“ருத்ரா… நீ லீவ் கேட்டிருந்தியே.கிடைச்சிருக்கு டா.கர்னல் கூப்பிடுறாறு.போய் பேசு போ”
நண்பன் சொன்ன செய்தியில் இரட்டிப்பு மகிழ்ச்சி ருத்ரனிற்கு. இப்போது தான் எல்லையில் மீண்டும் அமைதி நிலவ தொடங்கியிருந்தது. விடுமுறை கிடைப்பது கஷ்டம் என்று அவனுக்கு தெரிந்து தான் இருந்தது. அவனுக்கு கேட்பதற்கு கூட மனம் வராமல் இருக்க, வெங்கடேசன் தான் மகனுக்கு விடாது அழைத்து, நீ வந்தே ஆக வேண்டும். அது ஒரு நாள் என்றாலும் சரி என்றிருக்க, ஒரு வாரம் விடுப்பு கேட்டிருந்தான். இப்போது அது கிடைத்திருக்கிறது என்று நண்பன் சொல்லவும், முகத்தில் அமைதியான புன்னகையுடன் தனது மேல் அதிகாரியை காணச் சென்றான்.
“வாங்க மேஜர்.உங்க பாய்ஸ் கலக்கிட்டாங்க. குட் எக்செகுஷன். பிரவுட் ஆஃப் யூ மை மேன்” என்று அவன் தோள் தட்டி பாராட்டியவர்,
“இந்த டைம்ல நீ லீவ் கேக்குறது, உனக்கு எதுவோ முக்கியமான விஷயம்னு புரியுது. என்ன விஷயம்?” என்று அவர் கேட்டிட, தனது ரோல் மாடல் போல இருக்கும் அவரிடம் எதையும் மறைத்து பழகியிராதவன்,
“சர்! அது… இட்ஸ் மை ஹார்ட்ஸ் கால்” என்று முகம் கனியச் சொன்னான்.
அதற்கு அவர், “வர்றே வா! மை பாய் இஸ் இன் லவ்” என்று பெருங்குரலெடுத்துச் சிரித்தார்.அதில் ருத்ரனும் வெட்கத்தோடு தன் தலைகோதி கொண்டான்.
“வெல்! ஒன் வீக் லீவ் எடுத்துக்கோ. இன் கேஸ் நீ இங்க தேவைப்பட்டா….”
“ஐ அட் சர்வீஸ் சர்! மை நேஷன் இஸ் மை ஃபர்ஸ்ட் லவ்” என்று சொல்லி சல்யூட் வைத்து விடைபெற்றான்.
நேற்று தான் தேவிகா மகனிடம் பேசியிருந்தார், அவன் வரவில்லை என்றால் தானும் செல்ல மாட்டேன் என்று. ஒருபாடு பேசி, சண்டையிட்டு ஓய்ந்துப் போயிருந்தார். வெங்கடேசன் தான் அவரை சமாதானம் செய்து, ருத்ரனிடம்,
“ருத்ரா…. நீ வர பாருப்பா. இல்லைனா வீடியோ கால் வா, மே நாலு உனக்கு நிச்சியம். அன்னைக்கு மட்டுமாவது ப்ரீயா இருடா. ஒரு… ஒரு மணி நேரம் இதுக்கு ஒதுக்கு டா” என்று கெஞ்சியே கேட்டிருந்தார்.
இன்னும் இரு தினங்களில் கனியின் திருமணம். அவர்கள் இன்று விமானத்தில் மதுரைக்குக் கிளம்புகிறார்கள். இதோ இப்போது இவனுக்கும் விடுமறை கிடைத்திருக்க, இவனும் கிளம்ப இருக்கிறான். தந்தையிடம் பேசி விடுவோமா என்று எண்ணினான். பின் வேண்டாம் என்று விட்டுவிட்டான்.
அவன் ட்ரைனிங் முடிந்து வந்ததும் அவனது அலைபேசியைப் பார்த்திருந்தானே. அவனவளின் அழைப்புகளும், செய்திகளும் வந்திருந்தது. எதற்கும் இவன் பதில் அனுப்பவில்லை. இந்த முறை கூடுதலாக கனியிடமிருந்தும் அழைப்பும், குறுஞ்செய்திகளும் வந்திருக்க, “இவளுக ரெண்டு பேரும் சேர்ந்தாலே சேட்டை!” என்று சிரித்துக் கொண்டான். ஆனால் பதில் அனுப்பவில்லை, பேசவுமில்லை.
அன்று அவன் மனதை தேவிகா சொல்லி கேட்கவும், சுந்தரம் மறுத்ததும், தன் அப்பாவைப் பார்த்தவள் தன்னை ஒரு முறையேனும் பார்ப்பாள் என்று எதிர்பார்த்திருக்க, அவளோ தந்தையின் மறுப்பில் தலையை குனிந்துக் கொண்டாளே அன்றி அவனை காணவில்லை. அதில் பெரிதும் பாதிக்கப்பட்டவன், நொடியும் தாமதிக்காது அங்கிருந்து கிளம்பிவிட்டான். மூன்று வருடங்களாக அவளை தவிர்த்து அவனின் ஆற்றாமையை ஆற்றுப்படுத்திக் கொண்டிருந்தான்.
அவள் அவனை பார்த்தபொழுது இவன், அவனின் முதுகை காண்பித்துக் கிளம்பியிருந்தான். நொடி தாமதம் தான். அதுவே இவர்களிடையே மூன்று வருட பிரிவைத் தந்திருந்தது. ஒரு முறை இருவரும் பேசியிருந்தாலும் இத்தனை தவிப்பு இருவரிடத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இவர்களின் விதி இப்படி தான் என்று எழுதியிருக்கும் போல.
இப்போதும் தன் கைபேசியை எடுத்துப் பார்க்க, முன்னாள் இரவில் தேன்மொழி அனுப்பியிருந்த செய்தி நினைவு வந்தது.
“ருத்ரன் அத்தான்… உங்களுக்கு என் மேல கோபம்னு புரியுது. அது நியாயம் கூட, ஆனா சத்தியமா நீங்க அன்னைக்கு சொன்ன போது எனக்குப் புரியல, நான் உங்களை அப்படி நினைச்சது இல்ல. உங்கள பிடிக்காம நான் பதில் சொல்லாம இல்ல. உங்களுக்கு என்னைப் புரியுது தான? அப்பா மறுத்த காரணம் சரியில்லை தான், அப்பாவோட விருப்பம் அது தானு தெரிஞ்ச பிறகு. உங்களை எப்படி எதிர்கொள்றதுனு தெரியல. உங்களை பார்த்துப் பேசறதுகுள்ள நீங்க கிளம்பிட்டீங்க. இதோ மூணு வருஷமா நானும் உங்ககிட்ட பேச முயற்சி பண்றேன். இந்த தண்டனை போதுமே பிளீஸ்!” என்றதோடு அவள் அனுப்பிய செய்தி முடிவுப் பெற்றிருந்தது.
அதனை எண்ணியவனுக்குள் சிலிர்ப்பு, அவன் அவளைப் பாதிக்கிறான். இதை தானே எதிர்ப்பார்த்தான். அவளை காண அவனின் ஒவ்வொரு செல்லும் துடித்துக் கொண்டிருக்கிறது. அவளின் அகந்தையற்ற அணுகுமுறை, அவனை வெகுவாய் கரைத்திருந்தது. அவன் அவளிடம் காதலைச் சொன்னபொழுது அவளிடம் ஏற்படாத பாதிப்பு, இந்த மூன்று வருட தவிர்ப்பு ஏற்படுத்திருக்கிறது. காதல் எத்தனை கஷ்டம் என்று அறிந்துகொண்டான். அவளுடனான அவனின் தருணங்கள் யாவும் அவனின் மணப்பெட்டகத்தில் பொக்கிஷமாகப் பொதிந்து கிடக்கின்றன. அதனை அவளிடம் ஒவ்வொன்றாய் பகிர்ந்துக் கொள்ள ஆண்மகனின் உள்ளம் ஏங்கி கிடந்தது.
அவனின் ஆசைகள் அத்தனையும் தன்னுள்ளே பூட்டி வைத்தவன், அவளை நேரில் கண்டு அனைத்தையும் அவளிடம் சரண் புகுத்திவிட காத்திருந்தான். அதற்கான சந்தர்ப்பம் அமைந்திருக்க, உவகை பெருக்கில் தன்பயணத்தை இனிதாக தொடங்கினான்.
தேன்மொழிக்கு பரிச்சை எல்லாம் முடிந்து கல்லூரி விடுப்பிலிருந்தாள். நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் மட்டும் தினமும் சொல்லிக்கொடுத்து கொண்டிருந்தாள். திருமணத்திற்கு விடுப்பு எடுத்து கனியும் வந்திருக்க, ஒரு மணி நேரம் மட்டும் அந்தப் பிள்ளைகளுடன் செலவழித்தவள் ஏனைய பொழுதுகளை தன் உடன் பிறந்தவளுடன் செலவழித்தாள். இரட்டையர்களுக்கே உரிய பிணைப்பு அவர்கள் இருவரிடத்தில் இருந்தது.
அன்றிலிருந்து மொத்தமாக கனியுடன் தன் நேரத்தை செலவழிக்க ஆரம்பித்தவள், “கனி மருதாணி வைக்க வந்துட்டாங்க பாரு, சீக்கிரம் வா “
“ஹ்ம்ம் வரேன் தேனு, அப்பா பேங்க் பாஸ் புக் கேட்டாங்க, எடுத்துக் கொடுத்திடு. இன்னைக்கு நைட்டு வெற்றி கடையை பூட்டிட்டு சாவி வந்து தரேன்னு சொல்லிருக்கான். கண்மணி அக்கா, கணக்கு பார்த்துக்கிறேன்னு சொல்லியிருக்காங்க.”
“தெரியும்! தெரியும்! இதையெல்லாம் நாங்க பார்த்துப்போம். நீ டென்ஷன் இல்லாம இரு… வா” என்று அவளை தள்ளிக்கொண்டு வந்து ஹாலில் இருந்த சோஃபாவில் அமர வைத்தவள், “அக்கா நீங்க ஆரம்பிங்க, இந்த பாத்திரத்துல தண்ணி போதும்ல.வேற எதுவும் வேணும்னா கேளுங்க அக்கா. இங்க தான் இருப்பேன். கனி உன் போன் பக்கத்துல வச்சுக்கோ” என்று சொல்லிவிட்டு அடுப்படிக்குள் சென்றாள்.
“அம்மா! இது என்ன புதுசா கேட்கிற, என்னைய கட்டிக் கொடுத்து உன்கூடவா வச்சுகிட்ட? என் புருஷன் வெளிநாட்டுல தான் இருக்காரு. நான் என் மாமியார் வீட்ல தானே இருக்கேன்? தேனுவும் அப்படி தான இருப்பா?”
“ஆமா டி… சரி தான் எனக்கு துணையா உன் அப்பா இருக்காரு. உன்னையும் , உன் அக்காளை கட்டிக் கொடுத்துட்டோம். நாங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா இருக்கோம். இங்க எங்க அண்ணனுக்கு அப்படியா? பிள்ளைகள் தான் வாழ்க்கைனு இன்னொரு கல்யாணம் செய்யாம இருந்திட்டாரு. இப்ப பிள்ளைகள் அவங்க அவங்க வாழ்க்கைய பார்த்துக்க போயிடுவாங்க, எங்க அண்ணன் தானே தனியா கஷ்டப்படனும். எங்க பெரியம்மா எவ்வளவோ போராடுனாங்க அண்ணனுக்கு இன்னொரு கல்யாணம் செய்து வைக்க, அண்ணன் ஒத்துக்கவே இல்ல. பிள்ளைங்க, பிள்ளைங்கனு உசுரா இருந்தாரு, ஒருத்தராவது உள்ளூர்ல வாக்கப்படலாம். இங்க அது தனியா கிடந்து தவிக்கணும்னு இருக்கு” என்று அவர் வருத்தியபடி பேசிக்கொண்டே காய்களை நறுக்க,
இதனை கேட்டுக்கொண்டிருந்த தேன்மொழியின் உள்ளம் துடிக்க ஆரம்பித்தது. இது தானே அவளின் மொத்த குழப்பத்திற்கும் காரணம். ருத்ரனை அவளுக்குப் பிடிக்கும். தனி மனிதனாக அவன் மீது மிகுந்த மரியாதை இருக்கிறது. ஆனால் அன்று தந்தையின் மறுப்பு ஒரு காரணமாக இருந்தாலும், தேவிகா சொன்ன, “தம்பி, தேன்மொழியை ருத்ரனுக்கு கட்டிக் கொடுக்கிறியா? அவளை இப்பவே என்கூட கூட்டிட்டு போக ஆசை” என்று சொல்லியிருக்க, இப்பவே தனது அப்பாவைப் பிரிந்துச் செல்ல வேண்டுமா? என்று அதுவும் ஒரு காரணம் அவளின் மௌனத்திற்கும், தடுமாற்றத்திற்கும்.
இன்று அதுவே தன் தந்தையின் நலன்விரும்பியாக ஒருவர் சொல்ல கேட்க, இதை எப்படி கையாளுவது என்று கலங்கிவிட்டாள். ருத்ரன் இவளிடம் சாதாரணமாக பேசியிருந்தால் இவளும் அவளின் தேவைகளை அவனிடம் பகிர்ந்திருப்பாள். இதை பற்றி அவனிடம் பேச வேண்டும் என்று எண்ணுபவளுக்கு அவன் வாய்ப்பே தராமல் இருக்க, ஒரு தெளிவின்றி அவளின் வாழ்க்கை பயணம் தொடங்கிவிடுமோ என்ற பயமும் சேர்ந்துக் கொண்டது இப்போது.
அந்நேரம் உள்ளே வந்த கண்மணி, “என்ன அத்தை , நாங்கெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியலையோ? சித்தப்பாவ நான் பார்த்துக்கிட மாட்டேன்? நான் தான் அவருக்கு மூத்த பொண்ணு. நான் இங்கன தானே இருக்கேன்” என்று தன்னிருப்பை அழுத்திக் காட்டி கொண்டாள்.
“அட! கண்மணி மதினி வாங்க, அதானே அம்மா… பெரிய மதினி இருக்காக ரொம்ப தான் அண்ணா புராணம் பாடுறீக!”
“உன்ன மறந்தே போயிட்டேன் பாரேன்!!” என்று அவரும் பேச,
“அதான, எங்களை எப்படி ஞாபகம் இருக்கும் உங்களுக்கு? நான் ஊரான் வீட்டு பிள்ளை தானே!” என்று நொடித்துக் கொண்டார்.
“அட மவராசி! அப்படியெல்லாம் இல்லத்தா. நீ தான் இவங்க ரெண்டு பேரையும் வளர்த்தது. நீயில்லாம அண்ணன் தனியா நின்றிருக்காது. அண்ணன் இப்ப கூட சொல்லிட்டு தான் போகுது, எதுனாலும் என் மூத்த மவ கண்மணிக்கிட்ட கேட்டுக்கோ சரசு. அவ சொல்லுவா.எனக்கு வெளி வேலை நிறைய கிடக்குனு”
“இத்தன நேரம் என் நினைப்பே இல்லைல உங்களுக்கு. சித்தப்பாவ பார்த்துக்கிட நான் இருக்கேன்” என்று உறுதியாகச் சொல்ல,
“ம்ம்ஹ்கும்… உன்னைய கட்டி வச்சது எங்க அண்ணி தானே! அவுகளுக்கு அப்பவே தெரிஞ்சுருக்கு, அதான் உன்னையை வீட்டு மருமகளா கொண்டு வந்திருக்கு. அண்ணனும் அண்ணியும் தானே உங்க கல்யாணத்தை நடத்தி வச்சது.” என்று அந்தப் பெண்மணி பழைய கதைகளை பேச ஆரம்பிக்க, சமையல் வேலையும் தொடர்ந்தது.
தேன்மொழி அங்கே எதுவும் பேசாமல் பார்வையாளராக மாறிப்போனாள்.