காலில் இருந்த ஷுவைக் கழட்டி எறிந்து விட்டு, கைப்பேசியையும் மற்ற பொருள்களையும் செண்டர் டேபிளில் வைத்து விட்டு படு வேகமாக அவனது படுக்கையறைக்கு செல்லயிருந்தவனை சமையலறையிலிருந்து வந்த விஜயா வழிமறித்து,”சாமி..என்னோட ரூம்லே போய் குளிச்சிட்டு அப்புறம் உங்க அறைக்குப் போங்க.” என்று கட்டளையிட்டார்.
“அம்மா, நான் எங்கே ம்மா உள்ளே போறேன்னு சொன்னேன்..வாசல்லே நின்னு பார்க்க தான் போறேன்.” என்று பணிவாக மகன் பதில் கொடுக்க,
“அப்படித் தான் சொல்லுவீங்க..அப்புறம் சரியா தெரியலை..திரும்பிப் படுத்திருக்கான்னு சொல்லி கட்டில் கிட்டே போவீங்க..அப்படியே பக்கத்திலே நாற்காலியை இழுத்துப் போட்டுக்கிட்டு உட்காருவீங்க..அவ்வளவு தான்..தூங்கிட்டு இருக்கறவன் சட்டுன்னு கண் விழிச்சு உங்களைப் பார்த்து சிரிப்பான்..அடுத்த நொடி அழுவான்..அப்புறம் நீங்க அவசரமாக் குளிக்கப் போவீங்க..நீங்க வரும் வரை என்னை வில்லி போல பார்ப்பான்..தொடர்ந்து அழுவான்..உங்களைத் தேடுவான்..பாத்ரூம்லேர்ந்து நீங்க குரல் கொடுக்கறவரை ஓய மாட்டான்..வேணாம் சாமி இந்த வம்பு..பிள்ளை சாப்பிடறது கொஞ்சம் அது அழுகைலேயே போயிடும்..நீங்க முதல்ல குளிச்சிட்டு வாங்க சாமி..நீங்களே அவனை வைச்சுக்கலாம்..எங்க இரண்டு பேருக்கும் நிம்மதியா இருக்கும்.” என்றார்.
அதற்கு,“அம்மா, காலைலே நான் கிளம்பும் போது உங்க அறைலே தான் தூங்கிட்டு இருந்தான்..பார்க்க முடியலை..மதியம் ஃபோன் செய்த போது மாமி வைச்சிட்டு இருந்தாங்க..வீடியோ கால் வேணாம்னு சொல்லிட்டீங்க..அம்மா ப்ளீஸ் ஒரு நொடி பார்த்திட்டு குளிக்கப் போறேன்.” என்று காரணங்களை அடுக்கி கெஞ்சினான் ஷண்முகம்.
“ஜோதிக்கு ஆசையா இருக்காதா?..ஒரு வாரம் கூட சேர்ந்தார் போல உன் மகனை அவங்க வீட்லே விட மாட்டேங்கற..இங்கே அவ வந்தாலும் வீடியோ கால்லே வந்து அவளோட டயமை நீ எடுத்துக்கற.” என்றார் விஜயா.
அந்தப் பேச்சை ஆரம்பித்தால் வாயை முடிக் கொண்டு விடுவான் ஷண்முகம் என்று அவருக்குத் தெரியும். இப்பொழுதும் அப்படியே வாயைத் திறக்காமல், குளித்து ஃப்ரெஷ்ஷாகி வர அவனுடைய அம்மாவின் அறைக்குச் சென்றான்.வேகமாக குளித்து விட்டு டீ ஷ்ர்ட்டை மாட்டியபடி அவனது படுக்கையறைக்குச் செல்ல, அங்கே மெத்தையில் மூக்கு அழுந்தும்யபடி குப்பற படுத்திருந்த மகனை பார்த்தவனுக்கு திக்கென்றானது. ‘அம்மா’ என்று கத்த வாயைத் திறக்க இருந்தவன், அதை அப்படியே முழுங்கி, விரைந்து சென்றான் சமையலறைக்கு. அங்கே அவனுக்காக தேநீர் போட்டு கொண்டிருந்தவரிடம்,”அம்மா, குப்புற படுத்திட்டு இருக்கான் ம்மா..வாங்க..சீக்கிரமா வந்து அவனைத் திருப்பி விடுங்க.” என்றான்.
உடனேயே அடுப்பை அணைத்து விட்டு வேகமாக சென்ற விஜயா பேரனைத் திருப்பிப் படுக்க வைத்து மெல்லிய துணியைப் போர்த்தி விட்டார். அவரருகே நின்றிருந்த மகனிடம், மெல்லிய குரலில்,”டீ எடுத்திட்டு வரேன்..குடிச்சிட்டு இங்கே வந்து உட்கார்ந்துக்க.” என்றார்.
அவர் சொன்னதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் உறங்கிக் கொண்டிருந்த மகனை ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தவனிடம்,”தூங்கற குழந்தையைப் பார்க்கக் கூடாதுன்னு எத்தனை முறை சொல்லியிருக்கேன் சாமி..” என்று கோபப்பட,
“ஸாரி ம்மா.” என்று மன்னிப்பு கேட்டபடி அவரோடு சமையலறைக்குச் சென்றான். அவனுக்கு மட்டும் தே நீர் தயார் செய்திருந்ததைப் பார்த்து,”உங்களுக்கு?” என்று கேட்டான்.
“காலைலேர்ந்து நிறைய டீ ஆகிடுச்சு சாமி..மதன் ஸர் வந்தார்..அவரோட ஒண்ணு குடிச்சேன்..அப்புறம் ஜோதியோட இரண்டு.” என்றார்.
“மதன் ஸர் வந்தாரா? எப்போ?” என்று வினவினான் ஷண்முகம்.
“பத்து மணி போல வந்து பன்னெண்டு வரை இருந்தார் டா.” என்றார் விஜயா.
“லன்ச் செய்தீங்களா ம்மா?”
“ம்ம்..எங்க இரண்டு பேருக்கு ஜோதி எடுத்திட்டு வரேன்னு சொல்லியிருந்தா….மதன் ஸரை எப்படி வெறும் வயத்தோட அனுப்ப முடியும்? அதான் அவர் பிள்ளையோடஇருந்த போது புளி சாதம், உருளைக்கிழங்கு பொரியல் செய்தேன்..ஜோதி எடுத்திட்டு வந்ததை ராத்திரிக்கு வைச்சிருக்கேன்..பாட்டியைப் பார்த்ததும் உன் மகனுக்கு அவனோட அம்மா நியாபகம் வந்திடுச்சு போல..கண்ணை உருட்டி உருட்டி சினேகாவை ரொம்ப தேடினான் சாமி.” என்றார்.
“இந்த ஒரு வாரம் அவனைச் சமாளிக்கணும் ம்மா..அப்புறம் வீட்லேர்ந்து தான் அவளுக்கு வேலை.” என்று ஷண்முகம் பதில் கொடுத்துக் கொண்டிருந்த போதே படுக்கையறையிலிருந்து சிணுங்கல் சத்தம் கேட்க, வேகமாக படுக்கையறைக்கு சென்றான் ஷண்முகம்.
இந்தமுறையும் குப்புறப்படுத்திருந்தான். அவனது தலையை உயர்த்தி படுக்கைறைக் கதவை பார்த்தபடி அழுது கொண்டிருந்தான். அறை வாயிலில் அப்பாவை கண்டதும் அழுகையோடு சிரிப்பும் சேர்ந்து கொள்ள, ஷண்முகத்தின் உள்ளம் அதைப் பார்த்து பதைபதைத்து போக, “அம்மா, அம்மா, சீக்கிரம் வாங்க” என்று கத்தினான்.
என்னவோ ஏதோ என்று விரைந்து வந்த விஜயா பேரனின் போஸைப் பார்த்து அகமகிழ்ந்து போனார். அவன் எதிரே சென்று அவன் உயரத்திற்கு குனிந்து, முகத்திற்கு நேரே,“உன் அம்மாவும் ஜோதி பாட்டியும் இதைப் பார்க்க தான் தவமா தவமிருந்தாங்க..நீ உன்னோட அப்பாக்காக காத்திருந்தந்த போல..அது புரியாம என்னவோ ஏதோன்னு கத்தறான் உன் அப்பன்.” என்று பேரனிடம் பேசிக் கொண்டிருந்தவர் அப்படியே,”சாமி, முதல் தரிசனம் உங்களுக்கு கிடைச்சிருக்கு..சட்டுன்னு இதை ஃபோட்டோ பிடிங்க..பிள்ளைக்கு தலை நின்னுடிச்சு..இனிப்பு செய்து கொண்டாடணும்.” என்றார்.
அப்போது தான் மகனின் செய்கையின் முக்கியத்துவம் ஷண்முகத்திற்கு புரிய, வேகமாக அவனது கைப்பேசியுடன் வந்தவன் பல கோணங்களில் மகனைப் படம் பிடிக்க, இருவரின் யாராவது ஒருவராவது தன்னைத் தூக்கிக் கொள்ள மாட்டார்களா என்று காத்திருந்தவனின் பொறுமை பறந்து போக, அவனது கோவத்தை பெரிய அழுகை மூலம் வெளிப்படுத்தினான் ருத்ர வேல்.
“மதியம் முழுக்க தலையைத் தூக்க அத்தனை முயற்சி செய்தான் சாமி..முடியாம டபக்குனு படுக்கைலே சாய்ஞ்சதும் கண்ணுலே அத்தனை கோபம்.. ஏன் முடியலைன்னு ஒரே அழுகை….மதன் ஸர் கூட ஆர்வமாக் காத்திருந்திட்டு கடைசிலே கிளம்பிப் போயிட்டார். அவர் கிளம்பிப் போன பிறகும் பலமுறை முயற்சி செய்தான் ஆனா முடியாம கவிழ்ந்திடுவான்..சாயங்காலம் வரை இருக்கணும்னு நினைச்ச ஜோதி களைப்புலே இவன் தூங்கிப் போயிட்டதாலே கிளம்பிப் போயிட்டா..நாம யாரும் பக்கத்திலே இல்லாத போது தலையைத் தூக்கிட்டான்..இப்போ அழறது பசிக்கு சாமி…பால் எடுத்திட்டு வரேன்..பார்த்துக்க” என்று சொல்லி விட்டு சென்றார் விஜயா.
“பாட்டி உனக்கு பால் எடுத்திட்டு வருவாங்க..நீ அப்பாகிட்டே வா.” என்று மகனைத் தூக்கிக் கொண்டான் ஷண்முகம்.
அப்பாவின் முகத்தை கரங்களால் தடவியபடி சிரித்தான் ருத்ர வேல்.அப்படியே அப்பாவின் அவனது தோள் மீது சாய்ந்து கொண்டான்.
“சினேகா சொல்லிக் கொடுத்தபடி தான் கலக்கறோம்..ஆனா குடிக்க மாடேங்க்றான் சாமி.” என்றபடி பால் புட்டியுடன் விஜயா வர, “என்கிட்டே கொடுங்க ம்மா.” என்று மகனை மடியில் படுக்கை வைத்து பாலை புகட்ட முயற்சி செய்தான் ஷண்முகம். சில துளிகளைச் சுவைத்தவுடனேயே முகத்தை சுளித்தான் குழந்தை.
“பாரு டா..இப்படித் தான் சுளிப்பான் அப்புறம் வாயைத் திறக்க மாட்டான்.” என்று அவர் புகார் செய்ய அதை மெய்யாக்கினான் சின்னவன். சில நொடிகளுக்கு அமைதியாக அருந்தியவன் அதன் பின் வாயைத் திறக்க வம்பு செய்தான்.
”எனக்கு சினேகா செய்யறது பிடிக்கலை சாமி..இப்போ மும்பைக்கு போயே ஆகணுமா..இன்னும் இரண்டு மாசம் முடிஞ்சா அம்மாவை எதிர்பார்க்காம இப்போ கொடுக்கறதோட சேர்த்து பருப்பு தண்ணீர் கொடுக்க ஆரம்பிக்கலாம்..ஆறு மாசம் வரை பிள்ளைக்கு கொடுக்கற சாப்பாட்டிலே ஜாக்கிரதையா இருக்கணும்..தாய்ப் பால் குடிச்சிட்டு இருந்தவனை புட்டி பாலுக்கு மாத்தியிருக்கோம்..இவனுக்கு பிடிக்கவேயில்லை..வயித்துக்கு ஒத்துக்கலைன்னா ன்ன செய்ய?” என்று கேட்டார் விஜயா.
“தாய்ப்பால் இல்லாதவங்க எல்லாம் என்ன செய்யறாங்க? இந்த மாதிரி தானே கலந்து கொடுத்து வளர்க்கறாங்க..அனிதா மேடம்கிட்டே கேட்டிட்டு தானே செய்யறா..ஒண்ணுமாகாது ம்மா..வேலை முடிஞ்சதும் கிளம்பி வந்திடுவா ம்மா..அவளுக்கு இது ஈஸியா இருந்திச்சுன்னு நினைக்கறீங்களா? அந்தப் புத்தகம் முடிவுக்கு வரப் போகுது..நேர்லே போய் அவங்களைச் சந்திக்க வேண்டியது அவசியம்னு தான் போயிருக்கா.” என்று கடந்த சில வாரங்களாக கொடுத்த விளக்கத்தை மீண்டுமொருமுறை கொடுத்தான் ஷண்முகம்.