படுக்கையில் படுத்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்த இரட்டையர்கள், கனியின் கைபேசி இசையில் கலைந்து அதை, கனி எடுப்பதற்குள் தேன் கையில் எடுத்துவிட்டாள்.
“கனி நிலன் அத்தான்” என்று கண்கள் விரிய சொன்னவள், “நீ கொஞ்ச நேரம் அமைதியா இரு. அவரு கண்டுபிடிக்கிறாரானு பார்ப்போம். ரெண்டு வருஷ காதல்ல” என்றவள் அவளுக்குச் செய்கையாக வாயில் விரல் வைத்துவிட்டு, அழைப்பை எடுத்தாள்.
எடுத்ததும் திரையில் அவளது முகத்தை காட்டாமல் இருக்க, “கனி…” என்றிருந்தான் நிலன். தேனும் பவ்யமாக திரையில் முகத்தைக் காட்ட, “என்ன பண்ற?” என்று அவன் உரையாடலை ஆரம்பித்தான்.
இவளும், “என்ன பண்ணுவாங்க இந்நேரம்? சாப்டாச்சு…. அடுத்து தூக்கம் தான்” என்றாள்.
“தூக்கமா? குட்டிமா…” என்று அவனின் குரலின் பேதத்தில் தேன்மொழி வாய்ப்பொத்தி சிரிக்க ஆரம்பித்துவிட, வேகமாக கனி அவளின் கையில் உள்ள பேசியை வாங்கி அவளின் முகம் காட்டினாள்.
நிலன் சற்று குழம்பி, இப்போது யார் தன் எதிரில் இருப்பது? அப்போது பேசியது யாரு? என்று கலவரமாக, “நிலன் உங்களுக்கு இன்னும் எங்க ரெண்டு பேருக்குள்ள வித்யாசம் தெரியல” என்று கனி எகிற,
“கனி?” என்றான் கேள்வியாக இம்முறை.
“ஹ்ம்ம்… இப்ப கேளுங்க. அவ இத வைச்சே என்னைய செய்வா” என்று பேச, அந்தப்பக்கத்தில் சிரித்து முடித்த தேன், “ஹே! குட்டிமா…. பொக்குனு சிரிச்சுட்டேன் பப்பிம்மா…” என்று கிண்டல் செய்தாள்.
“பாருங்க… எல்லாம் உங்களால தான். இனி இதை பாடியே வெறுப்பேத்துவா” என்று கனி அலற,
நிலன் அசட்டு சிரிப்புடன்,”கனி… ரெண்டு பேரும் செராக்ஸ் காப்பி மாதிரி இருந்தா நா என்ன பண்றது? கொஞ்சம் கன்பூயூஸ் ஆகிட்டேன். அதுவும் போன்ல” என்று விளக்கிக்கொண்டிருக்க,
“ஓ! அப்போ நேர்ல பார்த்தா… கரெக்டா சொல்லிடுவீங்க?” என்று தேன்மொழியும் திரைக்குள் வர,
இருவரையும் மாறி மாறி பார்த்தவன் பதில் சொல்லாது தலையை சொரிய, “பாரு கனி இப்ப கூட அத்தான் அதே குழப்பதுல தான் இருக்காரு” என்று போட்டுக்கொடுத்தாள்.
“ஏன் இந்தக் கொலைவெறி? அவளே இப்ப தான் சமாதானம் ஆகிருக்கா. இப்படி கொழுத்தி போடுறியே… மச்சினி! நியாயமா இது?”
“நியாயம் தான. தங்கச்சிக்கு புருஷனா வர போறவரு சுதாரிப்பா இருக்காரா? இல்லையானு? தெரிஞ்சுக்கனும்ல”
“அப்படி ஏதாவதுனா சொல்லிட்டு செய்ங்க மொழி சிஸ்டர்ஸ், நானும் ரெடியா இருப்பேன்ல”
“ஆல் டைம் அலர்ட் மோட்ல இருக்க வேணாமா? என்ன கனி நான் சொல்றது?” என்று தேன் கேட்க,
“அதானே! பார்த்தவுடனே நீங்க அது நான் இல்லன்னு கண்டுபிடிச்சிருக்கணும்” என்று கனியும் ஒன்று சேர்ந்துவிட்டாள்.
“இதெல்லாம் அநியாயம் கனி… வெறும் முகம் மட்டும் தான் தெரியும். அதுல ரெண்டு பேரும் அச்சில் வார்த்த பதுமைகளா இருங்கீங்க”
“வாய்ஸ் கூட தெரியல பாரேன் கனி” தேன் எடுத்துக்கொடுக்க,
“மேடம் தேன்மொழி” என்று கையெடுத்து கும்பிட்டவன், “சரண்டர், நீ என்ன சொல்றியோ அத செய்ய கடமைப்பட்டிருக்கிறேன். இப்படி கோர்த்து மட்டும் விடாத. மீ பாவம், ஆல்ரெடி நான் கடல் தாண்டி இருக்கேன்.” என்றான் பாவமாய்.
“சரி சரி பொழச்சு போங்க. கனி எனக்கு கொஞ்சம் நோட்ஸ் எடுக்கணும்” என்று அவளை பார்த்து புன்னகைத்துவிட்டு தனது அறைக்குச் சென்றாள் தேன்மொழி.
“உன் அக்கா கொஞ்சம் டெரர், ஆனாலும் ரொம்ப டிசெண்ட்” என்று நிலன் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த பேச்சைத் தொடங்கினான்.
“ஹ்ம்ம்… அவ டிசெண்ட், நான் ரொம்ப இன்டிசெண்ட். எப்படிங்க இன்னும் உங்களால நான் தான் கனினு கண்டுபிடிக்க முடியல?”
“ஹே! இதென்னடி வம்பு, திடீர்னு உன் போனை எடுத்து தேன் பேசுவான்னு நான் நினைக்கல”
“என் வாய்ஸ் இல்லனு கூட உங்களால கண்டுபிடிக்க முடியல”
அவன் பாவமாக பார்க்க,
“இப்படி முகத்தை வச்சு தான் என்னை ஏமாத்திட்டு இருக்கீங்க, ஆரம்பத்துல இருந்து”
“ஹே கனிமா! நான் நெஜமாவே பாவம் தாண்டி”
“எப்படி? மெல்ல என்கிட்ட பேச்சை ஆரம்பிச்சு, லைஃப் பத்தி பேசி, என்கிட்ட இருந்தே நான் யாரு சொன்ன தட்டாம கேட்டுபேனு தெரிஞ்சுக்கிட்டு, என் அப்பாகிட்ட லவ் சொல்லி… அப்பவும் இப்படி தான் முகத்தை வச்சு என்னை” என்று பல்லைக் கடித்துப் பேச,
“உன்ன…” என்றான் இன்னும் தன் பாவனையை மாற்றிக்கொள்ளாது.
“பேச்ச மாத்துறீங்க”
“நோ, குட்டிமா. நீ சொன்னதைத் தான் நானும் சொன்னேன்”
“ப்ச்…. சரி சொல்லுங்க, நெக்ஸ்ட் டைம் என்னை கரெக்ட்டா கண்டுபிடிக்கணும்?” என்று விரல் நீட்டி எச்சரிக்க,
“அடுத்த தடவ பாரு இந்த நிலன் பெர்ஃபார்மன்ச” என்று அவனும் கைசட்டையை உயர்த்திச் சொன்னான்.
என்னவென்பதாக புருவம் உயர்த்தினாள், “சும்மா….” அவளும் சரி என்பதாக தலை அசைக்க,
“அப்புறம்….” என்றான் நிலன். இது தானே காலம் காலமாக காதலர்கள் உரையாடலை நீட்டிக்கும் வார்த்தை. அந்த வார்த்தை அதன் வேலையை செவ்வன செய்ய ஆரம்பித்தது.
தேன்மொழி அடுத்த வாரம் பாடம் எடுப்பதற்கு தேவையான அனைத்து தரவுகளையும் எடுத்து முடித்து நிமிர, ஒரு மணி நேரம் கடந்திருந்தது. கைகளை நெட்டி முறித்தவள், பாடம் சம்பந்தமான புத்தகங்களை ஒதுக்கிவிட்டு அவளது நாட்குறிப்பை திறக்க, அந்தப் பக்கத்திலிருந்த, ‘ ஐஸ் அக்கா மேரேஜ் ‘ என்ற எழுத்துக்கள் அவளை அன்றைய நாளுக்கு இழுத்துச் சென்றது.
ஐஷ்வர்யா அவளது மூன்றாவது மாமா வித்யாபதியின் மகள். அவளுக்குப் பார்த்திருந்த மாப்பிள்ளை மதுரை. ஆதலால் அவளது திருமணம் இங்கு தான் நடைபெற்றது. எப்போதும் சித்திரை திருவிழாவிற்கு மட்டுமே வருகை தரும் ருத்ரன் அதிசயமாக அந்த முறை வந்திருந்தான் தங்கையின் திருமணத்திற்காக.
ருத்ரனுக்கு அவள் மீது பாசம் அதிகம். ஒவ்வொரு ரக்ஷாபந்தன் அன்று தவறாது அழைத்து பேசிவிடுவாள். அவளின் திருமணத்திற்காக இந்த முறை பணியின் இடையில் விடுப்பு எடுத்து வந்திருந்தான். அவன் அப்போது தான் மேஜராக பதவி உயர்வு பெற்றிருந்தான்.
ஐஸ்வர்யா, தேன்மொழி, கனிமொழியை விட மூன்று வயது பெரியவள். இதுவரை அவளை அக்க என்று அழைத்தவர்கள், திருமணம் நிச்சியம் செய்ததிலிருந்து அவளை ‘அத்தாச்சி! அத்தாச்சி!’ என்றழைத்து ஒரு வழி செய்திருந்தார்கள் மொழி சகோதரிகள்.
ருத்ரன் அவன் குடும்பத்துடன் திருமணத்திற்கு இரு நாட்களுக்கு முன்பு வந்திருந்தான்.
தேன்மொழி, அவள் நினைத்தவாறு வேலை கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் இருந்தாள். கனிமொழி சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணியில் இருக்க, அவள் திருமணத்திற்கு முன் தினம் தான் வருவதாக இருந்தாள்.
ருத்ரனும், சர்வேஷும் வந்ததும், சகோதர பட்டாளம் அவர்களை சூழ்ந்துக் கொள்ள, வேணுவிடம் கேட்டுக்கொண்டு திருமண வேலைகளை ஆளுக்கொன்றாய்ப் பிரித்து செய்தார்கள். வேதாவின் இரண்டாவதுஅண்ணன் சதாசிவத்தின் பிள்ளைகள் இருவருக்கும் திருமணமாகி பிள்ளைகள் இருக்க, அவர்கள் எல்லோரும் வேணுவின் மகன் கார்த்திக்குடன் சுற்றித் திரிந்தார்கள்.
ருத்ரன் பொறுப்பானவனாக தங்கையின் திருமணத்தில் தன்னை ஈடுபடுத்தி கொள்ள, சர்வேஷ் தனது புகைப்பட கருவியுடன் நிகழ்வுகளை படமாக்கி கொண்டிருந்தான்.
அன்றைய இரவு ஐஷ்வர்யாவுக்கு மருதாணி வைத்துக்கொண்டிருந்தாள் தேன்மொழி. வீட்டில் இரவு உணவு தயாராகிக்கொண்டிருக்க, இளவட்டங்கள் எல்லாம் சேர்ந்து மாடியில் அமர்ந்து உண்ண தீர்மானம் போட்டிருக்க, ஐஷ்வர்யாவும் அங்கே செல்ல விரும்பினாள். அவளுக்கு மருதாணி வைத்து முடித்தவள், “நீ மாடிக்குப் போ ஐஷு, நான் உனக்கு சாப்பாடு எடுத்துட்டு வரேன்” என்றாள் தேன்.
ருத்ரன் அப்போது தான் வெளி வேலையாக சென்றிருந்தவன் வீட்டிற்கு வந்தான்.அவனை பிடித்துக்கொண்டாள் ஐஷ்வர்யா. “அண்ணா, இப்ப தான் வரியா? வா வா எல்லாரும் மாடில தான் இருக்காங்க” என்று அவனையும் அழைத்துச் சென்றுவிட்டாள்.
இருவரும் மாடி ஏறி வர, “மணமகளே, மருமகளே வா வா…” என்று அனைவரும் பாட, அவளோ, “அண்ணா….” என்று கால்களை உதைத்து சிணுங்கினாள்.
“டேய் போதும்!” என்று ருத்ரன் குரலை உயர்த்தி சொல்ல, “அட, என்ன மேஜர் சார்… நாங்க ஒன்னும் உங்க பட்டாலியன் இல்ல” என்றனர் கோரசாக.
அவன் கையை விரித்து தன்னால் உதவ முடியாது என்று ஐஷுவிற்கு காண்பித்து விலகிவிட்டான். அவளே அவர்களை கையாண்டாள். அவள் கையிலிருந்த மருதாணியை விசாரித்தார்கள். இவளும் அதற்கு பதில் கூறிக்கொண்டிருந்தாள். கார்த்தி பரோட்டக்களுடன் மேலே வந்தவன், அனைவரையும் உண்ண தட்டில் வைத்து கொடுத்துக்கொண்டிருந்தான். அத்தனை கலவரத்திலும் மெல்லிய கொழுசொலி மாடிப்படியில் கேட்க, ருத்ரன் பார்வை படியை நோக்கி சென்றது.
தேன்மொழி ஒரு கையில் தட்டும், மறுகையில் சொம்பு நீருடனும் படியேறினாள்.
“அட தேனு!”
“டேய்! அது அட தேனு இல்லடா…. தேனடா….!” என்று ஐஷுவின் தம்பி அவளை வம்பிழுக்க, “சி பே” என்றிருந்தாள் தேன்.
ருத்ரனின் பார்வை அவள் வந்ததிலிருந்து அவளிடம் மட்டுமே தஞ்சம் இருந்தது. இம்மியளவும் நகரவில்லை. இதை யார் யாரெல்லாம் கவனித்தார்களோ? சர்வேஷ் அதனை குறித்துக்கொண்டான்.
கார்த்திக், “ஹே! யாரு அது சித்தியை ஓட்டுறது. அவ்ளோ தான் பாத்துக்கோங்க” என்று அவன் சட்டை காலரை தூக்கிவிட்டு சொல்ல,
“இதோ வந்துடான்ல, சின்னாத்தாவுக்கு துடுப்பு….” என்றான் ஐஷுவின் தம்பி மாதேஷ்.
“இதோடா சொல்லிட்டாங்க சின்ன சித்தப்பு. அவங்க அவங்க வேலையை பாருங்க. சரி தான சி.சி” என்றான் கார்த்திக்.
“அது என்னடா சி சி?” என்று தேன்மொழி விசாரிக்க,
“சின்ன சித்தப்பு. ஷார்ட் பார்ம்”
“சீ…சி….” என்று தேன்மொழி இழுத்துச் சிரிப்புடன் கூற,
“டேய்! மவனே!” என்று கார்த்திக்கை எட்டிப்பிடிக்க முயன்றான் மாதேஷ். அவனுக்கு போக்குக் காட்டி ஓடிக்கொண்டிருந்தான் கார்த்திக். கார்த்திக்கின் தம்பி தங்கைகள் அவனுக்கு உதவ, போர்க்களமாக இருந்தது அந்த இடம்.
தேன்மொழி சிரித்துக்கொண்டே, “அய்ஷு கா. நீ தயிர் சாதம் கேட்டியாம்ல, இந்தா” என்று அவள் அருகில் நீர் சொம்பை வைத்துவிட்டு தட்டை அவளிடம் நீட்டினாள்.
அவள் மருதாணி கைகளை காண்பித்து, “ஸ்பூன் எடுத்துட்டு வரலையா?” என்றாள்.
“அத்தாச்சி! நான் எதுக்கு இருக்கேன்? உங்களுக்கு ஊட்டி விட மாட்டேனா?” என்று கேட்டவாறு சோற்றை பிசைந்து ஒரு வாய் நீட்ட, அவள் வாய் திறந்து வாங்க முற்படும் போது, “அத்தாச்சி! அண்ணாவுக்கும் தயிர் சாதம் தான் ரொம்ப பிடிக்குமாம்ல” என்றாள் நீட்டியிருந்த கையை மடக்கி தேன்மொழி.
“இல்ல அவருக்கு பிரியாணி தான் பிடிக்குமாம்” ஐஷுவும் அவளின் கிண்டல் புரியாது பதில் கூறினாள்.
“ஓ!” என்றவள் மீண்டும் சாதத்துடன் கையை நீட்டி,
“எந்த பிரியாணி பிடிக்குமாம்?” என்று கேட்டாள்,
“மட்டன்” என்றவள் வாய் திறந்து வாங்க வர, கையை கீழே இறக்கினாள்.
“தம் பிரியாணியா? இல்ல திண்டுக்கல் ஸ்டைலா… இல்லன்னா….”
“ஹ்ம்ம் நான் வைக்கிற பிரியாணியாம்” என்றவளுக்கு அவளின் சேட்டைப்புரிய, அவளை முறைத்துக் கொண்டிருந்தாள்.
“ஹே! அத்தாச்சி சொல்லவே இல்ல பாத்தியா…. உனக்கு பிரியாணி சமைக்க வருமா?” என்று மீண்டும் கையை நீட்ட,
“ஹான்” என்றவள் அவள் நீட்டிய கைப்பிடி சாதத்தை வாங்குவதற்குள், தேன்மொழி கையை கீழே இறக்க, கடுப்பானவள், “அடியே! நீ ஒன்னும் எனக்கு ஊட்ட வேணாம்” என்று சிலிப்பிக்கொண்டாள்.
“என்ன அத்தாச்சி கோச்சுக்கிறீங்க”
“அய்யோ! முத இந்த அத்தாச்சி சொல்றத நிறுத்து”
“அத்தாச்சி….” என்று அவள் ராகமாகச் சொல்ல, அவளின் பின்னே மதேசும், “ஆச்சி….” என்றான்.
“மண்டைய உடைச்சிடுவேன் மாதேஷ்” என்றாள் ஐஸ்வர்யா கோபமாக.
“அத்தாச்சி! கூல்! இந்தாங்க” என்றாள் தேன்மொழி.
கடுப்பின் உச்சத்தில் இருந்தவள், “அண்ணா அவ கையை பிடிங்க” என்று சொல்ல, அதுவரையிலுமே ருத்ரனின் பார்வை தேன்மொழியிடம் தான் இருந்தது. தங்கையின் குரலில் திரும்பியவன், மீண்டும் தேனை பார்க்க, அப்போது தான் அவன் இருப்பதையே கவனித்தாள் அவள்.