Advertisement

“சஹானா” என்ற கணவனின் குரலுக்கு சட்டென நிமிர்ந்து பார்த்தாள் சஹானா.

இப்படி தனிமையில் அமர்ந்து அவர்கள் வாழ்க்கையையே மூன்றாம் மனிதனைப் போல வெளியே நின்று, பிரித்துப் போட்டு ஆராய்ந்து பார்த்தது அவளுக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. தன் வாழ்க்கையை எல்லா கோணங்களில் இருந்தும் முதன்முறையாக பார்த்தாள் அவள். இப்போது கணவன் மேல் கோபம் போய், அவளுக்கு தன் மேலான குற்றஉணர்ச்சி மேலோங்கி நின்றது.

மெல்ல எழுந்து அவளிடம் வந்தான் சத்யமூர்த்தி. மனைவியின் தோளில் கை வைத்து குனிந்து மகளைப் பார்த்து சிரித்தான். பதிலுக்கு வாயில் எச்சில் ஒழுக, கண்கள் மின்ன, சத்தமிட்டு சிரித்தாள் பிரார்த்தனா.

சஹானாவின் உடல் இறுக சத்யாவின் கரம், மென்மையாய் அவள் தோளை அழுத்தியது. மகளை தூக்கிக் கொண்டவன், மனைவியை மகளோடு சேர்த்து அணைத்தான். 

அன்றைக்கு இரண்டாம் முறையாக, “சாரி” என்றான். “ம்ம்” என்றாள் அவள்.

“சா…ரி” என்றான், அவள் முகத்தை மெதுவாக நிமிர்த்தி. 

“ஐ ஹேட் யூ” பட்டென்று முரணாக சொன்னாள் சஹானா, கணவனின் கண்களை நேராக சந்தித்து. அவன் முகத்தில் சிரிப்பின் சாயல் தெரிய, “இப்பவும் என்ன, எதுக்கு, ஏன், எதுவும் சொல்லாம சாரி சொல்றதுக்கு, ஐ ஹேட் யூ” என்றாள் கோபத்துடன். 

“சரி. லவ் ஆர் ஹேட், ஏதோ ஒன்னு என் மேல இருந்தா சரிதான்” புன்னகையுடன் அவன் சொல்ல, “நீயா பேசியது என் அன்பே” மனதில் ராகம் இழுத்தபடி, அதிர்ச்சியுடன் அவன் முகம் பார்த்தாள் சஹானா.

கண்ணை சுருக்கி, புருவங்கள் உயர்த்தி, “என்ன?” என்றான் கண்களால். அவனை அப்படியே அசையாமல் முறைத்துக் கொண்டிருந்தாள் சஹானா. 

அந்நேரம் அப்பா, அம்மா இருவரும் தன்னைக் கவனிக்காததில் உதடு பிதுக்கிய பிரார்த்தனா, அப்பாவின் முகத்தை முட்டி அழத் தொடங்க, “என்ன தனு குட்டி? செல்லம், எதுக்கு அழறீங்க? பசிக்குதா?” சத்யாவின் குரல் குழைய, அவன் முகத்தில் நவரசங்களும் வந்துப் போனதை கடுப்புடன் பார்த்த சஹானா, 

“இப்பதான் பால் குடிச்சா? பசிக்குதா கேட்கறீங்க? நீங்க என்கிட்ட பேசிட்டா பொறுக்காது உங்க மகளுக்கு” குழந்தையுடன் போட்டிப் போட்டு குழந்தையாய் சிணுங்கிய மனைவியை சிரிப்புடன் பார்த்தான் சத்யமூர்த்தி.  

“அவளை தூங்க வைங்க” சொல்லிவிட்டு, கணவனின் கைகளில் இருந்து விலகி, படுக்கையில் அமர்ந்தாள் அவள். 

“சேலையை மாத்து” என்றான், மகளை தோளில் போட்டு தட்டிக் கொடுத்தபடி.

“மாட்டேன்” அடமாக பதில் கொடுத்தாள் சஹானா. 

“ரொம்ப நல்லது” என்றவனின் குரலில் ரசனை, காதல், காமம், சிரிப்பு என அனைத்தும் கலந்திருந்தது. 

கல்யாணமான சிறிது நாட்களிலேயே‌‍ கணவனுக்கு சேலையின் மேலிருக்கும் மோகத்தை கண்டுக்கொண்டாள் சஹானா.

“சேலையை ஏன் மாத்தின?” என்று அவன் சில முறை கேட்டப் பின்னரே அவளுள் மணி அடித்தது.

“சேலை ஏன் பிடிக்கும்?” அடுத்த முறை அவளே கேட்க, “பரிசை பிரிக்கிற மாதிரி இருக்கு” அதிசயமாக பேசுபவனின் பேச்சு என்றுமே அர்த்தமுள்ளதாக தான் அவளுக்குத் தொனிக்கும்.  

இப்போது கட்டிலின் உள்ளே நகர்ந்து சாய்ந்து அமர்ந்தவள், கணவனை முறைத்து, உதடு சுளித்தாள். அவள் மேலிருந்து விழிகளை அகற்றாமல் குழந்தையிடம் மென்மையாய், சன்ன குரலில் எதையோ பேசியபடி, முதுகில் தட்டிக் கொடுத்து, அவளை உறங்க வைத்துக் கொண்டிருந்தான்‌ சத்யமூர்த்தி.

அவன் விழிகளோடு தன் விழிகளை பொருத்தியவளின் உதடுகளில் வசீகர சிரிப்பிருந்தது. 

அவள் நன்றாக யோசித்துப் பார்த்தால், குழந்தை வந்தப் பின்பு தான் கணவனின் மேலான அவளின் கோபம் அதிகமாகி இருந்தது. 

மகளிடம் அதிகம் பேசுகிறான். மகளை கெஞ்சுகிறான், கொஞ்சுகிறான், அவளுக்காக அதிரடி நடவடிக்கைகள் எடுக்கிறான் என்று அவளுக்கு பல்வேறு காரணங்கள். 

அவளை அதிரடியாக அம்மா வீட்டில் இருந்து அழைத்துப் போனதும் கூட மகளுக்காக தானே? மகளின் அழுகையை பார்த்துத் தானே என்ற எண்ணம் அவள் மனதில் ஆழமாய் பதிந்துப் போயிருந்தது. 

அன்றைக்கு அவனது செயலுக்கு காரணம் இருந்தது. பொள்ளாச்சி நோக்கி கார் விரையும் போதே அவளிடமும் விளக்கினான் அவன். 

“உங்க வீட்ல நீயும், குழந்தையும் தனியா இருக்கணும் சஹானா. இங்க நம்ம வீட்ல ஆட்கள் யாராவது இருந்துட்டே இருப்பாங்க. பாப்பாவை பார்த்துப்பாங்க” அவன் சொல்ல, “வேலைக்கு இருக்கவங்க எல்லாம் எங்கம்மா போல வருமா?” என்று கேட்கத் தான் நினைத்தாள் சஹானா. ஆனால், அவள் வீட்டிலும் புனிதா வேலைக்கு செல்ல, அவர்களைப் பார்த்து கொள்ள என்று தனியாக ஒரு ஆளை தானே நியமித்து இருந்தார். பதில் சொல்ல முடியவில்லை அவளால். 

கணவனின் இந்த அதிரடி போக்கையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கோபம், கோபம் அப்படியொரு கோபம் வந்தது அவளுக்கு. மௌனமாக கண் மூடி இருக்கையில் சாய்ந்து விட்டாள் அவள். 

“என் சைடில் இருந்து யோசி. புரியும்” என்று விட்டு அமைதியாய் காரை செலுத்தினான் சத்யமூர்த்தி. 

மனைவியை பார்க்க அவன் செல்லும் போதெல்லாம் அவள் தனியாக இருந்தாள், அவனும் தான் என்ன செய்வான்? அதுவும் பிரசவ வலியில் துடித்தபடி தனியாக அவள் வீட்டு வாயிலில் மனைவி நின்றதை அவன் என்றைக்குமே மறக்க மாட்டான். ஒருவேளை அன்று அவன் அங்கு சென்றிருக்கா விட்டால் என்னவாகி இருக்கும் என்று பல நாள்கள் சிந்தித்தும் இருக்கிறான். 

சில நிமிடங்களில் முரளிதரன் வந்திருப்பார் தான். மகளை கவனித்திருப்பார் தான். ஆனால், தலைபிரசவம் என்பது மனைவிக்கு மறுபிறப்பு அல்லவா? என்பது மட்டுமே அவனுள் ஓடிக் கொண்டிருந்தது. அந்நேரம் எதையும் பொருட்படுத்தவில்லை, பெரிதுபடுத்தவில்லை அவன்.

மறுமுறையும் அதே போல் நடக்கவும் தான் சினம் கொண்டான். அதற்காக அவன் செயல் சரியென்று என்றைக்கும் அவன் வாதிட்டதில்லை. சஹானா என்று வந்து விட்டால் அவனுக்கு அவசரமும், அதிரடியும் அத்துப்படி. அது இப்பொழுது மகள் விஷயத்திலும் தொடர்கிறது, அவ்வளவு தான்.

ஒவ்வொரு முறையும் சஹானா இதைச் சொல்லி அவனிடம் சண்டைப் போடும் போதெல்லாம் வாளாதிருப்பான் அவன். அது தானே அவன் இயல்பும் கூட. மேலும், மனைவியின் கோபமும் அவனுக்குப் புரிந்தே இருந்தது. 

கைக் குழந்தையான மகளையும், புதிதாக தாயான தன் உணர்வுகளையும் சமாளிக்க முடியாமல் மனஅழுத்தம் மிகும் நேரங்களில் எல்லாம் சஹானா கத்தி தீர்த்து விடுவாள். 

அமைதியாய் அவளைக் கூட்டிக் கொண்டு தோட்ட வீட்டிற்கு சென்று விடுவான் சத்யமூர்த்தி. 

சஹானாவிற்கு தெரியும். அவள் வீட்டிலிருந்து அவசரமாக கிளம்பினாலும், அவள் பெற்றோரிடம் முறையாக சொல்லி விட்டே அழைத்துப் போனான் கணவன் என்று. 

அவள் பெற்றோர் பேத்தியை பார்க்க பொள்ளாச்சி வந்திருந்த போது, அவனிடம் நன்றாக தான் பேசினார்கள். மகளைப் போலவே மருமகனின் மேலும் அவர்களுக்கு பிரியம் அதிகமிருந்தது. 

“சாரி மா.” புனிதாவிடம் கணவனுக்காக மன்னிப்பு கேட்ட சஹானா, “எனக்கு அங்க இன்னும் மூணு மாசம் இருக்க ஐடியா இருந்தது. எல்லாத்தையும் கெடுத்து விட்டார் இவர். அடிச்சு, பிடிச்சு கூட்டிட்டு வந்துட்டார் எங்களை. அப்பாக்கு இவர் மேல கோபம் இல்ல தானே மா?” கோபமாக புலம்பி, கணவனுக்காக பரிந்தும் பேசிய மகளை ஆதூரமாக பார்த்த புனிதா, “மாப்பிள்ளை மேல அப்பாக்கு கோபம் இல்லடா. அந்நேரம் வருத்தமா இருந்தது என்னவோ உண்மை. ஆனா, நம்ம வீட்ல நீங்க தனியா இருந்தது.. அப்பாக்கு கூட அதுல கோபம் தான். அதுனால மாப்பிள்ளையை அவர் தப்போ, குறையோ சொல்லல டா.” என்ற புனிதா,

“உங்கப்பா பண்ணாததையா மாப்பிள்ளை பண்ணிட்டார்? அவங்க பிள்ளைனு வந்துட்டா, எல்லா ஆண்களும் அப்படித் தான்” என்று சிரிப்பும், கோபமுமாக முடித்தார் அவர். 

“அதுக்கு மறுநாளே மாப்பிள்ளை ஃபோன் பண்ணி அப்பாகிட்ட சாரி சொல்லிட்டார் டா”

அது அவளுக்கும் தெரியும் என்பதால், “ம்ம்” என்றாள் சஹானா. முதல் முறையாக மறுவீட்டுக்கு அவர்கள் வண்டிப் பெரியார் சென்ற போது கூட, அதிகாலையில் அவள் பெற்றோர்களை எழுப்பி தொந்திரவு செய்ததற்காக மன்னிப்பு கேட்டவன் கணவன் என்பது அவளுக்கு நன்றாக நினைவிருந்தது.

“இப்போ கூட அப்பா கிட்ட சாரி சொன்னார் சஹா. நானும் கூட தான் இருந்தேன். என்கிட்டயும் தான் கேட்டார்.” என்ற புனிதா, “எங்களுக்கும் நீயும், பிரார்த்தனா குட்டியும் நல்லா இருந்தா போதும் டா. அது எங்க இருந்தா என்ன? எல்லாம் நம்ம வீடு தான்.” என்றும் சேர்த்து சொல்ல, மௌனமாய் தலையசைத்தாள் சஹானா. அம்மாவின் பேச்சு அவள் காதில் ஏறினாலும், மனதில் ஏறவில்லை. கணவனின் மேல் கோபம், கோபம் தான் என்ற முடிவில் இருந்து அவள் மாறவில்லை. 

அத்தனைப் பேரிடமும் மன்னிப்பு கேட்டவன், அவளிடம் கேட்கவில்லையே? அவள் புரிந்துக் கொள்வாள் என அவன் நினைக்க, அவனிடம் எப்போதும் போல அவன் கொடுக்கவே போகாத விளக்கத்தை எதிர்பார்த்தாள் அவள்.

எதிர்பார்ப்புகள், ஏமாற்றத்தை தருவது இயல்பு தானே? 

“குட்டி தூங்கிட்டா, சஹானா” கணவனின் குரலில் கலைந்து நிமிர்ந்து பார்த்தாள். மகள் படுக்க படுக்கையை சரி செய்து விட்டு அவள் நகர, தோளில் இருந்து படுக்கைக்கு மகளை இடம் மாற்றினான் சத்யமூர்த்தி. 

அவன் நிமிரும் போது மனைவியின் மேல் தற்செயலாக உரச, “கள்ளப் பூச்சா, ஞான் தேஷ்யமாயிட்டுண்டு” என்று கடிந்தாள் மனைவி.

“இப்ப என்ன உனக்கு?” அவள் புறமாக திரும்பியவனின் கைகள் உயர, பட்டென அதைத் தட்டி விட்டாள் அவள்.

“ரொம்ப பண்ற” சொற்களை கடித்து வீசினான் சத்யமூர்த்தி. அந்த கணம் அவனுக்கு ஆயாசமாக வந்தது. இரண்டரை வருட திருமண வாழ்க்கையில் அவனது அன்பு விளக்காத எதை அவனது வார்த்தைகள் விளக்கிட போகிறது என்பதை நினைக்கையில் தானாக பெருமூச்சு வந்தது. 

மெல்ல தொண்டையை செருமி சரி செய்து, “சஹானா” என்று அவன் தொடங்க, சிரிப்பை அடக்க உதடு கடித்தாள் அவள். 

அவளின் வாயில்லா பூச்சிக்கு பேச்சென்றால் வேப்பங்காய் என்று அவளுக்குத் தெரியாதா, என்ன?

“சொல்லுங்க” கைக்கட்டி முகம் நிமிர்த்தி கணவனை பார்த்தாள். அனாவசியமாக அந்நேரம் ராதா அவளிடம் பேசியது நினைவில் வந்தது. 

“உங்களுக்கு நான் சொல்லத் தேவையில்லை அண்ணி. அண்ணா பத்தி நல்லாவே தெரிஞ்சு இருக்கும். இருந்தாலும் சொல்றேன். எங்கப்பா எப்பவும் இப்படித் தான். அவசியத்துக்கு மட்டுமே பேசுவாங்க. எங்கிட்ட கூட அதிகமா பேசினது இல்ல. ஆனா, ரொம்ப பாசமா இருப்பாங்க. அண்ணாவும் அப்படித் தான். எனக்கு ஞாபகம் தெரிஞ்சு அண்ணா அமைதி தான். அதுவும், சின்ன வயசுலயே அப்பா கூடவே ஃபேக்டரி போவாங்க வேறயா. அங்க போய் பேச்சு இன்னமும் குறைஞ்சுப் போச்சு”

“ஏன்?” என்று கேட்டாள் சஹானா. 

“பிஸினஸ்ல அதிகம் பேசினா பேரம் பேசுவாங்க. ஆனா, டீலும் முடியாது, தொழிலும் நடக்காது. கட் அண்ட் ரைட்டா, முடியும், முடியாது, சொல்லிட்டா, வேலை தானா நடக்கும் சொல்வார். அண்ணா அதையே ஃபாலோ பண்றாங்க.” ராதா சொல்ல,

“சரிதான்” என்று சிரித்தாள் அன்று. 

இப்போதும் கணவனைப் பார்க்க அவளுக்கு சிரிப்பே முந்திக் கொண்டு வந்தது. 

“என்னை அதிகம் பேச வைக்காத சஹானா” கணவன் எப்போதும் சொல்லும் வார்த்தைகள் நினைவு வர, குறும்பாக அவன் முகம் பார்த்து, எதிர்பார்ப்புடன், “சொல்லுங்க, சத்யா” என்றாள். 

“நிறைய சொதப்பிட்டேனா?” அவன் கேட்க, எல்லா பக்கமும் ஆடியது அவள் தலை.

“என்ன பண்ணா சமாதானமாவ?” தீர்வை அவளிடமே தள்ளி, தானொரு தேர்ந்த தொழில் அதிபன் என்று நிரூபித்தான் அவன். 

“கள்ளப் பூச்சா” கத்தினாள் சஹானா.

“ஷ்ஷ்ஷ், குட்டி தூங்கறா” அவன் எச்சரிக்க, எகிறிக் கொண்டுப் போனாள். 

“எப்பப் பாரு மக, மக, மக. அவ மட்டும் தான் உங்க கண்ணுக்கு தெரியறாளா?” 

“சஹானா, நம்ம பொண்ணு அவ” என்றான் சாந்தமாக. 

“உங்களை…” அவள் பல்லைக் கடிக்க, “சஹா, சாப்பிட வாங்க மா” என்ற புனிதாவின் அழைப்புக் கேட்டது. 

“இதோ வர்றேன் மா” பதிலுக்கு சொன்னவள், “வாங்க” என்றாள் கணவனிடம். 

அவனோ நகர்ந்து மகளிடம் போய் நின்றான். படுக்கையில் இருந்து அவளைத் தூக்கி தொட்டிலில் (Crib) கிடத்தி, அதை அவர்களின் கண் படும் இடத்தில் நிறுத்தி, மனைவியை திரும்பிப் பார்த்தான். அவளுக்கு அது தோன்றவில்லையே என்று தலையில் தட்டிக் கொண்டாள் சஹானா. 

இந்நேரம் கணவன் இங்கில்லையேல் அவளே அதைச் செய்திருப்பாள் தான். குழந்தை படுக்கையில் இருந்து விழாமல் இருக்க, கைகளில் அள்ளிக் கொண்டு போயிருப்பாள். கணவன் அருகில் இருந்தால், அவளுக்கு எல்லாமே தலைக் கீழ் தான்.

“சஹா” 

“இதோ வந்துட்டோம் மா” சொல்லிய படியே இருவரும் ஒன்றாக உணவருந்த சென்றனர். 

Advertisement