Advertisement

உணவுக்கு நடுவில், “சாரி மாமா” என்றான் சத்யமூர்த்தி. 

“விடுங்க மாப்பிள்ளை. குடும்பம்னா நாலும் இருக்கத் தான் செய்யும்” என்று பெருந்தன்மையாக முடித்துக் கொண்டார் முரளிதரன். சத்யமூர்த்தி தயக்கத்துடன் மாமியாரை பார்க்க, “சாப்பிடுங்க, மாப்பிள்ளை” என்று உணவை பரிமாறினார் புனிதா. 

அவர்களின் பெருந்தன்மை அவனை அத்தனை சுட்டது. அவன் குடும்பத்தில் அது இல்லையே என்று பெரிதும் வருந்தினான் அவன். அவனும் சரி, அவனது அம்மாவும் சரி, சஹானாவின் உணர்வுகளை சக்கையாக பிழிந்து எடுப்பது அவனுக்கு குற்ற உணர்ச்சியை தந்தது.

கடந்த மூன்று மாதத்தில் தான் எத்தனை சண்டைகள், வாக்குவாதங்கள், எத்தனை முறை சஹானா, பிரிந்து போகிறேன் என்று சொல்லி இருப்பாள், நினைக்கையில் அவனுக்கு கண்ணைக் கட்டியது. 

இப்பொழுதும் வெளித் தோற்றத்திற்கு எல்லாமே சரியாக, சலனமில்லா குளத்தை போல அவர்களின் வாழ்க்கை தெரிந்தாலும் கூட, அதன் அடியில் சுழன்று கொண்டிருக்கும் சூறாவளியை அவன் அறிவானே. அதை சரி செய்யும் வழித் தெரியாமல் விழி பிதுங்கி நின்றான் சத்யமூர்த்தி. 

“சாப்பிடுங்க” அவன் தட்டில், உணவை பரிமாறி, தட்டைக் கண் காட்டினாள் சஹானா. 

இப்போதும் அவளுக்கு பிடித்ததாக இருந்த உணவுகளை சன்ன சிரிப்புடன் பார்த்தான் அவன். 

பருப்பு, பச்சக்கறி அவியல், சக்ககுரு தோரண் (பலாக் கொட்டை), உள்ளி தீயல், பப்படம், சம்மந்தி என ஒவ்வொன்றையும் ரசித்து உண்டுக் கொண்டிருந்த மனைவியை துளி ரசனையுடன் பார்த்து, உணவை கையில் அள்ளினான். அவனுக்கு மட்டும் சிக்கன் குழம்பும், வறுவலும் இருக்க, மனைவியின் தட்டில் அது இல்லாததை கவனிக்க, “சிக்கன் எங்க வேணாலும் சாப்பிடலாம். ஆனா, இதெல்லாம் அம்மா கையால மட்டுமே சாப்பிட முடியும். இந்த டேஸ்ட் எங்க போனாலும் கிடைக்காது” என்று அவனிடம் கிசுகிசுத்து, சப்புக் கொட்டினாள் சஹானா. 

மெலிதான சிரிப்புடன் இருவரும் உணவை உண்டனர். 

“நான் கடைக்கு போறேன் மாப்பிள்ளை. நீங்க ரெண்டு நாள் இங்க இருந்துட்டு போங்க, பிளீஸ்” முரளிதரன் சொல்ல, “சரிங்க மாமா” என்றான் சத்யமூர்த்தி. 

புனிதா உணவு முடித்து வேலைகளை பார்த்துக் கொண்டிருக்க, “பாப்பாவை பார்த்துக்கோங்க மா” என்று அவரிடம் சொல்லி விட்டு, வீட்டின் பின் பக்கம் இருந்த தோட்டத்தை நோக்கி நடந்தாள் சஹானா. அவளைப் பின் தொடர்ந்தான் சத்யா.

மா, பலா, வாழை மரங்கள் வரிசை கட்டி நிற்க, அவற்றுக்கு துணையாக காய்கறி செடிகள், பூச்செடிகள் ஒரு பக்கம் அணிவகுத்து நின்றது. சத்யமூர்த்தி அதையே பார்க்க, “அப்பாக்கு கார்டனிங் பிடிக்கும்.” என்றாள் சஹானா அவனிடம் புதிதாக சொல்வது போல.

“கேரளால தோட்டம் இல்லாத வீட்டை பார்க்கறது தானே அதிசயம்?” சத்யா கேட்க, “ம்ம்” என்றாள் மனைவி. 

முன்மாலை வேளை என்பதால் சூரியனின் தாக்கமில்லாது, தென்றல் வீசிக் கொண்டிருந்தது. இருவரும் அங்கிருந்த இருக்கைகளில் சாய்ந்து அமர்ந்தனர். 

சத்யமூர்த்தி பேசத் தயாரானான். ஆனால், வார்த்தைகள் அவனை எப்போதும் போல கைவிட்டது. திரும்பி மனைவியின் முகம் பார்க்கையில் எல்லாம் குற்ற உணர்ச்சி தன் இருப்பைக் காட்ட, தவித்தான் அவன். 

“இட்ஸ் ஓகே சத்யா. என் மேலேயும் தப்பு இருக்கு” என்று தொடங்கியவள், “நானும் அதிகமா பேசிட்டேன். இப்ப நினைச்சா கூட வருத்தமா இருக்கு. காலத்துக்கும் மறக்கவே முடியாத மாதிரி பேசிட்டேன். ஐ ஆம் சாரி” என்றாள். 

“எப்பவும் அமைதியா போக முடியாது சஹானா. நம்மை தெரியாம கடிக்கிற எறும்பை கூட அனிச்சையா அடிக்கிறது தான் மனித குணம். தெரிஞ்சே அடிக்கும் போது, ரியாக்ட் பண்றது நார்மல் தான்” என்றவனை விழி விரித்து பார்த்தாள் மனைவி. 

“இல்ல. அது வந்து.. அத்த வயசுல பெரியவங்க.” அவளை முடிக்க விடாமல், “வயசுக்கு மரியாதை எப்போ வரும்னா, அதுக்கு ஏத்த மாதிரி அவங்க நடந்துக்கும் போது தான்” அழுத்தமாக சொன்ன கணவனை ஆச்சரியமாக பார்த்தாள். 

“இதை நான் உனக்காக பேசல” தொலை தூரத்தில் தெரிந்த மலைத் தொடர்களை பார்த்தபடி அவன் சொல்ல, மௌனமாய் தலையசைத்தாள் சஹானா. 

திடீரென்று திரும்பி அவளை நேராக, தீவிரமாக பார்த்தான் சத்யமூர்த்தி.

“என்ன?” அவள் தடுமாற, “என்னைப் பிடிச்சு தான் கல்யாணம் பண்ணியா சஹானா?” என்று ஆகப் பெரும் சந்தேகம் கேட்டான் சத்யமூர்த்தி. அதிர்ச்சியில் விழிகளை விரித்து முறைத்தாள் சஹானா. ஆனால், மறுநொடி யோசித்துப் பார்க்க, அவளின் பிடித்தத்தை எங்கேயும் சொன்ன நினைவில்லை அவளுக்கு. 

முதல் முறை பார்க்கையில் வீட்டில் பார்த்த மாப்பிள்ளை என்று நினைத்து, “பிடிச்சிருக்கு” என்று சொல்லியிருந்தாள். ஆனால், அதன் பின், அவனிடம் ஒரு முறை கூட தன் பிடித்ததை அவள் சொன்னது கிடையாது. 

“நீ சொன்னது இல்ல. ஆனா, எனக்குத் தெரியும். அது மாதிரி என் அன்பை நீ உணர்ந்ததே இல்லையா சஹானா?” அவன் கேட்க, கடுமையாக முறைத்தாள் சஹானா. 

அவளுக்கு கணவனைத் தெரியும். அவன் காதலைத் தெரியும். அவனுடனான காதல் கணங்களை, அவன் சில முறை தவறிய தருணங்களை கொண்டு பின்னுக்குத் தள்ளியிருந்தாள் அவள்.

புனிதா அவளிடம் சொன்னது போல, கோபத்தில் ஒன்றை பத்தாக்குவது, புள்ளியை, பூதாகரமாக்குவது நடப்பது தானே? கணவன் மேல் இருந்த கோபத்தில் அவன் செய்த நல்லதை மறந்து, அல்லாததை மட்டுமே அந்நேரம் நினைவில் நிறுத்திக் கொண்டாள் அவள். 

அவள் பதில் சொல்லாததை பெரிதாக எடுத்து அலட்டிக் கொள்ளாமல், “நான் என்ன பண்ணட்டும்?” மீண்டும் முடிவெடுக்கும் பொறுப்பை அவளிடமே ஒப்படைத்தான் அவன்.

“வீட்ல.. வீட்ல என்ன நடந்தது? நான் யார்க்கிட்டயும் சொல்லிக்க கூட இல்ல. அத்த என்ன சொன்னாங்க?” தயக்கமும், தடுமாற்றமுமாக அவள் கேட்க, தலையை பின்னுக்கு சாய்த்து மனைவியைப் பார்த்தான் சத்யமூர்த்தி. 

“அம்மா என்ன சொல்லப் போறாங்க..” என்று அவன் ஆரம்பிக்க, “சஹா” என்று வீட்டுக்குள் இருந்து அவளை அழைத்தார் புனிதா. 

“சஹானா, இங்க வாம்மா.” அந்த குரலுக்கு இருவரும் ஒருவரையொருவர் பார்த்தபடி திரும்ப, “அத்த, மாமா, வந்திருக்காங்க பாரு” என்று அடுத்து வந்த செய்தியில் அவள் அடித்துப் பிடித்து எழுந்து கொள்ள, சத்யமூர்த்தி புருவங்களை நெரித்தபடி மனைவியின் கைப் பிடித்து நிறுத்தினான். 

“சஹானா” என்றான். 

“உங்களை ஹர்ட் பண்ற மாதிரி எதுவும் பேச மாட்டேன்” சொன்னவளை இதழ் பிரியா புன்னகையுடன் கண்களில் நிறைத்துக் கொண்டான். மகன் முன் மாமியார் தன்னை எதுவும் பேச மாட்டார் என்பது அவளுக்குத் தான் நன்றாக தெரியுமே. இருவரும் ஒன்றாக வீட்டுக்குள் செல்ல, அங்கே சத்யமூர்த்தியின் பெற்றோர் மற்றும் ராதாவின் குடும்பம் நின்றிருந்தனர். 

“வாங்க” என்று எல்லோரையும் பொதுவாக அழைத்து, தன்னை நோக்கி ஓடி வந்த தருணை கைகளில் தூக்கிக் கொண்டாள் சஹானா. 

மாமியாரை பார்க்கவே அவளுக்கு அவ்வளவு தயக்கமாக இருந்தது. 

அவசர அவசரமாக முரளிதரன் வீட்டினுள் நுழைந்தார். புன்னகையுடன் அவனைவரையும் வரவேற்று அவர் பேச, “வீட்டு கிரக பிரவேசம் பத்திரிக்கை கொடுக்க வந்தோம் மாமா. சாரி ரொம்ப லேட்டா கொடுக்கறோம்” என்று ராதா சொல்ல, “பரவாயில்ல மா. அதான் போன வாரமே போனில் சொன்னியே. பத்திரிக்கை வாட்ஸ்அப் கூட பண்ண தானே” அனைவருக்கும் தேநீர், தயாரித்து எடுத்து வந்த புனிதா சொல்ல,

“ஆனாலும், நேர்ல குடுக்கறது தானே முறை. ராதா அதைச் சொல்றா சித்தி” ராதாவின் கணவன் மோகன் சொல்ல, “சரிங்க தம்பி. டீ எடுத்துக்கோங்க” என்று அனைவருக்கும் தேநீரை வழங்கினார் புனிதா. 

வீட்டில் சத்தம் கூடவும், தன் சத்தத்தை காட்டினாள் பிரார்த்தனா, தூக்க கலக்கத்தில் சிணுங்கிய மகளை சென்று தூக்கி வந்தான் சத்யமூர்த்தி. 

அங்கிருந்த அனைவரும் தெரிந்த முகங்களாக இருக்க, ஒரு கணம் பொக்கை வாய் காண்பித்து சிரித்த குழந்தை மறுகணமே பசியில் அழத் தொடங்க, “பேசிட்டு இருங்க. இதோ வந்துடுறேன்” பொதுவாக சொல்லி விட்டு மகளை, கணவனிடம் இருந்து வாங்கிக் கொண்டாள் சஹானா. அவளைப் பின் தொடரப் போனவனை, கண்ணை உருட்டி அவள் முறைக்க, அப்படியே நின்று விட்டான் அவன். 

ஆனால், ராதா தன் அண்ணன் மனைவியை பின் தொடர்ந்தாள். 

சஹானா பாலுட்டத் தொடங்க, பொதுவாக பேசியபடி, பத்திரிக்கை வைக்கப் போன கதைகளை, சொந்தக்காரர்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தாள் ராதா. 

இருபது நிமிடங்கள் கழித்து, பிரார்த்தனா தலையை வெளியே நீட்டி அத்தையைப் பார்த்து சிரிக்க, “அத்தையை சிரிச்சு மயக்காத ராஜாத்தி.” சஹானாவிடம் இருந்து குழந்தையை வாங்கிக் கொண்டாள் ராதா. மகளுக்கு உதடு துடைத்து, உள்ளாடையை சஹானா மாற்ற, மடியில் இருந்த அண்ணன் மகளுக்கு விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தாள் ராதா. 

சஹானா எழுந்து சென்று கைகளை கழுவி வர, “சாரி அண்ணி” என்றாள் ராதா நேரடியாக. 

ஒரு நொடி அதிர்ந்து, “நீங்க எதுக்கு சாரி சொல்றீங்க அண்ணி? தப்பு என் மேல தான். நான் தான் சாரி சொல்லணும். அத்தையை கோபத்துல ரொம்ப பேசிட்டேன் நான்” என்றாள் சிறு குரலில் சஹானா. 

ஒரு மனம் அம்மாவுக்காக பார்க்க, மறுமனம் அண்ணன் மனைவிக்காக நியாயம் பேச, ராதா திண்டாடிப் போனாள். சுப்புலட்சுமி மாமியாராக பல முறை தவறி இருந்தாலும், சிறந்த தாயாகவே பிள்ளைகளை வளர்த்திருந்தார். 

“அம்மா மேலயும் தப்பு இருக்கு அண்ணி.” என்று அவள் சொல்ல, சஹானா அமைதியாய் அமர்ந்திருந்தாள். 

“அன்னைக்கு அண்ணா ரொம்ப பேசிட்டாங்க.” படாரென்று திரும்பி, “யாரை? உங்களையா?” என்று கேட்டாள் சஹானா. 

“இல்ல, அம்மாவை. ஆனா, எல்லாம் என்னால தான். ஐ ஆம் வெரி சாரி அண்ணி” என்றாள் சஹானாவின் கைப் பிடித்து.

“நான் என்ன பண்ணுவேன் அண்ணி, நீங்களே சொல்லுங்க? எனக்கு என்னோட ஹஸ்பண்ட் இமேஜும் முக்கியம் இல்லையா? அவர் சொல்றதை நான் கன்சிடர் பண்ணனும் தானே? ஆனா, நான் பணத்தை திருப்பிக் கொடுத்ததுக்கு அம்மா உங்களை பேசுவாங்கன்னு எதிர்ப்பார்க்கல. சாரி” ராதா சொல்ல சொல்ல, என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அமைதியாய் அமர்ந்திருந்தாள் சஹானா. 

அன்று அம்மா வீட்டிற்கு குடும்பத்துடன் வந்திருந்த ராதா வீட்டினர், மீண்டும் அவர்களை முறையாக கிரகப் பிரவேசத்திற்கு அழைத்தனர். அத்தோடு அவர்கள் வந்த விஷயமே வேறு. 

ராதாவின் கணவன் மோகன், வீட்டிலிருந்து கிளம்பும் முன், சத்யமூர்த்தியிடம் பேச, அண்ணனிடம் ஏதோ தீவிரமாக சொல்லிக் கொண்டிருந்தாள் ராதா. 

முகத்தில் கோபம் அப்பட்டமாக தெரிய, அவள் கொடுத்ததை வாங்கிக் கொண்டான் சத்யமூர்த்தி. 

“எங்களுக்கு வீடு கட்ட இடமும் கொடுத்து, பணமும் கொடுத்து, வீடு பாதியில் நின்னதும், உடனே ஹெல்ப் பண்ணவும் செஞ்சீங்க மச்சான். அப்படி இருக்கும் போது உங்ககிட்ட இருந்து சும்மா வாங்கிட்டே இருந்தா, எனக்கு ரொம்ப உறுத்தலா இருக்கும். நாளைக்கு என் பொண்டாட்டி, பிள்ளைங்க இருக்கப் போற வீட்டை கூட நான் கட்டலன்னு எனக்கு கண்டிப்பா தோணும். அதான் பணத்தை திருப்பித் தரேன். வாங்கிக்கோங்க. பிளீஸ்” மோகன் பேச பேச புருவங்கள் நெரிய யோசனையாய் பார்த்திருந்தான் சத்யமூர்த்தி. 

“என்னோட பிஸினஸ் சிக்கலையும் நீங்களும், மாமாவும் தலையிட்டு சரி பண்ணிக் கொடுத்துட்டீங்க. இப்போ என்கிட்டே பணம் இருக்கும் போது, உங்ககிட்ட நான் வாங்கினா அது சரியில்லை தானே? அப்புறம் உங்க வீட்ல எனக்கு மரியாதை இருக்காது இல்ல?” அவன் சிரிப்புடன் கேட்க, 

“அது நான் ராதாவுக்காக கொடுத்தது மாப்பிள்ளை.” என்றான் சத்யா. வேறொன்றும் சொல்லி அவனால் நியாயப்படுத்த முடியவில்லை. 

“எஸ், உங்க தங்கச்சிக்கு தான் கொடுத்தீங்க. ஆனா, வீடு கட்ட ஹெல்ப் பண்ண தானே மச்சான் கொடுத்தீங்க? இப்போ வீட்டு வேலை முடிஞ்சு என்கிட்ட பணம் இருக்கு. நீங்க வாங்கிக்கிறது தானே முறை?” அதன் பின் ஒன்றும் பேசாமல் அமைதியாக அவன் நீட்டிய காசோலையை வாங்கிக் கொண்டான் சத்யமூர்த்தி. 

“தாங்க்ஸ் ண்ணா” என்றாள் ராதா. தங்கையிடம் புன்னகைத்து விட்டு, மனைவியை அழைத்து காசோலையை நீட்டினான் அவன். 

“ஏன்? ஏன் திருப்பிக் கொடுக்கறீங்க? என்னாச்சு?” பதறி அவள் கேட்க, “பிசினஸ் பிரச்சனையை அண்ணா சரி பண்ணி கொடுத்திட்டார். இடம், பணம்னு அண்ணா கிட்ட வாங்கினது எனக்கு கொஞ்சம் சங்கடமா இருந்தது. அதான், எங்க கையில காசு இருக்கும் போதே திருப்பிக் கொடுத்துட்டேன்” என்றாள் ராதா. 

“இல்ல, உங்க அண்ணா உங்களுக்காக..”

“எனக்கு நாளைக்கே தேவைப்பட்டா அண்ணாகிட்ட தான் கேட்கப் போறேன். அதுனால நீங்க தப்பா எடுத்துக்காதீங்க அண்ணி. இவருக்கு ஒரு இடத்தில பெரிய அமௌன்ட் மாட்டிட்டு இருந்தது. அண்ணா போன் பண்ணி பேசவும், அப்பா நேர்ல போகவும், நாலே நாள்ல எங்களுக்கு செக் வந்துடுச்சு. அந்த ஹெல்ப்பே பெருசு. எங்களுக்கு அது போதும் அண்ணி.” சஹானாவை பேச விடாமல் ராதாவே பேசி முடிக்க, கணவனைத் திரும்பிப் பார்த்தாள் அவள்.

அவன் கண் காட்ட, “சரிங்க அண்ணி” என்றாள் ராதாவிடம்.

சத்யமூர்த்தி சுய விருப்பம் இல்லாமல், மனைவிக்காக மட்டுமே தங்கைக்கு உதவியிருக்க, அவள் திருப்பிக் கொடுக்கவும் பணத்தை வாங்கிக் கொண்டான். 

சஹானாவிற்கு ராதாவின் காரணம் சரியாகப்பட்டது.

“என் மாமியார் கொஞ்சம் ஆசப்படுவாங்க தான். ஆனா, நம்ம வீட்ல இடம் கொடுத்ததே அவங்களுக்கு ஹேப்பி தான் அண்ணி.” என்ற ராதாவின் பேச்சில் பணத்தை திருப்பி வாங்குவதில் சஹானாவிற்கு தயக்கமிருக்கவில்லை.

அவர்கள் அனைவரின் செயலும், முடிவும் சுப்புலட்சுமியை தான் அதிகம் தாக்கியிருந்தது. 

“அவ திருப்பிக் கொடுத்தா நீயேன் தம்பி வாங்கின?” மகனைக் கோபமாக கேட்டார். 

“ஏன் வாங்க கூடாது மா?” என்ற அவனின் ஒற்றைக் கேள்வியில் அமைதியானவர் மருமகளை பிடித்துக் கொண்டார். 

அந்தப் பிரச்சனை அவர்களை பிரித்து இங்கு வரை கொண்டு வந்து நிறுத்தியிருந்தது.

“எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு அண்ணி. எப்பவும் என்னால தான் உங்களுக்கு பிரச்சனை. சாரி” ராதா சொல்ல, யோசனை கலைந்து அவளைப் பார்த்தாள் சஹானா.

“விடுங்க அண்ணி, சாரி சொல்லாதீங்க. எனக்கு சங்கடமா இருக்கு” என்றாள். 

“அண்ணாக்கு ரொம்ப கோபம். அவங்க இவ்வளவு கோபமா பேசி நான் பார்த்ததேயில்ல. அதுவும் அம்மாகிட்ட.” என்ற ராதா, அன்றைக்கு சஹானா வெளியேறிய பின் வீட்டில் நடந்ததை அவளிடம் சொல்லத் தொடங்கினாள். 

அன்று புயல் வேகத்தில் வீட்டுக்குள் நுழைந்த சத்யமூர்த்தி, கூடத்தில் தொலைக்காட்சி முன் அமர்ந்திருந்த அம்மாவிடம் சென்று நின்றான். 

அவன் பின்னேயே பாலகுமாரின் காரும் வர, அவரும் வீட்டுக்குள் வந்தார். 

“என்னம்மா பிரச்சினை உங்களுக்கு? சஹானா போய்ட்டா, இப்போ சந்தோஷமா?” என்று நிதானமாக கேட்ட மகனை அதிர்ச்சியுடன் பார்த்தார் சுப்புலட்சுமி. 

Advertisement