Advertisement

ஆழ்ந்த அமைதியுடன் அயர்ந்து உறங்கும் மனைவியையே அமைதியாய் பார்த்துக் கொண்டு படுத்திருந்தான் சத்யமூர்த்தி. சஹானா கலைந்திருந்தாள், களைத்திருந்தாள். அப்போதும் அவன் கண்களுக்கு கவர்ச்சியாய் தெரிந்த மனைவியை கனிவுடன் பார்த்தான் சத்யா. ஒற்றை விரல் நீட்டி, அவள் முகத்தில் விழுந்த முடிக் கற்றைகளை விலக்கினான். அவன் தொடுகை உணர்ந்து மேலும் அவனை ஒட்டிக் கொண்டாள் சஹானா. இளமுறுவல் ஒன்று அவன் உதட்டை நிறைத்தது. 

இப்படி தனிமையில் அவளோடு இருப்பது அவனுக்கு அத்தனைப் பிடித்தது. பள்ளி காலம் தொட்டே அதிகம் பேசாதவன் அவன். அதனால் நண்பர்களின் எண்ணிக்கையும் குறைவு. குடும்பம், வசதி, வாய்ப்பு, பணம் என்று எதற்கும் குறைவில்லை. நாலே பேர் என்றாலும் நல்ல நண்பர்கள் என்று நிறைந்த வாழ்க்கை தான் அவனது. ஆனாலும், ஒரு சிறிய வெற்றிடம் அவன் வாழ்வில் இருந்து கொண்டே தானிருந்தது. 

அதை முழுமையாய் நிறைத்தவள் அவனின் சரி பாதி சஹானா தான். அவனிடம் எப்போதும் பேசிக் கொண்டே இருப்பவளின் குரல் அவனுக்கு சஹானா இராகமாய் தான் ஒலிக்கும். அவளின் இராகத்திற்கு பதிலாக எப்போதும் ஆலாபனையை மட்டுமே தருவான் அவன். அவளுக்கு எதுவுமே குறையாக தெரியாது. அவனிடம் அனைத்தையும் ரசிப்பவள் அவள். அவளை ரசித்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளத் தெரியாதவன் அவன். 

தன் மனது மனைவிக்கு புரியும் என்ற எண்ணம் தான் அவனுக்கு. அவளை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தான் நினைக்கிறான் அவன். ஆனால், தடையாக தாயே வந்து நிற்கும் போது என்ன செய்ய? 

அம்மாவை கேள்வி கேட்க அவனுக்கு ஒரு நொடி போதும். ஆனால், அந்த கோபமும் மனைவி மேல் திரும்பும் என்றே சமீபமாக எதையும் கவனியாதது போல நகர்ந்து கொண்டிருந்தான் அவன். தனக்கு மிக முக்கியமான இரண்டு பெண்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டு முழிப்பது அத்தனை எளிதாக இல்லை அவனுக்கு. 

இப்போதும் சஹானா பேரில் இடம் வாங்கப் போவது பெரிய பிரச்சினையை உண்டாக்கும் என்று தோன்ற தன் அவசர புத்தியை அவசரமாக அடித்தான் அவன். அது என்னமோ சஹானா விஷயத்தில் மட்டும் அவனது பொறுமை காணாமல் போய் விடுவதின் ரகசியம் அவனுக்கும் புரியத் தான் இல்லை. 

அவன் மார்பில் மென்மையாய் மனைவியின் கரம் விழ, அவனது மீசைக்கடியில் தவழ்ந்தது மென்நகை. நிறைந்த மனதோடு நித்திரையை தழுவினான் சத்யமூர்த்தி. 

மூன்று நாள்களை கணவனோடு தனிமையில் கழித்து விட்டு, வீடுத் திரும்பிக் கொண்டிருந்த சஹானாவிற்கு மாமியாரை நினைக்கையில் தொண்டையில் ஒவ்வாத உணவு, சிக்கிய உணர்வு. 

சஹானா வியாழன் அன்றே கணவனிடம் சந்தேகமாக கேட்டாள் தான். 

“சத்யா, நாம இங்க வந்திருக்கோம்னு அத்த கிட்ட சொல்லணும்.”

“நான் சொல்லிட்டேன்”

“இருந்தாலும், நானும் சொல்லணும் இல்ல?”

“எதுக்கு?”

“எதுக்குனு கேட்டா, என்ன சொல்ல? நாங்க கெஸ்ட் ஹவுஸ்ல ரெண்டு நாள் இருந்துட்டு வர்றோம்னு இன்பார்ம் பண்ண வேணாமா?”

“நான் பண்ணிட்டேன்”

“ஓகே. ஆனா, நான் சொல்லணும்னு..” அவளை முடிக்க விடாமல், “சஹானா” என்றான். உதடு சுளித்து விட்டு நகர்ந்தாள் சஹானா. 

மூன்று நாள்கள், மாமியாரிடம் பேசாமல், அவர் முகம் பார்க்காமல், வார்த்தை போர் இல்லாமல், நிம்மதியாக அவளுக்கு கழிந்திருந்தது. இப்போது வீட்டுக்கு போவதை நினைக்கையில் கால்கள் மரத்துப் போன உணர்வு. 

அவள் திருமணத்திற்கு முன்பு பல ஊர்களை சுற்றி வந்தாலும், வீடு திரும்புவதற்கு சுணங்கியதே இல்லை. 

வீடு எப்போதும் அவளை நேசிக்கும், வரவேற்கும் ஒன்றாக தான் இருந்திருக்கிறது. வீடென்பது கட்டிடம் இல்லையே? அதில் வாழும் மனிதர்கள் தானே? யாரோடு வசிக்கிறோம், எவரோடு வாழ்கிறோம், பகிர்கிறோம் என்பதை பொறுத்து தானே வீடு வசிப்பிடத்தில் இருந்து ரசிப்பிடமாக மாறுகிறது. 

சத்யமூர்த்தி மட்டும் இல்லையென்றால் நிச்சயம் அவளுக்கு இந்த வீடே ரசிக்காது. அந்த வீட்டின் அபஸ்வரத்திலும் அவள் ரசிக்க கூடிய ஆலாபனை அவன். 

திங்கள் கிழமை அதிகாலை, இன்னும் திங்கள் வெளிவந்திருக்கவில்லை. காரை சத்தமின்றி வீட்டின் முன் நிறுத்தினான் சத்யமூர்த்தி. 

இருவரும் இறங்கி உள்ளே செல்ல வீடு அமைதியாய் நின்றது. சஹானா படுக்கையில் விழ, சத்யா அலுவலகம் கிளம்பினான். 

“ஃபேக்டரி வரலையா சஹானா?” 

“வீட்ல இருக்கேன் இன்னைக்கு. நீங்க போய்ட்டு வாங்க” என்றவள், எழுந்து குளித்து கணவனுக்கு காலை உணவை தயாரித்து பரிமாறி, வழியனுப்பி வைத்து விட்டு, வீட்டினுள் வர, அதுவரை அமைதியாய் அவளைப் பார்த்துக் கொண்டிருந்த சுப்புலட்சுமி, இப்போது நேரடியாக முறைத்தார். 

“இட்லி எடுத்து வைக்கவா அத்த? மாமாக்கு புதினா சட்னி அரைச்சேன். உங்களுக்கு தோசை ஊத்தவா?” கேட்டுக் கொண்டே அவள் வேலைப் பார்க்க,

“வெளில போனா, சொல்லிட்டு போற பழக்கம் இல்லையா உனக்கு? உங்கம்மா சொல்லித் தரலையா?”

“இல்லத்த..”

“கல்யாணத்துக்கு முன்னாடி கண்டமேனிக்கு ஊர் சுத்திட்டே இருப்பியாம், கேள்விப்பட்டேன். வீட்ல சொல்லிட்டு போற பழக்கம் அப்பவே கிடையாது போல? அப்படித் தானே? அதையே இங்கேயும் ஃபாலோ பண்ணலாம் நினைக்காத. எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காது. ஆமா, சொல்லிட்டேன்”

“சத்யா, உங்ககிட்ட சொல்லிட்டதா சொன்னார்.”

“என்ன சொன்ன? என்ன சொன்ன?” அவள் முடிக்கும் முன்பே கத்தத் தொடங்கியிருந்தார் சுப்புலட்சுமி. 

“புருஷனை இப்படித் தான் பேர் சொல்லி கூப்பிடுவியா? மரியாதை இல்லாம, மண்டையில் அடிக்கிற மாதிரி? அதுவும் என்கிட்டயே அவன் பேரை சொல்ற? என்ன தைரியம் இருக்கணும் உனக்கு?” அவர் குரலை உயர்த்த, அசையாமல் நின்றாள் சஹானா. 

சத்யமூர்த்தி எத்தனையோ முறை சொல்லியிருக்கிறான் தான். ஆனால், தனிமையில் பேர் சொல்லி அழைத்துப் பழகி பல நேரங்களில் அதுவே அவளுக்கு வந்து விடுகிறது.

பொதுவெளியில் சில நேரம் ஏட்டா என்பாள் மலையாளத்தில். 

“என்ன டா சொல்ற?” மீசையில் சிரிப்பை மறைத்து போலியாக முறைப்பான் சத்யா. 

அதனால், “மாமா” என்று அழைப்பாள். அது அவளுக்கே சிரிப்பை தான் கொடுக்கும். 

தனிமையில் சத்யேட்டா, சைலண்ட்யேட்டா என்று விழிப்பாள் குறும்பாக. கண்ணை சுருக்குவான். கள்ளத்தனமாக ரசிப்பான். அவளிடம் காட்டிக் கொள்ள மாட்டான். ஆனால், மறுநொடியே காதலிக்கத் தொடங்கி விடுவான். அதிலிருந்து அவளாக அவனது ரசிப்பைக் கண்டுக் கொண்டால் தான் உண்டு. 

“நான் ஒருத்தி இங்க கத்திக்கிட்டு இருக்கேன். எனக்கென்ன வந்ததுனு மரம் போல நிக்கிற? உன் மனசுல என்ன தான் நினைச்சுட்டு இருக்க? ஆ, ஊன்னா என் பிள்ளையை கூட்டிட்டு கெஸ்ட் ஹவுஸ் போய்டுற? என்ன, தனியா போய்டுவோம்னு எனக்கு ‍பூச்சாண்டி காட்டுறியா?”

“அச்சோ. அப்படி எல்லாம் இல்ல. நீங்க என்ன இப்படி பேசுறீங்க?” பதறி அவள் பதில் சொல்ல,

“நீ என்ன தான் மயக்கி வச்சாலும், என் பையன் என்னை மீறி எதுவும் செய்ய மாட்டான். உன் ஆட்டம் எல்லாம் என்கிட்ட செல்லாது. கேட்டுக்கோ”

“என்ன பேச்சு இது லட்சுமி? எப்பவும் மருமககிட்ட இப்படித் தான் பேசுவியா நீ? இது மட்டும் சத்யாக்கு தெரிஞ்சா, அவன் தனிக் குடித்தனம் போக மாட்டான். நாம தான் போகணும். புரிஞ்சுதா?” அந்நேரம் அங்கு வந்த மாமனார் சொல்ல, அமைதியாய் அவருக்கு உணவை பரிமாறினாள் சஹானா. 

“நான் என்ன இல்லாததையா சொல்லிட்டேன்” என்று சுப்புலட்சுமி பொரும, “அதை உன் பையன் கிட்ட சொல்லு நீ” என்றார் அவர். 

“பேசாம சாப்பிடுங்க” என்று கணவரை அதட்டினார் சுப்புலட்சுமி. சஹானா எதிலும் பட்டுக் கொள்ளாமல் அமைதியாய் அவர்களுக்கு உணவை பரிமாறி, தானும் பெயருக்கு கொறித்து விட்டு அறைக்கு வந்து விட்டாள். 

அடுத்து வந்த நாள்களில் ஒரு பக்கம் ராதாவின் புதுக் கட்டிடம் உயர உயர, சுப்புலட்சுமியின் மட்டம் தட்டல்களும் உயர்ந்துக் கொண்டே போனது.

மறுபக்கம் சத்யமூர்த்தியின் மாமன் மகளின் வயிற்று குழந்தை வளர வளர, சுப்புலட்சுமியின் குறை கூறல்களும் வளர்ந்து கொண்டே போனது. 

சஹானா வீட்டில் சுமூகமான சூழலை உருவாக்க விரும்பினாள். அது நிலைத்திருக்க பாடுபாட்டாள். ஒவ்வொரு முறையும் பதில் பேசிவிட துடித்த நாவை கட்டுப்படுத்தி வைத்தாள். ஆனால், பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு தானே? 

அன்று மாமியாருடன் முக்கிய குடும்ப விழா ஒன்றிற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை. அவர்கள் குடும்பத்திற்கு நெருங்கிய உறவென்பதால் தவிர்க்கவே முடியாது அவள் போயாக வேண்டிய கட்டாயம். 

“சத்யா, நீங்களும் என் கூட வர்றீங்களா? பிளீஸ்?” பட்டை மேனியில் சுற்றிக் கொண்டே அவள் கெஞ்ச, அவன் கண்களோ பட்டோடு சேர்ந்து மின்னிய மேனியில் ஊர்ந்தது. 

“கண்ணை குத்தப் போறேன். ஒழுங்கா பதில் சொல்லுங்க” மிரட்டினாள். 

“எக்ஸ்போர்ட் ஆர்டர் ஒன்னு ஷிப்மெண்ட் போகணும் இன்னைக்கு. கேரளா பல்க் ஆர்டர் ஒன்னு பேக்கிங் இருக்கு. ஐ ஆம் பிஸி சஹானா” சட்டையின் பொத்தான்களை மாட்டிக் கொண்டே அவன் சொல்ல, அவன் கையில் தன் வாழ்க்கையே மாட்டிக் கொண்டதை போல உணர்ந்தாள் சஹானா. 

கடந்த சில மாதங்களாக மாமியாரிடம் இருந்து தப்பிக்க, சத்யாவே கதி என்று சுற்றி விட்டாள் அவள். அவனோடு தொழிற்சாலையின் இண்டு இடுக்கெல்லாம் சுற்றி, தொழில் கற்றுக் கொண்டாள். 

ஆனால், இன்று தப்பிக்கவே முடியாத நிலை. கணவனை நெருங்கி நின்று, “பிளீஸ், சத்யா” என்றாள். 

“ஓகே. டிரை பண்றேன்”

“சத்யா…” ராகம் இழுத்தாள். 

“வர்றேன்”

“எப்போ?”

“நீ கால் பண்ணு. உடனே வர்றேன்” 

“சத்தியமாயிட்டு வருமோ?” அவளின் மலையாளத்தில் சட்டென புன்னகை துளிர்க்க, தலையசைத்தான் சத்யமூர்த்தி. 

சத்தியத்திற்கும் சத்யமூர்த்திக்கும் சம்மந்தமே கிடையாது என்று அன்று சஹானாவிற்கு நிரூபித்தான் சத்யமூர்த்தி. 

என்னதான் அவள் மேல் கோபமும், வருத்தமும் இருந்தாலும் மாமியார் தன்னை வெளியில் விட்டுக் கொடுக்க மாட்டார் என்றே நினைத்திருந்தாள் சஹானா. அவளின் அந்த நம்பிக்கையும் குலைத்துப் போட்டார் சுப்புலட்சுமி. 

தன் வாழ்க்கையில் என்றுமே இத்தனை அவமானப்பட்டது கிடையாது சஹானா. 

மாமியாரும் சுற்றி இருந்த சொந்தங்களும் பேச பேச அவமானமாக உணர்ந்தாள் அவள். அவளுக்கு திருப்பி தக்க பதில் கொடுக்க சில நொடிகள் போதும். ஆனால், கணவனை பற்றி யோசித்து வாயை மூடிக் கொண்டாள் அவள். 

அவர்களின் உறவுகளுக்கு மத்தியில், சமூகத்தில் அவனுக்கு என்று ஒரு பெயரும், உயரமும் இருக்கிறது. அவள் குடும்பத்திற்கு என்று மதிப்பும், மரியாதையும் இருக்கிறது. அதை அவளே இறக்கி காட்டி விடக் கூடாது என்றே வாயை மூடிக் கொண்டு அமர்ந்திருந்தாள் அவள்.

காலையில் பேசி வைத்தபடி கணவனை அழைத்தாள். அழைப்பை ஏற்கவில்லை அவன். மாதவனை அழைத்தாள்.

“சார், வேலையா இருக்கார் மேம்” இயந்திர குரலில் பதில் வந்தது.

“ஓகே. நான் பேசுறேன்னு சொல்லி அவர்கிட்ட குடுங்க.”

“முக்கியமான கால் மேம். ஓவர்சீஸ் கால் பேசிட்டு இருக்கார்”

“ஓகே. முடிச்சுட்டு கூப்பிட சொல்லுங்க”

“சொல்றேன் மேம்” 

கணவனைப் போலவே வார்த்தைகளை எண்ணிப் பேசிய அவனது உதவியாளனையும் நினைத்து மனதில் சலித்தபடி, அலைபேசியை கைப்பையில் போட்டாள் சஹானா. 

“ஏன் சுப்பு, ஏதாவது கோவிலுக்கு நேர்ந்துக்கலாம் இல்ல? கல்யாணமாகி ஒரு வருஷம் ஆக போகுது. இன்னும் பிள்ளை இல்லை சொல்ற?”

“டாக்டர் பார்த்தியா? என்ன சொல்றாங்க?”

“இப்ப எல்லாம் பொண்ணுங்களுக்கு என்னன்னமோ பேர் தெரியாத வியாதி எல்லாம் வருது பா. கர்ப்பப்பை கட்டி சொல்றாங்க. கரு நிக்கலை சொல்றாங்க. கரு முட்டையே சரியா இல்லைனு சொல்றாங்க. நாம என்னத்த கண்டோம். நம்ம எல்லாம் கல்யாணமான மறுமாசமே மசக்கைனு… “

“என் அண்ணன் மருமக கோயம்புத்தூரில் டாக்டரா இருக்கா. அவகிட்ட உன் மருமகளை கூட்டிட்டு போய் காட்டேன் சுப்பு. என்னனு கரெக்ட்டா சொல்லிடுவா. நம்ம ஆனந்தி தான். உனக்கு நல்லா தெரியுமே? நான் சொல்லி வைக்கிறேன். நீங்க போய் பாருங்க”

சஹானாவிற்கு அவர்களின் பேச்சுக்கள் அத்தனையும் ரத்த அழுத்தத்தை ஏகத்துக்கும் கூட்டியது. ஓரமாக அமர்ந்திருந்தவளைப் பார்த்து ஓர வஞ்சனையின்றி பேசினார்கள் பெரிய மனுஷிகள்.

சஹானாவிற்கு அவர்கள் வீட்டுக் கதையெல்லாம் என்னவென்று கேட்க வேண்டும் போல ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

“ஹாய், சஹானா. தானே?” என்றபடி இளம் பெண் ஒருத்தி வந்து அவள் அருகில் நின்றாள். அங்கிருந்த ஒருவரை கைக் காட்டி, “புஷ்பா அத்த மருமக நான். உங்களுக்கு நாத்தனார் முறை. வாங்க, அந்த பக்கம் போகலாம்” என்று அழைக்க, அவளை பகவதியை பார்ப்பது போல பயபக்தியுடன் பார்த்தாள் சஹானா.

அந்த கூட்டத்தில் இருந்து தப்பித்ததும், “தாங்க்ஸ்” என்றாள், மனதார.

“எனக்கும் இந்த அனுபவம் இருக்கு” என்று கண்ணடித்து சிரிப்புடன் சொன்ன நித்யா, அவள் கணவனை அறிமுகப்படுத்தி, அவனிடம் இருந்த குழந்தையை வாங்கி சஹானா கைகளில் கொடுத்தாள். 

பஞ்சு பொதியை போன்ற குழந்தையை கையில் சுமக்கையில், மனதே லேசாகி போக சஹானாவிற்கு குழந்தை ஆசை மேலெழுந்து நின்றது. 

சத்யா, சஹானா கலவையில் சாந்தமாய், சகலமுமாய் ஒரு குட்டி பூங்குவியல். அவளுக்கு கற்பனையே இனித்தது என்னவோ உண்மைதான். ஆனால், கணவனின் மேலிருந்த கோபம் வீம்பை வளர்க்க சொன்னது. மாமியாருக்காக மகவா என்றே யோசித்தாள் அவள்.

அன்று மாலை வரை அவளை அழைக்கவில்லை சத்யமூர்த்தி. இத்தனை மாதங்களில் கணவனின் இந்த போக்கு அவளுக்கு பழகி இருந்தது. 

அவனுக்கு ஏதேனும் சரியான காரணம் இருக்கும் என்பதும் அவளது ஆழ் மனதுக்கு தெரிந்து தான் இருந்தது. ஆனாலும், கண்மூடித்தனமாக கணவன் மேல் கோபம் வளர்த்துக் கொண்டாள் சஹானா. அதற்கு காரணங்களை அவனே தான் அள்ளிக் கொடுத்தான்.

அன்றிரவு நேரம் சென்று வீடு திரும்பிய சத்யமூர்த்தி, “கோபமா சஹானா?” ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மனைவியின் தோள் தொட்டு மெல்ல அசைத்து கேட்டான். 

“தொடாதீங்க” சீறினாள் மனைவி.

“சஹானா” ஆழ்ந்த அமைதியான குரல். எதற்கும் பதறாத அவன் குணத்தை நினைக்கையில் அவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது.

“சஹானாக்கு என்ன வச்சிருக்கீங்க?” சினந்து, எகிறி கொண்டு போனாள்.

அவள் கண்களை ஏறிட முடியாமல், தலை குனிந்தான் சத்யா. 

“சத்யா” கோபமாக அழைத்தாள். மெல்ல நிமிர்ந்து மனைவியை பார்த்தவனின் கரங்கள் அனிச்சையாய் தலையை கலைத்து கோதியது. 

“நீங்க சத்தியமாயிட்டு என்னை பிடிச்சு தான் கல்யாணம் பண்ணீங்களா?” என்ற அவளின் கேள்வியில் அதிர்ந்து போய் அவன் பார்க்க, “எனக்கு அம்மா வீட்டுக்கு போகணும். உங்களை விட்டு தூரமா போகணும். இந்த வீட்டை விட்டு தூரமா போகணும்” என்றாள் தீர்க்கமாக.

“உங்க பக்கத்தில் இருந்தாலும் தூரமா இருக்க போல இருக்கு. ஒருவேளை தூரம் போனா, நெருங்கி வருவோமோ, என்னவோ?” என்றவளை விசித்திரமாக பார்த்தான் சத்யா. 

அவர்களுக்குள் நெருக்கத்திற்கு எல்லாம் குறைவே இல்லை எனும் போது, மனைவியின் வார்த்தைகளை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. 

“என்ன பேசுற சஹானா?”

“தமிழ் தான். மலையாளமா பேசினேன்? அப்போ கூட உங்களுக்கு மலையாளமும் புரியுமே?” என்று அவள் முறைக்க,

“ஃபேக்டரியில் வேலை இருந்தது சஹானா” 

“அப்புறம்..” அவள் நக்கலாக கேட்க,

“ஜப்பான் ஷிப்மென்ட், மும்பையில் மாட்டிட்டு நிக்குது. என்னனு விசாரிச்சு க்ளியர் பண்ணுறதுக்குள்ள…” சொல்லிக் கொண்டே போனவன், மனைவியின் கண்களைப் பார்த்து பேச்சை நிறுத்தினான். 

அவள் கண்களில் அப்பட்டமாக தெரிந்தது அவன் மேலான கோபம். 

“நாளைக்கு நான் அம்மா வீட்டுக்கு போறேன் சத்யா. ஐ நீட் அ ப்ரேக். பிரிவு ஒருவேளை என்னோட அருமையை உங்களுக்கு உணர்த்தலாம். நீங்க,என்னைத் தேட மாட்டீங்க தெரியும். இருந்தாலும் ஒரு நப்பாசை”

“நீயா எதையாவது நினைச்சுட்டு பேசாத” லேசாய் குரலில் கோபம் எட்டிப் பார்க்கச் சொன்னான் சத்யா. பிரிவு என்ற வார்த்தை அவனை மனதில் திடுக்கிட செய்தது. அதிர்ச்சியில் வார்த்தைகள் சுத்தமாய் மறந்து போனது அவனுக்கு.

“நானா, நினைச்சேனா? சொல்ல மாட்டீங்க பின்ன? நீங்களா என்னைக்காவது, ஏதாவது சொல்லி இருக்கீங்களா? எனக்காக பேசி இருக்கீங்களா? ஏதாவது ஏடாகூடமா செஞ்சு உங்கம்மா கிட்ட என்னை மாட்டி தான் விடுறீங்க. எனக்காக எப்பவாவது அவங்க கிட்ட பேசி இருப்பீங்களா நீங்க?” படபடவென்று அவள் பொரிய, அவனிடம் மௌனம் மட்டுமே. 

“உங்க அம்மாக்கு கொஞ்ச நாள் நிம்மதியை தரலாம்னு இருக்கேன்.” அவள் உறுதியாக சொல்ல,

“இன்னைக்கு என்ன நடந்தது?” என்று அப்போது தான் முக்கிய கேள்வியை கேட்டான் சத்யமூர்த்தி.

“அதே பழைய கதை தான் மிஸ்டர் சத்யா.” என்று நக்கலாக சொன்னவள், “கேரளாவா? நம்ம இனம் இல்லையா? எப்படி பெண் எடுத்த? லவ் மேரேஜா? என்ன செஞ்சாங்க அவங்க வீட்ல? குழந்தை இல்லையா? டாக்டர் பார்த்தியா? ஏதாவது குறை இருக்கப் போகுது?” மூச்சைப் பிடித்துக் கொண்டு அவள் சொல்ல, “சஹானா, நான்.. அம்மாகிட்ட பேசுறேன்” அவள் கைப்பிடித்து சொன்னான் அவன்.

“ஒன்னும் வேணாம்” அவன் கையை மூர்க்கமாக உதறினாள் சஹானா. 

“என் மேல என்ன வேணாலும் கோபம் இருக்கட்டும். குறைகள் சொல்லட்டும். ஆனா, எல்லாமே வீட்டுக்குள்ள இருக்க வரை சரி. எனக்கு பிரச்சனை இல்ல. நான் எதிர்த்து பேசினது இல்ல. கோபப்பட்டது இல்ல. ஆனா, நாலு பேர் முன்னாடி, என்னை அத்தை விட்டுக் கொடுக்கலாமா? நான் உங்க வைஃப் இல்லையா? அவங்க மருமகள் இல்லையா? என்னை தலைகுனிய வைக்கலாமா, அவங்க? நாலு பேர் முன்னாடி என்னை தாழ்த்தி காட்டி, உங்களை தான் அசிங்கப்படுத்துறாங்க அத்த.” அவன் வார்த்தைகள் இன்றி அவள் கைப் பிடித்து வருட, அவளின் கோபத்தின் அளவு உயர்ந்து கொண்டே போனது. 

“நான் இதுவரை இப்படி அசிங்கப்பட்டதே இல்ல சத்யா. நான் பேச வாயை திறந்தா முறைக்கறாங்க. ரொம்ப பேசுறா சொல்றாங்க. நீங்க என் கூட இருந்திருந்தா இதெல்லாம் நடந்திருக்காது தானே?” அவள் ஆணித்தரமாக கேட்க, அவனிடம் பதிலில்லை. அவளை இம்முறை சமாதானப்படுத்த விடவும் இல்லை சஹானா. 

அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு கடந்திருக்கலாம் அவள். ஆனால், கோபத்தில் கொந்தளித்த மனதை குளிர விடவில்லை அவள். 

Advertisement