மதுரை மாவட்டத்தின் மேலூர் ஊராட்சியின் அமைந்துள்ள அரிட்டாபட்டி கிராமத்தைப் பூர்விகமாக கொண்டவர் தான் சுந்தரம். அவர் அதே ஊரைச் சேர்ந்த அய்யாகண்ணு, தாயம்மாள் அவர்களின் கடைசி புதல்வி வேதமீனாட்சியை மணந்துக் கொண்டார். சுந்தரத்தின் குடும்பம் விவசாயத்தை நம்பி இருந்தது. சுந்தரம் தலையெடுத்த பின் வியாபாரத்தில் இறங்க அது மளிகைக் கடையாக உருவானது. இப்போது அக்கிராமத்தில் புகழ் பெற்ற சூப்பர் மார்கெட்டாக வளர்ந்து நிற்கின்றது.
வேதமீனாக்ஷி சுந்தரத்தின் அத்தை மகள் தான். வேதாவுடன் பிறந்தவர்கள் நான்கு ஆண்பிள்ளைகள். வேதா பிறக்கும் போது அவரின் மூத்த அண்ணன் வன்னியரசனுக்குப் பதினெட்டு வயது. அவளின் அன்னைக்கு நாற்பத்தி இரண்டு வயது. காலம் தாழ்ந்து பிறந்த மகள். பெரிய பையன்களாக இருந்த மற்ற பிள்ளைகள் முன் வரவே சங்கடப்படுவார். ஆனால் அண்ணன்கள் நால்வருக்கும் வேதா என்றால் பிரியம். வருடங்கள் கடக்க வன்னியரசனுக்கும், தூரத்து உறவான வள்ளிக்கும் திருமணமாகி அவர்களுக்கு ஒற்றை பிள்ளை வேணுகோபால் பிறந்து, வேதாவும் வேணுவும் ஒன்றாகவே வளர்ந்தார்கள். மற்ற அண்ணன்மார்கள் படித்து வெளியூர் சென்று வேலைப்பார்க்க, அவர்களின் குடும்பம் அங்கே என்றானது. அவளின் நான்காவது அண்ணன் வெங்கடேசனின் திருமணம் முடியும் போது அவள் கல்லூரியில் சேர்ந்திருந்தாள். வேதா படித்து முடிக்கும் சமயத்தில் தாயம்மாள் இறைவனடி சேர, அடுத்த ஓராண்டுக்குள் அய்யாகண்ணுவும் இறைவனடி சேர்ந்துவிட்டார்.
வன்னியரசனுக்கு வேதாவை வெளியே எங்கும் அனுப்ப மனம் இல்லாது உள்ளூரிலேயே சுந்தரத்துக்கு கட்டிக் கொடுத்தார். வேதாவை அவரின் மூத்த மகளாக தான் பாவித்தார். வேணுவும் அவளும் அக்கா தம்பி போல தான் வளர்ந்தார்கள். வேதாவின் பிரசவத்தைப் பார்த்துக்கொண்டது எல்லாம் வள்ளி தான். அவளுக்கு இரெட்டை பெண் பிள்ளைகள் பிறக்க, குடும்பமே சந்தோஷத்தில் திளைத்தது. தேன்மொழி, கனிமொழிக்கு ஐந்து வயது இருக்கும்போது வேணுகோபால் கண்மணியின் திருமணம் நடந்தேறியது. சுந்தரமும் வேதா குடும்பத்துடன் நல்ல இணக்கத்தில் இருந்தார். கண்மணி அவரின் நண்பனின் உறவு தான்.
வேதாவின் திடீர் மறைவு மொத்தக் குடும்பத்தையும் உலுக்கியது. சாதாரண காய்ச்சலாகத் தொடங்கியது ஒரு வாரத்திலே அவரின் உயிரைப் பறித்துவிட்டது.இன்றுவரை வேதாவுக்கு எதனால் காய்ச்சல் வந்தது எப்படி அவர் இறந்தார் என்று யாருக்கும் தெரியாது. மருத்துவமனையிலும் அது விஷக் காய்ச்சல் என்று மட்டுமே கூறியிருந்தார்கள். பத்து வயதில் தாயை இழந்த பிள்ளைகளை வள்ளி பார்த்துக்கொண்டார். கூடவே கண்மணியும் அவர்களை கவனித்துக் கொண்டாள். கண்மணியிடம் அந்தச் சின்ன தங்கைகள் அக்கா என்ற பாசத்தோடு ஒட்டிக்கொண்டார்கள். கண்மணியின் மகன் கார்த்தி என்றால் இருவருக்கும் கொள்ளை ஆசை. தேன்மொழி, கனிமொழி, கார்த்தி மூவரும் தான் அங்கே இருக்கும் பிள்ளைகள், மற்றவர்கள் பள்ளி விடுமுறைக்கு தவறாது வந்துவிடுவார்கள். பிள்ளைகளின் வயது கூட கூட, அனைவரின் சந்திப்பு இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை , ஒருவர் குடும்பத்துடன் வரும்போது மற்றொரு குடும்பம் வராது போனது. ஆதலால், தேன்மொழி, கனிமொழி, கார்த்தி மூவருக்கும் கூடுதல் ஒற்றுதல் உண்டு.
வேதாவின் மறைவின் பின் சுந்தரத்தின் மளிகைக் கடை ‘ வேதா ஸ்டோர்ஸ்’ என்று உருமாறியது. வேணுகோபால் அரபு நாட்டிற்குச் சென்று வேலைப் பார்க்க, கண்மணி இங்கு அனைத்தையும் அவளின் பொறுப்பாக்கிக் கொண்டாள். கூடவே சுந்தரமும் துணை நின்றார். வன்னியரசனும் தங்களின் தோட்டத்தில் கண்மணியின் உதவியோடு நல்ல விளைச்சல் கண்டார். கனிமொழி விரைவில் அண்ணனயின் மறைவிலிருந்து மீண்டிருந்தாள். தேன்மொழிக்கு காலம் பிடித்தது. அவ்வப்போது அன்னை நினைவு வர, அவர்கள் வீட்டின் பின் இருக்கும் கிணற்றின் அருகே இருக்கும் திண்டில் சென்று அமர்ந்துவிடுவாள். இதை மட்டும் இன்று வரை யாராலும் மாற்ற முடியவில்லை.
மகள்களின் நல்வாழ்வே பிரதானமானது என்று சுந்தரம் மீத காலத்தைக் கடந்தார். கனிமொழி பொறியியல் படிக்க விரும்ப, அவளை சென்னையில் பிரபலமான கல்லூரில் சேர்ந்துவிட்டார். தேன்மொழிக்கு கணிதம் என்றால் விருப்பம். அந்த விருப்பமும் அவளின் பள்ளிக் காலத்தின் நண்பனால் உருவானது. அவளுக்கு இந்த ஊரை விட்டும், தந்தையைப் பிரிந்தும் இருக்க விருப்பமில்லை. ஆகையால் அவள் மதுரையிலே எம்.எஸ்.சி மேத்ஸ் வரை படித்தாள். கனிமொழிக்கு பெங்களுரில் வேலைக் கிடைக்க, அவள் அங்குத் தங்கி வேலை செய்கிறாள். தேன்மொழி தனியார் கல்லூரி ஒன்றில் வேலை செய்துக் கொண்டே தனது பி. எச்.டி படிப்பையும் முடித்து விட்டாள். தற்போது அவள் மதுரையில் இருக்கும் புகழ்பெற்ற கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றுகிறாள். கார்த்தி கோயம்பத்தூரில் பொறியியல் படிப்பை முடித்து, ஐ டியில் சென்னையில் ஒரு வருடம் வேலை செய்தவன், அங்கு வேலைச் செய்ய பிடிக்காது ஊருக்கே வந்துவிட்டான். வந்தவன் அரசியலில் இறங்க, அவனின் எதிர்காலம் குறித்துப் பயந்து அவனை மேற்படிப்பிற்காக பிரான்சிற்கு அனுப்பிவிட்டாள் கண்மணி. கார்த்தி இப்போது அங்கு எம் பி ஏ படித்துக் கொண்டிருகின்றான். அவன் அங்கு செல்வதற்கு மற்றொரு காரணம் அவன் காதலிக்கும் பெண் தர்ஷனா. அவளுக்கு ஐரோப்பில் செட்டில் ஆக வேண்டும் என்பது கனவு. அதனால் இவனின் விருப்பத்தைத் துறந்து அங்குப் பறந்துவிட்டான்.
கண்மணி, வேணுகோபால் அனுப்பிய பணத்தில் ஊரிலே விளைநிலங்களை வாங்கியிருந்தார். இப்போது அதில் இயற்கை முறையில் விவசாயம் செய்து, சில உணவு பொருட்களை தயாரித்தும் வருகிறார். ஒரு வருடத்திற்கு முன் வள்ளி இறந்திருக்க, தனித்து இருக்கும் வன்னியரசனுக்குத் துணையாக வேணுகோபால் இந்தியா வந்துவிட்டார். முன் போல அலைய முடியாத வன்னியரசனும் மகனுக்கு ஆட்களையும், தொழிலையும் பழக்கிக் கொண்டிருந்தார்.
கண்மணிக்கு என்றே வேதா ஸ்டோரில் தனிப் பிரிவை உருவாக்கி கொடுத்திருந்தார் சுந்தரம். அவளின் தயாரிப்பு ‘வி கே புரொடக்ட்ஸ்’ பிரத்தியேகமாக அங்கு கிடைக்கும். அதுபோக இந்திய அளவில் அவளது பொருட்களை ஏற்றுமதி செய்துக் கொண்டிருக்கிறாள். அடுத்து அவளின் இலக்கு உலகளவில் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பதே. அதற்காகவும் தான் மகனை வெளிநாட்டிற்குப் படிக்க அனுப்பினாள் கண்மணி.