Advertisement

சஹானா முதலில் மகளோடு அறைக்குள் வந்திருந்தாள். மகளுக்கு பசியாற்றி, உடல் துடைத்து, உடை மாற்றி தூங்க வைக்க முயற்சித்து கொண்டிருந்தாள் அவள். 

பிரார்த்தனா, அம்மாவை பார்த்து சிரிப்பதும், படுக்கையில் உருள்வதும், தவழ முயற்சிப்பதும் பின்னர் எழுந்து அமர்வதுமாக வித்தைக் காட்டிக் கொண்டிருந்தாள்.

“அம்மாவுக்கு தூக்கம் வருது தங்கமே. இப்படி ஆட்டம் காட்டிட்டு இருக்கியே உனக்கே நல்லா இருக்கா?” சஹானா புலம்பலாக கேட்க, வாயில் வண்டி ஓட்டி சிரித்தாள் மகள். 

அனிச்சையாக மகளின் சிரிப்பு அவளையும் தொற்ற, சிரித்து, மகளை இறுக்கி கன்னத்தில் முத்தமிட்டாள் சஹானா. 

“இப்ப செல்லக் குட்டி சமத்தா தூங்குவீங்களாம்” என்றபடி அவள் பாலூட்ட முயற்சிக்க, மார்பில் முட்டி மறுப்பை தெரிவித்து வெளியில் எட்டிப் பார்த்தாள் குழந்தை. 

குளியல் அறையை திறந்துக் கொண்டு அப்பா வருவதைப் பார்த்ததும், சீழ்க்கை அடித்து எச்சில் ஒழுக சிரித்தாள் அவள். 

மனைவியை பார்த்துக் கொண்டே ஈர துண்டை, பால்கனியில் சென்று போட்டு விட்டு வந்த சத்யமூர்த்தி இரவு உடையை அணிந்துக் கொண்டு, மகளைத் தூக்கினான். 

“ம்ம்” என்று சலித்து உதடு சுழித்தாள் சஹானா. 

“என்ன?” என்று கண்களால் வினவி, அவளைப் பார்த்தான் சத்யா.

“எப்பவும் பொண்ணு தான் ஃபர்ஸ்ட் பிரையாரிட்டி” கோபத்துடன் முணுமுணுத்தாள். அவளின் சிறுபிள்ளை தனத்தில் சத்தமில்லாமல் சிரித்தான் சத்யா. அதைக் கண்டுக் கொண்டவள், முகத்தை திருப்பிக் கொண்டு படுக்கையில் சரிந்தாள். 

அவனுக்கு முதுகு காட்டி அவள் படுத்திருக்க, மனைவியை கண்டுக் கொள்ளாமல் மகளிடம் திரும்பினான் சத்யமூர்த்தி. 

“செல்லத்துக்கு தூக்கம் வரலையா? தனு குட்டிக்கு விளையாடணுமா?” அவன் மகளை கொஞ்ச, இங்கே மிஞ்சிக் கொண்டிருந்தாள் மனைவி.

“எனக்கு தூக்கம் வருது” மனதில் சொல்லிக் கொண்டு கண்களை மூடினாள். கடந்த இரு நாட்களின் சம்பவங்கள் அவள் மனதில் வரிசையாக வலம் வரத் தொடங்கியது. 

சஹானா ஒற்றை மகளாக, பெற்றோருக்கு செல்ல மகளாக வளர்ந்தவள். 

அதீத கவனிப்பு இருந்த அதே நேரத்தில் கண்டிப்பு, கண்காணிப்பு என்று எல்லா பெற்றோரையும் போல தான் அவள் பெற்றோரும் அவளை நடத்தினார்கள். 

அவள் விருப்பத்தை நிறைவேற்றும் நேரம், தேவையில்லாததை மறுக்கவும் தவறியதில்லை அவர்கள். அவளுக்கு பிடித்த படிப்பு, பயணம் என இருந்தவளின் வாழ்க்கையையும் அவளுக்கு பிடித்த விதமாகவே அமைத்துக் கொடுத்தார்கள் அவர்கள். 

சஹானா முதலில் சத்யமூர்த்தியின் தோற்றத்தில், கம்பீரத்தில் தான் ஈர்க்கப்பட்டாள். அவனைப் பற்றிய மற்ற தகவல்கள் எல்லாம் பின்னால் பெற்றோர் சொல்லி அறிந்து கொண்டாள். அவ்வளவே. 

அவன் தன்னை விரும்பி மணக்க கேட்டான், தன் முன்னிருந்த தடைகளை உடைத்து தன்னை மணந்தான் என்பதில் அவளுக்கு அதீத கர்வம் இருக்கத் தான் செய்தது. 

பெற்றோரை பிரிந்து அவனோடு வாழ்க்கையை தொடங்கியவளுக்கு கணவனின் மேலான எதிர்பார்ப்புகள் கொஞ்சம் அதிகம் தான். அந்த எதிர்ப்பார்ப்புகள் ஏமாற்றங்களாக மாறிய போது கோபத்தில் கொஞ்சம் இல்லை அதிகமாவே எதிர்வினையாற்றி விட்டாள் அவள். 

இப்போது அவனது சமாதானத்தில் குளிர்ந்தும், நெகிழ்ந்தும் இருந்தாள். 

பொள்ளாச்சி செல்வதற்கு மனதளவில் தயாரானாள். மாமியாரை மட்டுமல்ல, வாழ்க்கையை கூட சரியாக கையாள முடியும் என்ற ஞானோதயமும், பக்குவமும், முதிர்ச்சியும் அவளுக்கு இப்போது வந்திருந்தது. எல்லாம் காலம் கற்றுத் தந்த பாடம். 

நினைவுகளில் உழன்ற அவளின் சிந்தையை உறக்கம் மெல்ல மெல்ல நெருக்கத் தொடங்கியது. அவளின் மகளும் அப்பாவின் கையில் கண்ணயர்ந்திருந்தாள்‌. மகளை தொட்டிலில் இட்டு, போர்வை போர்த்தி விட்டு தானும் படுக்கைக்கு வந்தான் சத்யமூர்த்தி. 

“சஹானா” மென்மையாய் அழைத்தான். அதில் சஹானாவின் உறக்கம் விலகியோடி விட, அப்படியே படுத்திருந்தாள் அவள். 

“சஹானா” 

ம்ஹூம், சற்றும் அசையவில்லை அவள்.

“சஹானா” ஐந்தாவது முறையாக அழைத்தான். 

“சஹானா… அப்படியே நீட்டி முழக்குங்க” எரிச்சலுடன் கத்தினாள். 

“பேரை சொல்லி தானே கூப்பிட முடியும்?” 

“ஏன் சஹா சொன்னா ஆகாதா?” அவள் கடுப்புடன் கேட்க, 

“எல்லோரும் சொல்றதை நானும் ஏன் சொல்லணும்?” என்று சரியாக கேள்விக் கேட்டான் சத்யா. 

“உங்களை..” பல்லைக் கடித்துக்கொண்டு மீண்டும் திரும்பிப் படுத்தாள் அவள். 

“சஹானா” இம்முறை பத்து முறைக்கும் மேலே அழைத்து விட்டான். அவள் துளி கூட மதிக்கவில்லை. உடல் இறுக, வீம்பாக முதுகு காட்டி படுத்திருந்தாள். 

“சஹானா” ஒரே இழுப்பில் அவளை தன் மார்புக்கு கொண்டு வந்திருந்தான் சத்யமூர்த்தி. 

“பேசலைன்னா எப்படியிருக்கும்னு உங்களுக்கு இப்போ புரியுதா?” கண்ணை விரித்து, தலையை ஆட்டியபடி கேட்ட மனைவியை ரசனையுடன் பார்த்தான் சத்யமூர்த்தி. 

“அப்போ, நான் பேசல சொல்றியா?”

“இல்லையா, பின்ன? மிண்டா பிராணி. அப்படியே பக்கம் பக்கமா பேசினது போல தான் கேட்கறீங்க”

“பக்கம் பக்கமா இல்ல. ஆனா, பக்கத்தில் இருந்து தான் பேசினேன். உனக்கு புரிஞ்ச மாதிரி தெரிஞ்சது. இல்லையா?” அவன் கேட்க, கணவனை கண்ணை சுருக்கி சந்தேகமாக பார்த்தாள் சஹானா. 

“புரிய வைக்கவா?” கிசுகிசுத்தான். அந்த குரலில் உடலும், மனமும் சிலிர்க்க கணவனின் மார்பில் குத்தினாள் சஹானா. 

“தள்ளிப் போங்க.” கோபமாக சொன்னவளை புருவங்கள் நெரித்து பார்த்தான் சத்யா. 

அவன் மேல் சட்டமாக தான் தான் படுத்திருக்கிறோம் என்பதை அவள் உணர்ந்து விலகப் போகும் நேரம், மனைவியை இறுக்கி அணைத்தான் சத்யமூர்த்தி.

“விடுங்க சத்யா” என்ற சஹானா, தன் பேச்சிற்கு மாறாக கணவனின் காதலில் கரைந்துக் கொண்டிருந்தாள். 

“பேசுறதே கிடையாது. எப்பவும்” அவன் கண்களைப் பார்த்து அவள் சொல்ல பேசினான் அவன். 

அவன் விழிகள் பேசியது, விரல்கள் பேசியது. 

இமைகள் பேசியது. இதழ்கள் பேசியது.

மூர்க்கம் தொலைத்தவனின் மூச்சுக் காற்றும் பேசியது.

இரவு பேசாமலேயே இனிமை சேர்த்தது. 

அவனுக்கு நேர்எதிராக சஹானா பேசிக் கொண்டேயிருந்தாள். 

“சத்யா” என்று சிணுங்கினாள், சிலிர்த்தாள், உயிர்த்தாள். 

மனைவியை பார்த்து கண் சிமிட்டி, எழுந்து சென்றான் அவன். 

குளியல் அறையில் இருந்து வெளியில் வந்து, தொட்டிலில் உறங்கும் மகளை ஒரு முறை பார்த்து விட்டு வந்து படுக்கையில் சரிந்தான் சத்யமூர்த்தி.

அவனிடம் நாக்கை துருத்தி ஒழுங்கு காட்டி விட்டு திரும்பிப் படுத்தாள் சஹானா. மென்நகையுடன் மனைவியையும், உறக்கத்தையும் சேர்த்தே தழுவினான் சத்யமூர்த்தி.

மறுநாள் காலை உணவின் போது, “உன்னை இப்படி பார்க்க சந்தோஷமா இருக்கு சஹா” என்றார் புனிதா.

“கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டா, நம்ம பொண்ணு, மாமியார் வீட்ல சந்தோஷமா இருக்கான்னு தெரிஞ்சாலே மனசு நிம்மதியாகிடுது. இல்ல, புனிதா?” முரளிதரன் கேட்க, “ம்ம். ஆமாங்க.” என்றார் புனிதா. 

உலகின் பெரும்பான்மை பெற்றோரை போல தான் தாங்களும் என சொல்லாமல் சொன்ன பெற்றோரை புன்னகையுடன் பார்த்தாள் சஹானா. புகுந்த வீட்டின் அத்தனை சோதனைகளையும் பெண்கள் பொறுத்து போவது இதற்காக தானே. பெற்றோருக்கு வருத்தம் தரக் கூடாது. அவர்களுக்கு பாரமாக வீட்டில் வந்து அமர்ந்து விடக் கூடாது. சமூகத்தின் முன் பெற்றோரை தலை குனிய விடக் கூடாது என்று எத்தனை எத்தனை காரணங்கள். அத்தனையும் மீறி தான் வாழ்ந்து காட்ட வேண்டியிருக்கிறது. புகுந்த வீட்டில் தனக்கு துடுப்பாக கிடைப்பதை, பற்றிக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ பழகிக் கொள்கிறாள் பெண் என்று நினைத்தாள் சஹானா. 

கணவனின் அன்பும், துணையும் அவளுக்கு இருக்க, தான் எதற்கும் அஞ்சத் தேவையில்லை என்று திடமாக நம்பினாள். மேலும், பிரச்சனைகளை சந்திக்க, அவளுக்கு வாழ்க்கை இப்பொழுது வாழ்க்கை பாடம் எடுத்திருந்ததே. 

அவள் திடமாக நிமிர்ந்து அமர, அந்நேரம் குழந்தையுடன் உணவு மேஜைக்கு வந்தான் சத்யமூர்த்தி. 

“தனு குட்டி தவழ டிரை பண்றா. அதான் கையில தூக்கினா அழுறா” அனைவருக்கும் பொதுவாக சொல்லியபடி மகளைப் பார்த்து சிரித்தான் சத்யா. 

கணவனை கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சஹானா. 

அன்று மாலை, “நாம ஊருக்கு கிளம்பலாம் சத்யா. ராதா அண்ணி வீட்டு விசேஷத்துக்கு போகணும் இல்ல? உங்களுக்கு ஃபேக்டரி வேலை இருக்கும்” என்று சொன்னாள் சஹானா. 

“நாளைக்கு போகலாம்” என்றவன், “இன்னும் கோபமா இருக்கியா?” என்று சேர்த்துக் கேட்டான். 

“ம்ம், கோபமா தான் இருக்கேன்” என்றாள் அவனைப் பாராமல்.

“என்ன பண்ண சமாதானமாவ?”

“உங்களுக்குத் தெரிஞ்சிருக்கணும்” இப்போது அவன் கண்களை பார்த்துச் சொன்னாள். அவன் கண்களில் குழப்ப ரேகைகள். 

“ஓகே” என்றான் அசட்டையாக. 

“அதானே பார்த்தேன். சத்யமூர்த்தி, சஹானாவை சமாதானம் பண்ணிட்டாலும்..” சத்தமாக சலித்து கொண்டே அறைக்குள் நுழைந்தாள் அவள்.

அன்றிரவே பெற்றோருக்கு பிரியா விடை கொடுத்து, கணவனுடன் பொள்ளாச்சி திரும்பினாள் சஹானா. 

“பிரார்த்தனா குட்டியை ரொம்ப மிஸ் பண்ணுவேன்” பேத்தியை பிரியும் வருத்தத்தில் புலம்பினார்கள் அவளின் பெற்றோர். 

முன்பு மகள், இப்போது மகளின் மகள் என முக்கியத்துவம் மாறிக் கொண்டே வருவதை வியப்புடன் கவனித்தாள் சஹானா. 

கணவனும் அப்படித் தானே என்று யோசிக்க, சிரிப்பு வந்தது. 

சத்யமூர்த்தி மனைவியிடம் அன்பாக இருந்தாலும், மகள் மேலான அவன் பாசம் அலாதி தானே.

அதை நினைத்தபடியே அவள் காரில் சாய்ந்து கண்களை மூட, சில நொடிகளில் இயல்பாக வேகத்தை குறைத்தான் சத்யமூர்த்தி. 

அவர்கள் வீடு சென்றதும், “வாம்மா” என்றார் மாமனார். சுப்புலட்சுமி அவளிடம் வந்து குழந்தையை வாங்கிக் கொண்டார். 

“நான் இவளை குளிக்க வைக்கறேன். நீங்க ரெண்டு பேரும் போய் குளிச்சிட்டு வாங்க. சாப்பிடலாம்” என்றார் அவர். 

வீடு சாதாரணமாக அவர்களை வரவேற்றது. வாழ்க்கை அமைதியாக நகரத் தொடங்கியது. 

மறுவாரத்தில் ராதா வீட்டு கிரக பிரவேசம் உறவுகள் சூழ, சிறப்பாக நடந்து முடிந்திருந்தது.

அங்கு மகன், தங்கைக்கு சீரை விமர்சையாக செய்ததைப் பார்த்து மனமகிழ்ந்து போனார் சுப்புலட்சுமி. 

நகை, பணம், அவர்கள் குடும்பத்திற்கு புத்தாடைகள், பரிசு பொருட்கள் என மகன் வழங்கியதின் பண மதிப்பை கணக்கிட விரும்பவில்லை அவர். அத்தனை மனம் குளிர்ந்து போய் இருந்தார். 

அம்மாவின் பார்வைக்காக எதையும் செய்யவில்லை சத்யமூர்த்தி. தன் தங்கைக்காக செய்தான் அவன்.

இப்போது மனைவிக்காக செய்ய வேண்டிய கடமையும் அவனுக்கு இருக்க, வீடு திரும்பியதும் அவள் முன் சென்று நின்றான். 

கணவனை உணர்ந்து, “என்ன சத்யா?” என்று கேட்டாள் சஹானா. 

அவன் கண்களில் சிரிப்பின் சாயல். “கோபம் போச்சா?” என்று கேட்டான் அவன்.

“ம்ஹூம்” என்றாள். 

“அப்படியா?” என்றான் மனைவியின் தோளில் கைப் போட்டு, “கையை எடுங்க” அவன் மார்பில் கை வைத்து தள்ளி விட்டாள் அவள். சிரிப்புடன் அப்படியே படுக்கையில் விழுந்தான் சத்யமூர்த்தி. 

இரண்டு நாட்கள் கழித்து, மாலை வீட்டுக்கு வந்தவன், “சஹானா மூணு நாளைக்கு ட்ரெஸ் எடுத்து வச்சுட்டு, சீக்கிரம் கிளம்பு” என்று அவளை அவசரப்படுத்தினான். 

பிரார்த்தனா தரையில் நீச்சல் அடித்து தவழ முயற்சித்து கொண்டிருக்க, மகளுக்கு துணையாக தானும் தரையில் படுத்திருந்த சஹானா, கணவனை விசித்திரமாக பார்த்தாள். 

“என்ன சத்யா திடீர்னு?” அவள் கேட்க, “உங்கம்மா வீட்டுக்கு போறோம்” என்றான் அவன்.

“ஃபேக்டரி?” 

“எல்லாம் நான் பார்த்துப்பேன். நீ எழுந்திரு” என்றவன், குனிந்து மகளை தூக்கினான். 

அவன் மகளை கவனிக்க, சஹானா அவனிடம் சந்தேகத்துடன் கேள்விக் கேட்டுக் கொண்டேயிருந்தாள்.

“வாய், வாய். பேசாம கிளம்பு” அவன் குரலில் காரமிருக்க, குளிர்ந்தாள் சஹானா.

ஒரு மணி நேரத்தில் வீட்டில் சொல்லி விட்டு பயணத்தை தொடங்கினார்கள். ஆறு மணி நேரத்தில் வண்டிப் பெரியார் சென்று அவளின் பெற்றோரையும் காரில் ஏற்றிக் கொண்டு மீண்டும் அவர்கள் பயணத்தை தொடர, சஹானா பெற்றோர் முன்பு கணவனிடம் கேள்விகள் கேட்க முடியாமல் திணறினாள். 

முகத்தை திருப்பி கண்களால் அவனிடம் விசாரித்தாள். அவன் கண்டுக் கொண்டால் தானே. 

“ரொம்பத்தான்” முணுமுணுத்து இருக்கையில் சாய்ந்தவளின் முகத்தில் தென்றல் இதமாய் வருட, பயண அலுப்பில் கண்கள் சொருக உறக்கத்தில் ஆழ்ந்தாள் அவள். 

“சஹானா” கணவனின் அடர்த்தியான குரலில் மெல்ல விழித்து, “ப்ச், தூங்க விடுங்க சத்யா. தூங்கும் போது எழுப்பறதையே வேலையா வச்சுட்டு இருக்கீங்க” சிணுங்கினாள். 

“கண்ணை திற சஹானா” மீண்டும் கிசுகிசுத்தான் சத்யா. 

“உங்களோட” என்று சலித்து கண்ணைத் திறந்தவளின் கண்களில் விழுந்தான் காதலும், கனிவுமாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்த கணவன். 

அவள் இதழ்கள் தாமாக புன்னகையில் பிரிய, கண்கள் கணவனுக்கு பின்னே பார்த்து, நொடியில் விரிந்தது.

“சத்யா” அதிர்ச்சியும், ஆச்சரியமும் போட்டி போட கத்தினாள் சஹானா. 

எப்போதும் போல, “என்ன?” என்றான் கண்களால். ஆனந்த அதிர்ச்சியில் அவளுக்கு பேச்சே வரவில்லை. மனைவியின் கைப் பிடித்து கீழிறக்கி விட்டான் சத்யமூர்த்தி. அவளோ, அவன் விரல்களுடன் தன் விரல்களை கோர்த்துக் கொண்டாள். 

அவர்களுக்கு முன்னே சஹானாவை விட அதிகமாக ஆர்ப்பரித்து, அவள் மனதின் மகிழ்ச்சியை போலவே குதித்து இறங்கி, அவளின் பேச்சை போலவே சலசலத்து ஓடிக் கொண்டிருந்தது மாங்குளத்தின் பிரம்மாண்ட அருவி. 

“பாப்பா எங்க?” 

இயற்கையின் அழகில் மயங்கினாலும், மகளை விசாரித்த மனைவியை சிரிப்புடன் பார்த்த சத்யா, “ரிசார்ட்டில் இருக்காங்க. பாப்பா நல்லா தூங்கறா. எழுந்தா கால் பண்ண சொல்லியிருக்கேன். பத்து நிமிஷ ட்ரைவ் தானே? போய்டலாம்” என்று அவன் சொல்லி முடிக்கவும், அவனை இழுத்துக் கொண்டு அருவியை நோக்கி கிட்டத்தட்ட ஓடினாள் சஹானா. 

ஆள் அரவமற்ற காட்டில், பேரழகுடன் பெருகி ஓடி வந்து கொண்டிருந்தது அருவி. அங்கு அவர்கள் இருவர் மட்டுமே இருந்தனர். அருவி கரையில் இருந்த சிறிய தேநீர் கடையில் பெண்ணொருவர் இருந்தார். அவரும் தொலைக்காட்சியில் மூழ்கியிருந்தார். 

“நீ குளி. நான் இங்க நிக்கறேன்” என்றவனை கோபத்துடன் முறைத்தவள், தன் பலம் மொத்தத்தையும் திரட்டி ஒற்றை இழுப்பில் அவனை உள்ளே இழுத்துக் கொண்டாள். 

அருவி பாரபட்சமின்றி இருவரையும் நனைத்தது. 

பயணங்களையும், இயற்கையையும் நேசிப்பவள், இப்பொழுது அதே தீரா காதலுடன் கணவனையும் நேசித்தாள். 

அரை மணி நேரம் கழித்து வெளியில் வந்தார்கள். மிளகு கொடிகள், காஃபி, தேயிலை தோட்டங்கள், கோகோ மரங்கள் என்று எங்கும் கண்ணை நிறைக்கும் இயற்கை வளம் செழித்திருந்தது. 

“தாங்க்ஸ் சத்யா” என்றாள் கணவனிடம். புன்னகைத்தான். 

சஹானாவிற்கு அடுத்து வந்த இரு நாட்களும் இயற்கை எழிலிலும், கணவனின் காதலிலும் கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்து போனது. 

பிரார்த்தனா அவளின் தாத்தா, பாட்டியுடன் பக்கத்து அறையில் இருந்தாள். 

தம்பதிகள் மாலை தேநீருடன் அறையை ஒட்டிய பால்கனியில் ஓய்வாக அமர்ந்திருந்தனர்.

சஹானா கணவனை மௌனமாய் பார்த்தபடி அமர்ந்திருந்தாள். அவனுக்கு பின்னே எல்லையில்லாமல் நீண்டிருந்தது கண்ணுக்கு குளிர்ச்சியாக இயற்கை. 

அவள் கண்களை நிறைத்தவனும் அந்த இயற்கையை போன்ற இயல்புடையவன். அவனுடனான வாழ்க்கையும் அப்படிப்பட்டதே. ஆழ்ந்த அமைதியும், சமயங்களில் சலசலப்பும், பெரும்பாலான நேரங்களில் எதிர்பாராத இனிமையும் கொண்டது. 

அவள் ஆர்ப்பரிக்கும் அருவி என்றால், அவன் சலனமில்லா நதி. இரண்டும் இயற்கை தானே? இரண்டும் இயல்பு தானே? 

இரண்டும் ரசிக்கக் கூடியது தானே? 

எல்லாம் பார்க்கும் பார்வையை பொறுத்து தானே?

“அழகென்பது பார்க்கும் கண்களில் இருக்கிறது” என்பார்கள். அழகு மட்டுமல்ல, வாழ்க்கையும் நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில் தானே இருக்கிறது? சஹானா தன் எண்ணவோட்டத்தை மட்டுமல்ல, கண்ணோட்டத்தையும் மாற்றிக் கொண்டாள். கணவனுக்காக, தனக்காக, மகளுக்காக. தங்களின் குடும்பத்திற்காக. 

வாழ்க்கையின் நிறைவென்பது நம் மகிழ்விலும், நமை சார்ந்தோரின் மகிழ்விலும் தானே இருக்கிறது?

“சஹானா” அழைத்தான் சத்யா. சிரித்தாள். மனைவியின் சிரிப்பில் நிறைந்தான் சத்யமூர்த்தி. 

Advertisement