Advertisement

மனதிற்கு கால்கள் தான் இல்லையே தவிர, அதனால் ஆயிரம் பாதைகளை கண்டறிய முடியும். சஹானா வருந்துவதற்கு ஆயிரம் காரணங்களை தேடிப் போக தேவையிருக்கவில்லை. வீடு ஒன்றே அவளுக்கு ஓராயிரம் பிரச்சனைகளை ஒரேடியாகக் கொடுத்தது.

கணவன் தேவைக்கும் குறைவாக பேசி அவளைத் தவிக்க வைக்க, மாமியார் அதிகம் பேசியே, அவரைத் தவிர்க்க வைத்தார். 

ராதாவை பாசமாக பார்க்கும் இவரால் தன்னை ஏன் அப்படி பார்க்க முடியவில்லை என்று அவளால் வருந்த மட்டுமே முடிந்தது. 

அவரின் மேலிருந்த கோபம் எல்லாம் கணவன் மேல் திரும்பியது. கணவன் தவறும் தருணங்களை அவளையும் அறியாமல் பூதக் கண்ணாடி கொண்டு பார்க்கத் தொடங்கியிருந்தாள் அவள்.

திருமண வாழ்க்கையை சுற்றுலா பயணங்களைப் போல எளிதாக கடக்க முடியவில்லை அவளால். மனம் முழுவதும் குழப்பங்கள் நிறைந்திருக்க, பயணப் பையை தோளில் போட்டுக் கொண்டு பெயர் தெரியாத புதிய ஊருக்கு பயணப்பட விரும்பியது அவள் மனது. இந்த விரக்தியான மன நிலையில் இருந்து விடுபட விரும்பினாள் அவள்.

அந்த முன் காலை பொழுதில், அவர்களின் தொழிற்சாலையை ஒட்டியிருந்த தோப்பு வீட்டில் இருந்தாள் சஹானா. 

சத்யமூர்த்தி அலுவலக வேலையில் மூழ்கியிருக்க, அவனிடம் சொல்லிக் கொண்டு பத்து நிமிட நடை தூரத்தில் இருந்த இந்த வீட்டிற்கு வந்து விட்டாள் அவள். 

அந்நேரம் தனிமை அத்தனை இனித்தது. அந்த வீட்டைச் சுற்றிலும் இருந்த தென்னை மரங்கள் போதுமான தென்றலை வாரி வீச, நீச்சல் குளத்தில் கால்களை அமிழ்த்தி அமர்ந்தாள் அவள். 

அம்மா, அப்பா, அவள் என செல்லமாக வளர்ந்த பெண்ணுக்கு, புகுந்த வீட்டு குடும்ப அரசியலை சமாளிப்பது அத்தனை எளிதாக இருக்கவில்லை. 

சினிமா, சீரியல் என்று மட்டுமே பார்த்து, கேட்ட விஷயங்களை நேரில் பார்ப்பதற்கும், அதை அவளே அனுபவிப்பதற்கும் அத்தனை வித்தியாசங்கள் இருந்தது. 

இதெல்லாம் உலகில் நடக்கிறதா என்ன? இப்படியெல்லாம் கூட நடக்குமா என்ன? என்று ஒதுங்கிப் போன பல விஷயங்கள் அவளுக்கு நடக்கும் போது அத்தனை அதிர்ச்சியாக இருந்தது. சற்றே ஜீரணிக்க இயலாததாக கூட இருந்தது. 

ராதாவின் மாமியாரை, அவரின் குணத்தை எப்போதும் குறை சொல்லி வசைப்பாடும் சுப்புலட்சுமி தான் அதை விட மோசமாக நடந்துக் கொள்கிறோம் என்பதை ஏன் உணரவில்லை என்பது அவளுக்கு புரியவே இல்லை. 

கடந்த சில மாதங்களாக அவளை பார்க்கும் பார்வையிலேயே அனலை கக்கினார் அவர். சஹானா அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு கடப்பதாக வெளியில் காட்டினாலும் கூட, மனதில் சதா ரணமாக அவரின் வார்த்தைகள் வலம் வந்து கொண்டேயிருந்தது.

விளைவு? கணவனிடம் இருந்து விலக ஆரம்பித்தாள் சஹானா. 

கணவன் மனைவிக்குள்ளான நெருக்கம், இப்போது குழந்தைக்காக என்றே அவளுக்கு தோன்றத் தொடங்கியிருந்தது. அது நிச்சயம் அவளின் தவறு தான். குடும்பக் கட்டுப்பாட்டை கை விட்டதும் அவள் தான். மனதில் சஞ்சலத்தை வளர்த்துக் கொண்டதும் அவள் தான். 

மாமியாரின் பேச்சை அடக்க தான் குழந்தை என்று அவளாகவே ஒரு முடிவுக்கு வந்து, அந்த நினைப்பிலேயே கணவனை தவிர்க்கத் தொடங்கினாள். அவர்களுக்கு திருமணமான நாளில் இருந்தே உயிர் உருக பேசவில்லை என்றாலும், மெய் உருக பேசியவன் சத்யமூர்த்தி. 

ஏனோ இப்போது மனைவியின் மனம் புரிந்து, அவளின் கண் பார்த்தே ஒதுங்கிப் போனான். அவளை எப்போதும் போல மென்மையாய் அணைத்தபடி அவன் உறங்க, சஹானா உறக்கம் வராமல் தவித்த நாட்களின் எண்ணிக்கை இப்போது கூடிக் கொண்டே போனது. 

மாமியாரின் பேச்சுக்கு தான் ஏன் இத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று அவளை அவளே கேள்விக் கேட்டாலும் கூட பதில் கண்டறிய முடியவில்லை அவளால். 

அவள் மனதில் இருந்ததை யாரிடமாவது பகிர்ந்துக் கொண்டிருந்தால் பாரமும், அழுத்தமும் குறைந்திருக்கும் என்பது திண்ணம். ஆனால், அவளுக்கு தான் அதில் விருப்பமில்லை. 

அம்மாவிடம் கூட புகுந்த வீட்டைப் பற்றி குறை சொல்ல அவள் மனம் இடம் தரவில்லை. மகளின் வாழ்வு குறித்து பெற்றவர்களுக்கு கவலையை கொடுக்க அவள் பிரியப்படவில்லை என்பது மற்றொரு காரணம்.

சரி, நெருங்கிய தோழி ரோஹிணியிடம் பகிர்ந்துக் கொள்ளலாம் என்றால், இவளுக்கு மேல் பாட்டு பாடினாள் அவள். அதைக் கேட்கையில் தன் நிலையே மேலாக அவளுக்குத் தோன்றியது. 

சத்யமூர்த்தி தயக்கத்தை உதறி, அப்பாவிடம் பேசி இருந்தான். அது அம்மாவை சென்று சேர்ந்திருந்தது. 

சஹானாவிடம் இப்போது நேரடியாக இல்லாமல், மறைமுக பேச்சுக்களால் குத்தத் தொடங்கினார் சுப்புலட்சுமி. 

சத்யமூர்த்தி விரைவாக வீடு வந்த ஒரு நாள் அவரின் பேச்சைக் கேட்டு விட்டு, “என்னம்மா?” என்று அவரின் முன்னே சென்று நின்றான் அவன். மிக இயல்பாக அவன் கரம் நீண்டு சஹானாவை அவனுக்கு அருகில் இழுத்து நிறுத்தியது. மாமியாரை கோபம், இயலாமை கலந்த பார்வை பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் சஹானா.

“ராதா மாமியார் தேவலாம் போல” 

என்றவனை, பதிலின்றி வாயடைத்துப் போய் பார்த்தார் சுப்புலட்சுமி. 

அவருள் இருந்த அம்மா ஓய்வெடுத்திருக்க முழுதாக மாமியாராக மாறி நின்றவர், மகனை தனக்கு எதிராக திருப்பி விட்டாள் என்று மருமகளையே கடுமையாக முறைத்தார் அவர். 

அவரால் சஹானாவிற்கு தான் வீடே நரகமாக மாறியது. கணவனோடு இணைந்து தொழிற்சாலை வேலைகளில் மூழ்கிப் போனாள் அவள். ஆனாலும் மனதின் ஓரம் ஏதோ ஒன்று அரித்துக் கொண்டேயிருந்தது.

அவளின் இயல்பை தொலைத்துக் கொண்டிருந்தவளுக்கு எங்காவது கிளம்பிப் போய் விடலாம் போலிருந்தது. முன்பானால் தடுக்க ஆளின்றி தன் விருப்பம் போல, பெற்றோரிடம் தகவல் சொல்லி விட்டு, பயணம் கிளம்பி விடுவாள். ஆனால், இப்போது அது முடியாதே.

திருமணம் அவளின் சிறகுகளை சிதைத்ததைப் போல உணர்ந்த நொடி தன் தலையை தானே தட்டிக் கொண்டாள் சஹானா. 

“என்னாச்சு?” என்ற குரலில் அவள் அதிர்ந்து திரும்பிப் பார்க்க, இருவருக்குமான மதிய உணவுடன் உள்ளே வந்தான் சத்யமூர்த்தி.

“ஒன்னுமில்ல” என்றாள் மெல்லிய குரலில். அவளையே கூர்ந்து பார்த்தவன், “சாப்பிடலாம்” என்றான். 

நீரில் இருந்து கால்களை விலக்கி அமைதியாய் எழுந்தவள் கணவனை பின் தொடர்ந்தாள். மௌனமாய் உணவை மட்டுமே மென்றனர். ஆனால், இருவர் மனதிலும் ஓராயிரம் விஷயங்கள் மெல்லப்பட்டுக் கொண்டிருந்தது என்னவோ அவர்களின் மனம் மட்டுமே அறியும். 

உணவை முடித்து, தொழிற்சாலை கிளம்பிய சத்யா, “நீ வரல?” என்றான் மனைவியைப் பார்த்து, “இல்ல. கொஞ்சம் நேரம் இங்க இருக்கணும் போல இருக்கு. நீங்க போங்க. நான் அப்புறமா வர்றேன்” என்றாள் சஹானா. 

அங்கேயே அழுத்தமாய் நின்று சில நொடிகள் அவளையே கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் சத்யா.

“என்ன?” என்றாள் அவளையும் மீறி மலர்ந்த புன்னகையுடன். அவனது புன்னகையை மீசை மறைக்க, மறுப்பாக தலையசைத்து விட்டு, தொழிற்சாலையை நோக்கி நடந்தான் அவன்.

சஹானாவின் மனம் இத்தனை அலைபுறுவதற்கு காரணம் இருந்தது. 

அந்த வீட்டில் பிரச்சனைகள் அவளுக்கென்றே வருமா என்று அவளை அவளே நிந்தித்து கொள்ளும் அளவு, கடந்த ஒரு வாரமாக புதிய பிரச்சனை ஒன்று முளைத்திருந்தது. 

ராதா புது வீடு கட்டப் போகிறாள். அதுவும் பிறந்த வீட்டில் இருந்து அவளுக்கு கொடுத்த நிலத்தில் அவள் வீடு கட்ட பூமி பூஜைப் போட குடும்பத்தை அழைக்க வந்திருந்தாள் அவள். 

அதைக் கேட்டதும் சுப்புலட்சுமி அப்படியே பூரித்துப் போனார். அவருக்கு ஏற்கனவே விஷயம் தெரியும் என்றாலும், மகள் குடும்பமாக வந்து நேராக அழைக்கையில் அவரைக் கையில் பிடிக்க முடியவில்லை. 

மகள் கிளம்பியதும், இங்கே வீட்டில் பிரச்சனையை கிளப்பி விட்டார் அவர். 

“ஏன் பா சத்யா, நாம ஒரு இருபது லட்சம் ராதாக்கு கொடுப்போம். வீடு கட்ட நிறைய பணம் தேவைப்படும் இல்ல?” என்றவரை கேள்வியாக பார்த்தான் சத்யமூர்த்தி.

“இல்லப்பா. அவளுக்கு நாமளும் கொஞ்சம் கொடுத்து உதவினா தானே சரியா இருக்கும்.” என்று அவர் சொல்ல,

“இடம் கொடுத்து இருக்கோம்” என்றான் சத்யா. “ராதா வீடு கட்டப் போற இடமே நாம கொடுத்தது தான். அதுக்கும் மேல அங்க வீடு கட்ட காசு வேற கொடுக்கணுமா?” என்று கணவன் சொல்லாமல் விட்டதை மனதில் சொல்லிக் கொண்டு மாமியாரை பார்த்தாள் சஹானா.

அவரோ மகனுக்கு பதில் கொடுத்துக் கொண்டிருந்தார். “என்னப்பா, தங்கச்சிக்கு தானே கொடுத்த? அதைப் போய் சொல்லி காட்டிட்டு இருக்க? அதான் அப்பா சொத்து பிரிக்கும் போது பார்த்துக்கலாம் சொல்லி இருக்காரே. இப்போ அதை ஏன் பா கணக்குல சேர்க்கற?” மகளுக்காக வாதாடியவரை பார்த்து, “உனக்கு வீட்ல ஏதாவது பிரச்சனை கிளப்பிட்டே இருக்கணுமா?” என்று எரிந்து விழுந்த மாமனாரை அதிசயமாக பார்த்தாள் சஹானா. அத்தனை எளிதில் பேசி விட மாட்டார் மனிதர். 

சத்யமூர்த்தி அப்படியே அப்பாவின் வார்ப்பு எல்லாவற்றிலும் என்று அடித்து சொல்லி விடலாம். வீட்டு ஆண்கள் இருவருக்கும் சேர்த்து தான், சுப்புலட்சுமி பேசக் கற்றுக் கொண்டிருந்தார் போலும். 

“நான் என்ன பிரச்சனை பண்ணேன்? நம்ம மக வீடு கட்ட, காசு கொடுப்போம் சொன்னேன். அதுல என்ன தப்பு?” ஆங்காரத்துடன் கணவரை நோக்கி குரலை உயர்த்தினார்.

“நான் கொடுக்கறேன்” என்று அவர் மனைவியை சமாளிக்க சொல்ல, “உங்களை யாரு கேட்டா இப்போ? கொஞ்ச நேரம் பேசாம இருங்க” என்று கணவரை அதட்டியவர், “அவன் கொடுக்கட்டும்” என்று மகனைப் பார்த்துச் சொன்னார். 

அவனோ அவர்களின் பேச்சை கவனிக்காமல், அலைபேசிக்கு தலையை கொடுத்து, மனைவியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உலா போய்க் கொண்டிருந்தான். 

சஹானா மாமியார், மாமனார் பேச்சை புதுவித சுவாரசியத்துடன் கவனித்துக் கொண்டிருந்தாள்.

தொழிற்சாலை, மற்ற தொழில்களின் நிர்வாகம் இப்பொழுது சத்யமூர்த்தி வசம் இருக்க, வரவு செலவு கணக்கு அவனுக்குத் தான் அத்துப்படி. தொழில் லாபமும் பெரும்பான்மை அவன் வசமே இருந்தது. 

மரச்செக்கு தேங்காய் எண்ணெய் தொழிலின் பொறுப்பு மட்டுமே அப்பாவிடம் இருந்தது. அதில் மற்ற தொழில் அளவு பெருத்த லாபமில்லை. 

குடும்ப செலவுகளுக்கு சத்யமூர்த்தி தான் பணம் கொடுப்பான். அம்மா, அப்பா என்று அனைவருக்கும் மாதாமாதம் ஒரு தொகை கொடுத்து விடுவான். 

“என்னப்பா சத்யா, இப்படி அமைதியா இருந்தா எப்படி? நான் ஒருத்தி பேசிட்டு இருக்கேன். நீ கண்டுக்காம போனை பார்த்திட்டு இருக்க?” கத்தியவரை, நிதானமாக நிமிர்ந்து பார்த்தான் சத்யா.

“வீடு கட்டணும்னு முடிவு பண்ணவங்க, பட்ஜெட், பணம் எல்லாம் ரெடி பண்ணி இருப்பாங்க தானே மா?” 

“என்ன கேட்கிற நீ? அவகிட்ட பணம் இருக்கு, இல்ல அதை யார் பேசினா இப்போ. ராதா வீடு கட்டும் போது, நாம ஒரு அமௌண்ட் கொடுத்து உதவணுமா, இல்லையா? அம்மா, அப்பா, அண்ணான்னு நாம இருக்கும் போது..”

சட்டென சோஃபாவில் இருந்து எழுந்து, “முடியாது மா” ஒற்றை வார்த்தையில் முடித்து விட்டு, அறையை நோக்கி நடந்தான் அவன்.

“நான் பேசிட்டே இருக்கேன். எப்படி எழுந்து போறான் பாருங்க. மூஞ்சில அடிச்சா மாதிரி முடியாது சொல்றான். சத்யா.. பதில் சொல்லிட்டு போ தம்பி” என்று அவர் கத்த,

“பதில் இப்போ தானே மா சொன்னேன்?” கதவை திறந்தபடியே திரும்பி அவரைப் பார்த்துக் கேட்டான் சத்யா.

“என்னப்பா இது?” என்று அவன் எரிச்சலுடன் அப்பாவை பார்த்துக் கேட்க, மனைவியை சமாளிக்க, இல்லை சமாதானப்படுத்தத் தொடங்கினார் அவர்.

மாமனாரின் பேச்சைக் கேட்டபடியே அறைக்குள் நுழைந்தாள் சஹானா.

Advertisement