Advertisement

மறுநாள் மாலையில் கேரளா கிளம்ப மனதளவில் தயாராகி, கணவனிடம் காலையிலேயே சொல்லி விட்டாள் சஹானா. 

“ம்ம். நான் வந்து ட்ராப் பண்றேன். பஸ்ல டிக்கெட் புக் பண்ணாத” என்றவனை, எரித்து விடுவது போல் பார்த்தாள் சஹானா. 

‘போகாத. வீட்ல இரு. ஐ வில் மிஸ் யூ சாரி, இனி மேல் உன்னோட வருவேன்.’ இப்படி எத்தனையோ சமாதானங்களை எதிர்பார்த்த சஹானாவிற்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே. 

கணவனை கண்ணெடுக்காமல் பார்த்தது, பார்த்தபடி நின்றிருந்தாள் அவள். அவளுக்கு வாழ்க்கை அதன் வண்ணங்களை இழந்து வெறுமையாக தெரிந்தது. 

அப்பாவின் பாசத்தை, அம்மாவின் கிண்டலை, நக்கல் பேச்சை, தோழமையை தேடியது அவள் மனது. எல்லாவற்றையும் விட பிறந்த ஊரை தேடியது அவளுக்கு. பொள்ளாச்சியில் பசுமைக்கு குறைவில்லை என்றாலும், கேரளத்தின் அழகு தனி தானே? மனதை குளிர்விக்கும் அழகு அது. ஒருவித ஏக்கத்துடன் தாய் வீடு செல்ல விரும்பினாள் அவள். ஆனால், கணவனை பிரியவும் அவளுக்கு மனமில்லை என்பதை ஒத்துக் கொள்ள தான் வேண்டும். 

“நான் பஸ்ல போறேன். உங்களுக்கு ஃபேக்டரியில் நிறைய வேலை இருக்கும்” நக்கலாக, அசட்டையாக அவள் சொல்ல, சட்டென கை நீட்டி, அவளை அருகில் இழுத்தான் சத்யமூர்த்தி. அவ்வளவு தான். கோபத்தில் கதகளி ஆடி விட்டே ஓய்ந்தாள் சஹானா. 

மனதில் இருந்த கோபம் எல்லாம் வார்த்தைகளாக வெளிவந்திருந்தது. அவளின் பேச்சை சத்தமின்றி கைக் கட்டி அமைதியாய் நின்று கேட்டுக் கொண்டான் சத்யா.

“சஹா, சஹானா..” அவர்களின் அறைக் கதவு பலமாக தட்டப்பட, புனிதாவின் குரலில், அதிர்ந்து போய், பதறி கணவனை விலக்கி தள்ளினாள் சஹானா. 

“அம்மா…” என்றாள், அவனிடம் பதற்றத்துடன். 

“ம்ம். ஆமா. வா, போய் என்னனு பார்க்கலாம்” சத்யா சொல்லி விட்டு, கதவை திறக்க போக, “நீங்க.. நீங்க.. அம்மாவை வரச் சொன்னீங்களா?” சந்தேகத்துடன் அவள் கேட்க, அவளை முறைத்து கொண்டே போய் கதவை திறந்தான் சத்யமூர்த்தி. 

புனிதா மகளை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டே உள்ளே வந்தார். மருமகனிடம் நலம் விசாரித்தார். 

வீட்டில் சம்பிரதாய பேச்சுக்கள் முடிந்ததும், மகளை தனியாக பிடித்துக் கொண்டார் அவர். 

சத்யமூர்த்தி, அப்பாவுடன் தொழிற்சாலை சென்று விட, புனிதாவும், முரளிதரனும் மகளின் அறையில் இருந்தனர். 

“என்ன சஹா பிரச்சனை? மாப்பிள்ளை கூட சண்டைப் போட்டுட்டு இருந்த போல? இப்படியா வெளில கேட்கிற மாதிரி சத்தம் போடுவ? உங்க மாமியார், இதுக்கெல்லாம் உன்னை ஒன்னும் சொல்ல மாட்டாங்களா?”

புனிதா கேட்க, பதிலின்றி கையை பிசைந்துக் கொண்டிருந்தாள் சஹானா. அவள் தொண்டையில் சிக்கிக் கொண்டிருந்த புகார்களை படிக்க விரும்பவில்லை அவள். பெற்றோரை வருத்த விரும்பவில்லை அவள்.

புனிதா தனது நக்கல் நையாண்டியை விட்டுவிட்டு மகளுக்கு வண்டி வண்டியாய் அறிவுரை வழங்கி விட்டு, அன்று மாலை கிளம்பினார். 

அவரோடு பிறந்த வீடு செல்லவே விரும்பினாள் சஹானா. ஆனால், கணவனோடு சண்டை போட்டு வீடு வருகிறாள் என்று புனிதா எடுத்துக் கொள்வார் என்று தோன்ற ஆசையை அடக்கிக் கொண்டு நின்றாள். 

புனிதா கிளம்பும் முன் அவரை வழியனுப்ப வந்த சுப்புலட்சுமி, “கல்யாணமாகி ஒரு வருஷமாக போகுது. என்ன ஏதுன்னு, உங்க பொண்ணுக்கிட்ட விசாரீச்சிங்களா? உங்ககிட்டயாவது ஏதாவது சொன்னாளா? இந்த குடும்ப கட்டுப்பாடு எல்லாம் சரி வராது. சீக்கிரம் குழந்தைப் பெத்துக்கறது நல்லதுனு அவளுக்கு புத்தி வர்ற மாதிரி நீங்களாவது எடுத்துச் சொல்லுங்க.” என்று அவர் அடுக்கிக் கொண்டே போக, அவரை ஆச்சரியமாக பார்த்தார் புனிதா. 

“சம்மந்தி, நான் பேசுறேன் சஹாகிட்ட” புனிதா சொல்ல, “நீங்க சொல்லி புத்தி வந்தா சரி தான்” என்றார் சுப்புலட்சுமி. 

தனிமையில் மகளின் கன்னம் வருடி, “சஹாக்கு குழந்தையா?” என்று பெருமூச்சு விட்டார் புனிதா. அதில் ஆசுவாச பெருமூச்சு வந்தது சஹானாவிற்கு.

அம்மாவுக்கு விடைக் கொடுத்து வீட்டிற்கு அனுப்பியவள், தான் வீடு செல்லும் எண்ணத்தை கை விட்டாள்.

சஹானா, சத்யா இருவருக்கும் நடுவில் மெல்லிய இடைவெளி விழுந்திருந்தது. அதை தாண்ட அவள் விடவில்லை. அவன் விரும்பினாலும், வழி கிடைக்கவில்லை. முழுதாய் மூன்று நாள்களை கடப்பதற்குள் தவித்துப் போனான் சத்யா. 

“சஹானா” அவனுக்கு முதுகுக் காட்டி படுத்திருந்தவளை, வலுக்கட்டாயமாக புரட்டினான். 

முகத்தை அடமாக உயர்த்தி அவன் கண்களை நேருக்கு நேராக பார்த்தாள் சஹானா. அவன் உதடுகள் சிரிப்பில் வளைய, முறைத்தாள் அவள்.

“கோபமா?”

“மிண்டா பிராணி. கையை எடுக்கு. இல்லெங்கில் கொன்னு களையும்” பல்லைக் கடித்துக்கொண்டு அவள் சொல்ல, பலமாக சிரித்தான் சத்யா. 

“சிரிக்கண்டா” (சிரிக்க வேண்டாம்) மிரட்டியவளின் உதட்டில் நெளிந்தது அவள் மறைக்க முயன்றும் முடியா புன்னகை. கணவனின் சிரிப்பில் அது இன்னும் விரிய, சத்தமின்றி அதை திருடிக் கொண்டான் சத்யமூர்த்தி. சஹானாவின் கரங்கள் சம்மதத்துடன் சத்யாவை சுற்றி இறுக்கியது.

பிரிவை பற்றிப் பேசி அவனை அதிர செய்தவளை மனதால் கூட பிரிய மனமில்லாமல் இறுக்கினான் சத்யா. நெருக்கத்திலும், வார்த்தையால் நெருக்கம் காட்டாதவனை இன்னுமே எதிர்ப்பார்ப்போடு இறுக்கினாள் சஹானா. 

செயலில் அன்பைக் காட்டியவனுக்கு சொற்கள் தேவைப்படவில்லை. வார்த்தைகளில் வாழ்பவளை அது வருத்தம் கொள்ளச் செய்தது.

Advertisement