சம்யுக்தா ஆரியனிடம் எதுவும் சொல்லவில்லை. சொன்னால் அவன் எப்படி ருத்ர தாண்டவம் ஆடுவான் என்று அவளுக்குத் தெரியும். மறுநாள் மதுரைக்குத் திரும்பி விட்டனர். சம்யுக்தா அவள் அம்மா வீட்டிற்குச் சென்றவள் ஆரியன் அலுவலகம் சென்றதும், தன் அப்பா அம்மாவிடம் ஊரில் நடந்ததைச் சொன்னாள்.
“இன்னும் அவ அண்ணன் தம்பிகளைக் காட்டி மிரட்டிட்டு இருக்காளா. இவளுக்குப் பாவம் பார்க்கவே கூடாது.” என சக்ரவர்த்திச் சொல்ல…
“தப்பு என் மேல தான். நீங்க விவாகரத்து பண்றதுக்கு முன்னாடி உங்களைக் கல்யாணம் பண்ணது என்னோட தப்பு. அந்தத் தப்பு இப்போ என் பெண்ணையும் நிம்மதியா வாழ விடாம துரத்துது. அதுவும் சம்யுக்தாவை உங்க ஊர்ல, அதுவும் உங்க தங்கச்சி வீட்லயே கட்டிக் கொடுத்தது அடுத்தத் தப்பு.”
“இப்போ அவளையும் நிம்மதியா இருக்க விட மாட்டேங்கிறாங்க.” என இந்துஜா பேச பேச சக்ரவர்த்தி முற்றிலும் உடைந்து போனார்.
“நம்ம கல்யாணம் மட்டும் நடக்கலைனா… நான் என்ன ஆகி இருப்பேனே தெரியலை. சரி நான் செஞ்சது தான் தப்பு. ஆனா சம்யுக்தாவை ஆரியனுக்குக் கல்யாணம் செஞ்சது என்ன தப்பு? அவனை விட ஒரு நல்ல மாப்பிள்ளை நமக்குக் கிடைச்சிருக்குமா?”
“நான் மாப்பிள்ளையை குறையா சொல்லலை. அவரை விட யாரும் சம்யுக்தாவை இப்படி நல்லா பார்த்துக்கவும் மாட்டாங்க. ஆனா இந்தப் பொண்ணுக்கு புகுந்த வீட்டுக்கு போயும் நிம்மதி இல்லையேன்னு சொல்ல வந்தேன்.”
“என்னை யாரும் எதுவும் சொல்லட்டும் நான் கவலைப்பட மாட்டேன். ஆனா சம்யுக்தாவை ஏன் பேசணும்? அவளை மத்தவங்க பேசுற நிலையில வச்சிட்டேன்னு எனக்கு என் மேலையே கோபம் வருது.”
தாயும் தந்தையும் வழக்காடுவதைக் கேட்டுக் கொண்டிருந்த சம்யுக்தா, “அப்பா, நீங்க சொத்தை முழுசும் அவங்களுக்கே கொடுத்திடுங்கப்பா… அதோட அவங்ககிட்ட இருந்து விடுதலை பத்திரம் எழுதி வாங்கிட்டு விலகிடலாம்.” என்றாள்.
“நீ என்ன எப்ப பாரு சொத்தை தூக்கி கொடுக்கிறதிலேயே இருக்க… அது நான் சுயமா சம்பாதிச்சது. இப்பவே எல்லாச் சொத்தையும் கொடுத்திட்டு, நானும் உங்க அம்மாவும் தெருவில நிற்கிறாதா… இல்லை சொத்தை வாங்கிட்டு தான் சந்திரா சும்மா போயிடுவாளா…”
“எதோ என்கிட்டே பணம் இருக்கிறதுனாலதான் இந்த அளவுக்காவது என்னை விட்டு வச்சிருக்கா… இல்லைனா அவ என்னை மதிப்பான்னு நினைச்சியா? நான் அவளுக்குச் செல்லாக் காசு தான். அதை முதல்ல புரிஞ்சிக்கோ.”
“அதோட நான் ஸ்ரீகாந்துக்குக் கல்யாணம் பண்ணி செட்டில் பண்ண வேண்டாமா… அவனையும் அப்படியே விட்டுட சொல்றியா?” என சக்ரவர்த்தி மகளிடம் கோபத்தைக் காட்ட…
அதுவரையில் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த ஆரியனுக்கு, மனைவியைச் சொன்னதும் அமைதியாக இருக்க முடியவில்லை. “அவ உங்களுக்காகத் தான் சொல்றா மாமா…” என்றான்.
வாயிலில் இருந்து உள்ளே வந்தபடி, “அப்படியாவது உங்களுக்குச் சந்திரா அத்தைகிட்டு இருந்து விடுதலை கிடைச்சு, நீங்க நிம்மதியா இருந்திட மாட்டீங்களான்னு சொல்றா.” என்றவன்,
“நான் லேப்டாப் விட்டுட்டுப் போயிட்டேன். அதை எடுக்க வந்தேன்.” என்றான்.
சம்யுக்தாவை பார்த்து, “வா நம்ம வீட்டுக்குப் போகலாம். நான் இதுக்கு மேல ஆபீஸ் போனா லேட் ஆகிடும். வீட்ல இருந்துதான் வேலை பார்க்க போறேன்.” என்றான்.
ஆரியன் முகமே சரி இல்லை. அவன் அவர்கள் பேசிய எல்லாவற்றையும் கேட்டிருக்கிறான் என்று புரிந்தது. ஆரியன் மாடிக்கு சென்று மடிக்கணினியை எடுத்துக் கொண்டு வர… சம்யுக்தாவும் அவனுடன் கிளம்பினாள். ஆனால் கணவன் என்ன எல்லாம் கேட்டானோ… அவனிடம் சொல்லவில்லை எனக் கோபம் கொள்வானோ என அவளுக்குப் பதட்டமாகத்தான் இருந்தது.
அவர்கள் கிளம்பும் சமயம், “நீங்க என்ன கேட்டீங்கன்னு தெரியலை மாப்பிள்ளை. நான் எதோ என் ஆதங்கத்தைச் சொன்னேன். உங்களை விட எல்லாம் எங்களுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைச்சிருக்காது. எங்களால இப்போ உங்களுக்கும் தானே சிரமம்.” என்றார் இந்துஜா.
“அத்தை எதையும் செய்யுறதுக்கு முன்னாடி யோசிக்கலாம். ஆனா செஞ்ச பிறகு யோசிச்சு என்ன பயன்? நான் சம்யுக்தாவை விரும்பித்தான் கல்யாணம் பண்ணிகிட்டேன். அதனால அப்படி எங்க வாழ்க்கையில எதாவது பிரச்சனை வந்தாலும், அதை எப்படிச் சமாளிக்கிறதுன்னு எனக்குத் தெரியும். நீங்க எங்களைப் பத்தி கவலைப்படாதீங்க.” என்றான் தெளிவாக.
அவன் கண்டிப்பாகக் கோபத்தில் இருக்கிறான் என்று எல்லோருக்கும் புரிந்தது.
“எல்லாத்துக்கும் காரணம் நான்தான் மாப்பிள்ளை.” என சக்ரவர்த்தி வருத்தத்துடன் சொல்ல…
“மாமா, நீங்க அவங்க பக்கம் கொஞ்ச நாள் திரும்பி பார்க்காம இருந்தாலே எல்லாம் சரி ஆகும். நீங்க இல்லைனா… அவங்க ஒண்ணுமே இல்லை. அது அவங்களுக்கு இன்னும் புரியலை.” என்றவன், மனைவியுடன் அங்கிருந்து கிளம்பி விட்டான்.
சம்யுக்தாவுக்கு மிகவும் பயமாக இருந்தது. கணவன் என்ன ஆட்டம் ஆடப் போகிறானோ என்று…. ஆனால் ஆரியன் அவளிடம் மிகவும் கனிவாகவே நடந்து கொண்டான்.
“மதியத்துக்குச் சமைக்கலைனா பரவாயில்லை. நீ ரெஸ்ட் எடு.” என்றவன், வேலை பார்க்க உட்கார்ந்து விட…… சம்யுக்தா சமைத்து வைத்து விட்டுத்தான் ஓய்வு எடுத்தாள்.
மதிய உணவு நேரத்திற்குத்தான் ஆரியன் அவளை எழுப்பினான். இருவரும் உணவு உண்ண…
உணவை உண்டபடி கணவனைப் பார்த்தவள், “என் மேல கோபமா?” என,
“உன் அப்பா அம்மாவோட கல்யாணத்துல உன் தவறு என்ன இருக்கு? அதுக்கு நீ பொறுப்பாக முடியாது. உங்க அப்பா சொல்ற மாதிரி சந்திரா அத்தை சொத்தை கொடுத்ததும் அடங்கிப் போயிடுவாங்களா என்ன? கண்டிப்பா மாட்டாங்க. அவங்களுக்கு எதாவது பிரச்சனை பண்ணாத் தான் தூக்கம் வரும். உங்க அப்பாவே இனி முடிவு எடுக்கட்டும். நீ தலையிடாதே….”
“சரி…”
“வேற என்ன பேசினாங்க அவங்க… உன்னை ரொம்பத் திட்டினாங்களா?”
“இல்லையில்ல…. அவங்க பேச ஆரம்பிச்சதுமே… அண்ணா, அக்கா, பவித்ரன் அத்தான் எல்லாம் வந்துட்டாங்க. அதனால ரொம்ப எல்லாம் ஒன்னும் பேசலை.”
“இந்த நேரத்தில் நல்லதை யோசிச்சு, நல்லதை பேசினாத்தான் வயித்துல இருக்கிற குழந்தையும் நல்ல ஆரோக்கியத்தோட நல்ல மனநிலையில் இருக்கும். நீ கண்டதையும் யோசிக்காத, விடு பார்த்துக்கலாம்.” என்றவன், உண்டு முடித்து மனைவியை ஓய்வெடுக்கச் சொல்லி விட்டு, மீண்டும் வேலை பார்க்க உட்கார்ந்து விட்டான்.
ஆரியன் சம்யுக்தாவை அவள் பெற்றோர் வீட்டுக்கு அனுப்பவே இல்லை. அப்பாவையும் அம்மாவையும் வர சொல்லி விட்டான். அவர்கள் இல்லாத போது, அவனே மனைவிக்குத் துணையாக வீட்டில் இருந்து வேலை பார்த்த்தான்.
சக்ரவர்த்திக்கும் இந்துஜாவுக்கும் ஆரியனின் கோபம் புரிந்து தான் இருந்தது. அவர்கள் மகளைப் பார்க்க மகள் வீட்டிற்குச் வந்து கொண்டு தான் இருந்தனர்.
ஒருநாள் அலுவலக நேரத்தில் ஆரியனை பவித்ரன் அழைத்தான்.
“சொல்லு சகலை… என்ன வேலை நேரத்துல போன் பண்ணி இருக்க? அவ்வளவு வெட்டியாவா இருக்க?” என ஆரியன் கேலி பேச….
“பிஸியா இருக்கீங்களா அண்ணா.” என்ற பவித்ரனின் குரலே சரி இல்லை. ஸ்ரீநிதி தான் எதோ வில்லங்கத்தை இழுத்து விட்டாளோ என்று பயந்து போனான்.
“ஆமாம் ஆனா நீ விஷயம் இல்லாம இப்போ போன் பண்ணி இருக்க மாட்ட… என்ன விஷயம் சொல்லு?” என்றான்.
கேட்டதும் சம்யுக்தாவுக்கு அதிர்ச்சி தான். அப்பா ஊரில் எவ்வளவு பெரிய மனிதர். இப்படி மகன் சொல்லாமல் கொள்ளாமல் கல்யாணம் செய்து கொண்டால்…. அவருக்கு எப்படி இருக்கும் எனத் தந்தையை நினைத்துத் தவித்துப் போனாள்.