Advertisement

சஹானா மனதில் சட்டென ஒரு திடுக்கிடல். சத்யமூர்த்தி அவளுக்காக பல முறை பேசியிருக்கிறான் தான். ஆனாலும், இப்படி நேரடியாக அம்மாவிடம் அவன் பேசுவது அரிது. 

அம்மாவின் மேல் அவனுக்கிருந்த அதிருப்தியை, கோபத்தை பல முறை, அப்பாவிடம் தெரிவித்து இருக்கிறான் அவன். சில முறை ஓரிரு வார்த்தைகளில் அம்மாவிடமே வெளிப்படுத்தியும் இருக்கிறான் தான். ஆனால், நேரடியாக மனைவிக்காக எதிர்த்து நின்றது இது தான் முதல் முறை. 

“ஒரு நிமிஷம் ராதா அண்ணி” என்று கை நீட்டி நாத்தனாரை மேலே பேச விடாமல் செய்தவள், ராதா மடியில் இருந்த மகளையும் கைகளில் அள்ளிக் கொண்டாள். 

“இப்போ வந்துடுறேன்” என்று சொல்லி, அறைக் கதவை திறந்து வெளியேறினாள். 

பிரார்த்தனா அம்மாவின் கன்னத்தை தன் பிஞ்சுக் கரங்களால் பற்றி இழுக்க, சிலிர்த்து சிரித்தாள் சஹானா. 

“என்ன செல்லம்?” என்று அவள் கேட்கவும், அம்மாக்கு பொக்கை வாய் மலர்ந்து சிரிப்பொன்றை சிந்தினாள். 

“ஆள் மயக்கி. அப்படியே அப்பாவை போல” சொல்லிக் கொண்டே திரும்பியவளின் கண்களில் விழுந்தான். அங்கே ஒற்றைக் காலை உயர்த்தி வைத்து, சுவரில் சாய்ந்து, கம்பீரமாக நின்று கொண்டிருந்த சத்யமூர்த்தி. சஹானாவின் சத்யா. 

“என்ன?” என்றான், கண்களால். வாய் பேச்சின்றி புருவங்கள் நெரித்து, கண்களால் அவன் விசாரிக்க, மெலிதான சிரிப்புடன் மகளை அவனிடம் நீட்டினாள் சஹானா. 

சத்யமூர்த்தி ஹாலின் இறுதியில் நின்றிருந்தான். அங்கிருந்து பார்க்க நடுக்கூடத்தில் அமர்ந்திருந்த வீட்டினர் அனைவரும் அவர்கள் பார்வையில் விழுந்தனர். ஆனால், வீட்டில் இருந்து பார்த்தால், சத்யமூர்த்தி நிற்கும் இடம் தெளிவாக தெரியாது எனும் படியான அமைப்பை கொண்டிருந்தது அந்த கேரளத்து பாணியிலான வீடு. 

சஹானா தலைச் சாய்த்து கணவனைப் பார்த்தாள். அவன் கண்களோ கையில் இருந்த மகளையும், அருகில் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த தங்கை மகன் தருணின் மேலேயும் மாறி மாறி வலம் வந்து கொண்டிருந்தது. 

சஹானாவிடம் முன்தினம் வீட்டில் நடந்ததை ராதா சொல்ல ஆரம்பிக்கவும் அதைக் கேட்காமல், அவள் எழுந்து வந்ததற்கு காரணம், கணவன் தனக்காக ஒன்றை செய்து தான், தன் மனம் மாறியது என்று இருக்கக் கூடாது என்று அவளுக்கு உறுதியாக தோன்றியது. 

என்றைக்கும் சஹானா ராகத்தின் ஆலாபனை சத்யமூர்த்தி. அவனின் ஆலாபனை இல்லாமல் நிறைவு பெறாது அவர்களின் காதல் பாட்டு. சஹானா ராகத்திற்கு நிச்சயமாய் இனிமைக் கூட்டியது, நடுநடுவே வரும் சத்யமூர்த்தியின் ஆலாபனைகள் தான். அவளின் பாடலுக்கு வரும் ஆலாபனை அவன்.

கணவனின் மேல் கணக்கில்லாமல் புகார்கள் அவளுக்கு இருந்தாலும், அவன் மேல் காதல் அதை விட அதிகமாக இருந்தது. அதை அந்த கணம் வெளிப்படுத்தியே ஆக வேண்டும் என்ற உந்துதலை உதறித் தள்ளாமல் உடனே கணவனிடம் வந்திருந்தாள் அவள். 

“சஹானா” மெல்ல அழைத்தான் சத்யா. கணவனை நெருங்கி நின்றாள் சஹானா. அவனது இடக்கரத்தில் அவர்கள் மகள் இளவரசியை போல அமர்ந்திருக்க, வலப் பக்கத்தில் கணவனின் இடுப்பில் கரம் கோர்த்து லேசாய் அவனை அணைத்தபடி நின்ற மனைவியை ஆச்சரியமாய் புருவங்களை நெரித்துப் பார்த்தான் அவன். பொதுவெளியில் அவர்கள் நெருக்கம் காட்டுவதெல்லாம் அரிது என்பதால் அனிச்சையாய் உயர்ந்தது அவன் கண்கள்.

“தாங்க்ஸ் அண்ட் சாரி சத்யா” அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் அழுத்தமாய் சொன்னாள். 

அவன் கண்களில் சிரிப்பிருக்க மாறாக முகத்தில் கடுமையுடன், “எதுக்கு?” என்று எதிர்கேள்வி கேட்டான்.

“எல்லாத்துக்கும்” காலையில் அவன் கொடுத்த பதிலையே அவனுக்கு திருப்பிக் கொடுத்து, கீழுதட்டை கடித்தாள் சஹானா. 

“ம்ஹூம்” என்றான் சுவாரசியமாக. மெல்ல முன்னே சாய்ந்து அவன் மார்பில் முகத்தை பதித்து, உதடுகளை மென்மையாய் உரசி அவனை சோதித்தாள். 

“சஹானா” தடுமாற்றத்துடன் அவன் சொல்ல, தலையை உயர்த்தி அவனைப் பார்த்தாள். 

கருணையை போற்றும் சஹானா ராகத்தின் கண்களில் இப்போது அவனுக்கான காதல் அளவில்லாமல் இருக்க, இரண்டு வருடங்களுக்கு முன் விழுந்தது போல இப்போதும் அந்த கண்களில் தடுமாறி விழுந்தான் சத்யமூர்த்தி. 

“சஹானாவுக்கு சத்யமூர்த்தி பிடிக்கும். ஒரு பொறுப்பான ஃபேக்டரி ஓனரா, நல்ல மகனா, பாசமுள்ள அண்ணனா அவரை ரொம்ப பிடிக்கும். அதெல்லாம் விட மகள் மேல பைத்தியக்கார தனமான அன்பு வச்சிருக்க, தன் இயல்பை அவள்கிட்ட மட்டும் தொலைக்கிற அப்பாவா அவரை ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனா, சஹானாவின் சத்யாவை எவ்வளவு பிடிக்கும்னு சொல்லவே தெரியல. அளவிட முடியாத அளவுக்கு, அவ்வளவு பிடிக்கும்”

சற்று நேரத்திற்கு முன் அவன் கேட்டிருந்த கேள்விக்கு இப்போது பதில் தந்திருந்தாள் அவள்.

“சஹானா” என்றவனின் குரல் அடர்த்தியாய், கரகரத்து ஒலிக்க, அவன் விழிகளோடு தன் விழிகளை பதித்து, “சஹானாவின் சத்யாவை யாருக்குமே தெரியாது. எனக்கு மட்டும் தான் அவரைத் தெரியும். எனக்கே எனக்கான சத்யமூர்த்தி. அவரோட அன்பு, காதல், காமம், மென்மை, வன்மை, ரசிப்பு, ரகசியங்கள் எல்லாமே இந்த சஹானாவுக்கு மட்டும் தான் தெரியும். 

சத்யாவின் அன்பின் ஆலாபனை சஹானாவுக்கு மட்டுமே சொந்தம். அவளுக்கு மட்டுமே புரியும் அந்த புது மொழி. அதில் எனக்கு ரொம்ப கர்வம் கூட. எஸ், ஐ லவ் யூ சத்யேட்டா. என் கணவனா, நம்ம மகளுக்கு அப்பாவா.. எங்களுக்கு எல்லாமா.. உங்களை அவ்வளவு பிடிக்குது. ஆனா, அதுக்காக உங்கக் கூட சண்டை போடாம இருக்க மாட்டேன். உங்ககிட்ட நிறைய எதிர்பார்ப்பேன், ஏமாறுவேன். உங்களை தொல்லை பண்ணுவேன்”

“சஹானா” நீளமாய் பேசியவளின் பேச்சை நிறுத்தியது அவனின் அழைப்பு. 

அவள் கண்களையே கூர்ந்து பார்த்தான் சத்யமூர்த்தி. உண்மை, காதல், மயக்கம், ஈர்ப்பு, ரசனை என்று கலவையான, அவனுக்கு மட்டுமே சொந்தமான உணர்வுகள் அதிலிருக்க, இதழ் பிரியாமல் புன்னகைத்தான் அவன். 

“தாங்க்ஸ்” என்றாள் மீண்டும்.

“எதுக்கு?”

“சஹானாவின் சத்யமூர்த்தியா மாறினதுக்கு. இப்போ பிரார்த்தனாவின் அப்பாவா புரோமோட் ஆனதுக்கு” அவள் குறும்பாக கண் சிமிட்டி சொல்ல, “வாய், வாய்” மெல்ல முணுமுணுத்தான் அவன். 

“உங்களுக்கும் சேர்த்து நான் தானே பேசணும். அப்போ எனக்கு வாய் இருக்கறதில் தப்பில்லை” உதடு சுளித்து சொன்னாள். அவன் ரசனையுடன் பார்க்க, அந்த மாய கணத்தில் அவன் மேல் பிரவாகமாக பொங்கிய பிரியத்திற்கு அணை போட முடியாமல் தவித்தாள் அவள். விழிகளால் என்ன செய்ய முடியும்? விழுங்கினாள் அவனை. அவள் இதழ்கள் தாமாக விரிய, அவனை எப்போதும் வசீகரிக்கும் அந்தச் சிரிப்பை விழுங்கிக் கொள்ள சொன்னது அவன் மனது. 

சடுதியில் மேலெழும்பிய பதற்றத்துடன் தலைக் கோதி கொண்டான். அவனது அவஸ்தையை விழியுயர்த்தி ரசித்தாள் அவள். 

“என்கிட்ட ராதா அண்ணி, நேத்து நம்ம வீட்ல நடந்ததை பத்தி சொல்ல ஆரம்பிச்சாங்க. அதைக் கேட்டு தான் என் மனசு மாறிடுச்சுனு நீங்க நினைக்கக் கூடாது இல்லையா? இல்ல, எனக்கே அப்படி ஒரு நேரம் தோணக் கூடாது இல்லையா? அதான், அதை கேட்கறதுக்கு முன்னாடி என் மனசை உங்ககிட்ட சொல்லிடலாம்னு ஓடி வந்தேன்” மனைவியை முறைப்பும், குறுஞ்சிரிப்புடனும் அவன் பார்க்க, 

“இப்போ உங்க பொண்ணை கொஞ்சுங்க. ஓகே?” என்று விட்டு அவனை விட்டு விலகிய மனைவியை கண்களில் காதலுடன் நிறைத்தான் சத்யமூர்த்தி.

ஏனோ அவன் மனதில் அந்நொடி சஹானா ராகம் இனிமையாய் இசைந்துக் கொண்டிருந்தது. 

சஹானாவிற்கு நடந்ததை கணவனின் வாய் மொழியாக அறிந்துக் கொள்ள தான் ஆசை. ஆனால், அவனைப் பற்றி தான் அவளுக்கு நன்றாக தெரியுமே. அவன் அம்மாவை பேசியதே அதிகம். அதில் அதைப் பற்றி மனைவியுடன் பகிர்வதா? சங்கடப்படுவான் என்றே அவளுக்குத் தோன்றியது. அதனால் நாத்தனாரிடம் சென்றாள் அவள். 

“ப்ப்ப்பூ” என்று மழலையில் கொஞ்சிய மகளிடம் அவன் கவனம் திரும்ப, அவன் உலகத்தை நிறைத்து கொண்டாள் பிரார்த்தனா.

மறுபடி அறைக்குள் நுழைந்த சஹானா, ராதாவின் முன் சென்று நின்றாள். சஹானாவின் அறை முழுக்க நிறைந்திருந்த புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். இயற்கை மற்றும் இருவர் என்று சொல்லும் அளவில், அருவி, மலை, கடல், காடுகளின் புகைப்படங்கள் ஒரு பக்கமும், மறுபக்கம் சஹானாவும், சத்யாவும் சுவரை அலங்கரித்திருந்தனர். 

“அண்ணி” அவள் அழைக்க,

“ஃபோட்டோ எல்லாம் ரொம்ப அழகா இருக்கு” என்ற ராதா, ஓரமாய் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.

“ம்ம், வீட்ல என்ன நடந்தது சொல்லுங்க அண்ணி” சஹானா கேட்க, கண்களில் குற்ற உணர்வுடன் அவளைப் பார்த்தாள் ராதா.

“எங்கம்மா இப்படியொரு மாமியாரா இருப்பாங்கன்னு நான் நினைக்கவே இல்லண்ணி. அம்மாவை இப்படி பார்க்க பிடிக்கல. கொஞ்சம் கூட பிடிக்கல.”

“மாமியார் ரோல் அவங்களுக்கும் புதுசு தானே? விடுங்க” என்றாள் சஹானா. 

மெல்லிய புன்னகையுடன் அவள் முகம் பார்த்து, மீண்டும் விட்ட இடத்தில் இருந்து சொல்லத் தொடங்கினாள் ராதா. 

“சஹானா போய்ட்டா, உங்களுக்கு சந்தோஷமா?” என்றுக் கேட்ட மகனை அதிர்ச்சியுடன் பார்த்தார் சுப்புலட்சுமி.

“என்னம்மா வார்த்தை அது? பிச்சைக்காரன்?” யாரிடமும் பதிலில்லை. 

“யாருமா பிச்சைக்காரங்க? அவ அப்பா இல்ல. நான் தான். சஹானா, அவங்க வீட்ல பணமும், பொருளும் வாங்கிட்டு வந்து கொடுத்தா, அதை வாங்கினா.. வாங்கினா என்ன? எப்பவும் வாங்குற நான் தான் பிச்சைக்காரன்” அடர்த்தியான குரலில் சத்யமூர்த்தி சொல்ல, தன் வார்த்தைகள் தன்னையே திருப்பித் தாக்க, பயத்துடன் மகனைப் பார்த்து, “அதில்லை தம்பி..” என்று சுப்புலட்சுமி ஆரம்பித்தார். மகன் பேசவிடவில்லை அவரை.

“என்ன வசதி இல்லம்மா நம்ம வீட்ல? இல்ல, அவ வீட்ல தான் வசதிக்கு என்ன குறை? ஒரே பொண்ணு மா அவ. அவங்கப்பா சேர்த்து வச்சிருக்க அத்தனையும் அவளுக்குத் தான் மா. வீடு, கடை, இடம், சொத்துனு எல்லாமே அவளுக்குத் தான். ஆனா, அவங்ககிட்ட இருந்து எனக்கு எதுவும் வேண்டாம்”

“நான் மட்டும் வேணும்னா சொன்னேன்” என்றவரை விளங்கிக் கொள்ள இயலாமல் பார்த்தான் அவன்.

“மாத்தி மாத்தி பேசாதீங்க மா.” என்றவன், “உங்களை கேட்டு, உங்க ரெண்டு பேர் சம்மதமும் வாங்கி தானேமா சஹானாவை கல்யாணம் பண்ணேன்? அப்புறமும் அவளை இப்படி நீங்க பேசிட்டே இருந்தா என்ன அர்த்தம்? அவளை நான் இப்போ என்ன பண்ணனும்னு சொல்றீங்க? நான் பொண்டாட்டி, பிள்ளையை கைக் கழுவி விட்டுட்டு வந்துடட்டுமா? அதுக்கு அப்புறம் என்னம்மா? என்னை, என்ன பண்றதா உத்தேசம்?” தீர்க்கமாக அவன் கேட்க, அந்த கேள்வியை சற்றும் எதிர்பார்த்திராதவர், கைகளை பிசைந்தார். 

சோஃபாவில் அமர்ந்திருந்தவர் அண்ணாந்து மகனைப் பார்க்க, கோபத்தில் நெஞ்சை நிமிர்த்தி நின்று அவரை மிரள வைத்தான் மகன்.

“ஒவ்வொரு முறையும் நீங்க அவளை அசிங்கப்படுத்தல மா, என்னை தான் அசிங்கப்படுத்தறீங்க” என்றவன், பதற்றத்துடன் தலைக் கோதி கொண்டான். 

“தம்பி” என்று மகனை நெருங்கிய அப்பாவை ஒரே பார்வையில் தூர நிறுத்தினான்.

“சஹானா பேசினது தப்பு தான். உங்களை அவ மரியாதை இல்லாம பேசியிருக்க கூடாது. ஆனா, என்னால அவளை விட்டுக் கொடுக்க முடியாது. என் பொண்டாட்டி, பிள்ளை சார்பா நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கறேன். சாரிம்மா” கைகள் இரண்டையும் அடித்து கைப் கூப்பிய மகனை அதிர்ச்சி அப்பிய முகத்துடன் பார்த்தார் சுப்புலட்சுமி. 

சாது மிரண்டு சத்யமூர்த்தியாகி நின்றார். அவனுக்கே அவன் பேச்சு தாள முடியாததாக இருந்தது. சஹானா, அவன் மனைவி. அவனின் சரி பாதி மட்டுமல்ல. அவனின் முழுமையே அவள் தான் எனும் போது, அவளுக்காக எப்படி பேசாமல் இருப்பான் அவன். அவளிடமே பேச மறந்ததை எல்லாம் இப்போது அவளுக்காக பேசினான் அவன்.

“இல்ல தம்பி..” என்ற அம்மாவை எங்கே பேச விட்டான் அவன்.

“சாரிம்மா. அவ கோபத்துல தெரியாம உங்களைப் பேசியிருப்பா. ஆனாலும், தப்பு, தப்பு தானே. எனக்காக அவளை மன்னிச்சுடுங்க மா, பிளீஸ். இதை காரணமா வச்சு திரும்பவும் அவளை பேசாதீங்க” என்ற மகனை கோபமும், இயலாமையும் கலந்துப் பார்த்தார் அவர். 

“நான் உங்களை இப்படி பார்ப்பேன், உங்ககிட்ட இப்படி பேசுவேன்னு நினைச்சதே இல்லம்மா. உங்களுக்கு என்னாச்சு?” மகனின் கேள்வியில் இருந்த வலி, அவருக்கு நிச்சயம் புரிந்திருக்கும். 

சஹானா மாமியாரிடம் எப்போதும் அமைதியாய் போனதற்கு முதல் காரணம் கணவன். இரண்டாவது, சட்டென வார்த்தைகளால் யாரையும் காயப்படுத்த அவளுக்கு மனமில்லை. அதுவும் மாமியார் அவளைக் காயப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் பேசும் போது, அவரிடம் தனக்கு வலிக்கிறது என்று காண்பிக்க அவளுக்கு விருப்பமேயில்லை. 

நம் எதிர்வினையை எதிர்பார்த்து தாக்குபவர்களை கண்டுகொள்ளாமல் அசட்டையாக கடப்பது தானே புத்திசாலித்தனம். அதை விட்டு, லேசாக புன்னகைத்தால், கோபத்தின் சாயலைக் காட்டினால் கூட அவர்களின் நோக்கம் நிறைவேறிவிடும் அல்லவா? அதனாலேயே ஒதுங்கிப் போனாள் அவள். 

மேலும், திருமண வாழ்க்கையை சிக்கலாக்கி கொள்ள அவள் விரும்பாததும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது. அவளுக்கு மாமியார் மேல் மரியாதை இருந்தது. ஆனால், பயம் நிச்சயமில்லை. உண்மையும், நேர்மையும், சத்யமூர்த்தியும் அவளிடம் இருக்க அவள் எதற்கு அஞ்ச வேண்டும்?

Advertisement