நாட்கள் நகர்ந்தோட, கனி நிலனின் திருமண பத்திரிக்கை அடித்து வந்தாயிற்று, இன்னும் இரு மாதங்கள் தான் இருந்தது திருமணத்திற்கு. ஒரு நல்ல நாளில் குலதெய்வ கோவிலில் பத்திரிக்கை வைத்து கும்பிட்டு வந்திருந்தார்கள்.
“கனி லீவ் எல்லாம் சொல்லிட்டியா?” கண்மணி விசாரிக்க,
“ம்ம் சொல்லிட்டேன் அக்கா, விசா இன்டர்வியூ அடுத்த மாசம், விசா வந்ததும் ரெண்டு பேருக்கும் சேர்த்து டிக்கெட் போடுறதா நிலன் சொல்லிருக்காங்க”
“ஹ்ம்ம், சரி… வாங்க வேண்டியதெல்லாம் வாங்கிட்டியா? தேனு உனக்கு ஏதோ வாங்கனும்னு சொன்னா”
“அது…” என்றவள் சுற்றி முற்றும் பார்த்துவிட்டு, யாரும் இல்லை என்பதை உறுதி செய்து, “அது, மாமா வீட்டுல என்ன சொன்னாங்க?”
“எந்த மாமா?” என்று கண்மணி புரியாமல் விழிக்க,
“வெங்கட் மாமா… தேனு கல்யாணம் பத்தி”
‘உனக்குத் தெரியாதா?’ என்ற ரீதியில் கண்மணி அவளை பார்க்க,
“அப்பாகிட்ட கேட்டேன்… அதெல்லாம் நீ யோசிக்காத, அவளுக்கு எல்லாம் பேசியாச்சு. முதல்ல உன் கல்யாணத்தை முடிக்கணும்னு பேச்சை மாத்திட்டார். தேனுக்கும் எதுவும் தெரியும்னு தோணல.எதுவும் பிரச்சனையா அக்கா? நிச்சியம் பத்தி இப்போ பேசினா… உன் கல்யாணம் முடியட்டும்னு சொல்லுறாரு”
“ம்ம்… ருத்ரனை இப்போ ஏதோ முக்கிய ட்ரைனிங்க்கு அனுப்பி இருக்காங்கலாம்.அவன்கிட்ட பேச முடியல போல, அவன் வந்ததும் தேதி குறிச்சிக்கலாம்னு சொல்லியிருக்காங்க. உன் கல்யாணத்துக்கு அவனை எப்படியாவது வர வைக்க முயற்சி பண்றாங்க”
“இன்னுமா அத்தான்கிட்ட தேனு பேசல?”
“இல்ல போல… அவகிட்ட எதுவும் கேட்டு வைக்காத, அவளே குழம்பி போய் கிடக்கிறா”
“இந்த மில்லிடரி ரொம்ப தான் பண்றாங்க”
“அவன் குணம் தான் தெரியுமே. பிடிவாதக்காரன்… இதெல்லாம் மனசுல போட்டுக்காத. உனக்கு என்னென்னனு பார்த்துக்கோ! தேனுவை யோசிக்க விடாத. அடுத்த மாசம் காலேஜ் லீவு. அவளை கொஞ்சம் பிசியா வச்சுக்கணும்.” என்று கண்மணி சொல்லிக்கொண்டிருக்க,
“என்ன விட்டுட்டு என்ன ரகசியம் பேசுறீங்க?” என்று வந்துவிட்டாள் தேன்மொழி.
“சொல்ல மாட்டோம்! என்ன அக்கா?” என்று கனி அவளை புருவம் உயர்த்தி பார்க்க,
தேன்மொழியோ சிரிப்புடன், “அக்கா….” என்று இழுக்க, “ஏய்!! அடி போட போறேன் பாரு. நீங்க சிலுவிழுக்க நான் தான் கிடைச்சனா?” என்று கண்மணி சுதாரித்துக் கொள்ள,
“என்னக்கா நீ? அந்த ரகசியத்தை என்கிட்ட சொல்ல மாட்ட?”
“ஆமா சொல்ல மாட்டாங்க. போய் பொங்கல் சாப்பிடு. உனக்குனு ஸ்பெஷலா எடுத்து வச்சிருக்கு”
“ம்ம்…. கடைக்குப் போகணும்னு வருவ தான. அப்போ பார்த்துக்கிறேன் உன்ன” என்று தேன் முகத்தை திருப்பிக்கொண்டு போக,
“அச்சோ! இத எப்படி மறந்தேன்! அக்கா வாக்கா… அவளை சமாதானம் பண்ணுவோம்” என்று கண்மணியையும் இழுத்துக் கொண்டு தேன்மொழி பின்னால் சென்றாள்.
“தேனு, தேனு… அது கார்த்தி மேட்டர் தாண்டி.வேற என்ன ரகசியம் நாங்க பேச போறோம்” என்றவளை நம்பாத பார்வை பார்க்க,
“கார்த்தி இப்போ பேசினான். ரொம்ப டல்லா இருந்துச்சு அவன் குரல். அதான் அன்னைக்கு என்ன நடந்துச்சுனு கேட்டேன்.”
“இத விடுங்க ரெண்டு பேரும். தேனு நீ முகம் கழுவிட்டு வா. சாப்பிடு” என்று கண்மணி அடுப்பறைக்குள் செல்ல,
“சீக்கிரம் கிளம்பு தேனு, மதுரை சிட்டிகுள்ள போயிட்டு வரனும்.”
“மணி அக்கா பாருங்க இவளை. எனக்கும் அப்பாவும் சண்டை மூட்டி விடுறதே இவ வேலை. அப்பா என்னைய தான் திட்டுவாரு” என்று முறையிட,
“அய்ய! இன்னும் சின்ன பிள்ளைங்க மாதிரி சண்டை போட்டுக்கிட்டு. தேனு ஒழுங்கா கூட்டிட்டு போய்ட்டு வா” என்று கண்மணி அதட்டல் போல கூறினாள்.
“பைக் வேணும்! டாட்” என்றாள் அவளும் பிடிவாதமாய்.
“என்னமோ செய்ங்க பிள்ளைங்களா… எனக்கு வேலை கிடக்கு, நான் அதை பார்க்க போறேன்” என்று இவர்கள் பஞ்சாயத்திலிருந்து தப்பித்து கிளம்பிவிட்டாள் கண்மணி.
இருவரும் உண்டு முடித்த பின்பும் வாய் சண்டையிட்டு கொண்டிருந்தார்கள் சுந்தரம் வரும் வரை. அவர் வந்ததும் கனி தேனுவின் நிபந்தனைகளை அடுக்க, அப்பாவிற்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்தாள் தேன்மொழி. தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைப் போல.
“அப்பா அவளை வர சொல்லுங்கப்பா” என்று கனி மீண்டும் கேட்க,
“வண்டி சாவி எடுத்துக்கோங்க. பத்திரமா போய்ட்டு வரணும். தேனுமா! ஊருக்குள்ள ஓட்டுற, கனியும் கூட இருக்கா. சூதானமா ஓட்டு. புரிஞ்சுதா?” என்று அவள் முகம் பார்த்து கூற,
வெற்றி புன்னகையுடன், “சரிப்பா… சுந்தரப்பா….” என்று அவரின் நாடிப் பிடித்து கொஞ்சி கூறினாள் தேன்மொழி.
“இப்படி ஐஸ் வச்சு தான் காரியம் சாதிக்கிறா ப்பா” என்று கனி கோபித்துக் கொண்டாள்.
“நீயும் வச்சுக்கோ!” என்றாள் தேன் அலட்டாமல்.
“நீ சரியா சாப்பிடலையா? இந்தா அப்பா தாரேன் ரெண்டு வாய் சாப்பிடு” என்று கனிக்கு ஊட்டி விட,
“அப்பா அவளுக்கு மட்டுமா? எனக்கு?” என்று தேன் போட்டிப் போட,
“இப்போ தான சாப்பிட்ட” என்றாள் கனி, வாயில் சாதத்தை வைத்துக்கொண்டு.
“அதுக்கென்ன இப்போ. ஆ…” என்று தேன்மொழியும் வாயைத் திறந்து காட்ட, அவளுக்கு ஒரு வாய் கொடுத்தவர்,
“என்ன வாங்கனும்னு லிஸ்ட் எடுத்தியா கனி? உன் அக்கவுண்டுக்குப் பணம் போற்றுக்கேன் அப்பா”
“எதுக்குப்பா? என்கிட்ட இருக்கு”
“அதை சேர்த்து வச்சுக்கோ கனி. வெளிநாடு போற. உனக்குன்னு சேமிப்பு வச்சுக்கோ” என்று அறிவுறுத்தியவர், அவளுக்கும் உணவை ஊட்டிவிட்டு தானும் உண்டு முடித்தார்.
தேனு அதற்குள் வண்டியைத் துடைத்து தயார் நிலையில் இருக்க, வெளியே வந்த சுந்தரத்திற்கு பழைய நினைவுகள்.
தன் சுயத்திற்கு வந்தவர், “ஹான்!! ம்ம்….” என்று வண்டியை ஒருமுறை சரிபார்த்துவிட்டு, “ஒழுங்கா ஓட்டனும்” என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டு அவர் கிளம்பிவிட, இரட்டையர்கள் தங்கள் பயணத்தை தொடங்கினார்கள்.
வண்டியை லாவகமாக ஓட்டியவள் அந்தக் குறிப்பிட்ட கடையில் நிறுத்தி உள்ளே செல்ல, “தேனு… ஐஷ்வர்யா அக்கா கல்யாணத்தப்போ நீ ருத்ரன் அத்தான் கூட பைக்ல போன தான, அப்போ தான் உங்களுக்குள்ள சம்திங் சம்திங்” என்று கேட்டாள் கனி.
அவளை திரும்பி பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் இருக்க,
“அப்போ இது தான் சம்பவம். நான் என்னென்னமோ கேட்டேன். உன் பைக் ஆர்வத்தை இதுகூட கனெக்ட் பண்ண மறந்தேன் பாரேன்!” என்று அவளை கண்டுக்கொண்ட மகிழ்ச்சியில் கூறினாள்.
“இதுவும் தப்பு தான்” என்று அவள் மண்டையில் தட்டிவிட்டு, அங்கிருந்த பணிப் பெண்ணிடம், “ஜாக்கெட் பார்க்கணும்” என்று சொல்ல அவர்களை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்றாள் அந்தப் பெண்.
“தப்பா? அப்புறம் எப்ப தான் உனக்கு பீல் ஆச்சு?” என்று கனி கேட்க, பைக் ஓட்டி வந்ததால் இலகுவான மனநிலையில் இருந்தவள் தன் மனதைத் திறந்து பதில் கூறினாள்.
“ம்ம் அன்னைக்கு தான். எனக்கு அப்போ புரியல. அப்புறமா அத்தை அப்பாகிட்ட கேட்கும் போது தான் எனக்கு புரிஞ்சது”
“ஓ… ஓ….. அப்போ கண்ணும் கண்ணும் நோக்கியாவா?”
“ம்ம்… அப்படி பார்த்திருந்தா நல்லாயிருந்திருக்குமோ?”
“அப்போ பார்க்கலையா?” என்று அவளைத் தன்புறமாக திருப்பி கேட்க,
“மேம்! இது வின்டர் கலெக்ஷன்” என்று அவர்களை கலைத்தாள் பணிப்பெண்.
“ஹான்… தேங்க்ஸ்… கனி! இந்த ரெட் ஜாக்கெட் அள்ளுது, இதை போட்டு காண்பி” என்று தேடுதலில் தேன் இறங்கிவிட,
“இது பெருசு, மீடியம் எடு” என்று சரியான அளவை எடுத்து போட்டு காண்பிக்க,
“ப்ச்… ஓகே தான். அவ்ளோ சிறப்பா இல்ல” என்று வேறு தேடியவளிடம்,
“தேனு! அத்தான் லவ் சொன்னதும் உனக்கு எப்படி பீல் ஆச்சு?” என்று ஆர்வமுடன் அடுத்தக் கேள்வி கேட்க,
“சும்மா ஜில்லுனு தான் இருந்துச்சு. ஆனா… அதுக்குள்ள அப்பா நோ சொல்லிட்டாங்களா, அத்தானும் எழுந்து போய்ட்டாங்க.கடைசி வரைக்கும் அவங்க முகத்த பார்க்கல. அது ஏதோ நெருடலா இருக்கு” என்று கூறிக்கொண்டே அவளிடம் மற்றொன்றை நீட்டினாள்.
“ஓ! அதுக்கு அப்புறம் நீ அத்தான் கிட்ட பேசவே இல்லையா?”
இல்லை என்பதாக தலையசைத்து, போட்டுப்பாரு என்பதாக கண்களில் செய்திக் கடத்தினாள்.
அதனை அணிந்துக்கொண்டே கனி, “அத்தானும் பேசலையா? நீ டிரை பண்ணியா?” என்று அவள் சந்தேகமாக கேட்க, அவளை முறைத்துவிட்டு, அடுத்த ஆடையைத் தேர்வு செய்ய சென்றுவிட்டாள்.
இவர்களின் பேச்சிற்குரியவனோ, “மச்சி! உனக்கு கால் மேல கால் வருது, ஒருமுறை வீட்டுக்குப் பேசேன் டா” என்று அவனின் நண்பன் அவனை படுத்தி எடுக்க. அவனின் அறிவுரைகளை இனிமேலும் கேட்க முடியாது என்பதால் அன்று இரவு தன் தந்தைக்கு அழைத்தான் ருத்ரன்.