அனலில் பூத்த மழைத்துளி நானடி

அத்தியாயம் -1

சமையலறையில் பாத்திரங்கள் உருட்டும் சத்தம் காதை கிழிக்க, “மாமா… எந்தி மாமா!! நீ எந்தி… அம்மாச்சி திட்டு மாமா!” என மழலை மொழியில் தமிழினி தனது மாமன் மேகனின் முதுகில் தட்டியபடி எழுப்பி கொண்டிருந்தாள்.
மெல்ல கண்களை திறந்தவன் உதடுகளோ புன்னகையில் விரிய, “என்னாச்சு உங்க அம்மாச்சிக்கு?” என கேட்டுக்கொண்டே எழுந்தான் மழை மேகன்.

மழை மேகன், 27 வயது அழகான ஆடவன். கம்பீரமான தோற்றமில்லால் கனிவான தோற்றத்தில், அனைத்து வயதினரையும் ஒரு நொடி பார்க்க வைக்கும் தெய்வ கடாட்சம். அளவான பேச்சு, நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை என கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றுகிறான். மழை மேகன் M.Sc, M.Phil வேதியியல். இருபாலர் கல்லூரி என்றாலும், மாணவிகள் பயிலும் கல்லூரியில் அவனது வேடம் மிகவும் கண்டிப்பு; யாரிடமும் அதிகமாக, தேவைக்கு அதிகமாக ஒரு வார்த்தை கூட பேச மாட்டான். ‘அறிவொளி கலை மற்றும் அறிவியல் கல்லூரி’யில் பணிக்கு சேர்ந்து மூன்று வருடங்கள் ஆகிறது. தான் உண்டு, தனது வேலை உண்டு என மிகவும் பொறுப்பாக இருக்கும் மேகனை, அவனது அன்னை மைதிலி இப்பொழுது திட்டிக்கொண்டிருக்க காரணம் என்ன? வாங்க பார்க்கலாம்.

“ஈ தேச்சியா தமிழ்?” என தனது அக்காள் முல்லையின் மகளை தூக்கி கொண்டு பல் தேய்க்க வைத்து, அவனும் தேய்த்து முகம் கழுவி பிரஷ் ஆகி விட்டு கீழே வந்தான்.
“அம்மாச்சி திட்டு…” என மெல்லிய குரலில் தமிழ் கூற… மேகன் புன்னகையுடன், “நீங்க அம்மா கிட்ட போய் டாடி கூட வீடியோ கால் பேசிட்டு வாங்க, நான் அம்மாச்சிய பார்த்துக்கிறேன்,” என அனுப்பி வைத்தான்.
“ம்ம் மாமா…” என சொல்லியபடி சின்ன குட்டி தமிழினி ஓடினாள். மேகன் ஒரு சின்ன புன்னகையை உதிர்த்து விட்டு, நேராக அடுக்கலைக்குள் நுழைந்தான்.
மேகன் உள்ளே வருகிறான் என்ற அரவம் கேட்டதும், முதலை கண்ணீர் வடித்து கொண்டு, புடவை முந்தியை எடுத்து கண்ணை துடைத்தபடி, “என்ன வேணும்?” என பாவமாக கேட்டார்.

“நீங்க தான் சொல்லணும்? இப்போ உங்களுக்கு என்ன வேணும்?” என மேகன் திரும்பி கேட்டான்.

“என்ன வேணுமா? நான் காட்டு கத்து கத்தரது உன்னோட காதில் விழல. அப்போ பெத்தவளுக்கு அவ்ளோ தான் மரியாதையா இங்கே?” என மைதிலி மேலும் கத்திட, மேகன் அதற்கும் மேல் பொறுக்க முடியாமல், “அம்மா பிளீஸ்…” என இறைஞ்சினான்.

“நான் டீவியில் பார்க்கிறேன், அக்கம் பக்கத்தில விசாரிச்ச வகையில், இந்த காலேஜுக்கு போற சாருங்க எல்லாம் அங்கேயே படிக்கிற புள்ளைங்கள காதல் கல்யாணம் பண்ணிட்டு வர்றாங்கலாம். உனக்கு நான் பொண்ணு பார்க்குறேன்னு சொன்னா உடனே வேணாம்னு சொல்ற? நீயும் எனக்கு தெரியாமல்…” என மைதிலி ஆரம்பிக்க…

மேகன் நெற்றியை நீவிகொண்டு, “மா… நான் எந்த பொன்னையும் விரும்பல… உனக்கு எதுக்கு மா இத்தனை சந்தேகம், அதுவும் என் மேலே?” என்று அவன் தன்னை விளக்க…
“இல்ல…” என மைதிலி மறுத்து பேச வர, இதற்கும் மேல் முடியாது என்று நினைத்த மேகன், அடுத்த நொடி தனது அன்னையின் பாதத்தில் சரணடைந்தான். “மா… நீங்க யாரை கை காட்டுறீங்களோ அந்த பொன்னை கல்யாணம் பண்ண நான் ரெடி மா. அந்த பொண்ணு யாரு, என்ன, எதுவுமே எனக்கு தெரிய வேணாம். நீ கட்டுன்னு சொன்னா அடுத்த நிமிசம் நான் கட்டிக்கிறேன் மா,” என உறுதியாக மேகன் சொன்னான்.

மைதிலி தனது மகனை பார்த்து, “நிஜமாவா?” என சந்தேகமாக கேட்க, “மா… நான் உன் புள்ளை மா, என் மேலே உனக்கு என்ன சந்தேகம்?” என்றவன், “நான் எதனால கல்யாணம் வேணாம்னு சொன்னேன்னா, அக்கா மாசமா இருக்கா. உதயன் மாமாவும் வெளிநாட்டில் இருக்கார். இந்த சமயத்துல அக்காவ நம்ம பொறுப்பில் விட்டுட்டு போயிருக்கார். அவளை செட்டில் பண்ணிட்டு கட்டிக்க நினைச்சேன். ஆனால் நீங்க இத்தனை தூரம் சொல்லும்போது எனக்கு எந்த பிரச்னையும் இல்ல. எனக்கு உங்க சந்தேஷம் தான் முக்கியம், என் அம்மா சந்தோஷமா இருக்கணும்,” என சின்ன புன்னகையை உதிர்த்தான்.

“அப்போ சரி, நான் போய் முதல்ல பொண்ணு பார்த்திட்டு வந்துடுறேன்,” என மைதிலி சொல்லி விட்டு, அவனுக்கு சுட சுட இட்லி, கார சட்னி, சாம்பார் என அனைத்தையும் போட்டு நீட்டிட, அதிர்ந்து விழித்தான் மேகன்.

“ப்ச்… போடா,” என மைதிலி சாதாரணமாக சொல்லி விட்டு நகர்ந்தார். ‘இதெல்லாம் நடிப்பா?’ என்பதை போல தனது அன்னையை பார்த்தவன், “ம்ம்… அம்மா இஷ்டம்,” என புன்னகையுடன் தமிழினியை வரவைத்து, அவளுக்கு ஊட்டி கொண்டே, கதைகளை பேசி கொண்டு சாப்பிட்டான். இன்று ஞாயிற்றுகிழமை, அவனுக்கான நாள்.
மைதிலி – கோபால் தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள். முதலில் முல்லை, இரண்டாவது மழை மேகன். கோபால் பட்டாளத்தில் வேலை செய்து, எல்லையில் இருக்கும் போது போரில் வீர மரணம் அடைந்தார். அப்பொழுது மேகன் 4-ஆம் வகுப்பு தான் படித்து கொண்டிருந்தான். கோபாலின் அக்காள் கலைச்செல்வி, தனது தம்பியின் குடும்பத்துக்கு உதவியாக அனைத்தும் செய்தார். மைதிலியின் மனதில் மகனையும் பட்டாளத்துக்கு அனுப்பும் எண்ணம் இல்லை; அவனை கைக்குள் வளர்த்து விட்டார். அந்த நேரம் மைதிலிக்கு அரசு வேலை கிடைத்தது. மொத்த சுமையும் அவரின் மேல் சென்று விட, முல்லையை கலைச்செல்வி தனது மகன் உதயனுக்கு கட்டி கொண்டார். ஏனென்றால், தம்பி குடும்பத்தின் மேல் அளவு கடந்த பாசம் அவருக்கு. இப்பொழுது கூட கலைச்செல்வி பார்த்து வைத்திருக்கும் பெண்ணை தான் பார்க்க போகிறார் மைதிலி.

முல்லை போனை எடுத்து கொண்டு வந்து மேகனிடம் நீட்ட, அக்காவை புருவம் உயர்த்தி பார்த்தான் மேகன்.

“மாமா பேசணுமாம்…” என முல்லை மெல்லிய குரலில் கூற… மேகன் சாதாரணமாக வாங்கி காதில் வைத்தபடி, “சொல்லுங்க மாமா? ஒர்க் எப்படி போகுது? எனி டைம் முல்லை போன்லயே இருக்கா? இல்லன்னா வேலைய விட்டு அனுப்பிட போறாங்க,” என கேலி பேசினான்.

முல்லை அவனது காதை பிடித்து திருக, மறு முனையில் உதயன் சிரித்தபடி, “ஹான்… அதெல்லாம் சரிதான். மேகன் சார் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டார்ன்னு நியூஸ் வந்தது. நானும் பார்க்க தானே போறேன், நீ போனும் கையுமா சுத்தரத,” என்றான்.
‘அடபாவிகளா! அதுக்குள்ள விஷயம் துபாய் வரைக்கும் போயிருச்சா?’ என அவன் யோசித்து கொண்டிருக்க, போனை பிடுங்கி சென்று விட்டாள் முல்லை.

“மாப்ளை வரலையாம், இப்போ தான் போன் பண்ணாங்க. ஆனால் மாப்ளையோட அம்மாவும் அத்தையும் வர்றாங்கலாம்,” என வெளியில் பேச்சு சத்தம் கேட்க, அறைக்குள் தியாவுக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்த சவுந்தர்யாவின் காதில் இதெல்லாம் விழுந்தது.

“அண்ணி…” என தியாழினி பேச வர, அவளின் வருங்கால அண்ணிகள் சவுந்தர்யா, பூரணி இருவரும் அலங்காரம் செய்தபடி, “மாப்ளையோட அத்தை தான் எல்லாமேவாம். சோ, சீக்கிரமே அத்தைய இம்ப்ரஸ் பண்ணிடு தியா. அப்போ தான் நானும் பூரணியும் இந்த வீட்டுக்கு சீக்கிரமே வர முடியும் பட்டுக்குட்டி,” என்றார்கள் இருவரும்.

தியாழினி சிரித்தபடி, “அண்ணிகள் எவ்வழியோ அவ்வழி இந்த தியாழினி நல்லாள்,” என்றாள் புன்னகையுடன்.
தியாழினி தான் நமது கதையின் நாயகி. தமிழ் என்றால் அவளுக்கு உயிர் மூச்சு. வீட்டில் அவள் தான் செல்ல பிள்ளை. அதற்கு காரணம், தியாவுக்கு விச காய்ச்சல் வந்து ஆறு மாதம் போராடினார்கள்; அதில் இருந்து மீண்டு வந்த போது பேசுவதில் குறைபாடு இருந்தது. 6 வயது வரை அவள் பேசவே இல்லை. மொத்த குடும்பமும் அரண்டு விட்டார்கள்; வேண்டாத தெய்வம் இல்லை, போகாத கோவில் இல்லை. தவமாக பிறந்த பெண் ‘அம்மா’, ‘அப்பா’, ‘அண்ணா’ என எப்பொழுது அழைப்பாள் என மொத்த குடும்பமும் தவம் இருந்தார்கள். அண்ணன் மார்கள் இருவரும் தங்கைக்காக திருச்செந்தூர் பாத யாத்திரையாக சென்றார்கள். அதன் பின், தவப்புதல்வி முதன் முதலாக பேசினாள் மழலை மொழியில்… அவர் ஒரு தமிழ் ஆசிரியர்.
அப்பொழுதில் இருந்து தமிழ் மேல் அவளுக்கு பற்று வரவைத்தார் நடேசன்.

அறிவொளி கல்லூரியில் இளங்கலை தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து கொண்டிருக்கிறாள். அந்த வீட்டின் அனைத்து சுவர்களிலும் தியாழினி நல்லாளின் தமிழ் பேச்சுக்கும், கட்டுரைகளுக்கும், அவளது இலக்கிய புலமைக்கும் கிடைத்த கேடயங்கள், சான்றிதழ்கள், சட்டம் அடித்து மாட்டப்பட்டிருந்தது. நடேசன் – ராணி தம்பதிக்கு மூன்று பிள்ளைகள். இரண்டு மகன்கள் மதிவாணன், இளவழகன்; அவர்களுக்கு அடுத்து கடைக்குட்டி தியாழினி. அதனால் அண்ணன் மார்களுக்கும் தங்கைக்கும் 9 வயது வித்தியாசம். ‘தியாழினி’ என்பது அவளின் பெயர்; ‘நல்லாள்’ என்பது நடேசன் அவளுக்கு வைத்த புனைபெயர்.

“வீட்டில் பெண் இருக்கும் போது அவளுக்கு முதலில் திருமணம் செய்து விட்டுத்தான் தாங்கள் திருமணம் செய்து கொள்வோம்,” என ஒற்றை காலில் அண்ணன் மார்கள் இருவருமே நின்றார்கள். தியாழினிக்கு வீட்டில் எல்லாவற்றிற்கும் அவர்கள் ஸப்போர்ட் என்பதால், முழு மனதுடன் திருமணத்துக்கு சம்மதித்தாள்.

அண்ணன்களுக்கு அண்ணிகள் தயாராகத்தான் இருந்தார்கள்.
மதிவாணன் வேலை செய்யும் TVS ஷோ ரூம் ஓனர் மகள் தான் சவுந்தர்யா. அதே போல, நடேசனின் நட்பு தர்மராஜின் மகள் தான் பூரணி. இரண்டு பெண்களின் வீட்டிலும் திருமணத்துக்கு தடை இல்லை. ஆனால், அண்ணன்மார்கள் இருவருக்கும் இப்பொழுதே திருமணம் செய்ய கூட விருப்பமில்லை தான்; அதற்கு காரணம், தியாவுக்கு 21 வயது தான் ஆகிறது.
இதோ, மைதிலி மற்றும் கலைச்செல்வி இருவரும் வந்து சேர்ந்தார்கள். “அப்பா! அவங்க வந்துட்டாங்க, சீக்கிரம் வாங்க,” என இளவழகன் அழைக்க, நடேசன் உள்ளிருந்து வேகமாக வந்து, “வாங்க… வாங்க…” என கையெடுக்க, ராணி புன்னகையுடன் தண்ணீர் செம்புடன் அவரை வரவேற்று அமர வைத்தார்.

“மாப்ளை வீடு வந்தாச்சு…” என மெல்லிய குரலில் பூரணி முணுமுணுக்க, தர்மராஜ் சிறிது நேரத்தில் வந்து சேர்ந்தார்.

மைதிலியின் கணகள் வீட்டையே நோட்டம் விட்டது. “ராணி! பொன்னை அழைச்சிட்டு வா,” என நடேசன் கூறினார்.

தொடரும்…