கையிலிருந்த சூடான டீயைக் குடிக்காமல் அதை வேடிக்கை பார்த்தபடி பலத்த யோசனையோடு அமர்ந்திருந்தார் மதன். மாலை ஆறு மணி ஆகியிருந்தது. அமைதியாக இருந்த குடியிருப்பு பகுதியில் திடீரென்று எழுந்த குழந்தைகளின் சிரிப்பு சத்தம் அவரது யோசனையைக் கலைத்தது. அவர் வீட்டின் எதிரே இருந்த பூங்காவிலிருந்து சில குழந்தைகள் சைக்கிளில் வேகமாக செல்ல அவர்களுக்குப் பின்னால் தடதடவென்று ஓடிச் சென்றனர் சில குழந்தைகள். பேச்சும் சிரிப்பும் அடுத்த சில நொடிகளுக்கு தொடர்ந்து கேட்க, சைக்கிளைப் பார்த்ததும் மதனின் மனது வசந்தியிடம் சென்று அங்கேயிருந்து அப்படியே அன்றைய காலைப் பொழுதிற்கு சென்றது.
காலை ஏழு மணி போல் சினேகாவின் பூச்சூடல் வளைகாப்பு விழா ஆரம்பமாகி பத்து பதினொரு மணி போல் நிறைவாக நடந்து முடிந்திருந்தது. ஷண்முகம் இல்லாமல் விழா நடந்தது பெரும் குறையாக இருந்தாலும் அதை யாரும் வெளியிடவில்லை. அவனைப் பற்றி தெரிந்து கொள்ள அவரின் முகத்தை எதிர்பார்ப்போடு அனைவரும் நோக்கிய போதெல்லாம் அவருள் எழுந்த தடுமாற்றத்தை சமாளிக்க பெரும் பாடானது மதனிற்கு.
மெடிக்கல் விடுமுறைக்குப் பின் அவருடைய பொறுப்புக்கள் மாறி விட்டன.இப்போது அவர் இருப்பது வேறு துறையானாலும் முக்கியச் சந்திப்புகளில் அவரும் ஓர் அங்கம். அந்த வகையில் இதுவரை நடந்த எந்தக் கூட்டத்திலும் ஷண்முகம் பற்றி எந்தத் தகவலும் பகிர்ந்து கொள்ளப்படவில்லை. அவனுடைய டீம், அவர்களின் ஆபரேஷன் பற்றி காற்று வாக்கில் கூட பேச்சு வரவில்லை. அவர் இடத்தில் தற்போது யார் இருக்கிறாரோ அவரோடு அவன் கண்டிப்பாக தொடர்பில் இருக்க வேண்டும். அவர்கள் எதிர்பார்த்த விதத்தில் அனைத்தும் செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும், முடிவு நெருங்கிக் கொண்டிருக்க வேண்டும். அதனால் தான் எந்தத் தகவலும் வெளியே கசியவில்லை என்று யுகித்திருந்தார். இன்னும் சில நாள்களில் இல்லை சில வாரங்களில் அவன் திரும்பி வர வாய்ப்பிருந்தது. இன்று காலையில் சினேகாவைப் பார்த்த போது ஷண்முகம் வருவதற்குள் சினேகாவிற்கு குழந்தை பிறந்து விட கூடுமென்று தான் அவருக்குத் தோன்றியது. அவரது அந்த கணிப்பு தவறாக இருக்க வேண்டுமென்று காலையிலிருந்து கடவுளிடம் வேண்டுதல் வைத்துக் கொண்டிருக்கிறார் மதன்.
இப்போதும் ஒரு சில நொடிகளுக்கு கண்களை மூடி பிரார்த்தனை செய்து விட்டு, கையிலிருந்த டீயை ஓரே மூச்சில் குடித்து முடித்தார் மதன். அதற்காகவே காத்திருந்தது போல் அந்தக் கோப்பையை எடுத்துச் செல்ல வந்தான் அவரது வீட்டு வேலையாள்.
“இராத்திரி டின்னர் சாப்?” என்று அவன் கேட்க,
“எதுவும் செய்ய வேணாம்..பழங்கள் போதும்..நீங்க கிளம்புங்க.” என்றார் மதன்.
டீ கோப்பையோடு அவன் செல்ல டீ பாயில் இருந்த அவரது கைப்பேசி ஒலி எழுப்பியது. அந்த அழைப்பை ஏற்று,
“சொல்லுங்க அண்ணி.” என்றார் மதன்.
“மேசெஜ் எதுவும் பார்க்கலையா? பிஸியா?” என்று கேட்டார் அனிதா.
அலுவலகத்திலிருந்து திரும்பி வந்து கால்மணி நேரம் போலாகியிருந்தது. கண்ணெதிரே இருந்தாலும் கைப்பேசியைப் பார்க்கவேயில்லை.
“இல்லை..இப்போ தான் பார்க்கணும்னு நினைச்சிட்டு இருந்தேன்..நீங்க ஃபோன் செய்திட்டீங்க..ஆல் வெல் தானே?” என்று கேட்டார்.
“ம்ம்..வீட்டுக்குப் போயிட்டு இருக்கேன்..அதான் வழிலேயே பேசிடலாம்னு ஃபோன் செய்தேன்.” என்றார்.
“நீங்க வந்தது அவங்க எல்லோருக்குமே சந்தோஷம்.” என்றார்.
“எனக்கும் தான்.” என்று சொன்ன அனிதா,”வாட் இஸ் ஹாப்பனிங்?” என்று கேட்க, ஒரு கணம் அதிர்ந்து அடுத்த கணம்,”புரியலை” என்று அந்தக் கேள்வியை அழகாகச் சமாளித்தார் மதன்.
அந்த ஒரு கணமே அனிதாவிற்கு போதுமானதாக இருக்க,”மதன் உன்னை எத்தனை வருஷமாத் தெரியும் எனக்கு..மழுப்பாதே.” என்று கண்டிப்பானக் குரலில் பேசினார் அனிதா.
‘என்னவோ நடக்குது நமக்கு..இவளாலே தான்..என்னது அது?’ என்று சமீபக் காலமாக மதனிற்கும் அதே கேள்வி தான். வசந்தியைச் சந்திக்கும் போதெல்லாம் அனைத்து டென்ஷனையும் மறந்து மனம் லேசாவதை நினைத்து வியப்பு ஏற்பட்டது. அன்பு கொண்டவர்களோடு நடத்தும் சாதாரணமான உரையாடல்கள் கூட உடல், மனது இரண்டிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக் கூடுமென்று மதனிற்கு தெரியவில்லை. பெரியவர்கள் பார்த்து வைத்த திருமணப் பந்தத்தில் இணைந்து, அது கசந்து, பிரிந்து என்று தனியாக வாழ முடிவு எடுத்திருந்த வசந்திக்கு மதனின் மாற்றங்கள் தெரியவில்லை. வேறு சில விஷயங்கள் அவளைச் சஞ்சலப்படுத்திக் கொண்டிருந்ததால் அவளின் மாற்றங்களைக் கூட அவள் உணரவில்லை.
வளைகாப்பு பற்றிய பேச்சு எழுந்தவுடன் விஜயாவின் அண்ணி மீனாவின் தலையீடு அதிகமாக இருந்தது. ‘நாங்களும் வேணாம்னு முடிவு செய்திட்டீங்களா விஜயா?’ என்று கேள்வி கேட்டவருக்கு வீட்டின் நிலை பற்றி தெரியவில்லை. வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்த ஷண்முகத்திடமிருந்து கடந்த சில மாதங்களாக எந்தத் தகவலும் இல்லை என்பதை பற்றி யாரிடமும் யாரும் வாயைத் திறக்கவில்லை. அவருடைய அண்ணியின் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் விஜயா மௌனம் காக்க,’உங்க அக்கா தான் அவங்க வழியைப் பார்த்திட்டு போயிட்டாங்க..நீங்களும் அவங்களைப் போல ஏதாவது முடிவு செய்திருக்கீங்களா?’ என்று மீனா கேட்க,’ஐயோ, அப்படியெல்லாம் இல்லை அண்ணி..நீங்களும் அண்ணனும் தான் வீட்டுக்குப் பெரியவங்க..உங்களை அழைக்காம, நீங்க இல்லாம விசேஷம் நடக்குமா?’ என்று விஜயா பவ்யமாக பதிலளிக்க,’உங்க வாயால கேட்டா தானே நம்பிக்கை வரும்..வீட்டுக்குப் பெரியவங்கற நினைப்புலே நான் அங்கே வந்திட்டு வேற ஆள் நாட்டாமை செய்திட்டு இருந்தா நல்லா இருக்குமா..அதான் கேட்டு தெரிஞ்சுக்கிட்டேன்.’ என்று மீனா மறைமுகமாக வசந்தியைத் தாக்கிப் பேசினார்.
வசந்தி அவரோடு இருப்பது மீனாவின் கருத்தையும் கண்ணையும் உறுத்துவது தெரிந்திருந்தாலும் அவரது செய்கைக்கான விளக்கத்தை கொடுக்க விஜயா தயாராகயில்லை. ஆனாலும்,’அக்கா ஸ்தானத்திலே அவ தான் எல்லாத்தையும் இழுத்துப் போட்டு செய்திட்டு இருக்கா..அவ இல்லாம விசேஷத்தை நடத்தினா சாமிக்கு நான் பதில் சொல்ல முடியாது..வசந்திக்கு ஒண்ணுன்னா அவன் பொண்டாட்டியும் வாயை மூடிட்டு இருக்க மாட்டா.அவங்க இரண்டு பேராலே தான் அந்தப் பிள்ளை இந்த அளவுக்கு நடமாடிட்டு இருக்கு..நம்ம வீட்டு பொண்ணுக்கு நாம உதவி செய்யலைன்னா வேற யார் செய்வாங்க அண்ணி? எனக்கு நீங்கெல்லாம் தானே இத்தனை வருஷமாத் துணையா இருக்கீங்க. அதே போல தான் வசந்திக்கு துணையா இருக்கணும்னு நான் நினைக்கேறேன்..அக்கா தான் புரிஞ்சுக்காம நடந்துக்கிட்டா..ஜெயந்தியும் சிந்துவும் வசந்தியைத் தனியா விட்டிட்டாங்க..ஷண்முகத்துக்கு அதெல்லாம் கொஞ்சம் கூட பிடிக்கலை..இதெல்லாம் வற்புறுத்தி வரவழைக்க முடியாதுன்னு உங்களுக்குத் தெரியாதா?..எல்லோரையும் அழைச்சிட்டு நீங்க கண்டிப்பா வளைகாப்பு விழாக்கு வரணும் அண்ணி.’ என்று அந்த பேச்சை வளர விடாமல் அழைப்பைத் துண்டித்து விட்டார்.
மகன் இல்லாமல் விழாவை நடத்த விஜயாவிற்குப் பிடித்தமிருக்கவில்லை. எனவே,’அவன் இல்லாம இப்போ இதை நடத்தணுமான்னு இருக்கு வசந்தி..வளைக்காப்பு செய்யாம குழந்தை பிறக்கறதில்லையா? இருக்கற மனநிலைலே எதுக்கு இதை வேற இழுத்து விட்டுக்கணும்னு தோணுது..வேணாம்னு ஜோதிகிட்டே சொல்ல பயமா இருக்குது..என்ன இருந்தாலும் வயித்துலே இருக்கறது அவங்க பேரக் குழந்தையும் தானே.’ என்று வசந்தியிடம் விஜயா மனம் திறக்க, வசந்தி அவளது மனத்தில் இருந்த தயக்கத்தை, ஒதுக்கத்தை ஓரங்கட்டி விட்டு,’சினேகா நிலையை யோசிச்சு பாருங்க சித்தி..இத்தனை மாசத்தை எப்படியோ நல்லபடியா கடத்திட்டோம்..அவளும் இப்போவரை ஆரோக்கியமா தான் இருக்கா..தம்பிகிட்டேயிருந்துதகவல் எதுவும் வரலைங்கறது அவளையும் குடைஞ்சிட்டு தான் இருக்கு..இன்னும் கொஞ்ச நாள்லே பிள்ளை வந்திடும்..அதுவரைக்கு எல்லாம் நார்மலா நடந்தா தான் அதுவும் நார்மலா நடக்கும்..இந்த நேரத்திலே நாம யாரும் மனசைக் குழப்பிக்கக் கூடாது..முக்கியமானவங்களை மட்டும் கூப்பிட்டு நல்லபடியா வளைகாப்பை நடத்தலாம் சித்தி..அதுக்கு அப்புறம் நடக்கறதை அப்போ சந்திப்போம்.’ என்று தைரியம் கொடுத்தாள்.
அதன் பின் ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்த போது தான் மதனின் வருகை குறைந்து போயிருந்ததை உணர்ந்தாள். அவளைத் தவிர வேறு யாரும் அதை உணரவில்லை. கணவனை நினைத்து சினேகா, மகனை நினைத்து விஜயா என்று இருவரும் ஒருவனின் கவலையில் அவரவர் உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர்.ஜோதி தான் அவ்வப்போது மகள், மகளின் மாமியார் இருவரையும் இகலோகத்திற்கு அழைத்து வந்தார். அப்படியே வசந்தியிடம்,’மனோவை அனுப்பி வைக்கறேன்..அவனோட போய் தேவையானதை வாங்கிட்டு வந்திடு.’ என்றார்.
உடனே,’வேணாம்..நான் பார்த்துக்கறேன்.’ என்று அவள் மறுக்க,’விஜயாம்மா வெளியே வர்ற மாட்டேங்கறாங்க..நீ எப்படி தனியா போவே..சில ஐட்டம் இங்கே கிடைக்காது..சென்னைலேர்ந்து வரவழைக்க போறேயா? உங்க மாமா, மாமி வாங்கிட்டு வரப் போறாங்களா?’ என்று கேட்டார். அதற்கும்,’நான் பார்த்துக்கறேன்.’ என்று அதே பதிலைக் கொடுத்தாள் வசந்தி.