Advertisement

மன்னிப்பை முதன் முறையாக வார்த்தைகளில் வெளிப்படுத்திய கணவனை மெல்லிய அதிர்ச்சியுடன் விழி விரித்து பார்த்தாள் சஹானா. அவர்களின் கல்யாணத்திற்கு முன்பு அவளிடம் ஒருமுறை மன்னிப்பு கேட்டிருக்கிறான். 

அதன் பின் நடந்த எத்தனையோ சண்டைகளில், சஹானா சிலிர்த்துக் கொண்டு நிற்கும் போதெல்லாம், பதற்றத்துடன் ஒரு கையால் தலைக் கலைத்து கோதிக் கொள்வான். கண்களில் வேண்டுதலோடு அவளைப் பார்ப்பான். அவ்வளவு தான். ஆனால், இன்று? சத்யமூர்த்தி எப்போதுமே அவளுக்கு முழுதாக புரிந்துக் கொள்ள முடியாத அதிசய ஆச்சரியம் தான். 

“எதுக்கு?” என்ற அவளின் கேள்விக்கு, மிக நிதானமாக, “எல்லாத்துக்கும்” என்றான் சத்யமூர்த்தி. 

மேலே என்ன கேட்பது, என்று அவளுக்குத் தான் தெரியவில்லை. சஹானா பேசிவிட்டு வந்த அதிகப்படி வார்த்தைகளுக்கு அவள் தான் மன்னிப்பு கேட்க வேண்டும், மாறாக அவன் கேட்க, குழப்பத்துடன் அவன் முகம் பார்த்தாள் அவள். 

“தூங்கு. டையர்ட்டா தெரியற” சத்யமூர்த்தி சொல்லி விட்டு, மகளை உச்சி முகர்ந்தான். ஒருக்களித்து படுத்து, இடக்கரத்தால் மகளை மென்மையாக அணைத்துக் கொண்டான். அப்பாவின் கை சூடு உணர்ந்து, அனிச்சையாய் அவனை நெருங்கிப் படுத்தாள் மகள். 

அப்பா, மகளைப் பார்க்கையில் சஹானாவிற்கு பெருமூச்சு பொறாமை கலந்து வெளிவந்தது. பட்டென்று கண்ணை மூடிக் கொண்டாள் அவள். கணவனின் அணைப்பிற்கு ஏங்கியவளை உறக்கம் ஏமாற்றாமல் அணைத்துக் கொண்டது. 

மெல்ல கண்களை திறந்து மனைவியைப் பார்த்தான் சத்யமூர்த்தி.

உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகள் அவசியம் என்று எப்போதும் அவனிடம் வலியுறுத்தும் மனைவி. அவனது மௌனத்தை புரிந்துக் கொள்ளவே மாட்டேன் என்று அடம் பிடிக்கும் மனைவி. இன்று விசித்திரமாக வார்த்தைகளை அள்ளித் தெளித்து விட்டு வந்திருக்கிறாள். 

அதுவும், அவனது அம்மாவிடம். 

அம்மா! எப்படியிருந்தாலும் அவர் அம்மா தானே? அவனால் முடிந்த அனைத்தையும் செய்து பார்த்து விட்டான். அம்மாவையும் திருப்திப்படுத்த முடியவில்லை. அவரின் தாக்குதல்களில் இருந்து மனைவியையும் அவனால் காப்பாற்ற முடியவில்லை. 

அவன் எடுத்த முயற்சிகளுக்கு சஹானாவும் கைக் கொடுக்கவில்லை. சமயங்களில் அவள் கை நீட்டும் முன்னே, அதை தட்டி விட தவறவில்லை சுப்புலட்சுமி.

இனி அவனின் சகலமும் சஹானா தான் என்பதை அம்மா என்று தான் புரிந்துக் கொள்வாரோ என்று கவலையுடன் நூற்றி பத்தாவது முறையாக நினைத்துக் கொண்டான் சத்யமூர்த்தி. 

கண்களை மூடித் திறந்தான். அவன் எதிரில் உறக்கத்தில் சஹானா, பிரார்த்தனா இருவரையும் பார்க்க பார்க்க நிறைந்துப் போனது அவன் மனது. 

சத்யமூர்த்தி, சத்தியாகிரகம் செய்து சஹானாவை சாதித்திருந்தான். அவன் மனம் முதன்முதலாக சாய்ந்தது சஹானாவிடம் தான். அவன் வாழ்வில் அனுமதியின்றி நுழைந்த அருவி அவள். அவனுக்கு பிரார்த்தனை செய்யாமலேயே பிரார்த்தனாவையும் வரமாக தந்தவள். 

நினைவுகளுக்கு என்று தனிச் சுவை உண்டு. 

வலிகள் கசப்பையும், கோபங்கள் கார்ப்பையும் தருகையில், சில அந்த நாள் ஞாபகங்களுக்கு பிரத்தியேக சுவையொன்று உண்டு. அன்பு, பாசம், நேசம், நட்பு, காதல் இவற்றின் சுவை தேனின் தித்திப்போடு மட்டும் ஒப்பிட முடியும். அவனுக்கு சஹானாவின் நினைவு இனிமையை மட்டுமே தரும் ஒன்று.

இதே வீட்டின் கூடத்தில் வைத்து தான் அவனது சரி பாதியை முதல் முறையாக பார்த்தான் சத்யமூர்த்தி. சஹானா, பறக்க தெரிந்த ராகம் அவள். உலகம் சுற்றிவிட்டு கூடடைய வீடு வந்திருந்தாள் அன்று. 

அவனை தலை முதல் கால் வரை கண்களால் வலம் வந்து, “பிடிச்சிருக்கு” என்று அவள் சொன்ன நொடி, அவனது இதயத்திற்குள் சட்டமாய் வந்து அமர்ந்து விட்டாள் சஹானா. 

அவள் நிழல் அவன் மேல் விழுந்த கணம், அவனையும் அறியாமல் அவன் விரல்கள் அவளைத் தொட நீண்டன. தொடாமலேயே அவன் உயிர் நரம்புகளுக்குள் ஊடுருவிய பெண் அவள். 

அவளைப் பார்த்து விட்டு பொள்ளாச்சி போன பின்னரும், அவனுக்கு அடிக்கடி அவள் நினைவு வந்தது. அவர்கள் குடும்பத்தில் கலப்பு திருமணம் சாத்தியமில்லை என்பதால், சஹானாவை மறந்திடவே நினைத்தான் அவன்.

ஊதா நிற புடவையில், காதில் நீண்ட சரம் கழுத்தை உரச, வெற்றுக் கழுத்துடன் நின்ற கேரளத்து பைங்கிளி அவனின் மனதை விட்டு மறைய மாட்டேன் என்று அடம் பிடிக்க, குழப்பத்துடன் தலையை பிடித்துக் கொண்டான் அவன். 

இரண்டு வாரங்கள் கழித்து வீட்டில் திருமண பேச்சு வர, வழக்கம் போல தட்டிக் கழிக்காமல் பெண் பார்க்கச் சென்றான். 

சர்வ அலங்காரத்துடன் வந்து நின்ற பெண்ணை ஒரு நொடிக்கு மேல் அவனால் பார்க்கக் கூட முடியவில்லை. 

சஹானாவின் சிரித்த முகம் மட்டுமே அவன் கண்களில் நிரந்தரமாய் உறைந்து நின்றது. 

மறுநாளே வீட்டில் அவளைப் பற்றி சொல்லி விட்டான் அவன். அம்மாவின் அதிர்ச்சியை, எதிர்ப்பை எதிர்பார்த்ததினால் அதை எதிர்க் கொள்வது அவனுக்கு எளிதாகவே இருந்தது. 

சுப்புலட்சுமி, வரிசையாக எத்தனையோ பெண்களின் புகைப்படத்தை அவன் முன் நீட்டினார். எதற்கும் மசியவில்லை அவன். இறுதியில் அவனது உறுதி தான் ஜெயித்தது. ஊர், உறவு, இனம், மொழி என அனைத்தையும் கடந்து தான் அவளைக் கைப் பிடித்தான் சத்யமூர்த்தி. 

சஹானாவின் குடும்பம் தமிழ் என்றாலும், பிறந்து வளர்ந்தது கேரளா என்பதால், அவளை மலையாளியாகவே பார்த்தது அவன் உறவுகள். அவனுக்கு எதுவுமே பொருட்டாக, தடையாக இருக்கவில்லை.

அவன் முன்னிருந்த அனைத்து தடைகளையும் தகர்த்தான். சஹானா அவனது மனைவியானாள். ஆனால், அவனது இந்த காதல் கதையை யாரிடமும் அவன் பகிர்ந்தது கிடையாது. அவ்வளவு ஏன், அவனது காதல் மனைவியிடமே அவன் சொன்னது கிடையாது.

எத்தனையோ பொழுதுகளில் அவளிடம் சொல்ல நினைத்திருக்கிறான். ஆனால், சஹானா சிரித்து பேச ஆரம்பிக்க, சத்யாவிற்கு அதுவரை பேசிட நினைத்த சகல வார்த்தைகளும் மறந்து போகும். 

அவளின் மலர்ந்த சிரிப்பு ஒன்று போதும். எப்போதும் அவனை சிதறடிக்க போதுமானதாக இருக்கிறது. ஆனால், வீணாக சிதறும் சொற்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறாள் சஹானா. அவனும் மனதை சொல்லி விட தான் நினைக்கிறான். முடியவில்லையே. 

அவனது மௌனம் சொற்களை தேடி அலைந்து கொண்டிருந்தது. சத்யாவோ சாத்தியப்பட்ட வழிகளில் எல்லாம் சஹானாவை காதலித்தான். அவளுக்கு அன்பை அணைப்பின் வழி கடத்திக் கொண்டேயிருந்தான். 

அன்பை வார்த்தைகளில் மட்டுமே அளவிட தெரிந்தவள் சஹானா. ஆக, இருவருக்கு நடுவிலும் சொல்லப்படாத வார்த்தைகளும், மொழிப் பெயர்க்க படாத மௌனமும் சதா ஆட்சி செய்துக் கொண்டேயிருந்தது. 

மனைவியின் முகம் பார்த்தது பார்த்தபடி இருந்தவனின் கண்கள் அசதியில் மூடி, உறக்கத்தை தழுவியது. 

அவர்களின் இரண்டு மணி நேர ஆழ்ந்த உறக்கத்தை அழுது கலைத்தாள் பிரார்த்தனா. 

மகளின் அழுகை சத்தத்தில் கண் விழித்த சத்யா, “தனு குட்டி” என்றான். அப்பாவின் குரல் கேட்டதும் தலையை மின்னல் வேகத்தில் திருப்பி, அவன் முகம் பார்த்து கோலி குண்டு விழிகளை மலர்த்தி, சீழ்க்கையடித்து சிரித்தாள் பிரார்த்தனா. படக்கென்று புரண்டு, கை, கால்களை படுக்கையில் தட்டி நீச்சலடித்து, வயிற்றை தேய்த்து அப்பாவை நெருங்க முயன்ற மகளைப் பார்க்கையில் பூரித்துப் போனான் சத்யமூர்த்தி. 

“தனு குட்டி” என்றழைத்து, மகளை கையில் அள்ளி மார்பில் கிடத்தினான். கடை வாயில் எச்சில் வழிய, “ப்ப்ப்பூ” என்று ஏதேதோ பேசி அப்பாவை புன்னகைக்க வைத்துக் கொண்டிருந்தாள் மகள். 

“என் தனு குட்டிக்கு, என் பிரார்த்தனா குட்டிக்கு பசிக்குதா? அம்மாவை எழுப்பணுமா?” அவன் கேட்க, அதற்கும் வாயில் வண்டி ஓட்டினாள் அவன் மகள். 

அவர்களின் பேச்சில் உறக்கம் கலைந்து எழுந்த சஹானா, இருவரையும் முறைத்து பார்த்தாள். 

மகளின் பெயரை மட்டும் தனா, தனு குட்டி என்று சுருக்கத் தெரிந்த கணவனுக்கு, மனைவியின் பெயர் மட்டும் எப்போதும் நீட்டி முழக்கி முழுதாக சஹானா என்று தான் வரும். மனதில் சலித்துக் கொண்டாள் சஹானா. 

மெல்ல விழிகளை உயர்த்தினான் சத்யா. மனைவியின் கோப விழிகளை சந்தித்து, எதற்கென்று சிந்தித்தான். காரணம் பிடிபடவில்லை. 

“பாப்பாவை, குடுங்க” கை நீட்டி மகளை வாங்கிக் கொண்டாள் சஹானா. அம்மாவை பார்த்ததும் மெலிதாக சிணுங்கி காண்பித்து தன் பசியை உணர்த்தினாள் மகள். சஹானா பாலூட்டத் தொடங்க, சத்யமூர்த்தி எழுந்து குளியலறைக்குள் புகுந்து கொண்டான். 

அவன் குளித்து வெளியில் வர, மகள் பசியாறி படுக்கையில் குப்புற படுத்து நீச்சலடித்துக் கொண்டிருந்தாள். சஹானா, ஏதோ யோசனையுடன் மகளைப் பார்த்தபடி அமர்ந்திருக்க, “குளிச்சிட்டு வா சஹானா” என்றான். அமைதியாய் எழுந்துப் போனாள் சஹானா. 

அவளும் குளித்து வர, மகளை தோளில் போட்டு தட்டிக் கொடுத்தபடி அறைக் கதவை திறந்தான் சத்யமூர்த்தி. 

அதிகாலையில் வந்து நின்ற மருமகனிடம் அப்போதே நலம் விசாரித்திருந்தனர் சஹானாவின் பெற்றோர். அதனால், இப்போது காலை உணவு இயல்பான பேச்சுடன் சென்றது. 

சஹானாவின் வீட்டில் உணவு பழக்கம் என்பது, “ஊரோடு ஒத்து வாழ்” என்பதாக தான் இருக்கும். கேரள உணவுகளே அதிகம் இருக்கும். குழந்தையில் இருந்து பழகிய காரணத்தினால் சஹானா கேரள உணவையும் விரும்பியே உண்பாள். ஆனால், சத்யமூர்த்திக்கு அத்தனைப் பிடிக்காது. இப்போதும் புட்டும், கடலைக் கறியும் அவன் முன்னிருக்க, “உப்மா, இல்லனா சப்பாத்தி பண்ணித் தரவாங்க” அவன் சிரமம் அறிந்தவளாக கேட்டாள் சஹானா.

“கோதுமை பரோட்டா பண்ணிட்டேன் சஹா. கடலைக் கறி இருக்கில்ல.” என்றபடி கையில் ஏந்திய பாத்திரத்துடன் சமையல் அறையில் இருந்து வந்தார் புனிதா. 

கணவனின் தட்டை தன் பக்கம் இழுத்துக் கொண்டாள் சஹானா. கோதுமை பரோட்டாவும், கடலை கறியும் வைத்து அவனுக்கு பரிமாறினாள். 

ஒரு நிமிடம் அவளையே பார்த்து விட்டு, உணவில் கை வைத்தான் சத்யமூர்த்தி. 

அவன் வீட்டில் எத்தனையோ நாட்கள் விருப்பமின்றி உணவை விழுங்கி வைத்திருக்கிறாள் அவன் மனைவி. அப்போதெல்லாம் அவன் எதுவுமே செய்தது கிடையாது என்பது இப்போது தான் அவனுக்கு உரைத்தது. 

புனிதா பேத்தியை வாங்கிக் கொள்ள, உணவை ருசித்து உண்டுக் கொண்டிருந்தாள் சஹானா. 

மனைவியின் முகம் பார்க்க பார்க்க, “எங்கு தவறினோம்?” என்ற கேள்வி மட்டுமே அவன் மனதில் ஓடிக் கொண்டேயிருந்தது. 

சஹானாவின் பெற்றோர் அவர்களிடம் நடந்த பிரச்சினையைப் பற்றி எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. அன்று புனிதா விடுமுறை எடுத்திருக்க, முரளிதரன் உணவு முடித்து, மருமகனோடு பேசிக் கொண்டிருந்து விட்டு மருந்தகம் சென்றார்.

உறக்கத்திற்கு அழுத மகளை, அறைக்குள் நுழைந்ததும் தட்டிக் கொடுத்து உறங்க வைத்தாள் சஹானா. 

உடை மாற்ற பீரோவை திறந்த சத்யமூர்த்தியின் கைகள், எதிரில் இருந்த புடவையை மெல்ல வருடியது. 

“இது இங்க இருக்கா சஹானா?” என்று கேட்டவன், “இதை கட்டேன். கோவிலுக்கு போய்ட்டு வரலாம்” என்றான். 

அவனையே இமைக்காமல் பார்த்த சஹானா, எழுந்து அவன் நீட்டிய புடவையை வாங்கிக் கொண்டாள். 

சத்யமூர்த்தி அறையிலேயே இருக்க, அவனை சோதித்து அங்கேயே சேலையை மாற்றினாள் சஹானா. 

அரை மணி நேரம் கழித்து உறங்கும் பிரார்த்தனாவை புனிதாவிடம் விட்டுவிட்டு இருவரும் அவளின் வீட்டுக்கு அருகில் இருந்த பழமை வாய்ந்த சிவன் கோவிலுக்கு சென்றனர். 

கண் மூடி முழு மனதுடன் கடவுளை வேண்டிக் கொண்டான் சத்யமூர்த்தி. இருவரும் கோவிலில் சற்று நேரம் அமர, மனைவியை இமைக்காமல் பார்த்தான் அவன்.

Advertisement