Advertisement

மாமியாரை அமைதியாய் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் சஹானா. சுப்புலட்சுமி ஒரு நல்ல அம்மா என்று சத்யமூர்த்தி, ராதாவை பார்த்து சொல்லி விடலாம். இன்னமும் மகள் ராதாவை உள்ளங்கையில் வைத்து அவர் தாங்குவதை பார்க்கும் போது சஹானாவிற்கு சற்றே ஆச்சரியமாக கூட இருக்கும். 

மகளுக்கு இந்த வயதிலும் உணவை அவர் கையால் அள்ளி ஊட்டி விட்டு, தலை வாரி பூ சூட்டி என பள்ளி சிறுமியை போல ராதாவை நடத்துவார் அவர். ஆனால், மருமகள் என்று வரும் போது மட்டும் மாமியார் அவதாரம் தரித்து விடுவார் சுப்புலட்சுமி. 

இத்தனைக்கும் சஹானா அவரிடம் மிகவும் தன்மையாக தான் நடந்துக் கொள்வாள். ஆனாலும், அவரை திருப்திப்படுத்த அவளால் முடியாது. எதிர்ப்பார்ப்புகள் கூடும் போது ஏமாற்றங்கள் இயல்பு தானே?

திருமணமான மூன்றாம் மாதமே சஹானா வேலைக்கு போவது பற்றிய பேச்சு வர, அதை அடியோடு தகர்த்து, மறுத்து விட்டார் அவர்.

“என்னது? நம்ம வீட்டுக்கு வந்த பொண்ணு, வெளில வேலைக்கு போறதா? அதுவும் பார்மசில, மருந்து எடுத்துக் கொடுக்க? பார்க்கறவன் என்ன நினைப்பான்?” என்று கோபமுடன் குரல் உயர்த்தி அவர் கேட்க, சஹானா அமைதியாய் திரும்பி சத்யமூர்த்தியை பார்த்தாள்.

“ம்மா, சஹானா அதுக்கு தான் படிச்சு இருக்கா. எந்த வேலையும் தப்பு கிடையாது”

“சரி ப்பா. ஆனா, மருந்து கடையில வேலைக்கு போனா, நல்லா இருக்காது பா. நமக்கு வசதிக்கு என்ன குறைச்சல்? இவ வெளில வேலைக்கு போயே ஆகணுமா? உனக்கே சரின்னு படுதா?” 

“வசதியையும், வேலையையும் முடிச்சு போடாதீங்க மா. வேலைக்கு போறது அவ விருப்பம். அவ முடிவு பண்ணட்டும்” மேலே பேச இடம் கொடுக்காமல் உள்ளே வந்து விட்டான் சத்யா. அவனைத் தொடர்ந்து சஹானாவும் அறைக்குள் வந்தவள், “நான்…” என்று தொடங்க,

“அம்மா பேசுறதை வச்சு எந்த முடிவுக்கும் வராத. யோசிச்சு நீயே முடிவு பண்ணு” என்றான் அவள் முகம் பார்த்து. 

கணவன், வேலைக்கு செல்வது அவளின் விருப்பம் என்று சொல்லி விட்டான் தான். ஆனால், மாமியார் அவளை யோசிக்கவே விடவில்லை. அவரின் புலம்பல்கள் வீட்டினுள் அவளை பின் தொடர்ந்து கொண்டேயிருக்க, அதன் தாக்கம் தாங்காமல் சஹானா வேலைக்கு செல்வதில்லை என்ற உடனடி முடிவுக்கு வந்திருந்தாள். 

“பொள்ளாச்சி சின்ன ஊர். கோயம்புத்தூர் போல  இங்க பெரிய ஹாஸ்பிட்டல் எதுவுமில்ல. எல்லாமே சின்ன ஹாஸ்ப்பிட்டல், அதைவிட சின்ன பார்மசிஸ். இங்க எனக்கு, நான் எதிர்பார்க்கற சாலரி கிடைக்காதுன்னு தோணுது சத்யா. சோ, நான் வேலைக்கு போகல” கணவனிடம் தயங்கியபடியே முடிவை சொன்னாள் சஹானா. புருவங்களை நெரித்து அவளை கேள்வியாக, சந்தேகமாக பார்த்தான் அவன். ஆனால், எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. அவளும் விளக்கங்கள் கொடுக்கவில்லை. 

கணினி முன் அமர்ந்து, தனது ப்ளாகில் பயண கட்டுரைகளில் மூழ்கிப் போனாள் அவள். 

மாமியாரிடம் அப்போதே எதிர்ப்பைக் காட்டியிருக்க வேண்டுமோ என்று பின்னாளில் யோசித்தாள் தான். 

அவளின் உள்மனதில் கணவனுக்கு கூட தான் வேலைக்கு செல்வதில் விருப்பம் இல்லையோ என்ற சந்தேகம் இருக்கவே தான் அப்படியொரு முடிவை எடுத்திருந்தாள் அவள். கணவனுக்கு தொழிற்சாலையும் பல தொழில்களும் கை வசம் இருக்கும் போது அவள் வெளியில் வேலைக்கு சென்றாலும் நன்றாக இராது என்று அவள் மனதுக்கும் பட்டதால் மட்டுமே அந்த முடிவை துணிந்து எடுத்திருந்தாள். மேலும் காரணமின்றி மாமியாரை முறைக்க அவளுக்கு மனமில்லை. அது அவளின் குணமுமில்லை. 

அவளுக்கு தான் மனமில்லையே தவிர, சுப்புலட்சுமிக்கு மனமிருந்தது. மருமகளை கண் கொத்தி பாம்பாய் கண்காணித்து, அவளை கொத்திக் கொண்டே இருப்பதில் தன்னை மாமியாராய் நிலை நாட்டும் எண்ணம் அவருக்கு அதிகமிருந்தது. 

ஒவ்வொரு கால கட்டத்திலும் வெவ்வேறு விஷயங்களை மருமகளிடம் எதிர்பார்த்தார் அவர். 

ஊர், இனம் என பல காரணங்களை காட்டி அவளை ஏற்றுக் கொள்ள முடியாதவருக்கு அவள் மூலமாக வாரிசு மட்டும் உடனேயே வேண்டியதாக இருந்தது. 

அதிலும் சஹானா, மகனுடன் சேர்ந்து தொழிற்சாலை சென்றதை அவரால் பொறுத்துக் கொள்ளவே இயலவில்லை. 

“என்னிடம் கேட்காமல், என்னிடம் ஒரு வார்த்தை சொல்லாமல், இவள் எப்படி தொழிற்சாலை செல்லலாம்?” என்று மனதில் கறுவ மட்டுமே அவரால் முடிந்தது. அந்த கோபத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் மருமகளிடம் காட்ட தவறியதில்லை அவர். 

இப்பொழுது தொழிற்சாலை செல்வதால், அங்கு வேலைகளை கற்பதால் பிள்ளைப்பேறை தள்ளிப் போட்டிருக்கிறாளோ என்ற சந்தேகமும் சேர்ந்து கொள்ள, மறைமுகமாக, நேரடியாக அவளிடம் அது குறித்துக் கேட்டுக் கொண்டேயிருந்தார் அவர்.

சஹானா அவருக்கு பிடிக் கொடுக்கவே இல்லை. விலாங்கு மீனை விட வேகமாக நழுவினாள் அவள். 

பல மாதங்களுக்கு பிறகு இன்று அவரிடம் வசமாக, தனியாக சிக்கிய மருமகளை வெற்றிகரமாக வளைத்து பிடித்து விட்டார் சுப்புலட்சுமி.

“உனக்கு விஷயம் தெரியுமா, இதோ ரெண்டு மாசம் முன்னாடி கல்யாணமான எங்க அண்ணன் பொண்ணு தர்ஷினி, இப்போ மாசமா இருக்காளாம். அஞ்சு நிமிஷம் முன்னாடி தான் எங்க அண்ணி போன் பண்ணி சொன்னாங்க. அவங்களுக்கு அவ்ளோ சந்தோஷம். ம்ம், எனக்கு அந்தக் கொடுப்பினை எங்க வாய்ச்சது?” அவரின் புலம்பலை கேட்கப் பிடிக்காமல் எழுந்து விட நினைத்தாள் சஹானா. அவரோ பேசிக் கொண்டே போனார்.

“இங்க, உங்களுக்கு கல்யாணமாகி எட்டு மாசமாகுது. நானும் இந்த மாசம் நல்ல செய்தி சொல்வ, அடுத்த மாசம் சொல்வன்னு எதிர்பார்த்து காத்திட்டு இருக்கேன். நீ ஒன்னுமே சொல்றது இல்ல. நான் இந்த பேச்சை எப்போ எடுத்தாலும், மதிக்காம, பதில் சொல்லாம, கண்டுக்காம போற”

சுப்புலட்சுமி பேசுவதை முகம் மாறாமல் கேட்டுக் கொண்டிருந்த சஹானா,

“அப்படி இல்லத்த. இப்பவே குழந்தை வந்தா..” என்று சொல்லத் தொடங்கவும் சாமியாடத் தொடங்கி விட்டார் சுப்புலட்சுமி.

“என்ன நீ இப்பவேவான்னு இழுக்கற? இதுவே எவ்வளவு லேட் தெரியுமா? கொஞ்சமாவது பொறுப்பும், கவலையும் இருக்கா உனக்கு?”

“அத்த..”

“உங்கம்மா நர்ஸ் தானே? இதெல்லாம் பேச மாட்டியா அவங்க கிட்ட? உங்கம்மா குழந்தை பத்தி விசாரிக்காதா உன்கிட்ட? உங்கம்மா எல்லாம் என்ன பொறுப்பில்லாத பொம்பளை? மகளை கட்டிக் கொடுத்து அனுப்பிட்டா போதும் நினைச்சா போல… எந்த ஊர், என்ன இனம், என்ன குடும்பம் எந்த கவலையும் கிடையாது. ஒரு இளிச்சவாயன் கிடைச்சா…”

“அத்த…” சஹானாவின் பொறுமை மெல்ல கரையத் தொடங்கியிருந்தது.

“எங்கம்மா பத்தி பேசாதீங்க” நிதானமாக எச்சரித்தாள்.

“ஓஹோ. என்ன அதட்டி பேசுற? உள்ளதை சொன்னா கோபம் வருதோ உனக்கு?” என்று அதட்டியவர், “உனக்கு ஏதாவது பிரச்சனையா என்ன? ஏன் பிள்ளை நிக்க மாட்டுது? நீ கிளம்பு போய் டாக்டரை பார்த்திட்டு வரலாம்” என்று குரலில் ஒருவித உறுதியுடன் சொன்னார் சுப்புலட்சுமி. 

சோஃபாவில் இருந்து வேகமாக எழுந்தார். சேலை முந்தானையை உதறி அதை மீண்டும் அவர் சரியாக போட, அவரை விழித்துப் பார்த்தாள் சஹானா. 

அவர் ஏதோ ஒரு முடிவுக்கு வந்து விட்டார் என்பது அவளுக்கு புரிந்தது. சட்டென அவள் மனம் சிந்திப்பதை நிறுத்தி விட, கைகள் அனிச்சையாய் கணவனின் எண்ணை அழுத்தியது. 

சுப்புலட்சுமி ஹாலில் இருந்த கண்ணாடியில் தலை சீவி, முகத்தில் பவுடர் பூசி என தன்னை சீர் செய்துக் கொண்டிருந்த நேரத்தில் மூன்று முறை கணவனை அழைத்து விட்டாள் சஹானா. அவனோ எப்போதும் போல அவளின் அழைப்பை ஏற்கவில்லை. 

அவளுக்கு படபடப்பாக வந்தது. மாமியாரிடம் குடும்ப கட்டுப்பாட்டை பற்றி எல்லாம் பேச தயக்கம் வந்து தொண்டையை அடைத்து நின்றது. 

கண்ணாடியில் இருந்து முகத்தை திருப்பி மருமகளை பார்த்தார் சுப்புலட்சுமி. 

“எங்க ராதாக்கு பார்த்த டாக்டர் ரொம்ப ஃபேமஸ். பொள்ளாச்சியிலயே பேரு போன, நல்ல கை ராசியான டாக்டர். ஒருமுறை பார்த்ததும் என்ன பிரச்சினைன்னு சொல்லிடுவாங்க. நீ போய் கிளம்பி வா. இன்னைக்கு போய், உனக்கு என்னன்னு செக் பண்ணிட்டு வந்திடலாம்.” மாமியார் பேச பேச பதிலின்றி அவரைப் பார்த்தாள் சஹானா. 

ஒருவித பதற்றத்துடன் அவள் விரல்கள் மீண்டும் மடியில் இருந்த அலைபேசியில் கணவனின் எண்ணை அழுத்தியது. 

இம்முறையும் எடுக்கவில்லை அவன். 

“நான் பேசுறது உனக்கு கேட்குதா இல்லையா? சஹானா, எழுந்து போய் துணி மாத்திட்டு வா.” என்றவர், அவளை ஒரு முறை தலை முதல் கால் வரை பார்த்து விட்டு,

“இதுவே நல்லா தான் இருக்கு. கிளம்பு, போகலாம்” என்றார்.

மெல்ல முன்னேறி அவளுக்கு அருகில் வந்தார். எங்கே கையை பிடித்து இழுத்து சென்று விடுவாரோ என்று மிரண்டுப் போனாள் சஹானா. மறுநொடியே திடமாக நின்று, “இல்ல. நான் வரல அத்த” என்றாள்.

“ஏன் வரல?”

“டாக்டர் பார்க்கணும்னு அவசியமில்ல.”

“என்ன அவசியமில்ல சொல்ற? மரியாதை இல்லாம, எதிர்த்து எதிர்த்து பேசிட்டு இருக்க நீ. டாக்டர் பார்க்க கூப்பிட்டா, அவசியமில்ல சொல்ற? உன் மனசுல என்ன தான் நினைச்சுட்டு இருக்க?” ஆத்திரத்துடன் அவர் கேட்க, அமைதியாய் பதில் கொடுத்தாள் சஹானா. 

எதற்காக கணவனை எதிர்ப்பார்க்க வேண்டும்? தான் சொல்லி விட முடியாத எதை கணவன் வந்து சொல்லி தெளிவுப்படுத்தி விடப் போகிறான்? எதற்காக பயமும், பதற்றமும் அடைகிறேன் நான்? அப்படி என்ன தவறு செய்து விட்டேன் நான்? என்று அந்த நொடி திடமாக யோசித்தாள் சஹானா.

குழந்தை ஆசை அவளுக்கும் உண்டு. ஆனால், அது எங்கள் இருவரின் முழு விருப்பத்தில், காதலில் உதிக்க வேண்டும். ஊரும், உறவும் கேள்விக் கேட்பதற்கு எல்லாம் பிள்ளை பெற்றுக் கொள்ள முடியாது என்று சிந்தித்த நொடி கணவனை எதிர்பாராமல் மாமியாருக்கு தக்க பதிலை கொடுத்து விட்டாள் அவள்.

ஒரு கணம் அவளை விளக்க முடியா கோபத்துடன் உறுத்து விழித்தார் சுப்புலட்சுமி. 

அதன் பின்னர் அந்த வீட்டை அவரின் கோபமும், புலம்பலும் நிறைக்க, அறைக்குள் நுழைந்து கதவடைத்துக் கொண்டாள் சஹானா. 

ஒரு தாயாக அவரின் விருப்பமும், கோரிக்கையும் அவளுக்கு புரியவே செய்தது. ஆனால், அவர்கள் வாழ்க்கையை, அவர்களை வாழ விடாமல், இப்படி எல்லாவற்றிலும் மாமியார் தலையிடுவது தான் அவளுக்கு சங்கடமாக இருந்தது. 

மீண்டும் கணவனை அழைத்தாள் சஹானா. அவனிடம் வீட்டில் நடந்ததை பகிர்ந்து விடவே விரும்பினாள். அவன் இம்முறையும் அவளின் அழைப்பை ஏற்கவில்லை. 

ஒரு பெருமூச்சுடன் கண்ணை மூடி படுக்கையில் சரிந்தாள். மனதில் இருந்த அழுத்தத்தின் காரணமாக அப்படியே உறங்கியும் போனாள். 

Advertisement