Advertisement

சஹானாவின் மனதில் மெல்லிய பதற்றம் இருந்தாலும் கூட அதை வெளியில் காண்பித்து கொள்ளவில்லை அவள். 

சுப்புலட்சுமி அறைக்குள் நுழைந்து மருமகளை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்து விட்டு, திரும்பி மகளை நன்றாக முறைக்க, அவர்கள் பேசியதை எல்லாம் அவர் கேட்டிருக்கிறார் என்று உணர்ந்து கொண்டாள் சஹானா.

அம்மாவிடம் சொன்னதற்காக மட்டுமின்றி, தன் மனதிற்கும் நியாயம் என்று பட்டு வலியுறுத்தியதால் மாமியாரை நெருங்கி, “சாரி அத்த” என்றாள். அவரின் பார்வை அவளின் அறையை அசுவாரசியமாக அலசிக் கொண்டிருந்தது. 

“நான் அப்படி பேசியிருக்கக் கூடாது. சாரி” மீண்டும் அவள் சொல்ல, அதற்கு கர்வமான தலையசைப்பு மட்டுமே அவரிடம் இருந்து பதிலாக வந்தது. 

அவர்கள் இருவரும் பேச தனிமை கொடுக்க விரும்பி, ராதா மெல்ல அங்கிருந்து நழுவப் பார்த்தாள். சஹானாவின் விழிகள் விரிந்து அவளை உரிமையுடன் எச்சரிக்க, அப்படியே நின்று விட்டாள் ராதா. 

“எல்லாம் பெரிய மனுஷங்க ஆகிட்டீங்க. பெரிய பெரிய பேச்செல்லாம் பேசுறீங்க. பெரிய முடிவுகள் எல்லாம் எடுக்கறீங்க” சுப்புலட்சுமி குரல் உயர்த்தாமல் சொல்ல, மகளும், மருமகளும் ஒன்று போல அவரைத் திரும்பிப் பார்த்தனர். 

“நீ யார்கிட்டயும் சொல்லிக்காம கிளம்பி போற அளவுக்கு நம்ம வீட்ல அப்படி என்ன கொடுமை உனக்கு நடந்துடுச்சு? நான் பேசுறது உனக்கென்ன புதுசா?” அவர் கேட்க, இப்போதும் அதே போல கொஞ்சமும் மாறாமல் பேசும் அவரை அதிர்ச்சியுடன் பார்த்தாள் சஹானா.

“கொஞ்சம் கூட பொறுப்பில்லாம பால் குடிக்கிற கைக் குழந்தையை தூக்கிட்டு வீட்டை விட்டு கிளம்பினது நீ. ஆனா, அதுக்கு இவளும், உன் புருஷனும் என்னைப் பேசுறாங்க. எல்லாம் ஒரே நாள்ல, அம்மாவை பேசுற அளவுக்கு பெரிய மனுஷங்க ஆகிட்டாங்க” ராதாவை பார்வையால் சுட்டிக் காட்டி சொன்னார் அவர். உச்சரித்த வார்த்தைகளில் கடுமை இருந்தாலும், அவர் குரலில் அது கொஞ்சமும் இல்லை.  

அவருக்கு பெற்ற பிள்ளைகளின் பார்வையில் கீழிறங்கி போனதில் சொல்ல முடியா வருத்தமிருந்தது. 

ஆனால், அதற்காகவெல்லாம் தன் நிலையில் இருந்து ஒரு படி என்ன, ஒரு அடி கூட எடுத்து வைக்க அவர் விரும்பவேயில்லை. 

விரும்பவில்லை என்று சொல்வதை விட, அவரால் முடியவில்லை என்றே சொல்லலாம். மாற்றம் ஒற்றை நாளில் எப்படி வரும்? 

மன மாற்றங்கள் அத்தனை எளிதில்லையே!

அவர் அன்பை மட்டுமே அளவில்லாமல் அளித்து வளர்த்த பிள்ளைகள், இப்போது அவரிடம் வெறுப்பின் சாயலை காண்பிக்கும் போது அவரால் அதைத் தாங்கிக் கொள்ளவே இயலவில்லை. 

மருமகளிடம் தொடர்ந்து தான் இப்படியே நடந்துக் கொண்டால், அவள் மனதை நோகடித்தால், மகன் தன்னை முற்றிலும் வெறுத்து விடுவான். மேலும், வீட்டின் அமைதியும், நிம்மதியும் மட்டுமல்ல, தன் மக்களும் தன்னை மதிக்க மாட்டார்கள் என்பதை நேற்றே தெரிந்துக் கொண்டார் அவர். 

“நான் அப்படி சொல்லிக்காம வந்தது தப்பு தான் அத்த” சஹானா சொல்ல, தன் எண்ணங்களில் இருந்து கலைந்து மருமகளை பார்த்தார் அவர். 

“இப்போ, என்ன நான் மன்னிப்பு கேட்கணும்னு எதிர்பார்க்கறியா?” வீம்பாக முறைத்து அவர் கேட்க, “அச்சோ இல்லத்த” என்று சஹானா பதறி பதில் சொல்ல, “அம்மா” என்று பல்லைக் கடித்து எச்சரித்தாள் ராதா. 

இருவரையும் கவனிக்காமல் பார்வையை அங்கிருந்த பேத்தியின் தொட்டிலில் பதித்து, “என் பையன் சந்தோஷத்துக்காக தான் இதுவரை எல்லாமே பண்ணேன். என் பிள்ளைங்க நல்லா இருக்கணும்னு நினைக்கிற ஆள் நான். அதுனால மட்டும் தான் உன்னை அவன் கல்யாணம் பண்ண கேட்டப்போ, எனக்குப் பிடிக்கலைன்னாலும், அவனுக்காக சரின்னு சொன்னேன்.” என்றவர், திரும்பி அவளை நேராகப் பார்த்து,

“இப்பவும் சொல்றேன். என் ஒரே பையனுக்கு எங்க பக்கத்தில, எங்க அளவுக்கு வசதியான, தொழில் குடும்பத்தில பெண்ணெடுக்கறது தான் என் ஆசையா இருந்துச்சு. ஆனா, அவன் ஒரேடியா நின்னுட்டான். உன்னைத் தவிர யாரையும் பார்க்க முடியாது சொல்லிட்டான். எனக்கு நீ வேற ஊர், இனம் இதெல்லாம் எப்பவும் மனசுல இருக்கும். மாத்திக்க நினைச்சாலும், மறக்க முடியாத விஷயம் அது” என்று சொல்லி, சலிப்புடன் உச் கொட்டினார் அவர். 

இத்தனை மனம் திறந்து பேசிய மாமியாரை சற்றே ஆச்சரியத்துடன் கூர்ந்தாள் சஹானா. 

“உன் புருஷனுக்கு என்ன? சொந்தக்காரன் எல்லாத்துக்கும் நான் தானே பதில் சொல்றேன். இனி மேலும் சொல்வேன். அப்போ என் கோபம் எப்படி குறையும் சொல்லு?” அவர் கேட்க, பதிலில்லை அவளிடம். 

“உன்கிட்ட மன்னிப்பு கேட்கப் போறதில்ல நான். அதே போல இனி மேல் உன்னை வருந்த வைக்கிற மாதிரி பேச மாட்டேன் மா, அப்படினு பொய்யா வாக்கும் கொடுக்கப் போறதில்ல. வீட்ல சங்கடம் எதுவும் வராம இருக்கப் பார்க்கறேன். அவ்ளோ தான் என்னால சொல்ல முடியும்” அந்த வார்த்தைகளில் மெலிதான புன்னகை சஹானாவின் இதழ்களில் தோன்றி மறைந்தது.

“இதையே என் மகனுக்காக தான் பண்றேன். உனக்காக இல்ல. அப்புறம் இதையே காரணம் வச்சுட்டு அம்மா வீட்ல உட்கார்ந்துக்காம வீடு வந்து சேரு.” என்றார் ஆணையாக. 

“ஏன் மா, இப்படி பேசுற?” ராதா ஆதங்கத்துடன் கேட்க,

“இங்க பாரு ராதா. இதுல நீ தலையிடாத. இது எனக்கும், இவளுக்குமான பிரச்சனை. நீ இடையில் வராத” கோபமாக மருமகளை கைக் காட்டி சொன்னவர், “உன் அண்ணனுக்காக அம்மா நிறைய விட்டுக் கொடுத்துட்டேன். இதுக்கு மேல முடியாது. ஏன் மா, இப்படியிருக்கன்னு கேட்டா, என்ன சொல்ல? இதான் நான். என்னால மாற முடியாது. எனக்காக உங்க அண்ணியை மாற சொல்லு. நம்ம வீடு நிம்மதியா இருக்கும்” சுப்புலட்சுமி சொல்ல, ராதா அம்மாவை முறைக்க, சஹானா சிரிப்பை மறைத்தாள். 

அவளுக்கு சில உறவுகள் இப்படித் தான் என்று நன்றாக தெரியும். ஒருவருக்காக மற்றவர் மாறுவதெல்லாம் நடை முறையில் நடக்காத ஒன்று என்று அவளுக்கு அனுபவம் பாடம் கற்றுத் தந்திருந்தது. 

சிலரின் குண இயல்பு அப்படித் தான் எனும் போது எதிர்பார்ப்புகள் எதார்த்தமற்றது. 

“என் வயசுக்கு என்னால இவ்வளவு தான் இறங்கி வர முடியும்.” என்றவர், மருமகளை திரும்பிப் பார்த்து, 

“பேத்தியை கூட்டிட்டு வீட்டுக்கு வா. என்ன, நான் சொல்றது கேட்குது தானே?” என்று கேட்க, “சரிங்க அத்த” என்றாள் சஹானா சாந்தமாக. 

கணவன் தனக்காக எத்தனையோ விஷயங்களை செய்திருக்க, அவனுக்காக தங்கள் குடும்பத்தின் அமைதியை குலையாமல் காக்க தன்னால் ஆனதை செய்வதென முடிவு செய்திருந்தாள் அவள். 

“அங்க வந்ததும் என் பிள்ளையை கூட்டிட்டு தனியா போகலாம்னு‌‍ எல்லாம் நினைக்காத. அது என்னைக்கும் நடக்காது. நடக்க விட மாட்டேன் நான்.” 

“இல்லத்த..”

“என்ன தான் இன்னைக்கு உன் பேச்சை கேட்டாலும், என் பிள்ளைக்கு எப்பவும் என் மேல பாசம் அதிகம் இருக்குனு எனக்குத் தெரியும். இப்பவும் நான் சொன்னா அவன் கேட்பான். அதுனால, தனிக் குடித்தனம் போகற ஐடியா இருந்தா, அதை இங்கேயே தலை முழுகிட்டு நம்ம வீட்டுக்கு வா, சொல்லிட்டேன்” 

மாமியாரின் பேச்சு கோபம் வரச் செய்தாலும், பொறுமையை இழுத்துப் பிடித்தாள் சஹானா. 

“தனிக் குடித்தனம் போகிற ஐடியாவே அவங்களுக்கு கிடையாது மா. ஆனா, நீ இப்படியே பேசிட்டு இருந்தா கண்டிப்பா தனிக் குடித்தனம் போய்டுவாங்க” ராதா கோபமும், கேலியுமாக அம்மாவிடம் சொல்ல, “உனக்கும் வாய் கூடிடுச்சு” என்று மகளை முறைத்தார் சுப்புலட்சுமி. 

“என் பொண்ணு வீடு கட்ட, என் பையன் என்னல்லாம் செஞ்சான்னு எனக்கு நல்லா தெரியும். பணம் மட்டுமில்ல, அது தவிரவும் நிறைய உதவி பண்ணியிருக்கான் தான். அது அவன் கடமையும் கூட. அவன் தங்கச்சிக்கு அவன் தானே செய்யணும்? எங்களுக்கு அடுத்து அவளுக்கு, அவன் தானே எல்லாம்? நீயே சொல்லு?”

“அம்மா…”

“பேசாம இரு ராதா” மகளை அதட்டி, மருமகளிடம், “இப்பவும் ராதா வீட்டு கிரக பிரவேஷத்துக்கு நீங்க நகை, ஜவுளின்னு நிறைய வாங்கி இருக்கீங்க. நானும் பார்த்தேன். பணமும், பரிசும் கொடுப்பீங்க. அதுவும் எனக்குத் தெரியும். அதுக்காக நான் சமாதானம் ஆகிடுவேன்னு, எதிர்பார்க்காத” அசையாமல் நின்றாள் சஹானா. கண்களில், முக அசைவில் கூட உணர்ச்சிகளை வெளிக்காட்டி விடவில்லை அவள்.

“என் பேச்சுக்கு எல்லாம் யாரும் பயப்பட வேணாம். நாளைக்கு நான் எப்படி நடந்துப்பேன்னு எனக்கே தெரியாத போது, உங்களுக்கு எப்படி நான் உத்திரவாதம் தர முடியும்? பார்ப்போம்” என்று இருவரையும் பார்த்து நிதானமாக சொன்னவர், “நீ வா, ராதா. நாம கிளம்பலாம்” என்றார். 

மருமகளை ஒரு முறை திரும்பிப் பார்த்து விட்டு மகளோடு வெளியேறினார் அவர். 

அவர்கள் சென்றதும் அப்படியே பொத்தென்று படுக்கையில் அமர்ந்தாள் சஹானா. அவள் மனதில் எவ்வளவோ பயந்திருக்க, பிரச்சனை ஒன்றுமே இல்லாமல் முடிந்தது அவளுக்கு அத்தனை ஆசுவாசத்தை தந்தது. 

அந்நேரம் அறைக்குள் நுழைந்த சத்யமூர்த்தி நேராக மனைவியிடம் வந்தான். அவன் இடுப்பின் ஒரு புறமும் கைக் கோர்த்து கட்டிக் கொண்டு, அவன் வயிற்றில் முகம் புதைத்தாள் சஹானா. 

அந்த கணம் அவர்களை சூழ்ந்திருந்த அமைதி, அவளுக்கு தேவையாய் இருந்தது. 

சில நிமிடங்களுக்கு பிறகு, “சஹானா” என்றான் சத்யமூர்த்தி. வெளியில் மகளின் அழுகையும் சேர்ந்து கேட்க, சட்டென கணவனிடம் இருந்து விலகி எழுந்து கொண்டாள் சஹானா. 

இரண்டு குடும்பங்களும் நடந்ததை ஒட்டு மொத்தமாக மறந்து விட்டு இயல்பாக பேசிக் கொண்டிருந்தனர். அனைவருக்கும் அடி மனதில் வருத்தம் இருந்தாலும் யாரும் அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. 

அவர்களோடு சஹானாவும் சேர்ந்து கொள்ள நேரம் பறந்திருந்தது. 

இரவு உணவை முடித்து ஓய்வாக அமர்ந்திருந்தனர்.

“அப்போ நாங்க கிளம்பறோம். இப்ப ஸ்டார்ட் பண்ணா தான் காலையில வீடு போக சரியா இருக்கும்” பாலகுமார் சொல்லிக் கொண்டே எழ, அவரைப் பின் தொடர்ந்து மற்றவர்களும் எழுந்தனர். 

“நாளைக்கு போகலாம் இல்லையா சம்மந்தி” முரளிதரன் கேட்க, 

“ஃபேக்டரி, செக்கு, தென்னந்தோப்பு வேலைகள் எக்கச்சக்கமா இருக்கே. எல்லாம் நாம போய் தானே பார்க்கணும். மாப்பிள்ளைக்கு வீடு கிரக பிரவேச வேலைகள் வேற இருக்கு. அவங்க போய் அதைப் பார்க்கணும். அதனால, இன்னொரு முறை நிதானமா வர்றோம். நீங்க தப்பா எடுத்துக்க வேணாம்” அவர் சொல்ல, “அதுவும் சரி தான். பார்த்து கவனமா போங்க” என்றார் முரளிதரன். 

“சத்யா, நீங்க பொறுமையா ரெண்டு நாள் இருந்துட்டு வாங்க பா” பாலகுமார் மகனிடம் சொல்ல, சிறிய தலையசைப்பை பதிலாக தந்தான் அவன். 

“டிரைவர் கூட்டிட்டு வந்திருக்கலாம் இல்லப்பா?” அவன் கேட்க,

“ஆறு மணி நேரம் தானே மச்சான். நான் மேனேஜ் பண்ணிப்பேன்” என்றான் மோகன். 

“உன் குடும்பத்தை கூட்டிட்டு சீக்கிரம் வீட்டுக்கு வந்துடு தம்பி” மகனின் பக்கத்தில் வந்து சொன்னார் சுப்புலட்சுமி. 

“தங்கச்சி வீட்டு பால் காச்சு வேற இருக்கு. அதான் சொன்னேன்” என்று அவர் சொல்ல,

“சரிம்மா” என்று முடித்துக் கொண்டான் சத்யமூர்த்தி. 

சஹானா அனைவரிடமும் இயல்பாக பேசி விடைக் கொடுத்தாள். பிரார்த்தனாவிற்கு எந்தவித கோபமும், வருத்தமும் இல்லாத காரணத்தினால் எல்லோருக்கும் சிரிப்பை தாராளமாக வழங்கி, ஒவ்வொரு கையாக தாவிக் கொண்டிருந்தாள். 

சத்யமூர்த்தி குடும்பம் கிளம்பி விட, அவர்கள் வீட்டிற்குள் வந்தனர். சஹானாவின் பெற்றோர் மகளிடமும், மருமகனிடமும் பொதுவாக பேசிக் கொண்டிருந்து விட்டு உறங்கச் சென்றனர்.

Advertisement