Advertisement

சத்யமூர்த்தி மனைவியை புரிந்தே இருந்தான். இப்பொழுது ‌அவளுக்காக பேச வேண்டிய கடமையும் அவனுக்கிருக்க, தன் இயல்பை உடைத்து, வெளிவந்து பேசினான் அவன். 

“நான் தெரியாம…” சுப்புலட்சுமி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, சமாளிக்க முயன்றார். 

ஆனால், “அம்மா, பிளீஸ்” என சட்டென தன் குரலை உயர்த்தினான் மகன். 

“ராதா மாமியார், இப்படி பண்ணா என்னப் பண்ணுவீங்க?” அங்கிருந்த தங்கையை பார்வையால் சுட்டிக் காட்டி அவன் கேட்க,

“என் பொண்ணுக்கு ஏன் அப்படி ஒரு நிலைமை வரப் போகுது” முணுமுணுத்தார் சுப்புலட்சுமி. 

சுருசுருவென்று சத்யாவின் கோபம் உயர, இறுகிப் போனான் அவன்.

“அப்போ என் பொண்டாட்டிக்கு அப்படியொரு நிலைமை வரலாமா மா? அதுவும் என் வீட்ல?” அவன் கேட்க, முகத்தைத் திருப்பினார் சுப்புலட்சுமி.

“நீங்க எதிர்பார்க்கிற மாதிரி, ராதா மாப்பிள்ளை எதிர்பார்த்தா என்ன பண்ணுவீங்க மா?” 

“அப்பா எனக்கு தெரிஞ்சு எப்பவும், எல்லா இன்வெஸ்ட்மெண்ட்டும் உங்க பேர்ல தான் பண்ணார். நாங்க வளர்ந்து வரவும் எங்க பேர்ல வாங்கிப் போட்டார். அதே போல நான் என் பொண்டாட்டி பேர்ல இடம் வாங்கினா தப்பா மா?”

“உங்களால ஏன் அவளை ஏத்துக்க முடியல?”

“அவளை வீட்ல வச்சு நீங்க பேசுறது கூட ஓகே? வெளில அவ உங்க மருமக இல்லையா மா? அவளை எப்படி விட்டுக் கொடுத்து பேசுவீங்க?”

“அவளை கை ஓங்கி அடிக்கப் போய் இருக்கீங்க? எனக்கு நினைவுத் தெரிஞ்சு நீங்க என்னையே கை நீட்டி அடிச்சது இல்லம்மா. ராதாவை அடிச்சு இருக்கீங்களா நீங்க? இல்லை தானே? ஆனா, என் பொண்டாட்டியை அடிக்க போய் இருக்கீங்க? ஏன் மா?” சத்யமூர்த்தி கேள்விகளாக அடுக்க, கோபமும், அதிர்ச்சியும், மகன் தன்னை எதிர்த்து கேள்வி கேட்பதை ஏற்றுக் கொள்ள முடியாத அயர்ச்சியுமாக அவனைப் பார்த்தாரே தவிர பதில் ஒன்றும் சொல்லவில்லை சுப்புலட்சுமி. 

“இதென்ன புது பழக்கம் லட்சுமி? நீயா, இப்படிப் பண்ண? மருமகளை அடிக்கப் போனியா?” அதிர்ச்சியுடன் கேட்டார் பாலகுமார். சமீபமாக மனைவியின் மாற்றம் அவருக்கும் பிடிக்கவேயில்லை.

கணவரின் கேள்வியையும் கஷாயத்தை போல கடக்கென்று விழுங்கி அமைதியாய் அமர்ந்திருந்தார் சுப்புலட்சுமி. அவரைச் சுற்றியிருந்த கணவன், மகன், மகள் என அனைவரின் முகமும் அவர் மேலான கோபத்தை காண்பிக்க, அலட்டிக் கொள்ளவில்லை அவர்.

எல்லா தவறு செய்பவர்களை போலவே அவரும் நிமிர்வாய் அமர்ந்திருந்தார். 

சத்யமூர்த்திக்கு தன் இயல்பை மீறி அதிகம் பேசியதே மூச்சடைக்க வைத்தது. 

“என்ன நடந்தாலும் சஹானா தான் என் பொண்டாட்டி. அது மாறாது” அமைதியாய், அழுத்தமாய் அனைவரையும் பார்த்துச் சொன்னான் அவன்.

“என்ன பேசுற தம்பி நீ?” பாலகுமார் மகனைத் திரும்பிப் பார்த்துக் கேட்க, “அம்மா அதை மாற்ற நினைச்சாலும், நடக்காது பா” முடிவாக சொன்னான்.

“ஊரு, இனம், குணம்னு, அவளைப் பிடிக்காம போனதற்கு ஆயிரம் காரணம் வேணாலும் உங்க பக்க நியாயமா நீங்க சொல்லலாம். ஆனா, அவளைப் பிரிய எனக்கு எந்த காரணமும் இல்ல. அவளே பிரிய நினைச்சு, விவாகரத்து கேட்டா கூட கொடுக்க மாட்டேன் நான்” தெளிவாக, தீர்க்கமாக தன் முடிவை சொன்னான் சத்யமூர்த்தி.

“என்னப்பா தம்பி, நீயும் இப்படி வார்த்தைகளை விட்டுட்டு இருக்க? இந்த பேச்சு கொஞ்சமும் சரியில்ல” பாலகுமார் கடிந்துக் கொள்ள, “அதை அம்மாகிட்ட சொல்லுங்க” என்றான் அவன். 

சுப்புலட்சுமி வாயை திறக்காமல் இலக்கின்றி பார்வையை எங்கோ பதித்து இறுக்கமாக அமர்ந்திருந்தார்.

சத்யமூர்த்தி அதற்கு மேல் அங்கு நில்லாமல் தன் அறையை நோக்கி நடந்தான். ராதா கண்கள் கலங்க அம்மாவை, அண்ணனை மாறி மாறிப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். 

ஐந்தே நிமிடங்களில் பயணப் பையுடன் வெளியில் வந்த மகனைப் பார்வையாலேயே கேள்விக் கேட்டார் பாலகுமார். அவனோ வீட்டை விட்டு அவசரமாக வெளியேறி கொண்டிருந்தான்.

“என்னப்பா சத்யா? இந்நேரம்?” கேள்வியை முடிக்காமல் அவர் மகனைப் பார்க்க, அவரின் பின்னாலேயே ஓடி வந்த ராதா, அண்ணனின் முகத்தை கவலையுடன் பார்த்தாள்.

“வண்டிப் பெரியார் போறேன் பா.” என்றான் காரை நோக்கி நடந்துக் கொண்டே. 

ராமன் இருக்கும் இடம் தான் சீதைக்கு அயோத்தி என்றால், சஹானா இருக்குமிடம் தான் சத்யமூர்த்தியின் வாழ்க்கை என்ற அவனின் முடிவை மறைமுகமாக சொல்லி விட்டு காரில் ஏறினான் அவன். 

“மனசை போட்டு குழப்பிக்காம, கவனமா வண்டி ஓட்டு தம்பி” அப்பாவாக அக்கறையுடன் எச்சரித்தார் அவர். 

“ம்ம்” என்றான். திடீரென்று ஏதோ தோன்றியவனாக, “கல்யாணமான புதுசுல, அம்மாகிட்ட இருந்து அவளைக் காப்பாத்த தனிக் குடித்தனம் போவோம் சொன்னேன். வேணாம் சொன்னா அவ. இன்னைக்கு என்னை விட்டே அவளைப் போக வச்சுட்டாங்க.” ஆதங்கத்துடன் அவன் சொல்ல, அந்த இடத்தை நிறைத்தது அமைதி.

மகன் எங்கு செல்கிறான் என்றுப் பார்க்க வெளியில் வந்த சுப்புலட்சுமி, அவன் பேச்சைக் கேட்டு, நெஞ்சை பிடித்தபடி அதிர்ந்து சுவரில் சாய்ந்தார். 

“வர்றேன் ப்பா.” மறுகணம் அந்த வீட்டு வாயிலை தாண்டியிருந்தது அவன் கார். 

பாலகுமாரும், ராதாவும் திரும்பி வீட்டுக்குள் வந்தனர். 

“நாளைக்கு உங்க அண்ணி வீட்டுக்கு பத்திரிக்கை வைக்கப் போறோம். மாப்பிள்ளை எப்போ போகலாம் கேட்டார் இல்ல? அவர் கிட்ட சொல்லிடுமா” பாலகுமார் மகளிடம் சொல்ல, வேகமாய் தலையசைத்தாள் அவள். 

“இரு. நானே போன் பண்ணி சொல்றேன்” என்று அலைபேசியை கையில் எடுத்தார் அவர். 

சோஃபாவில் கண்கள் எங்கோ நிலைக்குத்தி நிற்க, மனம் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்க, அசையாமல் அமர்ந்திருந்தார் சுப்புலட்சுமி.

இரண்டு மணி நேரங்கள் கழித்து, “சாப்பிட வாங்க மா” என்று ராதா அவரை அழைக்க, “நாளைக்கு உங்க அண்ணி வீட்டுக்கு நானும் வர்றேன் ராதா” என்றார் அவர். 

ராதா திடுக்கிட்டு அப்பாவை திரும்பிப் பார்த்தாள். மகளிடம் புன்னகைத்து தலையசைத்தார் அவர்.

மறுநாள் அவர்கள் கிளம்பும் போதே தானும் அவர்களுடன் இணைந்து கொண்டார் சுப்புலட்சுமி.

ராதா சொல்லி முடித்து சஹானாவைப் பார்க்க, கலவையான உணர்வுகளில் கண்டுண்டு கண் மூடி அமர்ந்து விட்டாள் அவள். 

கணவனுக்கு தன் மேல் அன்பில்லை என்று எத்தனையோ முறை குற்றம் சாட்டியிருக்கிறாள் அவள். இன்று அவன் பகிரங்கமாக அனைவரின் முன்பும் அவள் மேலான அன்பை பறை சாற்றி விட்டு வந்திருக்க, அவள் மனம் நெகிழ்ந்து போனது. 

அவன் மேலான அன்பும், காதலும், கர்வமும் கூடித் தான் போனது. 

“புகுந்த வீடு எல்லோருக்கும் நல்லதா அமையறது இல்லண்ணி. என் மாமியாருக்கு கொஞ்சம் எதிர்ப்பார்ப்பு, நிறைய ஆசை உண்டு. ஆனா, என்னை அவங்க கொடுமைப்படுத்தினது கிடையாது. அப்பப்போ ஏதாவது குத்தி பேசுவாங்க. அதையே அம்மாவால தாங்கிக்க முடியாது. ஆனா, எங்க அம்மாவே அதை விட மோசமா உங்ககிட்ட நடந்துக்கறதை பார்க்கும் போது எனக்கு என்ன சொல்லன்னே தெரியல அண்ணி. எங்கம்மா கேட்பாங்களா தெரியல. ஆனா, நான்..”

“பிளீஸ் வேண்டா அண்ணி” நாத்தனார் மன்னிப்பு கேட்கப் போவதை உணர்ந்து உடனே தடுத்தாள் சஹானா. 

“எங்கம்மா இனிமே எப்படி நடந்துப்பாங்க, மாறுவாங்களா? எனக்குத் தெரியல. ஆனா, எங்களை, எங்க அண்ணாவை நீங்க நம்பலாம். அண்ணா உங்களை நல்லா பார்த்துப்பார். அவரை உங்களை விட யாருக்கு நல்லா தெரியும்? சொல்லுங்க” ராதா கேட்க, “எனக்கு அவர் மேல எந்த கோபமும் இப்போ இல்ல அண்ணி” தெளிவாக சொன்னாள் சஹானா. 

அவளுக்கு இன்னமும் அதிர்ச்சி விலகவில்லை. கணவன் இத்தனை பேசினானா என்ற ஆச்சரியமும் அவளை விட்டு அகலவேயில்லை. 

ராதாவிடம் என்னவெல்லாமோ சொல்ல நினைத்தாள். ஆனால், பேச்சு வந்தால் தானே? அந்த நிமிடம் மௌனமாய் அமர்ந்திருந்து தான் சத்யமூர்த்தியின் மனைவி என்று நிரூபித்தாள் அவள்.

சிறிய இடைவெளிக்கு பிறகு அங்கிருந்த தண்ணீரை எடுத்து அருந்தி விட்டு, ராதாவிற்கும் அதைக் குடிக்க கொடுத்தாள். 

மெதுவாக தொண்டையை செருமி சரி செய்து, “என் மேலயும் ரொம்ப தப்பிருக்கு ராதாண்ணி. நான் அத்தையை அப்படி பதிலுக்கு பதில் பேசியிருக்க கூடாது. அவங்க வயசுக்கு மரியாதை கொடுத்து இருக்கணும். இவரோட அம்மாங்கிற மதிப்பை அவங்களுக்கு நான் கொடுத்திருக்கணும். தப்பு பண்ணிட்டேன்.” என்றாள் நேர்மையுடன். 

“இனிமே என்னை மாற்ற முடியாது. ஆனா, அத்தையோட எதிர்பார்ப்பு எனக்குப் புரியுது. அதை என்னாலயும், எங்க அம்மா, அப்பாவாலயும் நிறைவேத்த முடியாது. எங்களால செய்ய முடியாததை, அத்தையோட ஆசைக்காக மட்டும் எப்படி செய்ய முடியும்? நாங்க இவ்ளோ தான்.”

“என்னால செய்ய முடிஞ்சது எல்லாம் அத்தைக்கு சங்கடம் வராம, நான் இவ்வளவு நாள் ஒதுங்கி போன மாதிரி இனி மேலும் அவங்க பேச்சை மனசுல ஏத்திக்காம கடந்து போய்டுவேன். முடியுமா தெரியல. ஆனா, கண்டிப்பா டிரை பண்ணுவேன். எனக்கு அவர் முக்கியம். நம்ம குடும்பம் முக்கியம். அதுக்கும் மேல ஏதாவது நடந்தா பார்த்துக்கலாம்” என்று சொன்னவளை புதிதாக துளிர்த்த மரியாதையுடன் பார்த்தாள் ராதா. 

“நான் பேசினதுக்கு கண்டிப்பா அத்தைக்கிட்ட மன்னிப்பு கேட்பேன். அவங்க என்கிட்ட பேசவே விரும்பலைன்னாலும் கேட்பேன்” தீர்க்கமாக சொன்னாள். 

மற்றவர்களுக்காக நாம் ஏன் நம் இயல்பை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது தான் அவளின் எண்ணமாக இருந்தது. மாமியாரிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், தன் மனசாட்சியே தன்னை குற்றவாளியாக்கி கேள்விக் கேட்கும் என்பதை உணர்ந்தாள் அவள்.

அன்றைக்கு கோபத்தில் அவள் பேசியதில் ஒரு நியாயம் இருந்தால், இன்றைக்கு மன்னிப்பு கேட்க நினைப்பதிலும் ஒருவித நியாயம் இருக்கத் தானே செய்கிறது. 

“இல்லண்ணி” என்ற ராதாவை கை நீட்டி தடுத்த சஹானா, “இல்ல. மன்னிப்பு கேட்கலைன்னா நான் ரொம்ப கில்ட்டியா ஃபீல் பண்ணுவேன்.” என்று உணர்ந்து சொன்னாள். 

அந்நேரம், “ம்க்கும்” என்று வந்த சத்தத்தில் இருவரும் படக்கென்று திரும்ப, அறை வாயிலில் அவர்களையே பார்த்தபடி நின்றிருந்தார் சுப்புலட்சுமி. 

“வாங்க அத்த” நிர்மலமான முகத்துடன் வரவேற்றாள் சஹானா.

Advertisement