Advertisement

கணவனைப் பார்த்ததும் வலியையும் மீறி புன்னகைக்க முயன்றாள் சஹானா. கார் கதவை விரிய திறந்து வைத்து விட்டு, ஓடி மனைவியிடம் வந்தான் சத்யமூர்த்தி. 

“வீட்ல யாரும் இல்ல?” அவன் கேட்க, மறுப்பாக தலையசைத்தாள் சஹானா.

“உங்கம்மா எங்க?” என்ற அவனின் கேள்வியில் நிச்சயம் கோபமிருந்தது.

“சத்யா” வலியில் கத்தியவளால் அதற்கு மேல் வேறொன்றும் சொல்ல முடியவில்லை.

மெல்ல நடத்தி அவளைக் காரில் ஏற்றினான் சத்யா. ஓட்டமும், நடையுமாக அந்நேரம் அங்கு வந்து நின்றார் முரளிதரன். 

“மாப்பிள்ளை, வாங்க” என்றவர், “சஹாக்கு வலி வந்துடுச்சுன்னு சொன்னாங்க. சஹா என்ன சொல்றா?” பதறி கேட்டபடி ஓடி அருகில் வந்தார் முரளிதரன். 

பக்கத்து வீட்டுப் பெண்மணிக்கு நன்றி சொல்லி அனுப்பி விட்டு, மருமகன் நீட்டிய கார் சாவியை வாங்கிக் கொண்டு ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து வண்டியை கிளப்பினார் முரளிதரன். சத்யா மனைவியுடன் பின்னால் அமர்ந்து விட்டான்.

“சஹானா” 

“ஆஆ.. சத்யா, இப்படி வலிக்கும்னு தெரியாதே” பல்லைக் கடித்துக்கொண்டு ஒவ்வொரு வார்த்தையாக உச்சரித்தாள். புனிதா பலமுறை அவளுக்கு விளக்கி இருந்தார் தான். ஆனால், அனுபவிக்கும் போது தான் வலியின் அளவு தெரிந்தது. 

“ம்ம்” ஒரு கரத்தால் அவள் கையை இறுக பற்றி, மறுகரத்தால் அவளின் முதுகை தட்டிக் கொடுத்தபடி அமர்ந்திருந்தான் சத்யா. 

ஐந்தே நிமிடத்தில் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு வந்து விட்டார்கள் அவர்கள். முரளிதரனுக்கு அங்கு அனைவரையும் தெரிந்திருந்தது. சஹானா நேராக பிரசவ அறைக்கு கொண்டுப் போகப்பட்டாள். 

“சத்யா” வலியை மீறிய தேடல் அவள் குரலில். மௌனமாய் மனைவியின் கையை தன் கரங்களுக்குள் பொதிந்து அழுத்திக் கொடுத்தான் சத்யா. தொண்டைக்குழியை யாரோ நெரிக்கும் உணர்வில் பேச்சு வரவில்லை அவனுக்கு.  

அவனையே விழி எடுக்காமல் பார்த்தபடி அறைக்குள் போனாள் சஹானா. புனிதாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட, அடுத்த ஒரு மணி நேரத்தில் அங்கிருந்தார் அவர். அப்போதும் வலியில் துடித்துக் கொண்டு தானிருந்தாள் சஹானா. 

பிரசவ அறைக்குள் சென்று மகளை ஒரு முறை பார்த்து, பரிசோதித்து விட்டு அவர் வெளியே வர, “என்னாச்சு அத்த?” என்று கேட்டான் சத்யமூர்த்தி.

“கொஞ்ச நேரத்துல டெலிவரி ஆகிடும் மாப்பிள்ளை. நான் இங்க பார்த்துக்கறேன். நீங்க, உங்க மாமா கூடப் போய் டீ, டிஃபன் சாப்பிட்டுட்டு வாங்க” என்றவர், கணவரிடம் திரும்பி, “கூப்பிட்டுட்டு போங்க சஹாப்பா” என்று சொல்ல,

“இல்ல. எனக்கு எதுவும் வேணாம்” என்று அழுத்தமாய் மறுத்து விட்டான் சத்யா. அந்த குரலை கேட்ட பின்பு, அவர்களுக்கும், அவனை வற்புறுத்த தயக்கமாக இருக்க, சரியென்று நகர்ந்தனர்.

மேலும், ஒரு மணி நேரம் கழிந்தும் கூட அவன் அங்கிருந்து நகரவேயில்லை. 

முன்தின இரவு மனைவி பேசியது தான் அவனுக்கு மனதில் வலம் வந்தது. மாலை ஆறு மணிக்கு ஒருதரம், பின் இரவு பத்து மணி போல உறங்கச் செல்லும் முன் ஒருதரம் என்று தவறாமல் கணவனை அழைத்து விடுவாள் சஹானா. நேரம் மாறுமே தவிர, அழைக்காமல் இருந்தது இல்லை அவள். 

பட்டாசாய் படபடப்பாள் அவனிடம். அவனது வழக்கமாக, “ம்ம்” சொல்லிக் கொண்டிருப்பான் அவன். 

நேற்று மனைவியின் குரலில் லேசான மாற்றம் உணர்ந்து, “சஹானா” என்றான். அவள் வலியைப் பற்றி பேசவேயில்லை. “தூக்கம் வருது சத்யா. ஒரு மாதிரி டையர்டா இருக்கு. படுக்கப் போறேன்” என்றவளின் குரல் அவன் செவியில் நிறைய, மீண்டும், “சஹானா” என்றான்.

“தூங்குங்க சத்யா. பை” என்று வைத்து விட்டாள் அவள். அவனும் படுக்கையில் சரிந்தான். ஆனால், உறக்கம் தான் வரவில்லை. அலுவலக வேலையை சிறிது நேரம் பார்த்து விட்டு, படுக்கச் சென்றான். இப்போது சஹானாவின் நினைவே அவனது தூக்கத்தை பறிக்க, உதட்டில் நெளிந்த குறுஞ்சிரிப்புடன் கண்ணை மூடினான். 

நள்ளிரவு நெருங்கும் போது தொண்டை வறண்டு உறக்கம் கலைய, பட்டென எழுந்து அமர்ந்து விட்டான் அவன். படுக்கைக்கு எதிரே இருந்த சுவரில் இருந்து, விடிவிளக்கு வெளிச்சத்தில் சஹானா சிரிப்புடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவர்களின் முதல் திருமண நாளின் போது எடுத்த புகைப்படம் அது. 

அவனை உரிமையும், காதலுமாய் ஒட்டிக் கொண்டு நின்றிருந்த சஹானா, “சிரிங்க, சத்யா. அதுக்கெல்லாம் காசு கேட்க மாட்டாங்க” என்று கேலியாக சொல்ல, அவனும் மெலிதாக சிரித்திருந்தான் அந்த புகைப்படத்தில். 

அடர் பீச் (Peach) நிற உடலும், காஃபி நிற பார்டரும் கொண்ட ஷிஃபான் சில்க் சேலையில் அத்தனை அம்சமாய் இருந்தாள் சஹானா. அவனும் அதே நிற சட்டை, பட்டு வேட்டியில் இருந்தான். இருவரின் சிரிப்பும், மகிழ்வும் இப்போது பார்க்கையிலும் அவனுக்கு அத்தனை இதமாய் இருந்தது. 

ஆனால், அந்த இதத்தை தாண்டி, மனதில் இனம் புரியா தவிப்பு சூழ, மனைவியிடம் பேச அலைபேசியை கையில் எடுத்தான் அவன். நேரம் அதிகாலை 2.30 என்றது அலைபேசி திரை. அந்நேரம் மனைவியை எழுப்ப மனமில்லை அவனுக்கு. ஆனாலும், ஏதோ உள்ளுணர்வில் சட்டென எழுந்து உடை மாற்றி, காரை எடுத்து விட்டான் சத்யமூர்த்தி.

ஐந்தே மணி நேரத்தில் வண்டிப் பெரியாரை தொட்டு விட்டான் அவன். சஹானாவின் வீடிருக்கும் பகுதியில் அவன் நுழையும் நேரம் அவளிடமிருந்தே அழைப்பு வர, காரின் வேகத்தை கூட்டினான். சரியாக அவன் காரை நிறுத்தும் நேரம் சஹானாவும் வெளியில் வந்தது அவன் எதிர்பாராதது. ஆனால், அந்த கணம் அவன் மனதில் வந்த அமைதியை அவனால் என்றுமே வார்த்தைகளில் வடித்திட முடியாது. 

“அம்மா.. சத்யா.. அவரை கூப்பிடுங்க மா.. பார்க்கணும் எனக்கு” உள்ளிருந்து வந்த மனைவியின் குரல் அவனை கலைக்க, தன் நடையை நிறுத்தி விட்டு நின்றான் அவன். 

“அவங்களை உள்ள விட மாட்டாங்க சஹா. கொஞ்சம் வலி பொறுத்துக்கோ மா. இதோ, இப்போ பிறந்திடுவா உன் பொண்ணு” புனிதா மகள் என்று சொன்னதும், ஆச்சரியமாக அவரைப் பார்த்தாள் சஹானா. பல முறை அவளோடு ஸ்கேன் எடுக்க துணை வந்திருக்கிறார் புனிதா. அப்போது திரையை பார்த்தே அவரின் அனுபவத்தில் கணித்திருப்பார் என்பது அவளுக்கு புரிய, “பொண்ணா மா?” மூச்சு வாங்க வினவினாள் சஹானா.

சன்ன சிரிப்புடன், “அப்படித் தான் இருக்கும்னு நினைக்கறேன் சஹா. இப்போ புஷ் பண்ணு பார்ப்போம். ம்ம், நல்லா” என்று அவர் சொல்ல, அறைக்கு வெளியே நின்றிருந்த சத்யமூர்த்திக்கு அது அரைகுறையாக காதில் விழுந்தது. 

மேலும் சில மணி நேரம் கழிய, “அவரை கூப்பிடு மா, பிளீஸ். என்னால முடியல. சிசேரியன் பண்ண சொல்லு மா” கதறிக் கொண்டிருந்தாள் சஹானா.

“சஹா, பயப்படாத. ஒன்னுமில்ல டா. இங்க பாரு. அம்மா பாரு. பாப்பா இப்ப பொறந்திடுவா. இப்ப தான் கர்ப்ப வாய் திறந்திருக்கு. நீ நல்லா புஷ் பண்ணா, பத்து நிமிஷம் தான். வலி பொறுத்துக்கோ சஹா” புனிதா, அதட்டலும், கெஞ்சலுமாக சொல்லிக் கொண்டிருக்க அவரைத் தொடர்ந்து ஒலித்தது பெண் மருத்துவரின் குரல். 

சத்யமூர்த்தி தனது முப்பது வருட வாழ்க்கையில் எதற்கும் இப்படி பயந்தது கிடையாது. தவித்து, துடித்து, வியர்த்து, ஏதும் செய்ய இயலா பரிதவிப்பில் கையை பிசைந்துக் கொண்டு நின்றிருந்தான் அவன். மனம் அவனது இஷ்ட தெய்வங்கள் அனைவரிடமும் தன்னிச்சையாக பிரார்த்தனை செய்தது. மனதில் மனைவிக்காகவும், மகளுக்காகவும் பிரார்த்தனை செய்து கொண்டேயிருந்தான் அவன்.

“டீ, குடிங்க மாப்பிள்ளை” முரளிதரன் நீட்டிய கோப்பையை மறுக்காமல் வாங்கிக் கொண்டான் அவன். நேரம் நண்பகலை தாண்டிக் கொண்டிருக்க, அவனுக்கு பசியே மரத்திருந்தது. மனைவி முகம் பாராமல் உணவு தொண்டைக்குள் இறங்காது என்று தோன்றியது. 

“அம்மா” என்ற மனைவியின் அலறல் அவன் காதை அறைய, “நாம அந்த பக்கம் போய் வெயிட் பண்ணுவோம், வாங்க மாப்பிள்ளை” என்று அழைத்தார் முரளிதரன். சத்தியமூர்த்தி நகரவேயில்லை.

சஹானாவின் கதறல் கேட்க கேட்க, தலைக் கோதி கொண்டான். ஐந்து நிமிடம் தொடர்ந்தது அவள் குரல். ஆறாம் நிமிடம் அவனது தேவதையின் அழுகை, அவன் முகத்தில் புன்னகையை தோற்றுவித்தது. 

“பொண்ணு சஹா, உன்னை விட அழகா இருக்கா” மருத்துவரின் குரல் கேட்க, மலர்ந்து சிரித்தான் சத்யா. 

“வாழ்த்துகள் மாப்பிள்ளை” மருமகனின் தோளில் தட்டிச் சொன்னார் முரளிதரன். அவருக்கு புன்னகையை நன்றியாக கொடுத்தான் அவன். அரைமணி நேரம் கழித்து அறைக்குள் அவனை அனுமதித்தனர். 

“சஹானா” மெல்ல அழைத்தான். 

“உங்க பொண்ணு சத்யா, பாருங்க. ஆனா, வாய் என்னை போல இருக்கு. எப்படி கத்தி அழுதா தெரியுமா? உங்களுக்கு வெளில கேட்டுச்சா?” அவன் விரல் பிடித்து அவள் கேட்க, புன்னகைத்தான் சத்யா. மனைவியின் படுக்கையில் அமர்ந்து தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த மகளையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

“அம்மா” சஹானா சத்தமாக அழைக்க, உள்ளே வந்தார் புனிதா.

“பாப்பாவை தூக்கி இவர் கிட்ட கொடுங்க மா” மகள் சொன்னதை செய்தார் புனிதா. 

ரோஜா நிறத்தில் கண் மூடியிருந்த அவனது தேவதையின் செப்பு வாயையும், மூக்கையும் ஒற்றை விரலால் மென்மையாய் வருடினான் சத்யா. அவன் முகத்தில் தெரிந்த மென்மையையும், மகிழ்ச்சியையும் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் சஹானா.

அன்று பிரார்த்தனா மட்டும் பிறக்கவில்லை. அவளோடு கூடவே சத்யமூர்த்தியும் புதிதாக பிறந்திருந்தான், அப்பாவாக.

சஹானா அதுவரை பார்க்காத ஒரு சத்யமூர்த்தியை அன்றிலிருந்து பார்க்கத் தொடங்கினாள். 

சுக பிரசவம் என்பதால் மூன்றாம் நாளே வீடு திரும்பி விட்டனர். 

சத்யமூர்த்தியின் குடும்பம் மொத்தமும், குழந்தை பிறந்த மறுநாளே வண்டிப் பெரியார் வந்து விட்டனர். 

ராதாவும் அவளது குடும்பமும் குழந்தையை பார்த்து விட்டு அன்று மாலையே கிளம்பி விட, தொழிலை பார்க்க வேண்டியிருந்ததால் அவர்களோடு கிளம்பி விட்டார் பாலகுமார். சுப்புலட்சுமி மட்டும் சஹானா வீடு திரும்பும் வரை அவளோடு இருந்தார். 

வீடு வந்த பின்னரும், இரண்டு நாட்கள் தங்கியிருந்து விட்டே கிளம்பினார் அவர். மருமகளுக்கு கொடுக்க வேண்டிய பத்திய உணவுகள், குழந்தையை பராமரிக்கும் விதம் என அனைத்தை பற்றியும் புனிதாவிற்கு விளக்கி விட்டே சென்றார் அவர். 

சஹானாவின் கவனம் முழுவதும் கணவனின் மேல் தானிருந்தது. குழந்தை விழித்திருக்கும் போதெல்லாம் அவளிடம் பேசிக் கொண்டிருந்தவனை அதிசயம் போல பார்த்தாள் அவள்.

“ஹாஸ்பிட்டல்ல பிள்ளை தானே மாறிப் போகும். ஆனா, இங்க?” என்று கேலியாக சொல்லியபடி அவனைப் பார்க்க, அவன் எங்கே அவளை கவனித்தான். 

“பிரார்த்தனா குட்டி, அழகு செல்லம், அப்பா பாருங்க” என்று மகளை கொஞ்சிக் கொண்டிருந்தான் அவன்.

“ஆ, உங்களுக்கு இப்படி கொஞ்ச எல்லாம் வருமா சத்யா? இந்த குரல் இதுக்கு முன்னாடி எங்க இருந்தது?” என்று ஆச்சரிய மிகுதியில் கத்தியவளை, தலையை மட்டும் உயர்த்திப் பார்த்து முறைத்தான் சத்யா. 

“ம்க்கும், அதானே பார்த்தேன். எனக்கு எப்பவும் இந்த முறைப்பு தான்” அவள் புலம்ப, சிரிப்பை மறைக்க உதட்டை கடித்தான் சத்யா. 

“ஆமா சத்யா, அதென்ன பிரார்த்தனா சொல்லி கூப்பிடுறீங்க?” அவள் கேட்க,

“பொண்ணு பேரு” என்றான், மகளின் கன்னத்தை இரு விரலால் தொட்டு தொட்டு பார்த்தபடி. 

“ஆ.. என்னது? அதுக்குள்ள பேர் வச்சுட்டீங்களா? பேர் வைக்க என்னை கூப்பிடவே இல்ல.” அவள் அதிர்ந்து கத்த, புருவங்கள் நெரிய மனைவியை முறைத்தான் சத்யா. 

“பார்வையை பாரு. எப்பவும் முறைப்பு தான். ஆனா, பொண்ணை பார்த்தா மட்டும் கண்ணுல பாசம் கொட்டுது.” அவள் சலிக்க, கண்ணை சுருக்கி முறைத்தான்.

“டி மகளே. நீ கூட என்னை கூப்பிடல இல்ல?. அம்மா வராமலேயே உனக்கு பேர் சூட்டும் விழா முடிஞ்சதா?” மகளை பார்த்தபடி சஹானா கேட்க, “வாய், வாய்” என்று முணுமுணுத்தான் சத்யமூர்த்தி.

“இந்த வாய் கூட இல்லனா, உங்க கூட நான் குடும்பம் நடத்த முடியுமா சொல்லுங்க?” என்றவளின் உதட்டில் கை வைத்து அவளின் பேச்சை நிறுத்தினான் சத்யமூர்த்தி. 

அவன் கையை பிடித்து விரல் கோர்த்துக் கொண்டு, “பாப்பாக்கு உ வரிசையில் பேர் வைக்க தானே சொல்லியிருக்காங்க அவ ராசிப்படி? நீங்க பிரார்த்தனா சொல்றீங்க?” சஹானா கேட்க, “பிரார்த்தனா, தான்” முடிவாக முடித்து விட்டான் சத்யமூர்த்தி. மகள் பிறந்து ஒரு வாரத்தில் பொள்ளாச்சி திரும்பி விட்டான் அவன். 

மகளுக்கு பெயர் சூட்டும் விழாவிற்காக மீண்டும் வண்டிப் பெரியார் வந்தான் அவன். இம்முறையும் அவன் விருப்பம் தான் வென்றது. மகளுக்கு, “பிரார்த்தனா” என்றே பெயர் சூட்டினான்.

மகளுக்கு அவன் வைத்த பெயரை ஒட்டு மொத்த குடும்பமும் வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டது. 

Advertisement