“ஆமாப்பா… மதியம் சாப்பிட வீட்டுக்கு வந்துடுங்க” என்று அடுப்படியிலிருந்து அவள் குரல் கொடுக்க,
“சரி டா… சரணோட சித்தப்பா வருவாரு அவர்கிட்ட அவங்க வீட்டு சாவி கொடுத்திடு”
“ம்ம்…சியாமளா அத்தை எப்போ வராங்கப்பா?”
“அடுத்த மாசம்னு நினைக்கிறேன். அதுக்கு முன்னாடி ஒருமுறை சரண் வருவான். வீட்ல கொஞ்சம் வேலை பார்க்க சொல்லிருக்கான்”
வாசலுக்கு வந்தவள், “கரெக்ட் டைமுக்கு வந்துடுங்க பா… உங்களுக்காக வெயிட் பண்ணுவேன்” சுந்தரம் கூறியது எல்லாம் காற்றோடு கரைந்துபோனது. அவள் அவள்போக்கில் பேசினாள்.
இது சுந்தரத்திற்கு பழகியிருந்தது. பாதி நேரம் அவள் சிந்தனை இங்கே இருக்காது. “சரி டா… பூட்டிக்கோ. பசங்க வந்ததும் மேல போ” என்று சொல்லி கிளம்பிச் சென்றார் சுந்தரம்.
இந்த ஒரு வருடம் என்ன செய்கிறோம், எப்படி செய்கிறோம் என்று எந்தவித அட்டவணையும் இன்றி, காலம் போகும் போக்கில் செல்கிறாள். அவளைப் போலவே தான் சுந்தரமும். இருவரும் தான் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக இருக்கின்றனர்.
அன்று ருத்ரனின் இறப்பு செய்தி வந்தடைந்த போது தேன்மொழியின் உலகம் சுழல்வதை நிறுத்தியிருந்தது.அவள் மும்பை செல்லும்வரை அந்தச் செய்தியை நம்பவில்லை.
சுந்தரத்திற்கோ நாம் முதலில் மறுத்து சொன்ன காரணத்தினால் தான் இப்போது மகளுக்கு இந்த நிலையோ? முதலே அனைத்தும் சரியாக வரும் என்று நம்பிக்கையுடன் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்காதோ? என்ற பரிதவிப்பு. மனிதனின் எண்ணங்களுக்கு வலிமை உண்டே! என்று எங்கோ படித்தது வேறு அவரை குற்றவுனர்வுக்குள்ளாகியது.
மும்பையில் அவனின் இல்லத்திற்கு செல்கிறாள் முதல் முறையாக, அதுவும் அவனின் பூத உடலை காண்பதற்காக. இப்படி ஒரு சூழ்நிலையிலா கடவுள் தன்னை வைக்க வேண்டும். அலைபேசியில் பேசும்போதெல்லாம் சொல்வானே, “நம்ம மும்பை போனதும் உன்னை பீச் கூட்டிட்டு போறேன். தாஜ் ஹோட்டல் போவோம். வீட்டின் அருகில் இருக்கும் வடாபாவ் சாப்பிடுவோம்” என்று எத்தனை கனவுகள். அனைத்தும் கானல்நீர் போல மறைந்துவிட்டதே!
அவளை கண்டதும் தேவிகா, “உன்கூட சேர்ந்து வாழனும்னு என் மகன் ரொம்ப ஆசைப்பட்டான். அதுக்குள்ள கடவுள் அவன் உயிரை பறிச்சுட்டாரே!” என்று கதறியது எல்லாம் சேர்ந்து அவளின் நெஞ்சை அடைத்தது. மூச்சு விட முடியாமல் அங்கேயே மயங்கி சரிந்திருந்தாள்.
அதீத அதிர்ச்சி அவளை செயலிழக்க செய்திருந்தது. சுந்தரம் தவித்துப்போய்விட்டார். கனியும் இல்லாமல், கூட கண்மணி, வேணுகோபால் என்று யாரும் இல்லாமல், மகளும் படுக்கையில் இருக்க நிர்க்கதியாகினார். அவர் முற்றிலும் உடைந்து போன நாட்கள்.
வெங்கடேசன் மற்றும் மாமனாரின் உதவியுடன் மூன்று நாட்கள் மருத்துவமனையில் அவளுக்குச் சிகிச்சை அளித்து ஊருக்குக் கூட்டி வந்திருந்தார்.
வீட்டிற்கு வந்தும் தேன்மொழி ஒரு வார்த்தை கூட பேசிவிடவில்லை. மொத்தத்தையும் தொலைத்தது போல எங்கோ வெறித்துக் கொண்டிருந்தாள். மகளை இவ்வாறு பார்க்க பார்க்க சுந்தரத்தின் உடல் நிலை கொஞ்சம் மோசமாகியது.
கண்மணி அடுத்த ஒரு வாரத்தில் வந்து சேர்ந்திருக்க. முடியாமல் இருந்த சித்தப்பாவையும், இவளையும் கவனித்துக் கொண்டாள்.
ருத்ரன் மறைவு அவர்கள் குடும்பத்திற்கு மிக பெரிய இழப்பு. எல்லாரும் ஒருவித மன அழுத்தத்தில் தான் இருந்தார்கள். கனிமொழிக்கும் எதுவும் ஓடவில்லை. நிலன் அவளின் நலன் கருதி பெரிதும் அதைப்பற்றி பேசாது. அவனே கனியின் வீட்டினருக்கும் இவளுக்குமான பாலமாக இருந்தான். கண்மணியின் கண்டிப்பு கனிமொழியிடத்தில் நன்றாக வேலை செய்தது. அவள் சற்று தேறி வந்திருக்க, அவளும் கண்மணியும் சுந்தரத்தைத் தேற்றினார்கள்.
“சித்தப்பா நீங்களும் இப்படி இருந்தா தேனு எப்படி மீண்டு வருவா? எல்லாம் விதிப்படி தான் நடக்கும். நம்ம தேனுக்கு நல்ல வாழ்க்கை அமையும். நீங்க வெசனப்படாதீங்க. மொதல்ல தேனை சுயத்துக்குக் கொண்டுவருவோம். இதோட அவ வாழ்க்கை முடிஞ்சிட போகுதா? அடுத்து என்னன்னு பார்ப்போம். அதுக்கு நீங்க தைரியமா இருக்கணும். உங்க தைரியம் தான் அவளுக்கு ஆதாரம்.” என்று என்னென்னவோ பேசி அவரை தேற்றியிருந்தார்கள்.
விஷயத்தை அறிந்த தேன்மொழியின் தோழி பிரியா, வீட்டிற்கே வந்துவிட்டாள். அவள் வந்துச் சென்ற பின்பு தான் தேன்மொழி நிஜத்தை உணரத் தொடங்கியிருந்தாள்.
அவன் இல்லை என்ற உண்மையை மெது மெதுவாக புரிந்துக்கொண்டாள். எத்தனை எத்தனை ஆசைகள் எல்லாம் நிராசையாகிற்றே. அப்படி என்ன பாவம் செய்துவிட்டோம். அவன் நல்லவன் தானே. எதற்காக இப்படி? என்று சிந்திக்காமலும் இருக்க முடியவில்லை. நாட்டிற்காக உயிரைத் தந்திருக்கிறான். வீரமரணம். இதை அவன் விரும்பித்தான் ஏற்றிருப்பான்.
ஆனால்… ஆனால்… தங்களுக்கு திருமணம் முடிந்திருந்தால்? அவனோடு ஒரு நாளாவது வாழ்ந்திருந்தால்? அது போதுமே! அவன் விரும்பினானே! அவன் கட்டிப்பிடித்த பொழுதுகள் எல்லாம் அவளை இம்சித்தது. உன்னை விடேன் எனும் விதமாக அத்தனை இறுக்கமான அணைப்புகள். அவனின் ஆசையும் நிறைவேறவில்லையே. வருத்தம். துக்கம். கோபம். என்று மனதில் பாரம் நிரந்தரமாக குடிக்கொண்டுவிட்டது. மொத்தத்தில் அவள் அவளாகவே இல்லை.
பிரியா வர போக என்று இருக்க, சுந்தரத்தைக் காட்டி கண்மணியும் தேனை மீட்டுக்கொண்டிருக்க, இறுதியில் கனிமொழிக்கு பிரசவ சிக்கல் என்று தெரிய வர தேன்மொழி தன்னை ஓரளவுக்கு நடப்பிற்குக் கொண்டுவந்திருந்தாள்.
பிரசவம் வரை கனிமொழி பெட் ரெஸ்டில் இருக்க வேண்டும் என்று டாக்டர் சொல்லியிருக்க, வளைகாப்பை ஏழாம் மாத நடத்த முடிவு செய்தார்கள். அதன் பொருட்டு தேன்மொழியும் சுந்தரமும் ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றிருக்க, எட்டாம் மாதமே அறுவை சிகிச்சையில் குழந்தை பிறந்திருந்தது. ஆண் குழந்தை.
குழந்தையின் முகம் பார்த்த பின் தான் தேன்மொழி தன்னை முழுவதுமாய் மீட்டுக் கொண்டாள். குழந்தையிடம் தான் அவளின் பேச்சுக்கள் அதிகமாக இருந்தது. குழந்தைக்கு இரு மாதங்கள் ஆகும் வரை அங்கே அவளுடன் இருந்தவள் தாயகம் திரும்பியிருந்தாள்.
கல்லூரிக்கு ஆறு மாத விடுப்பு சொல்லியிருந்தவள். தாயகம் திரும்பியதும் மீண்டும் கல்லூரிக்குச் செல்ல ஆரம்பித்திருந்தாள். இப்படியாக கடந்த ஒருவருடம் என்ன செய்தோம் ஏது செய்தோம் என்று அறியாமல் கடந்திருந்தது.
முழுதாய்த் தனக்குள்ளே அவளை சுருக்கிக் கொண்டாள். வீட்டில் யாரிடமும் தன் இழப்பைப்\ பற்றி பேச முடியவில்லை, தோழியிடமும் முழுவதுமாய் மனம் திறந்து பேச இயலவில்லை. மனதுக்குள்ளே புழுங்கிக் கொண்டாள். அன்றிலிருந்து இன்று வரை அவளின் இரவு தூக்கம் என்பது எங்கோ சென்றிருந்தது.
அவளை ஓரளவிற்கு கவனித்து பேசியது கண்மணி தன். அவள் மட்டுமே அவளின் வேதனையை முழுவதுமாய் அறிந்திருந்தாள். எனினும் அவளை அதிலே தென்கவிடாமல், சுந்தரத்தைக் காட்டியே இயல்பிற்கு கொண்டுவர பார்த்தாள் கண்மணி. தேனிற்கும்புரிய தான் செய்தது. அதனாலே அவள் இயல்பாய் இருப்பது போன்று காட்டிக்கொள்ள கற்றுக்கொண்டாள்.
சுந்தரம் சென்ற சில விநாடிகளில் வந்துவிட்டான் கார்த்திக். கண்மணியின் மகன். அவன் சொன்னது போலவே படிப்பை முடித்தவுடன் ஊர் வந்துவிட்டான். பூட்டியிருந்த தாத்தாவின் வீட்டைப் பார்த்து தனது பைக்கை நிறுத்தி அழைப்பு மணி அடித்தான்.
அப்போது தான் கதவை அடைத்துச் சென்றவள், தந்தை தான் மீண்டும் வந்திருக்கிறாரோ என்று கதவை திறக்க, “என்ன சித்தி… என்ன பண்ற?”
“ஓ!! நீட் பிரிபரேஷன்… சரி சரி… சித்தி என்ன முடிவு பண்ணிருக்க?”
அவனை மார்க்கமாக பார்த்தவள், “என்ன முடிவு?” என்று கேட்டாள் புரியாது.
“அட! ஹனி பனி… யாருக்கு ஓட்டு போடப் போற?”
“இன்னும் முடிவு பண்ணல”
“என்னது முடிவு பண்ணலையா?”
அவனின் அதிர்வில் சிரித்தவள், “ஊருக்கு வந்து ஒரு வாரம் தான் ஆகுது. உனக்கு என்ன தெரியும்னு நீ கட்சி கொடியை தூக்கிட்டு தெருத்தெருவா சுத்துற? அக்கா புலம்பி தவிக்கிறாங்க. இதுக்காகவா இவனை பிரான்சு அனுப்பி படிக்கவச்சேனு, ஏன்டா இப்படி பண்ற?”
“சித்தி…. லிசன்!!! அது படிப்பு! வேற டிபார்ட்மெண்ட். இது சேவை! வேற டிபார்ட்மெண்ட். நான் மட்டும் இந்த ரெண்டு வருஷம் இங்கிருந்திருந்தேனு வை, இந்த தொகுதில வேட்பாளரா நான் நின்றுப்பேன்”
“அடேய்!!! உதாரு விடாத. உன்னைய தான் கூப்பிட்டுயிருபானுக, நம்புற மாதிரியா இருக்கு? உங்க தலைவரு சொல்ற கதைப் போல நல்லா கதை சொல்ற மேன்”
சிறு புன்னகையுடன், “கதை இல்ல சித்தி இது நிஜம், சத்தியம். நான் மாணவர் பாசறையை தாண்டி எப்பவோ வந்துட்டேன். எனக்கு நல்ல பேரு கூட இருந்துச்சு. ரெண்டு வருசத்துக்கு முன்னாடி நடந்த மாநாடுல கூட தலைவர் முன்ன நின்னு பேசிருக்கேன். தலைவர் என்ன என்னமா பாராட்டினாறு தெரியுமா?” என்று அவன் போக்கில் பேசிக்கொண்டே போக,
“ஆமா ஆமா… அப்படியே உன்னை நிப்பாட்டி இருந்தாலும் இந்த தொகுதியைக் கொடுத்திருக்க மாட்டாரு உங்க தலைவரு! ஏதோ கொள்கை, கட்சி விதிமுறைனு உன்னைய யாருனே தெரியாத இடத்துல நிப்பாட்டி இருப்பாரு. இங்க ஒருத்தர் மூச்சுவிடாம கதறு கதறுன்னு கதறுராறு பாரு. உன் நிலைமையும் அதுவா தான் இருந்திருக்கும்”
“என்ன சித்தி இப்படி சொல்லிபுட்ட.உங்களுக்கு எங்க செயல் திட்டம் புரியல”
“புரியுற மாதிரி தான் சொல்லுறது!” என்று அவனை சீண்டினாள். ஒரு வருடம் சென்று இதோ இப்போது இவனிடம் தான் பழைய தேன்மொழியாக பேசுகிறாள். இந்த ஒரு வருடத்தில் மற்றவர்களிடம் இவள் அமர்ந்து பேசுவதே குறைந்து போயிருந்தது. இதோ இவன் வந்ததும், விடாமல் அவளை வம்பு செய்து, அவனிடம் மட்டுமாவது பேச வைத்திருந்தான்.
“இப்ப வந்திருக்கவரு எல்லாம் சும்மா. இந்த கூட்டம் எல்லாம் ஓட்டா மாறாது” என்று அதிமேதாவித்தனமாக பேசினான்.
“அச்சோ! உனக்கு நடப்பு தெரியல. கண்மணி அக்கா ஓட்டு கூட அந்த நடிகருக்கு தான். அது மட்டுமா இந்த தெருவே அவருக்கு தான் ஓட்டு போட போறதா பேச்சு”
“சித்தி சித்தி… எலெக்ஷன் வரட்டும் அப்புறம் பாருங்க. இந்த ஃபேன்ஸ் கூட்டமெல்லாம் வாய்க்குச் சும்மா பேசுவாங்க” என்று அவன் மீண்டும் வாதாடினான். சுந்தரம் கிளம்பியதைப் பார்த்ததும் தான் இங்கு வந்தான். தேன்மொழியைத் தனியாக விடக் கூடாதென்று அவனுக்குக் கட்டளை. ஆகவே இங்கு வந்து, இல்லாதது பொல்லாதது எல்லாம் பேசினான். அவளை வேறு எதுவும் சிந்திக்கவிடாமல் அவன் பேச்சிற்கு அவளை மடைமாற்றியிருந்தான்.
“தேனு அக்கா?” என்று வெளியில் சத்தம் கேட்க,
“பசங்க வந்துட்டாங்க… நான் மேல போறேன்.நீ ஃப்ரீ தானே? சியாமளா அத்தை வீட்டுல இருந்து வருவாங்களாம். சாவியை கொடுத்திடு” என்று சொல்லிவிட்டு வகுப்பை எடுக்கச் சென்றுவிட்டாள்.
அவள் சென்ற பத்து நிமிடத்தில் சரணின் சித்தப்பா வந்துவிட்டார். அலைபேசியில் சரணும் இருந்தான்.
கைபேசியை வாங்கியவன், “சித்தப்ஸ்!!! ம்ம்…. ஓகே டன்” என்றவன் கைபேசியை அந்தப் பெரியவரிடமே நீட்ட, அவர் “ஹலோ” என்க. அதற்கு முன்னே அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.
“வச்சுட்டாங்க… இருங்க சாவி எடுத்துட்டு வரேன்” என்று உள்ளே சென்றவன் ஐந்து நிமிடங்களில் வெளியே வந்தான்.
“சாவி! இதை நீங்களே வச்சிருப்பீங்களாம். சித்தப்பா உங்ககிட்ட இருந்து வாங்கிப்பாங்களாம்” என்று கூறினான்.
அவரும் தலை அசைப்புடன் சென்றுவிட, வீட்டை சாத்திவிட்டு. மேலே ஏறி, “சித்தி!” என்றழைத்தான்.
அவள் பார்க்கவும், “சாவி கொடுத்தாச்சு… சும்மா சாத்திவிட்டிருக்கேன். நான் கிளம்புறேன்” என்று சொல்லிக்கொண்டு புறப்பட்டான்.
இனி தேன்மொழியின் வாழ்வில் சுவாரசியத்திற்கு பஞ்சம் இருக்காது. இந்த பிரபஞ்சம் அவளுக்கு இன்னொரு பாதையைக் காட்டவிருக்கிறது.