Advertisement

சஹானா மகளில் மூழ்கிப் போனாலும் கணவனை அதிகம் தேடினாள். சத்யமூர்த்தி மீண்டும் பொள்ளாச்சிக்கும், வண்டிப் பெரியாருக்கும் நடுவில் பயண தூரத்தை கூட்டி, குறைத்து சரிப் பார்த்துக் கொண்டிருந்தான். 

ஒவ்வொரு முறையும் அவன் கண்களுக்கு புதிதாக தெரிந்தாள் அவன் மகள். அவளின் சிரிப்பும், அழுகையும், ஸ்பரிசமும், பால் மணம் வீசும் அவளின் பட்டு மேனியும், அவனுக்கு சலிக்காமல் சிலிர்ப்பூட்டும். அவளை அதிசயம் போல தொட்டு தொட்டு பார்த்து புல்லரித்து போவான் அவன். 

“பிரார்த்தனா, தனா குட்டி” அவன் குரல் கேட்டதும் ஒரு மாதமேயான அவன் மகள் பொக்கை வாய் மலர, எச்சில் ஒழுக சிரித்து விட்டால் போதும், சத்யமூர்த்தி, சிரிப்புமூர்த்தியாகி விடுவான். 

“செல்லம் என்ன பண்றீங்க? பால் குடிச்சீங்களா? போர் அடிக்குதா உங்களுக்கு? விளையாட ஆள் வேணுமா? அப்பா பார்த்ததும் சிரிப்பு வருதா?” அவன் கேட்கும் கேள்விகளுக்கு பிரார்த்தனா, “ங்ஙே” சொல்லி விட்டால் முடிந்தது. அவ்வளவு தான், அவனைக் கையில் பிடிக்க முடியாது. வாய் விட்டு சத்தமாக சிரித்து விடுவான்.

“ஆ, சத்யா? இது நீங்க தானா?” அதிசயிப்பாள் சஹானா. விசித்திரமாக அப்பா, மகள் கொஞ்சல் அவளுக்கு கடுப்பை கிளப்பி, காதில் புகை வரச் செய்தது. 

“பொண்ணை பார்த்து பொறாமை படாத சஹா” என்று தனக்குத் தானே சொல்லிக் கொள்வாள் அவள். 

ஒவ்வொரு முறை சத்யா வண்டிப் பெரியார் வரும் போதும் மகளுக்கு புதுப் புது உடைகளும், விளையாட்டுப் பொருட்களும் வாங்கி வர, சஹானா தாயாக மனம் குளிர்ந்தாலும், மனைவியாக மனம் தடுமாறினாள். 

கணவன் தன்னை இப்படித் தாங்கியதில்லை, தேடியதில்லை, கொண்டாடியதில்லை, கொஞ்சியதில்லை. பரிசு பொருட்களால் நிறைத்தது இல்லை என்று மனம் சுணங்கினாள் அவள்.  

“செல்லம் அப்பாவை தேடினீங்களா?” அவளை கையில் ஏந்தி அவன் கேட்க, “நான் தேடினேன்” என்றாள் சஹானா. சத்யா அவளைத் திரும்பிப் பார்க்க, “என்னப் பார்க்கறீங்க? நான் தான் உங்க பொண்டாட்டி சஹானா. என்னை ஞாபகம் இருக்கா உங்களுக்கு? மிண்டா பிராணி, இவ்வளவு பேசுவீங்கன்னு இப்பத் தான் தெரியும் எனக்கு” உதடு சுளித்து அவள் சொல்ல, உடல் குலுங்க சிரித்து, “போடி” என்று அசட்டையாக சொன்னவனை இடுப்பில் கை வைத்து முறைத்தாள் சஹானா. 

அவனோ, மகளிடம் மழலை மொழியில் பேசிக் கொண்டிருந்தான். 

“அம்மா..” கத்திக் கொண்டே அறையை விட்டு வெளியில் போனாள் சஹானா. 

புனிதா விடுமுறையில் இருந்ததால் மகளையும், பேத்தியையும் நன்றாக பார்த்துக் கொண்டார். பிரார்த்தனாவிற்கு மூன்றாம் மாதம் தொடங்கும் போது அவரது மூன்று மாத விடுமுறை முடிந்திருந்தது. 

மகள், பேத்தி இருவருக்கும் துணையாக, அவர்களை பார்த்துக் கொள்ள பெண் ஒருவரை ஏற்பாடு செய்து விட்டு வேலையில் சேர்ந்து விட்டார் அவர். 

சத்யமூர்த்திக்கு அது கொஞ்சமும் பிடிக்கவில்லை என்பது சஹானாவிற்கு புரிந்தது.

“அம்மாக்கு மார்னிங் ஷிஃப்ட் தான் சத்யா. இவெனிங் வீட்டுக்கு வந்திடுவாங்க. அதுவரை பாப்பாவை நான் பார்த்துப்பேன். நீங்க டென்ஷன் ஆக வேணாம்” என்று அவள் தான் அவனை சமாதானப்படுத்தி, சமாளிக்க வேண்டியிருந்தது. 

மௌனமாய் அவள் பேச்சை கேட்டு, தன் விருப்பமின்மையை உறுதியாய் பதிவு செய்தவனை, இயலாமையுடன் பார்த்தாள் சஹானா. மகள் என்று வரும் போது எப்படி மாறிப் போனான் இவன் என்று தான் அவள் மனம் யோசித்தது. 

கணவன் மகள் மேல் பொழியும் அந்த எல்லையில்லா, நிபந்தனையற்ற அன்பை வேண்டி, விரும்பி, ஏங்கித் தவித்தது அவள் மனது. அவனோ அதை உணர்ந்து கொள்ளவே இல்லை. மனைவியை முழுவதுமாக மறந்து மகளில் மூழ்கிப் போனான் சத்யா. 

“போய்ட்டு வர்றேன் சஹானா” அவளிடம் சொல்லிக் கொண்டு காரில் ஏறியவனின் கண்கள் அவனைப் பார்த்து பொக்கை வாய் காட்டிய மகளின் மேலேயே இருக்க, “ம்ம், போய்ட்டு வாங்க. போய்ட்டு வாங்க. வரணும் இல்ல, வந்து தானே ஆகணும். என்னைக்கு இருந்தாலும், என்கிட்ட வந்து தானே ஆகணும். அப்போ கவனிச்சுக்கறேன்” என்றவளை அவன் முறைக்க, கை நீட்டி அவன் புருவத்தை நீவி விட்டாள் சஹானா. 

“பார்த்துப் போங்க” சஹானா சொல்ல, அவளிடம் இருந்து மகளை கையில் வாங்கி, வாசம் பிடித்து, உச்சி முகர்ந்து, மென்மையாய் அவள் கன்னத்தில் முத்தமிட்டு மனைவியிடம் நீட்டினான் அவன்.

“ஒரு முத்தத்துக்கு கூட வழியில்ல” சத்தமாய் புலம்பினாள் சஹானா. அதைக் கேட்டு சிரித்தபடி காரில் ஏறினான் சத்யமூர்த்தி. 

அடுத்த முறை அவன், மகளைப் பார்க்க வீடு வர, அவனை வரவேற்றது பிரார்த்தனாவின் அழுகுரல் தான். வீரிட்டு அழுது வீட்டையே குலுங்க செய்துக் கொண்டிருந்தாள் அவள். 

“செல்லமே.. ஏன் அழறீங்க? அம்மா எங்க போனாங்க?” வேகமாய் மகளை கையில் அள்ளிக் கொண்டான் அவன். 

“அப்பா, வந்துட்டேன் தங்கம். அழக் கூடாது” அவனது சமாதானத்திற்கு எல்லாம் மசியவில்லை அவன் மகள். பசியில் உதடு பிதுக்கி அடித் தொண்டையில் இருந்து கத்தி, அழுதுக் கொண்டிருந்தாள் அவள். 

“வந்துட்டேன். வந்துட்டேன் குட்டி. ஒரு நிமிஷம்” சஹானா குளியல் அறைக்குள் இருந்து கத்தினாள். 

அடுத்த நிமிடமே சரியாக துடைக்கப்படாத ஈர உடலில் உடையை மாட்டியபடி அவள் கதவை திறக்க, கனல் விழிகளுடன் அவளை முறைத்துக் கொண்டிருந்தான் சத்யமூர்த்தி.

“சத்யா.. எப்போ வந்தீங்க? வர்றேன்னு சொல்லவே இல்ல?. பாப்பாவை என்கிட்ட குடுங்க” ஒரு கணம் தயங்கி பின் மகளை நீட்டினான் அவன். 

சஹானா சட்டென அமர்ந்து பாலூட்ட தொடங்க, “வீட்ல யாரும் இல்லையா? கேர் டேக்கர் எங்க?” கேட்டான் சத்யா. 

அவன் குரலில் இருந்த கோபத்தை உணர்ந்து, “இருங்க. ஃபீட் பண்ணிக்கிறேன்” என்றாள் சஹானா. 

ஆனால், மகள் பசியாறியதும் மனைவியை பேச கூட விடவில்லை சத்யமூர்த்தி.

“கிளம்பு” என்றான்.

“எங்க சத்யா?” குழப்பத்துடன் அவள் கேட்க, “நம்ம வீட்டுக்கு” என்ற சத்யா, மகளை தோளில் போட்டு தட்டிக் கொடுத்து, ஏப்பம் வரச் செய்துக் கொண்டிருந்தான்.

“இல்ல சத்யா. அம்மா வேலைக்கு போய் இருக்காங்க. எப்பவும் வர்ற ஆண்ட்டி இன்னைக்கு ஏதோ வேலைன்னு…”

“கிளம்பு சொன்னேன்” அந்த குரலை மீற அவளுக்கு தைரியம் இருக்கவில்லை. 

“சத்யா” அவள் மெதுவாக அழைக்க, மனைவியை திரும்பிக் கூட பார்க்காமல் மகளின் உடைகளை எடுத்துக் கொண்டிருந்தவன், “வா, அங்க போய் புதுசு வாங்கிக்கலாம்” என்றான். அதிர்ந்துப் போனாள் சஹானா. ஆனால், அது தான் நடந்தது. அவன் சொன்னதை தான் நடத்திக் காட்டினான்.

அவசர அவசரமாக அவர்களை கிளப்பிக் கொண்டு பொள்ளாச்சி வந்து விட்டான் அவன். 

சஹானா கைக்கு கிடைத்ததை அள்ளி பையில் திணித்தாள். அம்மா, அப்பாவுக்கு அழைத்து தெரியப்படுத்த, இருவரும் அடித்து பிடித்து வீடு வந்தனர். சத்யமூர்த்தி தன் முடிவில் உறுதியாய் நிற்க, “நல்ல நாள் பார்த்து பாப்பாவை கூட்டிட்டு போகலாம்..” என்று ஆரம்பித்த புனிதா கூட, மகளின் முகம் பார்த்து அமைதியானார். 

அவன் முன்னே வந்து நின்று, “சாரி, மாப்பிள்ளை” என்றார் முரளிதரன். 

“இல்ல மாமா. அங்க நம்ம வீட்ல, எங்க அம்மா வீட்ல தான் இருக்காங்க. அது போக வீட்டு வேலைக்கு ஆள் இருக்காங்க. அவங்களே சஹானாவையும், பாப்பாவையும் பார்த்துப்பாங்க. அதுக்கு தான் கூட்டிட்டு போறேன். நீங்க தப்பா நினைக்க வேண்டாம்” என்று அவன் சொல்ல, புரிதலுடன் தலையசைத்தார் அவர். அவர்களுக்கு மகளையும், பேத்தியையும் இப்படி அவசரமாக அனுப்புவது பிடிக்கவில்லை தான். ஆனாலும், மருமகனை எதிர்த்து எதையும் செய்ய தயங்கினர்.

சஹானா கணவனை தவறாமல் தவறாக புரிந்து கொண்டாள். அவன் மேல் அப்படியொரு கோபம் வந்தது அவளுக்கு. அம்மா வீட்டில் எந்தவித அழுத்தமும், கவலையும் இன்றி இருக்கவே அவளுக்கு பிடித்தது. 

தாய்மை அவளுக்கும் புதிது தானே. மகளை சரியாக கையாள அம்மாவின் உதவி அவளுக்கு அடிக்கடி தேவைப்பட்டது. அவள் உறக்கமின்றி சோர்ந்து அமரும் போதெல்லாம், புனிதா தான், அவளைத் தாங்கிக் கொண்டார். 

பிரார்த்தனா இரவு அழும் போதெல்லாம் அவளைத் தோளில் போட்டுக் கொண்டு வீட்டை நடையால் அளப்பார் முரளிதரன்.

“நீ தூங்கு சஹா” என்று அக்கறையாய் சொல்வார் தன் மகளிடம். 

இப்போது அவர்கள் இல்லாமல், எப்படி சமாளிக்க போகிறேன் என்று பயந்தாள் சஹானா. அதுவும் இப்படி சொல்லாமல், கொள்ளாமல் போய் அங்கு, நின்றால் மாமியார் எப்படி பேசுவார் என்பது அவளுக்குத் தெரியுமே. 

பொள்ளாச்சியில் முதல் சில வாரம் நன்றாக பார்த்து கொண்ட சுப்புலட்சுமி. பின்னர் தன் வேலையை செவ்வனே செய்தார். இத்தனைக்கும் சஹானாவின் பெற்றோர் பொள்ளாச்சி வந்து பேத்திக்கு சிறப்பாக நகை, உடை என செய்து விட்டேப் போனார்கள். ஆனாலும், திருப்தி அடையவில்லை அவர். 

சஹானா அதையெல்லாம் பொருட்படுத்தவேயில்லை. அவள் கண்கள் எல்லாம் கணவன் மேல் தான் இருந்தது. மகளை தாங்கும் அவனை முறைக்கவே அவளுக்கு நேரம் சரியாக இருந்தது. மகளிடம் குழையும் அவன் குரல் அவளுக்கு புதிது.

ஆனால், அவளின் கோபத்தை எப்போதும், அதே மகள் தனித்தது தான் ஆச்சரியமான அதிசயம். 

பணப் பிரச்சினையால் பாதியில் நின்ற ராதாவின் வீட்டு வேலை இப்போது துரித கதியில் நடந்துக் கொண்டிருந்தது. சில மாதங்களுக்கு முன்பே அப்பா, அண்ணன் என இருவரும் அவளுக்கு உதவி இருந்தனர். ஒரு கோடி என்று தொடங்கி, மூன்று கோடிக்கு பிரம்மாண்ட வீட்டை அவர்கள் எழுப்பியது தான் பிரச்சனையின் அடித்தளம் என்று ஆராய்ந்து அறிந்துக் கொண்ட சத்யமூர்த்தி, மனைவியுடன் விவாதித்து விட்டே தங்கைக்கு உதவினான். 

சில மாதங்களில் ராதாவின் வீடு அழகாக முழுதாக தயாராகி நின்றது. பெற்றோரை கிரகப்பிரவேசத்திற்கு அழைக்க வீடு வந்திருந்தாள் அவள். 

அன்று தான் சஹானாவிற்கு அப்படியொரு கோபம் வந்திருந்தது. கல்யாணமான நாளில் இருந்து அடிமனதில் அழுத்தி, அடக்கி வைத்திருந்த கோபம் வெடித்து வெளிவந்திருந்தது. மாமியாருக்கு தக்க பதிலடி கொடுத்து விட்டு, கணவனிடம் கூட சொல்லிக் கொள்ளாமல் வீட்டை விட்டு கிளம்பி விட்டாள் அவள். அவன் எப்படியும் தன்னைத் தேடப் போவதில்லை. மகளைத் தான் தேடுவான் என்பது அவளுக்கு நன்றாக தெரியுமே? பின் எதற்காக சொல்ல வேண்டும் என்றே நினைத்தாள் அவள். 

அன்று தங்கையின் தொடர் அலைபேசி அழைப்பை, முக்கியமான வேலைக்கு நடுவில் எரிச்சலுடன் தான் ஏற்றான் சத்யமூர்த்தி. 

“அண்ணி, பாப்பா தூக்கிட்டு அவங்க அம்மா வீட்டுக்கு போய்ட்டாங்க ண்ணா” என்ற தங்கையின் வார்த்தையில் ஒரு நொடி உலகம் தன் சுழற்சியை நிறுத்தி பின் இயங்கியது அவனுக்கு.

“என்ன சொன்ன?” நம்ப முடியாத அதிர்ச்சியுடன் கேட்டான். அவனிடம் எல்லாவற்றையும் வரி வரியாக ஒப்பிக்கும் மனைவி, சொல்லிக் கொள்ளாமல் தாய் வீடு செல்வதெல்லாம், அவனைப் பொறுத்த வரை நடக்கவே நடக்காத ஒன்று. ஆனால், நடத்திக் காட்டினாள் அவனின் சஹானா. 

வீட்டில் நடந்ததை விசாரித்து, அம்மா, அப்பாவுடன் பேசி விட்டு, தொழிற்சாலையில் வேலை முடித்து, அடுத்த சில நாட்களுக்கு வேலைகளை சரியான கைகளில் ஒப்படைத்து விட்டு, காரில் ஏறியவன் நேராக மனைவியின் வீட்டின் முன் வந்து தான் நிறுத்தினான். 

இப்போது கண்ணை திறந்து, தலையை திருப்பி மனைவியைப் பார்த்தான். 

மகளுக்கு உடை மாற்றிக் கொண்டிருந்தாள் அவள். 

என்ன பேசுவது, எப்படி பேசுவது, எதுவுமே புரியவில்லை அவனுக்கு. மனைவியின் கோபம் புரிந்தது. ஆனால், அதனை போக்கும் வழி தான் அவனுக்குத் தெரியவில்லை. 

“சஹானா” என்றான் மெல்ல. சட்டென அவனை நிமிர்ந்து பார்த்தாள் மனைவி.

Advertisement