Advertisement

“சத்யா, பிளீஸ். இன்னும் கொஞ்சம்..” படுக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தவனுக்கு உணவை ஊட்டிக் கொண்டிருந்தாள் சஹானா. மூன்று இட்லிகளை சாப்பிடுவதற்கு அப்படி முகம் சுளித்தான் அவன். கணவனை உறுதியாக, எப்போதும் சுறுசுறுப்பாக பார்த்தே பழகி இருந்த சஹானாவிற்கு கடந்த இரண்டு வாரங்களாக அவன் இப்படி சோர்ந்து இருப்பதை பார்க்கவே முடியவில்லை.

இரண்டு வாரங்களுக்கு முன்பு தொழிற்சாலையில் இருந்து வீடு திரும்பும் போது அதிக சோர்வில் துவண்டிருந்தது அவன் முகம். 

“நீ ட்ரைவ் பண்ணு, சஹானா” என்று கார் சாவியை அவளிடம் கொடுத்து விட்டு, இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கண் மூடியவன், அசதியில் உறங்கி இருந்தான். வீட்டை அடைந்ததும், “சத்யா” என்று அவனை தொட்டு எழுப்பிய சஹானா, அவன் உடல் சூடு உணர்ந்து, “உங்களுக்கு ஃபீவர் அடிக்குது சத்யா. என்கிட்ட ஏன் சொல்லல நீங்க?” என்று பதறினாள். 

இரவு கஞ்சியும், காய்ச்சல் மாத்திரையும் போட்டு படுத்தவனுக்கு உடல் சூடு குறைய முழுதாக இரண்டு நாட்கள் ஆனது. அன்றே தொழிற்சாலை கிளம்பி விட்டான் அவன். சஹானா தடுத்தும் அவன் கேட்பதாக இல்லை. உடல் முழுதாக ஓய்வை கேட்டு மீண்டும் சுணங்கி, காய்ச்சலுடன் வீடு வந்தான் அவன். இம்முறை மருத்துவமனை போகும் அளவுக்கு காய்ச்சலும், உடல் வலியும் அவனுக்கு தீவிரமாகி இருந்தது. 

அப்போதும் வாய் திறந்து வலிகளை பகிராதவனை, கண்ணில் தேங்கி நின்ற வலியுடன் பார்த்தாள் சஹானா. 

மருத்துவமனை வாசம் அவனை நன்றாக ஓய்வெடுக்க செய்தது. வாரத்தில் ஒரு நாள் கூட விடுமுறை என்று வீட்டில் நில்லாமல் எப்போதும் தொழிலை பார்க்க ஓடியவன், இப்போது போதிய ஓய்வை எடுத்தான். மருத்துவர்கள் இரத்த பரிசோதனைகள் எடுத்துப் பார்த்தனர். ஆனால், ரத்ததில் எந்த தொற்றும் இல்லை. எல்லா அறிக்கையும் இயல்பாகவே இருந்தது. காய்ச்சலின் தீவிரம் மட்டும் அவனுக்கு குறையவேயில்லை. சஹானா தான் பதறிப் போனாள். சதா கம்பீரமாக, நெஞ்சை நிமிர்த்தி, அழுத்தமான பார்வையுடன் வலம் வரும் சத்யமூர்த்தியை இப்படி படுக்கையில் பார்க்கவே முடியவில்லை அவளால்.

“ஜஸ்ட் ஃபீவர் தான் சஹானா” அடர்த்தியான குரலில் அவளுக்கு ஆறுதல் சொன்னான் கணவன்.

“போங்க. உடம்பு மேல அக்கறையே இல்ல உங்களுக்கு” 

“ம்ம்” என்றவனை முறைத்தாள் அவள். சிரிப்பில் பிரிந்தது அவன் உதடுகள். 

அதில் மயங்கி, “கள்ளன்” என்று முணுமுணுத்தாள். பற்கள் தெரிய சிரித்தான் சத்யா. அமர்ந்த வாக்கில் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள் சஹானா. 

இருவரின் மோன நிலையையும் கலைத்தது சுப்புலட்சுமியின் வருகை.

“இப்போ எப்படி பா இருக்கு? எப்போ வீட்டுக்கு போகலாம்னு ஏதாவது சொன்னாங்களா? சும்மா, சாதாரண காய்ச்சலுக்கு உன்னை இப்படி படுக்க வச்சு காசு பார்க்கறானுங்க”

“அம்மா” என்று அதட்டி அவரின் புலம்பலை நிறுத்தினான் சத்யமூர்த்தி.

“சரி, நான் எதுவும் பேசல” முறைத்துக் கொண்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தார் அவர். 

“சஹானா, இங்க இருக்க லேடி டாக்டரும் நல்லா பார்ப்பாங்களாம். உனக்கு என்னனு பார்த்திடலாமா?” மகனையும், மருமகளையும் பார்த்தபடி அவர் கேட்க, எரிச்சலுடன் கண்ணை உருட்டினாள் சஹானா.

“அம்மா..” குரல் உயர்த்தாமலேயே அவரின் வாயை அடைத்தான் சத்யமூர்த்தி.

“ஏன், எப்பப் பாரு இதையே கேட்டுட்டு இருக்கீங்க அத்த? நானும் எத்தனை டைம் இதே கேள்விக்கு பதில் சொல்றது?” சஹானா கோபத்துடன், ஆனால் பொறுமையாக நிதானமாக கேட்க, மகன் முன்பு அவளை பேச இயலா கோபத்துடன் வெறித்தார் சுப்புலட்சுமி.

“நான் நிறைய முறை உங்களுக்கு பதில் சொல்லிட்டேன். எனக்கு உங்களை மாதிரி பேச தெரியாம இல்ல. உங்களை பதிலுக்கு பதில் பேச விரும்பாம ஒதுங்கிப் போறேன். உங்களை பேசிட்டு, நாம எப்படி ஒரே வீட்ல இருக்கறது? நாளைக்கே நாம ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்க்க வேண்டாமா? உங்களை பேசிட்டு இவர்கிட்ட நான் என்ன பதில் சொல்றது? என்னை எப்பவும் இந்த மாதிரி டஃப் சிட்டுவேஷன்ல நிக்க வைக்காதீங்கத்த. குழந்தை என்ன டாய்ஸா? அமேசான்ல ஆர்டர் பண்ணி, நாளைக்கே டெலிவரி பண்ண? எங்களுக்கும் ஆசை இருக்கு. சீக்கிரம் நல்ல செய்தி சொல்றோம். முதல்ல உங்ககிட்ட சொல்லாம, வேற யார்கிட்ட சொல்லப் போறோம்?” படபடத்து அவள் பொரிய, 

“இப்ப என்ன சொல்லிட்டேன்னு இப்படி பேசுற நீ? நீயாவது, இவளை என்னனு கேட்கறியா தம்பி? எப்படி பேசுறா பாரு” மகனிடம் அவர் முறையிட,

“பேசாம இருங்க மா. உங்ககிட்ட, நான் இதை எதிர்பார்க்கல” உணர்ச்சிகள் இல்லா குரலில் சொல்லி விட்டு, கண்ணை மூடிக் கொண்டான் சத்யா. அதன் பின் சுப்புலட்சுமியின் கேள்விகளும், புலம்பலும் கொஞ்சம் குறைந்தது என்றே சொல்ல வேண்டும். 

அடுத்த மூன்றாம் நாள் சத்யமூர்த்தி குணமாகி வீடு திரும்பியிருந்தான்.

அவனை வலுக்கட்டாயமாக வீட்டில் பிடித்து வைத்தாள் சஹானா. அவனது பணியை அவளும் கற்றுத் தேர்ந்திருந்ததினால், வீட்டில் இருந்தபடியே அனைத்தையும் கவனித்தாள் அவள். சமயங்களில் தேவை ஏற்பட்டால் தொழிற்சாலை சென்று வந்தாள். 

சத்யமூர்த்தி கையெழுத்திட வேண்டிய கோப்புகள் வீடு தேடி வந்தன. காடே தனதென சுற்றும் சிங்கத்தை சிறையில் அடைத்தது போல இருந்தது, சத்தியமூர்த்தியை பார்க்க. “சஹானா, ஃபேக்டரி போகணும்” என்று மிரட்டுபவனை ஒற்றை பார்வையால் அடக்கும் வித்தை தெரிந்திருந்தது அவளுக்கு. 

“என்னடி?” பல்லைக் கடித்தான்.

“எந்தாடா?” இடுப்பில் கை வைத்து புருவங்கள் உயர்த்தினாள்.

“அடிப்பாவி. என்னடா சொல்ற?” முறைத்த முகத்தில் கண்கள் மட்டும் சிரிக்க, “சிரிக்கண்டா” சீறியவளை, பிடித்து இழுத்து சிணுங்க வைத்தான்.

அன்றிரவே மீண்டும் காய்ச்சலில் படுத்து விட்டான் அவன். 

இதோ, இன்றோடு இரண்டு வாரங்கள் கடந்திருந்தது. 

“போதும், சஹானா” அவள் கையில் இருந்த தட்டை மெல்ல விலக்கியபடி சொன்னான் சத்யா.

“ஓகே. எழுந்திருங்க. மாடியில கொஞ்ச நேரம் நடந்துட்டு வரலாம்” சொன்ன சஹானா தட்டை சென்று சமையல் அறையில் வைத்து விட்டு வந்தாள். மனைவி நீட்டிய சுடுநீரை குடித்து விட்டு, அவளோடு மாடிப் படியேறினான் சத்யா. அவள் பேசிக் கொண்டே நடக்க, மௌனமாய் அவளுடன் இணைந்து நடந்தான் சத்யா. 

மறுநாளே இருவரும் ஒன்றாக தொழிற்சாலை செல்லத் தொடங்கினர். இரண்டாம் நாள் சஹானா காய்ச்சலில் படுக்க, பதட்டமும், கோபமுமாக புருவங்கள் நெரித்து, தலைக் கோதினான் சத்யா. அன்றிரவே அவளை மருத்துவமனை அழைத்துச் சென்று விட்டான் அவன். 

மருத்துவர் சிறுநீர், ரத்த பரிசோதனைகளை எழுதிக் கொடுத்த கையோடு சஹானாவிடம் பேசிக் கொண்டிருந்தார்.

திடீரென்று ஏதோ தோன்ற, அவளிடம் சம்பிரதாய கேள்விகள் கேட்டு, அவர்களை அறையில் காத்திருக்கச் சொன்னார். 

இரண்டு மணி நேரங்கள் கழித்து பரிசோதனை அறிக்கை வர, அவளிடம் அதைக் கொடுத்து விட்டுச் சென்றார் செவிலி. 

மெல்ல பிரித்துப் பார்த்தவள், “சத்யா” அதிர்ந்து கத்தினாள் சஹானா. அலைபேசிக்கு காதைக் கொடுத்திருந்தவன், பட்டென்று திரும்பி அவளைப் பார்த்தான். 

அவன் அருகில் நெருங்கி வந்ததும், “சத்யா அச்சனாகான் தயாரானோ? (அப்பாவாக ரெடியா?)”, படுக்கையில் இருந்து எக்கி, நின்றிருந்தவனின் கழுத்தை வளைத்து காதில் அவள் கேட்க, மிரண்டு விழித்தான் சத்யா. கணத்தில் அவள் சொன்னதின் அர்த்தம் புரிய, மனைவியை இமைக்க மறந்துப் பார்த்தான். 

“சத்யா” என்றாள் கிசுகிசுப்பாக. சாதாரணமாகவே அவனுக்கு பேச வராது. இப்போது சந்தோஷத்தில் சுத்தமாய் வார்த்தைகள் தீர்ந்து போனது அவனுக்கு. 

சஹானாவை அழுத்தமாய் அணைத்தான். அந்நிமிடம் அவனின் ஸ்பரிசமே அவளுக்கு போதுமானதாக இருந்தது. 

கர்ப்பம் உறுதியானதும் அதற்கேற்ப மருந்துகளை அவளுக்கு கொடுக்க, காய்ச்சல் முற்றிலுமாக குணமாகி, இரண்டு நாள்களில் வீடு திரும்பி விட்டார்கள் அவர்கள். 

புனிதா ஒரு வாரத்திற்கு முன்பு மருமகனை பார்க்க வந்தவர், இப்போது மீண்டும் மகளை பார்க்க பொள்ளாச்சி வந்து விட்டார். தினமும் அலைபேசியில் அட்வைஸ் மழை பொழிந்து கொண்டிருந்தவர், நேரிலும் அவளுக்கு நூறு அறிவுரைகள் சொன்னார். 

அவளுக்கு தேவையான சத்து மாத்திரைகள் வாங்கிக் கொடுத்து, மகளுக்கு பிடித்த உணவு பொருட்களால் அவள் வீட்டை நிறைத்து விட்டுப் போனார் அவர்.

மருமகள் கர்ப்பம் என்றதும் சுப்புலட்சுமியின் முகத்தில் கூட சிரிப்பின் சாயல் வந்துப் போனது. மனதில் பூரித்து, மகிழவும் செய்தார் அவர்.

அவளோடு மருத்துவரை சந்தித்தார். நன்றாகவே பார்த்தும் கொண்டார். அவளுக்கு பிடித்ததாக எல்லாம் சமைத்தும் கூட கொடுத்தார். ஆனால், பாடிய வாய் எப்படி நிற்கும்? 

சஹானா நான்கு மாத கர்ப்பமாக இருக்கும் போது, ராதாவின் வீட்டில் ஏதோ பண பிரச்சனை வர, மீண்டும் அவர்கள் வீட்டில் சூறாவெளி உருவாகியது.

“ராதா சொல்றா, வீட்டை அப்படியே விடப் போறாங்களாம். இன்னும் ஒரு வருஷத்துக்கு வேலை நடக்காதுமான்னு, சொல்றா. கட்டிட்டு இருக்க வீட்டை இப்படி பாதியில் விடலாமா? நீயே சொல்லு தம்பி?” சுப்புலட்சுமி பேசுவதை அசையா பார்வையுடன் கேட்டுக் கொண்டிருந்தான் சத்யா.

“ஏதோ பணப் பிரச்சனைன்னு அப்பா கேட்டதுக்கு சொல்லி இருக்கா. அப்பா கொடுக்கிறேன் சொல்லி இருக்கார். அதையும் வேணாம்னு சொல்றா. இந்த பொண்ணை வச்சுட்டு நான்” பாலகுமார் மனைவியை முறைத்து விட்டு, தொலைக்காட்சி செய்தியில் கவனம் பதிக்க, அனைவருக்கும் பாலோடு வந்து கணவனுக்கு பக்கத்தில் அமர்ந்தாள் சஹானா. 

“என்னப்பா, நான் பேசிட்டே இருக்கேன். நீ ஒன்னும் சொல்லாம இருக்க?” 

“என்னம்மா?” அலுப்புடன் கேட்டபடி, மனைவியிடம் முதலில் பாலை எடுத்து நீட்டினான். அதைக் குடிக்கப் பிடிக்காமல், முகத்தை சுருக்கினாலும் கையில் வாங்கிக் கொண்டாள் சஹானா.

“நீ என்னனு ராதா புருஷன் கிட்ட கேட்கலாம் இல்லப்பா?”

“ஆல்ரெடி, கேட்டுட்டேன் மா”

“மாப்பிள்ளை என்ன சொன்னார்?” ஆர்வத்துடன் அவர் கேட்க, பெருமூச்சு விட்டான் சத்யமூர்த்தி.

“பிஸினஸ்ல கொஞ்சம் அடி போல. பணம் அதுல முடங்கி நிக்கிது சொன்னார்”

“எவ்வளவு தேவைனு கேட்டு இருக்கலாம் இல்லப்பா. நாமளே கொடுத்தா சரியா இருக்கும் இல்ல?” வயிற்று பிள்ளையை, வலியில்லாமல் வாயில் இறக்கினார் சுப்புலட்சுமி.

“சரி வராது” என்று முடித்துக் கொண்டான் சத்யா.

“இப்படி பொறுப்பே இல்லாம பேசினா எப்படிப்பா? உன் தங்கச்சி அவ. நீ செய்யாம யார் செய்வா?”

“என்கிட்ட பேசி தான் பில்டர் பார்த்தாங்க. பட்ஜெட் போடும் போதும் நான் கூடவே தான் இருந்தேன். ஒரு கோடிக்கு வீடு கட்ட நினைக்கிறது சரி. கையில் பாதியாவது பணம் இருக்கணும் இல்ல? இருக்குனு சொன்னார் மாப்பிள்ளை. நானும் கால்வாசி அமௌன்ட் கொடுத்து இருக்கேன். அதுக்கு மேல முடியாது மா. அவங்களுக்கு வசதி குறைவா என்ன? பார்த்துப்பாங்க” மேலே அம்மா பேச இடம் கொடுக்காமல் அவன் எழுந்து விட, அவனோடு இணைந்து நடந்தாள் சஹானா. 

இருவரும் அறைக்குள் வந்ததும், ஒற்றைப் பார்வையில், கட்டாயப்படுத்தி அவளைப் பாலை குடிக்க வைத்தான் சத்யா. மௌனமாய் அவன் முறைக்க, பேச்சின்றி ஒரே மூச்சில் குடித்து முடித்தாள் சஹானா. 

“எதுவுமே பிடிக்கல. உங்களையும் தான்” என்று உதட்டை சுளித்தவள், பேச்சுக்கு மாறாக அவன் மார்பில் தஞ்சமானாள். அனிச்சையாய் அவளை ஆதூரத்துடன் சுற்றியது சத்யாவின் கரங்கள்.

பதினொரு மணி வரை உறக்கம் வராமல் பேசிக் கொண்டேயிருந்தாள் சஹானா. அவனுக்கு கண்கள் சொருகினாலும் கூட, இமைகளை பிரித்து வைத்து அவளுக்கு, “ம்ம்” கொட்டி ஆலாபனை செய்துக் கொண்டிருந்தான். 

“வாந்தி வர மாதிரி இருக்கு சத்யா”

“பேசாம இருந்தா தானே?”

“அது ரொம்ப கஷ்டம். நான் என்ன சத்யமூர்த்தி போல மிண்டா பிராணியா? நான் சஹானா” என்றவள் முகத்தை அஷ்ட கோணலாக சுளிக்க, அவளை இழுத்துக் கொண்டுப் போய் குளியல் அறைக்குள் விட்டான் சத்யா. அவள் தலையை தாங்கிப் பிடித்தான், வயிறு வாய் வழியே வெளியேறிய உணர்வில் சோர்ந்து, நின்ற வாக்கில் பின்னால் சாய்ந்தாள் சஹானா. அப்படியே அவளை அணைத்து பிடித்தான் சத்யா. கடந்த இரண்டு மாதங்களாக இது தான் அவளுக்கு வாடிக்கையாகி இருந்தது. 

அவள் வாய் கொப்பளித்து, முகம் கழுவ உதவி, மீண்டும் படுக்கைக்கு வந்தனர். 

“கால் வலிக்கிற மாதிரி இருக்கு சத்யா”

“அம்மா இதெல்லாம் நார்மல் சொல்றாங்க”

“எந்த பக்கம் படுக்கணும் மறந்துப் போச்சு சத்யா. எப்படிப் படுத்தாலும் தூக்கம் வரல” எதையாவது சொல்லி சலித்து கொண்டேயிருந்தவளை நெருங்கி அணைத்துக் கொண்டான். வழக்கம் போல சற்று நேரத்தில் உறங்கி விட்டாள் சஹானா. மனைவியின் உறக்கம் அவனையும் தழுவி இருந்தது. 

காலையில் வழக்கமான, பழக்கமான நேரத்தில் சஹானாவால் எழுந்து கொள்ளவே முடியவில்லை. அப்படியும் எழுந்தால், தலையை சுற்றிக் கொண்டு வந்தது. பல் துலக்க வாய் கொப்பளித்தால் கூட வாந்தி வந்தது. அதற்கு மேல் எப்படி உணவை குறித்து யோசிப்பாள் அவள்.

“சாப்பிடு, வாந்தி வந்தா பார்த்துக்கலாம்” என்று அடிக் குரலில் மிரட்டும் கணவனை அடித்து விடுவதை போல பார்ப்பாள் சஹானா. 

“எல்லாம் உங்களால தான். ஒழுங்கா நீங்க வாங்கி சுமங்க, உங்க பிள்ளையை” அந்த வார்த்தைகளை கேட்டதும் சிரித்து விடுவான். அந்த சிரிப்பில் மயங்கினாலும், “கள்ளன்” என்று ரசனையுடன் முணுமுணுத்து, கடுமை காட்டுவாள் சஹானா. 

அன்று காலை உணவை இருவரும் உண்டு கொண்டிருக்க, அங்கு வந்து அமர்ந்தார் சுப்புலட்சுமி.

“சாப்பிட்டீங்களா மா?” கேட்டான் சத்யா.

“ம்ம். எனக்கென்ன? அப்பவே சாப்பிட்டுட்டேன்” என்று அலுத்தவர், “ராதா நேத்து கூட வீட்டுக்கு வந்தாப்பா” என்றார்.

“தெரியும். சஹானா சொன்னா” என்றவனை முறைத்தாள் சஹானா. “என்னை ஏன்யா கோர்த்து விடுற?” என்றது அவள் பார்வை.

“என்கிட்ட போன்ல பேசினா மா” அவன் சேர்த்து சொல்ல,

“அவ வீட்டு வேலை அப்படியே நிக்குது தம்பி. நம்ம வீடு வளர்ற மாதிரி, அவ வீடும் வளரனும் இல்ல?” சஹானாவின் வயிறை கண்ணசைவில் சுட்டிக் காட்டி அவர் சொல்ல, ‘எண்ட அம்மே’ என்று மனதினுள் அலறினாள் சஹானா.

“பொள்ளாச்சி முழுக்க தேடி, நல்ல வசதியான வீட்ல கொடுத்து இருக்கோம். நம்ம அளவுக்கு அவங்க கிட்டயும் பணம் இருக்கு. ஒரு கோடி அவங்களுக்கு பெரிய விஷயம் இல்ல. கட்டட்டும்” என்று எழுந்து கைக் கழுவிய சத்யா, அதன் பின் அந்த பிரச்சனையையும் கை கழுவி விட்டான். 

அவ்வளவு தான். சுப்புலட்சுமி அதுவரை நல்ல அம்மாவாக இருந்தவர், மீண்டும் மாமியார் அவதாரத்துக்கு மாறினார்.

“மாசமா இருக்க, ஃபேக்டரி போகாம வீட்ல இரு”

“உங்க அம்மா உன்னை பார்க்க வரலையா? நான் எல்லாம் வாரா வாரம் போய் ராதாவை பார்ப்பேன்”

“நாலு மாசம் ஆச்சு. உனக்கு என்ன வயிறே வைக்கல”

“நீ சொன்னா, சத்யா கேட்பான். உன் நாத்தனாருக்கு ஹெல்ப் பண்ண சொல்லு உன் புருஷனை”

“அவனை காசு கொடுக்க வேணாம்னு நீ தான் சொன்னியா?” மாற்றி மாற்றி பேசும் மாமியாருக்கு பயந்தே கணவனோடு தொழிற்சாலை சென்றாள் சஹானா. அவளுக்கு அது லேசாக சிரமமாக தான் இருந்தது. ஆனாலும், வேலைப் பார்க்க, கூடுதலாக கணவனோடு எப்போதும் இருக்க அவளுக்கு பிடித்தது.

பார்வையில், கவனம் இல்லா கவனிப்பில், ஸ்பரிசத்தில் அன்பை வெளிப்படுத்திக் கொண்டேயிருந்தான் சத்யா. அது சஹானாவிற்கு அத்தனைப் பிடித்தது. 

கல்யாணமான புதிதில் அவளின் தோழி ரோஹிணியிடம் கிண்டலாக கூட சொல்லியிருக்கிறாள் அவள். 

“எப்படி சஹா? லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்டா?” என்று ரோஹிணி கேலி செய்ய, “ம்ஹூம். எங்க கல்யாணம் வித்தியாசமானது” என்றாள் கண் சிமிட்டி, “எப்படி?” என ரோஹிணி கேட்க,

“அவருக்கு லவ் மேரேஜ். எனக்கு அரேஞ்ச்டு மேரேஜ்” கிண்டலாக நாக்கை துருத்தி சொல்வாள் சஹானா. 

ஆனால், இப்போது கணவனின் மேல் காதல் வந்திருந்தது. அவனைப் பிடித்தது. அவனது அண்மை பிடித்தது. அவனது பிடித்தங்கள் பிடித்தது. அவளின் கண் பார்த்தே காரியங்கள் அனைத்தையும் செய்யும் அவன் மேல் நேசம் நெடுமரமாய் வளர்ந்து நின்றது. 

அவனையே விழிகளை விரித்து பார்த்துக் கொண்டிருந்த மனைவியை பார்த்து, கேள்வியாக புருவம் உயர்த்தினான் சத்யா. சுற்றிலும் பார்வையை ஓட்டி விட்டு, அவனது மீசை பிடித்து இழுத்து, உதட்டில் அழுத்தமாக முத்தமிட்டு குறும்பாக உதடு கடித்தாள். 

“ஆபீஸ்ல இருக்கோம்” சினத்திற்கு பதில் அரிதாக சிரிப்பு துளிர்த்திருந்தது அவன் உதட்டில். 

“சிரிக்கண்டா” அவன் சிரிப்பை ரசித்துக் கொண்டே சொன்னாள் சஹானா. 

Advertisement