Advertisement

மறுநாள் அதிகாலையில் மகளைப் பார்க்க வந்து விட்டார் புனிதா. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை தவறாமல் வந்து விடுவார் அவர். இம்முறை வளைக்காப்பு பற்றி அவர் பேச, “கணவனை பிரிய வேண்டுமா?” என்று மனதில் திடுக்கிட்டு விழித்தாள் சஹானா.

“இப்பவேவா வளைகாப்பு பண்ணுவாங்க மா?” என்று அப்பாவியாக கேட்ட மகளை, கன்னம் வழித்து நெட்டி முறித்தார் புனிதா. 

“அஞ்சாவது மாசம் ஆகுது இல்ல சஹா? அஞ்சு, ஏழு, ஒன்பது இப்படி செய்வாங்க டா”

“தெரியும் மா. ஆனா…”

“சரி, விடு. ஏழாம் மாசம் செய்துக்கலாம்” என்றவர், அதையே சுப்புலட்சுமியிடமும் சொல்லி விட்டு கிளம்பினார். 

சத்யமூர்த்தி துணை வர, அம்மாவோடு மருத்துவமனை சென்று திரும்பி வந்திருந்த சஹானாவிற்கு அன்றிரவு அம்மாவை அதிகம் தேடியது. 

“சத்யா” 

“ம்ம்”

“நான் ஊருக்கு போகட்டா”

“ஒன்பதாம் மாசம் போறேன் சொன்ன?”

“இப்பவே போகட்டா?” மெல்ல தலையை தூக்கி அவனைப் பார்த்துக் கேட்டாள்.

“தூங்கு”

“முடியாது. பதில் சொல்லுங்க”

“தூங்கு” கட்டளையாய் வந்து விழுந்தது வார்த்தை.

“மிண்டா பிராணி, போகாத பொண்டாட்டி. நீயில்லாம, நான் எப்படி தனியா இருப்பேன்னு சொல்லுறாரா பார். வராது. வார்த்தையை நான் தான் பிடுங்கணும்” அவள் சலிக்க, “ரொம்ப பேசுற” என்றவன், அவள் கழுத்தை வளைத்து வாயை மூடினான். 

“ஆ, கள்ள பூச்சா” (திருட்டு பூனை) மூச்சு வாங்க, அவள் முறைக்க, 

“ஆமா. என்ன இப்போ?” என்ற அவனின் கேள்வி தந்த அதிர்ச்சியில் மீன் குஞ்சை போல சஹானா வாயை மூடி, மூடித் திறக்க, அதை உரிமையாக முத்தமாக மூடினான் சத்யமூர்த்தி. அவனுக்கு வேண்டியதை இதமாய் திருடி, அவளுக்கும் பகிர்ந்து, அவன் படுக்கையில் சரிய, சத்யாவின் மார்பில் சரிந்தது அதுவரை அவன் மீட்டிய சஹானா ராகம். 

அவன் அன்பில் கரைந்தவள், அம்மா வீடு போகும் எண்ணத்தையே மறந்திருந்தாள். சாதூர்யமாக அவளை மறக்கடிக்க செய்திருந்தான் சத்யமூர்த்தி. 

ஆனால், சஹானா ஒரே மாதத்தில் தன் முடிவை மாற்றிக் கொண்டாள். கர்ப்ப கால ஹார்மோன்கள் அவள் உடலில் ஏற்கனவே தாறுமாறாக தடுமாறிக் கொண்டிருக்க, அவளை தன் பேச்சால், கோபத்தில் கொந்தளித்து, கதகளி ஆட வைத்தார் சுப்புலட்சுமி.

எதையேனும் அர்த்தமில்லாமல் பேசியபடி இருந்தவரை பரிதாபமாக பார்த்தாள் சஹானா.

“நீங்க என்னை ராதா அண்ணி போல எல்லாம் பார்க்க வேணாம்த்த. உங்க மகனோட வைஃபா பாருங்க. போதும். அதுவும் முடியலைன்னா, அட்லீஸ்ட் ‍மாசமா இருக்க ஒரு பொண்ணாவாவது பாருங்க” தீர்க்கமாக சொன்னவளை, அதிர்ச்சியுடன் பார்த்தார் சுப்புலட்சுமி.

தவறு செய்யும் மனிதர்களுக்கு அதைச் சுட்டிக் காட்டும் மனிதர்களை பிடிப்பது இல்லையே.

“இப்ப என்ன சொல்லிட்டேன்னு இப்படி பேசுற நீ? வயிறு பெருசா இருக்கு. பொம்பளை பிள்ளையா இருக்கும் போல சொன்னேன். அது தப்பா?” என்று சத்தமாக சொன்னவர், “எங்க குடும்பத்துல எப்பவும் மொத புள்ளை, ஆம்பளை புள்ளை தான். எனக்கு கூட எங்க சத்யா தான்..” அவர் பேச பேச ஏனோ சஹானாவின் ரத்த அழுத்தம் உயர்ந்தது.

சட்டென்று அங்கிருந்து நகர்ந்து விட்டாள் அவள். 

“இதெல்லாம் என் பையன் கொடுக்குற இடம். பேசிட்டு இருக்கேன். எப்படி திமிரா போறா பாரு” அவர் கத்த, “அடப்போ, மாமியாரே” என்று மனதில் நினைத்துக் கொண்டு நடந்து விட்டாள் சஹானா. 

அன்று காலையில் அவள் தாமதமாக எழ, அவளை வீட்டில் ஓய்வெடுக்க வற்புறுத்தி விட்டு சத்யமூர்த்தி தொழிற்சாலை சென்றிருந்தான். அமைதியாய் சென்று பயண கட்டுரை ஒன்றை எழுத அமர்ந்தாள் சஹானா. 

மறுநாளே வேறொரு பேச்சு, அதற்கடுத்த நாள் மற்றொன்று என்று சுப்புலட்சுமி தன் மாமியார் கடமையை சரியாக நிறைவேற்ற, அவரின் அன்பை, அக்கறையை தாண்டி, இக்கரை தான் கசந்தது சஹானாவிற்கு.

மாதா மாதம் பிறந்த வீடு வரும் ராதா கூட, “நீயென்ன மா இப்படி இருக்க? எங்க அத்தையை விட மோசமா நடந்துக்கற மா” என்று அவரை கண்டிக்க, 

“ஆமா டி. நீ ஒருத்தி தான் பாக்கி. இப்போ நீயும் அவளுக்கு சப்போர்ட்டா பேசு. உனக்கு காசு கொடுக்க விடாம உங்க அண்ணனை அவ தான் தடுக்கறா. ஆனா, நீ? அவகிட்ட பல்லை காட்டிட்டு இருக்க?” என்று மகள் மேலும் பாய்ந்தார் சுப்புலட்சுமி.

“அம்மா, அண்ணா ஏற்கனவே 30 லட்சம் கொடுத்து இருக்கு மா. அதுக்கும் மேல அண்ணா கிட்ட கேட்கிறது என்ன, எதிர்பார்க்கிறது கூட தப்பு மா” நியாயமாக பேசிய மகளை அநியாயமாக முறைத்தார் அவர்.

“இப்படியே பிழைக்க தெரியாம இரு” சத்யமூர்த்தியின் அம்மாவாக சுப்புலட்சுமியை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை சஹானாவால். இருவரின் குணமும் நேரெதிர் தான். சத்யமூர்த்தியின் சொல்லில், செயலில் சத்யம் இருக்கும். ஆனால், அது எதுவும் சுத்தமாக சுப்புலட்சுமியிடம் இல்லை.

“தெய்வமே” என்றபடி அவள் நகர, “என்ன பெரிய அண்ணி? இவ வீட்ல இருந்து நாளைக்கு வளைகாப்பு பண்ணா நாலு கண்ணாடி வளையல் போடுவா இவ அம்மா. அவ்ளோ தான் வசதியும், பவுசும்…” மாமியாரின் வார்த்தைகளை அசட்டையாய் உதறி விட்டு அறைக்குள் வந்தாள்.

“சத்யா” இரவு தொழிற்சாலையில் இருந்து வந்து, குளித்து, உடை மாற்றிக் கொண்டிருந்தவன், அப்படியே திரும்பினான். அவனுக்கு சட்டை பொத்தான்களை போட்டு விட்டபடி, “அம்மாகிட்ட ஏழாம் மாசம் வளைகாப்பு நடத்தச் சொல்லிட்டேன். அத்தகிட்ட பேசுறேன், சொன்னாங்க அம்மா” கோபத்தில் அவன் புருவங்கள் நெரிய, ஒற்றை விரல் நீட்டி அதை நீவி விட்டாள் சஹானா.

அவனை இடித்து கொண்டு நின்றிருந்தவளின் வயிற்றில் கைப் பதித்து, சத்தமில்லாமல் குழந்தையின் அசைவை உணர்ந்து கொண்டிருந்தான் சத்யமூர்த்தி. 

மனைவியையும், அவள் வயிற்றில், அவளைப் போலவே உற்சாகமாக உலா வரும் தன் குழந்தையையும் பிரியவே அவனுக்கு மனமில்லை. 

“ஒன்பதாம் மாசம் போறேன் சொன்ன?”

“ஆங். இதை ஒன்னு சொல்லிடுவார்.” என்று உதட்டை சுளித்த சஹானா, “இல்ல. இப்ப போறேன்” என்றாள்.

“இப்பவா?” அவன் அதிர,

“ம்ம். நாளைக்கு ஏழாம் மாசம் ஆரம்பிக்குது” என்றாள் அவன் முகம் பார்த்து, மெல்ல அவளை விலக்கி விட்டு அவன் நகர,

“ஐயோ சத்யா. பதில் சொல்லுங்க”

என்றவளை அவன் முறைக்க, “அத்த, ரொம்ப பேசுறாங்க. எனக்கு ரொம்ப ரொம்ப கோபமா வருது. ஏதாவது பேசிடுவேனோன்னு பயமா இருக்கு. வார்த்தையை விட்டுட்டு நான் வருத்தப்பட கூடாது இல்ல?” அவள் கேட்க, இடக்கரத்தால் தலைக் கலைத்து கோதினான் சத்யமூர்த்தி.

அவன் அமைதியை அவள் பேச்சு வென்றிருந்தது. இரண்டு நாட்கள் அடம் பிடித்து, அவனுடன் சண்டையிட்டு அவனை சம்மதிக்க வைத்தாள் சஹானா. 

மறுநாளே நாள் குறித்தனர். அதற்கடுத்து வந்த பத்தாம் நாள், சஹானாவின் பெற்றோர் சத்யமூர்த்தி குடும்பம் எதிர்பார்த்த படி நிறைவாக அவர்களின் மருமகளுக்கு வளைப்பூட்டி பிறந்த வீட்டுக்கு அழைத்துக் கொண்டனர். 

மகளுக்கு ஏழு பவுனில் தங்க வளையல் போட்டார் புனிதா. அழகாய் நேர்த்தியாய் செய்யப்பட்ட, பொடி கற்கள் பதிக்கப்பட்ட பொன் வளையல்கள் கண்ணாடி வளையல்களோடு, சஹானாவின் கையில் சேர்ந்து குலுங்கியது.

வளைகாப்பு முடிந்து மனைவியோடு, கணவன் வரக் கூடாது என்று சத்யமூர்த்தியை தடுத்து விட்டு, சஹானாவை மட்டுமே ஊருக்கு அழைத்துச் சென்றனர்.

“கால் பண்ணு” என்றான் சத்யா, மனைவியின் கையை இறுக்கமாக பற்றி. “ஐயடா. அப்படியே எடுத்து என்னம்மானு கேட்டுட்டு தான் மறுவேலை பார்ப்பார்.” மூக்கை சுருக்கி, உதட்டை சுழித்து, ஒழுங்கு காட்டி அவள் சொல்ல, “எடுப்பேன். உடம்பை பார்த்துக்கோ” என்றவனின் வலக்கரம் அழுத்தமாய் அவளின் வயிற்றின் மேலிருந்தது. கணவனை இறுக்கமாக அணைத்து முத்தமிட்டு அவனிடம் விடைப் பெற்றாள் சஹானா.

அவர்கள் வீட்டை சென்று அடையும் போதே இரவாகி இருந்தது. மறுநாள் விடியலில் சத்யமூர்த்தி அவளின் பக்கத்தில் இருந்து அவளை ஆச்சரிய மூட்டினான். 

அதே போல வாரா வாரம் தவறாமல், கொஞ்சமும் சலிப்படையாமல், பொள்ளாச்சி டூ வண்டிப் பெரியார் வண்டி ஓட்டினான். 

சமயங்களில் வார நாட்களில் கூட வந்தான். சஹானா சந்தோஷமாக அவன் வரவை எதிர் நோக்கினாள். 

சஹானாவிற்கு ஒன்பதாம் மாதம் தொடங்கியதும், வேலையில் இருந்து மூன்று மாத விடுமுறை எடுத்து விட்டார் புனிதா. அதுவரை மகளை வேலைக்கு சென்று கொண்டே கவனித்தவர், இப்போது கூடவே இருந்து கண்ணாக பார்த்துக் கொண்டார். 

ஒன்பதாம் மாத இறுதியை நெருங்கி கொண்டிருந்தாள் சஹானா.

இரவு உணவுக்கு பின் அம்மாவோடு வீட்டுத் தோட்டத்தில் நடை பயின்று கொண்டிருந்தாள் அவள்.

“ம்மா, நடக்க முடியல. வயிறு, இடுப்பு எல்லாம் என்னமோ பண்ற மாதிரி இருக்கு” மூச்சு வாங்க மகள் சொல்ல, அந்நொடி செவிலியாக அனுபவம் வாய்ந்த புனிதா, மகளுக்காக லேசாக பதறவே செய்தார். 

“வா, வா, இப்படி உட்காரு சஹா” மகளின் கைப் பிடித்து அவர் சொல்ல, மகளுக்காக விரைந்து அவள் அமர இருக்கையை எடுத்துப் போட்டார் முரளிதரன்.

“எப்படி வலிக்குது சொல்லு சஹா”

“சொல்லத் தெரியல மா” என்றாள் மிரண்ட பார்வையுடன். 

“சரி வா. உள்ள போகலாம்” ஆழ மூச்சுகள் எடுத்து, தன்னை நிலைப்படுத்தி கொண்டு மெதுவாக எழுந்தாள் சஹானா.

“இப்போ வலிக்கல மா” என்றாள் ஆச்சரியமாக, “ஃபால்ஸ் பெயினா இருக்கும்” என்ற புனிதா, அறைக்குள் வந்ததும் மகளை ஒருமுறை பரிசோதித்து நிம்மதியாக நிமிர்ந்தார்.

“இன்னும் நாள் இருக்கு சஹா. பயப்படாம ரிலாக்ஸ்டா இரு” அவர் சொல்ல, தலையசைத்தாள் சஹானா.

இரவு கணவனிடம் வழக்கம் போல சில நிமிடங்கள் பேசி விட்டு படுக்கைக்கு போனாள் அவள். 

அதிகாலையில் புனிதாவின் அலைபேசி அடிக்க, தூக்க கலக்கத்துடன் எழுந்து அழைப்பை ஏற்றார் அவர்.

அவருக்கு மருத்துவமனையில் இருந்து அவசர அழைப்பு வந்திருந்தது. சுற்றுலா தளத்திற்கு பெயர் போன அவர்கள் ஊரில் சுற்றுலா வந்த வாகனங்கள் விபத்துக்கு உள்ளாவது அடிக்கடி நடக்கும் ஒன்று. அன்றும் ஒரு மோசமான விபத்து. ஆறேழு உயிர்கள் போராடிக் கொண்டிருக்க, அனுபவம் மிக்க அவரின் தேவை மருத்துவமனைக்கு வேண்டியிருக்க, உறங்கும் மகளை மெல்ல எழுப்பினார் புனிதா.

“சஹா, இப்போ எப்படி ஃபீல் பண்ற?”

“ம்ம். தூக்கம் தான் வருது மா”

“அம்மா, ஒரு டைம் செக் பண்ணி பார்க்கவா?”

“வேணாம் மா” என்றபடி அவள் கண் மூட,

“அம்மாக்கு ஹாஸ்பிட்டல்ல இருந்து எமர்ஜென்சி கால் வந்திருக்கு சஹா. அம்மா போய்ட்டு வரட்டா? நீ தனியா இருந்துப்ப தானே? மதியத்துக்குள்ள அம்மா வந்துடுவேன் டா” கரிசனத்துடன், தாயாக கவலையுடன் அவர் கேட்க,

“போய்ட்டு வாங்க மா. டெலிவரிக்கு நாள் இருக்கே. ஒருவேளை வலி வந்தா, நான் போன் பண்றேன். அப்பா கூட்டிட்டு நேரா ஹாஸ்பிட்டல் வர்றேன் மா” என்று திடமாக பேசினாள் சஹானா. விடுமுறையில் இருந்த அம்மாவை அவசரமாக பணிக்கு அழைக்கிறார்கள் என்றால், அவரின் தேவை அங்கே கட்டாயம் என்று அவளுக்கு புரிந்ததால், அம்மாவை தைரியம் பேசி அனுப்பி வைத்தாள் சஹானா.

ஏழு மணி போல காலை உணவை அப்பாவுடன் உண்டு, அவர் மருந்தகம் கிளம்பவும் அறைக்கு வந்தாள். அந்நேரம் வீட்டு அழைப்பு மணி ஒலித்தது.

அவர்களின் பக்கத்து வீட்டு அக்கா வந்து நின்றார்.

“அம்மா போன் பண்ணாங்க சஹா. உனக்கு துணைக்கு இருக்க சொன்னாங்க.” என்றபடி அவர் வீட்டினுள் வர, புன்னகைத்தாள் சஹானா. 

இருவரும் ஹாலில் அமர்ந்து தொலைக்காட்சியில் மூழ்கிய சில நிமிடங்களில் எல்லாம் சஹானாவை சூழ்ந்தது அவஸ்தையான உணர்வு.

அடிவயிற்றை யாரோ இறுக்கி, கிடுக்கு பிடி போட்டு பிடிப்பது போல ஒருவித அசௌகரிய உணர்வு.

அது மெல்ல மெல்ல வளர்ந்து வலியாக மாறத் தொடங்கியது. சிறிது நேரம் பல்லை கடித்து பொறுத்து பார்த்தாள், முடியவில்லை. 

அவள் மனது அந்நேரம் அம்மா, அப்பா, கணவனை தேட, அலைபேசியை எடுத்து கணவனை அழைத்தாள். அழைப்பை ஏற்கவில்லை சத்யமூர்த்தி.

“ஆ, மனுஷா வலிக்குது. இப்பவும் போனை எடுக்கலை இவர்” அவள் வலி தந்த கோபத்தில் சத்தமாக சொல்லிட, சட்டென்று திரும்பினார் துணைக்கு அமர்ந்திருந்தவர், “அச்சோ, என்ன பண்ணுது சஹா, முகமெல்லாம் வேர்த்து போச்சே” அவள் கைப் பிடித்து அவர் கேட்க, “வலிக்குது கா” என்றாள் நடுங்கும் குரலை மறைக்க உதடு கடித்து.

அவள் முகம் பார்த்தே பிரசவ வலி தான் என்று அவரின் அனுபவம் சொல்ல, “மெல்ல மெல்ல எழுந்துக்க, இதோ இப்பவே ஹாஸ்பிட்டல் போகலாம். நான் போய் உங்கப்பாகிட்ட சொல்றேன். வண்டி ஏற்பாடு பண்ணுவாரு” அவளுக்கு கைக் கொடுத்து எழுப்பி, சோஃபாவில் சாய்வாக அமரச் செய்து விட்டு, அதே தெருவில் இருந்த முரளிதரனிடம் தகவல் தெரிவிக்க விரைந்தார் அவர். 

அவசர அவசரமாக, பதற்றமாக வீட்டுக் கதவை திறந்து வெளியேறினார் பக்கத்து வீட்டு பெண்மணி. 

அவர் சென்று முழுதாக இரண்டு நிமிடங்கள் கழிந்திருந்தது. வலி வருவதும், போவதுமாக இருக்க, ஓரிடத்தில் அமர முடியாமல் வலியோடு மெல்ல எழுந்து நின்றாள் சஹானா. 

மெல்ல அடியெடுத்து வைத்து, வலியில் பல்லைக் கடித்தபடி வாயிலை நோக்கி நடந்து வந்த சஹானாவின் கண்களில் விழுந்தான். அவள் வீட்டின் முன் காரில் இருந்து இறங்கி கொண்டிருந்த சத்யமூர்த்தி. சட்டென சஹானாவின் கண்களை, மனதை, அமைதியும், சத்யமூர்த்தியும் நிறைத்தனர்.

Advertisement