மாதங்கள் இரண்டு கடந்திருந்தது. கனிமொழி தன் குழந்தையின் மொட்டைக்காக அடுத்த மாதம் இந்தியா வர இருப்பதாகக் கூறியிருந்தாள்.

இந்த இரண்டு மாதத்தில் சுந்தரம் தான் ஓய்ந்துப் போயிருந்தார். அவர் மனதில் எதையோ நினைத்து மறுகுகிறார் என்பது வரை மட்டும் புரிந்திருந்தது தேன்மொழிக்கு. தந்தையை உற்று கவனிக்க ஆரம்பித்திருந்தாள்.கனியிடம் இதைப் பற்றி சொல்லவில்லை.

கண்மணியிடம் கேட்டிருக்க, “சித்தப்பாக்கு வேற என்ன கவலை இருக்க போது. எல்லாம் உன்னை பத்தி தான் இருக்கும். நீயும் அவர் சொன்னதைப் பத்தி கொஞ்சம் யோசி. நீயும் இப்படியே இருந்தா, அவரும் இப்படி தான் இருப்பார். நான் ஏதாவது எடுத்துச் சொல்ல நினைச்சா கூட, ‘ எனக்குப் புரியுது கண்மணி. என்னமோ மா… என் உயிர் பிரியரதுக்குள்ள அவளுக்கு ஒரு நல்லது நடந்திரனும்னு’ சொல்றவர என்னன்னு நான் சொல்ல” என்று கூறியிருந்தாள்.

இவளும் நடந்த நிகழ்வுகளை கடக்க முயற்சிக்க தான் செய்கிறாள். ஆனால் முடியவில்லை. ஒரு நாளைக்குள் ஏதோவொன்று அவனை நினைவுப்படுத்தி விடுகிறது. இரவுகள் அனைத்தும் அவர்கள் இருவருக்குமான ரகசிய உரையாடல்களை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துகிறது. அவனை, அவனின் நினைவுகளைத் தன்னுள் இருந்து பிரிக்க இயலாது தோற்றுப்போனாள்.

அந்த வார இறுதியில், கார்த்தி அங்கு வந்தவன்.

“தாத்தா, சியாமா ஆச்சி  நாளைக்கு வீடு பால் காய்ச்சப் போறாங்களாமே! சித்தப்ஸ் என்கிட்ட சொல்லவே இல்ல” என்றான்.

“சரண் ஃப்ளைட்ல இருப்பான் போல, அவனுக்கே இன்னும் சொல்லலனு சொன்னா சியாமளா. சரண் அப்பா வீட்டு ஆளுங்க இந்த வாரம் பண்ணிடுவோம்னு சொல்லியிருக்காங்க போல. சரண் இன்னைக்கு வந்திடுவான். இனிமேல் தான் அவனுக்கே தெரிய வரும். பேசுவான்.”

“ஓஹ்!!! அதான் சித்தப்பா ரீச்ல இல்லையா” என்று கார்த்திக் பேசிக்கொண்டிருக்க, இவர்கள் பேசுவதைக் கேட்டபடியே தோசை ஊற்றி எடுத்து வந்தாள் தேன்.

“கார்த்தி உனக்கு தோசை?” என,

“வேணாம் சித்தி, சாப்பிட்டு தான் வந்தேன். இன்னைக்கு இங்க வருவங்களா தாத்தா?”

“சரணோட சித்தப்பா வருவாரு டா. கூட இருந்து பார்த்துக்கோ கார்த்தி. அவருக்கு இங்க எல்லாம் புதுசு.”

“ஓகே ஓகே” என்று முனங்கினான்.

தேன்மொழி அருகே உண்ண அமர,சுந்தரம் கடைக்கு கிளம்பினார்.

“ஹனி உன் தோஸ்த் இங்க ரிட்டர்ன் ஆகுறாரு போல?” கார்த்தி கேட்க,

“தெரியல டா… நீ சொல்லி தான் தெரியும்”

“ஹ்ம்ம் அப்படி ஸ்ட்ராங்கா இருக்கீங்க உங்க ஃப்ரெண்ட்ஷிப்ல”

அவள் பதில் சொல்லாது உண்ண, “என்ன சைலண்ட் மோட்”

ஒன்றுமில்லை என தலை ஆட்டினாள்.

“நீங்க வினோதமான ஆளுங்க தான். அவரு வந்ததும் என்னைய கழட்டி விடாம இருந்தா சரிதான்”

“அடேங்கப்பா! நீங்க ரெண்டும் பேரும் சேர்ந்து என்னைய டீல்ல விடாம இருங்க”

“நைஸ் ஜோக்! உன்ன டீல்ல விட்டுட்டு மிஸ்டர் சரண் இருப்பாரு? இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு!” என்று நொடித்தான்.

அதற்கு எந்த எதிர்வினையும் இல்லாது உண்டவள், சிறு  யோசனைக்குப் பின்,

“ரொம்ப வருஷம் ஆகிடுச்சு டா. இப்ப எப்படின்னு தெரியல.” என்றவளின் எண்ணங்கள் அவனின் இயல்பை நினைவுக்கூர்ந்தது.

கார்த்தி சொல்வது போல் தான். சரண் எப்போதும் தேன்மொழி, கனிமொழி இருவரையும் விட்டுக் கொடுத்ததே இல்லை எனலாம். சிறு வயதில் இவர்கள் இருவரும் பார்ப்பதற்கு ஒன்றுபோல தான் இருப்பார்கள். கல்லூரி சென்றபின் தான் இருவரின் ஆடை, சிகை அலங்காரம் மாறி இருந்தது. அப்படியிருக்க சுந்தரத்திற்கு அடுத்து, பள்ளியில் படிக்கும் சமயம் இருவரையும் சரியாக அடையாளம் கண்டுக்கொள்வான் சரண். கார்த்தி கூட அவனிடம் எப்படி சரியாக கூறுகிறீர்கள் என்று கேட்க. ‘ஹனி வேற கனி வேற’ என்று கூறுவான். கார்த்திக்கு தான் எதுவும் புரியாது.

கல்லூரிக்கு  என்று அவன் டெல்லி  சென்றதும், இவர்கள் இருவரிடத்திலும் பேச்சைக் குறைத்துக் கொண்டான். ஒரு கட்டத்தில் தொடர்பே இல்லாமல் போனது. மீண்டும் கனியின் திருமணத்தின் போது தான் பேசியிருந்தார்கள். அவனைப் பற்றிய பேச்சுக்கள் இவர்களிடத்தில் நடந்துகொண்டிருக்க, அவனோ,

பள்ளிப்பருவ நினைவுகளை சுமந்தபடியே மதுரையின் எல்லைக்குள் அவனின் வானூர்தியை செலுத்திக் கொண்டிருந்தான். தன் இருக்கையிலிருந்து எழுந்து வந்து, மைக்கை கையில் எடுத்து,

“அனைவருக்கும் வணக்கம். லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன். உங்க வலதுபக்கம்  பார்த்தீங்கனா மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இருக்கு. ஒன்டர்புல் ஆர்க்கிடெக்ட். பழமையான கல்சுரல் ஹெரிடேஜ். கோவிலைத் தவிர்த்து இந்த ஊருக்கு பல பெருமைகள் இருக்கு. அதோட சேர்ந்து நான் வளர்ந்த ஊரு இது. அதனால இந்த மொமென்ட் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்! ” என்று கண்மூடி சிலாகித்து, அவனின் பயணிகளுக்கு ஊரைப்பற்றி தகவல்களை மொழிந்துவிட்டு, விமானத்தை நல்லவிதமாக  தரையிறக்கினான்.

முகத்தில் புன்னகையை சுமந்துப்படி அவனின் உடமைகளுடன் வெளிவந்தான் சரண் மேத்யூ. சரியான உயரம். அவனின் தீர்க்கமான பார்வையை மறைக்கும் கருப்பு நிற கண்ணாடியுடன், விமானிகளின் உடையுடன், நீண்ட எட்டுக்களை வைத்து விமான நிலையத்தின் வாயிலை அடைய, அவனின் கைபேசி இசைத்தது.

அவனின் பெட்டியை தன் முன் கொண்டுவந்து நிறுத்தியவன், கைபேசி திரையில் ஒளிர்ந்த பெயரைப் பார்த்து சின்ன சிரிப்புடன் எடுத்து, “ஹலோ!” என்க,

“வெல்கம் ஹோம்!” என்ற கூற்றில்,

“தேங்க்ஸ்!” என்றான் முகம்கொள்ளா புன்னகையுடன்.

“உனக்கு எப்படி தெரியும்?”

“இப்போ தான் தாத்தா சொன்னாங்க. அப்படியே ஃப்ளைட் டைமிங் பார்த்தேன். சித்தப்ஸ்…. உங்க சித்தப்பா இங்க வருவாங்கலாம். நான் அவங்களுக்கு ஹெல்ப் பண்ணனுமாம்” என்று அயர்ந்தான்.

அந்தப் பக்கம் சிரிப்பு சத்தம்.

“நல்ல ஆளுக்கிட்ட கோர்த்து விட்டிருக்கீங்க என்னைய”

“ஏன் டா? நல்ல ஆளு தான?”

“கர்த்தரே!” என்று அதிர்ந்தான்.

“உன்னை ரக்ஷிப்பார்” என்றான் அவன்.

“சோதனை! யோவ் சித்தப்பு… ஒழுங்கு மரியாதையா நீயே வந்து சேரு. குடும்பமாயா அது! யப்பா! எப்படி சமாளிக்குற சித்தப்பா?”

அதற்கு பதில் சொல்லாது சிரித்தவன், “நான் வந்துடுவேன். வீட்டை க்ளீன் பண்றதுக்குச் சொல்லிடு கார்த்தி.”

“டன் டன்” என்றவன் அவனையே பார்த்துக் கொண்டிருந்த தேனைக் கண்டு, “உன் தோஸ்த் நம்பளையே வச்ச கண்ணு வாங்காம பார்க்குது!” என்றுவிட்டான்.

அவள் “ஹே!” என்று சுதாரிப்பதற்கும் அவன், “கொடு” என்று சொல்வதற்கும் சரியாக இருந்தது.

கைபேசியை அவளிடம் நீட்டினான் கார்த்திக்.

அதை வாங்கி காதில் வைக்க, இருபக்கமும் மௌனம். இவள் “ஹலோ” என்க,

அவன் “ஹனி!” என்றழைத்தான்.

“ம்ம்…எப்படியிருக்க சரண்?”

“குட். நீ?”

“ஓகே”

அடுத்து என்ன பேசுவது என்று இருவருக்கும் தெரியவில்லை மீண்டும் மௌனம் அங்கே ஆட்கொள்ள,

“நாளைக்கு பால் காய்ச்சுறோம். இனி அங்க தான்.”

” அப்பா சொன்னாங்க. அத்தைக்கு இங்க இருக்கணும்னு ஆசைனு. உனக்கு? உன் ஒர்க்?”

“இனி இந்தியாகுள்ள தான் கேட்டிருக்கேன். சோ ப்ராப்ளம் இல்ல”

“ஹ்ம்ம்…” என்று மீண்டும் அமைதி.

“சரி நேர்ல பார்ப்போம்”

“ம்ம்…” என்றவள் கார்த்தியிடம் கைபேசியைக் கொடுத்தாள்

“ஷப்பா… என்ன ஒரு அடக்கம்.” என்று முணுமுணுத்தவன்,

“சித்தப்பா….” என்க,

“கார்த்தி நான் வரேன் டா. நீ அதுக்குள்ள”

“நான் பார்த்துக்கிறேன் சித்தப்பா. வாங்க வாங்க! ஐ ஆம் வெயிட்டிங்!” என்று கூறி கைபேசியை அணைத்துவிட்டு, “அப்புறம் ஹனி! சித்தப்பா வந்துட்டாங்கனா என்னைய கையில பிடிக்க முடியாது. குட் ஓல்ட் டேஸ்! கனி சித்தியும் அடுத்த மாசம் வந்திடுவாங்க. அகைன் வீ ஃபோர். நாங்க நாலு பேரு எங்களுக்கு….” என்று பாட.

அமைதியாக சிரித்தாள் தேன்மொழி.

*******

  மறுநாள் காலை நான்கு மணி முதல் பக்கத்து வீட்டில் ஆட்களின் பேச்சுக் குரல் மற்றும் சலசலப்பு, எல்லாம் கேட்டபடியே தான் படுத்திருந்தாள் தேன்மொழி.

சரணின் குடும்பம் முதன்முதலில் இங்கு வந்ததும் அவளின் நினைவடுக்கில் வந்து போனது.

அவளின் அன்னை இறந்து இரண்டு வருடங்கள் கடந்திருக்கும். இவளும் கனியும் ஏழாம் வகுப்பில் இருந்தார்கள். அன்று நல்ல மழை. ஆகையால் வெளியில் விளையாட செல்லாமல் இருவரும் வீட்டிலிருக்க, அப்பாவின் பைக் சத்தம் கேட்டு வாசலுக்கு ஓடி வந்த தேன்மொழி கண்டது, அவளது தந்தையின் வண்டியில் தோரணையாக அமர்ந்து வந்த ஒரு பையனை. யாரு இவன்? என்ற யோசனையோடு அவள் நிற்க.

“வா சரண். உள்ள வா… அம்மாவும் அப்பாவும் வந்திடுவாங்க” என்று சொல்லிக்கொண்டு அவனையும் அழைத்து வந்தார் சுந்தரம்.

வந்தவனோ உள்ளே செல்லாமல் வாசல் படியில் நின்றுகொண்டு வெளியே தான் பார்வையைப் பதித்திருந்தான்.

அவனை திரும்பிப் பார்த்த சுந்தரம், “தம்பி டேய்!  உள்ள வா… நினைஞ்சுட்ட பாரு. தேனு துண்டு கொண்டுவந்து கொடுடா” என்று மகளிடம் கூறியவர் வேகமாக அடுப்படிக்குள் சென்று தேநீர் வைத்தார்.

துண்டுடன் வந்த தேன், அவன் முன் வந்து துண்டை நீட்ட, கணியிடம் பேசிக்கொண்டிருந்தவன் ஒரேபோல் இருக்கும் இருவரையும் மாறி மாறி பார்த்தான். பின் உற்சாகத்துடன், “நீங்க டுவின்ஸ்சா…?” என்று கேட்டிருந்தான்.

“ஆமா நான் கனிமொழி, இவ தேன்மொழி… உன் பேரு என்ன?”

“சரண் மேத்யூ… நாங்க பக்கத்துல இருக்குற வீட்டுக்குத் தான் வர போறோம்.” அவனுக்கு எப்படியாவது இந்த இரட்டையர்களுடன் நட்பு பாராட்ட வேண்டும் என்று தோன்றிற்று. அவர்கள் கேளாமலே தகவல் அளித்தான்.

இருவரும் ஒன்றும் சொல்லாமல் அவனையே பார்க்க, அவனின் பெற்றோர்கள் வந்துவிட்டார்கள்.

“அடடே! அழகு கண்ணுங்களா…” என்று இருவரின் கன்னத்தைக் கிள்ளி கொஞ்சியவாறு, “அப்பா எங்க கண்ணு?” என்று கேட்டார் சியாமளா.

இவர்கள் பேச்சு சத்தம் கேட்கவும் உள்ளிருந்து சுந்தரம் வெளியே வந்துவிட, “வாங்க… வா மா… உட்காருங்க சார்… இதோ டீ எடுத்துட்டு வரேன்” என்று சொல்ல,

“ஐயோ அண்ணா… அதெல்லாம் வேணாமுங்க” சியாமளா மறுத்தார்.

“எதுக்கு சார் இதெல்லாம்? நீங்க உட்காருங்க” என்று ஸ்டீபனும் மனைவியை ஆதரித்தார்.

“முதல்முறை வீட்டுக்கு வரீங்க. ரெடி ஆகிடுச்சு” என்றவர் வேகமாக உள்ளே சென்று தேநீரை கோப்பைகளில் மாற்றி எடுத்துவர, அவர்கள் வீட்டின் சோஃபாவில் மூவரும் குடும்பமாக அமர்ந்திருந்தார்கள்.

தேன்மொழி சியாமளாவை வைத்த கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்க. அவளை கவனித்த சரண் தன் தாயை நெருங்கி அமர்ந்து அவரின் கைகோர்த்து தோள் சாய்ந்துக்கொண்டான்.

அவளின் பார்வையில் என்ன கண்டானோ! தேன்மொழியை முறைத்துப் பார்த்தான். அப்படியே அவன் பார்வையை கனியின் பக்கம் திருப்ப அவள் தேன்மொழியின் கையைத் தட்டி அவளின் கவனத்தை தன்புறம் திருப்பினாள். அவள் எதுவோ சொல்ல, சொல்ல தேன்மொழியின் முகம் வாடியது. பின் ஏக்கமாக தன் அன்னையைக் கண்டதை கவனித்திருந்தான்.

அந்நாளின் நினைவு வர, தானாக அவளின் இதழில் புன்முறுவல் பூத்தது.

இன்றும் அத்தையை நெருங்கினால் முறைப்பானோ? என்ற கேள்வி முழைக்க. பின்னாளில் அதற்கான காரணத்தை அவன் சொல்லியதும் நினைவுக்கு வந்தது.

இவர்கள் மூவரிடையே நல்ல நட்பு உருவாக்கியதும் ஒரு நாள், “ஹனி நீ… நாங்க  ஃபர்ஸ்ட் உங்க வீட்டுக்கு வந்தப்ப என் அம்மாவை பார்த்துட்டே இருந்தியா. அம்மா கூட உன்னை கண்ணு கண்ணுனு கொஞ்சவும் எனக்கு செம கோபம் வந்துச்சு. இந்த வீட்டுக்குப் போக வேணாம்னு அடம் பிடிச்சேன். அழுதேன்.”

“அப்புறம் அப்பா சமாதானம் செஞ்சு எப்படியோ காரணத்தை தெரிஞ்சுக்கிட்டு அம்மாகிட்ட சொல்லிட்டாரு. அம்மாவும் என்கிட்ட பேசினாங்க. அது… அது… உனக்கு அம்மா இல்லையல அதான் நீ அப்படி பார்த்தனு. அப்புறம் இன்னொனும் சொன்னாங்க. நாம தான் அவங்க ரெண்டு பேருக்கும் அம்மா மாதிரி இருக்கணும். அவங்க பாவம் தானேனு.”

“நீ பீல் பண்ணாத. என்கிட்ட எதுனாலும் சொல்லு. நானும் உனக்கு அம்மா மாதிரி தான். நீங்க ரெண்டு பேரும் என்கிட்ட என்ன ஹெல்ப் வேணும்னாலும் கேளுங்க” என்று அவன் சொன்னது நினைவு வர, கூடவே கோபமும் வந்தது.

“பாதில விட்டுட்டு போய்ட்டான். பெருசா இவன் மாதிரி என்னெனவோ சொன்னான்.” என்று அவனை அர்ச்சித்தாள்.

அருகிலிருந்த அவளது கைபேசியை எடுத்து மணியைப் பார்க்க அது காலை ஐந்தரை என்று காட்டியது. கண்களை கசக்கி எழுந்தவள் அவள் வீட்டு வேலைகளை முடித்து குளித்து கிளம்பி வர, சுந்தரமும் கிளம்பியிருந்தார். இருவருமாக சரணின் வீட்டிற்குச் சென்றார்கள்.

இவர்களை கண்டதும், “வாங்க மாமா. வா ஹனி. அம்மா உள்ள கிட்சென்ல” என்று அவளுக்கு கைக் காட்டிவிட்டு சுந்தரத்துடன் பேசினான்.

அவனை கண்டுகொள்ளாது, அவன் காட்டிய திசையில் சென்றாள் தேன்மொழி.

அவளை பார்த்ததும், “கண்ணு…வா வா… பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு… மஹாலக்ஷ்மி மாதிரி இருக்க.” என்று மனதார வாழ்த்தினார் சியாமளா. அங்கே பாலும் பொங்கிவிட, “அம்மா, சித்தி” என்று வந்தான் சரண்.

“இதோ, ஆச்சு டா… ஸ்டெபி கிளாஸ் எடு” என்று அவனின் சித்தி சொல்ல,

“மா… நீங்க வாங்க. கொஞ்ச நேரம் உட்காருங்க. இங்க நான் பார்த்துக்கிறேன்” என்று அவரை கைத்தாங்கலாக அழைத்துச் சென்றான்.

ட்ரேவில் இருந்த தம்பிளர்களுடன் தேன் வெளியே வர, “ஹே!! குடு… நீ எடுத்துக்கோ” என்று அவள் கையில் ஒரு தம்பிளரைக் கொடுத்துவிட்டு சரண் மற்றவர்களுக்குக் கொடுக்கச் சென்றான்.

கையில் இருந்த தம்பளருடன் பார்வை சுழற்றியவளின் கண்ணில்,  அமர்ந்திருந்த சியாமளா பட, அவர் அருகில் சென்றாள்.

“அத்தை இப்போ உடம்பு பரவாயில்லையா?” என்று விசாரித்தாள்.

“ஹ்ம்ம்… நல்லா இருக்கேன் கண்ணு. இங்க வந்திட்டேன்ல இனி நல்லாயிடுவேன்” என்று நம்பிக்கையாகப் பேசினார்.

ஆனாலும் அவரின் குரலில் ஏதோவொரு சோகம் இருப்பதைப் போன்று தெரிய, “நிஜமாவா அத்தை?ஆனா ஏதோவொன்னு குறையுதே! என்ன விஷயம்?”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல கண்ணு” என்று அவர் சொல்ல, “அம்மா!” என்று வந்திருந்தான் சரண். ‘ இவனுக்கு பொறுக்காதே!’ என்று அவனை மனதில் கடிந்து அமைதியாகிவிட்டாள் தேன்.

“அம்மா… மாமா வந்திருக்காங்க.” என்றவன் அவளை பார்க்க, அவள் முறைப்பது தெரிந்தது, புருவம் சுருக்கி என்னவென்பதாக இவனும் பார்த்திட, அவளோ முகத்தை திருப்பிக்கொண்டாள். அவளின் முகத்திருப்பலில் புன்னகை பூக்க, சின்ன சிரிப்புடன் இவனும் முகம் திருப்பிக் கொண்டான்.

அவள் பார்வையை சுத்தவிட, அவளுக்கு எதிரில் இருந்த சரண், அவனின் முன் இருந்த அழகிய பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தான். அவளும் அவனிடம் வளவளத்துக் கொண்டிருந்தாள். மேலும் பார்வையைச் சுழற்ற, சுந்தரம் சாப்பாட்டுடன் வந்தார். நேராக அவரிடம் விரைந்தாள் பெண்.

அவருக்கு உதவியவள், சாப்பாட்டை திறந்து வைக்க, வந்துவிட்டான் அங்கே.

“ஹனி! இருக்கட்டும்…” என்று சொல்ல, வெடுக்கென அவனை பார்த்தவள், “இது நம்ம வீடு தான் சரண்!” என்றிருந்தாள். அதில் ‘நான் ஒன்னும் கெஸ்ட் இல்ல ‘ என்ற செய்தி இருந்தது.

அவளை ஆழ்ந்துப் பார்த்தவன், தலையசைத்து, “சித்தியையும் ஸ்டெபியையும் ஹெல்ப்புக்கு அனுப்புறேன்” என்று சொன்னவன், அதன் பின் அங்கே செல்லவில்லை.

வந்திருந்தவர்களின் உணவு முழுவதும் அவன் இல்லாமலே கவனித்துக் கொண்டார்கள் மற்ற மூவரும். அந்த இடைவெளியில் ஸ்டெஃபியுடன் நன்றாக பேசியிருந்தாள் தேன்மொழி. கல்லூரி செல்லும் ஸ்டெபியும் அவள் பேராசிரியை என்று தெரிந்ததும், தன்போல ஒரு மரியாதை வந்துவிட, நல்ல மாணவியாக அவள் சொல்வதை செய்துக் கொண்டிருந்தாள்.

அவளின் அன்னை கூட, “தேன்மொழி, என் பொண்ணு இவ்ளோ பொறுப்பா இருக்கிறது எனக்கே ஆச்சரியம் தான் போ!” என்று கிண்டல் செய்திருந்தார்.

சரண் அங்கு வந்தவன், “சித்தி இவங்களுக்கு சும்மா தட்டுல வச்சுக் கொடுங்க” என்றான்.

“நீயும் அப்படியே சாப்பிடு சரண். உனக்கும் வைக்கிறேன்.” என்றவர் தட்டில் எடுத்து வைத்து நீட்ட. அதைப் பெற்றுக்கொண்டு அவளிடம் கொடுத்தான்.

“தேன்மொழி நீயும் சாப்பிடு மா” என்றவர், “சரண் இந்தா நீயும் சாப்பிடு. ஸ்டெபி இந்தா, உனக்கும் , தேனுக்கும்” என்று அனைவருக்கும் பரிமாறினார் .

சாப்பிடும் சாக்கில் “சரண்… ஒரே ஒரு செல்ஃபி” என்று சரணுடன் இருந்த பெண் ஃபோட்டோ எடுக்க முயல,

“ப்ரோ! வெறி ராங் ப்ரோ!” என்று ஸ்டெஃபி எச்சரித்தாள்.

சுதாரித்த சரண், அவள் கையிலிருந்த கைபேசியை தடுத்து, “வேணாமே! யூ நோ மீ!!” என்று அழகாக மறுத்துவிட்டு , ஸ்டெஃபியை பார்த்து கண் சிமிட்டினான்.

என்ன நடக்கிறது என்று புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் தேன்மொழி.