அத்தியாயம் -2
வீட்டை சுற்றி பார்த்து கொண்டிருந்த மைதிலியின் கண்கள், ஆச்சரியத்தில் விரிந்தது. நடேசன் சின்ன புன்னகையுடன், “நான் தமிழ் வாத்தியாருங்க.. நம்ம பாப்பாவுக்கு பாட்டுப்போட்டி, பேச்சு போட்டி, கட்டுரை போட்டி எல்லாத்துலயும் ரொம்ப ஆர்வம். மாவட்ட அளவுல கலந்து நிறைய பரிசு வாங்கிருக்கு. எங்கே போட்டி நடந்தாலும் ரெண்டு அண்ணனுங்களும் சிட்ட கட்டிக்கிட்டு கூட்டிட்டு போயிடுவாங்க. நல்லா நாட்டியம் ஆடும் கீதாஞ்சலி நாட்டிய பள்ளியில் படிச்சது.” என்று மகளின் புராணத்தை பெருமையாக பேசி கொண்டிருந்தார்.
தர்மராஜ் புன்னகையுடன், “அப்போ சலுப்பா இருந்தா உங்களுக்கு பாப்பாவே பாடும்.” என்றார் இணக்க பேச்சுடன்..
சட்டென நடேசன் குறுக்கிட்டு, “எங்க பாப்பா படிப்புல மட்டும் சுட்டி இல்ல, நல்ல குணமான பொண்ணு. உங்களுக்கு எல்லா இடத்துலயும் ஒத்தாசையா இருக்குங்க.” என்றார்.
மைதிலி மென்புன்னகையுடன் கலைச்செல்வியை பார்க்க, “அதெல்லாம் சரிதான், பொன்னையே காட்டாம இருந்தால் எப்படிங்க?” என்றிட..
தர்மராஜ் சிரித்தபடி, “பூரணி, நீ பாப்பாவை கூட்டிட்டு வா.” என்று குரல் கொடுத்தார்.
“இதோ அழைச்சிட்டு வரேன் பா.” என பூரணி சொன்னாள்.
மைதிலி செல்வியை பார்க்க, “என்ன மைதிலி, எதுவும் சொல்லணுமா?” என கேட்டார்.
“இந்த பொன்னையே நம்ம மேகனுக்கு கட்டிடலாம்.” என்றார் நிதான பார்வையுடன்..
செல்வி சின்ன புன்னகையுடன், “பொன்னை பாக்குறதுக்கு முன்னாடி இப்படி சொல்ற மைதிலி? அந்த அளவுக்கு பொன்னை புடிச்சு போச்சா என்ன?”
“அண்ணி, உங்க மூலமாக இந்த பொண்ண பார்க்க வந்திருக்கோம். கண்டிப்பா குணமான பொண்ணா தான் இருக்கும்.” என்று அவர் சொல்லி கொண்டிருக்கவே, பெண்ணை அழைத்து வந்தார்கள்.
“என்னடி கை இப்படி வியர்க்குது?” என சவுந்தர்யா அதிர்ச்சியுடன் கேட்க, “கொஞ்சமா பயமா இருக்கு அண்ணி.” என்றாள் தியா மெல்லிய குரலில்.. அதே நேரம் ராணி அவளது கையில் காபி கொடுக்க, இதோ செல்வி மற்றும் மைதிலியின் பார்வை தியாழினி நல்லாள் மீது படிந்தது.
அஞ்சனம் தீட்டிய அழகான விழிகளுக்கு சொந்தக்காரி, பார்வையில் ஒருவித படபடப்பும் பயமும் இருக்க, மைதிலிக்கு இந்த நொடியே தோன்றியது இவள் தான் மழைமேகனுக்கு ஏற்றவள் என்று. நீண்ட கார் கூந்தல் இடை வரை பின்னி ஜாதிமல்லி சூடி, ஜிமிக்கி கம்மல், கோபுரபொட்டு, சந்தன கீற்று என மெரூன் காட்டன் புடவையில் பாந்தமாக வந்தவள், கைகளில் வளையல்கள் கலகலக்க, மெல்லிய கொழுசொலியில் நடந்து வந்து, தனது தந்தையை தவிப்புடன் பார்த்து விட்டு, அவர் சம்மதம் சொல்லவும் உடனே மைதிலி, கலைச்செல்வி இருவரின் முன்னாலும் காபி கொடுத்தாள்.
செல்வி மைதிலியை பார்த்து, “ம்ம், உன்னோட மருமகள் ஜோரா இருக்கா.” என்று காது கடிக்க, “கம்முன்னு இருங்க அண்ணி.” என உற்சாக சிரிப்பை உதிர்த்தார்.
“பொண்ணுக்கு பாட தெரியும்னு சொன்னாகளே, ஒரு பாட்டு பாடி காட்டுமா?” என செல்வி கூற.. அனைவரின் பார்வையும் கொஞ்சம் உற்சாகமாக மாறியது. தியாழினி அப்படியே தனது தந்தையை பார்க்க,
“ஓ, அப்பா சொன்னா தான் பாடுவீங்களோ? அப்பா கிட்ட பர்மிஷன் கேட்கணுமோ?” மீண்டும் கிண்டல்..
“கம்முனு இருங்க அண்ணி.” என மைதிலி கூற, “பார்ரா, இப்பவே மாமியார் மருமகளுக்கு சப்போர்ட்டா?” என மறுபடியும் கேள்வி பேசினார்.
நடேசன், தர்மராஜ், மதிவாணன், சௌந்தர்யா, பூரணி, ராணி என அனைவரும் எதிர்பார்ப்புடன் பார்க்க, மைதிலி அங்கிருந்து எழுந்து கொண்டு, “இப்பவே எனக்கு பொண்ணு ரொம்ப பிடிச்சிருச்சு. பூவெச்சிட்டு போலாங்களா?” என்று கேட்கவும், ஆச்சரியமாகி போனது அனைவருக்கும்.
செல்விக்கு தெரிந்த தானாபதியின் மூலம் தான் இந்த சம்மந்தம் பற்றியும், நடேசன் குடும்பம் பற்றியும் தெரிந்தது. அதே போல, முதல் முறையாக மழைமேகனுக்கு பெண்பார்க்க ஆரம்பித்தார்கள். இருவரும் அப்படி சென்ற இடத்தில், முதல் பெண்ணான தியாழினி அவர்களுக்கு அமைவாள் என்று எதிர்பார்க்கவில்லை. தியாவுக்கு தீவிர தேடுதல் வேட்டை..
தானாபதி மாப்பிள்ளையை பற்றி மிகவும் நல்ல குடும்பம் என்று சொன்ன காரணத்தினால், உடனே ஒத்துக் கொண்டார்கள் தியாழினி வீட்டில்..
நடேசன் தயக்கத்துடன், “மாப்பிளைக்கு இன்னும் பொண்ணு போட்டா பார்க்கவே இல்லைங்களே?” என பார்த்தார்.
செல்வி உடனே போனை எடுத்தவர், “மாப்ளைக்கிட்ட பேசுறீங்களா?” என உடனே போட்டு நீட்டி விட்டார்.
அனைவரும் அதிர்ந்து பார்க்க, செல்வி உறுதியான குரலில், “உங்கள் பொண்ணுக்கு நீங்க எவ்ளோ முக்கியமோ, அந்த அளவுக்கு எங்க பையனுக்கு அவங்க அம்மா முக்கியம்.” என்றவர், “மாப்ளை கிட்ட பேசுங்க.. ஜாதகம் பொருந்தி இருக்கு. மாப்ளைய பத்தி எங்கே எல்லாம் விசாரிக்க தோணுதோ, நல்லா தீர விசாரிச்சிட்டு சொல்லுங்க. அடுத்து வருவதாக இருந்தால் நிச்சயத்துக்கு தான் வருவோம். என் தம்பி பொண்டாட்டிக்கு உங்க மகளை ரொம்ப புடிச்சு போச்சு.” என்றார்.
மதிவாணன் செல்வியின் அருகில் சென்று மாப்பிள்ளையின் படம் மற்றும் பயோடேட்டா அனைத்தையும் பார்த்தான்.
தனது தங்கையையும் ஒரு எட்டு பார்த்தான். தனது செல்ல தங்கைக்கு ஏற்றவன் இவன் தான் என நினைத்து கொண்டவன், மைதிலியை பார்த்து, “மாப்ளையோட வாங்க அத்தை.” என்று அழைத்து விட்டான்.
அனைவருக்கும் சந்தோசம். சவுந்தர்யா முந்தி கொண்டு, “பொண்ணு பேரு தியாழினி, மாப்ளை பெயர்?” என கேட்டு விட, “ப்ச்” என மதிவாணன் உச்சி கொட்டியபடி பார்த்தான்.
“மழைமேகன்” என செல்வி கூற.. அந்த நொடியே தியாழினி முகம் பளிச்சென ஆனது, இவ்வளவு அழகான தமிழ் பெயரா என்று. நடேசன் அசடு வழிந்து கொண்டே, “மாப்ளை பெயரை கேட்டதும் தான் உடனே பார்க்க வர சொன்னேன்.” என்றார்.
அவருக்கு தமிழ் பற்று அப்படி..
மழைமேகன்!! மழைமேகன்!! என அவனது பெயரே கவிதை போல ஒலிக்க..
தியாழினியின் கன்னக்குழி இரண்டும் ஒரு நொடி புன்னகையில் சிணுங்கியது.
தியாழினியின் மொத்த குடும்பமும் வழியனுப்பி வைக்க, இதோ வீட்டுக்கு வந்ததில் இருந்து மைதிலிக்கு நல்லாள் புராணம் தான். “எத்தனை அழகு தெரியுமா? எத்தனை அடக்கம் தெரியுமா? பார்வையில் அத்தனை கனிவு? வீடு முழுக்க தியாவோட பரிசு, பாராட்டு எல்லாம் சட்டத்தில் அடிச்சு வச்சிருக்காங்க. ரொம்ப ரொம்ப திறமைக்கார பொண்ணு. கொஞ்சம் கூட அலட்சியமோ, திமிரோ இல்ல.. பூமிக்கு பாரம் கொடுக்காம நடக்கறா என் மருமகள்.” என்று கூறினார்.
“மாமா!! அத்தியா?” என தமிழினி தனது பாட்டியை பார்த்து கிண்டலாக கையை நீட்டி கூற..
மழைமேகன் பெருமூச்சுடன், “ம்ம், உனக்கும் தெரிஞ்சு போச்சா தமிழ்..” என்றான்
அவளின் கைக்கு நகம் வெட்டி விட்டபடி..
“எப்போ மாமா அத்தை இங்கே வீடு?” என மழலை மொழியில் தமிழினி கேட்க.. மேகன் சிரித்தபடி, “போற போக்கை பார்த்தால், இன்னிக்கே கல்யாணத்தை முடிச்சுடுவாங்க உன்னோட அம்மாச்சி.” என கிண்டலாக கூறினான்.
“கண்ணு!! எப்படி இருக்கீங்க? தியா எப்படி இருக்கா?” என மைதிலி புன்னகை முகமாக கேட்டபடி வெளியே வர, மேகன் அவனது வேலையில் பிசியாக இருந்தான்.
“இதோ கொடுக்கிறேன் கண்ணு.” என வேகமாக மேகனிடம் வந்து நீட்டிய மைதிலி, “தியாவோட பெரிய அண்ணன் பேரு மதிவாணன், உன்கிட்ட பேசணுமாம்.” என்று நீட்டினார்.
“நான் என்னமா பேச?” என தயங்கினான் மேகன். அவனுக்கு தயக்கமாக இருக்க, “ப்ச், பேசுடா.” என அதட்டி கொடுத்தார்.
“ஹலோ,” என மேகன் அவனுக்கே உரித்தான குரலில் அழைக்க, “மாப்ளை, உங்க நம்பர் சொல்லுங்க.” என கேட்டு கொண்டான் மதி.
மேகன் கூறி முடிக்க, “பாப்பாவோட பயோடேட்டா உங்களுக்கு அனுப்பி இருக்கேன். நீங்க இன்னும் பாப்பாவை பார்க்கலன்னு அத்தை சொன்னாங்க..” என மதிவாணன் சிநேகமாக பேசிட,
“அது வந்துங்க, நான் காலேஜ் போயிட்டேன். லீவ் டைம்ல பேப்பர் திருத்துற ஒர்க் இருந்தது. அதான் வர முடியல.” என தயக்கத்துடன் மேகன் கூறி கொண்டிருக்க, “பாப்பா கூட நீங்க வேலை செய்யிற அதே காலேஜ் தான் மாப்ளை.” என்றான் மதி.
இந்த வார்த்தைகள் மேகனை அதிர்ச்சிக்குள்ளாக்கிட, “அப்படிங்களா?” என ஆச்சரியத்துடன் அவன் கேட்க, “ம்ம், ஆமா மாப்ளை.” என்ற மதி, “நீங்க போட்டோஸ் பாருங்க. கூடவே வாட்ஸ்அப்ல அப்பா நம்பர் கொடுத்திருக்கேன், இன்கேஸ் பேச நினைச்சா கால் பண்ணுங்க.” என்று விட்டு போனை வைத்தான் மதிவாணன்.
மேகன் தமிழை தூக்கி முல்லையிடம் கொடுத்தவன், உள்ளுக்குள் எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுடன் போனை எடுத்து வாட்ஸ்அப் சென்றான், நாயகியை பார்க்க..
பரதநாட்டிய உடையில் அழகாக போஸ் கொடுத்தபடி நின்றாள்.
மேகன்…?
தொடரும்…