“இவன் சவுண்ட் செய்தாலே என்னவோ ஏதோன்னு படப்படப்பாகுது சாமி..நீங்க வேலைக்குப் போயிடறீங்க..வசந்தியும் இங்கே இல்லை..நீங்க சின்ன பிள்ளையா இருந்த போது உங்களைப் பார்த்துக்கற நிலைலே நான் இல்லை..நீங்க எப்படி வளர்ந்தீங்கண்ணு எனக்கு தெரியவே தெரியாது..இப்போ உன் பிள்ளையைப் பார்த்துக்கணுங்கற போது பயம் வருது சாமி.” என்று அவரது மனக்கவலையை வெளியிட,
“அதான் மாமி தினமும் வராங்களே ம்மா.”என்று ஷண்முகம் சொன்னவுடன்,
“அவ இருக்கறதுனாலே கவலை கம்மியா இருக்குது…இந்த ஊர் பழக்க வழக்கத்தோட நம்ம ஊரோடதையும் சேர்த்து மாண்ட்டியை ஜோதி தானே வளர்த்திருக்கா.” என்றார் விஜயா.
அவனுடைய அம்மாவின் பேச்சை காதில் வாங்கியபடி மகனுக்கு பால் புகட்ட முயன்று கொண்டிருந்தான் ஷண்முகம்.
சில நிமிடங்கள் மௌனத்திற்கு பிறகு.”அக்கா இப்படி நடந்துப்பாங்கண்ணு நான் நினைக்கலை சாமி..உன் மகனைப் பற்றி ஒரு வார்த்தை கூட விசாரிக்கலை..ஜெயந்தியும் வாயை மூடிட்டு இருக்கா..மூத்தவளை மிஞ்சிடுவா போல சின்னவ..அவ கல்யாணத்திலிருந்து ” என்று விஜயா ஆரம்பித்தவுடன்,
“அம்மா, அந்த பேச்சு வேண்டாம்.” என்றான் ஷண்முகம்.
ஆனாலும்,”இல்லை சாமி..என்ன வெறுப்பு இருந்தாலும் உன் பிள்ளையைப் பார்க்க வந்திருக்கணுமில்லே..இப்போ மாமாக்கு உடம்பு சரியில்லைன்னைனு வசந்திக்கும் உனக்கும் தகவல் கொடுக்க முடிஞ்சிருக்கு..ருத்ரன் பிறந்த விஷயத்தை நான் தெரிவிச்ச போது அப்படியான்னு கூட கேட்கலை சாமி..என் மேலே கோபமிருந்தாலும்சினேகாவோட இல்லை உன்னோடநாலு வார்த்தை பேசியிருக்கணுமில்லே..அப்படி என்ன தப்பு செய்திட்டோம் சாமி..இப்படி ஒரேடியா நம்மை ஒதுக்கி வைச்சிட்டாங்க..வசந்தியைத் தலை மூழ்கினவங்க இப்போ எதுக்கு அவளைக் கூப்பிட்டு இருக்காங்க..’அவளுக்கு கடமையை சரியா செய்தாங்களாம்..இப்போ அவங்களுக்கு அவ செய்யணுமாம்..பெரியவளுக்கும் சின்னவளுக்கும் குடும்பமிருக்காம்..இவ தான் ஃப்ரீயா இருக்காளாம் பெத்த அப்பாக்கு செய்யட்டும்னு’ கிரிகிட்டே சொல்லியிருக்க அக்கா…இந்த வசந்தியும் அவங்க பேசினதை நடந்துகிட்டதை எல்லாம் மறந்திட்டு நல்ல பொண்ணா கடமையைச் செய்ய போயிருக்கா..எனக்குப் பிடிக்கலை சாமி.” என்றார்.
அக்காவின் சென்னைக்கும் செல்லும் முடிவில் அவளது மனத்தை சரியாக படித்திருக்கிறானென்ற அவனது எண்ணம் பொய்யாகி போயிருந்தது. அதை ஏற்றுக் கொள்ள முடியாமல், அக்காவின் முடிவில் அவனுக்கு உடன்பாடில்லை என்று சினேகாவிடம் சொன்ன போது, ’நம்ம வீட்லே நம்மளோட இருந்தாலும் அவங்க சம்மந்தப்பட்ட முடிவை அண்ணி தான் எடுக்கணும்னு உங்க பெரியப்பா, பெரியம்மாகிட்டே நீங்க சொன்னது பொய்யா? திடீர்னு எதுக்கு அவங்க விஷயத்திலே தலையிடணும்னு நினைக்கறீங்க..அவங்க அப்பாவை ஆஸ்பத்திரிலே சேர்த்திருக்குன்னு தகவல் வந்திருக்கு..சென்னைக்குப் போகணும்னு நினைக்கறாங்க..போகட்டும்.’ என்று சினேகா சொன்னவுடன்,’உறவே வேணாம்னு வெட்டிட்டு இப்போ மகள்னு உறவு கொண்டாடறாங்க.’ என்று இவன் கோபப்பட,’அவங்க உறவு கொண்டாடினாலும் உத்தரவு போட்டாலும் நாம யாரும் கேள்வி கேட்க முடியாது..அண்ணி தான் கேட்கணும்..அவங்க அப்பாக்கு ஏதாவது ஆயிடுசுன்னா வாழ்க்கை முழுக்க அந்த பாரத்தை அண்ணி தான் சுமக்கணும்..எல்லாத்தையும் யோசிச்சு தான் முடிவு எடுத்திருப்பாங்க..நீங்க தலையிடாதீங்க.’ என்று அந்த வாக்குவாதத்தை முடித்திருந்தாள் சினேகா.
மனைவி சொன்னதை அப்படியே சொல்லாமல்,“அது அக்காவோட விருப்பம்..முடிவு ம்மா..நம்ம முடிவைத் திணிக்க முடியாது ம்மா.” என்றான் ஷண்முகம்.
“தெரியும் சாமி..அவ சென்னைக்குப் போய் பத்து நாள் மேல ஆகிடுச்சு…போய் சேர்ந்தேன்னு சொன்னதோட சரி அப்புறம் ஒரு தகவலும் இல்லை..காலைலே அண்ணனுக்கு ஃபோன் போட்டு மாமாவைப் பற்றி விசாரிச்சிட்டு வசந்தியைப் பற்றி கேட்டேன். ’என்னைக் கேட்டு அவங்க எதுவும் செய்யறதில்லை..அதனாலே நானும் அவங்ககிட்டேயிருந்து ஒதுங்கி இருக்கேன்..மாப்பிள்ளை இரண்டு பேரும் தான் முடிவு எடுக்கறாங்க..வசந்தி ஹோட்டல்ல இருக்கறான்னு தான் பிரகாஷ் சொன்னான்..வேலை விஷயமா அவன் வெளியூர் போயிருக்கான்..அவன் வந்ததும் அவனோட போய் மாமாவைப் பார்க்கலாம்னு இருக்கேன்..உன் அண்ணி வேணாம்னு சொல்றா.’ அப்படின்னு புலம்பிட்டு ஃபோனை வைச்சிட்டார்.” என்று சொன்ன விஜயா. சில நொடிகள் கழித்து,
“வசந்தியைத் தனியா அனுப்பியிருக்கக் கூடாதுன்னு தோணிட்டே இருக்கு சாமி.. மனசு கேட்காம அக்கா, ஜெயந்தி இரண்டு பேருக்கும் ஃபோன் போட்டேன்..இரண்டு பேருமே என்னோட அழைப்பை எடுக்கலை..எல்லோரும் அமைதியா இருக்கறது கவலையைக் கொடுக்குது..வசந்தி மனசைக் கலைச்சு பழையபடி..” என்று வாக்கியத்தை முடிக்காமல் விட்டார்.
மதனை நினைத்து அவனது மனது பெரும் கவலைக்கு உள்ளாகியிருந்ததை மறைத்து,“அம்மா, இதை செய் அதை செய்யாதேன்னு கத்து கொடுக்க அக்கா ஒண்ணும் குழந்தை இல்லை….பழைய வாழ்க்கை தான் வேணும்னு திரும்ப வெங்கடேஷ் மாமாவோட போயிட்டா நாம எதுவும் சொல்ல முடியாது..கூடாது.” என்றான்.
“இல்லை சாமி..அந்த நரகத்திலிருந்து அவளை அழைச்சிட்டு வந்து அவளைக் கட்டிக் காப்பாத்தி, சொந்த கால்லே நிக்க வைச்சுன்னு அவளை மீட்டு எடுக்க எத்தனை பாடுபட்டோம்..கடைசிலே எல்லாம் வீணாப் போயிடப் போகுதுன்னு இருக்குது..’விவாகரத்து கிடைக்கப் போகுது கொஞ்சம் கொஞ்சமா புது வாழ்க்கையைப் பற்றி பேசுங்கண்ணு ஜோதி சொல்லிட்டு இருக்கா..எனக்கும் சரின்னு பட்டுச்சு…இப்போ அவ தலையெழுத்திலே அந்த மாதிரி புது வாழ்க்கை எழுதி வைக்கலையோன்னு தோணுது. ” என்று ஆதங்கப்பட்டார் விஜயா.
அக்காவிற்காக காத்திருக்கும் புது வாழ்க்கையைப் பற்றி தெரிய வந்தால் அவனுடைய அம்மாவின் ஆதங்கம் கரையைக் கடந்து விடுமென்பதால் அந்த விவாதத்தை தொடராமல் மகனோடு ஐக்கியமான வேலின் யோசனை முழுவதும் அவனுடைய மகன் பிறந்த தினத்திற்கு சென்றது.
அன்றைய தினம் அவர்களின் முதல் திருமண நாள். பிரசவ நாள் நெருங்கி விட்டதால்,”வீட்லேயே சிம்பிலா கொண்டாடிலாம்..சினேகாவை அழைச்சிட்டு வெளியே போகறதெல்லாம் சௌகர்யப்படாது.” என்று ஜோதி, விஜயா இருவரும் ஒருமித்த கருத்து தெரிவிக்க, ஷிக்காவின் பிறந்த வீடு, மதன் என்று நெருங்கியவர்களை மட்டும் வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்தனர். வெளி உணவு சினேகாவிற்கு சேராது என்பதால் மதன் வீட்டு சமையல் ஆள் உதவியோடு அவளுக்குப் பிடித்தமான உணவு பதார்த்தங்களைச் சமைத்தனர் விஜயாவும் வசந்தியும்.
பார்ட்டி ஆரம்பிக்கும் முன்பே அசௌகர்யமாக உணர்ந்த சினேகா விருந்தினர்கள் வந்த போது எழுந்து வரவேற்காமல் சோஃபாவில் அமர்ந்தபடி வரவேற்றாள். களைப்பாக உணர்கிறாள் என்று நினைத்து யாரும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதே சாதாரணத் தினமாக இருந்திருந்தால் ‘என்ன ஆச்சு? ஏன் ஒரே இடத்திலே உட்கார்ந்திருக்க? என்ன பண்ணுது?’ என்று மாறி மாறி விசாரித்திருப்பார்கள். வீட்டினர் அனைவரும் ஏதாவது ஒரு வேலையில் பிஸியாக இருந்ததால் அவளின் அமைதிக்குப் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
காலையிலிருந்து அவளோடு தான் நேர்த்தை செலவிடுகிறான் ஷண்முகம். முதல் திருமண நாளைக் கொண்டாட நள்ளிரவு வரை அவகாசமிருக்கிறது என்றாலும் கொண்டாட்டங்களைப் பத்து மணியோடு முடித்துக் கொள்ளத் திட்டமிட்டிருந்தான். அதன் பின் அவனுக்கும் அவளுக்குமான தனிமையில் வேறு திட்டங்கள் வகுத்து வைத்திருந்தவனுக்குத் தெரியவில்லை அவனது திட்டம் தகர்க்கப்படப் போகிறதென்று. மனைவி மீது ஒரு கண் வைத்திருந்தவனுக்கு அவளது அமைதி உறுத்த தான் செய்தது. அந்த உறுத்தலைப் போக்கிக் கொள்ளுமுன் முக்கியமான வேலை ஒன்று இருந்தது.
அவனது மனத்தில் விழுந்த விதையின் எதிர்காலத்தைக் கண்டறிய மதனை மட்டும் சற்று கூடுதலாக அவன் கவனித்துக் கொள்ள, அதை உணர்ந்து,”என்ன டா கவனிப்பு எல்லாம் பயங்கரமா இருக்கு..உள்நோக்கம் இருக்கற மாதிரி தெரியுது.”என்று கிண்டலாகக் கேட்டார் மதன்.
மதனிற்கும் வசந்தி அக்காவிற்கும் இடையே என்ன? என்று அவனுக்குப் புரியவில்லை. அவர்கள் வீட்டிற்கு மதன் வருவதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவும் முடியவில்லை அதே சமயம் அதை சந்தேகத்தில் சேர்க்கவும் முடியவில்லை. மதனின் பார்வை வசந்தியைப் பலமுறை தீண்டியதை அவன் கவனத்திருந்தாலும் வசந்தி அக்காவிடம் அதற்கான எதிரோலியை இதுவரை பார்த்ததில்லை. மதன், வசந்தி இருவரும் பேசி, பழகுவது அனைவர்க்கும் சகஜமாகத் தெரிய அவனுக்கு மட்டும் வில்லங்கமாகத் தெரிந்தது. அவர்கள் இருவரும் இணைந்தால் அவனை விட சந்தோஷமடைபவர்கள் யாருமிருக்க மாட்டார்கள். அதே சமயம் ஒருதலை விருப்பத்திற்கு ஆதரவிற்கு கொடுக்க அவன் தயாராகயில்லை. மதனின் மனத்தில் இருப்பதை அறிந்து கொள்ள அது தான் சரியான சந்தர்ப்பமென்று தோன்றியதால்,
மதனின் கிண்டலைக் கண்டு கொள்ளாமல், படுஸிரீயஸாக,”உங்க நோக்கத்தை தெரிஞ்சுக்க தான் ஸர்.” என்றான் ஷண்முகவேல்.
அதைக் கேட்டு ஷாக்கான மதன் சட்டென்று வசந்தி இருந்த திசையை நோக்கினார். வசந்தியின் இடுப்பில் மாண்ட்டி வீற்றிருக்க, அவளுக்குத் தெரிந்த ஹிந்தியில் ஷிக்காவின் குடும்பத்தினரோடு பேசிக் கொண்டிருந்தாள் வசந்தி. அவளது மனத்தில் ஏதோ தோன்ற, தலையைத் திருப்பி மதனை நோக்கினாள். முதலாவது நோக்கிய நோக்கம், இரண்டாவது நோக்கல் நோக்கம். ஒரேயொரு பார்வையில் அவர்களின் நோக்கத்தை ஷண்முகத்திற்கு கடத்தி விட்டார்கள் இருவரும்.
**********
நோக்கம் – விருப்பம்
நோக்கிய நோக்கம் (கண்ணால் ஒன்றை நோக்குவது)
நோக்கல் நோக்கம் (மனத்தால் ஒன்றை நோக்குவது)
இந்த இரண்டு நோக்கமும் தொல்காப்பியம், சொல்லதிகாரத்திலே வேற்றுமை மயங்கியல், பொருள் மயக்கம் கீழே வருது. சொற்களுக்கு இடையே இடைவெளி குழப்பம், காற்புள்ளி கன்ஃயூஷன், இடைச்சொற்கள், வல்லினமெய் உபயோகம்னு என்னோட எழுத்திலே நிறைய பொருள் மயக்கம் இருக்குது. அதனாலே இங்கே செய்திருக்கற உபயோகம் சரி கிடையாதுன்னு சொல்றவங்களுக்கு, இதுக்கு பெயர் படைப்புச் சுதந்திரம்.
*****************************
‘நோக்கிய நோக்கம்’ திருவருட்பாலேயும் வருது. பாடல் வரிகளைக் கீழே கொடுத்திருக்கேன். விளக்கம் எடுத்து வைச்சிருந்தேன் காணாமல் போயிடுச்சு. புத்தகத்திலே விளக்க உரை இருக்கும்..யாராவது ஷேர் செய்துகிட்டா நல்லா இருக்கும்.
*************
திருவருட்பா, ஆறாம் திருமுறை, பாடல் 3633
நீக்கிய மனம்பின் அடுத்தெனைக் கலக்கி
நின்றதே அன்றிநின் அளவில்
நோக்கிய நோக்கம் பிறவிட யத்தே
நோக்கிய திறையும் இங்குண்டோ
தூக்கிய பாதம் அறியநான் அறியேன்
துயரினிப் பொறுக்கலேன் சிறிதும்
தேக்கிய களிப்பில் சிறப்பவந் தென்னைத்
தெளிவித்தல் நின்கடன் சிவனே.