Advertisement

இரவு ஒன்பது மணிக்கு வீட்டுக்குள் புயல் வேகத்தில் நுழைந்த சத்யமூர்த்தி எதிர்கொண்டது, படுக்கையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மனைவியை தான். 

அறைக் கதவு திறந்திருக்க, வெளியே அம்மா பேசுவது அவனுக்கு தெளிவாக கேட்டது.

“நான் ஒருத்தி கூப்பிட்டுட்டே இருக்கேன். என்னனு கேட்காம போறான், பாருங்க” அருகில் அமர்ந்திருந்த கணவனிடம் புகார் படித்துக் கொண்டிருந்தார் அவர். 

“இப்ப தானே வீட்டுக்குள்ள வர்றான். அதுக்குள்ள ஆரம்பிக்காத நீ. அவனுக்கு இன்னைக்கு கலெக்டர் கூட மீட்டிங் இருந்தது.” அப்பாவின் பதிலை கேட்டபடியே போய் கதவை முழுதாக சாற்றி விட்டு வந்தான் சத்யமூர்த்தி. 

சஹானாவை சில நொடிகள் நின்று பார்த்து விட்டு, குளிக்கப் போனான். உறக்கத்தில் ஆழ்ந்திருந்த சஹானா, கணவன் வந்ததை உணரவில்லை. அறைக் கதவு திறக்கும் சத்தமோ, குளியல் அறை மூடப்படும் சத்தமோ, எதுவுமே அவளை கலைக்கவில்லை. 

பத்து நிமிடத்தில் குளித்து வெளியில் வந்த சத்யா, சத்தம் எழுப்பாமல் உடை மாற்றினான். மெல்ல படுக்கையை நெருங்கி மனைவியின் பக்கத்தில் அமர்ந்தான். அவள் நிச்சயம் கோபமாக இருப்பாள் என்பது அவனுக்குத் தெரியும். எப்படி சமாளிக்க என்று யோசித்தபடி அமர்ந்திருந்தான் அவன்.

அவனுக்கு அன்று மாலை மாவட்ட ஆட்சியர் உடன் முக்கியமான அலுவல் ரீதியான சந்திப்பு இருந்தது. அதை முன் தினமே மனைவியிடம் சொல்லியும் இருந்தான் அவன். ஒருவேளை இன்று சஹானா தொழிற்சாலை வந்திருந்தால், அவளையும் அழைத்துக் கொண்டே சென்றிருப்பான் அவன். 

தொழில் முறை சந்திப்பு தான். ஆனால், ஆட்சியர் அவனோடு பள்ளி வரை படித்தவர். தொழிலை தாண்டி பேச்சு, நட்பையும் நலம் விசாரிக்கத் தொடங்கி விட்டது. அதில் நேரம் போனதே தெரியவில்லை அவர்களுக்கு. 

சத்யமூர்த்தி மாவட்ட ஆட்சியரான நண்பனுக்கு தன்னை நினைவிருக்காது என்றே நினைத்தான். ஆனால், முதல் பார்வையிலயே அவனை அடையாளம் கண்டு கொண்டு பெயரிட்டு ஒருமையிலேயே விளித்து பேசினார் ஆட்சியர். அவரும் இப்போது தான் சொந்த ஊருக்கு மாற்றலாகி இருந்தார். ஆக, நண்பனிடம் மாவட்ட தொழில் நிலவரத்தை பற்றி விசாரித்து அறிந்துக் கொண்டிருந்தார். 

அப்படியே பேச்சு தனிப்பட்ட வாழ்க்கை என்று நீண்டதில் நேரமும் நீண்டிருந்தது. 

அன்று அதிகமாக பேசியதில் அயர்ந்து போய் தன் காருக்கு திரும்பிய சத்யமூர்த்தி, அலுப்புடன் அங்கேயே வைத்து விட்டு சென்ற அலைபேசியை கையில் எடுத்தான். மனைவியின் தவற விட்ட அழைப்புகளை பார்த்ததும் அதிர்ந்து போனான் அவன். அதிலும் ஐந்து அழைப்புகள், என்ன அவசரமோ என்று நினைத்து, அவளுக்கு அழைத்தான். இம்முறை சஹானா அழைப்பை ஏற்கவில்லை. 

பொதுவாக அவன் தனிப்பட்ட அலைபேசியை அதிகம் பயன்படுத்துவதில்லை. ஏதேனும் அவசரம் என்றால் வீட்டினருக்கும் அலுவலக எண்ணை அழைக்க வேண்டும் என்று நன்றாக தெரியும். அவனது உதவியாளன் மாதவன் எந்த அழைப்பையும் தவற விடாமல் எடுத்து விடுவான் என்பதும் அவர்களுக்குத் தெரியும். சஹானாவிற்கும் தெரியும். 

அப்படியிருக்கையில், மனைவி ஏன் அவசரத்திற்கு அலுவலக எண்ணை அழைக்கவில்லை என்று யோசித்தவனுக்கு குழப்பம் தான் மிஞ்சியது. 

எதற்கும் பதறி பழக்கமில்லாத சத்யமூர்த்திக்கு பதற்றம் மெல்ல தன் இருப்பைக் காட்ட, அம்மாவை அழைத்தான் அவன். அவரோ விட்டேத்தியாக பதில் கொடுத்தார்.

“எனக்கு என்னப்பா தெரியும்? சாயங்காலம் ரூமுக்குள்ள போனா, இன்னும் கதவை திறக்கல. அப்படி என்னதான் செய்வாளோ அந்த ரூமுக்குள்ள எனக்கும் தெரியல” சுப்புலட்சுமி அங்கலாய்க்க,

“ம்மா” என்றான் அடர்ந்த குரலில். 

“உன் பொண்டாட்டி தூங்குறா ப்பா. நல்லா தான் இருக்கா? என்ன திடீர்னு போன் பண்ணி விசாரிக்கற?” குரலில் நிறைய சந்தேகமும், கொஞ்சம் பயமும் கலந்து அவர் கேட்க, “வீட்டுக்கு தான் வர்றேன் மா. வந்து பேசுறேன்” என்று அழைப்பை துண்டித்து விட்டு, விரைவாக காரைக் கிளப்பி வீடு வந்தான் அவன். 

இப்பொழுது உறங்கும் மனைவியை மெலிதான தயக்கத்துடன் எழுப்பினான். 

“சஹானா.. சஹானா.. எழுந்துக்கோ.. என்ன இந்நேரம் தூக்கம்?” அவளின் தோள் தொட்டு மெல்ல உலுக்கினான். 

அவன் புறமாக நன்றாக புரண்டு படுத்த சஹானா, விழிகளை மூடி மூடித் திறந்து அவனைப் பார்த்தாள்.

“உடம்பு முடியலையா?” என்று கேட்டவனை, உறக்கம் சுமந்த விழிகளுடன் முறைத்து பார்த்தாள். 

“என்ன பண்ணுது?” கேள்வியை மாற்றிக் கேட்டான். அவளோ பார்வையை மாற்றவே இல்லை. சத்யமூர்த்தி மீசை கடித்து, தலை முடியை இடக் கரத்தால் கலைத்து கோதிக் கொண்டான். கண்ணை சுருக்கி அவனைப் பார்த்தாள் சஹானா. 

“மாதவன் கிட்ட பேசினேன். கலெக்டர் கூட மீட்டிங்ல இருக்கீங்கன்னு சொன்னார்” எப்போதும் போல அவனுக்கும் சேர்த்து அவள் தான் பேச வேண்டியிருந்தது. 

“ம்ம்” என்றவன், “கால் பண்ணியிருந்த போல?” அவள் கண்களை சந்திக்க தடுமாறினான். 

“ம்ம்” என்று அவனைப் போலவே சுருக்கமாக சொல்லி விட்டு கண்களை மூடினாள் சஹானா.

“சஹானா” 

“தூக்கத்தில் இனிமே எழுப்பாதீங்க சத்யா. நீங்க எதுக்கு எழுப்பறீங்கன்னு எனக்குத் தெரியும்” 

“கோபமா இருக்கியா?”

“இல்ல. சத்யா போல சாந்தமா இருக்கேன்” என்று கிண்டலாக சொன்னவள், “தூக்க குரலை கேட்க இப்படி பாதி தூக்கத்துல யாராவது எழுப்புவாங்களா?” என்று முணுமுணுத்துக் கொண்டே கண்ணை திறந்து கணவனை பார்த்தாள். 

“உனக்குத் தெரியுமா?” ஆச்சரியத்துடன் கேட்டான் சத்யமூர்த்தி. 

“டெய்லி அலாரம் அடிக்கறதுக்கு முன்னாடி எழுந்து, நீங்க என்னை எழுப்பி பேச வச்சா.. கண்டுபிடிக்க முடியாதா என்ன? கல்யாணத்துக்கு முன்னாடியே நான் கண்டுபிடிச்சுட்டேன்” என்று நாக்கை துருத்தி கண் சிமிட்டினாள். மெல்ல துளிர்த்த புன்னகையுடன், அவனுக்கு வெட்கமும் சேர்ந்து வர, படுக்கையில் இருந்து எழுந்து கொண்டான்.

“என்ன பிரச்சினை? அம்மா ஏன் ஒரு மாதிரி பேசுறாங்க?” அவன் கேட்க, படுக்கையில் இருந்து எழுந்து, கீழே இறங்கினாள் சஹானா.

“உன்னை ஏதாவது பேசிட்டாங்களா?” குளியல் அறை நோக்கி நடந்தவளின் கைப் பிடித்து நிறுத்தி கேட்டான்.

“ம்ம். வா, ஹாஸ்பிட்டல் போகலாம். ஏன் குழந்தை இல்லைனு செக் பண்ணிட்டு வரலாம் சொன்னாங்க. கொஞ்சம் அசந்திருந்தா, என்னை இழுத்துட்டு போய் இருப்பாங்க” சஹானா சொல்ல, தலை முடியை கலைத்து கோதிக் கொண்டான் சத்யா.

மனைவியின் முகத்தில் கண்களைப் பதித்தான். அவள் கண்களில் கோபத்தின் சாயலே இல்லை. 

“நான் அவங்ககிட்ட சொல்லிட்டேன். இப்போ குழந்தை வேண்டாம்னு இருக்கோம் சொல்லிட்டேன். பயங்கர அப்செட்டான மாதிரி இருந்தது. ரொம்ப கத்தினாங்க. இது நம்ம ரெண்டு பேர் முடிவுன்னும் சொல்லிட்டேன். கொஞ்ச நேரத்துல அமைதியாகிட்டாங்க” அவள் சொல்லி விட்டு, முகம் கழுவ செல்ல, அவனுக்குத் தான் குற்ற உணர்வாகிப் போனது. 

அவன் நினைத்தால் இதை தடுத்திருக்கலாம். அப்பாவிடம் சொல்ல நினைத்தான் தான். சில முறை அவரிடம் இது குறித்து பேச சென்று, தயங்கி வேறு பேச்சு பேசி விட்டு வந்திருந்தான். வீட்டில் வைத்து கூட இதைப் பற்றி பேச ஒரு வித கூச்சமும், தர்ம சங்கடமுமாக உணர்ந்தான். இதையெல்லாம் பெற்றவர்களிடம் எப்படி விளக்குவது? அவர்களாக புரிந்துக் கொள்வார்கள் என்றே நினைத்தான் அவன். 

துவாலையில் முகம் துடைத்தபடி வெளியில் வந்த மனைவியின் முன் சென்று அவன் நிற்க, “வாங்க, சாப்பிட போகலாம்” என்று அவனுக்கு முன்னே முந்திக் கொண்டு அறைக் கதவை திறந்து வெளியேறினாள் சஹானா.

சில நேரங்களில் கோப தாபங்களை மறைக்காமல் வெளிப்படுத்தி விட வேண்டும் என்ற திருமணத்தின் பால பாடம் சஹானாவிற்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

இப்போது நிதானமாக அமர்ந்து யோசிக்கும் போது தான் அவளுக்கு எல்லாமே புரிகிறது.

அன்றிரவு அமைதியாய் உணவு முடித்து, அறைக்கு வந்தார்கள் இருவரும். பெரியவர்களும் எதையும் பேசவில்லை. கேட்கவும் இல்லை.

சத்யமூர்த்தி அவளைப் பார்த்துக் கொண்டே சென்று, அன்று பார்க்கத் தவறிய அலுவலக வேலையை பார்க்கத் தொடங்கினான். 

சஹானா சாயங்காலம் உறங்கியதால், இப்போது உறக்கம் வெகு தொலைவில் நிற்க, பயண கட்டுரை எழுத அமர்ந்தாள். அவளுக்கு சொற்பமே என்றாலும், அவளது ப்ளாகில் இருந்து வருமானம் வரத் தொடங்கியிருந்தது. அது தந்த உந்துதலில் மேலும் பல பயணக் கட்டுரைகளை எழுதினாள் அவள்.

கேரளா, ஆலப்புழாவின் படகு வீடுகளை பற்றி எழுதிக் கொண்டிருந்தாள். கட்டுரை மிகப் பெரியதாக நீண்டு கொண்டே போக, இரண்டு பாகமாக எழுத முடிவு செய்தாள். வெகு நேரமாக ஒரே இடத்தில் அமர்ந்து எழுதியது, கழுத்து வலிக்க, கண்ணை மூடி, கைகளால் கழுத்தை பிடித்தாள். 

அவள் கரத்தை அழுத்தமாக பற்றி விலக்கி, அவளைத் தன்னை நோக்கித் திருப்பினான் சத்யமூர்த்தி.

மென்மையாக அவளின் கழுத்தை வருடிய அவன் கரங்கள் அனுமதியின்றி அதன் விருப்பத்திற்கு ஏற்ப வலம் போனது.

“சத்யா…” என்று தடுக்க முனைந்தவளின் மனதில், அந்நிமிடம் எதற்குமே இடம் இருக்கவில்லை.

மாமியார் பேச்சு மனதளவில் அவளை பலமாக தாக்கியிருந்தது. அவரின் வற்புறுத்தலுக்காக குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமா நாங்கள் என்று சிந்தித்தவளுக்கு, கணவனின் அணைப்பில் நெகிழ முடியவில்லை.

அவனோ, அதை தன் மேலிருக்கும் கோபமாக எடுத்துக் கொண்டான்.

“சத்யா…” சத்தம் கூட்டினாள். மேலே அவளால் சத்தம் கூட்ட முடியாதபடி செய்திருந்தான் சத்யமூர்த்தி. 

மனைவியின் மறுப்பு அவனுக்கு புரியத் தான் செய்தது. அவளுக்கு கோபமும், அவனுக்கு அதைப் போக்கும் தவிப்பும் இருக்க, ஊடலில்லா கூடல் அவசியமாகி இருந்தது. அவன் உள்ளத்தை உணர்வுகளின் வழி வெளிப்படுத்தினான். கணவனாய் அன்பை அதிகப்படுத்தினான். அதை வம்பாக வளர்க்க மனதில் வீம்பை வளர்த்துக் கொண்டாள் சஹானா.

அவனுக்குப் பேச தெரியவில்லை. அவளுக்கு கேள்விக் கேட்கத் தோன்றவில்லை. அவர்களுக்கு நடுவே ஊசலாடியது, அவர்களின் இனிமையான இல்லறம். 

Advertisement