Advertisement

அன்றைய தினம் சத்யமூர்த்திக்கு மலரும் நினைவுகள் அடிக்கடி எட்டிப் பார்த்தது. 

திருமணம் நிச்சயமானதும் சஹானா குடும்பம் பொள்ளாச்சி வந்தது அவனுக்கு நினைவு வந்தது. 

திருமண ஜவுளி எடுக்க, அவனது வீட்டைப் பார்க்க என அன்று அவளின் வருகைக்கு பல காரணங்கள் இருந்தது. அவர்கள் வந்த வேலைகள் அனைத்தும் முடிந்ததும், புனிதா, முரளிதரன் அவன் வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, அவர்களிடம் அனுமதிக் கேட்டு, சஹானாவை தனியாக வெளியில் அழைத்துக் கொண்டு போனான் அவன். 

முதலில் மாசாணி அம்மன் கோவிலுக்கு தான் அழைத்துப் போனான். அங்கிருந்து அவனது தொழிற்சாலை. சஹானாவின் பார்வை சத்யாவை மட்டுமே சுற்றி வர, தொழிற்சாலை குறித்து எந்த விளக்கங்களும் கொடுக்கவில்லை அவன். 

சஹானா அவனோடு சலசலத்து கொண்டே வர, அவனது ராகத்திற்கு, “ம்ம், ம்ஹூம்” என்று ஆலாபனை மட்டுமே செய்தான் சத்யமூர்த்தி. 

அங்கிருந்து நேராக சேலை நெய்யும் தறிக்கே அவளை அழைத்துப் போனான் அவன். 

மூன்று பட்டுப் புடவைகள், அவளுக்கென்று பிரத்தியேகமாக நெய்ய சொல்லி வந்தான். 

இதோ இன்று அவள் அணிந்திருப்பது அதில் ஒரு சேலையை தான். மெல்லிய ஜரிகையோடிய கைத்தறி பட்டு. பச்சையும், சிவப்பும் அவளை பசுமையாய் காட்டியது. 

கணவனின் பார்வை உணர்ந்து, கன்னங்கள் சிவக்க எழுந்து கொண்டாள் சஹானா. அவனது பார்வை புரிந்தாலும், அவளுக்கு வார்த்தைகள் தரும் உத்திரவாதம் தேவைப்பட்டது. அவளுக்கென்று நெய்து கணவன் வாங்கித் தந்த புடவை அது என்பது அறிந்தே தான் அதை உடுத்தியிருந்தாள் அவள். அவனையே நெய்து நிரந்தரமாக உடுத்தி கொள்ள விழையும் அவள் மனதை கட்டுப்படுத்த, அவன் முகம் பாராமல், “போகலாம்” என்றாள் சஹானா. 

வீடு வந்ததும் சத்யமூர்த்திக்கு அலுவல் ரீதியான அழைப்புகள் வரத் தொடங்கி விட்டது. சஹானா விழித்திருந்த மகளை கவனிக்க, சத்யமூர்த்தி அலைபேசியில் மூழ்கிப் போனான்.

மகளை விட கணவனையே அதிகம் கவனித்தாள் சஹானா. அலைபேசி முடித்து, மடிக் கணினியில் அலுவலக வேலையை பார்க்க அமர்ந்த சத்யமூர்த்திக்கு மனைவியின் முகமும், வீட்டுப் பிரச்சனையும் மட்டுமே மனதில் வந்தது. 

எத்தனையோ முறை அவனிடம் கத்தி, சண்டையிட்டிருக்கிறாள் சஹானா. ஆனால், ஒரு நாளும் அவனிடம் சொல்லிக் கொள்ளாமல் வீட்டை விட்டு எங்கேயும் சென்றது கிடையாது அவள். 

நேற்று முதல் முறையாக, கோபமாக சென்றிருக்கிறாள் என்பதைக் கேட்டதும் நிலைக் குலைந்து போனான் அவன். ஆனால், அதையும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை சத்யமூர்த்தி. அது அவனது வழக்கமும் கிடையாது. அவனுக்கு பதறி பழக்கமும் கிடையாது. 

கண்களை மூடினான். முதல் முறையாக வீட்டில் பெரிதாக பிரச்சனை துளிர்த்தது அவன் கண்களில் வந்தது. 

அப்பொழுது அவர்களுக்கு திருமணமாகி ஐந்து மாதங்களே முடிந்திருந்தது. சஹானா, அவனோடு தொழிற்சாலைக்கு வரத் தொடங்கியிருந்தாள். அங்கு அவளால் முடிந்த அத்தனை வேலைகளையும் பார்த்தாள். அவன் தொழிலின் அரிச்சுவடியை அவனிடம் கற்கத் தொடங்கினாள். மெல்ல மெல்ல தேறவும் தொடங்கினாள். 

வீட்டிற்கு வந்த பின் நேரம் ஒதுக்கி அவளின் எழுத்து வேலைகளையும் கவனித்தாள் அவள். 

வாழ்க்கை சீராக சென்றுக் கொண்டிருந்த ஒரு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தில், குடும்ப விழா ஒன்றிற்கு சென்று சிறப்பித்து, அப்படியே கொஞ்சம் பொள்ளாச்சியை வட்டமடித்து அவர்கள் வீடு வர, அவர்களுக்கு முன்னே பிரச்சனை வீடு வந்து காத்திருந்தது. 

“என்ன தம்பி இது? விவேக்கை கல்யாண வீட்ல வச்சு அடிச்சுட்டியாம்? உன் தாய் மாமா மகன் ப்பா அவன். நாலு பேர் முன்னாடி நீயே அவனை தலை குனிய விடலாமா?” சுப்புலட்சுமி ஆதங்கத்துடன் கேட்க, அவரை கோபத்துடன் கூர்ந்து பார்த்தான் சத்யமூர்த்தி.

“ஏன் அடிச்சேன் சொன்னானா?” சத்யா கேட்க,

“அது ஏதோ பொண்ணை பார்த்து, விளையாட்டா கலாட்டா பண்ணானாம். அதுக்கு போய் அடிக்கலாமா…” மேலே அவர் பேசுவதை கேட்க அவன் அங்கிருக்கவில்லை. 

முன்னரே தன் மனைவியை வெறித்து பார்த்தான் என்ற கோபம் மாமன் மகனின் மேலிருக்க, விஷேச வீட்டில் அவன் விளையாட்டை காட்டவும், கையால் காட்டி விட்டான் சத்யமூர்த்தி. பொதுவில் அல்ல. தனியா அழைத்து தான் அடித்திருந்தான். ஆனாலும், செய்தி வீட்டை அடைந்திருந்தது. 

அம்மாவின் பேச்சை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அடுத்தவன் வீட்டுப் பெண்கள் என்றால், நமக்கென்ன வந்தது என்ற பெரும்பான்மை, விட்டேத்தி மனப்பான்மை அவனை கோபத்தில் ஆழ்த்தியது. அதென்ன நம் வீட்டுப் பெண் என்றால் மட்டும் தான் இவர்களுக்கு துடிக்குமா? என்ற அவனின் கோபம் அம்மாவிடம் கூட வார்த்தைகளாக வெளிப்படவில்லை. 

அவன் பேசாமல் உள்ளே சென்றிட மருமகளை பிடித்துக் கொண்டார் சுப்புலட்சுமி.

“நில்லு, சஹானா. எனக்கு பதில் சொல்லிட்டு போ. என்ன நடந்துச்சு?” 

“எனக்குத் தெரியாது அத்த” உண்மையில் அவளுக்கு நடந்ததே தெரியாது எனும் போது அந்த பதிலை தானே சொல்வாள் அவள். 

சஹானா மணமகள் அலங்காரத்திற்கு உதவ சென்றிருந்த நேரம், மண்டபத்தில் ஓரமாக அமர்ந்து அவனுக்கு அருகில் இருந்த பெண்களை கிண்டல் செய்து சீண்டிக் கொண்டிருந்தான் விவேக். சத்யமூர்த்தியை பார்த்ததும், புன்னகைத்து, சம்பிரதாய பேச்சுகள் பேசி விட்டு, அவன் விட்ட இடத்தில் இருந்து தன் சேட்டையை தொடர, அவனை அதிர்ச்சியுடன் பார்த்தான் சத்யா. 

சாதாரண கேலி பேச்சு தான். ஆனால், அந்த பெண்கள் அதை ரசிக்கவில்லை. முறைத்து, முணுமுணுத்து திட்டினர். ஆனாலும், சளைக்காமல் தொடர்ந்தான் விவேக். 

அவனோடு அவனது நண்பர்களும், அவன் வயது உறவுமுறை இளைஞர்களும் இருக்க, அவர்களை கவலையாய் பார்த்தான் சத்யா. 

“பொறுக்கி பசங்க” என்று கோபமாக ஒருத்தி திட்ட, எழுந்து வேறிடம் போய் அமர்ந்தார்கள் பெண்கள். 

விவேக்கை தனியாக அழைத்துப் பேசினான் சத்யா. எச்சரித்தான். பதிலுக்கு விவேக்கின் வார்த்தைகள் நக்கலாக தடிக்க, பளாரென்று ஒரு அறையை செவுளில் கொடுத்து, அடியை புத்திமதி சொல்ல விட்டு வந்திருந்தான் அவன். 

இப்போது அந்த பஞ்சாயத்து வீடு வரை வந்திருக்க, சுப்புலட்சுமி மருமகளை பிடித்துக் கொண்டார். 

“என்ன எனக்குத் தெரியாது? அவன் கூட தானே போன? உனக்கு எப்படி தெரியாம இருக்கும்? எங்க அண்ணி போன் பண்ணி அப்படி புலம்பறாங்க. என்னால அவங்களுக்கு பதில் சொல்ல முடியல. இந்த பையன் எப்பவும் இல்லாம, இப்படி அவனை அடிச்சுட்டு வந்திருக்கான். என்ன நடந்தது சொல்லு?” கோபத்துடன் புலம்பியபடி அவர் கேட்க, “எனக்கு தெரியாது அத்த” என்று விட்டு அறையை நோக்கி நடந்தாள் சஹானா. 

“உனக்கு என்ன தான் தெரியும்? வீட்ல என்ன நடக்குது தெரியாது. யார் நம்ம வீட்டுக்கு வர்றாங்க, போறாங்க, சொந்தக்காரன் யாரு? எதுவும் தெரியாது. இங்க நம்ம வீட்டு வேலையை யார் பார்ப்பா? அதுவும் தெரியாது. ஆனா, புருஷன் கூட ஜோடி போட்டு டெய்லி ஃபேக்டரி மட்டும் போக தெரியும். இங்க நான் ஒருத்தி தனியா சமையல்ல இருந்து எல்லா வேலையும் பார்க்கணும். இல்ல?” 

“அத்த…”

“இதே எங்க சொந்தத்தில் பொண்ணு கட்டியிருந்தா என்னை உட்கார வச்சு தாங்கியிருப்பா.” சுப்புலட்சுமியை விட்டால் இன்னும் பேசியிருப்பார். 

“என்னம்மா?” என்று கேட்டபடி, சத்யமூர்த்தி வெளியில் வர, அவரின் பேச்சு அப்படியே நின்று போனது. 

“இல்ல தம்பி. என்ன நடந்ததுன்னு சஹானா கிட்ட கேட்டுட்டு இருந்தேன்” மகனிடம் குழைந்தது அவர் குரல். 

“அவனுக்கு கால் பண்ணி கேளுங்க. ஏன் அடிச்சேன் சொல்வான்” என்ற சத்யமூர்த்தி, மனைவியை பார்த்தான். அவனோடு நடந்தாள் சஹானா. 

அறைக்குள் நுழைந்து, படுக்கையில் அமர்ந்தாள். மாமியார் பேசிய வார்த்தைகளே அவள் மனதில் ஓடியது. அவர்கள் வீட்டில் மேல் வேலைகள் பார்க்க வேலைக்கு தினம் இருவர் வந்து சென்றனர். சமையல் மட்டுமே வீட்டுப் பெண்களின் வேலை.

சஹானா தினமும், நாள் தவறாமல் காலை, இரவு உணவு சமைக்க மாமியாருக்கு உதவுவாள். சில நேரங்களில் மாமியாரிடம் கேட்டு, அவளே தனியாக சமைத்தும் விடுவாள். அவள் தொழிற்சாலை செல்வதால் மதிய உணவு வேலை மட்டுமே மாமியார் வசம் என்றாகி இருந்தது. 

அதையும் இப்போது அவர் குத்திக் காட்ட, எந்த வேலையும் அவள் செய்வதில்லை என்று மொத்தமாக குற்றம் சாட்டிய அவர் பேச்சை மெல்ல ஜீரணித்துக் கொண்டிருந்தாள் அவள். 

“குளிச்சு, ட்ரெஸ் மாத்து சஹானா” என்றான் சத்யமூர்த்தி. அவன் ஏற்கனவே குளித்து உடை மாற்றி இருக்க, அவளும் சென்று குளித்து விட்டு வந்தாள். 

அன்று இரவு உணவின் போது, “சமையலுக்கு ஆள் பாருங்க மா.” என்று சத்யமூர்த்தி சொல்ல, வீட்டில் இருந்த மற்ற அனைவரின் கண்களும் அவனைத் தான் பார்த்தது. 

“ஏன் ப்பா திடீர்னு. அதான் நாங்க இருக்கோமே. நானும், மருமகளும் சேர்ந்து…” என்று ஆரம்பித்தவரை முடிக்க விடாமல்,

“அப்பா, ஆள் பாருங்க. வீட்டு சமையல் செய்ய தெரிஞ்ச லேடிஸா பாருங்க.” என்று முடித்து விட்டான் சத்யமூர்த்தி. 

சஹானா அவனை நிமிர்ந்து ஒரு முறை பார்த்ததோடு சரி. அவளுக்கு அவன் முடிவில் ஆச்சரியமும், அதிர்ச்சியும் தான். ஆனால், அவனின் அந்த முடிவின் பின் விளைவும் அவளின் தலையில் தான் விழுந்தது என்பது அவனுக்கு சில நாட்களுக்கு பின்னரே தெரிய வந்தது. 

சட்டென ஒரு முடிவுக்கு வந்திருந்தான் அவன். 

அன்றிரவு மடிக் கணினி முன் அமர்ந்து, மும்முரமாக பயணக் கட்டுரை எழுதிக் கொண்டிருந்த மனைவியின் அருகில் சென்று அமர்ந்தான். 

“பிஸி?” என்றான் கேள்வியாக.

“லோனவாலா (lonovala) பத்தி முன்னாடியே எழுதி இருந்தேன். அதை இப்போ, சரி பார்த்திட்டு இருக்கேன். இன்னைக்கு அந்த ஆர்டிகிள் பப்ளிஷ் பண்ணனும்” அவனிடம் சொல்லிக் கொண்டே வேலையை தொடர்ந்தாள் சஹானா.

“நீங்க சொல்லுங்க சத்யா” அவள் கேட்க, அவனின் பதில் கேள்வியில் அதிர்ந்து திரும்பி அவனைப் பார்த்தாள் சஹானா. 

“நாம தனியா போய்டலாமா சஹானா?” என்ற அவனின் ஒற்றைக் கேள்வி அவளை வாய் பிளக்க வைத்தது.

“என்ன சொன்னீங்க சத்யா?” சந்தேகத்துடன் மீண்டும் கேட்டாள் அவள்.

மெலிதான சிரிப்புடன், “ஃபேக்டரி பக்கத்துல இருக்க, நம்ம வீட்டுக்கு போய்டலாமா?” அவன் கேட்க, அதிர்ச்சியுடன் வாய் பிளந்து அவனைப் பார்த்தாள் சஹானா. 

அவர்களுக்கு திருமணம் முடிந்து அப்போது தான் ஆறாம் மாதத்தில் அடியெடுத்து வைத்திருந்தனர். இப்போதே தனிக் குடித்தனம் என்றால், மாமியார் சாமியாடி விடுவார் என்பது அவளுக்கு நிச்சயமாக தெரியும். அப்படியிருக்கையில் எப்படி முடிவெடுப்பது என்ற குழப்பத்துடன் கணவனை பதிலின்றி ஏறிட்டுப் பார்த்தாள். 

அவனோ, கேள்வியுடன் புருவம் உயர்த்தினான். 

சஹானா பதில் சொன்னாள். அவனுக்கு தான் அவளின் பதில் பிடிக்கவில்லை. 

Advertisement