மும்பையில் வெங்கடேசன் தேவிகாவிடம், “இன்னைக்கு மாப்பிள்ளை பேசினாரு தேவி…”
“எந்த மாப்பிள்ளை?”
“சுந்தரம்”
“ஹ்ம்ம்…” என்று வேண்டாவெறுப்பாக கட்டிலில் இருந்த துணியை மடித்து வைத்துக்கொண்டே கேட்டார்.
மனைவியின் மனச்சுனக்கம் எதனால் என்று அறிந்தவராதலால் தான் சொல்லும் செய்தி நிச்சியம் அவரை சமாதானப்படுத்தும் என்ற நம்பிக்கையுடன், “அது தேவி, நம்ம ருத்ரனுக்கு தேன்மொழியை”
“ஓ! மூனு வருஷம் கழிச்சு தான் என் பையன் அவர் கண்ணுக்கு தெரியுறானா? எத்தனை ஆசையா அந்த லீவுக்கு வந்தான். உங்களுக்குத் தெரியும் தான, கல்யாணம் பண்ணிக்கணும்னு முடிவோட வந்தான் என் பிள்ளை. அவனை போய்… ப்ச்…. பாருங்க அன்னைக்கு லீவ் கேன்சல் பண்ணிட்டு போனவன் தான். இன்னைக்கு வரைக்கும் வீட்டுக்குக் கூட வரல. அந்தப் பொண்ணை விட்டா வேற பொண்ணே இல்லாதது போல நீங்களும் தான் இத்தனை நாளா என் மகன கண்டுக்கல. இப்ப மட்டும் வந்துட்டாரு கல்யாணம் பேச. அவனுக்கு இந்த ஜூன் வந்தா முப்பது ஐஞ்சு முடியுது” என்று பேசியவர் கண்களில் கண்ணீர் வழிந்தது.
“தேவி… நான் எதுவுமே பண்ணாதது போல பேசுறியே! நானும் கேட்டேன் தான ருத்ரன் கிட்ட, அவன் தான பிடிக்கொடுத்து பேசல இது வரைக்கும். அவன் விருப்பம் தேன்மொழி தான். தேனுவும் இவ்ளோ நாள் அப்படி தானே இருந்திருக்கா. அப்படி இருந்ததுனால தானே சுந்தரம் இன்னைக்கு பேசியிருக்காரு.”
“ஹான் உடனே உங்க தங்கச்சி மகளுக்கு சொம்பு தூக்காதீங்க. அன்னைக்கு என் மகன் முகத்த பார்த்திருக்கணும் நீங்க. வேணாம்னு சொல்றவரை கட்டாய படுத்த முடியாதுனு போய்டீங்க. என் மகன் அவ ஏதாவது சொல்லுவானு அவ முகத்த முகத்த ஏக்கமா பார்த்தான் தெரியுமா?”என்று மேலும் அன்று நடந்ததை இன்று அனுபவிப்பது போல பேசினார்.
“தேவி அது முடிஞ்சு போன விஷயம். இப்ப நம்ம மகன் ஆசைப்பட்டது தான் நடக்கப் போகுதே. இதை நாம நடத்தி வைக்கணும்ல”
“ம்ம்… நடத்தி வைப்போம். வரட்டும் அவ, என் மகனுக்கு என்னடி குறைச்சல், அன்னைக்கே சரின்னு சொல்றதுக்கு என்னனு கேட்டுகிறேன். அவளுக்கு என் மகன் ஜாஸ்தி தான்.”
“அடேங்கப்பா! நீ பேசுற அளவுக்கு அவ உன்ன விடுவானு நினைக்கிறியா. உங்க மகனுக்கு வேற யாரும் வாழ்க்கை கொடுக்குற போல தெரியல, அதான் நான் பெரிய மனசு பண்ணி வாழ்க்கை கொடுக்கிறேனு சொல்லிட போறா” என்றவரை திரும்பி முறைத்தார் தேவி.
“இப்படியே பேசிட்டு இருங்க, உங்களுக்கு நைட்டு சாப்பாடு கட்.” என்றவர் அவரின் அலைபேசியில் ருத்ரனுக்கு அழைத்தார்.வழக்கம் போல நீண்ட அழைப்பு சென்று நின்றது. அவன் இனி எப்போது பார்ப்பானோ அப்போது தான் அழைப்பான். இது தான் இந்த மூன்று வருடங்களாக நடக்கிறது. சில சமயம் உடனே அழைத்துவிடுவான். சில சமயம் நாட்கள் கடந்து, வாரங்கள் கடந்து, மாதங்கள் கடந்து அழைப்பான்.
வெங்கடேசன் இன்னும் பாவமாய் மனைவியின் முகம் காண, “என்ன பார்வை, அந்த பாட்டில் தண்ணியை குடிச்சிட்டு படுங்க” என்றுவிட்டு அறையிலிருந்து வெளியேறினார்.
“இதுக்கு தான் சொன்னேன், நமக்குன்னு ஒரு மக இருந்திருந்தா இப்போ நான் பட்டினி கிடக்க தேவையில்லை.”
“ஓ! கிழவனுக்கு இப்படி வேற ஆசை இருக்கோ! “
“பின்ன, பாரு நீயும் கஷ்டப்படுற, இந்த ரெண்டு தடிமாடுகளும் எங்க நமக்காகனு பார்த்திருக்காங்க. ஒருத்தன் நாட்டை காப்பாத்திறேனு கிளம்பிட்டான். இன்னொருத்தன் என் லைஃப் என் சாய்ஸ் அப்படின்னு இதே ஊருல வேற வீட்டுல இருக்கான். சர்வேஷ் பேசினானா?”
“இல்ல… இந்த வாரம் வீட்டுக்கு வரேன்னு சொன்னான். அப்போ கேளுங்க அவன்கிட்ட நீ பண்றது நியாயமானு? அவன் அப்படி போறேன்னு சொல்லும் போது வாயை வச்சிக்கிட்டு சும்மா தான இருந்தீங்க” என்று அதற்கும் அவரையே கடிய.
“இதுக்கும் நான் தான் காரணமா? அவன் சொல்றதுக்கு முன்னயே அவனை அவன் போக்குல விடுங்கனு சொன்னது யாரு? அவன் கேமிராவை எடுத்தப்பவே கண்டிச்சிருந்தா, இப்படி ஆகியிருக்காதுல”
“அவனுக்கு அது தானே பிடிச்சிருக்குது. இந்தாங்க சாப்பிட்டு மாத்திரையை போட்டுட்டு படுங்க. காலையில கோவிலுக்கு போயிட்டு வருவோம்” என்று பேச்சை முடித்துவிட்டார். பின்னே விட்டால் வெங்கடேசன், சின்ன மகனை குறை கூறிக்கொண்டே இருப்பார்.
ஏற்கனவே பெரிய மகனின் செயலால் பயந்து, வருந்தியது எல்லாம் அவருக்குத் தானே தெரியும். எங்கே தன் தலைச்சன் பிள்ளைக்கு திருமண வாழ்வே கூடி வராதோ என்று வருந்தி, அவனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வைச்சுடனும்னு எத்தனை கடவுளை வேண்டிருப்பார். இதோ மூன்று மாதம் முன்பு கூட காசிக்குச் சென்று வந்திருந்தாரே. இப்போது மகன் வாழ்க்கைக்கு ஒரு முடிவு கிடைத்துவிட அவருக்கும் மகிழ்ச்சி தான். கணவனிடம் தன் ஆதங்கத்தை கூறினாலும் மனம் இப்போது தான் நிம்மதி அடைந்தது அவருக்கு. இதில் சின்ன மகனை பற்றி பேசி சண்டையாக்கி கொள்ள விரும்பவில்லை அவர்.
ருத்ரனனின் அலைபேசி அவனின் மேஜையினுள் அழைத்து ஓய்ந்திருந்தது. அவனோ அவனின் குழுவுடன் சேர்ந்து அன்றைய இரவின் வழக்கமாக பாடல் கச்சேரியில் ஈடுபட்டிருந்தான்.
ஒரு சிறிய இடைவேளையின் பின் பிறகு அவரவர் பணிக்குச் சென்றுவிட, “ருத்ரா…” என்று தோள் தொட்டான் அவனின் உற்ற நண்பன் மனிஷ் ஷர்மா, “நீ வீட்டுக்கு போய் மூனு வருஷமாகுது. இன்னும் நீ அந்தப் பொண்ணை விட்டு மூவ் ஆன் ஆகலையா?”
“என்னடா திடீர்னு இந்தப் பேச்சு?”
“ம்ம் இப்ப தான் அம்மா பேசினாங்க. இன்னைக்கு மார்னிங் வாக்கிங் போகும்போது ஆண்டி ஒரே புலம்பல் போல. வீட்டுக்குப் பேசினியா டா? அந்தப் பொண்ணு நோ சொன்னதுக்கு இவங்களை எதுக்கு டா தண்டிக்கிற?  காசிக்கு போய், காய்ச்சல் வந்து, ரொம்ப கஷ்டப்பட்டுடாங்க என்னடா இது?”
“நானா அவங்களை போக சொன்னேன்”
“டேய்!”
“மனிஷ்… என்னைய விட்டுட்டு சர்வேஷுக்கு கல்யாணம் பண்ணி வைக்க சொல்லிட்டேன். அவங்க என்னைய கன்வின்ஸ் பண்ண தான் டிரை பண்றாங்க. அதான் பேசுறது இல்ல.”
“உனக்கு திமிரு டா… சரி அம்மா அப்பாவ விடு, அந்தப் பொண்ணுகிட்ட பேசுனியா?”
அவன் இல்லை என்பதாக தலை அசைக்க, பெருமூச்சுடன் அவனை ஏறிட்டான் மனிஷ்.
“அப்படி என்னடா லவ்? நானும் தான் லவ் பண்ணேன். செட் ஆகல. இப்ப வேற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டேன். நல்லா தான இருக்கேன். அந்த மாதிரி அடுத்து பார்க்க வேண்டியது தானே! சரி அந்த பொண்ணு தான் வேணும்னா இன்னொரு முறை அவகிட்ட பேசி பார்க்க வேண்டியது தான. அந்த பொண்ணே உன்கிட்ட பேச இந்த மூனு வருஷமா டிரை பண்ணுது. நீ தான் அவளை அவாய்ட் பண்ற. என்னதான்டா உன் பிரச்சனை?” என்று அயர்ந்து கேட்டான் மனிஷ்.
“அது உனக்கு சொன்னா புரியாதுடா” என்றவன் “தேனே தென்பாண்டி மீனே இசைத்தேனே இசைத்தேனே…” என்று சீட்டியடித்தபடி நகர்ந்துவிட்டான்.
“இதோ ஆரம்பிசுட்டான், இனி காலை வரை இந்த கீதம் தான்.  ருத்ரா! ருத்ரா!” என்று சலித்தாலும் அவனின் பின்னே தான் ஓடினான் மனிஷ்.
இருவரும் அன்றைய இரவு பணிக்காக ஆயத்தமாகினர்.
“ருத்ரா ஒரு முறை… ஒரே ஒரு முறை அந்த பொண்ணு கிட்ட பேசுடா” என்று சொல்ல,
“வேணாம் மனிஷ். அவ, அவ அப்பாவை விட்டுட்டு வர யோசிக்கிறா.  அதுலயும் அவ அப்பா சொன்னது போல இது உத்திரவாதம் இல்லாத வாழ்க்கை தான. எனக்கு…” என்று ஏதோ சொல்ல வந்தவன் சொல்லாமல் நிறுத்திவிட்டான்.
“சரி அந்த பொண்ணை விடு, வீட்டுலயாவது பேசுடா”
“பேசினாலே பொண்ணு பார்க்கவா, உனக்கு முடிச்சு தான் சர்வேஷுக்கு பார்க்கணும்னு பிளாக் மெயில் டா”
“அவங்க ஆசையும் நியாயமானது தானே!” நண்பன் வாதிட்டாலும்,
“அப்படினாலும் தெரிஞ்சே இன்னொரு பொண்ணு வாழ்க்கைய நான் எதுக்கு டா கெடுக்கணும்? என் காதல் மொழிக்குத் தான்னு ஆகிடுச்சு. எல்லாரும் சொல்றாங்களேனு சும்மா ஒரு கல்யாணத்தை பண்ணிட்டு, அவளுக்கு நியாயம் செய்யாம பாதில விட்டுட்டும் போயிட்டா? அதுக்கு நான் இப்படியே இருந்திடுறேன்”
“அடேய்! அப்படி பார்த்தா மிலிட்டரில இருக்கிறவன் எவனுமே சம்சாரியாக முடியாது.”
“அது அவங்க அவங்க விருப்பம் டா”
“போடாங்…. ” என்று அவனை கையில் வைத்திருந்த துப்பாக்கியால் குத்திவிட்டு,
“மூனு வருஷத்துக்கு முன்ன, காதலைச் சொல்ல போறேன். கல்யாணம் டேட் முடிவு செஞ்சிட்டு தான் வருவேன்னு போனியே. அது என்ன காந்தி கணக்கா?”
அவன் குத்திய இடத்தை தடவியவன், “அது அப்போ டா. இப்போ இருக்குற சூழ்நிலையில”
“இப்போ என்ன சூழ்நிலை? உன் நெத்திக்கு நேரா துப்பாக்கி தொங்குதா என்ன?”
அவனை திரும்பி பார்த்து சிரித்தவனின் முகத்திலிருந்து படித்திருந்தான். ஆம் அப்படி தானே இருக்கிறது. எல்லையில் பதற்றம் நிறைந்த சூழல் தானே. எப்போது வேண்டுமானாலும் அசம்பாவிதவம் நடந்துவிடும் என்று நிலையில் தானே பாதுகாப்பும், ரோந்தும் பலபடுத்தப்பட்டிருகிறது.
இதற்கு மேல் நண்பர்கள் பேசிக்கொள்ள நேரம் கிடைக்கவில்லை. அவர்களது வேலையில் கண்ணும் கருத்துமாய் பங்கேற்றனர். அவர்களுக்காக காத்திருந்த வாகனத்தில் ஏறியவர்களின் நெஞ்சத்தில் இப்போது நாட்டை காக்க எந்த எல்லைக்கும் செல்லும் மனஉறுதியுடன் பயணித்தார்கள். இன்னும் மூன்று மாத காலம் அவர்களின் பணி லே லடாக்கில். அங்கிருந்து யாரையும் தொடர்பு கொள்ள முடியாது.
இன்று வீட்டில் பேச வேண்டும் என்று தான் நினைத்திருந்தான் ருத்ரன். ஆனால் நண்பனின் பேச்சை கேட்டதும், தன் முடிவை மாத்தியிருந்தான். அதற்கு காரணம் தேவியின் தவறிய அழைப்பும், அவரிடமிருந்து வந்திருந்த குறுஞ்செய்தியும் தான். “ருத்ரா இப்போ நான் பார்த்திருக்க பொண்ணுக்கு ஓகே சொல்லிட்டு, ஒழுங்கா கல்யாணம் பண்ணிகிற. அப்படியில்ல இனி என்கிட்ட பேசாத” என்றிருந்தது.
அதை வாசித்தவனுக்கு ஏகக் கடுப்பு. நீங்கள் என்ன என்னிடம் பேசாதே என்று சொல்வது. நானே பேசமாட்டேன் என்ற வீம்பில் தான் அலைபேசியையும் அணைத்துவிட்டு, அதனை எடுக்காது அங்கேயே விட்டுச் சென்றிருந்தான்.
அவனின் இந்த வீம்பான குணம் ஒன்று தான் சுந்தரத்தை யோசிக்க வைத்திருந்தது. அதனை கொண்டே தான் அவர் அவனை நிராகரித்திருந்தார். அவனின் வேலைப்பற்றி சொன்னதெல்லாம் இரண்டாம்பச்சம் தான்.
அவனை சிறு வயதிலிருந்தே பார்க்கிறாரே, ஒரு விஷயம் அவனுக்கு பிடிக்கவில்லை என்றால் வீம்பாக அதன் பக்கம் கூட தலையை திருப்பமாட்டான். அதிலும் இப்போது அவன் இருக்கும் பணி வேறு அவரை அச்சுறுத்தியது. தேன்மொழி சிறு தவறு செய்தாலும் வீம்பு கொண்டு அவளை தவிர்த்துவிட்டால், மகளின் மனம் படாதபாடு படும். தேன்மொழிக்கு அன்பு நிராகரிக்கப்பட்டால் அவளால் தாங்க இயலாது. தவித்துப்போய்விடுவாள். அதற்காக தான் பயந்தார். இந்த மூன்று வருடங்களாக அவர் பார்த்து வைத்திருந்த பையினைப் பற்றி பேச்சை எடுத்தாலே தேன்மொழி வேறு ஏதாவது சொல்லி மழுப்பி விடுவாள்.  அன்று கண்மணி, ‘சித்தப்பா அவசரப்பட்டிருக்க வேணாம்’ என்று சொன்னதும் புரிந்துகொண்டார் தேன்மொழிக்கும் இதில் விருப்பம் இருக்கலாம் என்று.
தான் மறுத்துவிட்டதால், ருத்ரன் நிச்சயம் கோவம் கொள்வான் என்று கணித்தார். அவர் கணித்தது போலவே தான் நடந்தேறியது. அன்றிரவே கிளம்பியிருந்தான் ஏதேதோ காரணங்கள் சொல்லி. மீண்டும் ஒருமுறையேனும் தன்னிடமோ, இல்லை மகளிடமோ பேசுவான் என்று எதிர்பார்த்தார். அது நடக்கவில்லை.  மேலும் வருடங்கள் தான் கடந்திருந்தது.  இனி பொறுத்து பயனில்லை, தாமே இறங்கி செல்வோம் என்று தான் இன்று பேசினார். அதற்கான பலன் கிடைக்குமா?