“உங்க அண்ணன் இன்னும் என்னென்ன வில்லங்கத்தை இழுத்து வைக்கப் போறானோ தெரியலை…. நம்ம ஆளுங்கன்னா வசதி குறைவா இருந்தாலும், உங்க அப்பாவே கல்யாணம் பண்ணி வச்சிருப்பார். வேற ஆளுங்க, அதுதான் ஓடிப் போய்க் கல்யாணம் பண்ணி இருக்கான்.”
“உங்க அண்ணன் உங்க அப்பாவோட ஒத்து போனதுக்குக் காரணம் இதுதான். இப்போத்தான் புரியுது.”
“இப்போ என்ன ஆகும்?” சம்யுக்தா கவலையாகக் கேட்க….
“உங்க அப்பா அவனைத் தலை முழுகுவார் பார்த்திட்டே இரு.” என்றான்.
ஊர்பக்கம் கலப்பு மனங்களை இன்னும் பெரிதாக ஆதரிப்பது இல்லை. இன்னும் ஜாதி பற்று எல்லாம் அங்கிருப்பவர்களுக்கு அதிகம் தான்.
வேறு ஜாதியாக இருந்தாலும், குடும்பமாவது நல்ல குடும்பமாக இருந்தால் பரவாயில்லை. அதுவும் இல்லை. அதுதான் ஆரியனை யோசிக்க வைத்தது.
அன்று ஊர் முழுவதும் அந்தப் பேச்சு தான். சக்ரவர்த்திக்கு மிகவும் அதிர்ச்சி தான். ஸ்ரீகாந்த திருமணம் செய்து கொண்டு வீட்டுக்கு செல்ல… சந்திரா ஒரு ஆட்டம் ஆடினார்.
சொத்திற்காகத் தனது மகனை வளைத்துப் பிடித்ததாக மருமகளை வசை பாடினார். உனக்கு என்ன தகுதி இருக்கு, என் வீட்டுக்கு மருமகளா வர…. என வாய்க்கு வந்தபடி பேசினார்.
இந்தத் திருமணத்தில் பெண் வீட்டினருக்கு விருப்பம் தான். ஆனால் அவர்களுக்கும் தெரியாதது போலக் காட்டிக் கொண்டனர்.
ஸ்ரீகாந்த தந்தையைப் பார்க்க கடைக்குச் செல்ல…
“உனக்கு எனக்கும் ஒன்னும் இல்லை. உனக்குன்னு ஒரு கடையைக் கொடுத்திட்டேன். உன் குடும்பத்தை நீ பார்த்துக்கோ…. இனி அப்பா என்று வராதே.” என்று விட்டார்.
ஸ்ரீகாந்த் ஆரியனை அழைத்து, “அந்தப் பெண்ணோட குடும்பம் அவ்வளவு வசதி இல்லை. எப்படியும் அம்மா ஒத்துக்க மாட்டாங்க. அதுதான் கல்யாணம் பண்ணிகிட்டேன்.” என்றான்.
ஆரியன் அதற்குப் பதில் எதுவும் சொல்லவில்லை. ஸ்ரீகாந்த தந்தை சொன்னதைச் சொல்ல….
“அவரு வேற என்ன சொல்வாருன்னு நீ எதிர்பார்க்கிற? உன் இஷ்ட்டத்துக்குக் கல்யாணம் பண்ண தெரிஞ்ச உனக்கு, அதுக்குப் பிறகு என்ன பண்ணும்னு தெரியாதா?”
“என்னைக்கு இருந்தாலும் உங்க அப்பாவோட சொத்து உனக்கு வரும். இப்போ அவரை அவர் இஷ்ட்டத்துக்கு விடு. அவரை மேலும் தொந்தரவு பண்ணாத.”
“அவரே கொஞ்ச நாள் போனா சமாதானம் ஆகலாம்.” என்றான்.
பெண் வீட்டினருக்கு இந்தத் திருமணத்தில் ஒப்புதல் இல்லை என்பதை எல்லாம் ஆரியன் நம்புவதாக இல்லை. அவர்கள் நோக்கம் என்ன என்று தெரியாததால்… சிறிது நாட்கள் அவர்களைத் தள்ளியே வைப்பது நல்லது என்று நினைத்தான்.
“உங்க வீடு பக்கத்திலேயே இப்போதைக்கு வீடு எடுத்து இரு. அப்புறம் பார்க்கலாம்.” என்றான்.
சக்ரவர்த்தி ஊரில் இருந்த கடைக்கு, நல்ல ஆட்களைத் தான் பணியில் வைத்திருந்தார். கடையில் கண்காணிப்பு கேமராவும் இருக்க… அவர் இருந்தே ஆக வேண்டும் என்பது இல்லை.
ஊரிலும் ஸ்ரீகாந்தின் விஷயம் தெரிந்து, அவரிடம் ஒவ்வொருவராக வந்து விசாரிக்க… ஏற்கனவே சந்திரா மீது இருந்த வருத்தத்தில்… இப்போது மகனும் இப்படிச் செய்ய… அவர் அம்மாவையும் அழைத்துக் கொண்டு இங்கே மதுரைக்கே வந்துவிட்டார்.
ஞானம் வர மாட்டேன் என எவ்வளவோ மறுத்து பார்த்தார். ஆனால் சக்ரவர்த்தி, “உங்களுக்காக நான் இங்க வந்து கண்டவங்களையும் பார்க்க வேண்டியதா இருக்குமா…. சொத்து தான் முக்கியம்னு தானே சொல்றாங்க. சொத்தை வச்சிட்டு சந்தோஷமா இருக்கட்டும்.” என வம்படியாக அழைத்து வந்து விட்டார்.
ஸ்ரீகாந்த் அதே தெருவில் தனியாக வீடு எடுத்து தங்கி இருக்க… சந்திரா அவனையும் புது மருமகளையும் வருவோர் போவோரிடம் திட்டிக் கொண்டே இருந்தார். மறுநாள் ஸ்ரீநிதியும் பவித்ரனும் வந்து விட்டனர்.
மகளைப் பார்த்ததும் சந்திரா ஒரு மூச்சு அழுது தீர்த்தார். “இவன் இப்படிப் பண்ணுவான்னு நினைக்கவே இல்லையே….. உங்க அண்ணன் போயும் போயும் ஒரு பரதேசி குடும்பத்திலா பொண்ணு எடுப்பான். பணம் காசு இல்லாத குடும்பம். இனி அந்தக் குடும்பத்துக்கும் சேர்த்து இல்ல… இவன் பார்க்கணும்.” என அப்போதும் பணக் கணக்கை தான் பார்த்தார்.
ஸ்ரீகாந்த செய்தது ஸ்ரீநிதிக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. இனி தனக்கு அண்ணனே இல்லை என்றாள் கோபமாக.
மனைவியை அங்கேயே விட்டுவிட்டு, பவித்ரன் அவர்கள் வீட்டிற்குச் சென்று விட்டான். மாமனாரிடம் போன்னில் தான் பேசினான்.
“வேற ஆளுங்க அது கூடப் பரவாயில்லை. ஆனா அப்படி ஒன்னும் நல்ல குடும்பமும் இல்லை. இந்தப் பையனுக்கு ஏன் இப்படிப் புத்தி போச்சு.” என்றார் சீதா கவலையாக.
இரண்டு நாட்கள் சென்று மனைவியை அழைத்துக் கொண்டு ஊருக்கு கிளம்ப… சந்திராவும் இங்கே யாரையும் பார்க்க முடியவில்லை என்று அவர்களோடு சென்னைக்குக் கிளம்பி சென்றார்.
சந்திரா எப்படி இருந்தாலும் ஞானம் அனுசரித்துப் போய் விடுவார். அவர் பார்த்து மகனுக்குக் கட்டி வைத்த மருமகள் ஆயிற்றே… அதே இந்துஜாவிடம் அந்த ஒட்டுதல் வரவில்லை.
முதல் ஒரு வாரம் அறைக்குள்ளேயே இருந்தார். பிறகு தான் ஹாலில் வந்து டிவி பார்க்க ஆரம்பித்தார். மகனோடு சேர்ந்து தான் உணவு அருந்துவார்.
அவர் வர தாமதம் ஆகும். நீங்க சாப்பிடுங்க என்றாலும் கேட்க மாட்டார்.
இந்துஜாவும் புரிந்து கொண்டு, இருவரும் உணவு அருந்த உட்காரும் முன்னரே, எல்லாம் தட்டில் பரிமாறிவிட்டு, அங்கே நிற்காமல் சென்று விடுவார்.
ஞானம் இந்த வயது வரை அவரே சமைத்து தான் உண்டு கொண்டிருந்தார். மருமகள் சமைத்துக் கொடுத்தெல்லாம் உண்டது இல்லை. இப்போது கடைசிக் காலத்தில் தான் மருமகள் கையால் சாப்பிடும் கொடுப்பினை இருக்கிறது போல என நினைத்துக் கொண்டார்.
வேலை செய்தே பழகியவர், சும்மா இருக்க முடியாமல்… காய்கறி நறுக்கிக் கொடுக்க ஆரம்பித்தார். பாட்டியை பார்க்க ஆரியன் சம்யுக்தாவையும் அழைத்து வந்தான்.
“இங்க பக்கத்துல இருந்திட்டு வர இவ்வளவு நாளா?” என ஞானம் சம்யுக்தாவிடம் குறைபட….
“மருமகன் எது செஞ்சாலும் சரியா இருக்கும்னு சொன்னீங்க இல்ல…. நல்லா அனுபவிங்க.” எனக் கணவனையும் வைத்துக் கொண்டு தான் அம்மாவிடம் சொன்னாள்.
“ஆமாம் இப்பவும் அவர் செஞ்சது சரின்னு தான் சொல்றேன். நான் அன்னைக்குப் பேசினது தப்பு தான்.” என்றார்.
ஆரியன் கேட்டுக் கொண்டிருந்தாலும், எதையும் காட்டிக் கொள்ளாமல் இருந்தான்.
நல்ல மாமியார் நல்ல மருமகன் என நினைத்துக் கொண்ட சம்யுக்தா ஞானத்துடன் பேச ஆரம்பித்தாள்.
இரவு தங்காமல் ஆரியன் சம்யுக்தாவை அழைத்துக் கொண்டு சென்று விட்டான்.
சக்ரவர்த்தித் தனது வியாபாரத்தை மதுரையில் மேலும் பெருக்கினார். சடகோப்பன் ஊரில் இருக்கும் சமயம் அவர் சென்று சக்ரவர்த்தியின் கடையில் இருப்பார்.
சந்திரா இரண்டு வாரங்கள் மகளிடம் இருந்துவிட்டு ஊருக்கு கிளம்பினார். கிளம்பும் சமயம், “அத்தை கொஞ்ச நாள் ஸ்ரீகாந்தை இப்படியே விட்டுடுங்க. வீட்ல சொல்லாம அவர் இஷ்டத்துக்குத் தானே கல்யாணம் பண்ணார். அவரே முன்னேறி காட்டட்டும்.” எனப் பவித்ரன் சொல்ல… சந்திரா ஒரு மாதிரி பார்த்தாரே தவிர… ஒன்றும் சொல்லவில்லை.
பவித்ரனுக்கு அப்போதே இவர் ஸ்ரீகாந்தையும் உருப்பட விடப் போவது இல்லை என்று புரிந்தது.
சம்யுக்தாவுக்கு ஏழாம் மாதம் துவங்கி இருக்க… அவளின் வளைகாப்பை மதுரையில் தான் வைத்தனர்.
“எனக்கு அண்ணன் தான் இல்லைன்னு ஆகிடுச்சு, தங்கச்சியாவது இருக்கட்டும்.” என ஸ்ரீநிதி கணவனுடன் வந்து வளைகாப்பில் கலந்து கொண்டாள்.
சம்யுக்தாவின் வளைகாப்பிறகு இந்துஜாவே மகளை அலங்கரித்தார். அவரே மலர்கள் கொண்டு… புது விதமாக ஜடை அலங்காரம் செய்ய… ஸ்ரீநிதிக்கு மிகுந்த ஆச்சர்யம்.
“ரொம்ப அழகா இருக்கு.” என்றாள்.
“அம்மா அக்காவுக்கும் பண்ணி விடுங்க.” என சம்யுக்தா சொல்ல… இந்துஜா ஸ்ரீநிதியைப் பார்க்க… அவள் ஒன்னும் சொல்லாமல் சம்யுக்தாவின் அருகே வந்து உட்கார்ந்து கொள்ள… இந்துஜா அவளுக்கு வேறு விதமாக அலங்காரம் செய்து விட்டார்.
என்னடி கல்யாண பொண்ணு மாதிரி இருக்க என பவித்ரனே மனைவியைக் கேலி செய்தாலும், அழகாக இருக்கிறது என்றும் ஒத்துக் கொண்டான். அவனின் பெற்றோரும் வந்து வளைகாப்பில் கலந்து கொண்டனர்.
சம்யுக்தாவிற்கு முதலில் பெண்கள் வளை அடுக்கி முடிக்க… கடைசியில் ஆரியனை வந்து வளையல் போட சொல்ல… அதுவரை தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்தவன், மனைவியின் அருகே செல்ல…. சம்யுக்தா கணவனைப் பார்த்து புன்னகைத்தாள்.
அவள் சொல்ல சொல்ல ஆரியன் நலங்கு வைத்து, கடைசியில் கண்ணாடி வளையல் அணிவித்தான்.
ஹோட்டலில் இருந்து உணவு வந்திருக்க… ஆரியன், அவினாஷ், பவித்ரன் மூவரும் தான் பரிமாறினார்கள். உண்டு முடித்து உறவினர்கள் சென்றிருக்க… வீட்டு ஆட்கள் மட்டும் இருந்தனர்.
பவித்ரன் இங்கிருந்தே சென்னைக்குச் செல்வதால்… அவன் பெற்றோரும் கிளம்பி விட்டனர்.
“அண்ணா, சம்யுக்தா குழந்தை பிறந்து தானே இங்க வருவா? நீங்க இனி தனியாத் தானே இருக்கணும்.” என பவித்ரன் கேட்க…
“ஏன் டா உனக்கு என் மேல இவ்வளவு வஞ்சனை…. இன்னைக்கு ஒருநாள் தான் நாளைக்கு அவ இங்க இருப்பா.” என்றான்.
“அதெல்லாம் உன் இஷ்ட்டத்துக்கு விட முடியாது. அவ அவங்க அம்மாவோட இருக்கட்டும்.” என்ற சரளா, “குழந்தை பிறந்து ஒரு மாசம் கழிச்சு, நான் அவளை ஊருக்கு கூட்டிட்டு போயிடுவேன்.” என்றார்.
“என்ன என்னை என் பொண்டாட்டி கிட்ட இருந்து பிரிக்கவே பார்க்கிறீங்க.” என்றவன், “சரி நான் அப்போ மாமா வீட்ல போய் இருந்துக்கிறேன்.” என்றான்.
“நீங்க எப்படி வருவீங்க? நீங்கதான் எங்க அம்மா மேல கோபமா இருக்கீங்களே…” என சம்யுக்தாவும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கணவனை வார….
“நான் அப்படி உன்கிட்ட சொன்னேனா டி….” என்றவன், “நீயா எதாவது நினைச்சுகிட்டா நான் பொறுப்பு இல்லை.” என்றான்.
“அது தானே நீயா அப்படி நினைச்சுகிட்டா அவர் எப்படிப் பொறுப்பாவார். நீங்க வாங்க மாப்பிள்ளை. இவ என்னை மட்டும்னா ஏமாத்திடுவா.” என இந்துஜா மருமகனுக்குப் பரிந்து கொண்டு பேச….
“ஆமாம் அத்தை… இவ உங்கலைனா வேலை பார்க்காம ஏமாத்திடுவா.” என ஆரியன் மனைவியைப் பார்த்துக் கொண்டு சொல்ல…
“அண்ணன் ஒரு நிமிஷம் பயந்திட்டான். நல்ல வேலை காப்பாத்திடீங்க அத்தை.” என அவினாஷ் கேலி பேச… அதைக் கேட்டு எல்லோரும் சிரித்தனர்.
தனக்காகத் தன் கோபத்தைக் கூட ஒதுக்கி வைக்கும் கணவனைச் சம்யுக்தாவுக்கு இன்னும் பிடித்தது.