ற மகள் போல பார்த்துக் கொண்டார்.

நாள் முழுவதும் தூக்கத்தில் இருந்தவளை எழுப்பி பல் துலக்க வைத்து¸ கஞ்சி காய்ச்சி அவளை சாப்பிடச் செய்து¸ மாத்திரை கொடுத்து என்று ஒவ்வொன்றையும் தானே பார்த்துக் கொண்டார்.

கீதா கண்விழித்ததும் ஒருமுறை பிரேம் அவளைக் காண வந்திருந்தான். அவனைக் கண்டதும் அவளது கண்கள் கலங்க ஆரம்பித்துவிட¸ சட்டென்று வெளியேறியவன் அதன் பிறகு வரவில்லை.

நாதனும் தன் பங்கிற்கு தோட்டத்திற்கு செல்லும் முன்னர் பலமுறை மனைவியிடம் “கீதாவை நன்றாக பார்த்துக் கொள்” என்று சொன்னது மட்டுமில்லாமல்… மதியம் சாப்பிட வந்தவர் கை¸ கால் கூடக் கழுவாமல் அவளைத் தான் பார்க்கச் சென்றார்.

மல்லி அவளுக்கு தேவைப்படக்கூடிய சிறுசிறு தேவைகளையும் யமுனா சொல்வதற்குமுன் செய்து முடித்தாள்.

பெரியவர்கள்தான் இப்படி என்றால் சிறுவன் பரத் அவளது அறையை விட்டே வெளியேறவில்லை.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த விஜயாவிற்குதான் பற்றிக் கொண்டு வந்தது. ‘இந்த அத்தை கிழவிக்கு என்ன கொழுப்பிருந்தால் ஒரு வேலைக்காரியை இப்படி கவனிப்பாள்? அத்தானுக்கும் எனக்கும் கல்யாணம் மட்டும் முடியட்டும்… உன்னை என் காலைப் பிடித்துவிடச் சொல்லவில்லை என்றால் என் பெயர் விஜயா இல்லை…’ என்று தனக்குள்ளே சூளுரைத்துக் கொண்டாள்.

கீதாவிற்கும் யமுனா தனக்கு சேவகம் செய்வதைப் பார்க்க வருத்தமாயிருந்தது. “என்ன அத்தை நீங்க போய் இதெல்லாம் செய்துகிட்டு…?” என்றாள் முதல் முறை அவர் தனக்கு செய்வதைப் பார்த்ததும்.

“நீ எனக்கு ஏதாவது என்றால் செய்யமாட்டாயா..?” என்று கேட்டார் அவர்.

“ஐயோ.. அத்தை..! நான் உங்க வீட்டுக்கு வந்ததே உங்களைப் பாத்துக்கதான். அது என்னோட வேலை… அதுக்குதான் நான் சம்பளமும் வாங்குறேன். நீங்க எனக்கு செய்யுறதப் பார்த்தா கஷ்டமாக இருக்கு… வேண்டாம் அத்தை…” என்றாள் கரகரப்பான குரலில்.

“கீதா… நீ பேசாமல் தூங்கு…” என்று அதட்டினார்.

அப்போதும் கேளாமல் அவள் “அத்தை…” என்று ஆரம்பிக்க “நீ என்னை அத்தை என்று அழைப்பது நிஜம் என்றால் பேசாமல் இரு… நான் செய்யும் எதையும் தடுக்காதே.. என் மகளாக இருந்தால் நான் செய்ய மாட்டேனா…?” என்றவர்¸ மீண்டும் “நீ எனக்கு ஒன்று என்றால் இதையெல்லாம் செய்யமாட்டாயா?” என்று கேட்டார் அவளது பதிலை கேட்க விரும்பி.

“செய்வேன் அத்தை… கட்டாயம் செய்வேன். உங்களுக்கு செய்வதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் இங்கு வந்த இத்தனை நாட்களில் நீங்க யாருமே என்னை வேலைக்கு வந்தவள் என்ற எண்ணத்தோடு பழகவில்லையே…! இந்த வீட்டுப் பெண்ணாகத்தானே நடத்துறீங்க… இந்த நல்ல குணத்திற்காகவே உங்களுக்கு சேவகம் செய்ய நான் கடமைப்பட்டிருக்கேன்” என்றாள் அவள்.

“கடமை கிடமையெல்லாம் ஒன்னும் இல்லை… ஆனால் நீ சொன்னதுபோல நீ என்றுமே இந்த வீட்டுப் பெண்தான். மனதைப் போட்டு அலட்டிக்காமல் தூங்கு…” என்று அவளது தலையை வருடத் தொடங்கினார்.

இருநாட்களிலே உடல்நிலை சரியாகி அவள் எப்போதும் போல வலம் வரத் தொடங்கினாள்.

அவள் அறையைவிட்டு வெளியே வந்த மறுநாளே கைக்காயம் சரியாகாத போதும் பிரேம் சென்னை கிளம்பிவிட்டான். செல்லும் முன் இவளைப் பார்த்துப் பேச விரும்பினாலும்… அவளது மனநிலை மற்றும் உடல்நிலை காரணமாக அதைத் தவிர்த்தவன்¸ அவளுக்குக் கேட்குமாறு தன் தாயாரிடம் “மறுபடி செமஸ்டர் லீவுலதான் வரமுடியும்” என்று சொன்னான்.

‘ஓ…! அவ்வளவு நாட்கள் ஆகுமா..? ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி?’ என்று தனக்குள் பேசிக் கொண்டாலும் அவள் அதை யாரிடமும் கேட்கவில்லை.

Advertisement