கனியின் தோழியுடன் சென்றவள், குழந்தைக்குக் காய்ச்சல் அடிக்கவும், விடாமல் அழுதுக் கொண்டே இருந்தது. ஆகையால் அவர்களுடன் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அவளும் சென்று வந்தாள். அவர்கள் திரும்பும் பொழுது, நேரம் பத்தை நெருங்கிவிட்டது. மருத்துவமனைக்கு செல்லும் போது தந்தைக்கு அழைத்துச் சொல்லியிருந்தாள். அதன் பின் அவர் தொடர்பு கொண்டபோது அவள் எடுக்கவில்லை.
அவளின் தோழியை அவர்களுக்கான அறையில் விட்டுவிட்டு கீழே வர, “என்ன தேனு, பாப்பா எப்படி இருக்கா?” என்று சுந்தரம் விசாரித்தார்.
“மருந்து கொடுத்திருக்காங்க பா. இப்போ தூங்குறா.நீங்க போன் பண்ணும் போது டாக்டர் கூட இருந்தேன்”
“ஓஹ்! சரி டா, நம்ம சரண் வந்திருந்தான். இவளோ நேரம் உனக்காக தான் வெயிட் பண்ணான். இப்போ தான் கிளம்பினான். உன்கிட்ட சாரி சொல்ல சொன்னான். போன் பண்றேன்னு சொன்னான்.”
“முத அவன் பேசட்டும் பா. கனி எங்க?”
“இப்ப தான் சாப்பிட போயிருக்காங்க”
“நீங்க சாப்டீங்களா பா?”
“ஹான்! ஆச்சு அப்பவே! நீ போ, கனிகூட சாப்பிடு” என்று மகளை அனுப்பிவைத்தார்.
கனி இருக்குமிடம் வரவும், “ஹே! தேனு சரண் வந்திருந்தான்.அப்பவே அவன் நல்ல ஹைட் இப்ப இன்னும் வளர்ந்திருக்கான்” என்று பேச,
“அவன் என்கிட்ட பேசவுமில்லை, என்னை பாக்கவுமில்லை” என்று தேன் கோவமாகச் சொன்னாள்.
“ஹ்ம்ம் கரெக்ட் தேனு” என்று ஆமோதித்தாள் கனி.
“அவர் ஏன் உன்னை அப்பதானு கூப்பிடுராருனு இப்போ புரியுது” என்று நிலன் சொல்ல,
அவனை கையில்ல் இடித்தாள் கனி.
“ஹாஹா சொல்லிட்டானா? சரியான அப்பத்தா தான் மச்சான் இவ”ஓ என்று தேன்மொழியும் சொல்ல.
“மச்சான்!” என்று அங்கு பார்வையாளராக இருந்த சர்வேஷ் வினவ,
“அட! மிலிட்டரி தம்பி…. மிலிட்டரி மச்சான் எங்க அக்கா கூட பேசுவாரா மாட்டாரா? இன்னுமா பாடெர்ல கன்ன(gun) தூக்கிட்டு நிக்கிறாரு?” என்று கனி கோதாவில் இறங்க,
“ஹே! என்ன பார்டர்ல வேலை செய்றத ஈசியா சொல்ற” என்று அவன் எகிற,
“பெரிய உத்தியோகம் தான். அதுக்குன்னு ஒரு பத்து நிமிஷம் கூட தேனுக்காக ஒதுக்க முடியாதா என்ன? அவரு மட்டும் இப்படியே செஞ்சிட்டு இருந்தாரு நாங்க பொண்ணு குடுக்க மாட்டோம் சொல்லி வைங்க” என்று கனி மிரட்டவே செய்தாள்.
“நீங்க செஞ்சாலும் செய்வீங்க” என்றவன் மெதுவாக அங்கிருந்து நகர்ந்துவிட்டான்.
“ஏன் டி அவரை மிரட்டுற?”
“பின்ன, கொஞ்ச நேரம் முன்னாடி, சொல்லுங்க அண்ணான்னு போனோட ஓரமா போனாரு. மிலிட்டரி மச்சான் தம்பிக்கு கூப்பிட்டது போல உனக்கும் கூப்பிட வேண்டியது தான”
“ஹ்ம்ம் பெட்டர்… உன்கிட்ட சொல்ல வேணாம்னு சொன்னாங்க. இருந்தாலும் நீ ஒரு போன் போட்டு கேட்டிடு” என்றவள் குல்பி எடுக்க சென்றுவிட, நிலனிடம் கைபேசி வாங்கி கனி அவளின் தோழிக்கு அழைத்துப் பேசினாள்.
தனக்கான குல்ஃபியை கையில் வாங்கியவள், தனது கைபேசியை எடுத்து அதில் அழைப்பு எண்களை ஒருமுறை பார்வையிட்டாள். வாட்ஸ்அப் சென்று அதிலும் பார்வை செலுத்தினாள். ஒருவேளை அவன் தனக்கு அழைத்து இவள் எடுக்காமல் விட்டுவிட்டாளோ என்ற எண்ணத்தில் பார்க்க, அப்படி எந்த அழைப்பும் வரவில்லை.
ஒருகையில் ஒழுகும் குல்பி, பார்வையோ மறுகையில் இருந்த கைபேசியில், சிந்தனையோ அவனைப் பற்றி.
“ஹலோ! அண்ணி” என்று சர்வேஷ் கிட்ட வர,
அவனை நிமிர்ந்துப்பார்த்தவள், “உங்க அண்ணன் பேசினாரா?” என்று கேட்டுவிட்டாள்.
அதில் அவன் முகம் சங்கடமாக அவளைக் காண, அவன் பேசியிருக்கிறான் என்பதை உணர்ந்துக் கொண்டாள்.
“ஓ!” என்றவள் வேறு எதுவும் சொல்லாது, கையில் இருந்த குல்ஃபியை சுவைத்தவாறு தன் தந்தை இருந்த இடம் சென்று அவர் அருகில் அமர்ந்துக் கொண்டாள்.
“போச்சு டா… ப்ரோ நீ செத்த. உன் க்ரைம் ரேட் ஏறிக்கிட்டே போகுது” என்று வாய் விட்டே புலம்பினான் சர்வேஷ்.
தன் அருகில் வந்தமர்ந்த மகளை ஆதுர்யமாகப் பார்த்த சுந்தரம், “தேனு நீ போய் ரெஸ்ட் எடு.”
“என்ன என் பொண்ணு கொஞ்சம் டல் அடிக்கிறாளே! என்ன விஷயம்?”
“ஒன்னுமில்லப்பா டயர்ட்”
“மாப்பிள்ளை உன்கிட்ட பேசலனு கோவமா?”
தந்தையைப் பார்த்தவள், சிறு யோசனைக்குப் பிறகு, “உங்களுக்கு நிஜமாவே இந்த கல்யாணத்துல ஓகே வா ப்பா?” என்றாள்.
“எதுக்கு தேனு உனக்கு சந்தேகம். ருத்ரன் நம்ம பையன். அவனுக்கு என்ன குறை? அதெல்லாம் பரிபூரண சம்மதம். என்ன முன்ன கேட்கும்போது நான் வேணாம்னு சொல்லியிருக்க கூடாது. அதுல அவனுக்கு கோவம் போல. எல்லாம் சரியாகிடும். பாத்துக்கலாம். அவன் கோபமும் நியாயம் தானே. நான் ரொம்ப சுயநலமா யோசிச்சுட்டேன். அவனுக்கு என் நிலைமை புரிஞ்சதும் சகஜமாகிடுவான். நீ கவலைப்படாத” என்று நம்பிக்கையாகப் பேச, அவரின் தோள் சாய்ந்துக் கொண்டாள்.
நேரம் அதன் வேகத்தில் நகர, அனைவரும் பெண் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தார்கள். பெண் வீட்டுச் சார்பாக விருந்தும் சிறப்பாக நடந்து முடிந்திருக்க, மறுநாள் தேனின் நிச்சயத்திற்கான வேலைகள் ஆரம்பமாகியிருந்தது.
அன்று காலையில் கண்விழித்ததிலிருந்து தேன்மொழிக்கு ஏதேதோ நினைவுகள். பல சிந்தனைகள் அவள் உள்ளக்கிடங்கில் ஆர்பரிக்க, அதையெல்லாம் அடக்கிவிட்டு தனது அன்றாடப் பணிகளை மேற்கொள்ள சென்றாள்.
அவள் வாசல் தெளித்துக் கொண்டிருக்க, கண்மணி, “தேனு… நான் தான் நேத்தி சொன்னேனே, நான் வந்து பார்த்துக்கிறேனு. ஆளுக்கு முதலா எழுந்து என்ன செஞ்சிட்டு இருக்க? உள்ள போ” என்று அவளை விரட்டாத குறையாக கிளப்பிவிட,
வீட்டிற்குள் வந்து அடுப்படி சென்றாள். அதற்குள் அவளின் அத்தை அங்கு வந்து, “தேனு… நீ இன்னும் கொஞ்சம் உறங்கு. அப்போ தான் முகம் நல்லா பளிச்சுன்னு இருக்கும். இங்கன நான் பாத்துக்கிடுதேன்” என்று அங்கிருந்தும் அவளை கிளப்பியிருக்க, ஒரு வித எரிச்சல் அவளுள்.
‘இப்போ என்ன? முகம் பளிச்சுன்னு இல்லனா கட்டிக்கிட மாட்டாரோ! ரொம்ப தான். கடுப்புகளை கிளப்பிக்கிட்டு ‘ என்று அனைத்திற்கும் ருத்ரனை பழித்துவிட்டு தன் படுக்கையில் விழ, அவளின் கைபேசி இசைத்தது.
புது எண்ணிலிருந்து காணொளி அழைப்பு வர, எடுக்காமல் யோசித்தாள். முழு அழைப்பு சென்று நின்றிருக்க, இப்போது ஒரு குறுஞ்செய்தி வந்து விழுந்தது அதே எண்ணிலிருந்து.
“ஓய்! குயின் பீ! அட்டென்ட் தீ கால்” என்றிருக்க, அந்த குயின் பீ என்ற அழைப்பு யாருடையது என்று கணித்தவளின் இதழில் மென்னகை. மீண்டும் அழைப்பு வர, அதனை எடுத்தாள்.
“ஹே! சில்வண்டு… டீச்செரம்மாவாகிட்டியாமே!” என்று அவள் எடுத்ததும் திரையில் இருந்தவன் பேச, அவனின் வெள்ளை நிற சட்டை, டை மற்றும் தோள்பட்டையில் இருந்த குறியீடு, அவனின் பின் இருந்த விமானம் எல்லாம் அவனை கம்பீரமாக காட்டியது.
“நீ கூட தான் உயர வளர்ந்தது மட்டுமில்லாம, உயர உயர பறந்துகிட்டே இருக்கியாமே!” என்று அவனைப் போலவே சொல்லிக்காட்டினாள்.
அவனுடைய தற்போதைய பழக்கமான நடுவிரலைக் கொண்டு அவனின் புருவத்தை நீவியவன், “அப்புறம்! இன்னைக்கு நீங்க தான் புதுப்பொண்ணாம்ல”
அவள் பதிலேதும் சொல்லாமல் இருக்க,
“ரொம்ப வருஷமாச்சு பேசி, நல்லா இருக்கனு பார்த்தாலே தெரியுது. இது என்ன லுக்?” என்றான்.
அவள் எதுவுமில்லை என்பதாக கண்கள் சிமிட்டி தோள் குலுக்கினாள்.
“பாக்கனும்னு நினைச்சிருந்தா இன்னைக்கு, இல்ல நேத்து கூட வந்திருக்கலாம். இந்த ஏழு, எட்டு வருஷத்துல எப்படினாலும் பார்த்திருக்கலாம், பேசியிருக்கலாம். ஊரு விட்டு வேறு ஊருக்கு போனதும் எங்களை மறந்தாச்சு” என்றாள் நிதர்சனத்தை.
அதற்கு சிரித்து மழுப்பியவன் பேச்சை மாற்ற, “வாழ்த்துக்கள் டியர்!” என்று அழுத்திச் சொன்னான்.
“நன்றி டியர்!” என்றாள் இவளும்.
“ஹ்ம்ம்! டைம் ஆச்சு… திரும்ப பேசுறேன். கல்யாண டேட் ஃபிக்ஸ் ஆனதும் சொல்லு” என்று கூறியவனின் கண்களில் நேசத்தின் சாயல்.
கருப்பு கண்ணாடி அணிந்து, வாடா புன்னகையுடன் பேசும் இவன் புதிதாக தெரிய பதிலேதும் சொல்லாமல் சரி என்பதாக தலையசைத்தாள்.
“முகத்தை இப்படியே வச்சிக்காம, கொஞ்சம் சிரி… எப்பபாரு சிலிர்த்துக்கிட்டு சண்டைக்கு நிக்கிற மாதிரி திரியவேண்டியது” என்று அவளை சீண்ட,
“அப்படித்தான்! அதுக்கு என்ன இப்போ?” என்று அவன் சொன்னது போலவே அவள் சிலிர்த்துக் கொண்டு பேச,சத்தமாக சிரித்துவிட்டான்.
“நீ மாறவே இல்ல ஹனி! அப்படியே தான் இருக்க. ஆளு மட்டும் தான் வளர்த்திருக்க போல, வெயிட் வெயிட் ஆளு கூட வளர்ந்த மாதிரி தெரியலையே!” என்று இப்போது காண்ணாடியைக் கழட்டி, கண் சுருக்கி கேலிப் பேசினான்.
அப்படித்தான் என்பதைப்போல கண் சிமிட்டியவன், “நேரமாச்சு தான். மீட் பண்ணுவோம். இப்போ பை!” என்று அழைப்பை துண்டித்துவிட்டான்.
நீண்ட நாட்கள் சென்று உயிர் தோழனாக இருந்தவனிடம் பேசிய களிப்பு அவளில் வியாபித்திருக்க, அகமும் முகமும் புத்துர்ணவாய் ஒளிர்ந்தது. நீண்ட இடைவெளி இருப்பினும் நட்பு மாறவில்லை. எத்தனை வருடம் பேசாமல் இருந்திருந்தாலும், பேசிய கணம் மீண்டும் அந்தப் பழைய ஒட்டுதல்.
கனிமொழி அறைக்குள் நுழைய, “தேனு! இப்பவே முகம் ஜொலிக்குது… ரெடி ஆகிட்ட போலயே! அப்ப உன் கோவமெல்லாம் அவ்ளோ தானா, கோபால்?” என்று நெற்றியில் கைவைத்து பழைய படப்பாணியில் சொல்ல,
எக்கி அவளின் தலையில் லேசாகத் தட்டினாள்.
“சரி சரி… எல்லாரும் வர்றதுக்குள்ள குளிச்சு புடவைக் கட்டிக்கோ! அப்பா ரெடியா இருக்க சொன்னாங்க. இந்த நகையை போட்டுக்க சொன்னாங்க”
“அப்பா எங்க ? காலையில இருந்து பார்க்கல”
“சாப்பாட்டுக்கு மேல சாமினா போடுறாங்க. அங்க தான் இருக்காங்க. உனக்கு குடிக்க எதுவும் எடுத்துட்டு வரவா?”
“வேணாம் கனி… நீ போ. நீயே புதுப்பொண்ணு. போய் அமைதியா அத்தான் கூட இரு”
“அய்யோ! ஓவரா பேசாத, இது இன்னும் நம்ம வீடு தான். நாங்களும் அப்பாக்குப் பொண்ணு தான். உனக்கும் தங்கச்சி, இதெல்லாம் நான் செய்யலாம்”
“ப்ச்… பே!”
“ஹி ஹி என் செல்ல அக்காவே!” அவளை கொஞ்சிவிட்டு, “சீக்கிரம் ரெடியாகு” என்று சொல்லி சென்றாள்.
தேன்மொழி குளித்து இளஞ்சிவப்பில் ஒரு மென்பட்டு சேலையை உடுத்தியவள், தேநீர் குடித்தால் தெம்பாக இருக்கும் என்று நினைக்க, அடுப்படிக்குச் சென்றாள்.
அங்கே யாரும் இல்லாமல் இருக்க, அவளே தனக்கான தேநீரை தயாரித்தாள். “அப்பாவுக்கும் வேணுமானு கேட்டுக்குவோம்” என்று எண்ணியவள் வேகமாக வாசல் நோக்கி நடக்க,
வாயிலில் ஒரு உருவம் அவளுக்கு முதுகு காட்டி நின்றது.அவள் அவனை சமீபித்ததும் அவளின் வருகையை உணர்ந்து திரும்பினான்.
நான்கு கருவிழிகளும் நேருக்கு நேராக பார்த்துக்கொள்ள, எதிரில் இருப்பவன் மெய்யா, பொய்யா என்று அறிந்துகொள்ள தன் கைகளை நீட்டினாள். அது சரியாக அவனின் இதயத்துடிப்பை அவளிடம் கடத்த, இவளின் இதயத்துடிப்பும் சுருதி சேர்ந்து அவனின் தாள லயத்திற்கேற்ப வேகமெடுக்க, இருவருக்கும் மெல்லிய மூச்சு வாங்கல்.