வீட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் அன்றைய பொழுதைக் கழித்து இரவில் கூடியிருக்க, “கனி, தேனு எங்க?” என்றார் சுந்தரம் வீட்டுக்குள் நுழைந்தவாறு.
“அப்பா அவ சித்ராவை வீட்டுல விட போயிருக்கா. இன்னைக்கு கொஞ்சம் லேட் ஆகிடுச்சு. நீங்க வாங்க சாப்பிட, எல்லாம் ரெடி பண்ணிட்டேன்.”
“ஒன்பது மணி வரையா பாடம் எடுப்பா?” என்று அலுத்துக்கொண்டு அவரின் அறைக்குள் செல்ல, தேன்மொழி வந்துவிட்டாள் வீட்டிற்கு.அவளை கண்டதும் கனி சிரிக்க, “எதுக்கு சிரிக்கிற? அப்பா வந்துட்டாங்களா?”
“ஹ்ம்ம்… ஒன்பது மணி வரை ஏன் தேனு பாடம் எடுக்குற?” அவள் சத்தமாக கூற, “ஷ்…. சொல்லிடாத கனி. அப்பாவுக்கு தெரிஞ்சது அவ்ளோ தான்” என்றவள், பூனை போல நடந்து வண்டி சாவியை அதன் இடத்தில் வைத்தாள்.
“வண்டி இல்லாததை அப்பா பாக்கலயா?” என்று கிசுகிசுக்க,
“இல்ல போல. வெற்றி கூட பேசிட்டு வந்தாங்க. தப்பிச்ச! இல்லைனா, பெல்ட் அடி தான்” என்று நாக்கைத் துருத்தினாள்.”உனக்கு நான் பெல்ட் அடி வாங்குறதுல ஏக சந்தோஷம் போல! போ புள்ள இட்லி ரெடினா தட்டுல வச்சு தா. பசிக்குது….” என்று கைச்சட்டையை இழுத்துவிட்டு அமர,
“டிரஸ் மாத்தலயா?”
“ஓ மை காட்!”
“அவசரத்துல கொண்டையை மறந்துட்டேன்” என்று வேகமாகத் தன் அறைக்குள் சென்று கதவை அடைத்தாள்.
சுந்தரம் சரியாக வெளியே வர, “தேனு வந்துட்டியா?”
“ஹான் ப்பா… டிரஸ் மாத்திட்டு வரேன். கனி சாப்பாடு எடுத்து வை” என்று பொறுப்பானவளாக கட்டளையிட,
‘ அடிக்கழுதை!! இவ்ளோ நேரம் பைக் எடுத்து ஊர் சுத்திட்டு வந்துட்டு, எனக்கு ஆர்டர் போடுறத பாரு ‘ என்று மனதுக்குள்ளே அவளை வசைபாடி கொண்டே மேஜையில் அனைத்தையும் எடுத்து வைத்தாள் கனி. சுந்தரம் வழக்கம் போல ஒரு குளியல் போட்டுவிட்டு சாமி முன் நின்று மனதார வேண்டிக்கொண்டிருந்தார்.
தேன்மொழிக்கு பைக் ஓட்டுவது மிகவும் பிடிக்கும். காலேஜ் படிக்கையில் அதை கற்றுக்கொள்ள விரும்பினாள். ஆனால் அவளின் தந்தையோ ஒரு ஸ்கூட்டியை வாங்கிக்கொடுத்து ‘இதை ஓட்டு’ என்று சொல்லிவிட்டார்.
இருந்தும் தேனுக்கு சுந்தரத்தின் அந்தக்கால புல்லட்டின் மீது அலாதி பிரியம். முதலில் ஸ்கூட்டியை கற்றுக்கொண்டவள், பின் மெதுவாக அப்பாவுக்கு தெரியாமல் கல்லூரி தோழர்கள் உதவியுடன் புல்லட் ஓட்ட கற்றுக்கொண்டாள். அவ்வப்பொழுது சுந்தரத்திற்குத் தெரியாமல் அவரின் வண்டியை எடுப்பாள். அப்படி ஒரு சமயத்தில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டுவிட, சுந்தரம் அவளை ஒரு வழி செய்துவிட்டார்.
அதிலிருந்து அவளுக்கு வண்டியை எடுப்பதில் தடா விழுந்தது. விபத்து செய்தது என்னவோ தேன்மொழி தான், ஆனால் காயம் கனிமொழிக்குத் தான். கை உடைந்து இரு வாரங்கள் கல்லூரி செல்லவில்லை அவள். என்றும் இல்லாது அன்று தான் அவளுடன் சேர்ந்து பயணித்தாள். அவளின் நேரம் பைக் என்றாலே பெரும் பீதிக்கு உள்ளாகும் நிலைமைக்கு ஆளாக்கிவிட்டாள் தேன்மொழி.
அவளின் அந்தப் பயத்தை வைத்தே அவளை மிரட்டி அப்பாவுக்கு தெரியாமல் எப்போதாவது பைக்கில் உலா சென்று வருவாள். இன்றும் அதுபோல சென்று வர, சிறு தாமதம் ஆகிவிட்டது. அதை மறைக்க தான் இத்தனை மெனக்கிடல்.
கடவுளின் முன் நின்ற சுந்தரத்திற்குத் தன் மகள்களின் தகிடு திட்டம் அனைத்தும் அறிந்தும் அறியாததைப் போல இருந்தார். கண்மூடி வேண்டிக்கொண்டவர், “அப்பா பெரிய கருப்பா… இன்னும் சின்ன பிள்ளைகள் போல இருக்குற என் ரெண்டு மகள்களும் எந்த குறையும் இல்லாம, அவங்களை தங்கமா பாத்துகிற மாதிரி அவங்களுக்கு அமைஞ்சிருக்கிற குடும்பமும் இருந்திடனும்.என் மகள்கள் எப்போவும் சந்தோஷமா இருக்கணும்” என்று கடவுளிடம் முறையிட்டு, இனி எல்லாம் உன் கையில் என்று சரணடைந்து வெளிவந்தார்.
“கனி…. நீயும் வா… தேனு….”
“வந்துட்டேன் ப்பா…. கனி இன்னும் என்ன பண்ற?” என்று கேட்டுக்கொண்டே தேன்மொழி அடுப்படிக்குள் நுழைய,
“பொடி இட்லி ரெடி பண்ணேன். வா வா… சுடசுட சாப்பிடுவோம். மொட்டை மாடிக்குப் போவோமா?” என்று ஆர்வம் மின்ன கேட்டாள் கனி. தேன் அப்பாவை திரும்பி பார்க்க, “தட்டை எடுத்துட்டு வா தேனு… நான் இதை எடுத்துட்டு போறேன்.” என்று சொல்லி இட்லி இருந்த பாத்திரம், மற்றும் சட்னியை எடுத்துக் கொண்டு செல்ல, “ஹே!!” என்று கனி ஆர்பரித்தாள்.
“நான் அக்காவை கூப்பிடுறேன்.” என்று தேன்மொழி கண்மணிக்கு அழைத்துச் சொல்ல, அவளும் இதோ வருகிறேன் என்று சொல்லி வைத்துவிட்டாள். கண்மணியின் வீடு இவர்கள் வீடு இருக்கும் அதே தெருவில் தான், நிமிடத்தில் வந்துவிடலாம். இரு மொழிகளும் அனைத்தையும் எடுத்துக்கொண்டு மாடிப்படி ஏற, “கண்மணிக்குச் சொல்லிடு தேனு” என்று சுந்தரம் சொல்லி முடிப்பதற்குள், “சொல்லிட்டேன் பா… அக்கா இப்போ வந்துடுவாங்க” என்றாள்.
“அப்பா ஊட்டி விடுறீங்களா?” என்று கனி கேட்க, “ஆமா இவங்க சின்ன பாப்பா…” தேன்மொழி பரிகாசம் செய்தாள்.
“எஸ்! ஆப்கோர்ஸ். நான் சின்ன பாப்பா… நீ பெரிய்ய பாப்பா…” என்று பெரியவில் அழுத்தம் கூட்டி வம்பிழுத்தாள்.
“பாரு ப்பா… கனி கிண்டல் பண்றா” என்று தந்தையிடம் முறையிட,
“கனி!!” என்று அழுத்தி அழைத்தவர் தனக்கு ஆதரவாய் ஏதாவது சொல்லுவார் என்று தேன்மொழி எதிர்பார்த்திருக்க,
“அம்மாடி இந்தா” என்று இட்லியை கனியின் வாய் அருகே நீட்ட, தேன்மொழிக்கு வக்கனம் காட்டியபடி வாங்கிக்கொண்டாள் கனி.
அதில் உதடு சுழித்து, “ப்பா…. நீங்க டைமுக்கு சாப்பிடணும்”
“இதோ, நானும் தான் சாப்பிடுறேன்” என்றவர் அவரின் வாயிலும் ஒரு துண்டு இட்லியைப் போட்டவர், தேன்மொழிக்கும் ஊட்டிவிட்டார்.
அப்போது கண்மணியும், வேணுகோபாலும் வந்துவிட, “அடடே! நிலாச்சோறா?” என்றான் வேணு.
“அம்புட்டு குண்டும் குழியுமா தான் இருக்கு. என்ன அக்கா?” என்று தேன், கண்மணியை பார்த்துக் கண்ணடிக்க,
“ஆமாம், பாரு சித்தப்பா அந்தக் குழிக்குள்ள தான் சாம்பாரை ஊத்தி இருக்காரு” என்று அவளும் கேலிக்குள்இறங்கினாள்.
“மாமா நீங்க சொல்லுங்க என் இட்லி அழகு தான?” என்று கோபித்த கனி, வேணுவை துணைக்கு அழைக்க, அவரோ,
“என் அய்த்த பெத்த ரத்தினத்தோட இட்லி முத்து முத்தாவுல இருக்கு….” என்று மெச்சினார்.
“சித்தப்பா உங்களுக்கு இடியாப்பம் பிடிக்கும்ல, நீங்க இதை சாப்பிடுங்க. உங்க மருமகன் அவங்க ரத்தினத்தோட இட்லியை சாப்பிடட்டும்” என்று அவள் கொண்டு வந்த இடியாப்பத்தை சுந்தரத்தின் தட்டில் வைக்க,
“மாமா நீங்க இட்லி சாப்பிடுங்க” என்று கனி வேணுவிற்கு பரிமாறினாள். இடியாப்பம் போச்சே என்ற ரீதியில் பார்த்தவர், “வை கனி… நல்லா மல்லி பூ போல சாப்ட்டா இருக்கு” என்று சொல்லிக்கொண்டு சாப்பிட்டார்.
“சாப்ட்டா எப்படி மாமா இருக்கும்?” என்று தேன் சொல்ல,
“சாப்ட்டா தான் இருக்கு தேனு… பாரு” என்று பிய்த்து காட்ட, “ஹையோ!! மாமாவுக்கு உன் ஜோக் புரியல. அதர பழைய ஜோக், சிரிப்பே வரல” என்றாள் கனி கழுத்தைத் தேய்த்து விட்டு.
“அக்கா சிவப்பு அரிசிலயா இடியாப்பம் செய்த?” என்று தேன்மொழி கனியைக் கண்டுகொள்ளாது அடுத்துப் பேச,
“ஆமா தேனு”
“சூப்பரா இருக்கு கா…. இதையும் பவுடர் போட்டு பாக்கெட் பண்ணிடு. நான் ஊருக்கு போகும் போது எடுத்துட்டு போறேன்.” என்று கனியும் ஒரு வாய் வாங்கியவள் அதன் சுவையில் அந்தப் பேச்சுக்குத் தாவினாள்.
“அட என்ன நீயி!!! இந்தாங்க மாப்ள…. தேங்காபால் விட்டுகோங்க” என்று சுந்தரம் வேணுவிற்கு எடுத்து வைத்தார்.
இப்படியாக கேலி பேச்சுகளுடன் அனைவரும் உண்டு முடித்து கால் நீட்டி அமர்ந்திருக்க,”இந்த மாதிரி ஒன்னா உட்கார்ந்து சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சுல?” என்றாள் தேன்மொழி.
“ஆமா, கார்த்தியும் இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும். எப்போ கடைசியா இப்படி இருந்தோம்… ஐஷ்வர்யா அக்கா கல்யாணம் தான் லாஸ்ட்ல? மூணு வருஷம் ஆகிடுச்சு” என்று கனி கேட்க,
“ஹ்ம்ம்… எல்லாரும் இருந்தோம்ல…” என்று தேன்மொழியும் பழைய நினைவில் நெகிழ்ந்தாள்.
மகளை பார்த்துக்கொண்டிருந்த சுந்தரத்துக்கு, தான் இன்று செய்த காரியம் திருப்தியைக் கொடுத்தது. அதோடு வெங்கடேசனின் உரிமை பேச்சும், நம்பிக்கையைக் கொடுத்திருந்தது. தன் மகிழ்ச்சியை பகிர எண்ணியவர்,
“வேணு…” என்றழைக்க,
“சொல்லுங்க மாமா. கனி மாப்ள வீட்டுல பேசிட்டதா சொன்னா கண்மணி. ஜோசியர பாக்க போகணும்னு சொன்னா.திங்கள் பாக்க வரதா நம்ம ஜோசியர் கிட்ட பேசிட்டேன்.பதினொரு மணி போல கடைக்கு வரேன். அப்பா கடையைப் பார்த்துப்பாங்க. நாம ஒரு எட்டு போய்ட்டு வந்திடலாம். நாளைக்கு பொங்கல் வைக்கணும்னு சொன்னா கண்மணி”
“ஆமா வேணு. பூசாரிக்கிட்ட பேசிட்டேன்.கனி நீ தான் பொங்கல் வைக்கணும்”
“சித்தப்பா ரெண்டு பேரையும் வைக்க சொல்லுங்க. ரெண்டு பேருக்கும் தான கல்யாணம் பேசிருக்கு” என்று கண்மணி சொல்ல,
கனிக்கு காலையிலே தெரியும் ஆதலால் அவளின் முகத்தில் வெக்கத்தின் சாயல் இருந்தது.இப்போது தேனுவுக்கும் என்று கண்மணி சொல்ல, கண்கள் விரித்தவள், தேனை தோளோடு அணைக்க, தேன்மொழி அதிர்ந்து விழித்தாள்.
அவளின் அதிர்ந்த பார்வையை கண்டுகொண்ட சுந்தரம் அவளிடம், “வெங்கடேசன் மாமா கிட்ட பேசியாச்சு தேனு. அவரு தேவிக்கிட்டயும் ருத்ரன் கிட்டயும் பேசிட்டு மத்தத சொல்றேன்னு சொல்லியிருக்காரு” என்றார்.
“அப்பா உங்களுக்கு….” என்று தேன் தயங்க,
“உன் சந்தோஷம் தான் மா என் விருப்பம்” என்று அவள் தலைகோதிவிட்டார்.
“நான் தான் சொன்னேன்ல தேனு” என்று கனி அவளை உலுக்க, இன்னும் தெளியாமல் தான் இருந்தாள் தேன்மொழி.
சுந்தரம், “ருத்ரனுக்கு என்ன குறை? நல்ல பையன். பொறுப்பானவன். நாட்டை பாதுகாக்கிற வேலையில இருக்கான். உன்னையும் நல்லா பார்த்துப்பானு அப்பா நம்புறேன் தேனு” என்று சமாதானம் போல பேச, தேன்மொழி தன் தகப்பனையே உற்றுப்பார்த்தாள்.
“உயிருக்கு யாராலும் உத்திரவாதம் கொடுக்க முடியாதுனு இப்போ அப்பா புரிஞ்சுகிட்டேன் மா. உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. உன் வாழ்க்கைய நீ நல்லா பார்த்துப்ப, அமைச்சுப்ப. விரும்பி கேட்டு வந்தவங்களைவிட வேற நல்ல வரன எப்படி நான் கண்டுபிடிக்கிறது? எல்லாம் சரியா வரும்னு நம்புறேன்” என்று மேலும் அவர் பேசிட, அவர் தோளில் சாய்ந்துக் கொண்டாள் தேன்மொழி.
அன்றைய தினத்தின் முடிவில் சுந்தரம் எண்ணியது போல இருமகள்களின் திருமணத்தைப் பேசியாயிற்று, இனி செயல் மட்டுமே பாக்கி என்று மனநிறைவுடன் உறங்க, விதி அவரை பார்த்து சிரித்தது. நினைத்தது அனைத்தும் தடங்கலின்றி நடந்துவிட நாம் ஒன்றும் மாய உலகில் வாழவில்லையே! நாளை என்பது நிச்சயம் இல்லாத ஒன்று!