மாதங்கள் உருண்டோடியிருக்க எட்டு மாதங்கள் கடந்திருந்தது. எல்லையில் பதற்றம் நிலவுவதால், ருத்ரனால் வர இயலவில்லை. எண்ணி ஐந்து முறை தான் தேன்மொழியோடு பேசியிருப்பான் இந்த எட்டு மாதத்தில். அவன் பேசிய நிமிடங்கள் யாவையும் பொக்கிஷமாய்த் தன் மனதினுள் செதுக்கிக்கொண்டாள் தேன்மொழி. பேச்சுக்கள் அதிகம் இல்லையென்றாலும், அவனுடனான நெருக்கம் அதிகமாகியிருந்தது.
ஆயிரமாயிரம் கற்பனை பொழுதுகள் அவளுக்குள். எல்லாம் அவனுடன். நிஜத்தில் இல்லையென்றாலும் அவனின் சின்ன சின்ன வார்த்தைகளும், செய்கையும் ஒன்றுசேர்ந்து அவளது கற்பனை உலகத்தில் முழுதாய் நிரம்பியிருந்தான். இரவுகள் அனைத்தும் அவனின் எண்ணங்களாகி போனது. நாட்கள் கடக்க கடக்க கற்பனைகள் விரிந்து விருட்சமாகியிருந்தது. காலநேரமின்றி அவனின் நினைப்பு அவளை ஆட்கொள்ள தொடங்கியிருந்தது. மேலும் இரு தினங்களுக்கு முன் அவனிடம் பேசிய பேச்சுக்கள் பெண்ணவளை வெட்கம் கொள்ள செய்தது.
அன்றைய இரவு,
“தேனு”
“சொல்லுங்க அப்பா… தாத்தா சாப்பிட்டு படுத்துட்டாங்க.நீங்க ஏன் லேட்?”
“அது மா.. கொஞ்சம் கணக்கு பார்க்க வேண்டியது இருந்துச்சு. அதான். நீ சாப்டியா?”
“ஹ்ம்ம்… ஆச்சு பா… தாத்தா கூடவே சாப்பிட்டேன். வாங்க உட்காருங்க” என்றவள் சுந்தரத்திற்கு தட்டில் இட்லியை எடுத்து வைத்தாள்.
“கனி பேசினா, கணக்கு பார்த்திட்டு இருந்தேன் கவனிக்கல. நீ பேசுனியா?”
“ம்ம் பேசிட்டேன் ப்பா… இப்போ கொஞ்சம் பரவாலயாம். டாக்டர் இந்த நேரத்துல டிராவல் பண்ண வேணாம்னு சொல்லிட்டாங்க போல, அதனால நிலன் மச்சான் வீட்டுல இருந்து போறாங்களாம் இப்போ. டெலிவரி அப்போ நமக்கு டிக்கெட் போடுறதா சொன்னா. கண்மணி அக்காவும் வந்திடுவாங்க. நாம ஒரு மாசம் அங்க தங்கிட்டு வரலாம்னு சொன்னாப்பா”
“மாப்பிளைக்கிட்ட அதுக்கு என்ன பண்ணனும்னு கேட்டியா தேனு?”
“இல்ல தேனு நான் சமாளிச்சுப்பேன். மாமா இருக்காங்க. இன்னைக்கு கொஞ்சம் சரக்கு வந்துச்சு, அதை முடிச்சிட்டு கணக்கு பார்க்க லேட் ஆகிடுச்சு அவ்ளோ தான். இந்த வெற்றி பையன் உறவுக்கார கல்யாணத்துக்கு போயிருக்கான். அவன் இருந்தா அவனே பாத்துப்பான். பெருசா ஒண்ணுமில்ல.” என்றவர் உண்டுமுடித்து, தனக்கான கட்டிலை கூடத்தில் போட்டு உறங்க ஆயத்தமானார்.
அனைத்தையும் ஒதுங்க வைத்தவள் அவளின் அறைக்குள் நுழைந்து வழமைப்போல அடுத்தநாளிற்கு தேவையான பாடக்குறிப்புகளை எடுத்துவிட்டு அவளின் நாட்குறிப்புடன் கட்டிலில் அமர்ந்தாள். மெல்ல பக்கங்களை புரட்ட, நேற்றைய பேச்சுக்கள் மீண்டும் அவளின் மனதில் தோன்றியது.
தோன்றிய நொடி உதடுகள் பிரிந்து சிரித்து மீண்டும் மூடியது. அந்த உணர்வோடு, அவனோடு ஒரு கற்பனை உலா, எல்லாம் அவள் மனக்கண்ணில்.
“அழகு என்பது யாதெனில்,
நின் கண்கள்,
அது பார்க்கும் பார்வை.
முறுக்கிய மீசையுடன்
உன் உதட்டசைவில் கேட்கும் மொழி.
அந்த மொழி நானாக இருப்பின்
உன் கைகோர்த்து
உன் முகம் பார்த்து
பதில் மொழிந்திட துடிக்கும் என் இதயம்.
இந்த அழகிய வாழ்வை உன்னோடு வாழ்ந்திட துடிதுடிக்கும் என் இதயத்தை அடக்க வழி தெரியாது ஏங்குகிறேன். உன்னோடு ஒரு பயணம் வேண்டும்!
கனவெல்லாம் நிஜமாகிட…”
அவள் கையில் இருந்த நாட்குறிப்பில் பதிவாகியது அவளின் எண்ணங்கள். அத்தோடு அவன் பேசியதும் நினைவுக்கு வர,
“மொழி… இந்த மிஷன் சக்செச்ஸ்ஃபுல்லா முடிசிட்டேனா லீவ் போட்டு ஊருக்கு வந்து உன்னை இங்க கடத்திட்டு வந்துடுவேன்.”
“ஓஹ்! அப்ப கூட கடத்திட்டு வர ஐடியா தான் இருக்கு”
“நாமளும் கொஞ்சம் லவ் பண்ணணும்ல” என்று சொல்லி கண்ணடித்தான்.
“அதுக்கு நல்ல நாலு அது இதுனு ஏகப்பட்ட ரூல்ஸ் இருக்கும் மொழி. அதுக்கெல்லாம் எனக்கு இப்போ பொறுமை இல்ல. நீயும் நானும் மட்டும்” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் அவன் சொல்லவந்ததை புரிந்துகொண்டவளின் முகம் வெட்கத்தில் சிவந்தது.
“ஹே!!! மொழி… இப்படி உதட்டோரம் சிவந்தா” அவன் பேசிட, இவளுக்கு மேலும் வெட்கம் வந்து தொலைந்தது. அவள் தலை கவிழ்ந்திட,
“செல்லம்” கரகரத்து ஒலித்தது.
“இங்க பாரு” என்றவனின் பார்வையில் எதுவும் தப்பவில்லை. அவளின் கண்களின் இமைகள் படபடத்தது. அவள் உதட்டின் மேல் இருந்த வியர்வை துளிகள். அவள் பார்வை அவனை தொட்டு மீண்டது என்று அவளின் அணுக்களின் அசைவு அனைத்தையும் பதிவேற்றிக்கொண்டான்.
“மொழி… வதம் செய்ற! அய்சா நகின் தா கீ மெய்னே தும்சே ஜியாதா குப்சூரத் லட்கி நகின் தேக்கி தீ, லெகின் நா ஜானே கியூன், மெயின் தும்மாறே சேரா சி அபினி நஸ்ரெய்ன் ஹதா ஹி நகின் பா ரஹா ஹை!” (“ஐயோ, உண்மையா சொல்றேன், உன்னைவிட அழகான பெண்ணை நான் பார்த்ததே இல்லை. ஏனோ தெரியல, உன் முகத்திலிருந்து என் கண்களை என்னால அகற்றவே முடியல!”)
“ம்ம் புரியல!”
“உன் முகத்திலிருந்து கண்ணை எடுக்க முடியல! குப்சூரத்! அழகி! ஹிந்தி சிக்ஹென்”(ஹிந்தி கத்துக்கோ) என்ன சொல்கிறான் என்று அவனை பார்க்க, அவனோ உதடு குவித்து முத்தம் வைத்தான். அதில் மேலும் வெட்கியவள் கைபேசி திரையை விலக்கிவிட,
“ஹே! முகத்தைக் காட்டு”
“நீங்க இப்படி பண்ண மாட்டேன்னு சொல்லுங்க”
“இதுகூட பண்ண கூடாதா? ரொம்ப அநியாயம் பண்ற மொழி”
“அச்சோ! அத்தான்.நீங்க பாட்டுக்கு இப்படி ஏதாவது செஞ்சிட்டு போயிடுவீங்க.அடுத்து நீங்க கால் பண்ற வரைக்கும் எனக்குத்தான்”
அவளுக்கோ சங்கடம். என்னவென்று சொல்லுவாள். உன்னை தேடுகிறேன். நிதமும் கற்பனையில் உன்னுடனான வாழ்வை வாழ்கிறேன். நிஜமும் அதுவாகிட விரும்புகிறேன் என்று சொல்லவும் வேண்டுமா? ஒரு வித தயக்கம் இல்லை வெட்கம். என்னை இத்தனை தேடவைக்கிறானே என்று ஏதோவொன்று. பதில் பேசாமல் இருந்தாள்.
“மிஸ் பண்றியா?” அவன் தான் கேட்டான்.
“மொழி… பிளீஸ்… அடுத்து எப்போ பேசுவேனு தெரியாது. என்னைப் பாரேன்” வேண்டுதலாய் வந்தது அவனின் குரல்.
அவனோடு பேசுவதே அரிது என்று உணர்ந்திருந்தவள் மீண்டும் தரையில் தோன்றினாள்.
அவன் கைகோர்த்து, முகம் பார்த்து, நெஞ்சில் சாய்ந்து பேச வேண்டும் என்ற அவா அவளுள் மேலெழும்ப, அத்தனையும் வெளிப்படுத்தும் விதமாய் அவளின் “அத்தான்” என்ற அழைப்பு வந்தது.
“ஐ நீட் அ டைட் ஹக்” என்றவன் மேலும்,
அவள் முகம் காட்டிய பாவனை, கண்களில் தெரிந்த மயக்கம் எல்லாம் அவனையும் ஏதோ செய்ய,
“ஹாட்!” என்றிருந்தவன், “ம்கும்” என்று தொண்டையைக் கனைத்து தன்னை சமன் படுத்திக்கொண்டான்.
“மொழி… சீக்கிரம் வந்திடுவேன்” என்க,
அவளும் புன்னகையுடன் தலை அசைத்து சம்மதித்தாள்.
“வெல்லக்கட்டி டி நீ! பியாரி! ருத்ரன் இன்னைக்கு ஹாப்பியோ ஹாப்பி! ஒரு முறை அத்தான் சொல்லு”
அவளின் தலை இல்லையென்று அசைய,
“ஒன் டைம்!” என்று கண்கள் சுருக்கினான்.
“அத்தான்” என்று அவள் சிணுங்களும் சிரிப்புமாய் அழைத்திட,
“ஸ்வீட்! ஐ ஆம் டன் அண்ட் டஸ்ட்! இது போதும் எனக்கு இது போதுமே! வேறென்ன வேண்டும் நீ போதுமே!” என்று பாட்டாகவே படித்தான்.அதில் அவள் கலகலத்து சிரித்தாள். அவளின் சிரிப்பொலியுடன் அவனின் சிரிப்பு சத்தமும் சேர்ந்துக் கொண்டது.
அவன் நினைவுகள் அவளை அலைக்கழிக்க, அவர்களின் நிச்சியத்தில் எடுத்த புகைப்படங்களை தன் கைபேசியில் பார்த்தவள், அவனின் படத்தை பெரிதாக்கி. அவனின் கண் காது மூக்கு என்று ஒவ்வொன்றாய் திரையில் தொட்டுப் பார்த்தவள், அவனும் தன்னை இப்போது நினைப்பானா? என்ற எண்ணத்துடன், அவன் அவளைக் கட்டியணைத்த பொழுதை நினைவுகூர்ந்து அந்த அணைப்பில் இருப்பதாகவே எண்ணி துயில் கொண்டாள்.
அவள் எண்ணங்களுக்கு நிகராக அவனும் அங்கே அந்த ஏழு நிமிடங்கள் அவளுடனான பொழுதுகளை தான் எண்ணினான். அவளின் முகம் காட்டும் பாவம், சிரிப்பு, வெட்கம், கோபம், கண் சிமிட்டல், தொடுகை, தவிப்பு, நடுக்கம், அவளின் ஸ்பரிசம் என்று அனைத்தும் நினைத்தவன் ரத்த வெள்ளத்தில் கிடந்தான்.
ரெண்டு தினங்களுக்கு முன்பு அவளிடம் பேசிவிட்டு முகம்கொள்ளா புன்னகையுடன் வந்தவனை பார்த்த அவனின் நண்பன், “என்னடா பயங்கர குஷி போல?” என்று கேட்டான்.
கண் மூடி திறந்து ஆம் என்பதைப்போல தலை ஆட்டியவன் இன்னும் அந்த மாயையிலிருந்து மீண்டதாக தெரியவில்லை.
“மச்சா டேய்! நாம இப்போ போக போற மிஷன் என்ன? நீ இப்படி வேற உலகத்துல திரியுற?” என்ற நண்பனைப் பார்த்தவன் நக்கலாக,
“இதுலாம் உனக்கு சொன்னா புரியாது டா” என்றான்.
“ஏன் புரியாது? எங்களுக்கும் கல்யாணம் எல்லாம் ஆகிடுச்சு ராசா… சொல்லப்போனா நான் தான் உனக்கு இதுல சீனியர்” என்று வாதிட,
“அட நித்யானந்தா!!! எப்ப பாரு கிளுகிளுப்பு தான் உனக்கு. இது அது இல்ல டா… இது வேற! எப்படி சொல்றது, எனக்கு பிடிச்ச பொண்ணுக்கு என்னையும் அதே அளவுக்கு பிடிச்சிருக்குனு தெரிஞ்சுகிற சமயம் இருக்கு பாரேன்! அது வேற பீல் டா… சொல்லி புரிய வைக்க முடியாது. அனுபவிக்கனும்!” என்று இரு நாட்களுக்கு முன்பு சிலாகித்து உலகை வென்ற மிதப்புடன் இருந்த நண்பன் இன்று குண்டடிப்பட்டு ரத்தம் சொட்ட தரையில் இருந்தான்.
“ருத்ரா! டேய்! கண்ணை மூடிடாத டா… ஹாங் ஆன்… பாய்ஸ் லிப்ட் ஹிம்” என்று கட்டளைகளை விடுத்து அவனுடன் அவர்கள் வந்த வண்டியில் ஏற்றி முதல் உதவி செய்ய ஆரம்பித்தனர்.
இவர்கள் இரு தினங்களும் முன்பு புறப்பட்ட ஒரு மிஷன். ஜம்முவில் முகாமிட்டிருந்த தீவிரவாத அமைப்பிற்கு முக்கிய தலைவர்கள் வருகிறார்கள் என்ற உளவு கிடைக்க இவர்கள் அங்கிருந்த ஆயுதம் மற்றும் தீவிரவாத தலைவர்களையும் மொத்தமாக சூறையாட கிளம்பி வந்திருந்தனர்.
அவர்களுக்குக் கிடைத்த செய்தி உண்மைதானா என்று அறிய அங்கேயே யாருக்கும் தெரியாமல் முகாமிட்டிருந்தார்கள் ஒரு நாள் முழுவதுமாக. மேலும் காத்திருந்து சரியான சந்தர்ப்பம் பார்த்து ருத்ரன் தலைமையில் அவர்களின் குழு உள்ளே செல்ல, அவர்கள் கணித்தபடி முக்கிய தலைவர்கள் அவர்கள் துப்பாக்கிக்குப் பலியாக மிகவும் கடினமான யுத்தமாக தான் இருந்தது.
ராணுவ வீரர்களுக்கே உரித்தான தின்னகத்துடன் எதிரிகளை பந்தாட, எதிரிகளும் விடுவதாய் இல்லை. அந்தக் குழுவின் தலைவன் தப்பிக்க நினைக்க ருத்ரன் அவனை பின்தொடர்ந்து அவனை வீழ்த்த போரிட்டதில் சில குண்டுகளை மார்த்தாங்கியிருந்தான். இருந்தும் பின்வாங்காமல் முன்னேறி, தான் நினைத்ததை செய்து முடித்திருந்தான். அவனின் தோட்டாவிற்கு உரிய விருதும் கிடைத்திருந்தது.
அனைவரையும் சுட்டுவிழ்த்திய பின் தான் அவனின் படையில் எஞ்சியிருந்தவர்கள் வெளியே வர ருத்ரன் வெற்றி புன்னகையுடன் வந்தவன் கீழே விழுந்திருந்தான். பின் தான் அவனை கவனித்தவர்கள் வேக வேகமாக அவனை அள்ளிக்கொண்டு சென்றனர்.
வண்டியிலிருந்து ராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்லும் வழியிலே அவனின் கடைசி நிமிடங்கள். கூட இருந்து பேசிய யாரின் குரலும் அவனின் செவியில் விழவில்லை. அத்தான் என்ற அவளின் அழைப்பும், சிரிப்பும், அவனுணர்ந்த அவளின் வாசம் எல்லாம் சேர்ந்து நினைவலைகளாக மொழி என்று இதழசைத்தவன் கண்கள் மூடினான்.