அன்றைய சமையலுக்கு உதவியவள், வேலைகளை முடித்துக் கொண்டு வர, கனிமொழி கைகளுக்கு மருதாணி இட்டு முடித்திருந்தாள்.
தேன் சமையலை முடித்துக் கைகளை தனது துப்பட்டாவில் துடைத்தவாறு வந்தவள் கண்டது ருத்ரனின் பெற்றோர்களை. அவர்களைக் கண்டதும் என்ன செய்வது என்று தெரியாது திகைத்து நிற்க, “வணக்கம் அண்ணி!” என்று சர்வேஷின் குரலில் தன்னை மீட்டு,
“வா…வாங்க… வாங்க அத்தை.வாங்க மாமா.” என்று அவர்களை வரவேற்க, கைபேசியில் இருந்த கனியும் தொடர்பைத் துண்டித்துவிட்டு, அவர்களை வரவேற்றாள்.
பெரியவர்கள் அமர, அவர்கள் முன் நின்றிருந்தார்கள் மூவரும்.
தேவிகா வீட்டைச் சுற்றி ஒரு பார்வை பார்த்துவிட்டு தேன்மொழியைக் காண, வெங்கடேசன் பேச்சை ஆரம்பித்தார், “அப்பா இல்லையா மா?”
“அப்பா வர லேட் ஆகும்னு சொன்னாங்க மாமா. நா கூப்பிடுறேன்” என்று தேன்மொழி தனது கைபேசியை எடுக்கச் செல்ல,
“இல்லம்மா… வரட்டும் ஒன்னும் அவரசமில்ல. நீ நல்லாயிருக்கியா? கல்யாணப் பொண்ணு விசா எல்லாம் வந்திடுச்சா?” என்று இருவரிடமும் கேள்விகளைக் கேட்டார்.
தேன்மொழி, கனிமொழி இருவரும் பார்ப்பதற்கு ஒன்றுபோல தான் தெரிவார்கள். இன்று கனிமொழி கல்யாணப்பெண்ணிற்குரிய பொலிவுடன் தனித்துத் தெரிய எதிரில் இருந்தவர்களுக்கு எளிதாக இருந்தது பேச்சைத் தொடங்க.
தேன்மொழி தலை அசைத்து தன் நலனைத் தெரிவிக்க, “விசா வந்திடுச்சு மாமா. அடுத்த மாசம் பத்தாம் தேதி கிளம்புறோம்” என்றாள் கனி.
“நல்லது” என்று அவர் பேச்சை முடித்துக்கொள்ள, இரட்டை சகோதரிகளுக்கு அடுத்த என்ன பேசுவது என்று தெரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
“இங்க தான் சாப்பாடுனு கண்மணி சொன்னா. உங்க மாமாவுக்கு நேரத்துக்கு சாப்பிடணும்” என்று தேவி வாயைத் திறந்தார்.
“எல்லாம் ரெடி தான், இதோ எடுத்து வைக்கிறேன்” என்று தேன்மொழி நகர,
“நீ சாப்பிட்டியா மா?” என்று கனியிடம் கேட்டார் வெங்கடேசன்.
“இன்னும் இல்ல மாமா. கொஞ்சம் நேரம் ஆகணும். உட்காருங்க மாமா” என்று டேபிளைக் காட்டினாள்.
“உட்காருங்க அத்தை, நீங்களும் உட்காருங்க அத்தான்” என்று அவள் உபசரிக்க,
தேவி வேறு எதுவும் பேசாது, அமைதியாக வந்து அமர்ந்துவிட, இலைகளைப் போட்டாள் தேன்மொழி.
சர்வேஷ், “எனக்கு கொஞ்சம் டைம் ஆகும். அப்பாக்கும், அம்மாக்கும் வைங்க” என்று தேன்மொழியிடம் கூறியவன் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கைபேசிக்குள் தலையை விட்டுக்கொண்டான்.
வெங்கட்சனுக்கும், தேவகிக்கும் பரிமாறியவள், கூட இருந்த மற்ற உறவினர்களையும் கவனித்தாள். அவளுடன் அவளது அத்தையும் அவர்களைக் கவனித்துக்கொண்டார்.
சொல்லிச் சென்றதுப் போல கண்மணியும் விரைந்து வந்துவிட, பிறகு கல்யாணம் சம்பந்தமான பேச்சுக்கள் தான் இருந்தது. வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் உண்டு முடித்திருக்க, “தேனு உனக்கும், கனிக்கும் தட்டுல வச்சுக்கோங்க… சர்வா நீயும் வா” என்று கண்மணி அழைக்க,
“நீயும் உட்காரு கண்மணி, செல்வி நீயும் தான்” என்று இதுவரை உணவுப் பரிமாறியவர்களை அமரச் சொல்லி அவர்களுக்குப் பரிமாறினார் தேவகி.
“கத்திரிக்காய் தொக்கு நல்லா இருக்குடா வச்சுக்கோ” என்று சர்வேஷிற்கு வைக்க வர, “மா… முஜே பசந்த் நஹி!” என்று கைப்பிடித்து தடுத்தான்.
“தம்பி வீட்டுல ஹிந்தி தான் பேசுவீங்களோ?” என்று கேட்டார் செல்வி.
சர்வேஷ் சமாளிப்பாகச் சிரிக்க, “இவன் ஹிந்தி தான் பேசுவான் செல்வி, தமிழ் சரியா வராது” என்று தேவகி சொல்ல, “தேனு… நீயும் ஹிந்தி கத்துக்கிடனும் போலயே!” என்று அடுத்தக் கேள்வியை தேனிடம் கேட்க, அவள் சங்கடமாக தேவகியைப் பார்த்தாள்.
“அதெல்லாம் தேவையில்ல, அண்ணா நல்லா தமிழ் பேசுவான்” என்றிருந்தான் சர்வேஷ்.
அதற்கும் என்ன பதில் சொல்வது என்று தெரியாது சிரித்து வைத்தாள் தேன்.
“இவனுக்கு தான் செல்வி தமிழ் பிரச்சனை, பெரியவன் கத்துகிட்டான். ஊருக்கு வரும்போதெல்லாம் என்கூட பேசி பேசி இப்ப நல்லா பேசுறான்”
“எஸ்! மிலிட்டரி ஜாயின் பண்ணதுக்கு அப்புறம் தான் கத்துகிட்டான். அதுக்கு காரணம் கூட தேன்மொழி அண்ணி தான்” என்று சர்வ சாதாரணமாக உண்மையைப் போட்டுடைத்தான் சர்வேஷ்.
தேன்மொழி அப்படியா என்பது போல அவனைப் பார்க்க, கனிமொழி அவளின் தோள்களில் இடித்து புருவம் உயர்த்தினாள். தேவகி மௌனமாக இருக்க, சர்வேஷ் தான் மீண்டும் தொடர்ந்தான்.
“வருஷா வருஷம் இங்க வரத் தான் லீவ் போட்டு வருவான். டைரக்டா இங்க தான் வருவான். அவனை பார்க்க தான் நாங்களும் இங்க வருவோம்” என்று சொல்ல,
தேன்மொழி திகைத்தாள் என்றால், அவளை சுற்றி இருந்தவர்கள் கேலியாக அவளை பார்த்துச் சிரித்தனர்.
“டேய்! பேசாம சாப்பிடு” என்று அவனை ஒரு அதட்டல் போட்டு அவனின் பேச்சை நிறுத்தினார் தேவகி.
தேன்மொழி அவரை ஒருமுறை பார்த்துவிட்டு, “வரேன் கனி” என்று தட்டோடு எழுந்துவிட்டாள்.
“எனக்கு போதும் தேனு” என்று அவள் சொல்ல, சரி என்று தலை அசைத்தவள் பாத்திரங்கள் போட்டுவைக்கும் இடத்திற்குச் சென்றுவிட்டாள். தட்டை கழுவப் போட்டவள் சிந்தனை முழுவதும் ருத்ரன் தான் வியாபித்திருந்தான். கையைக் கூட கழுவாது நின்றிருந்தவளைக் கண்ட சர்வேஷ், “ஹலோ!” என்று அவள் முன் கை அசைத்தான்.
“ஹான்” என்று அவள் பார்க்க, “ட்ரீம்ஸ்ல இருக்கீங்க போல, கையைக் கழுவுங்க” என்று நினைவுப்படுத்த, அவள் வேகமாக தண்ணீர் ஊற்றிக் கழுவினாள்.
“அண்ணா பேசினானா?” என்று அவன் கேட்க, அவள் இல்லை என்பதாகத் தலை அசைத்தாள்.
“ஓஹ்!” என்றவன் வேறு எதுவும் பேசாது அங்கே சுற்றிப் பார்க்க, தேன்மொழிக்கு அவனிடம் கேட்பதா, வேண்டாமா என்று திண்டாட்டம்.
“ருத்ரன் எப்போது வருவான்?” என்று கேட்க மனம் உந்தியது, எனினும் அவள் இப்போது அறிந்துக் கொண்ட விசயங்கள் அவளைத் தயங்க வைத்தது. அவன் வீட்டில் அனைவருக்கும் அவனின் விருப்பம் தெரிந்திருக்கிறது. முதலில் வேண்டாம் என்று சொல்லி, இப்போது,  என்று யோசிக்க ஏக்கங்கள் தயக்கங்களாகச் சேர்ந்துக்கொண்டது அவளிடம்.
அவள் ஏதோ பேச வருவதும், பின் தயங்குவதுமாக இருப்பதைக் கண்டு உள்ளுக்குள் சிரித்துக்கொண்டான் சர்வேஷ். அவனின் நியாய மனது, “பாவம்… அண்ணா இப்படி அவளைத் தவிக்க விட்டிருக்க கூடாது” என்று எடுத்துரைக்க, ராமனின் லக்ஷமனான இன்னொரு மனது, “தவிக்கட்டும் என் அண்ணனும் இப்படித் தானே தவித்தான்.” என்று கூறியது.
“ஓகே!!! நான் உள்ள போறேன்” என்று அவளிடம் சொல்லிக் கொண்டு அவன் செல்ல, அதற்கும் தலையை மட்டும் சரி என்பதாக அசைத்து விடைக்கொடுத்தாள்.
அவரவருக்கு அவரவர் நியாயங்கள். அண்ணனுக்காக தம்பி, மகனுக்காக அன்னை என்று இருவரும் ருத்ரனுக்கு இவள் நியாயம் செய்யவில்லையே என்ற ஆதங்கத்தில் நடந்துக் கொள்ள, தேன்மொழிக்கு தான் இவர்கள் தன்னை தவறாக நினைத்துக் கொண்டார்களே என்ற எண்ணம்.
காலையில் இருந்து குழப்பத்தில் இருந்தவளுக்கு, இவர்களின் பாராமுகம் மிகுந்த வேதனையைத் தந்தது. கண்கள் மூடி தன்னை சமாளித்துக் கொண்டவள் அனைத்தையும் எதிர்கொள்ள தான் வேண்டும் என்று முடிவு செய்துக் கொண்டாள்.