Advertisement

ஆறு மாதங்கள் கழித்து,

“இன்னைக்கு நீ ஃபேக்டரி வரல, சஹானா?” 

தன் காலைக் கட்டிய மகளை கையில் தூக்கிக் கொஞ்சிய படி மனைவியிடம் கேட்டான் சத்யா.

“இல்ல, நீங்க கிளம்புங்க சத்யா. எனக்கு கொஞ்சம் பிளாக் வேலை இருக்கு” என்றபடியே தனது, “வேண்டர்லஸ்ட்” இணைய தளத்தில் முன் தின இரவு எழுதிய கட்டுரையை சரி பார்த்து வெளியிட்டாள் சஹானா. 

அத்தோடு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பயண காணொளி இணைப்புகளை பதிவேற்றினாள் அவள். 

சில சுற்றுலா நிறுவனங்களுடன் அவளுக்கு தொடர்பிருக்க, ஆயிரங்களில் வருமானம் வந்ததை, போதுமென்று பொன் மனதோடு ஏற்றுக் கொண்டாள் அவள். 

வீட்டை விட்டு வெளியில் வேலைக்கு சென்று தான், தன் திறமையை நிரூபிக்க வேண்டும் என்று இல்லாமல், கணவனின் தொழிலுக்கு உதவினாள். கணவன் அவளுக்கென ஒரு தொகையை வருமானமாக தர மறுக்காமல், தன் உழைப்புக்கு கிடைத்த மரியாதையாக பெற்றுக் கொண்டாள் அவள். 

அவளும் தொழிலை கவனிக்க தொடங்கியதில் இருந்து பாலகுமார் அடிக்கடி ஓய்வெடுக்க தொடங்கினார். நிரந்தரமாக தொழிலை மகனிடமும், மருமகளிடமும் ஒப்படைத்து விட்டு வீட்டில் இருக்கும் எண்ணத்தில் சமீப காலமாக இருந்தார் அவர். 

சுப்புலட்சுமி மாறவில்லை. ஆனால், யாரையும் மாற்றவுமில்லை அவர். 

அவர்கள் வீட்டில் மந்தமாருதம், மலையமாருதம் அடிக்கடியும், அவ்வப்போது சண்டமாருதமும் மாறி மாறி வீசிக் கொண்டிருந்தது. 

தென்றல் அடிக்கக் கூடாது. தழுவ வேண்டும், அது தான் சுகம் என்று அவருக்கு புரிந்திருந்ததும் அந்த வீட்டின் அமைதிக்கு முக்கிய காரணம். 

சஹானா வேலையை முடித்து, கணினியை நிறுத்தி, இருக்கையை பின்னுக்குத் தள்ளிவிட்டு எழுந்துக் கொண்டாள்.

“சத்யா” கணவனை அழைத்தாள்.

“ம்ம்”

“நாளைக்கு என்ன நாள் ஞாபகம் இருக்கா?”

“ம்ம்” ஒரு வயது மகளோடு அறைக்குள் நடைப் பயின்றபடி மனைவிக்கு ஆலாபித்துக் கொண்டிருந்தான் சத்யமூர்த்தி. 

“உங்களைத் தானே கேட்கறேன்” கத்தினாள் சஹானா. 

மகளிடம் கவனமாக, “கேட்குது. சொல்லு” என்றான்.

“ப்பா” அழைத்த மகளிடம், “தனு குட்டிக்கு என்னவாம்? அப்பா கூப்பிடுறாங்க? செல்லத்துக்கு என்ன வேணுமாம்?” மகளிடம் நீளமாக பேசியவனை இடுப்பில் கை வைத்து முறைத்தாள் மனைவி.

“என்ன?” மெல்ல நிமிர்ந்து, புருவங்கள் நெரித்து கண்களால் வினவினான். 

அவளுக்கு கோபத்தை அடக்கியதில் மூச்சு வாங்க, சத்யா சிரிப்பை மீசைக்கடியில் மறைத்தான். 

“நான் சொன்ன நேரத்துக்கு வந்துடுவீங்க தானே?”

“வந்துடுவேன்”

“வரலைன்னா?” அவள் முகத்தை உயர்த்தி சந்தேகமாக கேட்க,

“கால் பண்ணு” என்றான்.

“ஆ..” என்று அதிர்ந்தவள், “நீங்க போனை எடுத்து பேசிட்டு தான் மறுவேலை பார்ப்பீங்க. உங்களைப் பத்தி எனக்குத் தெரியாது பாருங்க?” என்று சலித்தாள். 

“எடுப்பேன்.”

“அப்போ நான் சொன்ன நேரத்துக்கு, நீங்க வர மாட்டீங்க? அப்படித் தானே?”

“வந்துடுவேன் சஹானா” அடர்த்தியான குரலில் அழுத்தமாய் சொன்னான். 

“சத்தியமாயிட்டு வருமோ” என்ற அவளின் கேள்வியில், அந்த மழலை மலையாளத்தில் ரசித்து சிரித்தான் சத்யமூர்த்தி. 

“நல்லா சிரிங்க. ஆனா, சொன்ன நேரத்துக்கு நீங்க வரலைன்னா, உங்களுக்கு இருக்கு” மிரட்டினாள். 

“தனு குட்டி, அப்பா வரட்டா?” கேட்ட அப்பாவிடம் காரில் நகர்வலம் செல்ல விரும்பித் தாவினாள் பிரார்த்தனா. 

“அப்பா ஈவ்னிங் வந்து உங்களை கூட்டிட்டு போறேன் செல்லம்” என்று கொஞ்சியவனை சஹானா முறைக்க, மகளின் கன்னத்தில் முத்தமிட்டு அறை வாயிலை நோக்கி நடந்தான் சத்யமூர்த்தி. 

“எனக்கும் கன்னம் இருக்கு” உதடு சுளித்து சொன்னாள் சஹானா. குறுஞ்சிரிப்புடன் கண் சிமிட்டி சென்றான் அவளின் சத்யா. 

மறுநாள் பிராத்தனாவிற்கு முதல் பிறந்தநாள் என்பதால், சஹானாவிற்கு வெளி வேலைகள் அதிகமிருந்தது. 

மகளின் முதல் பிறந்த நாளை வீட்டிலேயே எளிமையாக கொண்டாட விரும்பினான் சத்யமூர்த்தி. சஹானா சரியென்று விட்டாள்.

ஒரு வாரமாக அந்த ஏற்பாடுகளை தான் கவனித்துக் கொண்டிருந்தாள் சஹானா. கிட்டத்தட்ட அனைத்தும் வாங்கி, தயாராக வைத்திருந்தாள் அவள். 

விழாவிற்கு நாளை வீட்டிற்கு வரும் சின்ன குழந்தைகளுக்கு கொடுக்க பரிசு பொருட்களும், சாக்லேட்களும் வாங்க வேண்டியிருந்தது. மேலும், சஹானாவின் சேலைக்கான சட்டை இன்னும் தயாராகி இருக்கவில்லை. அதைச் சென்று வாங்க வேண்டும். இரண்டிற்காகவும் வெளியில் செல்லத் திட்டமிட்டிருந்தாள் அவள்.

மதியமே வீட்டு வேலைகளையும், எழுத்து வேலைகளையும் முடித்து, கணவனிடம் சொன்ன நேரத்துக்குள் மகளும், அவளும் தயாராகி நிற்க, சத்யமூர்த்தி வருவதற்கான அறிகுறியே தென்படவில்லை. 

“ப்பா, ப்பா” என்று ஜெபித்து கொண்டிருந்த மகளிடம், “உங்கப்பா இப்போ வந்துடுவார் செல்லம்” என்று சொல்லிக் கொண்டே அலைபேசியை எடுத்து கணவனை அழைத்தாள். 

அழைப்பு போய் கொண்டேயிருந்தது. சத்யமூர்த்தி அழைப்பை ஏற்கவில்லை. ஒன்று, இரண்டு, ஐந்து முறை அழைத்துப் பார்த்தாள். ம்ஹூம், பதிலில்லை. 

இப்போது மாதவனை அழைத்தாள் அவள்.

“மேம்” என்றவன், “சார், சூப்பர்வைசர் கிட்ட பேசிட்டு இருக்கார் மேம். எனித்திங் இம்பார்டன்ட் மேம்?” என்று அவன் பொறுப்பாக விசாரிக்க, “இல்ல, ஒன்னும் அவசரமில்ல. உங்க சார்கிட்ட நான் கால் பண்ணதை சொல்ல வேண்டாம். வேலைக்கு நடுவுல டிஸ்டர்ப் பண்ண மாதிரி இருக்கும். அதான். வேற ஒன்னுமில்ல. நான் வச்சுடுறேன்” என்று சொல்லி, மாதவன் பேச இடம் கொடுக்காமல் அழைப்பை துண்டித்தாள் சஹானா.

மேலும், அரை மணி நேரம் கடக்க அவனிடமிருந்து எந்த செய்தியும் வரவில்லை. 

“ஐ ஹேட் யூ” என்று ஆங்கில கொட்டை எழுத்துக்களில் அவனுக்கு செய்தி அனுப்பினாள் சஹானா. 

மகளிடம் திரும்பி, “தாத்தா காரை எடுத்துட்டு நாம கடைக்கு போய்ட்டு வரலாமா செல்லம்? நீங்க அம்மா கூட சமத்தா வருவீங்களா?” சஹானா கேட்க, கைக் கொட்டி சத்தமாக சிரித்தாள் பிரார்த்தனா. 

அம்மாவை போலவே பத்து நிமிட கார் பயணத்தையும் ரசிக்கும் குழந்தை அவள். அதுவும் அப்பாவுடனான பயணம் என்றால், அவ்வளவு தான். அவளைக் கையில் பிடிக்க முடியாது. அம்மாவை போலவே அப்பாவுடனான நேரங்களில் அதிகம் மகிழ்வாள் அவள். மகளை ஏமாற்ற விரும்பாமல் கணவனுக்காக காத்திருக்கத் தொடங்கினாள் சஹானா.  

நேரம் அதன் போக்கில் கடந்துக் கொண்டிருந்தது. 

அம்மா, மகள் இருவரும் வெளியில் செல்ல அணிந்த உடையுடன் விளையாடத் தொடங்கினார்கள். 

மகளுடன் விளையாடினாலும், சஹானாவின் மனது கணவனிடம் தான் இருந்தது. அவளுக்கு கோபம் தன் இருப்பை மெல்ல காண்பித்து, வளர்ந்து கிளைகள் பரப்பத் தொடங்கியது. 

நொடிகள், நிமிடங்களை விழுங்கி, நிமிடங்கள், மணி நேரமாக மாறத் தொடங்கியது. 

“சத்யா, இன்னைக்கு இருக்கு உங்களுக்கு” சினந்தாள் சஹானா. 

கையில் அலைபேசியை எடுத்து மீண்டும் கணவனை அழைத்தாள். அழைப்பு முழுவதுமாக அடித்து ஓய்ந்து நிற்க, அதை தன் வழக்கம் போல ஏற்கவில்லை சத்யமூர்த்தி.

“சத்யா” என்று சஹானா சத்தமாக கத்த, சரியாக அந்நேரம் அறைக் கதவை மூச்சு வாங்க திறந்து உள்ளே வந்தான் அவன். 

சஹானா அவனை முறைக்க, பிரார்த்தனா தளிர் நடைப் போட்டு, அப்பாவின் காலைப் பிடித்து தூக்கச் சொல்ல, பதற்றத்துடன் தலைக் கலைத்து கோதிக் கொண்டான் சத்யா. மெல்ல குனிந்து மகளைக் கையில் தூக்கிக் கொண்டு, ஒற்றைக் கையால் மனைவியை அருகில் இழுத்தான்.

“மிண்டா பிராணி. கையை எடுக்கு. இல்லெங்கில் கொன்னு களையும்” சஹானா கோபத்தில் கத்த, அவனோ ரசித்து சிரித்தான். 

“ஏற்கனவே என்னை கொல்ற தான்” என்று அவளின் காதில் கிசுகிசுத்து கன்னத்தில் இதழ் உரசினான். 

“ப்பா” என்று சத்தமாக அழைத்த மகளின் கன்னத்தில் முத்தமிட்டு சமாதான உடன்படிக்கையை சட்டென செய்தான் அவன். 

“அப்போ நானு? நானும் கோபமா தான் இருக்கேன்” சஹானா சொல்ல, புன்னகைத்தான் சத்யமூர்த்தி. அந்தப் புன்னகை அனிச்சையாய் அவளையும் தொற்றியது. பெற்றோரைப் பார்த்து பிரார்த்தனா சத்தமாக சிரிக்க, சஹானாவும், சத்யமூர்த்தியும் மகளோடு இணைந்து சிரித்தனர். 

அது நிலைத்திருக்கும்!

நிறைவுற்றது!

சுபம்!

Advertisement