Advertisement

அவளின் கோபம் மாமியாரின் மீது மட்டுமில்லையே, கணவனின் மேலும் கன்னா பின்னாவென்று கோபத்தை வளர்த்து வைத்திருந்தாளே அவள். அப்படியிருக்க, உடனே புகுந்த வீடு செல்ல எப்படி சம்மதிப்பாள்? 

“ம்மா. நான்..”

“எதுவும் சாக்கு போக்கு சொல்லாத சஹானா. நாம ரெண்டு நாள்ல ஊருக்கு போறோம். நீ உன் மாமியார் கிட்ட மன்னிப்பு கேட்கற. இனிமேல் இப்படி யார் கிட்டேயும் யோசிக்காம பேசக் கூடாது நீ, சரியா?” புனிதா கண்டிப்புடன் குரலை உயர்த்திச் சொல்ல, எல்லா பக்கமும் தலையை ஆட்டினாள் சஹானா. 

“முதல் வேலையா மாப்பிள்ளைக்கு கூப்பிட்டு பேசு. அவர்கிட்ட நடந்ததை சொல்லி சாரி சொல்லு. தப்பே பண்ணாலும், தப்பாவே பேசினாலும், அவங்க அவரோட அம்மா சஹா. எங்கேயும் விட்டுக் கொடுக்க முடியாத உறவு. அவரை நீ இப்படி சங்கடப்படுத்த கூடாது. கால் பண்ணி பேசு. சாரி சொல்லு” 

“ம்ம். பேசுறேன் மா” என்றாள் உள்ளே போய் விட்ட குரலில்.

அந்த அதிகாலை வேளையில், சோர்ந்து, ஓய்ந்து போய் தெரிந்த மகளை பார்க்கையில் புனிதாவிற்கு அத்தனை வருத்தமாக இருந்தது. 

கைக் குழந்தையை வைத்திருந்த மகளே இன்னும் குழந்தையாக தான் அவரின் கண்களுக்குத் தெரிந்தாள். 

மகளின் வாழ்வை நினைக்கையில் அவரையும் அறியாமல் கண்கள் கலங்கி விட, “நம்ம ஊரை பொறுத்தவரை கல்யாணம் ரெண்டு குடும்பத்துக்கு நடுவுல நடக்கறது சஹா. ஒரு கல்யாணத்தால ரெண்டு பேர் மட்டுமில்ல. ரெண்டு குடும்பமும் இணையுது. அதுனால தான் ஒரே ஊர், இனம், மதம், குணம்னு தேடிப் பார்த்து கல்யாணம் பண்றாங்க.” அவர் சொல்ல,

“ஆனா, நீங்க அதையெல்லாம் எப்பவும் பார்த்தது இல்லையே மா” அவசரமாக கேட்டாள் சஹானா. 

“என் வேலை எனக்கு எத்தனையோ கத்துக் கொடுத்தது சஹா. அதில் முக்கியமானது மனுஷங்களை, மனுஷங்களா மட்டும் பார்க்கறது. நான் ஒரு நர்ஸ், என்கிட்ட ட்ரீட்மென்ட்க்கு வர்றவங்க ஜாதி, மதம் எல்லாம் பார்த்தா, என்னால ஒரு நிமிஷம் கூட வேலைப் பார்க்க முடியாது டா. இரத்தமும், சீழுமா வந்து நிக்கிறவன் உயிரை இனம் பார்த்தா காப்பாத்த முடியாது. மதம் பார்த்து வைத்தியம் பார்த்தா, தினம் ஒரு குட்டி ரோஜா பூவை இந்த உலகத்துக்கு கொண்டு வர முடியாது சஹா.” ஆதுரத்துடன் மகளின் முகம் வருடி சொன்னார் அவர். 

“அதுக்காக இனம், மதம்னு பார்க்கறவங்களை நாம தப்பு சொல்லக் கூடாது சஹா. அவங்கவங்களுக்கு ஒரு நம்பிக்கை. அதை நாம குறை சொல்லவும் கூடாது. கேலி பண்ணவும் கூடாது. உன் மாமியாரோட வருத்தம் காலத்துக்கும் இருக்கத் தான் போகுது. நீயோ, நானோ இனி நினைச்சா கூட எதையும் மாத்த முடியாது. அவங்களால உன்னை ஏற்றுக்க முடியலைன்னா, அது உன் தப்பு இல்ல சஹா. அதை யோசிச்சு உன்னை நீ கஷ்டப்படுத்திக்காத.”

“எப்படி மா முடியும்? எல்லாரும் ஒரே வீட்ல இருக்கும் போது? எப்படி கண்டுக்காம கடந்து போக முடியும்? எத்தனை நாளைக்கு அமைதியா போக முடியும்?” வெடித்தாள் சஹானா. 

“மாப்பிள்ளை கிட்ட பேசு சஹா. யார் மேலயோ இருக்க கோபத்தை எல்லாம் சேர்த்து வச்சு அவர் மேல காட்டாத. அது ரொம்ப தப்பு. வீட்டு நிலைமை கண்டிப்பா அவருக்கு தெரிஞ்சு இருக்கும். நிச்சயமா ஏதாவது பண்ணுவார்.” 

“சரிம்மா” என்றாள் சஹானா. மெல்ல எழுந்துக் கொண்ட புனிதா, அறை வாயிலை நோக்கி நடந்தார். ஏதோ நினைவு வந்தவராக நின்று, அங்கிருந்தே பேசத் தொடங்கினார்.

“ஒருத்தர் மேல நாம கோபமா இருக்கும் போது, அவங்க செய்யற நல்லது கூட நமக்கு கெடுதலா தான் தெரியும். அந்த நேரம் யாராவது நம்மகிட்ட அவங்களைப் பத்திக் கேட்டா, குறையா தான் சொல்லுவோம். நமக்கு வசதியா, அவங்க நமக்கு செஞ்ச நல்லதை எல்லாம் மறந்து போய்டுவோம்.”

“அம்மா…” மகள் கோபத்துடன் சிணுங்க, 

“ஒன்னை பத்தாக்கி சொல்றது மனுஷ இயல்பு சஹா. நீ இப்போ அதைத் தான் பண்ணிட்டு இருக்க. மாப்பிள்ளை உனக்கு பண்ண நல்லது எல்லாம் உனக்கு மறந்து போச்சு. நீ மாப்பிள்ளையை படுத்தினது எல்லாம், எவ்வளவு ஈசியா மறந்து, ஒன்னுமே இல்லாத மாதிரி ஒதுக்கிட்ட இல்ல?”

“ம்மா, நான் அவரை என்ன பண்ணேன்?”

“என்ன பண்ணலை கேளு சஹா. நீ பிரார்த்தனாவை வயித்துல வச்சுட்டு இருக்கும் போது, என்னெல்லாம் பண்ண? நீ சாப்பிட அவர் சமைக்கல. நீ தூங்க அவர் தாலாட்டு பாடல. அவ்ளோ தான். மத்த எல்லாம் செஞ்சார் மனுஷன். நான் கூட உனக்காக அவ்ளோ செய்யல. இப்போ டெலிவரிக்கு அப்புறம் டிப்ரஷன்ல நீ பண்ற எல்லாத்தையும் மனுஷன் பொறுத்து போய் நிதானமா, உன்னைப் புரிஞ்சு ஹாண்டில் பண்றார் தானே?”

அம்மா கேட்டதில் ஆணித்தரமான உண்மை இருக்க, அவளால் பதில் பேச முடியவில்லை.

“உங்களுக்கு எப்பவும் உங்க மருமகன் தான் உசத்தி” என்று சடைத்துக் கொண்டாள் சஹானா. மென்மையாக சிரித்தார் புனிதா.

“அம்மா போய் டிஃபன் வேலையை பார்க்கறேன். பாப்பா தூங்கும் போதே, நீ இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிக்கோ” அக்கறையுடன் அவர் சொல்ல, தலையசைத்தாள் சஹானா.

மகளின் அறைக் கதவை லேசாக மூடி விட்டு, வெளியே போனார் புனிதா. 

அம்மாவிடம் பேசியதை, அம்மா பேசியதை மனதில் அசைப் போட்டபடி கட்டிலில் கண் மூடி சாய்ந்து அமர்ந்திருந்தாள் சஹானா. 

மனதில் கணவன் வந்து நின்று, புருவங்களை நெரித்து பார்த்தான். அவளுக்கு கோபம் பின்னுக்கு போய், இப்போது குற்ற உணர்வாக இருந்தது. கணவனிடம் பேச வேண்டும். மன்னிப்பு கேட்க வேண்டும் என நினைத்தாள். 

ஆனால், போதிய உறக்கம் இல்லாத காரணத்தால் கண்கள் எரிய, எழுந்து முகம் கழுவ சென்றாள் அவள். 

குளிர் நீர் முகத்தில் பட்டதும், உடலோடு மனதும் சில்லென்று குளிர்ந்த உணர்வு. அவள் முகம் கழுவி துவாலையால் துடைத்தபடி வெளியில் வர, அவளின் அறைக் கதவை திறந்தபடி உள்ளே வந்தான் சத்யமூர்த்தி. சஹானா சத்தியமாய் கணவனை இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்க்கவில்லை.

இருவரும் ஒரு நொடி பேச்சு மறந்து உறைந்து நின்றனர். சத்யமூர்த்தி முதலில் சுதாரித்து, அறைக் கதவை தாழிட்டு திரும்பினான். 

அவசர எட்டுக்கள் வைத்து, அவளுக்கு அருகில் வந்தான். விழிகளை விரித்து அவனை வியப்பாக பார்த்துக் கொண்டிருந்த மனைவியை இழுத்து இறுக அணைத்திருந்தான். 

அவன் வழக்கம் போல எதுவும் பேசவில்லை. எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. மௌனமாய் அணைப்பின் வழி அன்பைக் கடத்தினான். மெல்ல குனிந்து மனைவியின் முகம் பார்த்தான். அவள் கண்களை நிறைத்திருந்தது குழப்ப ரேகைகள். 

அவனுக்கும் குழப்பம் தான். இரண்டரை வருடங்களாக அவனது அன்பு உணர்த்தாத எதை அவன் வார்த்தைகள் மனைவிக்கு உணர்த்திடப் போகிறது என்று நினைக்கையிலே அவனுக்கு ஆயாசமாக வந்தது. 

மெல்ல மனைவியை விலக்கி விட்டு திரும்பிப் படுக்கையில் இருந்த மகளைப் பார்த்தான் சத்யமூர்த்தி. 

அவன் உதடுகள் தாமாக பிரிய, சஹானா உதடுகள் இறுகியது. 

மகளுக்கு பக்கத்தில் சென்று அமர்ந்தான் சத்யமூர்த்தி. மெல்ல அவளின் கன்னம் வருடிக் கொடுத்தான். 

“நீ தூங்கு சஹானா” என்றான் அமைதியாக, அழுத்தமாக. 

“பாப்பாவை நான் பார்த்துக்கறேன். அவ தூங்கற வரை நீயும் தூங்கு” என்று கணவன் சொல்லாமல் விட்ட வார்த்தைகளும் அவளுக்கு புரிய, அமைதியாக அவனையே பார்த்தபடி படுக்கையில் அமர்ந்தாள். 

“சாரி..” என்றான் சத்யமூர்த்தி, சஹானாவின் கண்களை நேராகப் பார்த்து. 

“எது.. எதுக்கு?” திக்கினாள் சஹானா. 

Advertisement