Advertisement

விடி விளக்கை போட்டு விட்டு, அவன் படுக்க, “சத்யா” என்று அவனைச் சுரண்டினாள் சஹானா.

“முடியாது. நீ கேட்டாலும் முடியாது தான்” அவள் கேள்வி கேட்கும் முன்னே பதில் சொன்ன கணவனை முறைத்து பார்த்தாள் சஹானா. 

அவளுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டான் சத்யமூர்த்தி. 

“சத்யா” மீண்டும் அழைத்தாள்.

“பேசாம படு”

“முடியாது” அடமாக சொன்னாள்.

“அதேதான்” என்றான் அவனும். 

“உங்களை…” என்று சிணுங்கி, அவனைப் பிடித்து அவள் திருப்ப, “என்ன வேணும் உனக்கு?” சீறினான்.

“எனக்கு ஒன்னும் வேணாம்” அவசரமாக சொன்னவளை புருவங்கள் நெரித்து பார்த்தான்.

“அப்புறம்?” 

“அத்த சொல்ற மாதிரி..”

“ஏன் செய்யணும்?”

“ஏன் செய்யக் கூடாது?” கைகளைக் கட்டிக் கொண்டு அவள் தீர்க்கமாக கேட்க, “லிமிட் இருக்கு சஹானா” என்றான் சத்யா.

“ஓகே. எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு தான். ஆனா, அது அம்மா, அப்பா, தங்கச்சிக்கும் கூடவா? ராதா அண்ணிக்காக தானே செய்யறோம். ஒருவேளை அவங்களுக்கு பணம் தேவைப்படலாம் இல்லையா? உங்ககிட்ட கேட்க கூச்சப்பட்டு கூட கேட்காம இருக்கலாம், இல்ல?” அவள் நீளமாக பேச,

“அண்ணன் கிட்ட என்ன தயக்கம்?” என்று புருவம் உயர்த்தினான் அவன்.

“உங்ககிட்ட பேச முடியாது. போங்க” என்று அவனை இடித்துக் கொண்டு படுத்து விட்டாள் சஹானா. 

இதுவும் தன் தலையில் தான் விடியும் என்று அவளுக்கு நன்றாகத் தெரியும். அவள் நினைத்தபடியே தான் நடக்கவும் செய்தது. 

“அம்மா வீட்ல இருந்து கை வீசிட்டு வந்துட்டு, இங்க புருஷனை சொந்த தங்கச்சிக்கு குடுக்க விட மாட்டேங்கறா. ஒத்த பிள்ளையா பிறந்தா இப்படித் தான். கூட பிறந்தவங்க இருந்தா இல்ல, அவங்க அருமை தெரியும். பாசம்னா என்னன்னு புரியும். ஒத்தையா பிறந்துட்டு, புருஷனை தங்கச்சிக்கு செய்ய விடாம தடுத்து…” பேசிக் கொண்டே போனவரை திரும்பி நேராக பார்த்தாள் சஹானா. 

கணவனுக்காக தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தவளின் கண்களில் அடுப்பின் சூடு தெரிந்தது.

“என்ன முறைக்குற?” என்ற சத்தம் கூட்டினார் சுப்புலட்சுமி. 

“உன் புருஷன் வீடு கட்டினா, உங்க வீட்ல இருந்து பத்து காசு கூட கொடுக்க மாட்டாங்க. இந்த லட்சணத்தில நீ, என் பிள்ளையை அடக்கிட்டு இருக்க?” எகத்தாளமாக கேட்டவரை ஏறெடுத்து பார்த்தாள் அவள்.

“சஹானா” என்று மனைவியை அழைத்தபடி அங்கே வந்து நின்றிருந்தான் சத்யமூர்த்தி. 

அம்மாவையும், மனைவியையும் மாறி மாறி அவன் பார்க்க, “நமக்கு ஒரு வீடு கட்டுங்க. காசு எங்கப்பா என்ன, நானே தர்றேன். இன்னைக்கு உங்க தங்கச்சிக்கு எவ்ளோ கொடுத்தீங்க? முப்பது லட்சம் தானே? நான் நாப்பது லட்சம் தர்றேன்” குரலில் ஒருவித உறுதியுடன் தீர்க்கமாக கணவனைப் பார்த்துச் சொன்னவள், அவனுக்காக தேநீரை வடிக்கட்டி அவனிடம் நீட்டினாள்.

சுப்புலட்சுமி ஒரு கணம் நடப்பது புரியாமல் விழித்தார். 

“ஈவ்னிங் ராதா வீட்டுக்கு போனோம்” அம்மாவை அமைதியாய் பார்த்து சொல்லி விட்டு சத்யமூர்த்தி நகர, அவசர அவசரமாக மகளை அழைத்தார் சுப்புலட்சுமி. 

“நான் உங்களுக்கு கால் பண்ணேன். ஏன் மா எடுக்கல. அண்ணா, அண்ணி வீட்டுக்கு வந்திருந்தாங்க. அவங்களோட நீங்களும் வந்திருக்கலாம் இல்ல மா?” மகளின் பேச்சை ஒதுக்கி விட்டு, தலையை சுற்றாமல் நேரடியாக மூக்கைத் தொட்டார் சுப்புலட்சுமி. 

“அண்ணா என்ன சொன்னான்? உன் வீட்டுக்கு எதுக்கு வந்தான்?”

“சும்மா பார்க்க வந்தேன் சொன்னாங்க மா. ஆனா, வீடு கட்ட வச்சுக்கோன்னு முப்பது லட்சத்துக்கு செக் கொடுத்துச்சு மா சத்யா ண்ணா.” மகளின் மகிழ்ச்சியான குரலை கேட்டதும் குளிர்ந்து போனது போல அவர் மனது. 

சஹானா அறையில் கோபத்துடன் அமர்ந்திருந்த கணவனைப் பார்த்தாள். அவனுக்குப் பிடிக்காத ஒன்றை அவளுக்காக மட்டுமே செய்திருக்கிறான் அவன் என்பது அவளுக்கு தெளிவாக விளங்கியது. 

அவளும் முதல் நாள் அவனிடம் கேட்டதோடு சரி, அதன் பிறகு அதைப் பற்றி அவனிடம் வாதிடவில்லை அவள். இன்றும் அவனாக தான் அவளை அழைத்துக் கொண்டு தங்கை வீடு சென்றான். அவள் கையாலேயே அந்த தொகைக்கான காசோலையை கொடுக்கச் செய்தான். இப்போது முகத்தை தூக்கியும் வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கிறான். 

“உங்களுக்கு இஷ்டம் இல்லைனா, ஏன் கொடுத்தீங்க?” அவளின் கேள்விக்கு பதிலே சொல்லவில்லை அவன். 

“சத்யா..”

“கொடுத்தாச்சு. அவ்ளோ தான்” அதற்கு மேல் சொல்ல எதுவும் இல்லை, முடிந்தது என்பது போல தோள் குலுக்கி விட்டு அவன் செல்ல, கணவனை முறைக்க மட்டுமே அவளால் முடிந்தது.

அடுத்து வந்த இரு நாட்கள் மாமியார் முகத்தில் புன்னகையை கூட பார்த்தாள் சஹானா. அதை சத்தமின்றி அழித்தான் சத்யமூர்த்தி. 

“கோயம்புத்தூர்ல இடம் வாங்கப் போறேன். அட்வான்ஸ் கொடுத்துட்டேன். சஹானா பேர்ல” இரவு உணவை முடித்து விட்டு, ஓய்வாக அமர்ந்திருந்த பெற்றோர்களிடம் அவன் செய்தி சொல்ல, அப்பா முகத்தில் மகிழ்ச்சி ஒளிர, அம்மா முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சி நிறைந்திருந்தது. 

சஹானாவிற்கே அது செய்தி தான். அன்று மாமியாருக்கு பதிலடி கொடுக்கத் தான் அவள் அப்படி சொன்னது. ஆனால், அதை மெய்ப்பிக்கும் வகையில் கணவன் இடம் வாங்குவான் என்று அவள் கற்பனையில் கூட நினைத்திருக்கவில்லை.

“நல்ல விஷயம் ப்பா. கோவையில் எங்க? இடம் எவ்வளவு பெருசு? என்ன விலை சொல்றாங்க?” அப்பா கேட்ட கேள்விகளுக்கு பதில் கொடுத்துக் கொண்டிருந்தான் சத்யமூர்த்தி. 

சுப்புலட்சுமி மருமகளை மேலிருந்து கீழாக முறைத்து, எரித்து சாம்பலாக்கி விடுவது போல பார்த்தார்.

அப்பொழுது மகன் முன் பேசாமல் அமைதி காத்தவர், மறுநாளே மருமகளிடம் முகம் காட்டினார்.

“சொந்த தங்கச்சிக்கு கொடுத்தது கூட உனக்கு பொறுக்கலையா? அந்த பக்கம் அவனை கொடுக்க விட்டுட்டு, இந்த பக்கம் உனக்கு செலவு பண்ண வைக்கிறியா?…” என்றவர் மேலும் மேலும் பேசிக் கொண்டே போக, அதைக் கேட்க விருப்பமின்றி அங்கிருந்து நகர்ந்து விட்டாள் சஹானா. 

அவள் அப்படி கண்டுக் கொள்ளாமல் போனது சுப்புலட்சுமியின் கோபத்தை இன்னுமே அதிகப்படுத்தியது. 

மாமியாரிடம் பிரச்சனை செய்ய விரும்பாமல் தான் அவள் ஒதுங்கிக் கொண்டது. அதை யோசித்தபடியே இப்போது அவள் அமர்ந்திருக்க, மாலை கவிழ்ந்திருந்தது. 

“சஹானா ம்மா” என்ற குரலில் அவள் கலைந்து நிமிர்ந்து பார்க்க, அந்த வீட்டை பராமரிக்கும் பெண்மணி அங்கு நின்றிருந்தார்.

“மாதவன் சார், இதெல்லாம் வாங்கி வைக்க சொன்னார். அடுப்படியில் வைக்கிறேன் மா. பால் இருக்கு, உங்களுக்கு டீ போட்டுத் தரவா? ஐயோ, நீங்க காஃபி தானே குடிப்பீங்க? காஃபி போடவா?” என்று கேட்டவரை புன்னகையுடன் பார்த்து, 

“காஃபி கொடுங்க கா. உங்களுக்கும் சேர்த்துப் போடுங்க” என்றாள். அவளின் கண்கள், அவர் கரங்களில் இருந்த பைகளை நோட்டம் விட்டது. 

பால், காய்கறி, பழங்கள் என்று அதில் இருக்க, புன்னகைத்துக் கொண்டாள். 

அவள் பாதி காஃபி குடித்து முடித்திருக்கும் போது, அவளுக்கு பக்கத்தில் வந்து அமர்ந்தான் சத்யமூர்த்தி.

அவன் கையில் இருந்த துணிப் பையை ஓரமாக வைக்க, உதடு வளைத்து குறும்பாக சிரித்தாள் சஹானா. 

அன்று அங்கு தான் தங்கப் போகிறார்கள் என்பது கணவனைப் பார்த்ததும் அவளுக்கு புரிய, “எல்லாரும் சண்டை போட்டு அம்மா வீட்டுக்கு போவாங்க. இங்க ஒருத்தர் அம்மா கூட டூ விட்டு, பொண்டாட்டியை கெஸ்ட் ஹவுஸ் கூட்டிட்டு வந்திருக்கார்” என்றாள் கிண்டலாக. அவளைப் பார்த்து புருவங்களை நெரித்த சத்யமூர்த்தி, அவள் கையில் இருந்த காபியை வாங்கி குடிக்கத் தொடங்கினான். 

சஹானா மனதில் இதமாக உணர்ந்தாள். அவள் சில மணி நேர அமைதிக்காக இங்கு வர, அதை சில நாட்களாக மாற்றிய கணவனை கண்ணிமைக்காமல் பார்த்தாள் அவள். 

அவள் கண்களைப் பார்த்தே, அவள் விரும்பியதை செய்திருக்கிறான் தான். ஆனாலும், கோபத்தில் துரும்பை கூட தூணாக்குவது மனித இயல்பு தானே? அதைத் தான் சஹானாவும் செய்தாள். 

Advertisement