கனியின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்திருந்தது. சுந்தரமும், தேன்மொழியும் பம்பரமாகச் சுழன்றார்கள் என்றால், கண்மணியும், வேணுகோபாலும் தம்பதி சகிதமாய் உறுதுணையாகச் செயல்பட்டனர்.
“தேனு மா… மாப்பிள்ளை பொண்ணை வீட்டுக்கு அழைச்சிட்டு போய் பால் பழம் கொடுக்கணும். நீ கண்மணியையும் கூட்டிக்கிட்டு அவங்களோட போ. அப்பா மண்டபம் செட்டில் பண்ணிட்டு வரேன் டா” என்று தேன்மொழியை அனுப்பி வைத்தார் சுந்தரம்.
பெண் வீட்டிற்கு வந்து சம்பிரதாயங்களை முடித்தவர்கள், சிறிது நேரம் ஓய்வெடுத்த பின் தஞ்சாவூர் கிளம்புவதாக இருந்தது, அவர்கள் கிளம்புவதற்குள் சுந்தரம் வீட்டிற்கு வந்துவிட, விடைபெறும் படலம் நடந்தேறியது. பெண்ணுடன் கண்மணி, வேணுகோபால் செல்ல, தேன்மொழி இங்கேயே இருந்தாள். முதல் முறையாக இரட்டையர்கள் பிரியும் சூழ்நிலை, இருவருக்கும் நிலைக்கொள்ளவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி, கண்ணில் நீர் பெருக விடைக்கொடுத்தார்கள். அப்பாவை விட்டுச் செல்ல மனமில்லாமல் கனி ஏங்கி அழ, நிலன் தான் அவளை தாங்கவேண்டியதாக இருந்தது.
புது ஜோடியும் அவர்களின் சொந்தங்களும் கிளம்பியதும் வீட்டில் சலசலப்பு சற்று அடங்கியது. இன்னும் பெண் வீட்டு சொந்தங்கள் தேங்கியிருக்க, தேன்மொழிக்கும் சுந்தரத்திற்கும் வேலைகள் இருந்து கொண்டே தான் இருந்தது. நாளை இவர்கள் எல்லாம் தஞ்சாவூர் பயணம் செய்யவேண்டும். நாளை மறுநாள் அங்கே விருந்து, அது முடிந்து இரவு ரிசப்ஷன். அதன் மறுநாள் மீண்டும் இங்கு அழைத்து வரவேண்டும் பெண் வீட்டு விருந்திற்கு. அதன் மறுநாள் தேன்மொழிக்கு நிச்சியம் செய்ய ஏற்பாடு செய்திருந்தார்கள்.
தேவிகா அவராகவே முன் வந்து, தேன்மொழி நீ இங்க பாரு, நான் அங்க கண்மணி வீட்ல பாத்துக்கிறேன். “டேய் சர்வா, நீ இங்க அண்ணி கூட இரு” என்று சொல்ல, தேன்மொழி அதிர்ந்து சர்வாவைப் பார்க்க, “சொல்லுங்க அண்ணி” என்று அவன் கைகட்டி அவளிடம் பணிந்தான்.
“அச்சோ அத்தான்… நீங்க தேன்மொழினே கூப்பிடுங்க, அத்தை” என்று அவள் மேலும் பேசுவதற்குள்,
“முறை சொல்லி பழகட்டும், டேய் பாத்துக்கோடா” என்ற தேவிகா நகர்ந்துவிட்டார்.
“சொல்லுங்க அண்ணியாரே!” என்று சர்வேஷ் அவள் முன் வந்து நிற்க,
“ஏன் இப்படி? பேர் சொல்லியே கூப்பிடுங்க” என்றாள் தேன்மொழி.
“நோ! நோ! ராஜமாதா சொல்லிட்டு போயிருக்காங்க. மீற முடியாது” என்றான் பவ்வியமாய்.
அவனை பார்த்தவள் தன் வேலைகளை கவனிக்க, “என்ன அண்ணி? கட்டளையிடுங்கள்” என்று அவன் மீண்டும் கேட்டான்.
“ஓஹ்! கட்டளையிட்டா கண்டிப்பா செய்வீங்க?”
“அதுக்கு தானே நான் இருக்கேன்” என்று அவன் வாக்குக் கொடுக்க, அவனுக்கு தெரியவில்லை தேன் சொல்வதை அவனால் செய்ய முடியாது என்பது.
“நிஜமாவா? உங்களால முடியுமா?” என்று அவள் மீண்டும் கேட்க,
“இந்த சர்வேஷை என்னனு நினைச்சீங்க. சொல்லுங்க நான் என்ன பண்ணனும்னு”
“உங்க அண்ணா கிட்ட பேசணும்” என்று அவள் யோசிக்காது சொல்லிவிட,
அதை கேட்டதும் அவனின் முகம் கசப்பு மருந்தை உட்கொண்டது போல  உருமாறியது. “கஷ்டமான டாஸ்க் கொடுக்காதீங்க அண்ணி… நான் பாவம் இல்லையா?” என்று கேட்க,
அவள் இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தாள். அவள் முறைப்பினில், “அண்ணியாரே! இப்படின்னு சொல்லி கால் பண்ணா அவன் மிதிப்பான்” அதற்கு தேன்மொழியின் பார்வையோ, ‘ நாங்களும் மிதிப்போம் ‘ என்ற ரீதியில் இருக்க, “பேசலனா நீங்களும் அடிப்பீங்க போலயே!” என்று அவன் பம்ம. அது தான் என்பது போல இருந்தது தேனின் விழி மொழி.
“அவன் மிதிச்சா வலிக்கும்… மிலிட்டரி ட்ரைனிங். அதனால நீங்க அடிச்சுக்கோங்க” என்று அவளுக்கு அவனின் தோளை காட்ட, அவன் செயலில் சிரித்துவிட்டாள் தேன்.
“அண்ணி! நீ இப்படி இருந்தா… அவன் உன்னை அவன் இழுப்புக்கு இழுப்பான். திமிரு புடிச்சவன்” என்றான் அழுத்தமாய்.
அதற்கும் தேன்மொழியிடம் ஒரு சிரிப்பே. அந்த நாள், சொந்தகளுடன் பேச்சு, கவனிப்பு என்று நகர்த்திருக்க, அடுத்த நாள் அனைவரும் அதிகாலையில் கிளம்பி தஞ்சாவூர் வந்துச் சேர்ந்திருந்தார்கள்.
விருந்து அமோகமாக நடைபெற, இளவட்டங்கள் உணவு முன்பே தஞ்சை பெரிய கோவிலைக் காண சென்றார்கள். அதில் புதுமண ஜோடிகளும் அடக்கம்.
கோயிலைக் கண்டுகளித்து சில பல புகைப்படங்கள் எடுத்தார்கள். சர்வேஷ் கர்மமே கண்ணாக அவனின் தொழிலுக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருந்தான். புதுமணம் ஜோடிகளை அழகழாக படம் பிடித்தான்.
நிறைய கேண்டிட் படங்கள் எடுத்தான். அதில் தேன்மொழியின் படங்களும் உண்டு. அதை உடனே தன் அண்ணனுக்கும் அனுப்பி வைத்தான்.
அவன் அனுப்பியதை உடனே பார்த்திருந்தான் ருத்ரன். பார்த்தவன் உடனே காணொளி அழைப்பு விடுக்க. “சொல்லுங்க மேஜர் சாப்” என்று அழைப்பை ஏற்றிருந்தான்.
“எப்போ ஊருக்கு போவீங்க?”
“ஆஹான்!! எதுக்கு கேட்கிற?”
“ஹ்ம்ம் எதுக்கு கேட்பாங்க?”
“பைய்யா…. பியார் கா கஹானி”
“சுப்!” என்று ருத்ரன் அதட்ட,
“உன் பியாரை நான் அண்ணின்னு தான் கூப்பிடணுமாம். ராஜமாதா ஆணை.” என்று சொல்ல,
சிரிப்புடன் ருத்ரன், “மா கீ பாத் சஹி தீ…” என்றான் மிதப்பாக.
“பைய்யா தமிழ் தமிழ்….” என்றான் கிண்டலாக.
“அங்க மொழி இருந்தா காட்டு…”
“உன்கிட்ட பேசணும்னு சொன்னா.” அவன் முறைப்பில், “சொன்னாங்க அண்ணி” என்றி திருத்தியிருந்தான்.
“சரி, காட்டு”
“பேசணும்னு சொன்னாங்க”
“நீ இப்போ காட்ட மட்டும் செய். நா அப்புறமா பேசிக்கிறேன்.”
“ஹ்ம்ம்! ஹைட் அண்ட் சிக் கேல் ரஹா கியா?”
“கோயி பாத் நஹி! ஜூம் கரோ யார்!”
“அண்ணா டேய் அவ்ளோ தான்டா” அவளைக் காட்டியவன்,மீண்டும் அவனை நோக்கி கேமராவை வைக்க,
‘ஏன்டா ‘ என்று முறைத்துப் பார்த்தான் ருத்ரன்.
“இந்த முறைப்பு பருப்பெல்லாம் எங்களுக்குப் பயம் கிடையாது. இப்போ நான் அண்ணி கட்சி. உனக்கு வேணும்னா நீ அவங்களுக்கு போன் பண்ணு. பாய்!” என்று அழைப்பைச் சட்டென துண்டித்துவிட்டான்.
ஏன் அண்ணனுக்கு இத்தனை வீம்பு என்று அவனால் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. அதே சமயம் தேன்மொழியை நினைத்து பாவமாகவும் இருந்தது.
“ஹாப்பியா சுத்திட்டு இருந்த பொண்ணை, கல்யாணம் பண்ணனும்னு பேசி, என்னவெல்லாம் டிரை பண்ண அண்ணா… இப்போ அங்க கிரீன் சிக்னல் வந்ததும் ஆட்டமா ஆடுற” என்று அண்ணனை கொஞ்சமே கொஞ்சம் வசைப்பாடினான்.
அதன்பின் மீண்டும் சொந்தங்களுடன் நேரம் சென்றது. மதிய விருந்தை முடித்து இரவு வரவேற்பு விழாவிற்கு தயாராகினார்கள்.
அங்கு ஒரு நட்சத்திர விடுதியில் கனிமொழி, நிலனின் வரவேற்பு நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது. அவர்களுடன் வேலை பார்க்கும் அலுவல் நண்பர்கள் அனைவரும் வந்திருக்க, இளமைக்கே உண்டான கவர்ச்சியுடன் ஆட்டம், பாட்டம் என்று விழா தொடர்ந்து கொண்டிருந்தது.
சிறிது நேரத்தில் மணமக்களும் நடனத்துக்கு வந்திருக்க, தேன்மொழி, சர்வேஷ், ஐஷ்வர்யா அவளின் தம்பி இப்படியாக உறவுகள் கூட்டமும் நடனத்துக்குத் தயாராக, டிஜே பாடலை ஒலிக்கவிட்டார். அனைவரும் ஒரு ஆட்டம் ஆடி கலைத்துவிட, மணமக்கள் மீண்டும் மேடை ஏற, கேக் வெட்டினார்கள். திருமணத்திற்கு வராத உறவுகள் சிலர் பரிசு பொருள் கொடுக்க மேடை ஏறினார்கள்.
கனியின் தோழிகள் கூட்டத்துடன் தேன்மொழி உணவு உண்ண சென்றாள்.
அந்த அறைக்குள் ஒரு உயர்ந்த உருவம் ஒன்று காதில் அலைபேசியுடன் உள்நுழைந்தது. அலைபேசியில் பேசியவாறே அவன் விழிகள் யாரையோ தேட, சுந்தரம் அவனை பார்த்து கை அசைத்தார்.
அவரை கண்டுகொண்டவன் அவரிடம் விரைய, “சரண் எப்படிப்பா இருக்க?” என்று கேட்டார்.
“நல்லா இருக்கேன் மாமா”
“அம்மா எப்படி இருக்காங்க?”
“நல்லா இருக்காங்க மாமா.சாரி மாமா, கல்யாணத்துக்கு வர முடியல. இந்த ட்ரிப் முன்னமே போட்டது. அம்மா லேட்டா தான் சொன்னாங்க.” என்று அவன் வராததற்கு காரணம் சொல்லி மன்னிப்பு கேட்டான்.
“விடுப்பா… அதனால என்ன, நான் முன்னையே சொல்லிருக்கணும். அதான் இப்ப வந்துட்டியே! பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. நல்லா வளர்ந்துட்ட” என்று அவன் கைபிடித்து நிமிர்ந்து அவன் முகம் பார்த்துப் பூரித்தார்.
“மாமா… உங்க பொண்ணுக்கு கல்யாண வயசு வந்து கல்யாணமும் செஞ்சு வச்சிட்டீங்க, எனக்கும் அதே வயசு தான். உங்க பொண்ணுங்களுக்கு மாப்பிள்ளை பார்த்த மாதிரி, எனக்கும் பொண்ணு பாருங்க” என்று சிரித்துக் கொண்டே கூறினான்.
“தாராளமா பார்த்திடுவோம் சரண். ஆர்ம் லாம் செம்ம பிட்டா இருக்கு. நல்லா இருக்கடா” என்றார் அவனது சிறு வயது முதல் பள்ளிபருவம் முடியும் வரை அவனுக்கு உற்ற தோழனாக வலம் வந்தவர். அவனது வளர்ச்சியில் அவருக்கு பெருமையே.
“மாமா….” என்று தன் ஆட்காட்டி விரலால் நெற்றியைத் தேய்த்துவிட்டு சிரிக்க,
“வா… கனி மேல தான் இருக்கா, கொஞ்சம் ப்ரீயா இருக்கு இப்போ” என்று அவனை மேடை ஏறும் வரிசையில் கொண்டு வந்து நிறுத்தினார்.
மேடையில் கனியை பார்த்தவன், “தேன் எங்க மாமா?” என்று கேட்டுத் திரும்ப,
“அவ இப்ப தான் கனி ஃப்ரெண்ட்சுங்க கூட சாப்பிட போயிருக்கா… இரு நான் அவளை கூட்டிட்டு வரேன்”
அவரை செல்லவிடாது கைப்பிடித்து நிறுத்தியவன், “இருக்கட்டும் மாமா, கனியை பார்த்திட்டு நானே போய் பாக்குறேன். சில்வண்டு ரொம்ப சிலிர்த்துகிட்டா பேச மாட்டேன்னு”
“ம்ம் சொன்னா… நீ அவளை மறந்துட்டியாம், போன் நம்பர் மாத்திட்டு அவகிட்ட சொல்லவே இல்லையாம்” என்று தேன்மொழி கூறிய குற்றங்களை சுந்தரம் அடுக்க,
“க்ரைம் லிஸ்ட் பெருசா இருக்கே… டீச்சரம்மா அடி வெளுத்துடுவாங்க போலயே, மாமா நீங்களும் கூடவே வந்து என்னைய காப்பாத்தி விட்டுடுங்க” என்று வேண்டினான்.
“அது எப்படி முடியும். நீ பண்ணது தப்பு தானே! என் பொண்ணு சொல்றதுல தப்பு என்ன?”
“போங்க மாமா நீங்க எப்பவும் உங்க பொண்ணுக்கு தான் சப்போர்ட் பண்றீங்க”
“ஹாஹா…. தேனுக்கும் மாப்பிள்ளை பேசியாச்சு பா”
“ஹ்ம்ம் அம்மா சொன்னாங்க மாமா”
“ஆமா சரண், வர்ற ஞாயிறு நிச்சயம்”
“அதுக்கும் என்னால வர முடியாது, இவளை எப்படியோ சமாளிச்சுட்டேன். அவளை எப்படி சமாளிக்கிறது?” என்று கேள்வியாக சுந்தரத்தைக் காண,
“நேர்ல பேசுவல, பாக்குறேன் உன் சாமர்த்தியத்தை” என்றார் அவரும். அவர்கள் இருவரும் மேடை ஏற, கனிமொழி இவனை கண்டதும்,
“உயர்ந்தவனே! ” என்று ஆர்பரிக்க,
அவன் உதட்டின் மீது விரல் வைத்து அமைதி என்றிருந்தான்.
“நிலன், இது சரண்… சொல்லியிருக்கேன்ல என் ஸ்கூல் டேஸ்”
“ஹலோ சரண், உங்கள பத்தி கனி நிறைய சொல்லிருக்கா” என்று கை கொடுக்க,
“ஹலோ… வாழ்த்துக்கள்” என்று இருவரையும் வாழ்த்தி பரிசு பொருளை கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்டான்.
“என்ன சரணு இது தான் வர்ற நேரமா?” என்று கனி கேட்க, அவனோ தோப்புக்கரம் போடுவது போல கையை காதுக்கு கொடுத்து , “லாஸ்ட் மினிட்ல அடிச்சு பிடிச்சு வந்தேன்மா.சாரி” என்றிருந்தான்.
“அப்போ, நான் அன்னைக்குச் சண்டை போடலனா வந்திருக்க மாட்ட”
“இல்ல கனி… சரி விடு… ஹாப்பி மேரீட் லைஃப்” என்று மீண்டும் வாழ்த்தினான்.
“இரு இரு தேன் கிட்ட சொல்றேன்” என்று வம்பளக்க,
“அட அப்பத்தா! இன்னும் இந்த அப்பத்தா வேலை பாக்குறியா நீ… எப்படி ப்ரோ இவ வாயை அடைகிறீங்க?”
“அவ சைலண்ட் தானே” என்ற நிலனை,
“என்னது சைலண்ட்டா? என்ன மாமா இதெல்லாம். நீங்களும் சொல்லலையா?” என்று அவன் அதிர, நிலனின் முகத்தில் கலவரம், “டேய்! சும்மானு இரு… அது ஒண்ணுமில்ல மாப்பிள்ளை, இவனுக்கு என் பொண்ணுங்கள ஏதாவது சொல்லணும்” என்று சமாளிக்க,
“நம்பாதீங்க ப்ரோ… இவரு பொண்ணுங்களை விட்டுக் கொடுக்க மாட்டார். இதுங்க ரெண்டும் சேர்ந்தா நம்மளை ஒரு வழி பண்ணிடுவாங்க” என்று சரண் உண்மையைச் சொன்னான்.
“அது என்னமோ உண்மை தான் சரண். சிஸ்டெர்ஸ் சேர்ந்துட்டாங்க அவ்ளோ தான்.  அட்டகாசம் பண்றாங்க” என்று நிலனும் ஒப்புக்கொடுக்க, கனி அவனை முறைத்து வைத்தாள்.
“ஹே! அப்பத்தா என்ன முறைப்பு… ப்ரோ நாம டிடேயில்டா அப்புறம் பேசுவோம் . நீங்க இப்ப வந்த கெஸ்ட்டா பாருங்க. என்ன மாமா நான் சொல்றது” என்று சுந்தரத்தையும் சேர்த்துக்கொள்ள,
“படவா!” என்று அவன் தோளில் ஒரு அடிப் போட்டார். சரண் மீண்டும் மணமக்களை வாழ்த்திவிட்டு இறங்கினான். அவனோடு பபெட் முறையில் உணவு பரிமாறப்படும் இடத்திற்குச் சென்றவர், அங்கே கண்மணியைப் பார்த்ததும் அவரிடம் நலம் விசாரித்து பேசிக்கொண்டிருந்தான் சரண்.
“தேனு எங்க கண்மணி?”
“கனி பிரெண்ட் ஒருத்தவங்க பிள்ளைக்கு டிரஸ் மாத்த கிளம்பினாங்க, அவங்க கூட போயிருக்கா சித்தப்பா… இங்க தான் திரும்ப வருவா” என்க,
“சரண்… நீ அண்ணி கூட பேசிட்டு இரு. நாங்க முன்ன நிக்கிறேன்” என்று சென்றார் சுந்தரம்.
கண்மணியுடன் உண்டு முடித்தவன், “அண்ணி நான் கிளம்புறேன். நேரமாச்சு. மாமா முன்ன தானே இருக்காங்க. பாத்துட்டு கிளம்புறேன். நாம திரும்ப பார்ப்போம். நான் அங்க வருவேன். கார்த்திக் சொன்னான் நீங்க பிரான்ஸ் வரதா” என்று சொல்லிக்கொண்டு விடைபெற்றான்.
முன்னறைக்கு வந்தவன் சுந்தரத்திடம் சொல்லிக்கொண்டு, கனிக்கும் கையசைத்துக் கிளம்பினான்.
“தேன்மொழி கொஞ்சம்  வெளிய போயிருக்கா சரண்” என்றார் சுந்தரம்.
“இருக்கட்டும் மாமா, அவ என்கேஜ்மென்ட் என்னைக்கு?” என்று கேட்டுக்கொண்டவன். “போன் பண்றேன். கேட்டதா சொல்லுங்க” என்று கூறி கிளம்பிவிட்டான் இரட்டையர்களின் சிறு வயது தோழன்.