Advertisement

ஒரு பெண்ணிற்குள் எப்போதுமே தாய்மை தன்னிறைவாக ஒளிந்திருக்கும். விலங்கு, பறவை, மனிதன் என்று எந்த பாரபட்சமும் பாராமல் அது எப்போதும் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும். ஆனால், அதே பெண்ணுக்குள் இருக்கும் மாமியார், மகனது திருமணம் பேசிய உடனேயே உயிர் பெற்று விடுவாள் என்று சஹானாவிற்கு தோன்றியது.

சுப்புலட்சுமி தானொரு சிறந்த தாயார் என்று மகள் ராதா விஷயத்தில் நிரூபித்த மறுகணமே, தானொரு அதிசிறந்த மாமியார் என்பதையும் சஹானாவிடம் காட்டிட மறக்கவில்லை. 

சத்யமூர்த்தி – சஹானா திருமணம், சத்யமூர்த்தியின் விருப்பத்தினால் மட்டுமே சாத்தியமாகி இருக்கிறது என்பதை திருமணமான சில நாட்களிலேயே புரிந்துக் கொண்டாள் சஹானா. 

அப்பொழுது, சதா சர்வ காலமும் அவளைப் பற்றி புலம்பிக் கொண்டிருந்த மாமியாரை பார்க்கையில் அவளுக்கு வருத்தமாக கூட இருந்தது. 

அவர்களுக்கு திருமணம் முடிந்து நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கையில் மாமியார் இப்படி எதிர்மறையாக பேசிக் கொண்டேயிருப்பது, சமயங்களில் அவளை மிகுந்த எரிச்சலூட்டியது. 

இந்த வீட்டில் தான் வாழப் போகும் காலம் முழுமைக்கும் மாமியாரின் இப்பேச்சை கேட்க வேண்டும் என்று நினைக்கையிலேயே அவளுக்கு கண்ணைக் கட்டியது. 

ஒரே விஷயத்தை அவர் அலுக்காமல் பேசுவதை பல நேரங்களில் பெரிதுப்படுத்தாமல், பொருட்படுத்தாமல் கடந்து செல்ல பழகி இருந்தாள் சஹானா. ஆனாலும், அவர்கள் இருவரும் ஒரே வீட்டில் இருக்கும் போது, சச்சரவுகளை தவிர்க்க முடியவில்லை. 

மாமியாரின் பேச்சு அவளுக்கு சஞ்சலத்தை, சங்கடத்தை கொடுக்க, இறுதியில் அது சத்யாவிடம் சண்டையில் போய் தான் முடியும். 

காரணம் சொல்லாமல் காச் மூச்சென்று கத்தும் மனைவியை கவலையுடன் பார்ப்பான் சத்யமூர்த்தி. சமாதானமும் செய்வான். ஆனாலும், அவளுக்குத் தான் அது போதவில்லை.

“சஹா, சஹா.. அம்மா, எவ்ளோ நேரமா கூப்பிடுறேன்? அப்படி என்ன யோசனை?” புனிதாவின் அழைப்பு, சஹானாவை கடந்த காலத்தில் இருந்து, நிகழ்காலத்திற்கு இழுத்து வந்தது.

“சாரி மா. கவனிக்கல. என்னம்மா, சொல்லுங்க?” 

“பாப்பா தூங்கிட்டா பாரு. அவளை கீழ படுக்க வை. இந்தா, உனக்கு காஃபி” அவளின் மடியில் தன் சொப்பு வாய் பிளந்து உறங்கிக் கொண்டிருந்த மகளை புன்னகையுடன் பார்த்து, படுக்கைக்கு மாற்றினாள் சஹானா. 

அவளுக்காக, அம்மா நீட்டிய காபியை கையில் வாங்கிக் கொண்டே, “உங்களுக்கு மா?” என்று கேட்டாள். 

“நான் குடிச்சிட்டேன் சஹா. நீ சூடு ஆறும் முன்னாடி குடி” 

வண்டிப் பெரியாரில் விளைந்த காஃபி கொட்டைகளில் தயாரித்த காபியின் சுவை அலாதியாய் இருக்க, ஒவ்வொரு சொட்டையும் ருசித்து பருகினாள் அவள்.

மகளின் ரசிப்பைப் பார்த்து விட்டு சிரித்தார் புனிதா.

அவருக்கு மருமகனின் நினைவு வந்தது. மனைவிக்கு பிடித்தம் என்று ஒவ்வொரு முறை, மாமியார் வீடு வரும் போதும் கிலோ கணக்கில் காஃபி பொடி வாங்கிப் போகும் சத்யமூர்த்தி நினைவில் வந்தான். 

“சஹா, நேத்து நீ தனியா வர்றேன்னு மாப்பிள்ளை ஃபோன் பண்ணி சொல்லவும், எனக்கு அப்படியொரு கோபம் வந்தது. நீ எங்களுக்கு போன் பண்ணி ஊருக்கு வர்றேன்னு சொல்லாததில் இருந்தே, அங்க ஏதோ பிரச்சினைன்னு புரிஞ்சது.”

“இல்லம்மா. அது..”

“அப்பா நேத்து நைட் உன்னை கூப்பிட பஸ் ஸ்டாண்டு வர கிளம்பினார். நான்தான் போக வேணாம்னு சொன்னேன்.”

“ம்மா.. ஏன்மா?” என்றாள் அதிர்ச்சியுடன். 

“இன்னைக்கு உனக்காக அப்பா வந்து நின்னா, நாளைக்கும் அப்பா வந்து நிப்பார்னு எதிர்ப்பார்ப்ப இல்ல? அதுனால தான் அப்பாவை அனுப்பல. என்ன பிரச்சனையா இருந்தாலும் அங்கேயே நின்னு திடமா சமாளிக்காம, அதென்ன தனியா பிள்ளையை தூக்கிட்டு கிளம்பி வர்ற கெட்ட பழக்கம்?”

“என்னம்மா இப்படி பேசுறீங்க? எனக்காக நீங்க இருக்கீங்கன்னு நினைச்சேன்.” ஆதங்கத்துடன் சொன்னாள்.

“நீ எங்களுக்கு ஒரே மக சஹா. உனக்காக நாங்க எதையும் செய்ய தயாரா இருக்கோம். அதுக்காக, நீ இப்படி தனியா வரலாமா?”

“என்னைப் பத்தி உங்களுக்குத் தெரியாதா மா? பிரச்சனையை சமாளிக்க எனக்குத் தெரியாதா? எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு இல்லம்மா? எவ்வளவு நாள் தான் பொறுத்துப் போறது? அத்தை ரொம்ப பேசுறாங்க மா? இவர்.. இவர்..”

“சஹா, புகுந்த வீட்ல மட்டும் பொறுமைக்கு எல்லாம் எல்லையே இருக்கக் கூடாது. உங்க அத்தையை விடு, மாப்பிள்ளை உன்னை என்ன கொடுமை பண்ணார். அதைச் சொல்லு? சின்ன சின்ன விஷயத்துக்கும் உன் முகம் பார்த்து, உன் விருப்பம் தெரிஞ்சு, உன் சம்மதம் கேட்டு, உனக்காக எல்லாத்தையும் செய்யறாரே அதைத்தான் தப்பு சொல்றியா நீ?”

“ம்மா. அவர் எனக்காக என்ன செஞ்சுட்டார்? ஒன்னும் செய்யல. என்கிட்ட ஒழுங்கா பேசுறது கூட கிடையாது. எனக்காக அவங்க அம்மா கிட்டயும் பேசுறது கிடையாது”

“மனசாட்சி தொட்டு சொல்லு சஹா. உனக்காக மாப்பிள்ளை ஒன்னுமே செய்யலையா?” அழுத்தம் திருத்தமாக கேட்டார் புனிதா. அவரின் கண்களை சந்திக்க முடியாமல் தலைக் குனிந்தாள் சஹானா. 

“சத்யமூர்த்தி, உன்னை விரும்பிக் கல்யாணம் பண்ணிக்கிட்டார் சஹா. அதுக்காக உன் விருப்பத்துக்கு ஏத்த மாதிரி அவரை வளைச்சுட்டே இருக்கணும்னு நினைக்காத.”

“நான் அப்படி…” சஹானா தொடங்க, கை நீட்டி மகளைப் பேச விடாமல் செய்தார் புனிதா. 

“இது வாழ்க்கை பயணம் சஹா. நீ போற சுற்றுலா பயணம் இல்ல. நீ எல்லா நேரமும் டிராவல் பண்றதுக்கு முன்னாடி கையில ஒரு செக் லிஸ்ட் வச்சு, இது இருக்கா, இது எடுத்து வச்சாச்சான்னு சரி பார்க்கிற மாதிரி சத்யமூர்த்தியை பார்க்காத. எல்லா இடமும் டிக் அடிக்கணும்னு அவசியமில்ல. நிறை, குறை இரண்டும் நிறைஞ்சவன் தான் மனுஷன். நீ குறைகளை மட்டும் பூதக் கண்ணாடி வச்சுப் பார்க்கறன்னு எனக்குத் தோணுது.”

அம்மாவின் பேச்சை அதிர்ச்சியுடன் கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்தாள் சஹானா. 

“நீ மாசமான நாள்ல இருந்து, குழந்தை பிறந்து, இதோ இன்னைக்கு வரைக்கும்.. உனக்காக என்ன செய்யலை அவர்? நீயே சொல்லு? திருமண வாழ்க்கையில் யாராவது ஒருத்தர் விட்டுக் கொடுத்தா தான், வாழ்க்கை பாலன்ஸ்டா போகும் சஹா. ஆனா, அதை ஒருத்தரே எல்லா நேரமும் செய்யணும்னு அவசியமில்ல. அப்படி செஞ்சா வெறுத்துப் போய்டும். அவங்க அம்மா உன்னைப் பேசினா அவர் என்னப் பண்ணுவார்? அவங்க அம்மா கிட்ட உனக்காக எவ்வளவு தான் பேசுவார்? உனக்காக நீ தான் பேசணும் சஹா.”

“ம்மா, அத்தை ரொம்ப பேசுறாங்க மா.”

“சரி, அவங்க பேச இடம் கொடுத்தது யாரு? நீ தானே?”

“என்னம்மா, நீங்க இப்படி பேசறீங்க? இனம், ஊரு, உறவு, வரதட்சணைன்னு அவங்க பேசுறதை, நான் எப்படி மா தடுக்க முடியும்? எல்லாம் தெரிஞ்சு தானே எங்க கல்யாணத்துக்கு சரின்னு சொன்னாங்க? இப்போ அதையே குத்தமா சொல்லி சொல்லி காமிச்சுட்டு இருந்தா, நல்லாவா இருக்கு” கடுப்புடன் அவள் கேட்க,

“ஒன்னு அவங்களுக்கான சரியான பதில் கொடு. இல்லையா, கண்டுக்காம போ சஹா. அவங்க அப்படி பேசுறதால நீ எந்த விதத்திலயாவது குறைஞ்சுப் போய்ட்டியா என்ன?” புனிதா தீர்க்கமாக கேட்க,

“எப்படி மா கண்டுக்காம போக முடியும்? எத்தனை நாள் வலிக்காத மாதிரியே நடிக்க முடியும்? அப்பாவை பிச்சக்காரன்.. பிச்சக்காரன்னு எப்போ பார்த்தாலும் அத்த சொல்றதை.. என்னால தாங்கிக்கவே முடியல மா. இதுக்கு என்னனு பதில் கொடுக்க நான்?” சட்டென அவளின் குரல் உடைய, கண்களும் உடைந்தது. தாயின் தோளில் தன்னிச்சையாக சாய்ந்துக் கொண்டாள் சஹானா. 

மகள் சொன்ன வார்த்தைகளில் பலமாக அதிர்ந்து போன புனிதாவிற்கு பேச்சே எழும்பவில்லை. 

மகளின் குணத்தை நன்கு அறிந்தவர் அவர். அத்தனை எளிதில் யாரையும் குற்றம் சாட்டி விட மாட்டாள் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். மேலும், அவர்கள் மகளுக்கு நகை, சீர்வரிசை என அனைத்தையும் நிறைவாகவே செய்திருந்தனர். அதற்கு மேல் எதையும் செய்ய அவர்களை சத்யமூர்த்தி அனுமதிக்கவில்லை. 

மருமகனின் மறுப்பை மீறி எதையும் செய்யத் துணியவில்லை அவர்கள். அப்படியிருக்கையில் சுப்புலட்சுமி இப்படி பேசுகிறார் என்றால், என்ன செய்வது? 

“என்னாச்சு சஹா? ஏன் அப்படி பேசினாங்க?” பயத்துடன் மகளிடம் விசாரித்தார் புனிதா. 

“நேத்து ராதா அண்ணி வீட்டு கிரகப்பிரவேசம் பத்தி அவங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருந்தாங்க மா. அந்நேரம் நான் வெளில வரவும், என்னைப் பார்த்து அத்த ஜாடை பேசிட்டே இருந்தாங்க. நீங்க எனக்கு ஒன்னும் செய்யல. பாப்பாக்கு ஒன்னும் செய்யல. அது, இதுன்னு குத்திக் காட்டி பேசிட்டு இருந்தாங்க.

நான் காது கேட்காத மாதிரி என் வேலையை பார்த்திட்டு அமைதியா தான் மா இருந்தேன். ஆனா, என் பிள்ளை மாதிரி ஏமாளி கிடைச்சா, ஏய்க்க தான் சொல்லும். அவனை என்னமோ பண்ணி, ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டு வந்துட்டு, பிள்ளை பெத்து, அதுக்கு ஒத்த குண்டு மணி நகை கூட போட்டு வரல இவ. 

பிச்சக்காரன் கூட இன்னைக்கு தேதிக்கு கிலோ கணக்குல நகைப் போட்டு கல்யாணம் பண்ணிக் கொடுக்குறான். பேரன், பேத்தி பொறாந்தா கொடி, கொலுசுனு தங்கத்துல இழைக்கறான். இந்த பிச்சைக்கார குடும்பத்துக்கு அதுக்குக் கூட துப்பில்லன்னு உங்களை சொன்னாங்க மா” கேவியபடி மகள் சொல்ல, கோபத்தை அடக்கினார் புனிதா. 

காலம் காலமாக, வீட்டுக்கு வீடு நடக்கும் அதே கூத்து தான் என்றாலும், தன் மகளுக்கு என்று வரும் போது துடித்து தான் போனார் அவர். மேலும், கணவரை பேசிய பேச்சுகளை அவராலும் கூட தாங்கிக் கொள்ள இயலவில்லை. 

சத்தியமூர்த்தி திடீரென்று வந்து நின்று, மூன்று மாத குழந்தையுடன் இருந்த மனைவியை, அவசர அவசரமாக தாய் வீடு அழைத்துப் போய் இருக்க, பேத்திக்கு வாங்கியதை கொடுத்து அனுப்பக் கூட அவர்களுக்கு சந்தர்ப்பம் அமையவில்லை. அதன் பின்னர், அவர்கள் பொள்ளாச்சி சென்று பேத்தியை பார்த்து விட்டு, மகளிடம் அவளுக்காக வாங்கிய நகைகளை கொடுத்து விட்டு வந்தார்கள் தான். ஆனால், அதில் எல்லாம் சுப்புலட்சுமி அத்தனை எளிதாக திருப்தி பட்டு விடுவாரா என்ன? சமயம் கிடைக்கும் போதெல்லாம் மருமகளை சொல்லிக் காட்ட தவறியதில்லை அவர். 

அன்று தாய் வீட்டில் இருந்து அவதி அவதியாக புகுந்த வீடு அழைத்துச் சென்ற கணவனின் மேல் தான் சஹானாவின் கோபம் எல்லாம் திரும்பியது. 

“அவங்க பேசினா பேசிட்டு போறாங்க சஹா. அப்பா அதுனால பிச்சைக்காரன் ஆகிட போறது இல்லையே மோளே. இதுக்கா கோவிச்சுட்டு வந்த?” மகளின் கன்னம் வருடியபடி கேட்டார் புனிதா.

“சாரி மா” என்று மன்னிப்புடன் தொடங்கிய சஹானா, “நான்.. நானும் பதிலுக்கு பேசிட்டேன் மா” என்றாள் தயக்கத்துடன். சட்டென நிமிர்ந்து, மகளை விலக்கி, அவளின் முகம் பார்த்தார் புனிதா. 

மெல்ல தலையசைத்து, “யாரு பிச்சைக்காரன்? எங்கப்பாவா? இல்ல, நீங்களா? கல்யாணமான நாள்ல இருந்து எங்கப்பாவை இப்படியே சொல்லிட்டு இருக்கீங்க. எங்கப்பா எனக்காக என்ன செய்யாம இருக்கார்? இன்னும் என்ன செய்யணும்னு எதிர்ப்பார்க்கறீங்க?” மாமியாரின் முகத்துக்கு நேராக கத்தியிருந்தாள் சஹானா.

“நகை, பணம், பொருள், இடம்னு எங்க வீட்ல நீங்க கேட்டு கேட்டு வாங்குறதுக்கு பேர் தான் பிச்சை. அப்படிப் பார்த்தா நீங்க தான் பிச்சை எடுக்கறீங்க. எங்கப்பா, என்னைக்கும் உங்களுக்கு தானம் கொடுக்கற உயர்ந்த இடத்தில தான் இருக்கார். அவர், மகளை மட்டும் உங்க மகனுக்கு தானமா கொடுக்கல. கூடவே, பொன்னும், பொருளும் கொடுத்துட்டே தான் இருக்கார். கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம, மகனை காட்டி திரும்ப திரும்ப அவர்கிட்ட பிச்சை எடுக்கறது நீங்க தான். சோ, பிச்சைக்காரி அப்படின்ற பேர் பிடிக்காட்டி, உங்களுக்கு நீங்களே வேற ஒரு பேர் வச்சுக்கோங்க” ஆவேசமாக அவள் கத்த, அவள் பேச்சை கேட்டு ஆத்திரமடைந்த சுப்புலட்சுமி அவளை அடிக்க கை ஓங்கியிருந்தார். 

“தப்பு சஹா. நீ இப்படி பேசியிருக்க கூடாது. அவங்க பெரியவங்க கோபத்துல ஆயிரம் வார்த்தை விடலாம். ஆனா, நீ தவறி கூட, தெரியாம கூட இப்படியொரு வார்த்தை அவங்களைப் பார்த்து பேசியிருக்க கூடாது. எப்பவும் பேசும் முன்ன யோசிக்கணும் சஹா. அவங்க பெரியவங்க. உன் புருஷனோட அம்மா.. உன் மாமியார். அவங்களைப் போய் இப்படி பேசலாமா? ரொம்ப தப்பு டா” மகளுக்கு சாதகமாக பேச தோன்றவில்லை அவருக்கு. மகளின் தவறை சுட்டிக் காட்டும் நேர்மையான தாயாக மட்டுமே இருக்க விரும்பினார் அவர். 

“என்ன இருந்தாலும் நீ இப்படி பேசியிருக்க கூடாது” கண்டிப்புடன் சொன்னார்.

“சாரி மா. கோபத்துல யோசிக்காம பேசிட்டேன். இனிமே பண்ண மாட்டேன் மா. நான் அவங்க கிட்ட.. அத்த கிட்ட மன்னிப்பு கேட்கறேன் மா. பிராமிஸ். கண்டிப்பா சாரி சொல்லிடுவேன் மா. எனக்குத் தெரியும், நான் பேசினது தப்புனு. ஆனா, அவங்க அடிக்க கை ஓங்கினதும் கோபத்துல கிளம்பி வந்து…”

“நீ பதிலுக்கு அவங்களைப் போல பேசினதினால தானே, அவங்க அடிக்க வந்தாங்க. உன்கிட்ட அப்படியொரு வார்த்தையை எதிர்பார்த்து இருக்க மாட்டாங்க. அந்த அதிர்ச்சி தான் அடிக்க தூண்டியிருக்கு”

“சாரி ம்மா” குற்ற உணர்ச்சியுடன் சொன்னாள் சஹானா. 

 

“மாப்பிள்ளை கிட்ட நடந்ததை சொன்னியா?” புனிதா கேட்க மறுப்பாக தலையசைத்தாள் சஹானா. 

அவள் தான் கிடைத்தது காரணம் என்று கோபித்துக் கொண்டு கிளம்பி வந்து விட்டாளே. மாமியார், நாத்தனார் என வீட்டில் இருந்தவர்களுக்கே அவள் வீட்டை விட்டு வெளியேறியது தெரியாது. கணவனின் மேலும் கோபம் இருக்க, அவனிடமும் சொல்லிக் கொள்ளவில்லை அவள். இப்போது யோசிக்க தன் தவறு புரிந்தது அவளுக்கு. ஆனால், செய்து விட்ட தவறை திருத்த வழியில்லையே. தவறு செய்த சிறுமியாய் தாயின் முன் தலைக் குனிந்து அமர்ந்திருந்தாள் அவள்.

“மாப்பிள்ளை உன்கிட்ட நேத்து பேசினாரா?” புனிதாவிற்கு சட்டென மகளின் வாழ்வு குறித்த கவலைத் தொற்றிக் கொள்ள, கேள்வியாக அடுக்கினார் அவர்.

“நைட் பேசினார் மா. வீட்டுக்கு போய்ட்டியா கேட்டார். பாப்பா பத்தி கேட்டார்” குரலில் தடுமாற்றத்துடன் அவள் சொல்ல, 

“பாரு. பாரு. உனக்காக அந்த மனுஷன் எப்பவும் இறங்கி வரத் தான் செய்யறார். அதை உனக்கு சாதகமா எடுத்துட்டு ஆடுற நீ”

“இல்லம்மா..”

“என்ன இல்லம்மா? உங்க கல்யாணம் அப்பவே நான் சொன்னேன் தானே? சத்யமூர்த்தி சாதாரண விளையாட்டு பையன் இல்லைனு. அதையும் விளையாட்டா தான் எடுத்துக்கிட்டியா நீ? அவர் பேசலை, சிரிக்கலைனு சின்னப் பிள்ளை மாதிரி கம்ப்ளைன்ட் பண்ணிட்டு இருக்க நீ”

“நான் எப்போ மா அப்படி சொன்னேன்?” தாயிடம் ஒருநாளும் கணவனை குறைச் சொல்லியதில்லை சஹானா. இப்பொழுது அதிர்ச்சியுடன் அவள் கேட்க, “இங்க நம்ம வீட்ல வச்சே எத்தனை முறை அவரை, உங்களுக்கு பேசவே வராதா? சிரிக்கவே தெரியாதான்னு திட்டியிருப்ப? ஒன்னுமே செய்யாத மாதிரி முழிச்சு, கேள்வி கேட்கற இப்போ?” மகளின் மேலிருந்த கோபத்தில் சூடாக வந்து விழுந்தது அவரின் வார்த்தைகள்.  

கணவனை எல்லோர் முன்பும் பேசியிருக்கிறோம் என்பதே அவளை சங்கடத்தில் ஆழ்த்தியது. 

“சாரி மா” என்றாள் அழுகையில் துடித்த உதடுகளை பற்களால் கடித்து, கண் கலங்க அமர்ந்திருந்த மகளை கனிவாக பார்த்த புனிதா, “சரி, சரி. அழ கூடாது சஹா. எல்லாத்தையும் சரி பண்ணலாம். நான் அப்பாவை மாப்பிள்ளை கிட்ட பேச சொல்றேன். நீயும் அவர்கிட்ட பேசு.” அவளுக்கு ஆறுதலான பதிலை சொன்னார். 

“நீ இங்க ஒரு ரெண்டு நாள் இருந்துட்டு அப்புறம் பொள்ளாச்சி போகலாம். நானும், அப்பாவும் உன் கூட வர்றோம்” என்றவருக்கு மறுப்பு சொல்ல முடியவில்லை அவளால்.

Advertisement